போர்க்குற்றவாளியாக ராஜபக்சே அய்.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்தியா தங்களைக் காப்பாற்றி விடும் என்று இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது. இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்தை மேற்கோள் காட்டி, ‘தினமணி’ நாளேட்டின் கொழும்பு செய்தியாளர் பி.கே.பாலச்சந்திரன், ‘தினமணி’யில் (ஏப்.26) இது குறித்து எழுதியுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக போர்க் குற்றவாளி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்படும் நிலை வந்தால், இந்தியா - அதிலும் குறிப்பாக - பிரதமர் மன்மோகன் சிங் தங்களைக் காப்பாற்றி விடுவார் என்று இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது. இலங்கை அரசின் மூத்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையோடு இதை கொழும்பில் தெரிவித்தார்.

‘இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவிக்கு வந்திருக்கிறார். இலங்கையுடான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்றவர்களைவிட அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும் ஜெனீவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் 2009 இல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்துக் காப்பாற்றியது இந்தியா தான். இலங்கையைக் கடுமையாக  கண்டிக்கும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா பேசியதால்  கைவிடப்பட்டது.

பொருளாதார நிலைமை காரணமாக வெளி நாட்டு வர்த்தகப் பற்று - வரவில் பற்றாக்குறையால் இலங்கை அரசு தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாகப் பரிந்துரைத்து வாங்கித் தந்தது. சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் டுனா கமிஷன் கூட்டத்தில் பிரிட்ட னுக்குச் சொந்தமான கடல் பரப்பில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக மீன் பிடித்ததற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்பட விருந்த தருணத்திலும் இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகப் பேசி மீட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் உள்ள சக்தி வாய்ந்த நாடுகள். ஆனால், மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் வரும்போது இலங்கைக்கு ஆதரவாக அந்த இரண்டும் செயல்படும் என்று நம்ப முடியாது. இந்தியா இப்போது தற்காலிக உறுப்பு நாடாக சுழற்சி அடிப்படையில் இடம் பெற்றிருக் கிறது. ரத்து அதிகாரம் இல்லாவிட்டாலும் அது இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்தாலே இலங்கை காப்பாற்றப்படும்.

ஈரான், சூடான், லிபியா ஆகிய நாடுகளையும் இதேபோல மனித உரிமை மீறலுக்காகக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போது சீனாவும் ரஷியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்து விட்டன. எங்கள் விவகாரத்திலும் அப்படிச் செய்யக் கூடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எங்களைக் கண்டிக்கத் தீவிரம் காட்டுகின்றன. அமெரிக்கா கூட தனது நிலையை இறுதியில் மாற்றிக் கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளால் தான் பிரச்சினை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு எங்களைக் காப்பாற்றும். மனித உரிமைகள் கமிஷன் எங்களைக் குற்றஞ்சாட்டிய உடனேயே இலங்கைஅரசின் நிலையை விளக்க வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். சீனத் தூதர் அதில் பங்கேற்கவில்லை. காரணம் கேட்டபோது தங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பதில் கிடைத்தது.

நாங்கள் ஃபேக்ஸ் மூலம் அழைப்பை அனுப்பிவிட்டு தொலைபேசி மூலமும் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்து கொண்டோம். ஏதோ காரணத்துக்காக சீனா வரவில்லை. அத்துடன் அந்த அறிக்கை குறித்துகூட அது கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அது எங்களை ஆதரிக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ரஷியாவைப் பற்றியும் உறுதியாக எதையும் கூற முடியவில்லை. ரஷியாவும் சீனாவும் எங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாத நிலையில், இந்தியா எங்களை ஆதரித்தால் நாங்கள் மீண்டுவிடுவோம்’ என்று அந்த இலங்கை உயர் அதிகாரி தெரிவித்தார்.  

இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியே முடிவு எடுக்க முடியும் - கலைஞர்


ராஜபக்சே பற்றி இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியேதான் இருக்க முடியும் என்று - தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பேட்டி அளித்துள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி:

செய்தியாளர்: ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே?

கலைஞர் : இவையெல்லாம் சர்வதேச அளவில் - சர்வதேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படியெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கிவிட முடியாது.
‘முரசொலி’ நாளேடு, ஏப்.26

Pin It