புட்டபர்த்தி சாய்பாபா என்ற மனிதன் - ஏப். 24 ஆம் தேதி காலை மரணமடைந்தார். அவரை ‘கடவுள் அவதாரம்’ என்றுகருதி, மரணம் அவரை நெருங்கவே நெருங்காது என்று நம்பிக்கொண்டிருந்த அவரது சீடர்கள், பாபா மரணமடைந்துவிட்டார் என்பதையே நம்ப மறுத்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள். அவரது உடல் உறுப்புகளான கல்லீரல், இருதயம், சிறுநீரகம் எல்லாம் முதுமையின் காரணமாக செயலிழந்து போயின. மனிதர்களுக்கு தரப்படுகிற விஞ்ஞானம் கண்டுபிடித்த நவீன சிகிச்சைகள் தான் அவர் நடத்தும் மருத்துவமனையிலேயே அவருக்கும் தரப்பட்டன. ஏதோ ‘அற்புதம் நடக்கப் போகிறது என்று செய்திகள் பரப்பப்பட்டன.  ஒன்றுமே நடக்கவில்லை.

புட்டபர்த்தி சாய்பாபா - மனிதர்களைப் போலவே சாப்பிட்டார்; மலம் கழித்தார்; சிறுநீர் கழித்தார்; உறங்கினார்; அவ்வப்போது உடல் நோய்க்கு சிகிச்சை செய்து கொண்டார்.

ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று, இவர் தன்னைத் தானே கூறிக் கொண்டார். ஆனால், உண்மையான ஷீரடி சாய்பாபா சீடர்கள், அதை ஏற்கவில்லை. ஷீரடி சாய்பாபா நேர்மையானவர்; புட்டபர்த்தி போலி என்று கூறி, ஷீரடி பாபாவுக்கே தனி கோயில் கட்டி, இன்றும் வழிபட்டு வருகிறார்கள். 

தனக்கு 96 ஆம் வயதில் தான் மரணம் என்றார் புட்டபர்த்தி சாய்பாபா. ஆனால் 85 வயதிலேயே மரணமடைந்து விட்டார். இதுவும் அவரது சீடர்களுக்கு அதிர்ச்சிதான். பாபாவுக்கு, இந்து காலண்டர் காலப்படி (அதாவது சந்திரன் சூரியனை சுற்றி வருவதுதான் ஒரு நாளாம்; அதன்படி மாதம் ஒன்றுக்கு 27.3 நாட்கள் தானாம்) பாபாவுக்கு 94 வயதாகி விட்டதாம். எனவே பாபா வாக்கு பொய்க்கவில்லை என்று ஒரு பார்ப்பன ஏடு சமாதானம் கூறுகிறது. இப்படியானால் பாபா பிறந்த 1926 ஆம் ஆண்டுக்கு மட்டும் - ஆங்கில முறைப்படியான காலத்தை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதற்கும் - இந்து காலண்டரைக் கணக்கிட வேண்டியது தானே? தனது அடுத்த பிறவியை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் எடுக்கப் போவதாகவும் - சாய்பாபா ஏற்கனவே கூறி விட்டாராம். இதை உண்மை என்று நம்பி விட்டால், பிறகு ஏன் பக்தர்கள் கதற வேண்டும்; கண்கலங்க வேண்டும் என்பதும் நமக்குப் புரியவில்லை.

மக்களை தனது அற்புதங்களால் ஏமாற்றி, ஏமாற்றுத் திறனை ஒரு கலையாக்கி தொடக்கத்தில் சீடர்களை ஈர்த்தவர்தான் புட்டபர்த்தி சாய்பாபா. இவர் நடத்திய மோசடிகள் பல நேரங்களில் அம்பலப்படுத்தப்பட்டன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், கையசைப்பில் ஒரு தங்க செயினை வரவழைத்து பிரதமருக்கு தந்தார் சாய்பாபா. உண்மையில், தனது உதவியாளர் தாம்பூலத் தட்டுக்குக் கீழே வைத்து ரகசியமாக தந்த அந்த தங்க செயினை சாய்பாபா தந்திரமாக கையிடுக்கில் பதுக்கிக் கொண்டு, பிறகு, கையசைத்து வரவழைப்பதுபோல் ஏமாற்றிய காட்சி, அரசு தொலைக்காட்சிப் படப்பிடிப்பிலேயே பதிவானது. பிறகு உண்மைகள் அம்பலமாகி ரகசியமாக அய்தராபாத் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள்ளே முடக்கப்பட்ட அந்த படச் சுருள், எப்படியோ ‘சிலரால்’ வெளியே கொண்டு வரப்பட்டு, மக்கள் மன்றம் முழுதும் போட்டுக் காட்டியபோது, பாபாவின் குட்டு உடைந்து போனது.

அவரின் நெருக்கமான சீடர்களாக இருந்தவர்களே அவரது மோசடிகளை உணர்ந்து வெளியே வந்து, அவரது மோசடிகளை வெளிப்படுத்தி நூல்களை எழுதினர். கையசைப்பில் ஜப்பான் நாட்டின் ‘சிட்டிசன்’ கைக்கடிகாரத்தை சாய்பாபா கொண்டுவந்தபோது, அந்தக் கடிகாரத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கே தலைசிறந்த நாத்திகரான கோவூர் கடிதம் எழுதினார். தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உற்பத்தி எண் இன்றி வெளிச்சந்தைக்குப்போக வாய்ப்புள்ளதா என்று கேட்டார். அப்படி ஒரு கடிகாரம்கூட வெளியே போக முடியாது; அத்தனையிலும் உற்பத்தி எண் வரிசை இருக்கும். பாபா வரவழைத்தது கூட எங்கள் தயாரிப்பாகத்தான் இருக்க முடியுமே தவிர, சூன்யத்திலிருந்து வந்திருக்கவே முடியாது என்று, அந்நிறுவனம் கோவூருக்கு பதில் எழுதியது. இந்த மோசடிக்கு பாபாவிடமிருந்து பதில் இல்லை.

பாபா பிறந்தது பிற்படுத்தப்பட்ட சமுதாயம் தான். அவருக்கு கிடைத்த செல்வாக்கை பார்ப்பனர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. அவரைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் உருவாகி நின்றது. அவர்கள் சாமான்ய ஏழை எளிய மக்கள் அல்ல. நாட்டின் பெரும் பொறுப்பில் அதிகார உச்சத்தில் இருந்தவர்கள். பெரும் தொழிலதிபர்கள். சினிமா நட்சத்திரங்கள். அவர்களுக்குள் பாபா வழியாக ‘அதிகாரப் பரிமாற்றங்கள்’ நடந்து கொண்டிருந்தன. இப்போது சங்கிலித் தொடர் அறுபட்டுப் போய்விட்டதே என்பதுதான் ‘அவாளின்’ கவலை.

ஒரு கட்டத்தில் சித்து வேலைகள் பயன் தராது என்ற முடிவுக்கு வந்து, ஏதேனும் மக்கள் சேவைக்கு, தன்னிடம் குவியும் சொத்துக்களைப் பயன்படுத்த முன் வந்தது ஒன்றுதான், பாபாவின் பாராட்டுக்குரிய அம்சமாகக் கூறலாம்.  மக்களின் தேவைகளை ‘பகவான்களால்’ நிறைவேற்ற முடியாது; அதற்காக திட்டங்களைத் தான் போட வேண்டும் என்ற “பகுத்தறிவு” சிந்தனைக்குதான் கடைசியில் “பகவான்” வந்தார். அதன் மூலம் சரிந்து போய் விடாமல், தனது புகழை நிலை நாட்டிக் கொள்ள திட்டமிட்டார். ‘ஆன்மீகத்தின் குரு’வாக வலம் வந்தவர் - பொருளை புறந்தள்ளவில்லை; பல லட்சம் கோடி சொத்துகளை பாதுகாப்புக் கருதி சட்டத்துக்குட்பட்ட அறக்கட்டளை யாக்கினார். எல்லா அறக்கட்டளையிலும் நடப்பது போலவே இவரது அறக்கட்டளையிலும் வாரிசுப் போட்டிகள் வரத் தொடங்கி விட்டன.

ஏற்கனவே பாபா, படுக்கை அறையில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். வழக்கு மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மாநில அரசே சொத்துகளைக் கைப்பற்றி, மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால், மக்கள் பயனடையக் கூடும் என்பதே நமது கருத்து!

‘பகவான்கள்’ என்று நம்பப்படுகிறவர்கள், எவருமே சாதாரண மனிதர்கள்தான் - என்பதையே இந்த மனிதரின் மரணமும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

Pin It