காலனி ஆட்சியை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலம். அதன் தாக்கத்தில் 1869 ல் அமெரிக்காவில் தேசிய மாதர் சம்மேளனம் உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்று முதல்முறையாக அறைகூவலைப் பிரகடனப்படுத்தியது. தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பின் அதனை வென்றெடுக்க அரைநூற்றாண்டுக்கும் மேலானது.
நியூசிலாந்து 1893ல் பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது. 1902ல் ஆஸ்திரேலியாவும் பிரகடனப்படுத்தியது. வாக்குரிமை வழங்குவதற்கு முன் ‘‘தந்தை , கணவன், மகன் இவர்கள் சொல்பவருக்கே பெண்கள் வாக்களிப்பார்கள்: சுய சிந்தனையற்றவர்கள் அதனால் இவ்வுரிமை பயனற்றது. என்று ஆஸ்திரேலிய அரசு கூறியது. ஆனால் உடனடியாக நடத்தப்பட்ட தேர்தலிலேயே அவற்றைப் பொய்யாக்கினர் பெண்கள் என்பது தனி வரலாறாகும்.
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெற்றபோதும் அந்நாட்டுப் பெண்கள் அவ்வுரிமையை பெற பெரிதும் போராடினர். 1903ல் தொடங்கப்பட்டு 1918ல் கிடைத்தது. முதல் உலகப்போரின் எதிர்நிலைப் பிரச்சாரமும், ராணுவ வீரர்களுக்கு செய்த உதவியும் இப்பெண்களுக்கு பெரிதும் உதவியது. 30வயது நிரம்பியவரும் சொத்துடைய பெண்களும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை உடையவர்கள் என்ற சட்டத்தோடு 1918ல் ஐரோப்பிய அரசே அறிவித்தது. அதன் பின் 1928ல் அனைவருக்கும் வாக்குரிமை என்று பிரகடனப்படுத்தியது.
1920ல் அமெரிக்கப் பெண்ணிய தளபதிகளின் வீரச்செயலும், தன்னார்வப் பெண்களின் பங்கும் அமெரிக்க பெண்களுக்கு பெரும் உந்துசக்தியை ஏற்படுத்தியது. பெண்களின் பங்கேற்பைக்கண்ட அமெரிக்க அரசு, 35 வயது நிரம்பியவர்களுக்கும் சொத்துடைய பெண்களும், வாக்களிக்கும் உரிமை உடையவர்கள் என்று அறிவித்தது. சொத்து வாக்களிக்கும் உரிமையில் பெரும்பங்கு வகித்திருக்கிறது என்பது பல நாடுகளின் வரலாற்றிலிருந்து அறிய முடியும். வாக்குரிமைக்கு முன்பே குடவோலை முறையை அறிமுகப்படுத்தியது நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை ஆரம்பகாலத்தில் இல்லை. மேலை நாட்டு போராட்டங்களின் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1919ல் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 35 வயது நிரம்பியவரும் சொத்துரிமை உள்ள பெண்களும் ஓட்டு போட முடியும் என்ற ஆங்கிலேய சட்டத்தையே இந்திய காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. குடவோலை முறையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கே சொந்தமானது என்பது வரலாறு. ஆங்கிலேய சட்டத்திற்கும் இக்குடவோலை முறைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சுதந்திர இந்திய சாசனத்தில் அனைத்து பெண்களுக்கும் வாக்கு அளிக்கும் உரிமை உண்டு என்று மாற்றம் அடைந்தது. இதில் அம்பேத்கரின் பங்கு மகத்தானது. பெண்களின் வாக்குரிமை என்பது போராட்டத்தில் கிடைத்த விளைச்சல், விளைந்த பொருள் விளைவித்தவனுக்கு கிடைப்பதில்லை. என்பது போல, கிடைத்த உரிமையை பயன்படுத்தவும் இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை.
சமூகத்தின் அங்கமான பெண்ணின் மனநிலையையும், வாழ்நிலையைப் பதிவு செய்யவும், நாட்டின் தலைமையை தீர்மானிக்கவும் சமூக நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும், போன்ற முயற்சிகளுக்கு தலையாயது வாக்கு அளிக்கும் உரிமையே.அவ்வுரிமையை சரியான விதத்தில் பயன்படுத்துவது நம் அவசியமும். நமது உரிமையும் கூட.