பிடல் காஸ்ட்ரோ

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

இந்த அமைப்பின் பெயரைக் கேட்டாலே பலரும் நடுங்குகிறார்கள்; பலவீனமடைகிறார்கள். 2010 நவம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் 28 உறுப்பு நாடுகள் கொண்ட, அமெரிக்காவால் இயக்கப்படுகிற அந்த நாசகர அமைப்பு, "புதிய நேட்டோ" என்ற அமைப்பாக பரிணமிப்பது என தீர்மானித்தது. நேட்டோ எனப்படும் இந்த நிறுவனம் இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு உருவானது. லட்சக்கணக்கான தனது சொந்த மைந்தர்களின் உயிரைத் தியாகம் செய்து நாஜிகளின் படைகளை வீழ்த்தி பாசிசத்தை வெற்றிகொண்ட மகத்தான தேச மாம் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஏகாதிபத்தியம் கட்ட விழ்த்துவிட்ட பனிப்போரின் கருவியாக உருவானது நேட்டோ.

சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்திற்கு (யுஎஸ் எஸ்ஆர்) எதிராக அமெரிக்கா, ஐரோப்பாவில் பெரும் பணக் காரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தீவிர வலதுசாரி சக்தி களையும், நாஜிக்கள்பாசிஸ்டுகளுக்கு ஆதரவான சக்தி களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி தாக்குதல் தொடுத்தது; சோவியத் புரட்சியின் மகத்தான தலைவர் லெனின் மறைந்தபிறகு சோவியத் ஒன்றியத் தலைவர்களின் செயல்பாடுகளில் நேரும் சிறு பிழைகளைக் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக்கடுமையான பகைமை உணர்வை, சோவி யத் ஒன்றியத்திற்கு எதிரான வெறி உணர்வை அமெரிக்கா உலகெங்கிலும் பரப்பியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த உலகின் மூன்று மிகப்பெரிய அமைப்புகள் எப்போதும் மறக்கமுடி யாத படிப்பினைகளை பெற்றன; சியோலில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு, ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்து ழைப்பு அமைப்பின் மாநாடு மற்றும் லிஸ்பனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளின் போதும் உலகம் முழுவதிலும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் மிக முக்கியப் பிரச்சனைகள் குறித்து மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள் என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. இதை மறைப்பதற்கு ஏகா திபத்தியத்தின் ஊடகங்கள் மிகப்பெரும் முயற்சிகள் மேற் கொண்டபோதிலும், உலகெங்கிலும் உள்ள எழுதவும் படிக் கவும் தெரிந்த மக்களின் உள்ளங்களில் இந்தக் கொந் தளிப்பு வெளிப்பட்டது நன்றாகவே தெரிந்தது.

லிஸ்பனில் நடைபெற்ற மாநாட்டில், கோடிக்கணக்கான மக்கள் கொடிய வறுமையில் வாடிக்கொண்டிருப்பது குறித்தோ, போதுமான உணவின்றி, வீட்டுவசதியின்றி, சுகாதார ஏற்பாடின்றி, கல்வி வாய்ப்பின்றி, வேலையின்றி துயரப்பட்டுக்கொண்டிருப்பது குறித்தோ, எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் சீர் குலைந்து கிடப்பது குறித்தோ ஒரு வார்த்தைகூட விவா திக்கப்படவில்லை; இம்மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒருவார்த்தை கூட பேசப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக, நேட்டோ எனும் இந்த ராணுவ மாபியா கும்பலின் பொதுச் செயலாளரான ஆண்டர் ஃபோக் ரமு சேன், ஒரு சிறிய நாஜி படையினது கைக்கூலியின் குரலில் பிரகடனம் செய்தார், "உலகின் எந்த ஒரு பகுதியிலும் ராணுவச் செயல்பாட்டை நிகழ்த்தும் விதத்தில் புதியதொரு வியூகம் வகுத்துள்ளோம்" என்று. 2009 ஏப்ரல் மாதத்தில் இவர் இந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதி ராக வாக்களித்த துருக்கியால் கூட இந்தப்பேச்சை ஒன்றும் செய்யமுடியவில்லை.

டென்மார்க் நாட்டின் பிரதமராக இருந்த ஒரு அப்பட்டமான நவீன தாராளமயக் கொள்கை யின் ஆதரவாளரான ரமுசேன், பத்திரிகை சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தை பயன்படுத்தி, நபிகள் நாயகத்தை இழிவான முறையில் சித்தரித்த பத்திரிகை ஆசிரியர்களை முழுமையாக ஆதரித்தவர். உலகின் அனைத்து முஸ்லிம் மத நம்பிக்கையாளர்களாலும் மதிக்கப்படுகிறவர் நபிகள் நாயகம். இன்றைக்கும் இந்த உலகில், இரண்டாம் உலகப் போர் காலத்தில் வெறிகொண்ட நாஜி படையினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் டென்மார்க் அரசுக்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும், உறவும் இருந்தது என் பதை நினைவுகூறும் மனிதர்கள் ஆங்காங்கே இருக் கிறார்கள். வடக்கு அட்லாண்ட்டிக் ஒப்பந்த அமைப்பு எனப் படும் இந்த நேட்டோ அமைப்பு, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் தோள்களில் அமர்ந்துகொண்டு பிறரது உணவைப் பறித்துத் தின்னுகிற ஒரு கழுகு; அதுமட்டுமல்ல, ஹிரோஷிமா மாநகரத்தை முற்றிலும் அழித்த அந்த பயங்கர அணு குண்டைவிட இந்த உலகையே பலமுறை அழிக்கவல்ல கொடிய அணு ஆயுதங்களால் வலுப்படுத்தப்பட்டுள்ள அமைப்பு இது;

ஆப்கானிஸ்தானில் ஒரு இனப்படுகொலைப் போரை அமெரிக்கா நடத்துவதற்கு துணை நின்றது; செர்பியாவிலும் கொசோவாவிலும் கொடிய போரை நடத் தியது; பெல்கிரேடு நகரத்தையே படுகொலை செய்தது; அந்த நாட்டின் அரசாங்கத்தை அழித்தொழித்தது; அதற் குப்பிறகு அங்கு எவரும் ஆள முடியாமல் செய்தது; ஐரோப்பாவில் நீதிக்காக திஹேக் நகரில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு பதிலாக என்மீது நம்பிக்கை கொள்ளுங் கள் என்று ஐரோப்பிய நாடுகளை மிரட்டிக்கொண்டிருக் கிறது. லிஸ்பனில் கூடிய இந்த அமைப்பின் பிரகடனம், தான் ஒரு சிறந்த பணியை செய்யப்போவதாக கூறிக்கொள் கிறது. அதில் ஒரு அம்சம்:

"பிராந்திய நிலைத்தன்மையை, ஜனநாயக மாண்புகளை, பால்கன் பிரதேசத்தில் ஐரோப்பிய, அட்லாண்டிக் ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பையும் ஆதரிக்கிறோம்".

"எமது கொசோவா திட்டம், இப்பகுதியில் தேவைக்கு ஏற்றாற்போன்ற எமது இருப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டதாகும்."

நேட்டோ இப்படி சொல்வது இப்போது மட்டும்தானா?

ரஷ்யாகூட நேட்டோவின் வார்த்தைகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது: உண்மை என்னவென்றால், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தை யெல்ட்சின் உடைத்துநொறுக்கியபோது, அமெரிக்கா நேட்டோ படைகளின் எல்லையையும், தனது அணு ஆயுதத் தாக்கு தல் இலக்குகளையும் ஐரோப்பாவிலிருந்தும் ஆசியாவி லிருந்தும் ரஷ்யாவின் இதயப்பகுதியை நோக்கி முன்னால் கொண்டு சென்றது. அமெரிக்காவின் இந்த புதிய ராணுவ தளங்கள் மக்கள் சீனக்குடியரசையும் இதர ஆசிய நாடுகளையும் அச்சுறுத்தியது.

1991இல் இது நடந்தபோது, எ.எ.19, எ.எ.20 போன்ற சக்திவாய்ந்த நூற்றுக்கணக்கான சோவியத் ஒன்றியத்தின் ஆயுதங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க, நேட்டோ ராணுவ தளங்களை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றிருந்தது. உலகில் அணு ஆயுதங் களை குறைத்துக்கொள்வது தொடர்பான முதல் ஒப்பந்தம் 1972 மே 26ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்டு நிக் சனுக்கும் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றிய கம்யூனிட் கட்சி பொதுச்செயலாளர் லியோனிட் பிரஸ்னவ்வுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், வெகுரக அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கைகளை குறைப்பது என்பதும், அணுசக்தியோடு கூடிய ஏவுகணைகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் தயாரிப்பதை தடுப்பது என்பதும் ஆகும். இதற்குப்பின்னர் வியன்னாவில் பிரஸ்னவ்வும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திட்டார்கள்.

1979இல் கையெழுத்தான இந்த உடன்பாட்டை சால்ட் ஐஐ (எஸ்.ஏ.எல்.டிஐ.ஐ) என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டு உடன்பாடுகளின் நோக்கங்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மறுத்து விட்டது. இதற்குப்பின்னர் கேந்திரப் பாதுகாப்பு முன்முயற்சி என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் உருவாக்கப்பட்ட புதிய ஆயுதத் திட்டங்கள், மேற்கண்ட உடன்பாடுகளுக்கு முடிவுரை எழுதியது. இதனிடையே, சைபீரிய கேஸ் பைப்லைன், அமெரிக்க உளவுத் ஸ்தாபனம் சிஐஏவால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் 1991இல் அமெரிக்க ஜனாதிபதி சீனியர் ஜார்ஜ் புஷ்சுக்கும் சோவியத் ஜனாதிபதி கோர்பச்சேவுக்கும் இடையே கையெழுத்தானது. சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியம் வீழ்வதற்கு சரியாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதை நினைவு கூறவேண்டும்.

என்ன நடந்தது? உலகின் மிகப்பெரிய சோசலிச முகாம் வீழ்ந்தது. சோவியத் செஞ்சேனையால் நாஜிக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாடுகள் தங்களது சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க முடியாமல் போனது. இந்த நாடுகளில் அதிகாரத்திற்கு வந்த வலதுசாரி அரசுகள் நேட்டோ அமைப்புடன் நெருக்கமாகிக்கொண்டன; அவர் களிடமிருந்து ஆயுதங்களையும் பெருமளவு நிதியையும் வாங்கிக்கொண்டு சரணடைந்தன; அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்தன. எரிக் ஹோங்கர் தலைமையிலான ஜனநாயக ஜெர்மானிய குடியரசு கடுமையான முயற்சி களை மேற்கொண்டபோதிலும், தங்கள் மீது முதலாளித்து வத்தால் தொடுக்கப்பட்ட தத்துவார்த்த ரீதியான, நுகர்வுக் கலாச்சார ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மேற்கத்திய படைகளின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. இந்தச்சூழலில் உலகின் ஏகபோக ஆதிக்க சக்தியாக மாறிய அமெரிக்கா தனது கொடிய தாக்குதல்களையும் போரைத் தூண்டும் கொள்கையையும் தீவிரப்படுத்தியது. மிகத் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட சீர்குலைவுத் திட்டத்தின் பின்னணியில் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியம் வீழ்ந்தது. 1991 டிசம்பர் 8ஆம் தேதி இது நடந்தது. போரிஸ் யெல்ட்சின் இந்த கலகத்தை நடத்தினார். ரஷ்ய கூட்டமைப் பின் ஜனாதிபதி என்ற பெயரில், சோவியத் யூனியன் வீழ்ந்து விட்டதாக அவர் அறிவித்தார். அதே மாதம் 25ஆம் தேதி கிரெம்ளின் மாளிகையிலிருந்து சுத்தியல் அரிவாள் சின்னம் பொறித்த செங்கொடி இறக்கப்பட்டது.

இதற்குப்பின்னர் 1993 ஜனவரி 3ஆம் தேதி சீனியர் ஜார்ஜ் புஷ்ஷ¨க்கும் போரிஸ் யெல்ட்சினுக்கும் இடையே கேந்திர ஆயுதங்கள் தொடர்பாக மூன்றாவது ஒப்பந்தம் கையெழுத் தானது; கண்டம் விட்டு கண்டம் பாயும் வெகுரக, அணு ஆயுத ஏவுகணைகளை பயன்படுத்துவதை தடை செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் எனக்கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1993 ஜனவரி 26ஆம் தேதி அமெரிக்க செனட் சபையால் 87க்கு 4 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறை வேற்றப்பட்டது. இன்றைக்கு இருக்கிற ரஷ்யா, சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டிருக்கிற ரஷ்யா. போர் மற்றும் அளப்பரிய தியாகங்களை செய்து சோவியத் ஒன்றியம் வளர்த்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பெரும் பணக்கார முதலாளித்துவ கைக்கூலிகளின் ராஜ் ஜியத்திலிருந்து தனது சொந்த ஆட்சி அதிகாரத்தை உயர்த் திப்பிடித்த சோவியத் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பாசிசத்தை வெற்றிகொண்ட மகத்தான ரஷ்ய மக்களின் பாரம்பரியங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் சொந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தன் வயப்படுத்திக்கொண்டிருக்கிற ரஷ்யா.

லோவிக் இன மக்களைக் கொண்ட நாடான செர்பி யாவில் நடந்த போர், ரஷ்ய மக்களின் பாதுகாப்பை குறி வைத்து மிகக்கடுமையான முறையில் நடத்தப்பட்டது. இதைத்தடுக்க அங்கிருந்த எந்த அரசாலும் முடியவில்லை.

இராக்கில்நடத்தப்பட்ட முதல் போர் மற்றும் நேட்டோ படைகளால் பல்லாயிரக்கணக்கான செர்பிய மக்கள் படு கொலை செய்யப்பட்ட கொசோவா போர் ஆகியவற்றால் வெகுண்டெழுந்த ரஷ்ய நாடாளுமன்றமான டூமா, அமெரிக்காவுடனான விண்வெளி மற்றும் அணுசக்தி பாது காப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது; 2000ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வந்தது. அதே நேரத்தில் ஏற்கெனவே அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஏ.பி.எம். ஒப்பந்தம் எனப்படும் வெகுரக அணு ஆயுத ஏவுகணைகளை பயன்படுத்துவதை தடை செய்யும் ஒப்பந்தத்தை நீடிக்க முயற்சித்தது. ஆனால் ஏகாதிபத்திய கைக்கூலிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

இதுதொடர்பாக,உலக மக்களின் கருத்தை குழப்பு வதற்கும், போலித் தகவல்களை உருவாக்குவதற்கும் தனது உலகளாவிய ஊடக ஆதாரங்களை பயன்படுத்தி அமெ ரிக்கா தீவிரமாக முயற்சித்தது. தனது தொடர்ச்சியான போர் களின் விளைவாக இன்றைக்கு அந்தநாடு ஒரு கடுமை யான கட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் போரில் அனைத்து நேட்டோ நாடுகளும் மிகக்கொடிய குற்றங்களை இழைத்திருக்கின்றன. இவர்களோடு இணைந்து பணக்கார தொழில்வள நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்ரேலியா ஆகியவையும், உலக மக்கள் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்த கொடிய படு கொலைகளை நடத்தியிருக்கின்றன. இதில் ஒருசில மூன்றாம் உலக நாடுகளும் அடங்கும்.

இந்தப்பின்னணியில் இந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத் தான உடன்பாட்டின் அடிப்படை அம்சம் என்ன? இரண்டு நாடுகளுமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் இருக்கும் அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கையை 1550ஆக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், பிரான்சில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற அணு ஆயுத ஏவுகணைகளைப் பற்றியோ, இங்கிலாந்திலும் இஸ்ரே லிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற அணு ஆயுத ஏவுகணை களைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட இந்த ஒப்பந்தத் தில் இடம்பெறவில்லை; இந்த ஏவுகணைகள் அனைத்தும் ரஷ்யாவை தாக்கி அழிக்க வல்லவை. அதுமட்டுமின்றி, ஹிரோஷிமா மாநகரை அழித்தொழித்த சக்திவாய்ந்த அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுதங்களைப் பற்றியும் இந்த ஒப்பந்தத்தில் பேசப்படவில்லை.

அமெரிக்க வசமிருக்கிற எண்ணற்ற பேரழிவு ஆயுதங்கள் பற்றியோ, வேகமாக வளர்ந்துவரும் தனது ராணுவ பட்ஜெட் மூலம் அமெரிக்கா அர்ப்பணித்திருக்கிற ரேடியோ மின்னணு ஆயுதக் கட்டமைப்புகள் பற்றியோ இந்த உடன்பாட்டில் எதுவும் இடம்பெறவில்லை. இரண்டு அரசுகளுக்குமே நன்றாகத் தெரியும்; இந்த ஆயுதங்களோடு தாங்கள் மோதிக்கொண்டால் ஏற்படப்போகிற மூன்றாவது உலகப் போரே இந்த உலகின் கடைசிப்போராக இருக்கும் என்று. இவை அனைத்திலும் நேட்டோ உறுப்புநாடுகளுக்கு இருக்கிற பங்கு என்ன? இவர்கள் நடத்திய கூட்டத்தின் மூலமாக மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மை என்ன? மூன்றாம் உலகநாடுகளுக்கு கிடைத்துள்ள பலன் என்ன? அல்லது சர்வதேச பொருளாதாரத்திற்கு இவர்கள் அளிக்கிற நம்பிக்கைதான் என்ன? இவர்களால், கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள உலகப்பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்ற சிறு நம்பிக்கையை கூட அளிக்க முடியாது.

அமெரிக்க தேசத்தின் மொத்தக் கடன் இன்றைய தினம் எவ்வளவு தெரியுமா? அமெரிக்க மத்திய அரசாங்கம் மட்டுமின்றி அந்த நாட்டிலுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் மொத்தக்கடனையும் கூட்டினால், 58 டிரில்லியன் டாலர். இது 2009ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூட்டுத்தொகை யாகும். லிபன் மாநகரில் கூடிய நேட்டோவின் உறுப் பினர்கள் தங்களுக்கு கிடைத்துவருகிற மிகப்பெரும் நிதியா தாரம் எங்கிருந்து வருகிறது என்பதை உணர முன்வருவார்களா? எங்கிருந்து வருகிறது இவர்களுக்கான பணம்? இதற்கு பதில் எளிமையானது; உலக நாடுகள் முழுவதிலுமுள்ள மக்களின் மிகச்சிறிய பொருளாதாரத்திலிருந்து. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணம் என்ற பெய ரில் அமெரிக்காவால் வரையறை செய்யப்பட்டு அளிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை இந்த மக்களின் கைகளில் கொடுத்துவிட்டு, அந்தப்பணத்தை போல 40 மடங்கு மதிப்பு மிக்க தங்கத்தால் வலுவாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத்திலிருந்து. இத்தகைய நாட்டிற்குத்தான் இன்றைக்கும் சர்வதேச நிதிநிறுவனத்திலும் உலக வங்கியிலும் தடை அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் ஏன் நேட்டோ உறுப்பு நாடுகள் போர்ச்சுக்கல் தேசத்தில் கூடியபோது விவாதிக்கவில்லை? அமெரிக்கா, நேட்டோ மற்றும் இவர்களின் கூட்டாளி நாடுகளது படை களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள் வார்கள் என்ற நம்பிக்கை முட்டாள்தனமானது. ஆப் கானிஸ்தானில் தங்களை எதிர்த்து குரல்கொடுப்பவர் களிடம் அதிகாரத்தை விட்டுவிட்டு அந்த நாட்டிலிருந்து இவர்கள் வெளியேறிவிடுவார்களானால், தோல்விய டைந்துவிட்டார்கள் என்று பொருள். அங்கு போர் நடப்பதற்கு முன்பே பல்லாண்டு காலமாக இவர்கள் நிலை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்

ஆப்கானிஸ்தானத்தோடு காலனியாதிக்கக் காலத் திலிருந்தே நீண்ட எல்லையை பகிர்ந்துகொள்கிற, மிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இரு நாடுகளிலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் பழங்குடிகள் இருக்கிறார்கள்.

நான் ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவை விமர்சிக்க வில்லை; தனது நாட்டை குறிவைத்திருக்கிற அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் மிகச்சரியான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் பாரக் ஒபாமா இதே முயற்சியை மேற்கொண் டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஈரானிய ராக் கெட்டுகளிடமிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க மிகப் பெரும் பொருட்செலவில் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு படைகளை குவிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது நகைச்சுவையானதே; ஏனென்றால் சொந்தமாக எந்த ஒரு சக்திவாய்ந்த அணு ஆயுதமும் இல்லாத ஒருநாட்டிலிருந்து இத்தகைய ஆபத்து வரும்என்று அவர் எதிர்நோக்குகிறார். குழந்தைகளின் காமிக் புத்தகத்தில் கூட இப்படி ஒரு கதை இடம்பெற வாய்ப்பில்லை.

ஒபாமா ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறார்; ஆப் கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்க வீரர்களை விலக்கிக் கொள்வோம் என்ற தனது உறுதிமொழி ஒத்திவைக்கப்பட லாம் என்று. நோபல் பரிசைப் பெற்ற அவருக்கு நாமும் ஒரு பரிசு அறிவிக்கலாம். "மிகச்சிறந்த பாம்பாட்டி வித்தைக் காரர்" என்பதே அந்த விருது.