கனவான்களே! இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே மகத்தில் உள்ள சவுதார் குளத்தின் நீரை அருந்துவதற்கு மட்டும்தான் என்று தவறாக அனுமானித்து விடாதீர்கள். சவுதார் குளத்தின் நீரை அருந்துவது, நம்மை சாவற்றவர்களாக ஆக்கிவிடும் என்பதல்ல. அதை குடிக்காமலேயே நாம் இத்தனைக் காலமும் நன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். நாம் சவுதார் குளத்திற்குச் செல்வது, வெறுமனே அதன் நீரை குடிப்பதற்காக மட்டுமல்ல. அந்தக் குளத்திற்கு நாம் செல்வது, நாமும் பிறரைப் போல மனிதர்கள் தான் என்பதை அறிவிப்பதற்கு. சமத்துவத்தின் சட்டத்தை நிலைநிறுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தினை இந்த நோக்கில் அணுகுகின்றவர்கள் எவரும், இதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்பதை சந்தேகமின்றி உணர்வார்கள். இந்திய வரலாற்றில் இதற்கு இணையான ஒன்றைக்காண முடியாது என்று நினைக்கிறேன். வரலாற்றில் இதற்கு இணையான ஒன்றை நாம் தேடுவோமானால், அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்சின் வரலாற்றிற்கு நாம் செல்ல வேண்டும். 130 ஆண்டுகளுக்கு முன், 1789, சனவரி 24 அன்று மன்னர் பதினாறாம் லூயி, அரச கட்டளையின்படி ஒரு கூட்டத்தினை கூட்டினார். அது, அரசாங்கத்தில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் அவையாகும். இந்த பிரெஞ்சு தேசிய அவை, வரலாற்றாய்வாளர்களால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டது. பிரான்சின் அரசரையும் அரசியையும் இந்த அவை கழுவில் ஏற்றியது. உயர் வகுப்பினரை கொன்றது. அதில் தப்பியவர்களை நாட்டை விட்டே வெளியேற்றியது. பணக்காரர்களிடமிருந்து அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தது. அய்ரோப்பாவை 15 ஆண்டுகளுக்கு ஒரு போரில் தள்ளிவிட்டது.

இவைதான் அந்த அவை பற்றி வரலாற்றாய்வாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். என் பார்வையில், விமர்சனம் தவறானவர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அடிப்படையில் கூறும் வரலாற்றாய்வாளர்கள், பிரெஞ்சு தேசிய அவை சாதித்தவற்றின் சாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த சாதனைகள், பிரான்சின் நலனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த அய்ரோப்பிய நலனுக்கும் பங்காற்றியிருக்கிறது. அய்ரோப்பிய நாடுகள் இன்று அமைதியையும் வளத்தையும் அனுபவிக்கிறார்கள் என்றால், அது ஒற்றைக் காரணத்தினால் மட்டுமே. 1789 இல் அமைக்கப்பட்ட புரட்சிகர பிரெஞ்சு தேசிய அவை, சமூக ஒழுங்கிற்கு புதிய கொள்கைகளை வரையறுத்தது. அதன் காலத்தில் இருந்த ஒழுங்கற்ற, ஒழுக்கமற்ற பிரெஞ்சு தேசத்திற்கு மாறானது. அந்தக் கொள்கைகளே இன்று அய்ரோப்பாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றவும் படுகிறது.

பிரெஞ்சு தேசிய அவையின் முக்கியத்துவத்தையும், அதன் கொள்கைகளின் உயர்வையும் பாராட்டுவதற்கு – அக்காலத்திய பிரெஞ்சு சமூகத்தின் நிலையை நாம் மனதில் இருத்த வேண்டும். நமது இந்து சமூகம், சாதியின் அடிப்படையிலானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 1789 இல் பிரான்சில் ஏறக்குறைய இதே போன்றதொரு வகுப்பு அமைப்பு நிலவியது. வேறுபாடு என்னவெனில், அது மூன்று சாதிகள் கொண்ட ஒரு சமூகம். இந்து சமூகத்தைப் போல, பார்ப்பனர்கள் வகுப்பினையும் மற்றும் சத்திரியர்கள் வகுப்பினையும் பிரெஞ்சு சமூகம் கொண்டிருந்தது. மூன்று வெவ்வேறு சாதிகளான வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்களுக்கு பதிலாக, இம்மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வகுப்பு இருந்தது. இது ஒரு சிறிய வேறுபாடு.

கவனிக்க வேண்டிய ஒற்றுமை என்னவெனில், வகுப்புகளுக்கு இடையிலான பாகுபாடு மட்டுமல்ல, நமது சாதிய அமைப்பிலிருந்த சமத்துவமின்மையும் பிரெஞ்சு சமூக அமைப்பில் நிலவியது. பிரெஞ்சு சமூகத்தில் நிலவிய சமத்துவமின்மையின் தன்மை வேறானது. அது, பொருளாதார அடிப்படையிலானது. இருப்பினும், அது நம்முடையதைப் போலவே ஆழமாக இருந்தது. நாம் மனதில் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில், 5 மே 1789 இல் வெர்சய்லெசில் கூடிய பிரெஞ்சு தேசிய அவைக்கும், நமது கூட்டத்திற்கும் பெருத்த

ஒற்றுமை உண்டு என்பதையே. அந்த ஒற்றுமையானது, இந்த இரண்டு கூட்டங்களும் நடைபெற்ற சூழலைப் பொருத்தது மட்டுமல்ல, அதன் நோக்கத்திலும் இருந்தது.

பிரெஞ்சு மக்களின் அந்த அவை பிரெஞ்சு சமூகத்தை மறு சீரமைக்க கூட்டப்பட்டது. நமது இன்றைய கூட்டம், இந்து சமூகத்தை மறு

சீரமைக்க கூட்டப்படுகிறது. நமது சமூகம் எந்த கொள்கையின் அடிப்படையில் மறு சீரமைக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி கலந்துரையாடும் முன், பிரெஞ்சு அவை எந்த கொள்கைகளை சார்ந்து இருந்தது என்பதையும், அது எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் அனைவரும் கவனிக்க வேண்டும். நமது தற்போதைய கூட்டத்தை விட பிரெஞ்சு அவையின் செயற் களம் பரந்திருந்தது. பிரெஞ்சின் அரசியல், சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றைக் கொண்ட மூன்று நிலைகளில் அது மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருந்தது. நாம் சமூகம் மற்றும் மத சீரமைப்பு எப்படி கொண்டுவரப்பட வேண்டும் என்பதோடு, நமது செயல்தளத்தையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

(மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய உரை. அர்ஜுன் டாங்ளேவின் ‘நஞ்சூட்டப்பட்ட ரொட்டி' நூல்)

Pin It