தன்னை பிறப்பின் அடிப்படையில் மேலானவன் என்று கருதிக்கொண்டு சக மனிதரை இழிவுபடுத்தும் சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கொங்கு மண்டலப் பகுதியில் புற்றீசல் போல பெருகியிருக்கும் சாதிச் சங்கங்கள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மத்தை விதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒழுங்காக நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரியாத தற்குறிப் பயல்கள் எல்லாம் இன்று சாதிசங்கத் தலைவனாக வலம் வந்துகொண்டு இருக்கின்றார்கள். போதாத குறைக்கு இந்த அற்பப் பிறவிகளுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை வேறு ஒரு கேடு!. கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கல்விக் கொள்ளை என வளர்ந்த இந்தக் கும்பல் இன்று அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக சாமானிய மக்களிடம் சாதி வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை வெறிநாய்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிக் கொண்டிருக்கின்றன.

pappal dalit cookதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் குட்டகம் ஊராட்சியில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் பாப்பாள். இவர் ஒச்சாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தன் சொந்த ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளியில் காலி இடம் இருந்ததால் மாற்றப்பட்டிருக்கின்றார். தன் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் கிடைத்ததில் பாப்பாள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஊரும், சேரியும் பிரிந்தே கிடக்கும் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாளை நிம்மதியாக சமைக்க விட்டு விடுவார்களா சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகள்? அப்படி விட்டுவிட்டால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என்ற பெருமைமிகு பட்டம் என்னாவது?

அதனால் பஞ்சமர் பாப்பாள் சமைத்த உணவை தங்கள் வீட்டு சூத்திரப் பிள்ளைகள் உண்ண மாட்டார்கள் என்று போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். இதனால் மீண்டும் பாப்பாள் முன்பு பணியாற்றிய ஒச்சாபாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்படிருக்கின்றார். இந்தச் செய்தியை அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற பல்வேறு அமைப்புகள் களத்தில் இறங்கி போராடிய பிறகே, மீண்டும் பாப்பாள் திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்பட்டிருக்கின்றார். இந்தப் பள்ளியில் சூத்திர சாதி மாணவர்களுக்குத் தனியாக சூத்திகரிக்கப்பட்ட குடிநீரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீரும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு பள்ளியில் சாதிவெறி தலைவிரித்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் கேடுகெட்ட சாதிக் கழிசடைகளாக மாறி மாணவர்களுக்கு சாதிவெறியைக் கற்பித்தால் சமூகம் என்னாவது?. இது போன்று ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் சாதிவெறி பிடித்த நாய்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பாப்பாள் அளித்த புகாரின் அடிப்படையில் 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பாப்பாள் சமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், தலைமை ஆசிரியர் சகிகலா, வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பள்ளியில் தீண்டாமைக் கொடுமை நடப்பதை மறைத்த ஆசிரியர்கள் என அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

படிக்கும் பிள்ளைகளிடம் பெற்றோரே சுயசாதிப் பெருமையை சொல்லிக் கொடுப்பதும், மாணவர்களுக்கு சமூக சமத்துவதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சாதிசங்கத் தலைவர்களின் ஏவல் நாய்களாக மாறி, மாணவர்களின் மனங்களை நச்சாக்குவதும் பேராபத்தானதாகும். பேருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதே இழிவு என்ற சிந்தனையை விதைத்த மண்ணில் இன்னுமிது போன்ற சுயசாதிப் பெருமை பேசி தன்னுடைய சகமனிதன் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் அற்ப உயிர்கள் வாழ்ந்து வருவது இந்த மண்ணின் பெருமைக்கே வெட்கக்கேடானது ஆகும்.

இன்று தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் சூத்திர சாதியினர், அவர்களை என்னுடைய நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் ஆர்.ஐ, முன்சீப், தாசில்தாராக இருந்தால் அவர்களிடம் போய் கைகட்டி வாய் பொத்தி ஒரு கையெழுத்து வாங்குவதற்காக நாயைப் போன்று காத்துக் கிடக்க மாட்டேன், அவர்கள் காவல்துறையில் இருந்தால் அவர்களிடம் சென்று புகார் அளிக்க மாட்டேன், நீதிபதியாக இருந்தால் அவர்களிடம் சென்று நீதிக்காக முறையிடமாட்டேன், அவர்கள் மருத்துவராக இருந்தால் அவர்களிடம் சென்று மருத்துவம் பார்க்க மாட்டேன், இனி எந்தக் கல்யாணத்திற்கோ, இல்லை உணவு விடுதிக்கோ போனால் சமையலிலோ, இல்லை பரிமாறுவதற்கோ தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை என்று கேட்டுவிட்டுதான் சாப்பிட உட்காருவேன், அவர்கள் மளிகைக் கடை வைத்திருந்தால் பொருட்கள் வாங்க மாட்டேன், மருந்துக்கடை வைத்திருந்தால் மருந்து வாங்கமாட்டேன், அவர்கள் பேருந்து ஓட்டினால் பேருந்தில் ஏறமாட்டேன், ஆகமொத்தம் சுத்தமான சாதி விந்துவுக்கு பொறந்த நான் தாழ்த்தப்பட்டவன் கைப்பட்ட எதையுமே வாழ்க்கையில் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? இவன் உடம்பில் ஓடுவது சுத்தமான சாதி ரத்தம் என்றால் சொல்லித்தான் பார்க்கட்டுமே.

தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் இந்தச் சூத்திர நாய்களைப் பார்த்து வசிட்டர் சொல்கின்றான் “சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும் நிலையில் இறந்து போனவன் மறுபிறப்பில் பன்றியாகப் பிறப்பான்” என்று. தன்னை ஆதிக்க சாதியாக கருதிக் கொள்ளும் சூத்திரன் வீட்டு சோற்றுக்கே இந்த இழிநிலை இருக்கும்போது, வெட்கம்கெட்ட ஜென்மங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சக மனிதனை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அவர்களுக்கு எதிராகப் போராடுகின்றார்கள்?

தன்னை சாதி இந்து என்று பெருமை பேசும் இந்தக் கழிசடைகளை அந்த இந்துமதம் எப்படி பெருமைப்படுத்தி இருக்கின்றது? மனு சொல்கின்றான் "சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்" அ.8.சு.22 "சூத்திரனாகவும் மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி" அ.8.சு.22 "சூத்திரன் பிராமணரைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்" அ.8.சு.270 "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்" அ.8.சு.281 "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்தி கிழித்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்" அ.10.சு.125. இவனை ஒரு நாயைவிட கேவலமாகவே இந்துமதம் நடத்துகின்றது. ஆனால் சூடு சுரணை அற்ற பேர்வழிகள் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் தன்னைப் பார்ப்பானின் வைப்பாடி மகன்கள் (சூத்திரன்) என்று பெருமை பேசித் திறிகின்றார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சூத்திர சாதி வெறியர்கள் சொல்வது பல ஆண்டுகளாக நடந்துதான் வருகின்றது. பாளையங்கோட்டை நகரில் சீர்திருத்தக் கிறித்தவர்கள் நடத்திய இறையியல் கல்லூரி ஒன்று செயல்பட்டுவந்தது. இங்கு வெள்ளாளர் ஒருவர் சமையல்காரராக இருந்தார். 1846 இல் அவர் திடீரென்று வேலைக்கு வரவில்லை. அவருக்கு மாற்றாக, பறையர் ஒருவர் சமையல்காரராக அனுப்பப்பட்டார். இதன் விளைவாக அங்கு தங்கியிருந்த 35 மாணவர்களில் 34 பேர் வெளியேறிவிட்டார்கள். மறைப்பணியாளர்கள் உறுதியாக நின்றதால் வெளியேறிய மாணவர்கள் சில நாட்களில் மீண்டும் விடுதிக்கு வந்தார்கள். (சமபந்தி- ஓர் எதிர்ப்பண்பாடு-ஆ.சிவசுப்பிரமணியன்)

kovai ramakrishnan and pappammal

அதே போல 1930 ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெரியார் அவர்கள் அன்று தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்பட்ட நாடார் சாதிக்காரர்களையும், ஆதிதிராவிடர்களையும் வைத்து சமையல் செய்ய வைத்து மாநாட்டில் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் கையாலேயே பறிமாறவும் வைத்தார் (குடியரசு 22.06.1930). ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் சாதிவெறியர்களுக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க முடியாமல் அவர்களின் சாதித் திமிருக்கு இடம்கொடுப்பதும், பணிந்துபோவதும் வெட்கக்கேடானது ஆகும்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்று சண்டித்தனம் செய்யும் சாதிவெறியர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தங்களுடைய சாதிசங்கத் தலைவன் நடத்தும் பள்ளியில் போய் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அங்கே போனால் காசு இல்லை என்றால் கழுத்தை பிடித்து வெளியே துரத்திவிடுவான் என்பதால்தான் அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுப்பள்ளியிலே போய் சேர்க்கின்றார்கள். ஆனால் அங்கேயும் வந்து நான் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் சாதிவெறியை ஊட்டுவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. பள்ளியில் வந்து சாதிவெறியைக் கக்கும் மாணவர்களை நிச்சயமாக எந்தவித தயவுதாட்சண்யமும் பார்க்காமல் பள்ளியைவிட்டு துரத்திவிடுவதே உத்தமம். சதிவெறியைக் கடைபிடிக்கும் கழிசடைகளை பள்ளியில் விட்டால் ஒட்டுமொத்த பள்ளியின் சூழ்நிலையையே மாற்றிவிடுவார்கள். அந்த மாணவர்களின் எதிர்காலம் அழிந்தால் சாதிச்சங்கம் நடத்தும் கழிசடைகளா வந்து காப்பாற்றுவார்கள்!?

நகர்ப்புறங்களில் கடைபிடிக்க முடியாத சாதிவெறியை கிராமங்களில் மிக எளிதாக தங்களின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சாதிவெறியர்கள் நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கிராமப்புறங்கள்தான் சாதிச்சங்க கழிசடைகளின் மிக எளிய இலக்காக இருக்கின்றன. பெருநகரங்களில் இயங்கும் ஒரு பள்ளியில் இது போன்று சாதிவெறியர்களால் கோரிக்கை வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எங்கெல்லாம் ஊரும், சேரியும் வெளிப்படையாக இருக்கின்றதோ, அங்குதான் இந்த சூத்திரசாதிக் கழிசடைகள் தங்களின் சாதிவெறிக் கொழுப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றார்கள். எனவே எங்கு சாதிவெறி வெளிப்படையாக கடைபிடிக்கப்படுகின்றதோ அங்குதான் முற்போக்கு அமைப்புகளின் பணி அதிகமாகத் தேவைப்படுகின்றது. தற்போது இந்தப் பிரச்சினையில் கூட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து போராடியதன் விளைவாகத்தான் மீண்டும் பாப்பாள் அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கின்றது. இல்லை என்றால் அனைத்து சாதிவெறியர்களும் சேர்ந்து பிரச்சினையை மூடி மறைத்திருப்பார்கள். தமிழ்நாட்டில் பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்களும் உள்ளவரை சாதிவெறியர்களுக்கு இந்த மண்ணில் ஒருபோதும் இடமில்லை.

- செ.கார்கி