(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77)

            “தொழில்நுட்ப, விஞ்ஞானப் பயிற்சிக்கு வழிவகை செய்யாத, நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் முழுநிறைவானதாகக் கருத முடியாது. இது எந்திரங்கள் யுகம்; தொழில் நுட்ப, விஞ்ஞானப் பயிற்சியில் மிக உன்னத நிலையை எய்தும் நாடுகள்தான் போர் முடிவடைந்ததும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் போராட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியும். இந்த உண்மையை இந்திய அரசாங்கம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடவில்லை; தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் தொடர்ந்து செயல்படும்படியாக அது பார்த்துக் கொள்ளும்; அது மட்டுமல்ல, இத்திட்டத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்பதற்கும், நாட்டின் கல்வி அமைப்பில் அது ஒரு நிரந்தர இடத்தைப் பெறுவதற்கும் அரசாங்கம் முயற்சி எடுத்துக்கொள்ளும். ஆகஸ்டு 24ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சித் திட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும்போது இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

            சிவில் தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தைத் திருத்தியமைப்பதை ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட இந்தத் குழுவில் பொறியியல் அமைப்புகள், அகில இந்திய தொழிலதிபர்கள் சங்கம், இந்தியத் தொழிலதிபர்கள் சம்மேளனம், வங்காள வாணிகக் கழகம், வழங்கீடுத் துறை, ரயில்வே வாரியம், பொறியியல் கழகம் முதலியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். இக்கூட்டம் மூன்று நாள் நடைபெற்றது.

ambedkar at marriage

டாக்டர அம்பேத்கரின் உரை

            கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நிகழ்த்திய உரையின் முழு வாசகம் வருமாறு:

            பெருந்தகையாளர்களே, இன்று உங்களை இங்கு வரவேற்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிரமம் பாராது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்களில், நமக்கு எத்தனை எத்தனையோ இயல்பான கடமைப் பொறுப்புகள் இருக்கின்றன. இவற்றுடன் புதிய பொறுப்புகள் சேரும்போது நமது சுமை கூடவே செய்யும். இருப்பினும் இத்தகைய வேலைச் சுமைகளுக்கு இடையேயும், நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கத்துக்கு உதவி செய்ய முன்வந்தமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

            இந்த ஆலோசனைக் குழுவின் பணிக்கு நான் எத்தகைய மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கடைசி நிமிடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும் கூட எப்படியும் உங்களைச் சந்திக்க வேண்டும், உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற விழைய வேண்டும் என்ற உறுதியோடு நான் கல்கத்தாவுக்கு வந்திருப்பதே எனது கூற்றின் வாய்மைக்கு, நேர்மைக்குச் சான்று பகரும் என்பதில் ஐயமில்லை.

            நமது தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக இன்று இங்கே கூடியிருக்கிறீர்கள். படைகளின் தொழில் நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓர் அவசர நடவடிக்கையாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதையும், இதன் முன்னர் கேட்டிராத அளவுக்கு ஓரளவு – பயிற்சி பெற்ற மனித சக்தியை அது இந்தியாவுக்கு வழங்கியுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

            தொழில் நுட்பப் பயிற்சித் துறையில் சாதிக்கப்பட்டிருக்கும் பணியின் பரிமாணத்தை ஓரளவு நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தின் வரலாற்றை அதன் ஆரம்பக் கட்டங்களிலிருந்து சுருக்கமாக எடுத்துரைப்பது உசிதமாக இருக்கும் என்று கருதுகிறேன். படைகளுக்குத் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை பெருமளவுக்கு நிலவி வந்தது; இந்த முக்கிய இடர்ப்பாட்டை அகற்றும் பொருட்டே மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சுமார் 3,000 பேரைப் பயிற்றுவிக்கும் குறிக்கோளோடு இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்த இலக்கை 48,000க்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் பொருட்டு 394 பயிற்சிக் கேந்திரங்கள் தேவைப்பட்டன 1942 இறுதிக்குள்ளாக பயிற்சிபெற்ற 54,000 ஊழியர்களை ராணுவத்துக்கு வழங்கியுள்ளோம். 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள்ளாக 75,000 பயிற்சியாளர்களை உருவாக்கினோம். இவர்களில் 63,000 பேர் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவுகளில் சேர்ந்தனர்; 3,000 பேர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றச் சென்றனர். இந்தப் பணியை நிறைவேற்ற எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது அது ஒரு சாதாரண சாதனையல்ல என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

            யுத்தத்தின் விளைவாக ராணுவத்துக்கு ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் தொழில் நுட்பப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதை நீங்கள் அனைவரும் காணுகிறீர்கள். இதனால் தொழில் நுட்ப ஊழியர்கள் சம்பந்தமாக ராணுவத்துக்குள்ள தேவை குறையும் என்பது தெளிவு.

            இத்தகைய நிலைமையில், யுத்தத்தின் முடிவில் நம் முன்னால் இரண்டு கேள்விகள் எழக்கூடும். முதல் கேள்வி; ஏற்கெனவே தொழில் நுட்பப் பயிற்சி பெற்று ஏராளமானோர் ராணுவத்தில் சேவை செய்து வருகின்றனர்; யுத்தம் முடிந்ததும் இவர்கள் விரைவிலேயே ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் பெறக் காத்திருப்பார்கள்; இவர்கள் விஷயத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? இரண்டாவது கேள்வி: இந்தத் தொழில் நுட்பப் பயிற்சித் திட்டம் குறித்து நாம் என்ன முடிவெடுக்கப் போகிறோம்?

            இந்தத் தொழில் நுட்பத் திட்டத்தைக் கைவிட அரசாங்கம் முடிவு செய்து விட்டதாகச் சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால் அதே சமயம் ஒரு விஷயத்தை இங்கு மூடி மறைக்க நான் விரும்பவில்லை: அதாவது சில பயிற்சிக் கேந்திரங்களை அரசாங்கம் மூடிவிட்டது என்பது உண்மையே. 45,000 பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்கும் திறன் படைத்த 400 பயிற்சிக் கேந்திரங்கள் 1942ல் இருந்தன; ஏறத்தாழ 32,000 பேரைப் பயிற்றுவிக்கக் கூடிய 170 பயிற்சிக் கேந்திரங்கள் இப்போது உள்ளன. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் இரண்டு பிரதான காரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது காரணம் தொழில் நுட்பப் பயிற்சியாளர்கள் சம்பந்தமாக ராணுவத்துக்குள்ள தேவை இப்போது குறைந்து விட்டது. இரண்டாவது காரணம் சிறு பயிற்சிக் கேந்திரங்களைப் பராமரிப்பதற்கு மிக அதிகமாக செலவு பிடிக்கிறது.

அரசாங்கத்தின் உத்தேசம்

            நிலைமையைச் சமாளிப்பதற்கு அவசியமானவற்றை மட்டுமே அரசாங்கம் செய்துள்ளது என்பதையே இந்த நடவடிக்கைகள் யாவும் காட்டுகின்றன. தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தைக் கைவிடும் உத்தேசம் ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதையே இவை புலப்படுத்துகின்றன. இத்தகைய உத்தேசம் ஏதும் இருந்திருக்குமானால் அரசாங்கம் இந்த ஆலோசனைக் குழுவை அமைத்திருக்காது. தொழில் நுட்ப, விஞ்ஞானப் பயிற்சிக்கு வழிவகை செய்யாத, நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் முழு நிறைவானதாகக் கருத முடியாது. இது எந்திரங்கள் யுகம்; தொழில் நுட்ப, விஞ்ஞானப் பயிற்சியில் மிக உன்னத நிலையை எய்தும் நாடுகள் தான் போர் முடிவடைந்ததும் போராட்டத்தில் தாக்குபிடித்து நிற்க முடியும். இந்த உண்மையை இந்திய அரசாங்கம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடவில்லை; தொழில் நுட்பப் பயிற்சித் திட்டம் தொடர்ந்து செயல்படும்படியாக அது பார்த்துக் கொள்ளும்; அது மட்டுமல்ல, இத்திட்டத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்பதற்கும், நாட்டின் கல்வி அமைப்பில் அது ஒரு நிரந்தர இடத்தைப் பெறுவதற்கும் அரசாங்கம் முயற்சி எடுத்துக் கொள்ளும்.”

பயிற்சியாளர்களைத் தொழில்துறை ஈர்த்துக் கொள்ள வேண்டும்

          இதுதான் அரசாங்கத்தின் குறிக்கோள் என்றாலும் இத்திட்டம் வெற்றி பெறுவது பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்புப் பெறும் சாத்தியக் கூறுகளையே முற்றிலும் பொறுத்துள்ளது. பயிற்சியாளர்கள் உரிய முறையில் பயிற்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்புப் பெற முடியாதுபோனால், இத்தொழில் நுட்பப் பயிற்சித் திட்டம் படுதோல்வியே அடையும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வு பயிற்சிக் கேந்திரங்களிலிருந்து வெளிவரும் பயிற்சியாளர்களின்பால் தொழில்துறை கடைப்பிடிக்கும் போக்கையே அறவே சார்ந்திருக்கும். இத்திட்டத்தின் முழுக் கதிப்போக்கும் இதனையே பொறுத்துள்ளது. பயிற்சியாளர்களை வேலைக்கமர்த்திக்கொள்ள தொழில்துறை மறுக்குமானால், தொழில்நுட்பப் பயிற்சியில் எவரும் எத்தகைய அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்; அப்போது பயிற்சிக் கேந்திரங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை நமது பயிற்சியாளர்களை ஈர்த்துக் கொள்வதில் சிவில் தொழிற்சாலைகள் ஆர்வம் காட்டினால் மட்டுமே இந்தத் துரதிர்ஷ்டவசமான விளைவைத் தடுத்து நிறுத்த முடியும்.

            உபரியாக உள்ள 6,000 பயிற்சியாளர்களின் 3,000 பேர்களை மட்டுமே சிவில் தொழில் துறை எடுத்துக் கொண்டுள்ளது. தேர்ச்சி பெறாத தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொள்வதையே இந்தத் தொழில் நிலையங்கள் விரும்புகின்றன; வேலை செய்து வரும்போது நாளடைவில் இவர்கள் தேவையான திறமையையும், பயிற்சியையும் பெற்றுவிடுவார்கள் என்று இவை நம்புகின்றன. நமது தொழில்நுட்பப் பயிற்சிக் கேந்திரங்களில் பயின்று வெளிவரும் பயிற்சியாளர்களை வேலைக்கமர்த்திக் கொள்ள மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. நாம் அளிக்கும் பயிற்சி போதுமானதாக இல்லை என்று முறையீடுகள் எழுந்திருப்பதைப் பார்க்கிறேன். நமது திட்டத்தின்படி அளிக்கப்படும் பயிற்சியை விடவும் மிக உயர்ந்த பயிற்சி பெற்ற ஊழியர்களே தங்களுக்கு வேண்டும் என்று சிவில் தொழில் நிலையங்கள் வலியுறுத்துகின்றன. யுத்தத்திற்கு முன்னர் ஐந்தாண்டுக்காலம் பிடிக்கக்கூடிய பயிற்சியை போர் நிர்ப்பந்தம் காரணமாக எட்டே மாதங்களில் தருவதற்கு நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம் என்பது உண்மையே.

            எனினும், சிவில் தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தப் பயிற்சி ஐந்தாண்டுக் காலம் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து. ஏனைய நாடுகளில் போர்க்காலத் தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தின் அனுபவம் எதைக் காட்டுகிறது? ஓரளவு தீவிர பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பெரும்பாலான தொழில்களுக்கு வெகுவிரைவிலேயே பயிற்றுவித்து விட முடியும் என்பதையே அது புலப்படுத்துகிறது.

 தொழில்துறைக்குள்ள பொறுப்பு

          எனவே, தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தின்படி அளிக்கப்படும் பயிற்சியோடு வேலை செய்யும் இடத்திலேயே மேற்கொண்டு குறிப்பிட்ட தனிவகைப்பட்ட பயிற்சி அளிக்கப்படுமானால் அது சிவில் தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். எனினும், நமது பயிற்சித் திட்டத்தில் சில குறைப்பாடுகள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். நமது பயிற்சியாளர்களைத் தொழில்துறைக்கு ஏற்றவர்களாக ஆக்குவதற்கு பயிற்சித் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கும் இணங்க சித்தமாக இருக்கிறேன். ஆனால் நமது பயிற்சியாளர்களை வேலையில் அமர்த்த தொழில் துறை இணங்கினாலொழிய தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் இந்த நாட்டில் வெற்றிபெறும் என்று நம்புவதற்குச் சாத்தியமில்லை. எனவே தனது தோள்களில் மிக முக்கியமான பொறுப்பு சுமந்துள்ளது என்பதை தொழில்துறை உணர்வது அவசியம்.

            தொழில்துறையின் தேவைகளை என்னைவிட நீங்கள் நன்கு அறிவீர்கள். இங்கு நான் கூறக்கூடியதெல்லாம் இதுதான்: இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் அதன் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். இது விஷயத்தில் இனியும் நாம் கால தாமதம் செய்யக்கூடாது; இல்லையென்றால் நாம் யுத்தத்தில் வெற்றிவாகை சூடினாலும் சமாதானத்துக்காக ஆக்கப்பணிகளுக்காக எதையும் செய்யாதவர்களாகவே ஆவோம்.

            நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று நாம் இரண்டு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்: (1) யுத்தம் முடிந்ததும் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் பயிற்சியாளர்களுக்கும், நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்தல், (2) யுத்தப் பிற்காலத் தொழில்துறைச் சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தை மறுசீரமைப்பு செய்தல். இவை இரண்டும் வெவ்வேறான பிரச்சினைகள்; இவற்றைத் தனித்தனியாகச் சமாளிக்க எண்ணியுள்ளோம். எனவேதான் இரண்டு கட்டங்களாக இப்பிரச்சினைகளை அணுகுவது உசிதமெனத் தீர்மானித்திருக்கிறோம். இரண்டாவது கட்டத்தைப் பொறுத்தவரையில் பின்வரும் கேள்வி எழுகிறது: சிவில் தொழில் துறையின் இன்றைய தேவைகளை முற்றிலுமாகவும் பூரணமாகவும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நமது தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? யுத்தப் பிற்காலத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி பெற்ற தொழில் நுட்ப ஊழியர்களை வழங்கும் நீண்டகாலக் கொள்கை சம்பந்தப்பட்டதாகும் இந்தப் பிரச்சினை.

தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல்

          மற்றொருபுறம் நாம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சினை முதல் கட்டம் சம்பந்தப்பட்டதாகும்; நமது பயிற்சிக் கேந்திரங்களில் பயிற்றுவிக்கப்பட்டு, தற்போது ராணுவத்தில் சேவை செய்து கொண்டிருக்கின்ற, போரின் முடிவில் வேலையிலிருந்து விலக்கப்படவிருக்கிற நமது ஆயிரக்கணக்கான தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிரச்சினையே இது. இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் தொழில்துறைக்கு சிரமம் ஏதும் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம்; அதிலும், யுத்தப் பிற்காலத்தில் சிவில் தொழில் துறை மேன்மேலும் விரிவடையும், இதனால் தொழில்நுட்பப் பயிற்சியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவர் என்று நம்புகிறோம்.

            எனினும் உடனடியாக ஒரு பிரச்சினை நம்மை எதிர்நோக்குகிறது. அது இதுதான்: நமது தொழில் நுட்பப் பயிற்சியாளர்களை அமைதிக்கால தொழில்துறைக் கட்டமைப்புக்கு எவ்வாறு தகுதியானவர்களாக ஆக்குவது? இது சம்பந்தப்பட்ட சிரமங்களைப் பரிசீலித்து, அவற்றைச் சமாளிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடுவதற்கு நாம் விரும்புகிறோம். இதில் வெற்றியடைய வேண்டுமானால், நமது தொழில் நுட்ப ஊழியர்களுக்கு மேற்கொண்டு எத்தகைய பயிற்சி அளிக்க வேண்டும். பாடத் திட்டங்களில் எவற்றை மாற்ற வேண்டும், எவற்றைச் சேர்க்க வேண்டும் அல்லது ஏதேனும் கூடுதல் பயிற்சி அளிப்பது அவசியமா என்பதை எல்லாம் நாம் ஆராய்வது முக்கியம்; அப்போதுதான் நமது பயிற்சியாளர்களை இன்றைய தொழில்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்க முடியும். இந்தக் கூட்டத்தில் நீங்கள் விவாதித்து மேற்கொள்ளும் முடிவுகள் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய முன்னேற்றத்தை எட்ட முடியும் என்பதைத் தீர்மானிக்கும். இவ்விரண்டு கட்டங்களும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை; இரண்டாவது கட்டம் முதல் கட்டத்தைவிட முக்கியத்துவத்தில் எவ்விதத்திலும் குறைந்ததல்ல.

            உங்களது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் ஏராளமான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதால், நீண்ட நேரம் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. எனினும் நமது நாட்டின் ஒளிமயமான எதிர் காலத்திற்குத் திட்டமிட வேண்டுமானால் தேர்ச்சி பெற்ற ஊழியர்களைப் போதிய எண்ணிக்கையில் தொழில்துறைக்கு வழங்குவது எவ்வளவு முக்கியமானது என்பதை என் உரையை முடிப்பதற்கு முன்னர் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசாங்கம், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பினரின் ஒத்துழைப்பு மூலமாகத் தான் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்துக்கு நம்மால் ஓர் உறுதியான, நிலையான அடித்தளத்தை வழங்க முடியும். தொழில் முனைவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விசேட வேண்டுகோள் விடுக்கிறேன். அரசாங்கம் வகுக்கும் எந்தத் தொழில் நுட்பப் பயிற்சித் திட்டத்தையும் பராமரித்துத் திறம்படச் செயல்படுத்துவதற்கு இத்துறையில் அவர்களுக்குள்ள தனித்துறை ஈடுபாடும் அனுபவமும் அரும்மதிப்பு வாய்ந்ததாகும்; அதே சமயம் இது விஷயத்தில் அவர்களது எதிர்கால ஒத்துழைப்பும் மிகுந்த மதிப்புடையதாகும்.

            மேலும் ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு எனது உரையை முடிக்கலாம் என்றிருக்கிறேன். ராணுவத்தில் சேவை செய்யச் சென்று, விரைவில் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பவிருக்கும் பயிற்சியாளர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம்தான் நாம் அளிக்கப்போகும் கதிப்போக்கா? தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அவர்களுக்கு இதுதான் நாம் வழங்கப்போகும் பரிசா? அவர்களை நாம் கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர்களை நாம் புறக்கணித்தோமானால், உதாசீனம் செய்தோமானால் அவர்கள் தொழில் துறையில் மிகுந்த அதிருப்தியைப் பரப்பும் ஒரு சக்திவாய்ந்த மையமாகி விடுவார்கள். இவ்வாறின்றி, போருக்குப் பிறகு சிவில் வாழ்க்கையில் அவர்களுக்கு உரிய இடத்தை, உகந்த இடத்தை அளித்தோமானால் தொழில் துறையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அவர்கள் உதவுவார்கள்; படைத்துறையில் தாங்கள் கற்றுக் கொண்ட கட்டுப்பாட்டு உணர்வை சிவில் தொழில் துறையில் ஊட்டி வளர்ப்பார்கள். சிவில் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு அவர்களைச் சீர்திருத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். இவ்விதம் நீங்கள் ஆலோசனை கூறி உதவினால் அதற்கு அரசாங்கம் உங்களுக்கு நன்றி கடமைப்பட்டிருப்பது மட்டுமன்றி, நீங்கள் தெரிவிக்கும் நியாயமான, நடைமுறை சாத்தியமான யோசனைகளைச் செயல்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்யும் என்றும் உறுதி கூறுகிறேன்.

குழுவின் விவாதங்கள்

            பின்னர் தொழில்நுட்பப் பயிற்சி சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து குழு விவாதித்தது; தொழில் நுட்பப் பயிற்சியாளர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை அது வலியுறுத்திற்று. தொழிலாளர் நலத்துறைக் கூட்டுச் செயலாளர் திரு.எஸ்.லால் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It