சூத்திரர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் அவர்கள் நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர்களாக மாறினர் என்றும் அந்த நிலைக்கு அவர்கள் தாழ்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் கூறுவது இப்பிரச்சினையை முழுமையாகத் தீர்த்து விடவில்லை. அது மற்றுமொறு பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது. இப்பிரச்சினை என்னவெனில் சூத்திரர்கள் ஏன் தாழ்த்தப்பட்டனர்?

ambedkar 297இது புதிய பிரச்சினையாகும். இதற்கு முன்னர் எழுப்பப்பட்டதில்லை. ஆகவே இந்த விஷயம் குறித்து நம் கைவசம் உள்ள ஆவணங்கள் இதற்கு விடையளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்பிரச்சினை முதல்முறையாக என்னால் எழுப்பப்படுகிறது. இது சூத்திரர்கள் குறித்த எனது ஆய்வு ஆதாரமாகக் கொண்டிருக்கக்கூடிய பிரச்சினை என்பதால் ஒரு திருப்திகரமான பதில் வழங்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.

இப்பிரச்சினைக்கு என்னால் ஒரு திருப்திகரமான பதில் வழங்க முடியும் என்று கருதுகிறேன். எனது பதில் என்னவெனில், சூத்திரர்கள் தாழ்த்தப்பட்டதானது சூத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் நேர்ந்த வன்மையான மோதலின் விளைவேயாகும். அதிருஷ்டவசமாக எனக்கு அதை நிரூபிக்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

I

சூத்திர இனத்தவனான மன்னன் சுதாசனுக்கும், பிராமண ரிஷியான வசிஷ்டருக்கும் இடையில் கடுமையான மோதல் நிகழ்ந்ததற்கு நேரடி அத்தாட்சி உள்ளது. இந்த மோதல் சம்பந்தமான உண்மைகள் மிகவும் குழப்பமான விதத்தில் கூறப்பட்டுள்ளன. பின்வரும் எனது கருத்துரையில் அவற்றை நான் தெளிவாகவும் வரிசைக்கிரமமாகவும் எடுத்துக்கூற முயற்சி செய்துள்ளேன்.

இந்த மோதலின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு முதலாவதாக வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையிலான உறவுகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் பரம வைரிகளாக இருந்தனர். அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக சம்பந்தப்படாத சம்பவங்களே இல்லை எனலாம். அவர்களுடைய பகைமைக்குச் சான்றாக நான் சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். முதலாவது சம்பவம் திரிசங்கு என அழைக்கப்படும் சத்தியவிரதன் சம்பந்தப்பட்டதாகும். இதுகுறித்து ஹரிவம்சத்தில் (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக். 377-378) சொல்லப்பட்டுள்ள கதை வருமாறு:

“சத்தியவிரதனின் தந்தையான மன்னருக்கும் தமக்கும் இடையில் சிஷ்யன் ஆன்மிக குரு என்ற முறையில் நிலவிய உறவின் அடிப்படையில் வசிஷ்டர் அயோத்தி நகரிலும் நாட்டிலும் மன்னரின் அரண்மனையின் உள்விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆனால் மடமையினாலோ அல்லது விதியின் வலிமையினாலோ தமது தந்தையின் ராஜாங்க அதிகாரத்திலிருந்து தாம் ஒதுக்கப்பட்டதை தடுக்க முயற்சி எடுக்காததை (நியாயமான காரணத்திற்காக) கருத்தில் கொண்டு அவருக்கு எதிராக சத்தியவிரதன் எப்போதும் சினங்கொண்டிருந்தான். ஏழாவது அடியெடுத்து வைத்தால் மட்டுமே திருமண சடங்குகள் கட்டுப்படுத்துவனவாகின்றன.

ஆயினும் நான் அப்பெண்ணைக் கரம் பிடித்தபோது இது செய்யப்படவில்லை; சட்ட விதிகளை நன்கு அறிந்திருந்த வசிஷ்டர் எனது உதவிக்கு வரவில்லை”, என்று சத்தியவிரதன் கூறினான். இவ்வாறு சத்தியவிரதனின் மனதில் வசிஷ்டருக்கு எதிராக ஆத்திரம் பொங்கிக் கொண்டிருந்த போதிலும், அவரோ அது சரி என்ற உணர்விலிருந்து செயல்பட்டு வந்தார். சத்தியவிரதனும் தனது தந்தையினால் தன்மீது திணிக்கப்பட்ட அந்த மொளனதவத்தின் சரியான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை….

இக்கடுமையான சடங்கை ஆதரித்த போது அவர் தமது குடும்ப கவுரவத்தை மீட்டுவிட்டதாகக் கருதினார். மதிப்பிற்குரிய முனிவரான வசிஷ்டரும் ஏற்கெனவே கூறியதுபோன்று சத்தியவிரதனை ஒதுக்குவதிலிருந்து அவனது தந்தையைத் தடுக்கவில்லை. மாறாக தனது மகனை மன்னனாக முடிசூட்ட உறுதிபூண்டார். சக்தி வாய்ந்த இளவரசனான சத்தியவிரதன் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து முடிந்த நிலையில் சாப்பிட இறைச்சியின்றி கேட்டதனைத்தையும் கொடுத்துவந்த வசிஷ்டரின் பசுவைக் கைப்பற்றி, கோபம், ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றின் உந்துதலாலும் பசியினால் ஆத்திரப்பட்டும், பத்துக் கடமைகளில் தவறியவனாக அப்பசுவைக் கொன்று அதன் இறைச்சியை எடுத்துக் கொண்டதுடன் அதை உண்பதற்காக விசுவாமித்திரரின் புதல்வர்களுக்கும் கொடுத்தான்.

இதைக் கேள்வியுற்ற வசிஷ்டர் அவன்மீது அளவில்லாக் கோபமடைந்து அவன் மூன்று பாவங்களை செய்ததால் அவன் மீது திரிசங்கு என்ற பெயரைத் திணித்தார். வீடு திரும்பிய விசுவாமித்திரர் தமது மனைவி தந்த ஆதரவினால் களிப்படைந்தவராக (ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருப்தாவது: புரியப்பட்ட கொடுமையின் விளைவாக 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருக்க இந்திரன் சாபமிட்டான். அச்சமயத்தில் விசுவாமித்திரர் தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு கடற்கரையில் தவம்புரியச் சென்றுவிட்டார். அவரது மனைவி ஏழ்மையின் விளிம்புக்கே சென்று, தனது இதரக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தனது இரண்டாவது மகனை நூறு பசுக்களுக்கு விற்றுவிடும் அளவுக்கு சென்றுவிட்டாள்; ஆனால் சத்தியவிரதனின் தலையீட்டினால் இந்த ஏற்பாடு தடுக்கப்பட்டது, அவளது மகனும் விடுவிக்கப்பட்டான். அவர்களுக்கு வனவிலங்குகளின் இறைச்சியைக் கொடுத்து சத்தியவிரதன் காப்பாற்றி வந்தான். தனது தந்தையின் கட்டளையை ஏற்று 12 ஆண்டுக்காலம் மௌன தவம் புரிந்தான். ஹரிவம்சத்தின் மற்றொரு இடத்தில் கூறப்பட்டிருப்பது போல, காமவெறி கொண்டு ஒரு பிரஜையின் மனைவியை அபகரித்துச் சென்றதற்காக தனது தந்தையினால் திரிசங்கு வீட்டைவிட்டு விரட்டப்பட்டான், அவன் விரட்டப்பட்டதைத் தடுப்பதற்கு வசிஷ்டர் தலையிடவில்லை. )

திரிசங்குவிற்கு ஒரு வரமளித்தார். இந்த வரத்தைப் பெற்ற திரிசங்கு தனது ஊனுடலுடன் சொர்க்கத்துக்கு செல்வதைத் தேர்வு செய்தான். பன்னிரண்டு ஆண்டு காலப் பஞ்சம் முடிவுக்கு வரும் வேளையில் விசுவாமித்திர முனிவர் திரிசங்குவை அவனது தந்தையின் ராஜ்ஜியத்திற்கு மன்னராக்கினார். அவனது சார்பாக வேள்வி நடத்தினார். சக்திமிக்க கவுசிகர் அப்போது தேவர்களின், வசிஷ்டரின் எதிர்ப்பையும் மீறி அந்த உன்னத மன்னனை உயிருடன் சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார்.”

அவர்கள் எதிரும் புதிருமாக இருந்த மற்றொரு சம்பவம் திரிசங்குவின் மகனான ஹரிசந்திரன் சம்பந்தப்பட்டதாகும். இக்கதை விஷ்ணு புராணத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் வருகிறது. அக்கதை கூறுவதாவது:

“ஒரு சமயம் மன்னர் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் அழுகுரலை செவிமடுத்தார். அக்குரல் முற்றும் துறந்த முனிவரான விஸ்வாமித்திரரால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானங்களிடமிருந்து வந்ததுபோல் தோன்றியது. இதற்கு முன்னர் வேறு எவரும் செய்திராத மிகக்கடுமையான தவத்தில் விசுவாமித்திரர் ஈடுபட்டிருப்பதை அவை கண்டன; அவருடைய மேதாவிலாசத்தைக் கண்டு அஞ்சி அவை கூக்குரல் எழுப்பின. ஒரு சத்திரியன் என்ற முறையில் நலிந்தவர்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காகவும் தன்னுள் நிரம்பியிருந்த கடவுள் கணேசரது ஆவியால் உத்வேகமூட்டப்பட்டும் ஹரிசந்திரன் கூறினான்: ‘உக்கிரமான சக்தியையும் வீரியத்தையும் கொண்டிருக்கும் அவனுடைய எஜமானனாகிய நான் இருக்கும்போது தனது ஆடையின் விளிம்பில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் இவன் எத்தகைய பாபத்தைச் செய்தவன்? எனது வில்லிலிருந்து ஏவப்பட்ட அம்புகள் அவனுடைய கால்களையும் கைகளையும் துளைக்க அவன் இன்றைக்கு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிடுவான், வான்வெளியின் எல்லாப் பகுதிகளையும் அவை பிரகாசமடையச் செய்யும்’. இந்த உரையைக் கேட்டு விசுவாமித்திரர் ஆத்திரமடைந்தார். அவருடைய கோபாவேசத்தின் காரணமாக விஞ்ஞானங்கள் உடனடியாக மடிந்தன. அஸ்வத மரத்தின் இலையைப் போல நடுங்கிக் கொண்டிருந்த ஹரிச்சந்திரன் மிகவும் பணிந்து ஒரு மன்னன் என்ற முறையில் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாகக் கூறினான்.

தலைசிறந்த பிராமணர்களுக்கு வெகுமதிகள் வழங்கியும் துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவியும் அப்பாவிகளைப் பாதுகாத்தும் எதிரிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தும் வந்தது தனது கடமைகளில் அடங்கும் என்றும் கூறினான். அதைக்கேட்ட விசுவாமித்திரர் பிராமணர்களுக்கு அளிக்கப்படுவது போன்ற ஒரு வெகுமதியைக் கேட்கிறார், அதைப் பெறுவதில் உறுதியாகவும் இருக்கிறார். அந்த முனிவர் கேட்பதை எல்லாம் பொன், அவனுடைய சொந்த மகன், மனைவி, உடல், உயிர், ராஜ்யம், செல்வங்கள் அனைத்தையும் வழங்க மன்னன் தயாராக இருக்கிறான். ராஜசூய யாகத்திற்காக அந்த முனிவர் முதலில் வெகுமதிகளைக் கேட்கிறார். அதை வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டவுடன், இன்னும் சில வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. ஹரிச்சந்திரன், அவனது மனைவி, மகன், அவர் தேடி வைத்த புண்ணியம் ஆகியவற்றைத் தவிர சாம்ராஜ்யம் உள்ளிட்ட அனைத்தையும் முனிவர் கேட்கிறார்.

ஹரிச்சந்திரன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான். அவன் அணிந்திருந்த ஆடை அணிகலன்களை எல்லாம் விசுவாமித்திரர் வேண்டுமென்கிறார். மரவுரி தரித்து மனைவி சந்திரமதியுடனும் மகனுடனும் ராஜ்யத்தை விட்டே வெளியேறுமாறு கோருகிறார். அவன் புறப்பட்டுச் செல்கையில் முனிவர் அவரைத் தடுத்து நிறுத்தி இன்னமும் தனக்குக் கொடுக்கப்படாத யாகத்திற்கான கட்டணத்தை செலுத்துமாறு கோருகிறார். தன்னிடம் தன்னுடைய உடலும் மனைவி, மகன் ஆகியோரது உடல்களும் மட்டுமே எஞ்சியிருப்பதாக அவன் பதிலளிக்கிறான். எது எப்படியானாலும் அவர் தனக்குத் தரவேண்டிய கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென்றும் பிராமணர்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதியளித்து விட்டு வெகுமதி தரப்படவில்லை எனில் அது அழிவையே கொணரும் என்றும் விசுவாமித்திரர் கூறுகிறார்.

சாபமிடப்படும் என்று அச்சுறுத்தப்பட்ட அந்த துரதிருஷ்டம் நிறைந்த மன்னன் ஒரு மாதத்தில் அக்கட்டணத்தைச் செலுத்திவிடுவதாக உறுதியளிக்கிறான்: தனது பிரஜைகளின் அழுகுரல்களுக்கிடையே, துன்பம் என்பது அறியாத மனைவியுடன் தனது பயணத்தைத் தொடங்குகிறான். தனது ராஜ்யத்தைத் துறந்து செல்வதற்கு எதிரான அன்பான தடுப்புரைகளைக் கேட்டுக்கொண்டே அவன் சோகத்துடன் நடந்து சென்றபோது, விசுவாமித்திரர் வருகிறார். தாமதத்தினால் கோபமுற்றும் மன்னரின் தயக்கத்தைக் கண்டும் ராணியைத் தமது கமண்டலத்தினால் அடித்தார். மன்னன் அதைப் பொருட்படுத்தாமல் ராணியை இழுத்துக் கொண்டு சென்றான். பின்னர் ஹரிச்சந்திரன் தமது மனைவியுடனும் மகனுடனும் காசியை நோக்கிச் சென்றான். சிவனின் சிறப்பு ஆஸ்தியான புனிதநகரமாம் காசியில் எந்தவொரு மனிதனின் சாபமும் செல்லுபடியாகாது என்று அவன் நம்பினான்.

ஆனால் அங்கும் விசுவாமித்திரர் அவனுக்காகக் காத்திருந்தார். காலகெடு முடிவடைவதற்கு முன்னரே தமது யாகசாலைக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்திக் கோருவதற்குத் தயாராக இருந்தார். இந்த நிலைமையில் ராணி சந்திரமதி அழுதுகொண்டே தன்னை விற்றுவிடுமாறு தனது கணவனுக்கு யோசனை கூறினாள். இந்த யோசனையைக் கேட்டு ஹரிச்சந்திரன் மூர்ச்சையடைந்தான். பின்னர் நினைவு வரப்பெற்றவனாக மீண்டும் அழுது திரும்பவும் மயக்கமடைந்தான். அவனது துர்பாக்கிய நிலையைக் கண்டு சோகமுற்ற அவனது மனைவியும் மயக்கமடைந்தாள். அவர்கள் மூர்ச்சையடைந்து மயங்கிக் கிடக்கும் வேளையில் பசியால்வாடும் அவர்களது குழந்தை துடித்துக் கதறி, ஓ தந்தையே எனக்கு உணவு தாருங்கள், ஓ தாயே எனக்கு உணவு தாருங்கள்.

பசியால் என் நாக்கு வறண்டுவிட்டது’ என்று ஓலமிட்டான். அந்த நேரத்தில் விசுவாமித்திரர் திரும்பிவந்து, ஹரிச்சந்திரன் முகத்தில் நீர்தெளித்து நினைவு திரும்பச் செய்தார். திரும்பவும் தனது வெகுமதியை தருமாறு கோரினார். அந்த மன்னன் திரும்பவும் மூர்ச்சையடைந்தான். மீண்டும் அவனுக்கு நினைவு திரும்பச் செய்யப்பட்டது. சூரியன் மறைவதற்குள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடில் அவனுக்கு சாபமிடப்போவதாக அந்த முனிவர் அச்சுறுத்துகிறார். இப்போது தனது மனைவியின் வற்புறுத்தலின்பேரில் அவளை விற்றுவிட அந்த மன்னன் ஒப்புக்கொள்கிறான். ‘எனது குரல் அத்தகைய மோசமான சொல்லை உச்சரிக்குமானால், மனிதாபிமானமற்ற கயவர்கள் கூடச் செய்யத் துணியாததை நான் செய்வேன்’.

பின்னர் அவன் நகருக்குள் சென்று தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொள்ளும் சொல்வழக்கில் தனது ராணியை அடிமையாக விற்கமுனைகிறான். செல்வந்தனான முதிய பிராமணன் ஒருவன் தனது வீட்டு வேலைகளை செய்வதற்காக அந்த ராணியின் மதிப்புக்கு உகந்த ஒரு விலை கொடுத்து வாங்க முன்வருகிறான். தனது தாய் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட அந்தக் குழந்தை கண்ணில் வடியும் கண்ணீர் பார்வையை மங்கச் செய்ய அவளுக்குப் பின்னால், ‘அம்மா’ என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்.

அக்குழந்தை அருகில் வரவும் அவளை விலைக்கு வாங்கிய பிராமணன் அதைக் காலால் உதைக்கிறான்; ஆனாலும் அக்குழந்தை தன் தாயை விடவில்லை, ‘அம்மா, அம்மா’ என்று கூக்குரலிட்டு அழுகிறான். அந்த பிராமணனை நோக்கி ராணி சொல்லுகிறாள்: “எனது எஜமானரே, அருள்கூர்ந்து இக்குழந்தையையும் விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள், இவனின்றி நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கியது உபயோகமற்றதாகிவிடும். எனது இந்த நிலையில் என் மீது இரக்கம் காட்டுங்கள், பசுவுடன் கன்றையும் இணைப்பதுபோல் என்னுடன் எனது மகனையும் ஒன்று சேருங்கள்.”

அந்த பிராமணன் அதற்கு ஒப்புக்கொள்கிறான்: ‘இப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தப் பையனை என்னிடம் ஒப்படை.’ தான் வாங்கிய பொருள்களுடன் அந்த பிராமணன் சென்றுவிட்டபொழுது, விசுவாமித்திரர் மீண்டும் தனது கோரிக்கைகளை புதுப்பித்தார். தனது மகனையும் மனைவியையும் விற்றுக் கிடைத்த சிறிய தொகையை துன்பத்தில் உழலும் ஹரிச்சந்திரன் முனிவருக்கு வழங்கியபோது, முனிவர் கோபத்துடன் பதிலளித்தார்: ‘ஏய் இழிவான சத்திரியனே, எனது தவ வலிமையின் சக்தியையும் எனது புண்ணிய வேள்வியின் பயனையும் நீ விரைவிலேயே உணருவாய்,’ என்று கூறினார். ஹரிச்சந்திரன் கூடுதல் வெகுமதிகளைத் தருவதாக உறுதியளிக்கிறான். அந்த உறுதிமொழியை நிறைவேற்ற மேலும் மீதமுள்ள கால் நாள் அவகாசம் தருகிறார்.

தன்னைத்தானே விற்பதற்கு மனமுவந்த அந்த அஞ்சி நடுங்கிய, துன்பசாகரத்தில் மூழ்கிய மன்னன் இக்கொடுமையான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது தர்மதேவன் (நேர்மையின் சின்னம்) ஒரு சண்டாளன் வடிவில் அவன் முன் தோன்றுகிறான். விலை எவ்வளவாக இருந்தாலும் அவனை விலைக்கு வாங்க முன்வருகிறான். இத்தகையதொரு இழிநிலையை ஹரிச்சந்திரன் நிராகரிக்கிறான். இத்தகையதொரு இழிநிலைக்கு உடன்படுவதைவிடத் தன்னைத் துன்புறுத்துபவரின் சாபம் என்ற தீயில் கருகிச்சாவதே மேல் என்று பிரகடனம் செய்கிறான். மீண்டும் விசுவாமித்திரர் அங்கு தோன்றுகிறார். சண்டாளன் கொடுக்க முன்வரும் பெருந்தொகையை ஏன் அவன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்று கேட்கிறார்.

தான் சூரியவம்சத்தை சேர்ந்தவன் என்று மன்றாடியபோது, தனது கடனை அடைக்கும் அந்த வழிவகையை ஏற்றுக்கொள்ளாவிடில் அவனுக்கெதிராகச் சாபமிடப் போவதாக அச்சுறுத்துகிறார். தன்னை இந்த இழிநிலையிலிருந்து விடுவிக்கும்படி ஹரிச்சந்திரன் மன்றாடுகிறான். தான் செலுத்த வேண்டிய மீதித்தொகைக்காக விசுவாமித்திரரின் அடிமையாக இருக்க முன்வருகிறான். அதைச் செவிமடுத்த அந்த முனிவர் கூறுகிறார்: ‘நீ எனக்கு அடிமையாக இருப்பாயானால், உன்னை இந்த நிலையிலேயே பத்துக்கோடிப் பணத்துக்கு சண்டாளனிடம் விற்றுவிடுகிறேன்.’ இதைக் கேட்டு அகமகிழ்ந்த சண்டாளன் ஹரிச்சந்திரனின் கைகால்களைக் கட்டி, அடித்துத் துன்புறுத்தி அவனைத் தன் இருப்பிடத்திற்குத் தூக்கிச் செல்கிறான். அச்சண்டாளன் ஹரிச்சந்திரனைக் கல்லறையில், புதைகுழியில் பிணங்களின் மீதுள்ள துணிகளைத் திருடி வருமாறு கூறுகிறான்.

அதற்குப் பகரமாக அத்துணிகளின் மதிப்பில் ஆறில் இருபங்கை அவனுக்குத் தருவதாகவும் மீதமுள்ள ஆறில் ஒரு பங்கு அரசனுக்குப்போகும் என்றும் அவனிடம் கூறப்படுகிறது. இந்த பயங்கரமான இடத்தில் தனது இழிவான தொழிலில் பெரும் துன்பத்திற்கிடையில் 12 மாதங்களைக் கழித்தான். அது அவனுக்கு நூறு ஆண்டுகளைப்போல் இருந்தது. பின்னர் அவன் நித்திரையில் ஆழ்ந்துவிடுகிறான். தன்னுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி கொடுங்கனாக்கள் காண்கிறான். அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது அவனுடைய மனைவி அவர்களது மகனின் இறுதி சடங்குகளை நடத்துவதற்காக கல்லறைக்கு வந்தாள். சர்ப்பம் தீண்டியதால் அப்பாலகன் இறந்து போயிருந்தான்.

முதலில் கணவனும் மனைவியும் அடையாளம் தெரிந்துக்கொள்ளவில்லை. அவர்களது துன்பங்கள் அவர்கள் தோற்றத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களே அதற்குக் காரணம். அவளது அழுகுரலின் தொனியிலிருந்து அவளே தனது மனைவி என்று விரைவிலேயே கண்டுகொண்டான். பின்னர் மூர்ச்சையாகி வீழ்ந்தான். அதேபோன்று அந்த ராணியும் தனது கணவனை அடையாளம் கண்டுகொண்டபோது மூச்சையடைந்தாள். நினைவு திரும்பியபொழுது இருவரும் பெருங்குரலில் அழத் தொடங்கிவிட்டனர். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை அழ, மன்னனின் இழிநிலையைக் கண்டு ராணி அழுது புலம்பினாள். பின்னர் அவள் அவனது கழுத்தின் மீது விழுந்து அவனைக் கட்டியனைத்து “இவையனைத்தும் ஒரு கனவுதானா அல்லது நிஜமா?” என்று முற்றிலும் குழப்பமடைந்தவளாக கேட்கிறாள்; பின்னர் தொடர்ந்து, “இது நிஜமாக இருக்குமானால் நேர்மையானவர்களுக்குப் புண்ணியம் கிட்டாது போகிறதே” என்று புலம்பினாள்.

தனது எஜமானனின் அனுமதியின்றி மகனின் சிதையில் தன்னையும் மாய்த்துக் கொள்வதற்குத் தயங்கிய பின்னர், எந்த விளைவுகள் வந்தாலும் அவற்றை மீறி சிதையில் உயிரை மாய்த்துக் கொள்ள ஹரிச்சந்திரன் தீர்மானம் செய்கிறான். எல்லாமே நலமாக முடியும் என்ற நம்பிக்கையில் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறான். ‘நான் வெகுமதிகளை வழங்கியதும், யாகங்கள் நடத்தியதும், எனது மதாசிரியர்களுக்கு திருப்தியடையும் விதத்தில் நன்றி செலுத்தியதும் உண்மையானால் அடுத்த பிறவியில் நானும் எனது மகனும் மனைவியும் ஒன்றாக வேண்டும்’ என்று பிராத்திக்கிறான். தனது கணவனைப் போலவே ராணியும் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானிக்கிறாள். தனது மகனை சிதையில் கிடத்திய பின்னர் ஹரிச்சந்திரன் தலைமைக் கடவுளான ஹரிநாராயண கிருஷ்ணனை மனத்தில் நினைத்துத் தியானம் செய்கிறான். தர்மதேவனின் தலைமையில் எல்லாக் கடவுளர்களும் வருகின்றனர்.

விசுவாமித்திரரும் உடன் வருகிறார். தமது எண்ணாது துணிந்துள்ள செயலைக் கைவிடுமாறு தர்மதேவன் வேண்டுகிறார்; தங்களது நற்செயல்களால் அவனும் மனைவியும் மகனும் வானுலகையே வெற்றிக்கொண்டு விட்டதாக இந்திரன் அறிவித்தான். வானிலிருந்து கடவுளர்கள் சாகா மருந்தான அமிழ்தத்தையும் பூக்களையும் சொரிந்தனர்; அந்த மன்னனது மகனின் போன உயிர் திரும்பி வந்தது. அவன் இளமைப் பொலிவுடன் தோன்றினான். தேவலோக ஆடைகளையும் மாலைகளையும் அணிந்த நிலையில் அந்த மன்னனும் ராணியும் தங்களது மகனை ஆரத்தழுவிக் கொள்கின்றனர். தனது எஜமானனான சண்டாளனின் அனுமதியைப் பெறாதவரை, அவனுக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் திருப்பித் தராதவரை தன்னால் விண்ணுலகிற்குச் செல்லமுடியாது என்று கூறுகிறான். அப்போது தர்மதேவன் தானே சண்டாளன் வடிவில் வந்ததாக மன்னனிடம் கூறுகிறான். தன்னுடைய இன்பதுன்பங்களிலெல்லாம் பங்கு கொண்ட தனது விசுவாசமான பிரஜைகள் ஒருநாளைக்கேனும் தன்னுடன் விண்ணுலகிற்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென்று அந்த மன்னன் நிபந்தனை விதிக்கிறான். அந்த வேண்டுகோள் இந்திரனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பின்னர் அம்மன்னனின் மகனான லோகிதாசியனுக்கு விசுவாமித்திரர் முடி சூட்டுவிழா நடத்திவைத்தார். ஹரிச்சந்திரன், அவனது நண்பர்களும் பிரஜைகளும் ஒருசேர விண்ணுலகை நோக்கிச் சென்றனர். இந்த மகத்தான சம்பவம் முடிந்த பின்னரும் கூட ஹரிச்சந்திரனின் குலகுருவான வசிஷ்டர் கங்கை நதி நீரில் 12 ஆண்டுகள் கடுந்தவம் இருந்தபோது நடந்து முடிந்தவற்றை எல்லாம் கேள்வியுற்று, அந்த அற்புதமான மன்னனுக்கு ஏற்பட்ட அவமானங்களைக் கண்டு கடும் ஆத்திரம் கொண்டார். ஹரிச்சந்திரனுடைய நற்பண்புகளும், கடவுள்பால் கொண்டிருந்த பக்தியும் பிராமணர்பால் கொண்டிருந்த மரியாதையும் போற்றற்குரியதாகும். விசுவாமித்திரனால் தமது 100 புதல்வர்கள் கொல்லப்பட்டபோது கூட அவர்மீது தமக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்படவில்லை என்று பிரகடனம் செய்கிறார். பின்னர் பின்வரும் சொற்களால் விசுவாமித்திரர் ஒரு நாரையாக மாற சாபமிடுகிறார்: “ஆகவே பழி பாவத்திற்கு அஞ்சாத அந்த மனிதன், பிராமணர்களின் பகைவன், எனது சாபத்திற்குக் கட்டுண்டு அறிவாளிகள் வாழும் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுவானாக, தனது புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து ஒரு பகாவாக மாறக்கடவதாக.’

விசுவாமித்திரர் பதிலுக்குச் சாபமிடுகிறார். வசிஷ்டரை ஆரி என்னும் இனத்தைச் சேர்ந்த பறவையாக மாற்றுகிறார். தங்களுடைய புதிய உருவங்களில் இருவரும் கடும் சமர்புரிகின்றனர். ஆரி வியத்தகு விதத்தில் 3000 யோஜனைகள் உயரம் இருந்தது; பகா 3090 யோஜனை உயரம் இருந்தது. முதலில் அவை தங்களுடைய இறக்கைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டன. பின்னர் பகா தனது கூர்நகத்தால் எதிரியைத் தாக்கியது, பதிலுக்கு ஆரியும் தனது கூரிய நகங்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தது. அவற்றின் இறக்கைகள் சிறகடிப்பதனால் ஏற்பட்ட காற்றின் வேகத்தில் மலைகள் நொறுங்கி உருண்டன, உலகமே அதிர்ந்தது. கடல் கொந்தளித்தது.

இந்த பூமியே கூட செங்குத்தான மலைகளிலிருந்து பாதாளம் எனப்படும் தாழ்வான பகுதிகளை நோக்கி வீசப்பட்டது. இப்பல்வேறு வகையான நடுக்கங்களினால் பல உயிரினங்கள் வீழ்ந்துப்பட்டன. இந்த மோசமான ஒழுங்கீனத்தால் வெகுண்ட பிரம்மா அனைத்துக் கடவுளர்களும் புடைசூழ அந்த இடத்தை வந்தடைந்தார். இருவரையும் சண்டையை நிறுத்த கட்டளையிட்டார். அந்த இருவரும் இந்த தடையுத்தரவினால் கடும் ஆத்திரமடைந்தனர்; ஆனால் பிரம்மாவே அவர்களை நிஜவடிவத்துக்கு மாற்றியதுடன் அவர்களை சமாதானப்படுத்தி மோதலுக்கு முடிவு கட்டினர்.”

அவர்கள் எதிரிகளாக வந்த அடுத்த சம்பவம் அயோத்தியின் மன்னனான அம்பரீஷனுடன் சம்பந்தப்பட்டதாகும். அது வருமாறு:

“இக்கதை (முய்ரினால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக். 405-407) அம்பரீஷன் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தபோது இந்திரன் அந்த யாகப் பலியை எடுத்துச் சென்று விட்டான் என்பது சம்பந்தமானது. மன்னனின் மோசமான ராஜ்யபரிபாலனத்தின் காரணமாகத்தான் இந்த மோசமான சகுனத்தைக் குறிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று புரோகிதன் கூறினான். இதற்கு இன்னும் பெரிய பரிகாரமாக ஒரு மானுடனைப் பலியிட வேண்டும் என்றும் கூறினான். வெகுகாலம் தேடியபின்னர் ராஜரிஷியான அம்பரீஷன், பிராமண ரிஷியான ரிச்சிகனிடம் வந்தடைந்தான். ரிச்சிகன் பிருகுவின் வழித்தோன்றலாவான். பலியிடுவதற்காக அவனுடைய புதல்வர்களில் ஒருவனைத் தனக்கு விற்றுவிடுமாறு கோரினான். அதற்கு விலையாக நூறாயிரம் பசுக்களைத் தருவதாக ஒப்புக்கொண்டான். தனது மூத்தமகனைத் தன்னால் விற்கமுடியாது என்று ரிச்சிகன் பதிலளித்தான். அவனுடைய மனைவியோ தன் இளைய மகனை விற்கமுடியாது என்று கூறினாள்; “பொதுவாக தங்களது இளைய மகன்களின் மீது அன்னையர்கள் மிகவும் பாசமாக இருப்பர்” என்றும் கூறினாள்.

அவ்வாறெனின் விற்பனைக்குத் தானே முன்வருவதாக இரண்டாவது மகன் ஷுனஷெப்பா கூறினான். தன்னை அரசன் இட்டுச் செல்லலாம் என்றும் கூறினான். புஷ்கரத்தை அவர்கள் கடந்துசென்று கொண்டிருந்தபோது ஷுனஷெப்பா, தனது தாய்மாமன் விசுவாமித்திரர் இதர ரிஷிகள் புடைசூழ யாகவேள்வியில் ஈடுபட்டிருந்தபோது அவரிடம் தஞ்சமடைந்து தன்னுடைய அனாதையான, நட்பற்ற, உதவியற்ற நிலைமையைக் கூறி தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான். விசுவாமித்திரர் அவனை சமாதானப்படுத்தினார்; ஷுனஷெப்பாவுக்குப் பதிலாக தனது மகன்களை பலியாக முன்வருமாறு வற்புறுத்தினார். இந்த யோசனைக்கு மனுசியந்தனிடமிருந்தும் இதர புதல்வர்களிடமிருந்தும் சாதகமான பதில் வரவில்லை, அவர்கள் இகழ்ச்சியுடனும் ஆணவத்துடனும் பதிலளித்தனர்: “உங்களுடைய சொந்த மகன்களைப் பலிகொடுத்து மற்றவர்களை மீட்க நீங்கள் துணிந்தது எங்ஙனம்? இதை நாங்கள் தவறானது என்றும் ஒருவன் தனது சொந்த சதையை உண்பது போன்றது என்றும் கருதுகிறோம்.”

தமது உத்தரவை இவ்வாறு அவமதித்ததைக் கண்டு கோபமடைந்த அந்தமுனிவர் வசிஷ்டரின் புதல்வர்களைப்போல மிகவும் இழிவான குலங்களில் பிறக்கவும் ஓராயிரம் ஆண்டுக்காலம் நாயின் இறைச்சியை உண்ணவும் சாபமிட்டார். பின்னர் அவர் ஷுனஷெப்பாவிடம் கூறயதாவது: ‘நீ கயிறுகளால் கட்டப்பட்டு, சிவப்பு மாலையணிவிக்கப்பட்டு, தைலங்கள் தடவப்பட்டு, விஷ்ணுவின் பரிபீடத்தில் பிணைக்கப்படும்போது அக்னியை வழிபடுவாயாக, அம்பரீஷனின் பலியாகத்தின்போது இந்த இரு சுலோகங்களைக் கூறுவாயாக (கதாக்கள்).

அப்போது நீ எண்ணியது நிறைவேறும்.’ அந்த இரு சுலோகங்களையும் மனதில் இருத்திக் கொண்ட ஷுனஷெப்பா உடனே மன்னரான அம்பரீஷனிடம் தங்களது இலக்கிற்குச் செல்லலாம் என்று கூறினான். சிவப்பு ஆடை உடுத்தி தீக்கிரையாக்கப்படுவதற்காகக் கழுமரத்தில் பிணைக்கப்பட்டபோது அவன் இந்திரனையும் அவனது இளவலான விஷ்னுவையும் எண்ணி அந்த இரு சுலோகங்களையும் உச்சரித்துத் தொழுதான். அந்த ரகசிய சுலோகங்களைச் செவிமடுத்த ஆயிரம் கண்கொண்ட இந்திரன் மனமிரங்கி ஷுனஷெப்பாவுக்கு நீண்ட ஆயுள் அளித்தான்.”

இந்த இரு முனிவர்களும் எதிரிகளாக இருந்ததாகக் கூறும் இறுதிச் சம்பவம் மன்னன் கல்மாஷபாதனுடன் சம்பந்தப்பட்டதாகும். இச்சம்பவம் மகாபாரதத்தின் (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது. தொகுதி I, பக். 415-417) ஆதிபருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

“கல்மாஷபாதன், இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசனாக இருந்தான். அவனுடைய ஆஸ்தான குருவாகத் தம்மை அவன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விசுவாமித்திரர் விரும்பினார். ஆனால் அந்த மன்னனோ வசிஷ்டரை குருவாகக் கொள்ள விரும்பினான். ஒருமுறை மன்னன் வேட்டைக்குச் செல்லநேர்ந்தது. ஏராளமான வனவிலங்குகளைக் கொன்ற பின்னர் அம்மன்னன் மிகவும் சோர்வடைந்தான். பசியாலும் தாகத்தாலும் வாடினான். பாதையில் வசிஷ்டரின் நூறு புதல்வர்களில் மூத்தவனான சக்தியைச் சந்தித்த அவன் தனது பாதையில் குறுக்கிடாதவாறு செல்லுமாறு உத்தரவிட்டான். அந்த ரிஷிபுதல்வன் மிகவும் அசட்டையாகக் கூறினான்: ‘இந்தப் பாதை என்னுடையது, ஓ, மன்னனே, இதுவே நினைவுக் கெட்டாத காலந்தொட்டு சட்டமாக இருக்கிறது; பார்த்தாலும் மன்னன்தான் ஒரு பிராமணனுக்கு வழிவிட வேண்டும்.

‘இரு தரப்புமே விட்டுக்கொடுப்பதாக இல்லை. பிரச்சினை முற்றியபோது அந்த மன்னன் முனிவரைத் தன் சாட்டையால் அடித்தான். பாதிக்கப்பட்ட ரிஷிகள் வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய விதத்தில் அந்த முனிவரும் கடுவாயாக மாறுமாறு சபித்தார். அச்சமயத்தில் கல்மாஷபாதனின் குருவாக நியமிக்கப்படுவதில் விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் இடையே பகைமை நிலவியது. விசுவாமித்திரர் அந்த மன்னனைப் பின்தொடர்ந்துவந்தார். அந்த மன்னர் சக்தியுடன் வாதிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களை விசுவாமித்திரர் நெருங்கினார். தமது எதிரியான வசிஷ்டரின் மகனே அவன் என்பதை அறிந்துகொண்ட அவர், யாருடைய கண்ணுக்கும் புலப்படாதபடி மறைந்துகொண்டு, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கடந்துசென்றனர். அம்மன்னன் சக்தியிடம் மன்னித்தருளுமாறு கெஞ்சினான்; அவர்கள் சமாதானமாவதைத் தடுக்கவிரும்பிய விசுவாமித்திரர் ஒரு ராட்சசனை அந்த மன்னனின் உடலுக்குள் புகுந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்.

பிராமண ரிஷியின் சாபமும் விசுவாமித்திரரின் கட்டளையும் இணைந்த காரணத்தினால் அந்த உத்தரவுக்கு ராட்சசன் கீழ்ப்படிந்தான். தனது நோக்கம் நிறைவேறியதை உணர்ந்துகொண்ட விசுவாமித்திரர் சம்பவங்களை அதன் போக்கிற்கே விட்டுவிட்டு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். பசியுடன் இருந்த ஒரு பிராமணனைச் சந்திக்க நேர்ந்த அம்மன்னன், அவனை உண்பதற்கு நரமாமிசம் வேண்டித் தனது சமையல்காரனுடன் அனுப்பி வைத்தான் (அவனுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை). அம்மன்னனே கூட சக்தியின் சாபத்தினால் நரமாமிசம் உண்ணவேண்டியதாயிற்று. அந்த சாபத்தின் வலிமை அதிகரித்து செயல்படுத்தப்பட்டபோது அந்த சக்தியே அதற்கு முதல் பலியாகி மன்னனால் கபளீகரம் செய்யப்பட்டான். விசுவாமித்திரரின் தூண்டுதலின் பேரில் வசிஷ்டரின் இதர அனைத்துப் புதல்வர்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டது. சக்தி இறந்துவிட்டடான் என்பதை உணர்ந்த விசுவாமித்திரர் திரும்பத்திரும்ப வசிஷ்டரின் மகன்களுக்கு எதிராக ராட்சசனைத் தூண்டிவிட்டார்.

அதற்கேற்ப அக்கொடூரமான அரக்கனும் சக்திக்கு இளையவர்களான வசிஷ்டரின் மகன்களை வனத்தில் சிறிய விலங்குகளை ஒரு சிங்கம் விழுங்குவது போன்று கபளீகரம் செய்தான். விசுவாமித்திரனால் தனது புதல்வர்கள் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற வசிஷ்டர் தனது துன்பத்தை, பெரியமலைகளையும் இந்த பூமி தாங்கிக் கொள்வது போன்று தாங்கிக் கொண்டார். தனது சொந்த அழிவை வேண்டி அவர் தியானம் செய்தார். ஆனால் கவுஷிகர்களை ஒழித்துக்கட்ட அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அப்புனித முனிவர் மேருமலையின் உச்சியிலிருந்து குதித்தார்.

ஆனால் அவர் பாறைகளில் விழுந்தபோது அவரது உடல் பஞ்சு மெத்தையில் விழுந்ததைப் போல் இருந்தது. மலையிலிருந்து விழுந்தும் உயிருடன் தப்பித்த அவர் வனத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நுழைந்தார். ஆனால் அந்த நெருப்பு அவரை எரித்துவிட தவறியது மட்டுமின்றி, அவருக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் தண்மையுடன் இருந்தது. அடுத்தபடியாக அவர் ஒரு பெரிய கல்லைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

ஆனால் அலைகள் அவரை கரையில் கொண்டு தள்ளின. பின்னர் அவர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அது ஆளவரமின்றியும் வெறிச்சோடியும் இருந்ததைக் கண்டு அவரைத் துயரம் ஆட்கொண்டது. திரும்பவும் வெளியே சென்றார். அண்மையில் பெய்த மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தோடிய விபாசா நதியையும், கரையிலிருந்து மரங்கள் வேறுடன் சாய்ந்து அடித்துச் செல்லப்படுவதையும் கண்ட அவர் நதி நீரில் மூழ்கிவிடவேண்டுமென்று திட்டமிட்டார். கயிறுகளால் தனது உடலை பிணைத்துக் கொண்ட அவர் ஆற்றுநீரில் குதித்தார்.

ஆனால் அந்த நதி அவரது கயிறு பிணைப்புகளை அறுத்து அவரைக் கரையில் கொண்டு சேர்த்தது. பின்னர் அவர், முதலைகள் நிரம்பிய நதியான சடாத்ரு நதியில் குதித்தார். இந்த நதி அக்னியைப் போல் பிரகாசிக்கும் பிராமணனைக் கண்டதும் நூறு பிரிவாகப் பிரிந்து ஓடுவதுபோல் இருந்தது. இதன் காரணமாக அவர் மீண்டும் கரை சேர்க்கப்பட்டார். தன்னை மாய்த்துக் கொள்ளமுடியாது என்பதைக்கண்ட அவர் மீண்டும் ஆசிரமத்திற்கே திரும்பினார்.”

வசிஷ்டரும் விசுவாமித்திரரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட சில குறிப்பிட்ட சம்பவங்களும் உள்ளன. ஆனால் இந்த இருவருக்குமிடையில் அவ்வப்போது நடைபெற்ற இந்த மோதல்களைவிடவும் அதிகமான பிரச்சினைகள் இருந்தன. அவர்களுக்கிடையேயான பகைமை உயிருக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய வகைப்பட்டதாகவும் இருந்தது, விசுவாமித்திரர் வசிஷ்டரைக் கொலை செய்யக்கூட விரும்பினார் என்பதை மகாபாரதத்தின் சல்லிய பருவத்தில் காணமுடிகிறது. மகாபாரதத்தின் ஆசிரியர் கூறுகிறார்: (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக். 420-422)

"விசுவாமித்திரருக்கும் பிராமணரிஷியான வசிஷ்டருக்கும் இடையில் தங்களது தவவலிமையில் ஏற்பட்ட போட்டியினால் கடுமையான பகைமை நிலவியது. ஸ்தானு தீர்த்தத்தில் வசிஷ்டர் மிகப் பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அதற்குக் கிழக்கே விசுவாமித்திரருடைய ஆசிரமம் அமைந்திருந்தது. இந்த இரு தபஸ்விகளும் தத்தமது தபோ வலிமைகளை தீவிரமான போட்டிக்கிடையில் அன்றாடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் வசிஷ்டரின் தபோ வலிமையைக் கண்டு விசுவாமித்திரர் ஏமாற்றமடைந்தார். ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவரானார். எப்போதும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த முனிவரின் எண்ணம் பின்வருமாறு அமைந்திருந்தது: ‘வழிபாடுகள் செய்வதில் மிகவும் தலைசிறந்தவரான முற்றும் துறந்த வசிஷ்டரை இந்த சரஸ்வதி நதி என்னிடத்தில் வேகமாகக் கொணர்ந்து ஒப்படைக்கும். அத்தலைசிறந்த பிராமணன் வரும்போது அவனை நான் நிச்சயமாகக் கொல்வேன்.’ இவ்வாறு தீர்மானித்துக் கொண்ட தெய்வீக முனிவரான விசுவாமித்திரர் கண்களில் கோபக்கனல் தெறிக்க, நதிகளுக்கெல்லாம் தாயாக இருக்கக் கூடியவளை மனதில் நினைத்துக் கொண்டார். இவ்வாறு அந்த முனிவரின் சிந்தனையை உணர்ந்து கொண்ட அவள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதும் முன்கோபி என்பதும் தெரியும். பின்னர் அங்கமெல்லாம் நடுங்க, பயத்தில் வெளிறிப்போய் கூப்பிய கரங்களுடன் முனிவர்களுக்கெல்லாம் முதன்மையான விசுவாமித்திரர் முன் நின்றாள். பெரும் அச்சம் மேலிட ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று வினவினாள். ‘வசிஷ்டரை இங்கு சடுதியில் கொண்டுவா, நான் அவனைக் கொல்லவேண்டும்’ என்று ஆத்திரம் மேலிட அந்த முனிவர் கூறினார். தாமரைக் கண்ணினாளான அத்தேவதை பெரும் பயத்துடன் நடுநடுங்கி இருகரம் கூப்பித்தொழுதது, காற்றினால் அலைக்கழிக்கப்படும் ஒரு படரும் தாவரத்தைப் போலிருந்தது. அவளுடைய பரிதாப நிலைமையைக் கண்டபோதிலும் கூட விசுவாமித்திரர் தனது உத்தரவைத் திரும்பவும் கூறினார். அவளுடைய திட்டம் எவ்வளவு பாவகரமானது என்பதனையும், வசிஷ்டரின் ஈடு இணையற்ற வலிமையையும் அறிந்திருந்த சரஸ்வதி, இரு முனிவர்களின் சாபத்துக்கும் ஆளாகிவிடுவோமோ என்ற பெரும் பயத்துடன் நடுநடுங்கிக்கொண்டே வசிஷ்டரிடம் சென்று அவரது வைரியான விசுவாமித்திரர் கூறியதை எடுத்துச் சொன்னாள். மெலிந்து, வெளிறிபோய் கவலையுடன் இருந்த சரஸ்வதியைப் பார்த்து அவர் இவ்வாறு கூறினார்: ‘ஓ, நதிகளுக்கெல்லாம் தலைவியானவளே, எவ்விதத் தயக்கமுமின்றி என்னை விசுவாமித்திரனிடம் எடுத்துச்செல். இல்லாவிடில் அவர் உன்னை சபித்து விடுவார். ‘இரக்க குணம் கொண்ட அந்த ரிஷியின் இச்சொற்களை செவிமடுத்த சரஸ்வதி இதில் எப்படி சாதூர்யமாக நடந்துகொள்வது என்று சிந்தித்தாள்.

‘வசிஷ்டர் எப்போதும் என்னிடம் அன்பு செலுத்தி வந்துள்ளார். அவரைக் காக்க நான் விழைய வேண்டும்’ என்று அவள் எண்ணினாள். தனது கரையில் அமர்ந்து கவுசிக முனிவர் பிரார்த்தனையும் பலிபூசையும் நடத்தியதைக்கண்டு அதை ஒரு சிறந்த வாய்ப்பாக அவள் கருதினாள். கரையைத் தனது நீரோட்டத்தின் சக்தியைக் கொண்டு அடித்துச் சென்றாள். இவ்வாறு மித்திரனின் மகனும் வருணனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்; இவ்வாறு, தான் அந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகையில் அவர் அந்த நதியை இவ்வாறு போற்றினார்: “ஓ, சரஸ்வதியாகிய நீ பிரம்மாவின் ஏரியிலிருந்து தோன்றி உலகம் முழுவதும் உனது அற்புதமான நீரோடைகளினால் வியாபித்திருக்கிறாய். நீ மட்டுமே நீராவாய்.

உன்னால் நாங்கள் உயிர் வாழ்கிறோம். நீயே உணவாகிறாய், ஒளியாகிறாய், புகழாகிறாய், செம்மையும், அறிவும், வெளிச்சமும் ஆகிறாய். நீயே பேச்சு, நீயே ஸ்வாகா; இந்த உலகமே உனது அடிமை. நீ நான்கு மடங்கு வடிவத்தில் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கிறாய்.’ சரஸ்வதியினால் வசிஷ்டர் அருகாமையில் கொண்டு வரப்படுவதைக் கண்ட விசுவாமித்திரர் அவருக்கு முடிவுகட்டுவதற்குத் தேவையான ஓர் ஆயுதத்தைத் தேடினார். அவருடைய கோபத்தை உணர்ந்ததும் ஒரு பிராமணின் கொலை நடந்துவிடக்கூடாதே எனப் பயந்தும் அந்த நதி வசிஷ்டரை கிழக்குமுகமாக எடுத்துச்சென்றது. இவ்வாறு விசுவாமித்திரரிடமிருந்து நழுவி இரு முனிவர்களின் உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டன.

இவ்விதம் வசிஷ்டர் நீரில் கொண்டு செல்லப்படுவதைக் கண்ட விசுவாமித்திரர் பொறுமையிழந்து, கோபாவேசமும் வெறுப்பும் கலந்து அவளிடம் கூறினார்: ‘ஓ, நதிகளின் தலைவியே, என்னை நீ ஏமாற்றிவிட்டு நீர் வற்றிப்போகச் செய்ததனால், ராட்சதர்களின் தலைவனுக்கு ஏற்புடைய விதத்தில் ரத்த அலைகளாக ஒடுவாயாக’ (ராட்சதர்கள் ரத்தத்தை குடித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாகக் கதை கூறுகிறது.) இவ்வாறு சாபமிடப்பட்ட சரஸ்வதி ஓராண்டுக்காலம் ரத்தம் கலந்த நீரோட்டத்துடன் ஓடினாள். வசிஷ்டர் அடித்துச் செல்லப்பட்ட இடத்தை புண்ணியத் தலமாகக் கருதி ராட்சதர்கள் அங்கு வந்து, பாதுகாப்பான விதத்தில் ரத்தம் கலந்த நதி நீரை முடிந்த மட்டும் பருகி மகிழ்ச்சியடைந்தனர்.

சிரித்தும் ஆடியும் தாங்கள் வானுலகை வெற்றிகொண்டது போல மகிழ்ந்திருந்தனர். சிறிது காலத்திற்குப்பின் அங்கு வந்தடைந்த ரிஷிகள் ரத்தம் கலந்த நீரைக் கண்டு அஞ்சி நடுங்கினர். ராட்சதர்கள் அந்நீரை வயிறுமுட்டக் குடித்து மகிழ்ந்தனர். அந்த ரிஷிகள் சரஸ்வதியைக் காப்பாற்றுவதற்காக மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.”

வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையிலான பகைமை இரு மதகுருக்களுக்குமிடையேயான பகைமை அல்ல. அது ஒரு பிராமண சத்திரிய குலகுருவுக்கும் இடையிலான பகைமையாக இருந்தது. வசிஷ்டர் ஒரு பிராமணர். விசுவாமித்திரர் ஒரு சத்திரியர். அவர் அரச பரம்பரையில் வந்த சத்திரியராவார். ரிக்வேதத்தில் (iii.33.ii) விசுவாமித்திரர் கவுசிகரின் மகன் என்று சொல்லப்படுகிறார். விசுவாமித்திரரைப் பற்றி விஷ்ணுபுராணம் (முயிரினால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்.349.) கூடுதல் விபரங்களைத் தருகிறது. மன்னன் புரூரவசுவின் வழித்தோன்றலான காதியின் மகனே விசுவாமித்திரர் என்று அது கூறுகிறது. ஹரிவம்சமும் (முயிரினால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்.353 ) இதை உறுதிப்படுத்துகிறது. தலைமுறை தலைமுறையாக (முயிரினால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்.316) விசுவாமித்திரர் பரம்பரையானது ‘அக்னி’யைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் நாம் ரிக்வேதத்தில் இருந்து (iii:1:21) அறிகிறோம். ரிக்வேதத்தின் பல பாசுரங்களை எழுதியவர் விசுவாமித்திரர் என்றும், அதனால்தான் அவர் ராஜரிஷி என்று ஒப்புக் கொள்ளப்பட்டார் என்றும் அந்த வேதத்திலிருந்து அறிகிறோம். ரிக்வேதத்தில் (iii.62.10) காயத்ரி ஜபம் என்ற பெயர் கொண்ட, வேதங்களனைத்திலும் மிகவும் புனிதமானது என்று கருதப்படும் ஜபத்தைப் படைத்தவரும் அவரே. அவரைப்பற்றி நாம் அறியவரும் மற்றுமொரு முக்கியமான உண்மை என்னவெனில் அவர் ஒரு சத்திரியர் என்பதும், அவரது குடும்பம் பரதர்களின் (முயிரினால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்.354) பரதர்களின் வம்சத்தைச் சேர்ந்ததாகும் என்பதுதான்.

அக்காலகட்டத்தில் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையில் பின்வரும் விஷயங்கள் குறித்து ஒரு சச்சரவு நிலவியதாகத் தெரிகிறது:

1) முதலாவது சச்சரவு பரிசில்கள் பெரும் உரிமை சம்பந்தப்பட்டது. பரிசில்கள் என்பது வேலை எதுவும் செய்யாமல் பெரும் பணம். வேறு எவரும் பரிசுகள் பெறமுடியாது, அவற்றைப் பெரும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்பது பிராமணர்களின் வாதம். (மன்னன் சூத்திரனுக்குப் பரிசளிக்க விரும்பினால் அவனிடம் வேலை வாங்க வேண்டும்என்று இதனால்தான் மனு கூறுகிறார்)

2) இரண்டாவது சச்சரவு வேதங்களைக் கற்று தரும் உரிமை சம்பந்தப்பட்டது. வேதங்களைக் கற்கும் உரிமை மட்டும்தான் சத்திரியர்களுக்கு உண்டு, வேதங்களைக் கற்றுத்தரும் உரிமை அவர்களுக்கு இல்லை. அது பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனி உரிமை என்பது பிராமணர்களின் வாதம்.

3) மூன்றாவது சச்சரவு புரோகிதர்களாக இருந்து வேள்விகளை நடத்தித் தரும் உரிமை சம்பந்தப்பட்டது. இது விஷயத்தைப் பொறுத்தவரையில் சத்திரியர்கள் வேள்விகளை நடத்தலாமே தவிர, புரோகிதர்களாக இருந்து அவற்றை நடத்தித் தரும் உரிமை அவர்களுக்கு இல்லை என்பது பிராமணர்களின் வாதம்.

இந்த விஷயங்கள் குறித்த சர்ச்சைகளில் கூட அதிலும் குறிப்பாக மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயத்தில் சத்திரியர்களும் சரி, பிராமணர்களும் சரி பரஸ்பரம் ஒருவருக்கு எதிராக ஒருவர் தமது பங்கை ஆற்றத் தவறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். ராமாயணத்தில் வரும் திரிசங்குவின் கதை இதை உறுதி செய்கிறது. (முய்ர், தொகுதி 1, பக். 402-404) அந்தக் கதை வருமாறு:

“இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த திரிசங்குராஜனுக்கு ஓர் எண்ணம் உதித்தது. உடலோடு சுவர்க்கமடைவதற்கு ஓர் யாகம் செய்ய அவன் எண்ணினான். இதற்கு அவன் முனிவர் வசிஷ்டர் உதவியை நாடினான். ஆனால் இது சாத்தியமில்லை (அசக்கியம்) என்று அவர் மறுத்துவிட்டார். இதன்பேரில் திரிசங்கு தென் திசையில் பயணமானான். அங்கு முனிவரின் நூறு புதல்வர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தந்தை செய்ய மறுத்துவிட்ட யாகத்தை நடத்தித் தருமாறு அவர்களை வேண்டிக்கொண்டான். இக்கட்டுகள் வந்துற்றபோதெல்லாம் இக்ஷ்வாகுகள் தங்களுடைய குடும்பப் புரோகிதர்களின் உதவியையே எப்போதும் நாடி வந்திருக்கின்றனர் என்றும், தானும் அவ்வாறே அவர்களைத் தனது குலதெய்வங்களாக மதித்து இப்போது அவர்களது உதவியை நாடி வந்திருப்பதாகவும் திரிசங்கு பெருமதிப்போடும் மிகவும் பணிவோடும் கூறினான்.

ஆனால் அவனது வேண்டுகோளுக்கு முனிவரின் இறுமாப்பு கொண்ட புதல்வர்களிடமிருந்து பின்கண்ட கடிந்துரைதான் பதிலாக வந்தது: ‘முட்டாளே, உண்மை பேசும் குரு மறுத்துவிட்ட பிறகு, அவரது ஆணையை மீறி எப்படி மற்றொரு ஆசானை நாடி வந்தாய்? குடும்ப குருதான் இக்ஷ்வாகுக்களின் மிக உயர்ந்த வழிகாட்டி; அத்தகைய வாய்மைமிக்க உத்தமரின் அருள்வாக்கை யாரும் மீற முடியாது. தெய்வீகப் பெருமகனாரான ரிஷி வசிட்டர் ‘இது செய்ய முடியாத காரியம்’ என்று கூறிவிட்டார்: ‘ அப்படியிருக்கும் போது இந்த யாகத்தை நாங்கள் எப்படி நடத்தித் தர முடியும்? முட்டாள் மன்னனே, பேசாமல் உன் தலைநகருக்குத் திரும்பிப்போ. தெய்வீகத் தன்மை வாய்ந்த வசிட்டர் ஒருவரால்தான் இத்தகைய யாகத்தைச் செய்ய முடியும், அவரே மறுத்துவிட்ட பிறகு எப்படி நாங்கள் அவரது ஆணையை மீறமுடியும்?

தன்னுடைய குலகுருவும் அவருடைய புதல்வர்களும் தனது வேண்டுகோளை நிறைவேற்ற மறுத்துவிட்டதால் திரிசங்கு வேறு முயற்சியில் ஈடுபட முனைந்தான். இதை அறிந்த வசிட்டரின் புதல்வர்கள் அடங்காத சினமும் ஆத்திரமும் கொண்டனர்; அவனை ஒரு சண்டாளனாகும்படி தங்களது தவ வலிமையால் சபித்தனர். இந்த சாபம் உடனே பலித்து, மன்னன் ஒரு சண்டாளனது உருவத்தைப் பெற்றான். இதன்பேரில் திரிசங்கு அப்போது தென்புலத்தில் வாழ்ந்துவந்த விசுவாமித்திரரிடம் சரணடைந்தான்; தனக்கு ஏற்பட்ட கதியைக் கூறிப் புலம்பினான். விசுவாமித்திரர் அவன் கூறியதை எல்லாம் மிகுந்த பரிவிரக்கத்தோடு செவிமடுத்துக் கேட்டார்; அவனுக்காக யாகம் நடத்தி, இந்தச் சண்டாள உருவத்துடனேயே அவனை சுவர்க்கலோகத்துக்கு அனுப்புவதாக உறுதி கூறினார். “மன்னனே, குசிகரது மைந்தனின் உதவியை நாடிவந்துவிட்டாய். இப்போதே உனக்கு சுவர்க்கம் கிடைத்துவிட்டதாக திடமாக நம்பலாம்” என்று அவனுக்கு ஆறுதல் அளித்தார். இதன்பிறகு, யாகம் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டார்; வசிட்டரது குடும்பத்தினர் உட்பட அனைத்து ரிஷிகளும் இந்த யாகத்துக்கு அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விசுவாமித்திரரது சீடர்கள் அவரது செய்தியை எங்கெங்கும் பரப்பிவிட்டுத் திரும்பிவந்து அவரிடம் பின்வருமாறு கூறினர்: “உங்கள் செய்தியைக் கேட்டு எல்லா நாடுகளையும் சேர்ந்த பிராமணர்கள் இங்கு வந்து சேர்ந்துவிட்டனர். மகோதயரும் (வசிட்டர்) அவருடைய புதல்வர்களும் மட்டும் வரவில்லை. அந்த நூறு வசிட்ட புதல்வர்களும் குரலில் கோபம் கொந்தளிக்க எத்தகைய பயங்கரமான, மிக மோசமான வார்த்தைகளைக் கூறினார்கள் என்பதைக் கேளுங்கள்: “ஒரு சண்டாளன் யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் புரோகிதனாக இருந்து அதை நடத்தித் தருகிறான், அப்படிப்பட்ட யாகத்தில் பரிமாறப்படும் பலி உணவை தெய்வங்களும் ரிஷிகளும் எப்படி உண்ணமுடியும்? விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்ட பிறகு மேன்மை மிக்க பிராமணர்கள் எவ்வாறு சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்? மகோதயரும் எல்லா வசிட்டப் புதல்வர்களும் சேர்ந்து இந்த இரக்கமற்ற, கொடிய வார்த்தைகளைக் கூறியபோது அவர்களது கண்களில் சினத்தீ கொழுந்துவிட்டெரிந்தது”. இதைக் கேட்ட விசுவாமித்திரர் கட்டுக்கடங்காது சீற்றமடைந்தார்; வசிட்டரின் நூறு புதல்வரும் எரிந்து சாம்பலாகும்படியும், எழுநூறு பிறவிகளில் அவர்கள் மிகவும் இழிந்த குலத்தினராக (மிருதபர்களாக) பிறக்கும்படியும், மகோதையரை ஒரு நிஷாடராகும்படியும் சாபமிட்டார்.

விசுவாமித்திரர் தமது இந்த சாபம் பலித்துவிட்டதைத் தெரிந்து கொண்டதும், திரிசங்குவை வெகுவாகப் பாராட்டிவிட்டு, இனி யாகத்தை நடத்தலாம் என்று கூடியிருந்த ரிஷிகளிடம் கூறினார். விசுவாமித்திரரின் பயங்கர கோபத்துக்கு அஞ்சி அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதன்பேரில் விசுவாமித்திரரே பிரதான புரோகிதராகவும் (யஜாகர்), ஏனைய ரிஷிகள் புரோகிதர்களாகவும் (ரித்விஜர்கள்) இருந்து யாகம் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் செய்தனர்.” (இதற்கு நேரடியான சான்று எதுவும் இல்லை. எனினும் ரிக் வேதத்தின் III. 53.9 அடிப்படையில் சம்பிரதாய முறைமை இதனை உண்மை என ஏற்றுக் கொள்கிறது. யாஸ்கரும் தமது நிருக்தத்தில் இதனை உறுதி செய்கிறார் (II. 24). அவர் இவ்வாறு கூறுகிறார்: பின்னர் அவர்கள் ஒரு கதையைக் கூறுகின்றனர். அப்போது பிஜவானனது புதல்வனான சுதாசனுக்கு ரிஷி விசுவாமித்திரர் புரோகிதராக இருந்தார்.”)

வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையேயான இந்தச் சர்ச்சையில் சுதாசன் ஒரு முக்கிய பங்கு வகித்ததாகத் தோன்றுகிறது. வசிட்டர்தான் சுதாசனின் குடும்ப புரோகிதர். வசிட்டர்தான் அவனது முடிசூட்டு விழாவை நடத்தியவர். வசிட்டர்தான் பத்து அரசர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் அவன் வெற்றிவாகை சூட உதவியவர். இவ்வாறெல்லாமிருந்தும் அவன் வசிட்டரை அரசப் புரோகிதர் பதவியில் இருந்து விலக்கினான்; அந்த இடத்தில் விசுவாமித்திரரைத் தனது புரோகிதராக நியமித்துக் கொண்டான். அவன் புரிந்த இந்தச் செயல்தான் அவனுக்கும் வசிட்டருக்கும் இடையே பகைமைக்கு வித்திட்டது. இந்தப் பகைமையை மேலும் தீவிரமும் கூர்மையும் படுத்தும் காரியத்தையும் சுதாசன் செய்தான்; வசிட்டரின் புதல்வரான சக்தியை நெருப்பில் எறிந்து உயிரோடு கொன்றுவிட்டான்.

இந்த விவரம் சத்யாயன பிராமணத்தில் கூறப்பட்டுள்ளது. (அதுகிரமணிகையை ஆதாரமாகக் கொண்டு ரிக் வேதத்துக்கு VII. 32 எழுதியுள்ள தமது முன்னுரையில் சயனரால் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொகுதி I பக்கம் 328) இத்தகைய கொடுஞ்செயலுக்கான காரணத்தை சத்யாயன பிராமணம் கூறவில்லை. எனினும் ரிக் வேதத்துக்கு காத்தியாயனரின் அநுகிரமணிகைக்கு சத்குரு சிஷ்யர் (ரிக் வேதம் மூன்றாவது மண்டலம் சூக்தம் 53ன் 15, 16 ஆவது சுலோகங்களுக்கான தமது முன்னுரையில் சயனர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். இதையே முய்ர் இங்கு மேற்கோள் காட்டியிருக்கிறார், தொகுதி I பக்கம் 343.) செய்துள்ள விளக்க உரையில் இது குறித்து ஒரு தகவல் காணப்படுகிறது. சத்குருசிஷ்யரின் கூற்றுப்படி சுதாசன் ஒரு யாகம் நடத்தினான்; அந்த யாகத்தின்போது விசுவாமித்திரருக்கும் வசிட்டரின் புதல்வரான சக்திக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் நிகழந்தது. இதுபற்றி சத்குரு சிஷ்யர் கூறுவதாவது:

“வசிட்டரின் புதல்வரான சக்தியின் வாதத்திறமையின் முன்னால் விசுவாமித்திரர் செயலிழந்து போய் பெரிதும் சோர்வடைந்தது விட்டார்.”

சுதாசன், சக்தியை நெருப்பில் தூக்கியெறிந்து கொன்றதற்கு இதுவே காரணம். விசுவாமித்திரருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கும் அவமதிப்புக்கும் பழிவாங்கும் பொருட்டே அவன் இவ்வாறு செய்ததாகத் தோன்றுகிறது. சுதாசனுக்கும் வசிட்டருக்கும் இடையே வளர்ந்து வந்த கொடிய பகைமையைத் தவிர்ப்பதற்கோ, தடுப்பதற்கோ முடியவில்லை.

மேலும் இந்தப் பகைமை சுதாசனுடனும் வசிட்டருடனும் நின்றுவிடவில்லை. அவர்களுடைய புதல்வர்களுக்கும் அது பரவிவிட்டதாகவே தோன்றுகிறது. தைத்திரீய சம்ஹிதை இதனை உறுதிப்படுத்திப் பின்வருமாறு கூறுகிறார்: (முய்ர், தொகுதி I, பக் 328.)

“வசிட்டர் தம்முடைய புதல்வர் கொல்லப்பட்ட பிறகு தமக்குப் புத்திர சந்தானம் வேண்டும் என்றும், சௌதாசர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். இதனை அவர் ஏகமன்னபஞ்சாசத்தை கொண்டு யாகம் செய்தார். இதன் விளைவாக அவருக்குப் புத்திர பாக்கியம் கிட்டிற்று, சௌதாசர்கள் மீது வெற்றியும் பெற்றார்.”

கௌசிதாகி பிராமணமும் (மேற்படி நூல்.) இதனை உறுதிசெய்து பின்கண்டவாறு கூறுகிறது:

“தம்முடைய புதல்வர் கொல்லப்பட்டதும் தமக்கு சந்ததியும் கால்நடை வளமும் வேண்டும் என்றும், சௌதாசர்களை முறியடிக்க வேண்டும் என்றும் அவாவினார். இதன் பொருட்டு அவர் ஒரு யாகம் செய்து தாம் விரும்பியதையும் பெற்றார், சௌதாசர்களையும் வெற்றி கொண்டார்.” (வசிட்டரின் இந்தப் பகைமை சுதாசனுக்கு எதிராக ஏற்பட்டதா அல்லது அவனுடைய புதல்வர்களுக்கு எதிராக ஏற்பட்டதா என்பது குறித்து ஐயம் நிலவுகிறது. சத்தியாயன, கெளசிதாகி பிராமணங்கள் சௌதாசர்களைப் பற்றியே குறிப்பிடுகிறது. எனவே வசிட்டரின் சர்ச்சை சுதாசனுடைய புத்திரர்களுடனே அன்றி சுதாசனுடனல்ல என்பதை இது காட்டுவதாலேயே இந்த ஐயம் எழுகிறது. ஆனால் மனுவோ சுதாசன்தான் குற்றவாளி என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். சத்குருசிஷ்யரும் சுதாசனனைப் பற்றிப் பேசுகிறாரே அன்றி சௌதாசர்களைப் பற்றிக் குறிப்படவில்லை. பிரிஹத்தேவ்தாவும் இதுபோன்றே சுதாசனையும் அவனுடைய புதல்வர்களையும் உள்ளடக்கிய சுதாசனுடைய குடும்பத்தை குறிக்கிறது என்று பொருள் கொண்டால் இந்த சிக்கல் தீர்ந்துவிடுகிறது. முய்ர்ரால் மேற்கோள் காட்டப்பட்டது. தொகுதி I, பக். 302.)

II

சுதாசனுக்கும் வசிட்டருக்கும் இடையே நடைபெற்ற மோதல்தான் மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரே மோதல் என்று கருதலாகாது. மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே வேறு பல சர்ச்சைகளும் நடைபெற்ற விவரங்கள் புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் இங்கு தொகுத்துக் கூறுவது உசிதமாக இருக்கும். முதலாவதாக மன்னன் வேணனைப் பற்றிப் பார்ப்போம். அவனுக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த விவரங்கள் பல நூல்களில் காணப்படுகின்றன. பின்கண்ட விவரம் ஹரிவம்சத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:

“நேர்மையை நிலைநாட்டும் அங்கன் என்ற பிரஜாபதி முன்னொரு காலத்தில் இருந்தான்; அவன் அத்ரி வம்சத்தில் வந்தவன்; அவனைப் போன்றே ஆற்றல் மிக்கவன் இவனுடைய புதல்வன் பிரஜாபதி வேணன்; கடமை ஆற்றுவதில் அத்தனை அக்கறையில்லாதவன்; மிருத்யுவின் புதல்வியான சுனிதாவுக்குப் பிறந்தவன். காலனது மகளின் மைந்தனின் இவன் தன்னுடைய தாய்வழிப் பாட்டனின் வழிவந்த கறை காரணமாக தனது கடமைகளை மறந்து, படாடோபமிக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இந்த மன்னன் சமய நெறிகளுக்குப் புறம்பாக நடந்து வந்தான்; வேதத்தின் ஆணைகளை மீறினான்; நீதிநெறிகளிலிருந்து பிறழ்ந்து அராஜக வழியில் செயல்பட்டான். அவனது ஆட்சியில் மக்கள் வேத நூல்களை படிக்காமல், வஷக்காரமில்லாமல் வாழ்ந்து வந்தனர்; யாகங்களின்போது தெய்வங்கள் அருந்துவதற்கு சோமபானம் படைக்கப்படுவதில்லை. இந்தக் கொடுங்கோலனான பிரஜாபதியின் அழிவுகாலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘என் அனுமதியின்றி எந்த யாகங்களும் நடத்தக்கூடாது, எத்தகைய நைவேத்தியங்களும் படைக்கப்படக்கூடாது’ என்று ஈவு இரக்கமின்றி கட்டளையிட்டான்.

‘யாகத்துக்குரியவன் நானே, யாகத்தை நடத்துபவன் நானே, யாகமும் நானே’ என்று அகந்தையோடு கொக்கரித்தான். ‘எனக்குத்தான்யாகங்கள் செய்யவேண்டும், திருப்படையல்களை அர்ப்பணிக்க வேண்டும்’ என்றும் ஆணவம் மிகுந்து ஆணையிட்டான். தகாத உரிமை கோரி, தனது கடமைகளைச் செய்யத் தவறிய அவனிடம் மரீசி தலைமையில் பெரும் முனிவர்கள் ஒன்றுதிரண்டு வந்து பின்கண்டவாறு அறிவுரை பகர்ந்தனர்: ‘பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு புனிதமான பணியில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஓ, வேணா, நேர்மையற்று முறை தவறி நடந்து கொள்ளாதே. இது நிலைபேறுடைய சாகவதமான ஆட்சியின் லட்சணமல்ல. நீ அத்ரியின் வம்சத்தில் வந்த ஒரு பிரஜாபதி. குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய உயரிய பொறுப்பு உன்னுடையது. ‘நேர்மை, நியாயம் என்பதை எல்லாம் அறியாத அறிவிலியான வேணன் தனக்குப் புத்திமதி கூறிய முனி புங்கவர்களுக்கு மிகவும் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே பின்வருமாறு கூறினான்: ‘விதிமுறைகளையும் கடமைகளையும் வகுத்தளிப்பவனே நான்தான்.

அப்படியிருக்கும்போது நான் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்? வீரத்திலும் தீரத்திலும் மதிநுட்பத்திலும் வாய்மையிலும் தன்னொழுக்கத்திலும் எனக்கு இணையானவர்கள் இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள்? நான்தான் அனைத்து உயிர்ராசிகளின், கடமைகளின் பிறப்பிடம் என்பதை அறியாது விவேகமற்றவர்களாக இருக்கிறீர்கள். நான் நினைத்தால் இந்த உலகையே சுட்டெரித்துவிடுவன், ஊழிவெள்ளத்தில் மூழ்கடித்துவிடுவேன், தேவலோகத்தையும் பூலோகத்தையும் மூடிவிடுவேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.’ இறுமாப்பும் வீண் பெருமையும் கொண்ட வேணனை வழிக்குக் கொண்டுவர முடியாமல் போகவே மகாவல்லமை படைத்த ரிஷிகள் மிகுந்த சீற்றம் கொண்டு அவனைப் பலவந்தமாகப் பிடித்து, அவனது இடது தொடையை மிகப் பலமாக தேய்த்தனர்.

இவ்வாறு அழுத்தித் தேய்க்கப்பட்ட அந்தத் தொடையிலிருந்து மிகவும் கட்டை குட்டையான ஒரு கருப்பு மனிதன் தோன்றினான். கலக்கமும் குழப்பமும் அடைந்துபோன அவனைப் பார்த்து ‘கீழே உட்கார்’ (நிஷிதா) என்று அத்ரி கூறினார்; இதன் பின் அவன் நிஷிதர் இனத்தின் நிருவகனானான்; அவ்வாறே, வேணனது ஒழுக்கக் கேட்டிலிருந்து பிறந்த திவிரார்களின் (மீனவர்கள்) மூதாதையாகவும் ஆனான்.”

பிராமணர்களுடன் மோதலில் ஈடுபட்ட அடுத்த மன்னன் புரூரவன் இளையின் புதல்வனும் வைவசுவத மனுவின் பேரனுமாவான். பிராமணர்களுடன் அவனுக்கு ஏற்பட்ட சச்சரவு பற்றிய விவரங்கள் மகாபாரதம் ஆதி பருவத்தில் காணப்படுகின்றன: (இது முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொகுதி I பக்கம.307)

“பின்னர் இளைக்கு விவேகமிக்க புரூரவன் பிறந்தான்; அவளே அவனுக்குத் தாயும் தந்தையுமாக இருந்து செயல்பட்டு வந்தாள். மாகடலில் பதின்மூன்று தீவுகளை அவன் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் அனைவரும் மகத்தான சக்தி படைத்தவர்களாக இருந்தனர். அவர்களிடையே அவன் மாவீரனாகத் திகழ்ந்தான். தனது வலிமை குறித்து அகந்தை கொண்ட அவன் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்; பிராமணர்களுடன் சச்சரவில் ஈடுபட்டான்; அவர்களுடைய நகைகளை எல்லாம் அபகரித்துக் கொண்டான்; அவர்கள் எவ்வளவோ எதிர்த்து வாதாடியும் அவற்றை அவன் கடுகளவும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பின்னர் சனத்குமாரர் பிரமலோகத்திலிருந்து வந்தார்; அவரும் அவனுக்கு வெகுவாக அறிவுரை கூறினார்; அதையும் அவன் கண்டுகொள்ளவில்லை. இதன்பேரில், பெரிதும் பொறுமை இழந்த ரிஷிகள் அவனுக்குச் சாபம் தந்தனர்; அதிகார மமதையால் நிதானத்தையும் நியாயத்தையும் நேர்மையையும் அறிவாற்றலையும் இழந்த பேராசை பிடித்த மன்னன் இந்த சாபத்தால் அழிந்துபோனான்”

இந்த வரிசையில் வரும் மூன்றாவது மன்னன் நகுஷன். இவன் புரூரவனின் பேரன். பிராமணர்களுடன் புரூரவனுக்கு ஏற்பட்ட மோதல் பற்றி மேலே விவரித்தோம். இதேபோன்று பிராமணர்களுடன் நகுஷனுக்கு ஏற்பட்ட சச்சரவு மகாபாரதத்தில் ஓரிடத்தில் வான பருவத்திலும், இன்னோர் இடத்தில் உத்தியோக பருவத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. உத்தியோக பருவத்தில் காணப்படும் விவரத்தைக் கீழே தந்திருக்கிறோம். (இது முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொகுதி I பக்கம் 310-313) அது கூறுவதாவது:

“ஒரு சமயம் இந்திரன் விருந்திரன் என்ற அசுரனைக் கொன்றுவிட்டான். ஒரு பிராமணனை (விருத்திரன் அவ்வாறுதான் கருதப்பட்டான்) கொன்றுவிட்டோமே, எங்கே தன்னை கத்தி பீடித்துக் கொள்ளுமோ என்று அஞ்சி இந்திரன் நீர் நிலைகளில் போயி ஒளிந்துகொண்டான். இவ்வாறு தேவேந்திரன் மறைந்துவிட்டதால் தேவலோக, பூலோக காரியங்கள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டன. இதனால் ரிஷிகளும் தேவர்களும் நகுஷனை அணுகி தங்களுடைய அரசனாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். அதற்குரிய அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறி நகுஷன் முதலில் மறுத்துவிட்டான்; பின்னர் அவர்கள் பெரிதும் வலியுறுத்தியதால், அந்தப் பொறுப்பை ஏற்க சம்மதித்தான்.

இந்த உன்னத இடத்தைப் பெறும்வரை அவன் ஒழுக்கசீலனாக, சிறந்த பண்பாளனாகத்தான் இருந்துவந்தான். ஆனால் அதிகார போதை தலைக்கேறியதும் அறவே மாறிவிட்டான்; கேளிக்கை கூத்துகளுக்கும் சிற்றின்ப சம்பவங்களுக்கும் அடிமையாகி விட்டான்; ஒரு சமயம் இந்திரனின் மனைவி இந்திராணியைச் சந்திக்க நேர்ந்தபோது அவளிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டான்; அவளை எப்படியும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். இதனை அறிந்த இந்திராணி தேவர்களின் குருவான அங்கிரசு பிரகஸ்பதியிடம் சரணடைந்தாள்; அவளைக் காப்பாற்றுவதாக அவர் உறுதியளித்தார். இந்தத் தலையீட்டைக் கேள்விப்பட்டதும் நகுஷன் எல்லையில்லாச் சீற்றமடைந்தான்; ஆனால் தேவர்கள் அவனது கோபத்தைத் தணிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்; மாற்றான் மனைவியை அபகரிக்க நினைப்பது நெறிகெட்ட செயல் என்று அவனுக்கு எடுத்துரைத்தனர். ஆனால் அவனோ இந்த உபதேசங்களை எல்லாம் கேட்கத் தயாராக இல்லை. ‘மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதில் நான் இந்திரனைவிட மோசமானவன் அல்ல.

ஒரு ரிஷியின் தர்ம பத்தினியான அகலிகையை அந்த முனிவர் உயிரோடிருந்த காலத்தில் இந்த இந்திரன்தான் கற்பழித்துக் கெடுத்தான். அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அந்தப் பழைய இந்திரன் இன்னும் எத்தனை எத்தனையோ காட்டுமிராண்டித்தனமான, நயவஞ்சகமான, நெறியற்ற, நீசத்தனமான செயல்களைப் புரிந்தான். அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை?’ என்று நகுஷன் எதிர்ப்பானம் தொடுத்தான். ரிஷிகளால் இதற்குப் பதில் கூறமுடியவில்லை; செய்வதறியாது திகைத்தனர்.

இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திராணியை அழைத்து வரும்படி அவர்களை மீண்டும் வற்புறுத்தினான். வேறுவழியின்றி ரிஷிகள் இந்திராணியை அழைத்துவரச் சென்றனர். ஆனால் பிரகஸ்பதி அவளைக் கைவிடத் தயாராக இல்லை. அவர் தெரிவித்த யோசனையின் பேரில், தன்னுடைய கணவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும்வரை பொறுக்கும்படி நகுஷனை இந்திராணி கேட்டுக்கொண்டாள். அவளது வேண்டுகோள் ஏற்கப்பட்டது. இப்போது இந்திராணி தன்னுடைய கணவரைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினாள்.

முடிவில் அவள் உபசுருதியின் (இராக் காலத் தெய்வம். ரகசியங்களை வெளியிடும் தெய்வம்) உதவியோடு இந்திரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். இமாலயத்துக்கு வடக்கே ஒரு மாகடலுக்குள் இருக்கும் ஒரு கண்டத்தின் ஏரியில் வளர்ந்துவரும் தாமரை மலரின் தண்டில் மிகவும் நுட்பமான வடிவத்தில் அவன் ஒளிந்துகொண்டிருந்தான். நகுஷனின் தீய எண்ணத்தை அவனிடம் இந்திராணி கூறினாள்; தனது சக்தியைப் பயன்படுத்தித் தன்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றும்படியும், மீண்டும் இந்திரப்பதவியைப் பெறும்படியும் அவனை மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். ஆனால் நகுஷன் மாபெரும் வல்லமை படைத்தவனாதலால் உடனடியாகத் தலையிடுவதற்கில்லை என்று கூறி இந்திரன் மறுத்துவிட்டான். எனினும் நகுஷனை பதவியிலிருந்து இறக்குவதற்கான ஓர் உபாயத்தை இந்திரன் தன்னுடைய மனைவியிடம் கூறினான்; தெய்வீக எழில் கொழிக்கும் ஒரு சிவிகையை ரிஷிகள் தாங்கிவர, அதில் அமர்ந்து வந்தால் அவனது இச்சைக்கு தான் இணங்குவதாக நகுஷனிடம் கூறும்படி இந்திராணியிடம் அவன் தெரிவித்தான்.’

தேவர்களின் ராணியும் அவ்வாறே நகுஷனிடம் கூறினாள்: ‘தேவர்கோனே, விஷ்ணுவோ, ருத்திரனோ, அசுரர்களோ அல்லது ராட்சதர்களோ இதுவரை பயன்படுத்தியிராத ஒரு சிவிகையில் நீங்கள் பவனிவர, அதனை ரிஷிகள் தாங்கிவரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண விரும்புகிறேன். அதைக் கண்டு என் உள்ளம் களி உவகை கொள்ளும்’.

நகுஷன் இதைக் கேட்டு மனம் குளிர்ந்தான்; அவனது வீண் தற்பெருமைக்கு, ‘நான்’ என்ற அகங்காரத்துக்கு இது தீனிபோடுவது போலிருந்தது. அவன் இவ்வாறு கூறினான்: ‘ரிஷிகளைத் தன்னை சுமந்து செல்ல வைக்கும் இந்த நகுஷனது பராக்கிரமம் சாதாரணமானதல்ல. முக்காலத்திலும் வலிமையை ஆராதிப்பவன் நான். போற்றுபவன் நான். இந்த உலகம் என் கோபத்தைத் தாங்க முடியாது; எல்லாம் என்னையே சார்ந்து நிற்கின்றது. ஆதலால், ஓ, தேவதேவி, உன் விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஏழு முனிவர்களும், அனைத்துப் பிராமண ரிஷிகளும் என்னை சுமந்து கொண்டு வருவார்கள். அப்போது என் அழகுராணியே, என் பெருமிதத்தை, என் மாண்பை, என் புகழ் ஒளியை, என் வளமையை, என் வெற்றிப் பொழிவைப் பார்த்துத் தெரிந்துகொள்.’

கதை மேலும் தொடர்கிறது:

அவ்வாறே அந்தக் கொடியவன், சமயப் பற்றற்றவன், வன்முறையாளன், தலைக்கனம் பிடித்தவன், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனம் போனப் போக்கில் செல்லுபவன் ரிஷிகளை தனது சிவிகையைத் தூக்கி வரும்படி நிர்ப்பந்தித்தான்; அவர்களும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர். அப்போது இந்திராணி மீண்டும் பிரகஸ்பதியின் உதவியை நாடுகிறாள்; நகுஷன் அவனது அடாத செயல்களுக்காக விரைவிலேயே பழிவாங்கப்படுவான் என்று அவர் உறுதி கூறுகிறார்; அந்த அக்கிரமக்காரனின் கொட்டத்தை ஒடுக்குவதற்கும் அவளை அழிப்பதற்கும், இந்திரன் ஒளிந்துள்ள இடத்தைக் கண்டுப்பிடிப்பதற்கும் விரைவிலேயே தாம் ஓர் யாகம் செய்யப்போவதாகவும் கூறுகிறார்.

பின்னர் இந்திரனைக் கண்டுபிடித்து பிரகஸ்பதியிடம் அழைத்துவர அக்னி அனுப்பப்படுகிறான். இந்திரன் வந்து சேர்ந்ததும் அவன் இல்லாத சமயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பிரகஸ்பதி அவனிடம் எடுத்துரைக்கிறார். இதன்பின்னர், நகுஷனை ஒழித்துக்கட்டும் வழிமுறைகளைப் பற்றி குபேரன், யமன், சோமன், வருணன் ஆகியோருடன் இந்திரன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அகஸ்திய முனிவர் அங்கு வந்து சேர்ந்தார்; இந்திரனது பகைவன் ஒழிந்த நற்செய்தியைக் கூறி அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்; இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விவரிக்கலானார்.

கொடியவன் நகுஷனைத் தூக்கிச் சுமந்து அயர்வும் சோர்வடைந்துபோன தேவரிஷிகளும் பிராமண ரிஷிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் ஐயப்பாட்டைத் தீர்க்கும்படி நகுஷனைக் கேட்டுக்கொண்டனர்; ‘ஓ, வாசவா, தலைசிறந்த வெற்றி வீரனே, அரசனது யாகத்தின்போது ஓதப்படும் வேத சுலோகங்கள் அதிகாரப்பூர்வமானவையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.’ ‘இல்லை’ என்று அவனது அறிவாற்றல் இருளடைந்துபோய் பதிலளித்தான். அப்போது ரிஷிகள் பின்வருமாறு கூறினர்: ‘நெறியற்ற முறையில் ஈடுபட்டு நீ நேர்மையைப் பெற முடியாது; இதன் முன்னர் தலைசிறந்த முனிவர்கள் திருவாய் மலர்ந்தருளிய இந்த வேத வாக்கியங்களை நாங்கள் அதிகாரப் பூர்வமானவையாகக் கருதுகிறோம்’. (அகஸ்தியர் தொடர்கிறார்) பின்னர் ரிஷிகள் கூற்றை மறுத்துரைக்க முற்பட்ட நகுஷன் மிகுந்த கோபமும் ஆத்திரமும் கொண்டபோது அவனது பாதம் என் சிரசின்மீது பட்டுவிட்டது.

இதன் விளைவாய் மன்னனின் புகழ், சீர்த்தி, கீர்த்தி எல்லாம் தகர்ந்துபோயின; அவனது வெற்றிப் பொலிவு அஸ்தமித்துவிட்டது. அவன் உடனே பதற்றமும் பரபரப்பும் அடைந்தான்; அச்சம் அவனைப் பற்றிக் கொண்டது. அப்போது அவனிடம் இவ்வாறு கூறினான்: ‘பழம்பெரும் ஞானிகளால் இயற்றப்பட்டு, எப்போதுமே மிகுந்த பயபக்தியுடன் போற்றப்பட்டு வந்துள்ள, பிராமண ரிஷிகளால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள புனிதமான வேத வாக்குகளை முட்டாளே, நீ அவமதித்து விட்டாய், என் தலைமீது உன்பாதம் பட்டுவிட்டது, பிரம்மாக்கள் போன்ற பிராமண ரிஷிகளை சிவிகையை சுமந்து சொல்லுபவர்களாகவும் ஆக்கிவிட்டாய். ஆதலால் உனது புகழும் தகைமையும் உன்னை விட்டு விலகிப் போகும்; உனது வலிமையை, வல்லமையை இழப்பாய். பாபாத்மாவே, நீ தரங்கெட்டு, தாழ்ந்து இழிந்து சுவர்க்கலோகத்திலிருந்து பூலோகத்துக்கு போகக்கடவாய். அங்கு நீ பத்தாயிரம் வருடங்கள் ஒரு சர்ப்பமாக ஊர்ந்து திரிவாய்.

அந்தக் காலக்கெடு முடிந்ததும் மீண்டும் சுவர்க்க லோகத்துக்கு வருவாய்’. இவ்வாறு அந்த இழிஞன் தேவர்களின் ஆட்சிபீடத்திலிருந்து வீழ்ச்சியடைந்தான்.ஓ, இந்திரா, பிராமணர்களின் பகைவன் ஒழிந்துவிட்டதால் இனி நாம் வளம் பெறுவோம், நலம்பெறுவோம், நலமடைவோம். மூவுலகங்களையும் உன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து அவற்றின் குடிமக்களைப் பாதுகாப்பாயாக. ஓ, சசியின் (இந்திராணி) மணாளனே, உனது புலன்களை அடக்கி, உன் பகைவர்களை ஒடுக்கி, மாபெரும் ரிஷிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வாயாக.”

பிராமணர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்ட நான்காவது மன்னன் நிமி ஆவான். இந்த மோதல் குறித்த விவரங்கள் விஷ்ணு புராணத்தில் காணப்படுகின்றன. அது கூறுவதாவது:

“ஆயிரம் வருடங்கள் நீடிக்கக்கூடிய ஒரு யாகத்தை நடத்தித் தருமாறு பிராமண ரிஷியான வசிட்டரை ஒருசமயம் நிமிகேட்டுக் கொண்டான். ஆனால் ஐநூறு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு யாகத்தை நடத்தித் தருவதற்கு ஏற்கெனவே இந்திரனுக்கு வாக்களித்துவிட்டதால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் திரும்பி வருவதாக வசிட்டர் கூறினார். மன்னன் இதற்கு மறுமொழி ஏதும் கூறவில்லை. மன்னன் தனது ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதாக நினைத்துக் கொண்டு வசிட்டர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஆனால் இந்திரனது யாகத்தை நடத்திக் கொடுத்துவிட்டு வசிட்டர் திரும்பிவந்தபோது யாகம் நடத்துவதற்கு கெளதமரையும் (இவரும் வசிட்டரைப் போன்ற ஒரு பிராமண ரிஷிதான்) மற்றவர்களையும் அமர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த சீற்றமடைந்தார்; மன்னன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் தனது உடல் வடிவத்தை இழக்கும்படி சாபமிட்டார். நிமி விழித்தெழுந்து, முன்னெச்சரிக்கை ஏதுமின்றித் தான் சபிக்கப்பட்டதை அறிந்து, மிகுந்த சீற்றமடைந்தவனாய் தானும் வசிட்டருக்கு ஒரு சாபம் தந்துவிட்டு, இறந்துபோனான்.

அவனது உடல் நறுமணமூட்டிப் பேணிவைக்கப்பட்டது. அவன் தொடங்கிய யாகம் முடிவடையும் தருவாயில் இருந்தபோது, அர்ச்சகர்களின் தலையீட்டின் பேரில், நிமியை உயிர்ப்பிக்க தெய்வங்கள் சித்தமாக இருந்தனர். ஆனால் நிமி இதற்கு மறுத்துவிட்டான்; எனினும் அவனது வேண்டுகோளின் பேரில், எல்லா உயிர்ராசிகளின் கண்களில் அவனை இடம்பெறச் செய்துவிட்டனர். இதன் விளைவாகத்தான் கண்கள் எப்போதும் மூடிமூடித் திறந்தவாறு உள்ளன ( நிமிஷ என்றால் ‘கண்சிமிட்டும் நேரம்’ என்று பொருள். (முய்ரால் மேற்கோள் காட்டப்பட்டது, தொகுதி I, பக்.316) )

மேலே கண்ட மோதல்கள் பற்றிய விவரங்களை மனுவும் தமது ஸ்மிருதியில் குறிப்பிட்டிருக்கின்றார்: (மாக்ஸ்முல்லரின் கீழைநாட்டுப் புனித நூல்கள், தொகுதி XXV, பக்கம்.222)

தன்னடக்கம் இல்லாத காரணத்தால் பல மன்னர்கள் தங்கள் உடைமைகளோடு அழிந்தனர்; கானகத்தில் ஒதுங்கிவாழும் துறவிகள் கூட தன்னடக்கத்தின் மூலம் மாபெரும் ராஜ்யங்களைப் பெற்றிருக்கின்றனர். அடக்கம் இல்லாததால் வேணன் அழிந்தான்; மன்னன் நகுஷனுக்கும், பிஜவாணனது புதல்வன் சுதாசனுக்கும், சுமுகனுக்கும், நிமிக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.

இந்த சம்பவங்களில் சூத்திரர்களின் நிலை குறித்து எந்த அளவுக்கு தெரிந்துகொள்ளப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு பூரணமாகத் தெரிந்து கொள்ளப்படாதது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்த மோதல் பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையேயான ஒரு மோதல் என்பதை எவரும் உணர்ந்துகொள்ளாததே இதற்கு காரணம். சுதாசன் ஒரு சூத்திரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மற்றவர்கள் சூத்திரர்கள் என்று வருணிக்கப்படாவிட்டாலும் , இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறப்பட்டிருகின்றனர். சுதாசனும் இக்ஷ்வாகு மரபில் வந்தவன் என்றே விவரிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்று கூறினால் அது வலிந்து கூறப்பட்டதாகாது. மனுவுக்குக் கூட இத்தகைய கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மோதல்களை எல்லாம் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களாகவே அவர் காண்கிறார்.

சுதாசன் ஒரு சூத்திரன் என்பதை உணர்கொள்ள டாக்டர் முய்ர் தவறிவிட்டார். இதனால் இந்த மோதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருபுறம் பிராமணர்களும் இன்னொருபுறம் சத்திரியர்களும் என்று படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வகையில், இந்த மோதல்கள் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையேயான மோதல்கள் என்பது உண்மையே; ஏனென்றால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு பிரிவினர்களாக இருந்தவர்களே ஆவர். எனினும் இவற்றை பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையேயான மோதல்கள் என விவரித்திருந்தால் இன்னும் அதிக விளக்கமாக இருந்திருக்கும்.

இந்தத் தப்பபிப்ராயம் உருவாகி, இந்தோ-ஆரிய சமுதாய வரலாற்றின் ஒரு மிக முக்கியமான பகுதியை அது தொடர்ந்து மூடி மறைத்து வந்திருக்கிறது. இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கும் பொருட்டே பிராமணர்களுக்கு எதிராக சத்திரியர்கள்என்னும் தலைப்பு கொடுப்பதற்கு பதிலாக பிராமணர்களுக்கு எதிராக சூத்திரர்கள்என்னும் தலைப்பினை இந்த இயலுக்குத் தந்துள்ளோம். பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையேயான மோதல் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சூத்திரர்கள் இரண்டாவது வருணத்திலிருந்து நான்காவது வருணமாக ஏன் இறக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். 

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 9)

Pin It