7. தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1 கோடி 26 லட்சம் என்று சென்சஸ் கமிஷனரின் மதிப்பீடு கூறுகிறது. மேலும் கறாராகக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், தீண்டத்தகாதவர்களை மட்டுமே சேர்த்திருக்கும் “எ.பட்டியல்” ஏற்றுக் கொள்ளப்பட்டாலும். தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு கோடி 10 லட்சத்தைவிட சற்று அதிகமாயிருக்கும். இந்த எண்ணிக்கையானது திரு. பிளன்ட் அளித்த மதிப்பீட்டிற்கு ஏறத்தாழ சரியாக இருக்கிறது.

ambedkar 2168. ஐக்கிய மாநில அரசாங்கம் இரண்டு மதிப்பீடுகளை அளித்திருக்கிறது. முதல் அறிக்கையில் அது 67,73,814 என்ற எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறது. தொட்டால் தீட்டு ஏற்படும் என்ற விளக்கத்திற்குள் வரக்கூடிய ஜாதிகளின் மக்கட்தொகை 4,59,000 என்று மாநிலக்கமிட்டி அளித்த புள்ளி விவரத்தை தன்னுடைய இறுதி அறிக்கையில் அது ஏற்றுக் கொண்டிருக் கிறது. அதனுடைய முதல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் 67,73,814 என்ற மதிப்பீடு, ஐக்கிய மாநிலங்களிலுள்ள தீண்டத்தகாத மக்களைப் பற்றிய மதிப்பீடு அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில், ஐக்கிய மாநில அரசாங்கம் திரு. பிளன்ட் தன்னுடைய அறிக்கையில் தந்திருக்கும் எண்ணிக்கையை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. ஐக்கிய மாநில அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கும் 67,73,814 என்ற மதிப்பீடு அதனுடைய அபிப்பிராயப்படி, அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென அங்கீரிக்கப்பட்ட மக்களைப் பற்றிய மதிப்பீடு ஆகும். இந்த வழிமுறையின் தகுதிகளை நான் கீழே விவாதித்திருக்கிறேன். ஐக்கிய மாநில அரசாங்கம் தந்திருக்கும் இந்த மதிப்பீடு, மொத்தமுள்ள தீண்டத்தகாத மக்களைப் பற்றிய மதிப்பீடு அல்ல என்று மட்டும் நான் இங்கே திரும்பக் கூற விரும்புகிறேன்.

ஐக்கிய மாநில அரசாங்கம் தனது இறுதி அறிக்கையில் அளித்திருக்கும் மதிப்பீட்டை, அது சைமன் கமிஷனுக்கு அளித்திருக்கும் மதிப்பீட்டுடன் ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஐக்கிய மாநில அரசாங்கம் சைமன் கமிஷனுக்கு அளித்த குறிப்பாணையின் இறுதியில் சேர்க்கப்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பற்றிய குறிப்பு அச்சடிக்கப்பட்டிருந்தது. அது இவ்விதம் கூறியது: “தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் ஜாதிகளின் பட்டியல், 1901-ஆம் வருட ஜ.மா.சென்சஸ் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் ஒவ்வொரு ஜாதியின் மக்கட்தொகை குறிக்கப்பட்டிருக்கிறது…. உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர், தீண்டத்தகாதவரிடமிருந்து உணவையோ அல்லது தண்ணீரையோ பெற்றுக் கொள்ள மாட்டார். தீண்டத்தகாதவரை அவர் தொட்டு விட்டாலோ அல்லது நெருக்கமாகக் கலந்து விட்டாலோ தான் உணவு அருந்துவதற்கு முன்னரோ, அல்லது ஏனைய மேல் ஜாதியினருடன் கலந்து கொள்வதற்கு முன்னரோ குளிக்க வேண்டும்.”

குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்ட 1928 மே 16-ஆம் தேதியன்று, தொட்டால் தீட்டு ஏற்பட்டு விடும் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களின் எண்ணிக்கை ஒரு கோடி 30 லட்சம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நம்முடைய கமிட்டியின் தலைவர் அளித்த விளக்கம், ஐக்கிய மாநிலத்திலிருந்து கிடைக்க விளக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கவில்லை என்பது தெளிவு. மொத்தம் ஒரு கோடி 30 லட்சம் என்று கணக்கிடுவதற்கு 1928-ல் அரசாங்கம் இதைத்தான் பின்பற்றியுள்ளது. எனவே, இந்த இரண்டு மதிப்பீடுகளுக்கு இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை விளக்கிக் கூறும்படி ஐக்கிய மாநில அரசாங்கத்தைத் கேட்டுக் கொள்கிறேன்.

ஐக்கிய மாநிலங்களில் உள்ள தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கையைப் பற்றி, ஐக்கிய மாநில அரசாங்கம் அளித்திருக்கும் மதிப்பீடுகளில் உள்ள மாற்றங்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் பற்றிய முறை சம்பந்தமாக ஐக்கிய மாநில அரசாங்கத்தின் கண்ணோட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரே மாதிரி உள்ளன என்று விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை. 1930 ஆகஸ்டு 23-ஆம் தேதியன்று- சைமன் கமிஷனுக்கு அனுப்பிய தம்முடைய அறிக்கையில், ஐக்கிய மாநில அரசாங்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியை அளிக்க வேண்டும் என்று உறுதியாக ஆதரவு தெரிவித்தது. நம்முடைய கமிட்டிக்கு அளித்த தனது முதல் அறிக்கையில், ஒரு குழுப்பட்டியலிலிருந்து உறுப்பினர்களை அரசாங்கம் நியமனம் செய்ய வேண்டுமென்று கூறியது; ஆனால், அது தனது இறுதி அறிக்கையில், இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் என்ற இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் கருத்துக்களில் இத்தகைய விசித்திரமான ஊசலாட்டங்கள் ஏற்படுவது தாழ்த்தப்பட்ட மக்களின் இலட்சியங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

9. ஐக்கிய மாநிலங்களின், மாநில வாக்குரிமைக் கமிட்டி அளித்திருக்கும் மதிப்பீடு சம்பந்தமாக, கீழ்க்காணும் உண்மைகளின் பால் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்:

அ) தாழ்த்தப்பட்ட மக்களின், அதாவது தொட்டால் தீட்டு எற்படும் என்று கருதப்படும் மக்களின் எண்ணிக்கை 1928-ல் சுமார் ஒரு கோடி 15 லட்சங்களுக்கும் ஒரு கோடி  30 லட்சங்களுக்குமிடையே இருந்ததாக சென்சஸ் கமிஷனர் திரு. பிளன்ட், மற்றும் அரசாங்கம், அளித்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன. என்வே, வியக்கத்தக்க அளவுக்கு குறைந்த மதிப்பீட்டைக் கமிட்டி அளித்துள்ளதை அதுதான் நியாயப்படுத்த வேண்டும்.

ஆ) கமிட்டியின் இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும், கமிட்டியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் அதன் கருத்தை ஏற்றுக் கொண்டதாகக் கமிட்டி கூறுகிறது. அதைப்பற்றி எனக்கு ஐயப்பாடு உள்ளது. எப்படியிருந்தாலும். இந்த விஷயத்தைப் பற்றி பாபு ராம் சரண் தெரிவித்த அபிப்பிராயத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். பொருளாதார ரீதியல் ஏழை, கல்வி விஷயத்தில் பின்தங்கிய ஜாதி என்ற அர்த்தத்தில்தான் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; சரியானபடி பார்த்தால், அவர் தீண்டத்தகாத ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல.

இ) தீண்டத்தகாதவர்களை நிர்ணயிப்பதற்காக ஆலயப் பிரவேசம், தொட்டால் தீட்டு என்ற இரண்டு சோதனைகளை இந்திய வாக்குரிமைக் கமிட்டி கடைப்பிடித்துள்ளது. ஐக்கிய  மாநிலங்களின் மாநில வாக்குரிமை கமிட்டி, தொட்டால்  தீட்டு என்ற ஒரே சோதனையைத்தான் ஆதாரமாகக்       கடைப்பிடித்திருக்கிறது. அதுவும்கூட, அதனுடைய நேருண்மையான அர்த்தத்தில்; கருத்தியலான பொருளில் அல்ல.

 ஈ) தீண்டாமையைப் பற்றித் தம் சொந்தப் பொறுப்பில் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தைக் கடைப்பிடிக்கையில், மாநில வாக்குரிமைக் கமிட்டி, “ஐக்கிய மாநிலங்களில் இன்று நடைமுறையில் இருப்பதைப் போன்ற” என்ற சொற்றொடரின் பால் தனது கவனத்தைச் செலுத்தவில்லை போலத் தோன்றுகிறது.

10. தாழ்த்தப்பட்ட வகுப்புக்களின் மக்கட் தொகையை மதிப்பீடு செய்வதில், திரு. பிளன்ட்டும், ஐக்கிய மாநில அரசாங்கமும் கடைப்பிடித்த முறை சம்பந்தமாக மிகவும் முக்கியமான மற்றொரு பிரச்சினை எழுகிறது. தன்னால் அங்கீரிக்கப்பட்ட இரண்டு சோதனைகளின் கீழ்வருபவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட வேண்டும் என்றும், விசேஷப் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்கு இதை வாக்குரிமைக் கமிட்டி தீர்மானிக்க வேண்டுமென்று இந்திய வாக்குரிமைக் கமிட்டி தீர்மானித்துள்ளது. இந்தியாவில் இன்றுள்ள நிலைமையில், எல்லா தாழ்த்தப்பட்ட ஜாதிகளும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், எல்லா தீண்டத்தகாதவர்களையும் - அவர்களுடைய பொருளாதார மற்றும் கல்வித் தகுதிகள் எவ்வாறு இருந்த போதிலும் எல்லோரையும்- சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், தன்னுடைய ஆய்வின் மூலம் இந்திய வாக்குரிமைக் கமிட்டி முடிவு செய்தது. ஆனால், “தீண்டத்தகாதவர்களுக்கும்,” “தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும்" இடையே திரு பிளன்ட்டும், ஐக்கிய மாநில அரசாங்கத்தினரும் ஒரு வேறுபாடு காண முயலுகின்றனர்.

எல்லாத் தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும், எல்லா தீண்டத்தகாதவர்களும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது இன்றுள்ள நடைமுறைக்கும், இந்திய வாக்குரிமைக் கமிட்டியின் முடிவுகளுக்கும் முற்றிலும் நேர் மாறானவை. இது வெறும் பெயர் பிரச்சினை மட்டுமல்ல. இது மாபெரும் பின்விளைவுகளைக் கொண்டது. பிரதிநிதித்துவத்தின் அளவைக்கூட இது பாதிக்கும். ஐக்கிய மாநில அரசாங்கத்தினரும், திரு. பிளன்ட்டும், பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக எல்லாத் தீண்டத்தகாதவர்களையும் தம்முடைய கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்க முடியக் கூடிய தீண்டத்தகாதவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீண்டாமையை நிர்ணயிப்பதற்காகத் தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இரண்டு சோதனைகளைப் பிரயோகிப்பதன் மூலம் தீண்டத்தகாத ஜாதியினர் என்று முடிவு செய்யப்பட்டு விட்டால், இவ்விதம் தீர்மானிக்கப்பட்ட தீண்டத்தகாதவர்கள் அனைவரும் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், பணக்காரர்கள், ஏழைகள், முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள், கல்வி கற்றவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள் என்று மேலும் எத்தகைய பாகுபாடுகளும் காட்டக்கூடாதென்றும் இந்திய வாக்குரிமைக் கமிட்டி அறிவித்து, அதனடிப்படையில் செயல்படுகிறது. இதுதான் சரியான முறை என்று நான் கருதுகிறேன்.

 திரு. பிளன்ட்டும் ஐக்கிய மாநில அரசாங்கமும் கடைப்பிடித்த முறையை நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை.

3.பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட ஜாதிகள்

 11. 1931 ஆம் வருட சென்சஸில், தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கட் தொகை சம்பந்தமாக, இரண்டு உண்மைகளின்பால் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்:

 1) தொட்டால் தீட்டு ஏற்படும் என்று கருதப்படும் மக்களின் எண்ணிக்கை 1911-ஆம் வருட சென்சஸில் 28 லட்சம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 1931-ஆம் வருட  சென்சஸில், தீண்டத்தகாத மக்களின் எண்ணிக்கை 13 லட்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

   2) தொட்டால் தீட்டு ஏற்படும் என்று கருதப்படும் 23 ஜாதிகளின் பட்டியல் 1911-ஆம் வருட சென்சஸில் தரப்பட்டுள்ளது. ஆனால் 1931-ஆம் வருட சென்சஸ், பஞ்சாபில் தீண்டத்தாத மக்கள் என்று கருதப்படும் ஜாதிகளை மட்டுமே குறிப்பிடுகிறது.

 12. தீண்டத்தகாத மக்களின் மொத்த எண்ணிக்கையும், ஜாதிகளின் பட்டியலும் 1911 க்கும் 1931-க்குமிடையே ஏன் இவ்வளவு சுருங்கிப்போய் விட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பஞ்சாபில், தீண்டத்தகாத மக்களிடையே, கடந்த சில ஆண்டுகளாக, அத்-தர்ம் என்ற இயக்கம் பரவி வலுவடைந்து வந்துள்ளது. ஹிந்து சமுதாயத்திடமிருந்து புரிந்து, அத்-தர்மிகள் என்ற புதிய பெயரில் தங்களுக்கென ஒரு தனி சமுதாயத்தை அமைத்துக் கொள்வதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமாகும். 1931-ஆம் வருட சென்சஸின்போது, தங்களை ஹிந்துக்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, அத்-தர்மிகள் என்று தீண்டத்தகாதவர்கள் கூறிக்கொள்ளும் அளவுக்கு இந்த இயக்கம் வலுப் பெற்றிருந்தது. அரசாங்கம் இந்த உணர்வை மதித்து நடந்தது; அத்-தர்மிகள் என்ற புதிய ரகத்தைப் பதிவு செய்து கொள்ளும்படி பஞ்சாபின் சென்சஸ் கண்காணிப்பாளரை அது பணித்தது.

இதன் விளைவாக பஞ்சாபில் சில இடங்களில் ஹிந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமிடையே கலகங்கள் ஏற்பட்டன. இதனால், சில இடங்களில் தீண்டத்தகாதவர்கள், தங்கள் ஜாதிகளைக் குறிப்பிடாமல், அத்-தர்மிகள் என்று மட்டுமே சென்சஸ் அதிகாரிகளிடம் பதிவு செய்தனர். இதர இடங்களில், அவர்கள் அவ்விதம் செய்யவிடாமல் தடுக்கப்பட்டதால், தங்களை பழைய ஜாதிப் பெயர்களிலேயே ஹிந்துக்கள் என்று பதிவு செய்து கொண்டனர். தீண்டத்தகாதவர்களைப் பற்றிய கணக்கெடுப்பில் சிருஷ்டிக்கப்பட்ட கஷ்டங்களை எடுத்துக் காட்டவே இந்த உண்மைகளை நான் குறிப்பிடுகிறேன். இதை பஞ்சாப் அரசாங்கமும் ஒப்புக் கொண்டிருக்கிறது. பஞ்சாபிலுள்ள தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கையும், தீண்டத்தகாத ஜாதிகளின் பட்டியலும் சுருங்கிப் போனதற்கு இது காரணமாக இருக்கக் கூடும். எனவே, இந்த விஷயத்தை மிகவும் கவனமுடன் ஆராய வேண்டியது அவசியம்.

4. வங்காளத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதிகள்

13. வங்காளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட ஜாதிகளைப் பொறுத்த மட்டில் ஒரு முக்கியமான சான்று உள்ளது. அதன்பால் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். 1911-ஆம் வருட வங்காள சென்சஸில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் முற்றிலும் சரியானது என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. வங்காளத்தில், தீண்டத்தகாத ஜாதிகள் என்று மரபார்ந்த முறையில் கருதப்பட்டு வந்த ஜாதிகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 1890-ஆம் வருட 4-ஆம் சட்டத்தின் 7-ஆம் பிரிவை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். (1806-ஆம் வருட 4 மற்றும் 5-ஆம் எண் சட்டங்களை 1809-ஆம் வருடச் சட்டம் தள்ளுபடி செய்தது. ஜகன்னாதர் ஆலயத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களையும், கோவில் விவகாரங்களை நிர்வகித்து மேற்பார்வை செய்வதையும் இந்தச் சட்ட விதிகள் திருத்தியமைத்தன. 1809 ஏப்ரல் 28-ஆம் தேதியன்று கவர்னர் ஜெனரலின் கவுன்சில் இந்தச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார்.) 1809-ஆம் வருடச் சட்டம், பூரியிலுள்ள ஜெகன்னாதர் ஆலயத்திற்குள் கீழ்க்காணும் ஜாதியினர் பிரவேசிக்கக் கூடாதென்று தடை செய்கிறது: 1) லோலி அல்லது காஷி, (2) கலால் அல்லது சுன்ரி, (3) மச்சுவா, (4) நாம சூத்ரா அல்லது சண்டாளர், (5) குஸ்சி, (6) கஜீர், (7)பாக்தி, (8) ஜோகி அல்லது நுர்பாஃப், (9) கஹர்-பெளரி மற்றும் துலியா, (10) ராஜ் பன்சி, (11) பிராலி, (12) சமார், (13) தோம், (14) பான், (15) தியார், (16) புயன்னாலி, (17)ஹரி.

1911-ஆம் வருட சென்சஸ் பட்டியலுடன் இந்தக் கணக்கு ஒத்துப் போகிறது; எனவே இது சரியானது என்று எடுத்துக் கொள்ளலாம். கடந்த 100 ஆண்டுகளில், வங்காளத்தில், தீண்டத்தகாதவர்களின் சமூக அந்தஸ்தில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

ஐக்கிய மாநிலங்கள், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் வித்தியாசங்கள் உள்ளன. இது சம்பந்தமாக ஒரு விஷயத்தின்பால் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தீண்டத்தகாதவர் என்று கருதப்படும் மக்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு, இந்திய வாக்குரிமைக் கமிட்டி இரண்டு திட்டவட்டமான சோதனைகளக் கடைப்பிடித்தது. ஆனால், மாநில அரசாங்கங்களும், மாநில வாக்குரிமைக் கமிட்டிகளும் ஒரே ஒரு சோதனையை மட்டுமே, அதரவது, தொட்டால் தீட்டு என்ற சோதனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டுள்ளன.

5. பெயரிடும் முறை

 14. அரசியல் சாசனத்தில் பிரரேபிக்கப்பட்ட மாற்றங்களின் விளைவாக வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்படுகிறது. எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் பொருத்தமான, சரியான பெயரைச் சூட்டும் பிரச்சினையைப் பரிசீலிப்பதற்கு இது மிகவும் நல்ல சந்தர்ப்பமாகும். எனவே, இந்தப் பிரச்சினையின் பால் எனது கருத்தை வெளியிட விரும்புகிறேன். “தாழ்த்தப்பட்ட வகுப்பு” என்று தற்சமயம் அழைக்கப்பட்டுவரும் சமுதாயங்கள், அவ்விதம் தாங்கள் வர்ணிக்கப்படுவதற்குக் கணிசமான ஆட்சேபம் தெரியவிக்கின்றன. கமிட்டியிடம் சாட்சியம் கூற வந்த பலர் இந்த ஆட்சேப உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், “தாழ்த்தப்பட்ட வகுப்பு’ என்ற இந்தச் சொல், சென்சஸில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. ஏனெனில், தீண்டத்தகாதவர்கள் என்று கறாராகக் கூறப்பட முடியாதவர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.

இரண்டாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்ற சொல் தாழ்வுற்ற, நிராதரவான சமுதாயம் என்ற கருத்தை அளிக்கிறது. ஆனால், உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்களில் ஏராளமான பேர் பணக்காரர்களாகவும், கல்விமானகளாகவும் திகழ்கின்றனர். சமுதாயம் முழுவதும் தன்னுடைய தேவைகளின் பால் விழிப்புணர்வு கொண்டிருக்கிறது; இந்திய சமுதாயத்தில் ஒரு கெளரவமான அந்தஸ்தை அடைவதற்காக ஆர்வமுடன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது; அதைச் சாதிப்பதற்காக பிரம்மாண்டமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த எல்லாக் காரணங்களையும் கொண்டு பார்த்தால், “தாழ்த்தப்பட்ட வகுப்பு” என்ற சொல் பொருத்தமற்றது, தகுதியற்றது. அஸ்ஸாமைச் சேர்ந்த சென்சஸ் கண்காணிப்பாளரான திரு.முல்லன், தீண்டத்தகாதவர்களைக் குறிப்பிடுவதற்காக, “புற ஜாதிகள்” என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தகைய பெயர் பல அனுகூலங்களைக் கொண்டிடுக்கிறது. தீண்டத்தகாதவர்களின் நிலைமையை இது மிகவும் துல்லியமாக விவரிக்கிறது.

தீண்டத்தகாதவர்கள் ஹிந்து சமயத்தில் இருக்கிறார்கள், ஆனால், ஹிந்து சமுதாயத்திற்கு வெளியில் உள்ளனர்; பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தாழ்ந்த நிலையில் உள்ள, ஆனால் ஹிந்து சமயம் மற்றும் ஹிந்து சமுதாயத்திற்கு உள்ளே இருக்குக் கூடிய ஹிந்துக்களிடமிருந்து தீண்டத்தகாதவார்களை இது வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்தச் சொல்லுக்கு வேறு இரண்டு அனுகூலங்களும் உள்ளன. தாழ்த்தப்பட்ட வகுப்பு என்ற தெளிவில்லாத சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் எல்லாக் குழப்பங்களையும் இது தவிர்க்கிறது; அதேசமயம், இந்தச் சொல் வெறுப்பூட்டுவதாகவும் இல்லை. இந்த விஷயத்தில், பரிந்துரை செய்வதற்குத் தனக்குத் தகுதி இருப்பதாக, எங்களுடைய கமிட்டி உணரவில்லை. ஆனால், இதைவிட நல்ல பெயர் கிடைக்கும் வரை தீண்டத்தகாத ஜாதிகள் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் என்பதற்கு பதிலாக, இனிமேல் ‘புற ஜாதிகள்’ அல்லது ‘ஒதுக்கப்பட்ட ஜாதிகள்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதி என்ற முறையில் அறிவிப்பதற்கு நான் சற்றும் தயங்கவில்லை.

6. தனி ஒதுக்கீடுகள்

15. இந்தக் குறிப்பை முடிப்பதற்கு முன்னர், கமிட்டியிலிருக்கும் எனது முஸ்லீம் சகாக்கள் வெளியிட்ட அதே கருத்தை நானும் வெளியிட விரும்புகிறேன். அதாவது, தொழிலாளர்கள், பெண்கள், மற்றும் இது போன்ற விசேஷ நலன்களுக்காக இடங்கள் ஒதுக்கப்படுவதானது, வட்டமேஜை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சிறுபான்மையினர் ஒப்பந்தத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பாத்தியதை கொண்டாடியிருக்கும் இடங்களின் வீதாசாரத்தைப் பாதிக்கக் கூடாது.

பி.ஆர்.அம்பேத்கர்

1,மே, 1932

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 4)

Pin It