வன்கொடுமை வழக்குகளின் ஒவ்வொரு கட்டத்திலும் - புகார் பதிவு செய்வதிலிருந்து தீர்ப்பு,மேல்முறையீடு செய்வது வரை - ஏற்படும், ஏற்படுத்தப்படும் இடையூறுகளை சட்டத்தின் துணை கொண்டு கடக்க வழிகாட்டியாக, ஒரு நடைமுறைச் சித்திரத்தை வைத்து சில சட்ட அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் எண்ணினோம். அதன் விளைவே இக்கட்டுரைத் தொடர்

நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் இந்திய சமூகத்தில் சமத்துவம் நிலவுகிறதா என்று சற்றே ஆய்வோமானால், பெரும் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினராக உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர்.

இம்மக்களின் துயர் துடைக்க அரசமைப்புச் சட்டம் தொடங்கி பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையிலும் - சமூகத்தில் பெரிய அளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. மாறாக, புறக்கணிப்பும், வஞ்சகமும் புதுப்புது வழிகளில் மென்மேலும் நுட்பமாகி வருவதையே பார்க்கிறோம். .

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, துணைப்பிரதமர் பதவி உட்படப் பல்வேறு உயர்பதவிகள் வகித்த தேசியவாதியான பாபுஜெகஜீவன்ராம், பார்ப்பனியத்தின் கூடாரமான வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு சிலையைத் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்ததாலேயே அச்சிலைக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகக்கூறி, அத்தீட்டை நீக்க கங்கையிலிருந்து "புனித நீரை' கொண்டு வந்து அச்சிலை மீது ஊற்றிக் குளிப்பாட்டியது,இந்து சாதியத்தின் முழு உருவமான பார்ப்பனியம்.

இந்தியாவில் நாள்தோறும் தலித்துகளுக்கெதிராக அரங்கேறிவரும் எண்ணிலடங்கா வன்கொடுமைகளில், இவற்றின் பனிநுனியளவே வெளிச்சத்திற்கு வந்துள் ளது. நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறை அளவிலானவை, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில்கூட வெளிவருவதில்லை. ஊடகத்துறையில் தலித்துகள் கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூட முடியாத சிறுபான்மையினராக இருப்பதும், அப்படி உள்ளவர்களில் கூட மிகச் சிறுபான்மையினரே சமூக உணர்வுள்ளவர்களாக இருப்பதும்தான் இதற்கு காரணம் எனலாம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமை, இம்மக்களுக்குத் தற்போது ஓரளவேனும் கிடைத்துவருவது வன்கொடுமை குறித்த விழிப்புணர்வை மீட்டெழுப்பியுள்ளது. இதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 1955லிருந்து நடைமுறையில் இருந்துவரும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் – தீண்டாமைக் குற்றத்தை, மற்ற குற்றங்களைப் போல மற்றுமொரு குற்றமாகவே பார்த்தது. ஆனால், 1989 ஆம் ஆண்டின் சட்டம் மட்டுமே தீண்டாமையின் அடிப்படையில் இழைக்கப்படும் செயல்களை முதன்முறையாக வன்கொடுமைகள் என்ற தீவிரத்தன்மையுடன் அணுகியதால் சிறப்பு பெற்றது.

1955 ஆம் ஆண்டின் சட்டம் பொது இடங்களில், பொதுப் பயன்பாடுகளில் அனைவருக்கும் உள்ள உரிமையைப் போன்றே தீண்டத்தகாதவர் என்ற அடிப்படையில் - ஒரு குறிப்பிட்ட நபருக்கு அந்த உரிமை மறுக்கப்படுமேயானால், அதைக் குற்றம் என விளம்பியது. பொதுக் கிணறு, பொதுக்குழாய், பொது இடங்களில் பாகுபாடு என்ற அளவில் மட்டுமே அது இயங்கி வருகிறது.

இந்தியா என்பது கிராம சமூக வாழ்க்கை என்பதாலும், ஒவ்வொரு கிராமமும் "ஊர்' என்றும் "சேரி' என்றும் தனித்தனி வாழ்விடங்களாக அமைந்திருப்பதாலும், இயல்பாகவே ஒவ்வொரு சமூகப் "பொது' வாழ்விலிருந்தும் பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் விலகியே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில், 1955 ஆம் ஆண்டின் சட்டம் மிகமிக அரிதாகவே பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் தீண்டாமை மறைவதற்குப் பதிலாக, இச்சட்டம் வரையறுக்கும் தீண்டாமைக் குற்றம் நுண்ணிய முறையில் தவிர்க்கப்பட்டு விடுகிறது.

இதற்கு முற்றிலும் மாறுபட்டு, 1989 ஆம் ஆண்டின் சட்டம் ஒவ்வொரு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் "தனி நபர்' வாழ்க்கையில் அவர் சந்திக்க நேரிடும் குற்ற நிகழ்வுகளை வன்கொடுமைக் குற்றங்களாகப் பட்டியலிட்டு வரையறுத்துள்ளது. இது, இச்சட்டத்தின் உண்மை நிலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டின் பிரிவு 3 இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் உட்பிரிவில் பிரிவு 3(1) பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், ஒரு தனி நபர் மீது சாதியம் காரணமாக இழைக்கப்படும் பல்வேறு வன்கொடுமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவர் தேர்தலில் தன் விருப்பப்படி வாக்களிப்பதைத் தடுப்பது உட்பட, நுண்ணிய வன்கொடுமைகளும் முதன்முறையாக குற்றங்களாக்கப்பட்டுள்ளன. இவை தலித்துகளுக்கெதிராக சாதியத்தின் அடிப்படையில் நேரிடையாக இழைக்கப்படும் வன்கொடுமைகளாகும். இரண்டாம் உட்பிரிவு பிரிவு 3(2), இப்பிரிவினருக்கெதிராக இழைக்கப்படும் பிற சட்டங்களிலுள்ள (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றங்கள் பாதிக்கப்படும் நபர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் என்ற அடிப்படையில் நிகழ்த்தப்படுமானால், அவற்றையும் வன்கொடுமைகளாக வரையறுக்கிறது.

எனவேதான், இச்சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே ஆதிக்க சாதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதன் விளைவாக இச்சட்டமே திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மாநாடுகளில் இன்றுவரை முழக்கங்கள் எழுப்பப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவர்கள் எழுப்பும் முழக்கங்களில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்து சாதியத்தையே புரட்டிப் போட்டுவிட்டது என்பது போன்ற மாயை தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படுகிறது. மாநாடுகள் தவிர பல்வேறு விதமான போராட்டங்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது நிகழ்த்தப் பெறுகின்றன. இவற்றிலெல்லாம் முன்வைக்கப்படும் ஒரே வாதம், இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள் தாம் என்பதே!

இந்த வாதம் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானதாகும். இக்கோரிக்கையை முன்வைப்பவர்களும் இதை அறிந்தே இருக்கின்றனர். இருப்பினும், ஏன் இந்தப் பொய்ப்பிரச்சாரம்? இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஏற்பட்ட விழிப்புணர்வில் பல்வேறு வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. இவற்றில் மிக மிக குறைந்த வழக்குகளிலேயே வன்கொடுமை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மேலவளவு, திண்ணியம் போன்ற ஊடகங்களின் மூலம் பெருமளவு அறியப்பட்ட வழக்குகளில்கூட, நீதிமன்றங்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றங்களை – அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் நிகழ்த்தவில்லை என்று தீர்ப்பு கூறியிருப்பதைப் பார்க்கும் போது, இச்சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு கேலிக்கூத்தானது என்பது விளங்கும்.

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் வெளியிடும் ஆண்டறிக்கைகளில் நாள்தோறும் வன்கொடுமை விகிதங்கள் அதிகரித்து வருவதையும், அதே சமயம் வன்கொடுமை வழக்குகளின் தண்டனை விகிதம் அதிகளவிற்கு குறைந்து வருவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டிற்குப் பிந்திய தலித் இயக்கங்களின் விழிப்புணர்வு, வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால் – இது பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது. இத்தனை ஆயிரம் இயக்கங்கள், அமைப்புகள் இருக்கும் போதும் வன்கொடுமை வழக்குகளைக் கையாள்வதற்கான போதிய திட்டமோ, பயிற்சியோ, செயல்பாடோ இல்லாமலிருப்பது வியப்புக்குரியது.

வன்கொடுமைகளைப் பட்டியலிட்டு, அரசியல் அரங்குகளில் கைத்தட்டல்களையும் வாக்குகளையும் பெற்றுக் குவிப்போரும் – இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமலிருப்பது, வன்கொடுமைகளுக்குத் துணைபோவதாகவே அமைந்துள்ளது. ஊடகங்களின் மவுனமும் இந்தக் கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

மேல்தட்டு வகுப்பினருக்கு இயல்பாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட பெரிய அளவில் கவனத்தில் கொண்டு, அந்நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி ஊடகங்களில் விவாதித்து, அவர்களின் மனநிலையைப் பிரதிபலித்து வரும் ஊடகங்கள், திட்டமிட்ட வன்கொடுமை நிகழ்வுகளை மட்டும் – பெரும்பாலும் பதிவு செய்யாமலேயே புறக்கணிப்பதும், ஒரு சில நேர்வுகளில் மேலோட்டமாகப் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்வதும் நாம் கண்கூடாகக் காண்பதே.

ஜெசிகா லால் கொலை, டில்லி உப்ஹார் திரையரங்க விபத்து, பிரமோத் மகாஜன் கொலை போன்ற நிகழ்வுகளில் விசாரணை நீதிமன்றங்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தால் இது நன்கு விளங்கும். உள்ளூரில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, காஞ்சி சங்கராச்சாரி வழக்கு, குஷ்பு மீதான வழக்கு, ஓட்டல் முதலாளி ராஜகோபால் வழக்கு போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மேற்சொன்ன வழக்குகளில், ஊடகங்கள் பாதிக்கப்பட்டோருக்கு சார்பாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கெதிரான கருத்தாக்கங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்தன. மேற்கூறியவற்றிலிருந்து, நீதிமன்றங்களின் அணுகுமுறை நபருக்கு நபர் அவரவர்களின் பொருளாதார - ஊடகங்களின் பின்புலம், பலம் ஆகியவற்றை சார்ந்தே அமைகிறது என்பதையும் உணரலாம்.

இச்சூழலில் வன்கொடுமை வழக்குகள் பொய் வழக்குகள் என்று கூறப்படுவதõலேயே இச்சட்டம் நீக்கப்படவேண்டியதுதானா என்பதைப் பார்ப்போம். ஒரு பத்தாண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றமொன்றில் பாண்டியம்மாள் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்டார் என்றும் - அதற்கு அவர் கணவரும், கணவரின் உறவினர்களுமே காரணம் என்றும் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது "கொலை' செய்யப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தின் முன் வந்து, தான் கொலை செய்யப்படவில்லை என்றும், தகவல் சரியாகச் சொல்லாமல் வெளியூர் சென்றுவிட்ட தாகவும் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரினார்.

 முதலில் மறுத்த விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் பாண்டியம்மாளின் ஆளடையாளத்தை விசாரித்து உறுதி செய்து கொண்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. இது ஒரு பொய் வழக்கு என்று நிரூபணம் ஆன ஒரே காரணத்திற்காக – கொலையைக் குற்றம் என்று கூறி, அதை செய்தவர்களைத் தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவான 302அய்யே நீக்க வேண்டுமென்று எவரேனும் கூறினால் அதை ஏற்க முடியுமா? அதே போன்றது தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, பொய் வழக்குகள் வருகின்றன என்று கூறி நீக்கம் செய்யக் கோருவதுமாகும்.

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில், உண்மையாக நடைபெற்ற வன்கொடுமையையே புகாராகவும் வழக்காகவும் பதிவு செய்து நடத்த முடியாத நடைமுறைச் சூழலில், இது போன்ற கற்பனைக் கோரிக்கைகள் – சாதிய உள்நோக்கம் கொண்டவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாதிய மேலாதிக்கம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இத்தகைய கருத்துகளைப்பரப்பி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தன்னெழுச்சி பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் தலித் அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யும் அளவிலேயே நின்று விடுகின்றன. பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர் நடவடிக்கைகள் மூலம் வலுப்படுத்தி – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும், வன்கொடுமை செய்பவர்களுக்கு தக்க தண்டனையும் பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பதில்லை என்பதும் வேதனைக்குரியது.

அதைவிட வேதனைக்குரிய விஷயம், மேற்சொன்னவர்களுக்கு இதுகுறித்த பார்வையே இல்லை என்பதுதான். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் வன்கொடுமையாளருக்கு நயந்துபேசி பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ளச் சொல்லும் அவலத்தையும் – பல நேர்வுகளில் மேற்சொன்னவர்கள் ஈடுபடுவதும் நடைமுறையில் அரங்கேறியுள்ளன.

- காயங்கள் தொடரும்

Pin It