தளபதி ஒண்டிவீரனாரின் நினைவுநாள் விழா கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்டு – 20 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு பெரும் திரளாக அருந்ததியர் அமைப்புகளும், மக்களும் கலந்து கொண்டு தங்களது வீரவணக்க அஞ்சலியை செலுத்துகின்றனர்.

                தளபதி ஒண்டிவீரனார், பிறந்த ஊரான நெற்கட்டும் செவ்வயல் பச்சேரி பகுதியில் அவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக பீடம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அந்த பீடத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்பு பாளையங்கோட்டையில் அவருக்கென எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க அஞ்சலியை எழுச்சியோடு செலுத்தி வருகின்றனர் அருந்ததிய மக்கள்.

                முதலில் இந்த தளபதி ஒண்டிவீரன் என்பவர் யார்? என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

                கி.பி.1857ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் சிப்பாய் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்று தம் உயிரையும் துச்சமென கருதி தியாகம் செய்த வீரம் செரிந்த வரலாறு உள்ளது என்பது இன்றும் பெரும்பாலானோர் அறியாத ஒன்று!

                நெல்லை மாவட்டத்தில், சங்கரன்கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வயல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுதந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி. அக்காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக அப்போது வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவப் பிரிவின் தளபதி கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரன் தலைமையில் ஆற்காடு நவாபின் தமையன் மாபூஸ்கான், யூசுப்கான் மற்றும் இரண்டாயிரம் வீரர்களுடன் பெரும்படை ஒன்று நெல்லை அதன் சுற்றுவட்டார பாளையங்களை 1755ஆம் ஆண்டு தாக்க புறப்பட்டது.

நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தின் வீரர்களான பூலித்தேவனும், ஒண்டிவீரனும் அப்படையை வாள்முனையில் எதிர்கொண்டு விரட்டி அடித்தார்கள். ஒண்டிவீரன் அறிவும், ஆற்றலும் கொண்டு பல இடங்களில் நடந்த போர்களிலெல்லாம் கும்பினியர்களை எதிர்த்துப் போரிட்டு தனது வீரத்தை நிரூபித்தவர்.

நெற்கட்டும் செவ்வயல் பகுதியின் திசைக்காவல் புரிந்தவர் பூலித்தேவரின் முன்னோர்கள். அருந்ததிய மக்களின் தலைவனாக நெற்கட்டும் செவ்வயலைத் தலைமையிடமாகக் கொண்டு பூலித்தேவர் பாளையக்காரராக ஆட்சி செய்தார். கும்பினியர்களுக்கு வரி தர முடியாது என்று பூலித்தேவர் கூறவே நெற்கட்டும் செவ்வயல் மீது கும்பினியர் போர் தொடுக்கத் திட்டமிட்டனர்.

                பூலித்தேவர் தனது படை வலிமையை நிரூபிக்க கும்பினியரிடமுள்ள நகரா (போர் முழக்கமிடும் கருவி) வை முழங்கியபடி பட்டத்து வாளையும், பட்டத்துக் குதிரையையும் கடத்தத் திட்டமிட்டார். பூலித்தேவரின் தளபதியாக இருந்தவர் தான் ஒண்டிவீரன் (இயற்பெயர் வீரன்). வீரன் தனியாகச் சென்று பட்டத்துக் குதிரையையும், வாளையும் கொண்டு வருவதாகப் பூலித்தேவரிடம் வீரமுடன் கூறினார். வீரன் செருப்புத் தைக்கும் தொழிலாளி போல வேடமிட்டுக் கொண்டு எதிரிப்படைகளிடம் வேலை செய்யும் போதே பட்டத்துக்குதிரை, பட்டத்துவாள் இருக்கும் இடங்களைக் கண்டு கொண்டார். ஒரு நாள் இரவு அனைவரும் தூங்கிய பின் பட்டத்து வாளை எடுத்துக் கொண்டு பட்டத்துக்குதிரை முளைக்கம்பில் கட்டியிருந்த கயிறை மெதுவாக அவிழ்க்கும் போது குதிரை பலமாகக் கனைத்தது. படைவீரர்களிடம் பிடிபட்டுவிடக்கூடாது என எண்ணிய வீரன், விரைவாகக் குதிரைக்குப் புல்போடும் காடிக்குள் இறங்கி படுத்துக் கொண்டார்.

                ஓடிவந்த படைவீரர்கள் பட்டத்து குதிரை அவிழ்க்கப்பட்டு நிற்பதைக் கண்டு அதை வேறு இடத்தில் (வீரன் படுத்திருந்த இடத்தில்) கட்ட எண்ணி முளைக்கம்பை வீரன் கைமேலேயே அறைந்து கயிற்றைக் கட்டினார். தனது இலட்சியத்தை மனதில் கொண்டு பல்லைக் கடித்தபடி வீரமுடன் வலியைத் தாங்கிக் கொண்டார். வேதனையிலும் மகிழ்ச்சியோடு தான் எடுத்துவந்த பட்டத்துவாளை எடுத்து முளைக்கம்பில் சிக்கிக் கொண்ட தன் கையை ஓங்கி ஒரே வெட்டாய் வெட்டினார். இரத்தம் ஆறாக ஓட வீரமுடன் எழுந்து பட்டத்துக் குதிரையை அவிழ்த்து மெதுவாக அதை நடத்திச் சென்றார். பீரங்கிகள் இருக்கும் இடத்திற்கு வந்த வீரன் அப்பீரங்கிகளைக் கும்பினி படை வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்தார்.

                பின் நகரா இருக்குமிடத்திற்கு சென்று நகராவை முழக்கமிட்டு விட்டு பட்டத்துக் குதிரையில் ஏறி நெற்கட்டும் செவ்வயல் நோக்கி புயலெனப் பறந்து சென்றார். கும்பினிப் படைவீரர்கள் பூலித்தேவர் தான் இரவில் போர்ப் பறையை முழங்கியபடி தாக்க வருகிறார் என்று தூக்கக் கலக்கத்தில் தவறுதலாக எண்ணி, பீரங்கியால் சுட அவர்களது கூடாரமே தகர்க்கப்பட்டு பெரிய இழப்பு ஏற்பட்டது. பட்டத்துக்குதிரையுடனும், பட்டத்துவாளுடனும் வீரன் நெற்கட்டும் செவ்வயலை அடைந்து பூலித்தேவரிடம் அவற்றை ஒப்படைத்தபோது தமிழர்களின் மானமே காக்கப்பட்டது என்று பெருமிதம் அடைந்தார் பூலித்தேவர். வீரன் இவ்வாறு தனியாக, ஒண்டியாகச் சென்று வெள்ளையர்களை வெற்றி கண்டு வந்ததால் அவரை ஒண்டிவீரன் என்று மக்கள் அழைத்தனர்.

                நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தில் ஆட்சி செய்து பூலித்தேவர் கி.பி.1767ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை  அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவரின் குடும்பத்தாரை பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன்.

                சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர் கொண்டு தங்களையே தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதே போல ஒண்டிவீரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரின் வீரவணக்க நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்; சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தன அருந்ததியர் அமைப்புகள். இதன் அடிப்படையில் கடந்த தி.மு.க ஆட்சியில் தளபதி ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினர். இந்த மணிமண்டபத்தை தளபதி ஒண்டிவீரன் பிறந்த ஊரான  நெற்கட்டும் செவ்வயல்  பச்சேரியில் கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஊருக்கு வெளியே நகர்ப்புறங்களில் மையமான ஒரு இடத்தில் கட்ட வேண்டும் என ஒரு சிலரும் கோரிக்கைகள் வைத்தனர். இதன் அடிப்படையில் தான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள கல்குவாரி புறம்போக்கு பகுதியில் 2567 சதுர மீட்டர் நிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரனுக்கு நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் வந்த பின்பு அ.தி.மு.க அரசு அதை கண்டு கொள்ளாதது போலவே இருந்தது.

ஆனால் அருந்ததியர் அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் வாயிலாக  அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அதன் பின்பு அரசு செவிமடுத்தது. அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் எழுப்ப ஆணையிட்ட மணிமண்டபங்களை விரைவாக கட்டி அதற்கு திறப்பு விழாவும் வெகு சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபப் பணிகளை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்தது அ.தி.மு.க அரசு.

தளபதி ஒண்டிவீரனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நாளாக ஆகஸ்டு – 20 கடைபிடிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்பு அன்று அரசு விழாவாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் தனபால் அவர்கள் கலந்து கொண்டார்.

                அதன் பின்பு தளபதி ஒண்டிவீரனாரின் சிலையை மார்பளவு மட்டும் வைப்பதென முடிவு செய்தது. இதற்கு கடும் கண்டனங்கள் அருந்ததியர் அமைப்புகள் மத்தியில் தெரிவிக்கவே அமைதியானது அரசு. மீண்டும் அருந்ததியர் அமைப்புகள் சார்பாக தளபதி ஒண்டிவீரனாரின் முழு உருவ சிலையை அவர் குதிரையில் அமர்ந்த வண்ணம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசும் பிடிவாதம் பிடிக்கவே ஆகஸ்டு-20, 2015ல் ஆதித்தமிழர் கட்சி சார்பாக பாளையங்கோட்டையில் தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபம் அமைக்கப் பெற்ற இடத்தை நோக்கி முழு உருவத்துடன் குதிரையில் அமைந்த வண்ணம் தளபதி ஒண்டிவீரனாரின் சிலை நிறுவும் போராட்டம் தலைவர் கு.ஜக்கையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது ஆளுகின்ற அரசை ஒரு விதத்தில் எச்சரிக்கும் விதமாகவே இருந்தது. அதன் பின்பு முழுஉருவ வெண்கலசிலை குதிரையில் அமர்ந்த வண்ணம் அவரது மணிமண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபப் பணிகள் முடிந்த பின்பும் பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. விரைவாக தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபத்தை திறந்து வைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் செய்தனர் அருந்ததிய அமைப்பினர்.

அதன் பின்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் மார்ச் - 01, 2016 அன்று திறந்து வைத்தார். தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபம் திறப்புவிழா ஏதோ ஒப்புக்கு நடப்பது போல மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் சில அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தனர். இதில் அச்சமூகத்தைச் சார்ந்த அமைப்புகளுக்கு எவ்வித அழைப்பும் கொடுக்காமல் பாரபட்சமாக நடந்து கொண்டது அ.தி.மு.க அரசு. இது ஒரு வகையில் தீண்டாமையை அரசு கையாளுகிறது என்று அருந்ததியர் அமைப்பு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதே போல மற்ற சுதந்திரப் போராட்ட வீரர் என்றால் இந்த அரசு இப்படி இருக்குமா? தளபதி ஒண்டிவீரனார் ஒரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர் தானே என்கிற அலட்சியப் போக்கை அரசும் கடைபிடிக்கிறது என்று குற்றம் சாட்டினர்.

அதே போல ஆகஸ்டு-20 அன்று தளபதி ஒண்டிவீரனாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்திவிட்டு அருந்ததியர் அமைப்புகள் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் அதற்கும் அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு வகையில் இம்மக்களின் எழுச்சியை தடுக்க நினைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்பது அம்மக்களின் குற்றச்சாட்டு. தளபதி ஒண்டிவீரனாருக்கு மணிமண்டபத்தை பல்வேறு அருந்ததியர் அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் மாறி மாறி ஆண்டு வரும் இரு கட்சிகளுமே கட்டிக் கொடுத்தன. ஆனால் தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டப திறப்புவிழா அன்று அருந்ததியர் அமைப்புகளை, அவர்களின் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க அரசு அவர்களைப் புறக்கணித்தது. இதற்கும் கடுமையான கண்டனங்களையும் அவர்கள் தெரிவிக்கவும் தவறவில்லை.

அது மட்டுமல்லாமல் எத்தனையோ பேர்கள் தன் சாதி கௌவரவத்தை காப்பாற்ற வெள்ளையர்களை எதிர்த்தவர்களை எல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பறைசாற்றி கொண்டிருக்கிற அரசுகள் உண்மையாகவே இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய அருந்ததியர் தளபதி ஒண்டிவீரனாரின் வரலாற்றை திட்டமிட்டு மறைக்கின்றனர் என்று பல முற்போக்கு சக்திகள் தரும் பலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையும் கூட. ஏனென்றால் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலை மணிமண்டபத்தினுள் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சரி, அந்த மணிமண்டபத்தினுள் உட்புற சுவர்களில் தளபதி ஒண்டிவீரனாரைப் பற்றிய எந்தவித குறிப்புகளும் இல்லை.

அவர் எங்கு பிறந்தார். சுதந்திரத்திற்காக யாரை எதிர்த்துப் போரிட்டார் என்பது போன்ற அவரின் வீரம் செறிந்த வரலாறு எதுவுமே எழுதப்படவில்லை. யாராவது தெரியாத நபர்கள் வந்து அவரது மணிமண்டபத்தை பார்வையிட்டால் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு எவ்வித குறிப்புகளும் கிடையாது. தளபதி ஒண்டிவீரனாரைப் பற்றி எழுதுவதற்கு குறிப்புகள் இன்னும் முழுமையாக அரசால் ஆராயப்படவில்லை. அதற்கான சிறு முயற்சிகூட அரசு இன்னும் எடுக்கவில்லை என்பது தான் எதார்த்தம். இதுவும் ஒரு வகையில் அரசு திட்டமிட்டு, அருந்ததியர்களின் வரலாற்றை மறைக்கின்ற ஒரு வகை சதிதான். தளபதி ஒண்டிவீரனாரின் வரலாற்றுக் குறிப்புகள் அவரது மணிமண்டபத்தில் விரைவிலேயே பொறிக்கப்பட வேண்டும் என்பது அருந்ததிய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல் மணிமண்டபத்தைச் சுற்றிலும் பூங்கா எதுவும் அமைக்கப்படவில்லை; அலங்கார விளக்குகள் என்று எதுவும் இல்லை. அங்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் கூட மணிமண்டபம் கட்டுவதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அவரது நினைவு நாளன்று மக்கள் கூடும் போது அங்கு நிற்பதற்கு கூடப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை. ஒரு ஐம்பது பேர் சேர்ந்தவுடன் உடனே கிளம்புங்கள் என்று போலீசார் அவர்களை வெளியேற்றி விடுகின்றனர். தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபத்தின் முன்னால் ஒரு பெயர் பலகை கூட வைக்கப்படவில்லை. மணிமண்டப சுவற்றில் “சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம்” என்று மட்டும்தான் எழுதியுள்ளது.

இந்த மணிமண்டபத்தைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட இடமாகவும் இல்லை. பார்ப்பதற்கு ஏதோ ஒரு மடம் போன்று தான் காட்சியளிக்கிறது. அரசு ஏதோ ஒரு மணிமண்டபத்தை கட்டிக் கொடுத்தால் போதும் என்கிற மனநிலையோடு தான் கட்டிக் கொடுத்திருக்கிறது என்று பல்வேறு அருந்ததியர் அமைப்பு தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். விரைவிலேயே மேற்கண்ட கோரிக்கைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அவற்றை சரி செய்து தர வேண்டும் என்பது தான் அவர்களின் பிரதான கோரிக்கை. அத்தோடு தளபதி ஒண்டிவீரனாரின் திருவுருவ சிலையை நகரங்களின் முக்கியப் பகுதியில் நிறுவ வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட கால கோரிக்கை.

அது மட்டுமல்லாமல் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.25,000- வழங்கப்பட்டு வருகிறது. அதை தளபதி ஒண்டிவீரனாரின் வாரிசாக இருக்கும் திரு.ஆறுமுகம் என்பவருக்கு இதுவரை கிடைக்கவில்லை அது கிடைக்க அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதிலும் தீண்டாமையை கடைபிடிக்கக் கூடிய போக்கு நிலவுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலைமை மற்ற சுதந்திரப் போராட்ட வாரிசுதாரர்களுக்கு கிடையாது. அவர்களுக்கு அரசின் தரப்பில் போய் சேர வேண்டிய சலுகைகள், உரிமைகள் மிகச் சரியாக போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் அனைவரும் ஒன்றுதானே. அதில் என்ன பாரபட்சம்? என்பது தான் இவர்களது கேள்வி.

அது மட்டுமல்லாமல் தளபதி ஒண்டிவீரனார் பிறந்த ஊரான நெற்கட்டும் செவ்வயல் பச்சேரியை தரம் உயர்த்தி அதை அரசு மேம்படுத்த வேண்டும். அங்கு அரசு சார்பாக தளபதி ஒண்டிவீரனாரின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. தளபதி ஒண்டிவீரனாரின் வரலாற்றை தொகுத்து விரைவிலேயே அரசு சார்பாக வெளியிட வேண்டும். அதைப் பாடநூலாக கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் இம்மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த ஆண்டு தளபதி ஒண்டிவீரனாரின் நினைவு நாளையொட்டி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளவை:- நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகாவிலுள்ள நெற்கட்டும் செவ்வயல் கிராமத்தில் ஒண்டிவீரனாரின் நினைவு நாள்  ஆகஸ்டு - 20 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதே போல பூலித்தேவர் பிறந்த நாள் விழா வருகிற செப்டம்பர் – 01 தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். ஒண்டிவீரன் நினைவு நாள் பூலித்தேவர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்டு 19ம் தேதி முதல் செப்டம்பர் – 02ம் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல கடந்த ஆண்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அந்த செய்திக் குறிப்பில் கலந்து கொண்ட வாகனங்களின் புள்ளி விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரனாரின் நினைவு நாள் அஞ்சலிக்கு 2011-ல் 40 வாகனங்களும், 2012-ல் 680 வாகனங்களும் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளன. 2013-ல் வந்த வாகனங்களின் விபரம் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2014-ஆம் ஆண்டு தளபதி ஒண்டிவீரனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் 1500 வாகனங்களில் 15,000 பேர் வருவார்கள் என தெரிகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாண்டு கடந்த ஆண்டை விட அதிகமான எண்ணிக்கையில் அருந்ததிய மக்கள் கலந்து கொணடிருப்பார்கள்.

இதைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் தளபதி ஒண்டிவீரனாரின் வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அருந்ததிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர் என்பது உறுதியாகிறது. அது தான் நிதர்சன உண்மை. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் அருந்ததிய மக்கள் பங்கு கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு வகையில் அம்மக்களின் சமூக எழுச்சியாக அவர்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் ஒண்டிவீரனாரின் வரலாற்று தகவல்களை தேடி எடுத்துக் கொண்டும் வருகின்றனர். அச்சமூகத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் மறைக்கப்பட்ட தங்களின் வரலாற்றை தாங்களே தேடி எடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வும் இதற்கு மிக முக்கிய காரணம்.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் பெரும் திரளாக சமூக எழுச்சியோடு அருந்ததிய மக்கள் தளபதி ஒண்டிவீரனாரின் வீரவணக்க நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவர்களின் மனதில் ஏக்கம் கலந்த ஒருவித ஏமாற்றமும் நாம் ஓரங்கட்டப்பட்டுள்ளோம் என்ற உணர்வும் தான் மேலோங்கியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம்? ஒவ்வொரு ஆண்டும் தளபதி ஒண்டிவீரனாரின் நினைவஞ்சலிக்கு வருவது போல சட்டப்பேரவை தலைவர் தனபால் வந்தார். அவருடன் கூடுதலாக இந்தாண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும் வந்தார். அதை தாண்டி இன்னும் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து மிக மிக விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களே வந்து செல்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை.

தளபதி ஒண்டிவீரனாரின் மணிமண்டபத்தை அமைக்க வலிகோலிய தி.மு.க-விலிருந்து கூட யாரும் வரவில்லை. ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளில் இருந்து யாரும் வரவில்லை. ஒருவேளை இவர்களுக்கு தளபதி ஒண்டிவீரன் என்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் இருப்பது தெரியுமா? என்று கூட தெரியவில்லை. அதற்கு பின்பு பார்த்தால் தலித் கட்சி என்று சொல்லக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சியைச் சார்ந்த நபர்களும் வரவில்லை. இதைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கூட அவர்களின் தலைமைப் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சார்ந்த தோழர்கள் மட்டும் வந்தார்கள். ஒருவேளை தளபதி ஒண்டிவீரன் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை வார்த்தவர்கள் மட்டும் வந்தோர்களோ என்னவோ?

இப்படி சமூக மாற்றம், சமூக நீதி பேசும் நபர்கள் கூட தளபதி ஒண்டிவீரனாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்த வராதது குறித்து பெரும் கேள்வி அருந்ததியர் அமைப்புகள் மத்தியிலும் அம்மக்கள் மத்தியிலும் எழுப்பியுள்ளது. தளபதி ஒண்டிவீரனாரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராக குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்த்து அவர் எல்லோருக்குமான இந்தியவின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக இருந்தார்; அவரின் நினைவு நாளை சாதி, மதம், மொழி என பாகுபாடுகளை களைந்து அனைவரும் அனுசரிப்பதே அவரின் தியாகத்திற்கான அங்கீகாரமாகும்!

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It