படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடுதான் அடிப்படையானது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. நான்கு வர்ணங்களும் வேறுபட்ட ஆனால் சமமான படுக்கைக் கோட்டில் அமைந்தவை அல்ல; அவை செங்குத்துக் கோட்டில் அமைந்தவை. மநுவின் திட்டப்படி, பார்ப்பனன் முதலிடம் வகிக்கிறான். அவனுக்குக் கீழ் சத்திரியனும், சத்திரியனுக்குக் கீழ் வைசியனும், வைசியனுக்குக் கீழ் சூத்திரனும், சூத்திரனுக்குக் கீழ் ஆதிசூத்திரன் அல்லது தீண்டத்தகாதவனும் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வரிசை முறை மரபு சார்ந்தது மட்டுமன்று; ஆன்மிக, அற, சட்ட அடிப்படையிலும் அமைந்தது. வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இந்த படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையே ஆட்சி செலுத்துகிறது.
 
ambedkar 324மநுஸ்மிருதியிலிருந்து பல விளக்கங்களைக் காட்டி இதனை மெய்ப்பிக்க முடியும். இக்கருத்தை விளக்கிட நான்கு எடுத்துக்காட்டுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்: அடிமைச் சாசனம், திருமண விதிகள், தண்டனைச் சட்டம், துறவறம், சமஸ்காரம் பற்றிய விதிகள். இந்து சட்டம் அடிமைத் தனத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மநுஸ்மிருதி ஏழுவகை அடிமைகளைக் குறிப்பிடுகிறது. நாரதஸ்மிருதி பதினைந்து வகை அடிமைகளைக் குறிப்பிடுகிறது. எத்தனை வகை அடிமைகள், அடிமைகளை எவ்வாறு வகைப்படுத்தினர் என்பது முக்கியமல்ல; யார் யாரை அடிமைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியம். 
 
இது பற்றிய நாரதஸ்மிருதியும் யாக்ஞவல்கியஸ்மிருதி கூறுவதையும் காண்போம். நாரதஸ்மிருதி: 5:39: நான்கு வர்ணங்களின் தலைகீழ் முறையில் அடிமை முறை விதிக்கப்படவில்லை. தன் வர்ண ஆச்சாரத்தை மீறினாலொழிய, அவ்வகை அடிமை முறை மனைவியின் நிலைக்கு ஒப்பானது. யாக்ஞவல்கிய ஸ்மிருதி 16. 183(2) அடிமை முறை என்பது வர்ணங்களின் இறங்குமுக வரிசைதானே தவிர, ஏறுமுக வரிசையில் அல்ல.
 
அடிமைமுறை அங்கீகாரமே மோசமானதுதான். அடிமை முறையைத் தன்போக்கில் விட்டிருந்தால்கூட, ஓரளவு சமநிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது சாதியமைப்பின் அடிப்படையையே தகர்த்திருக்கக் கூடும். அடிமை முறையில் பார்ப்பனன் தீண்டத்தகாதவனின் அடிமையாகவும், தீண்டத்தகாதவன் முதலாளியாகவும் மாறும் வாய்ப்பு உண்டு. கட்டற்ற அடிமை முறையிலும் ஒருவகை சமத்துவப் போக்கு இருப்பதால், அதனையும் அழித்திடத் திட்டமிட்டனர். மநுவும் அவருடைய வழித் தோன்றல்களும் அடிமை முறையை அங்கீகரித்து, அதனை வர்ணமுறையின் தலைகீழ் வரிசையில் இருக்க அனுமதிக்கவில்லை. அதன் பொருள் ஒரு பார்ப்பனர் மற்றொரு பார்ப்பனருக்கு அடிமையாக மாற முடியுமே தவிர, பிறருக்கு சத்திரிய, வைசிய, சூத்திரருக்கு அல்லது ஆதி சூத்திரருக்கு அடிமையாக முடியாது. 
 
மறுபுறம், பார்ப்பனர் நான்கு வர்ணத்தாரையும் அடிமைப்படுத்த முடியும். சத்திரியன் பார்ப்பனனை அடிமை கொள்ள முடியாது; சத்திரிய, வைசிய, சூத்ர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும். வைசியன் பார்ப்பனனையும் சத்திரியனையும் அடிமை கொள்ள முடியாது; வைசிய, சூத்திர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும். சூத்திரன் சூத்திர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும்; பார்ப்பன, சத்திரிய, வைசியரை அடிமை கொள்ள முடியாது. ஆதி சூத்திரன் ஆதி சூத்திரனைத்தான் அடிமை கொள்ள முடியும்; பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திரனை அடிமை கொள்ள முடியாது.
 
படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாட்டின் விளக்கத்தை மநுஸ்மிருதியில் திருமணம் பற்றிய விதிகளில் காணலாம். மநு கூறுகிறார்:
3:12. “இருபிறப்பாளர் வர்ணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பமுடையவர் வர்ணமுறையில் நேர்வரிசையில் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.''
 
3:13. “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்; சத்திரியனுக்குச் சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள்; பார்ப்பனனுக்குப் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள்.''
 
– தொடரும்
 
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 103)
Pin It