தமிழகமெங்கும் ஆரவாரக் கூச்சல்கள், வாழ்க எனும் முழக்கங்கள், துதிபாடல்கள், தாக்குதல்கள், விமரிசனங்கள், வாக்குறுதிகள், சூளுரைகள், அறிவிப்புகள், பல்லிளிப்பு, குழைவு, பணிவு... தமிழகத்தின் தேர்தல் முடிந்துவிட்டது! புதிய அரசும் பதவியேற்று, அதிகாரத்தைக் கையில் எடுத்தாயிற்று. ஜனநாயகக் கடமையை ஆற்றும் முகமாகத் தேர்தலில் வாக்களித்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன், கோட்டை இருக்கும் திசை நோக்கி வணங்கிக் காத்திருக்கிறார்கள். வானத்தின் பலகணிகளைத் திறந்து கொண்டு எல்லாம் கொட்டும் என்பது அவர்தம் நம்பிக்கை. இதற்குக் காரணம் உண்டு.

Mayavathi
முன்பு நடந்த எல்லா தேர்தல்களை விடவும் இந்தத் தேர்தல் சிறப்பு வாய்ந்தது. போட்டிப் போட்டுக்கொண்டு அனைத்துக் கட்சிகளும் இலவசங்களின் அறிவிப்புகளை வெளியிட்டன. ஒரு மிகை எதார்த்த உலகிலே வாழ்வது போன்ற உணர்வு எல்லாருக்கும் வந்து போனது. அறிவிக்கப்பட்ட இலவசங்களையெல்லாம் தருவதாக இருந்தால், தமிழகத்திற்கு 20 ஆண்டுகளுக்குத் தேவையான நிதி எவ்வளவு ஆகுமோ அவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

அரசின் கருவூலத்திலிருந்தே இந்த இலவசங்களுக்கெல்லாம் நிதி எடுத்து செலவழிக்கப்படுகின்றது. அப்படி இருந்தும் இவைகளை இலவசங்கள் என்று எப்படி அழைக்கிறார்கள் என்று வியப்பாய் இருக்கிறது! என் ஆட்சியிலே நான் இதை வழங்கினேன், அதை வழங்கினேன் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், தமது சொந்தப் பணத்தில் எதையும் செய்வதில்லை. மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கு வழங்கி, தான் வழங்கியதாக உரிமை கொண்டாடுவது ஏமாற்று வேலையன்றி வேறல்ல. இந்த வகையான பரப்புரைகளையும் மக்கள் நம்புகிறார்கள்; அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள். இலவச அறிவிப்புகள் ஒரு வகையில் "போதை மாத்திரை'களைப் போன்றவை. இந்தத் தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, மாத்திரைகளின் அளவு அதிகரித்து விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் தந்த மாத்திரைகளால் மயக்கத்தின் உச்சத்தில் இருக்கிறான் சாமானியன்.

தேர்தல் அறிக்கைகளின் மிக முக்கிய அறிவிப்புகளும், வாக்குறுதிகளும் பாமர மக்களைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன. நிறைவேறாத கனவுகள், ஏக்கங்கள், விருப்பங்கள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான வடிவமாக தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கிறான் பாமரன். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவர், ஏமாற்றுகிறவர் ஆகியோருக்கு இடையிலேதான் ஓடி ஓடி வாக்களித்து களைத்துப்போய் கிடக்கிறான் அவன்.

ஆயுள் முழுக்கவும் உழைத்துப் பிழைக்கும்படி நிர்பந்திக்கப்பட்ட அவன், ஒரு சுயமரியாதையுடைய எளிய வாழ்வினை மேற்கொள்வதற்கான அடிப்படை எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறான். இவர்களில் ஒரு பாமர தலித்தின் எதிர்பார்ப்புகள், சற்றே மாறுதலுக்கு உரியதாக இருக்கின்றன. வாழ்வியல் தேவைகளுடன், சமூக மாற்றமும் அவன் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. வாழ்வியல் தேவைகளையும், சமூக மாற்றத்தின் வழியே கிடைக்கும் சாதிய ஒடுக்குமுறையற்ற சூழலையும் பெறக்கூடிய கருவியாகவே ஒரு தலித் தேர்தலைப் பார்க்கிறான்.

“இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் பிரிவினை இருக்கிறது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளை இந்துக்கள் செய்து வருகின்றனர். எனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்று, அதன் மூலம் இந்துக்களின் அடக்கு முறையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது'' என்கிறார் அம்பேத்கர், தமது "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?' என்ற நூலில். நேரடியான சலுகைகளை, இலவசங்களை, திட்டங்களை எதிர்பார்ப்பவராக மட்டுமே தலித்துகளை கருத முடியாது. அவர்கள் அரசை ஆதரிப்பது, எதிர்பார்ப்பது, அணி திரள்வது ஆகியவைகளுக்கு சமூகக் காரணியோடு இணைந்த இரட்டை நோக்கம் இருக்கிறது. தேர்தல் பரப்புரைக்காக மாயாவதி அவர்கள் தமிழகம் வந்தபோது, இந்த மாற்று அம்சத்தை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்தால் அவர்களின் சிக்கல்களான வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை தீரும். இந்தப் போர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானப் போர் மட்டுமல்ல, சுயமரியாதையைக் கைப்பற்றுவதற்கானதும் கூட. மக்கள் தொகையில் அய்ம்பது விழுக்காடு கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள், அய்ம்பதாண்டுகள் கடந்த விடுதலைக்குப் பின்பும் தமது வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. மாறாக, துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். எனவே, சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதன்மைச் சாவியை (அரசியல் அதிகாரம்) கையிலெடுப்போம்'' ("இந்து', மே 3, 2006).

மாயாவதி குறிப்பிடுவது போல, தலித் மக்கள் தமது சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதன்மைச் சாவியாக அரசியலைக் கருதுகிறார்களா என்பது, இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு பார்த்தால், தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், இன்னமும் தங்களை ஒரு வாக்கு வங்கியாகத் திரட்டிக் கொள்ளும் அரசியல் விழிப்பற்றே அவர்கள் இருக்கிறார்கள். வேறெந்த மக்கள் திரளைக் காட்டிலும் தமிழகத்திலே தலித் மக்கள் பல்வேறு அரசியல் அமைப்புகளின் வாக்கு வங்கிகளாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் பிரச்சாரத்துக்கென ஜெயலலிதா, வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை ஒருநாள் பயணம் மேற்கொண்டார். நண்பகலுக்குப் பிறகு வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி வரையிலான பேருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. கிராமங்கள்தோறும் மக்கள் கூட்டம். சாலைகளிலேயே அமர்ந்து கொண்டும், குழந்தைகளுக்குப் பாலூட்டிக் கொண்டும், பேசிக் கொண்டும் காத்திருக்கும் பெண்கள். தம் வாழ்வை மாற்றிட வருகை தரும் தங்கத் தலைவி என்ற மிதப்பில் ஆண்களும், இளைஞர்களும். இப்படியான காட்சிகளையும், மக்கள் கூட்டத்தையும் தலித் கிராமங்களிலேயே அதிகம் பார்க்க முடிந்தது. கருணாநிதி அவர்களும், வேறு சில தலைவர்களும் வந்தபோது கூட, சற்றேறக்குறைய இப்படியான கூட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.

காலையில் கட்சியைத் தொடங்கி மாலையிலே ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வந்த நடிகர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வந்தபோது, சில தலித் கிராமங்களில் இளைஞர்கள் நடிகரின் காருக்கு முன்னால் படுத்து, உருண்டு தமது வெறித்தனமான பற்றை காட்டியிருக்கிறார்கள். இந்த ரசிக மனோபாவம் தலித் இளைஞர்களுக்கு மட்டும் இல்லை; தலித் பெண்களுக்கும் இருக்கிறது என்பதை சில நாளேடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன.

“முரசு எங்கள் சின்னம். மாலை நேரங்களில் எங்கள் ஊர் கோயிலருகில், இளைஞர்கள் மேளத்தை அடிப்பதை நீங்கள் பார்க்கலாம். நீண்ட காலமாக எம்.ஜி.ஆருக்கு வாக்களித்து வந்தோம். அண்ணா தி.மு.க.வோ., தி.மு.க.வோ எங்களுக்கு எதையும் வழங்கவில்லை. இந்த முறை விஜயகாந்துக்கு ஒரு வாய்ப்புத் தருகிறோம். எங்கள் வாழ்வில் என்ன மாற்றத்தை அவர் கொண்டு வருகிறார் என்று பார்ப்போம்.'' இப்படிச் சொன்னவர்கள் அவினாசி பக்கமிருக்கும் அருந்ததிய மக்கள்தான் ("இந்து', ஏப்ரல் 26, 2006). இவர்கள் சொன்னபடியே வாக்களிக்கவும் செய்திருப்பார்கள் என்று நம்பலாம்.

மிகவும் துணிச்சலாகவும், கோட்பாட்டின் உறுதியுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குடியாத்தம் பொதுத் தொகுதியில், ஒரு தலித் தோழரான ஜி. லதா அவர்களை இத்தேர்தலில் நிறுத்தியிருந்தது. அவருடைய வெற்றி வாய்ப்பு குறித்த நிலைமைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவுடன் கிராமங்கள்தோறும் சென்றபோது, தலித் மக்களின் நிலைப்பாடுகள் குறித்த இயல்பு நிலையை அறிய முடிந்தது. பெரும்பாலும் அ.தி.மு.க., தி.மு.க. என்கிற ஆதரவு நிலைப்பாடும், புதிதாக விஜயகாந்துக்கு ஆதரவும் தலித் மக்களிடம் பெருகியிருக்கிறது.

G.Latha
“எனக்கு புத்தி தெரிஞ்ச காலத்திலிருந்தே எம்.ஜி. ஆருக்குதான் ஓட்டு! எம்பேரப்புள்ளைங்களுக்குக் கூட அவரு சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடணும்னு சொல்லி வச்சிருக்கிறேன்'' இப்படி ஒரு வயதான தலித் பெண்மணி சொன்னார். தலித் இளைஞர்களோ நடிகரின் புது அரசியல் மோகத்தில் இருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை வலுவுடன் இருக்கும் பகுதிகள், ஊடுருவியிருக்கும் பகுதிகள் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளிலும் தலித் மக்களிடையே நிலைமை இதுதான். தலித் மக்கள் இத்தேர்தலில் எப்படி வாக்களித்து இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நாம் ஒப்பிடும்போது, இந்த நிலையுடன் பொருந்திப் போகிறது (பார்க்க : அட்டவணை 1).

இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் பிற மக்களைக் காட்டிலும், தலித்துகள் தமது வாக்குகளைப் பரவலாக்கி அளிப்பவர்கள் என்பது தெரிகிறது. வேறுவகையில் சொல்வதென்றால், தலித்துகளைக் காட்டிலும் பிறர் தமது அடையாளத்துடனான (சாதிய) கட்சி அமைப்பில் தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளார்கள். நிலவும் ஜனநாயகச் சூழலில், ஒரு மக்கள் திரள், தலித்துகளைப் போலத்தானே பிரிந்து பிரிந்து வாக்களிக்க முடியும் என்றால், தலித்துகளைப் பொறுத்தவரை இது அதிகபட்ச ஜனநாயகம்! அல்லது அவர்களுக்கு உதவாத ஜனநாயகம் என்றே சொல்ல முடியும்!

அன்றாடம் சாதிய கொலை வெறித்தாக்குதலுக்கும், ஒதுக்குமுறைக்கும் ஆட்படும் தலித் சமூகம் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒரு வாக்கு வங்கியாக தற்காத்துக் கொள்ள வேண்டுமல்லவா? ஏன் அப்படி நடக்கவில்லை?

இத்தேர்தலில் தலித் மக்களின் அரசியல் அமைப்புகளின் நிலை என்ன? பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகள், பெரிய கட்சிகளோடு இணைந்தோ, தனித்தோ, இத்தேர்தலில் நின்றன. விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.வுடனும், புதிய தமிழகம் பி.எஸ்.பி.யுடனும், புரட்சி பாரதம் தி.மு.க.வுடனும், இந்தியக் குடியரசுக் கட்சி சமாஜ்வாடி கட்சியுடனும், வை. பாலசுந்தரம் தலைமையிலான அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கட்சி பா.ஜ.க.வுடனும் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்தித்தன. தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வேறுசில தலித் அமைப்புகள், வேறு சில கட்சிகளை ஆதரிக்கவோ, தனித்தே நிற்கவோ செய்தன.

இவற்றில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வென்றிருக்கிறார்கள். அணிகள் மாறினாலும், தேர்தல்கள் மாறினாலும் தலித் அரசியலின் நிலைமைகள் மாறாமல் இருக்கின்றன. புள்ளிவிவரங்களும் ஒரே மாதிரியான கணக்குகளையே தருகின்றன. கடந்த 2001 தேர்தலில் தலித் அரசியல் அமைப்புகளின் வாக்கு விகிதம், இந்த 2006 தேர்தல் வாக்கு விகிதங்களுடன் பெரிய அளவில் மாறிவிடவில்லை.
-விவாதிப்போம்

-அழகிய பெரியவன்
Pin It