"கருவாட்டுக் குழம்பா ருசி ஏத்தற"ன்னு ஒரு பாட்டு வரி இருக்கும்.

அது சரி தான். நா நுனியில் நடனமிடும் பசித்த வரி தான். கருவாட்டுக் குழம்புன்னா கூட கத்திரிக்காய் போட்டு கதகளி ஆடிருவாங்க. நாலு வீடு தள்ளினாலும் நாவு நமநமக்கும். வாசம் கமகமக்கும். சாப்பிடுபவர்களின் விரல்களும் வில்லு வளைக்கும் தான். சொல்ல சொல்ல இனிக்கும் உப்பு தூக்கலின் உபகாரம்... கருவாடு. ஆனா இப்ப நாம பேசப் போறது கருவாட்டுக் குழம்பு பத்தி இல்ல.

அதே மாதிரி கருவாடை பொரித்து, கடித்துக் கொள்தலும் சப்பு கொட்டும் சித்தாந்தம் தான். துண்டுக் கருவாடு... ரெண்டு போதும். ரச சோறு தட்டு காலியாக. நெத்திலிக் கருவாடு கிண்ணம் நிறைந்தால் அன்னம் சத்தமில்லாமல் கன்னம் பிதுங்கும். பெருமூச்சு முகம் உப்ப வைக்க கண்களில் ருசி மின்னும். மீன் ருசியில் இருந்து அப்படியே அதிரடியாக எதிரடியான ருசி கருவாடு. நாக்கும் உதடும் நெளிந்து நிமிரும். இப்ப நாம பேசப் போறது இவைகள் பற்றியும் இல்லை.

இப்போ பேசப் போறது...நாவில் நானூறச் செய்யும்... எனக்கு நெருக்கமான கருவாட்டு வதக்கல் என்றொரு வகைமை பற்றி.

வாரே வா வகைமை அது. ஒரு மேஜிக் மாதிரி பாட்டி செய்யும். வடசட்டியில் வெங்காயம் மிளகாய்... தக்காளி போட்டு அதிலேயே நெத்திலி கருவாடுகளையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து விடும். பார்க்கையில் என்ன இது சொதசொதவென ஒரு மறந்து போன சமையல் கலையோ என்று கூட தோன்றும். அடுத்து தான் வித்தை இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் கொசுவத்தை வரிந்தபடி வித்தை அரங்கேறும்.

இன்னொரு சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு கருவேப்பிலை போட்டு... கொஞ்ச நேரத்தில் முன்பு வேக வைத்து இறக்கி வைத்திருந்த நீரில் வெந்த கருவாட்டுக் கலவையை கொட்டும். இப்போது தான் நான் சொன்ன அந்த மேஜிக் நிகழும். அது என்ன மாதிரி செய்முறை என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. ஆனால் விளக்கு வைக்காத வீட்டில் இருந்து கூட கண்கள் சிமிட்டும் பசி. வடசட்டியில் வெறு வெறு என வேகும் பதார்த்தம் வதக்கல் வடிவத்துக்கு வர வர.. கருவாட்டு வாசம்... காதாட்டி வீதி சுற்றும். அவசரத்துக்கு தக்காளி வதக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் தோற்றம் இருக்கும். அதற்கு கைகள் கால் முளைத்தது போல கிடக்கும் கருவாடுகள்.... எண்ணெய் மிதக்க மினுங்கி கொண்டு சற்று நேரத்தில் கண்களைக் களவாடும்.

அப்படியே சுட சுட இறக்கி சுடு சோறுக்கு ரெண்டு கரண்டி எடுத்துப் போட்டு பிராட்டினாற் போல பிசைந்து சாப்பிட ஆரம்பித்தால்.... மூச்சு முட்டும் நிம்மதி. வயிறு நிறைவதை வாயே உணரும். நான் சினிமாவுக்கு காசு கேட்டு வம்பு செய்யும் நாளில் எல்லாம் கருவாட்டு வதக்கல் தான் என்னை சமன் செய்யும் வாய்ப்பூட்டு. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து நிலா பார்க்க உருட்டி உருட்டி கையில் கொடுக்கும் பாட்டி. உலகம் இனிக்க உள்ளம் நிறையும் எனக்கு. வழக்கம் போல பத்மினிக்கா ஒரு சிறு கிண்ணத்தில் வாங்கிச் சென்று விடும். மறு கிண்ணத்தை தூக்கி வந்து விடக் கூடாதே என்ற கவலை பாட்டிக்கும் இருக்கும்.

மிச்சமிருக்கும் இந்த வதக்கல் மறுநாள் காலையில் கிட்டத்தட்ட ஊறுகாய் மாதிரி... தொக்கு மாதிரிகூட பயன்படும். பிறகு அன்று மதியத்துக்கு அந்த வடசட்டியில் கொஞ்சம் சோறு போட்டு சுத்தமாகப் பிசைந்து போகிற போக்கில் ரெண்டு வாய் ஊட்டி விட்டுச் சென்று விடும்.

சொர்க்கம் சோற்றில் என்றால் நம்பிய காலம் தான் அது. கருவாட்டு நினைப்புக்கு காலத்துக்கும் வாசமுண்டு... நம்புங்கள்.

- கவிஜி

Pin It