அனுபவ சித்த மருத்துவர்கள் சங்க 73வது திங்கள் கூட்டம் மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் நன்னிலம் மருத்துவர் அ.குலாம் முகம்மது அவர்களின் தலைமையில் தலைவர் ச.சுப்பையன், பொருளாளர் மரு. கு. தமிழ்நம்பி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. மரு.மு. மெய்கண்டன் வரவேற்புரையாற்றினார் சித்த மருத்துவ நோய் கண்டறியும் பரிசோதனை முறைகள் பற்றி மரு. சுப்பையன் முன்னுரையாற்றினார்.

கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய ஒருவகை வாத, விஷ காய்ச்சலே சிக்குன் குனியா எனப்படுகிறது. இதற்கு விஷக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் சித்த மருந்துகளையும், வாத காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் சித்த மருந்துகளையும் சேர்த்துக் கொடுத்தால் நோய் கட்டுப்பட்டு குணமாகும்.

1. பிரமானந்த பைரவ மாத்திரை 2 வீதம் காலை மாலை சாப்பிட்டு நீர் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு எஸ்.கே.எம். போன்ற நிறுவனங்களின் மருந்துகள் சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கின்றன.

2. சுக்குப் பொடியில் (ஒரு தேக்கரண்டி), இரண்டு அரிசி அளவு லிங்க செந்தூரம் வைத்து தேனில் குழைத்து காலை மாலை இரு வேளைகள் சாப்பிட்டு மேலே மகாசுதர்சன மாத்திரை 3 வீதம் சாப்பிட்டு வந்தால் மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகி விடும். மகாசுதர்சன மாத்திரையை 5 நாட்கள் தொடர்ந்து முன் எச்சரிக்கையாக சாப்பிட்டு வந்தால் சிக்குன் குனியா காய்ச்சல் வராது. மேலே கண்ட மருந்துகள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

3. நில வேம்பு (பெரியாநங்கை), பேய் புடல், பற்படாகம், விஷ்ணுகிரந்தி இலைகளுடன் வெள்ளருக்கு வேர் சேர்த்து நீர் ஊற்றி காய்ச்சி 4 இல் ஒரு பாகமாக சுண்டியவுடன் வடிகட்டி கசாயமாக காலை, மாலை குடித்து வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிக்குன் குனியா நோய் குணமாகும்.

4. உடைத்த மிளகு ஒரு தேக்கரண்டி, வெப்பம் ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு, நொச்சி இலை, ஆடாதொட இலை, துளசி, தூதுவளை இலை, பெரிய நங்கை இலை, வாதநாராயணன் ஈர்க்கு இவைகளை சேர்த்து நீர் ஊற்றி 4 இல் ஒரு பங்காக காய்ச்சி வடிகட்டி சிறிது வெல்லம் கலந்து காலை மாலை என சாப்பிட்டு வர சிக்குன் குனியா நோய் குணமாகும். தினமும் கசாயம் புதிதாக செய்து சாப்பிட வேண்டும்.

- சித்த மருத்துவர்கள் கூட்டத்தில் இத்தகவல்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

(நன்றி : பெரியார் முழக்கம் செப்டம்பர் 2006)

Pin It