தமிழக அரசுக்கு நன்றியும் வேண்டுகோளும்

பதிவு பெற்ற மூத்த ஹோமியோபதி மருத்துவர்களுக்கு ஓய்வுக்கால உதவித் தொகை ரூ. 500/- வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; நன்றிக்குரியது. கிராமப்புற மக்களுக்காகவும், ஏழை எளிய நகர்ப்புற மக்களுக்காகவும் ஹோமியோ மருத்துவ சேவையாற்றி முதுமையில் தளர்ந்து கிடக்கும் மூத்த மருத்துவர்களுக்கு அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பது உறுதி.

 எனினும் இந்த உதவித் தொகை தகுதியும் பதிவும் உள்ள அனைத்து மூத்த மருத்துவர்களுக்கும் கிடைக்குமா? தமிழ்நாட்டில் பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் 14,000பேர்களில் இறந்தவர்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள் 4,000 பேர்கள் என்று ஒதுக்கினாலும் மிகுந்த சிரமங்களுடன் கஷ்டஜீவனம் நடத்தும் மீதியுள்ள ஹோமியோ மருத்துவர்கள் எண்ணிக்கை 10,000. ஹோமியோபதியில் மட்டுமே ஓய்வுக்கால உதவித்தொகை 10,000 பேர்களுக்கு தேவைப்படும் போது........ ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய அனைத்து முறையிலும் பதிவு பெற்ற மருத்துவர்களில் 500 பேர்களுக்கு மட்டுமே உதவித்தொகை என அறிவித்திருப்பது..... யானைப் பசிக்கு சோளப்பொரியே! இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக ஆகிவிடக்கூடாது. அரசு யதார்த்த நிலை உணர்ந்து அனைத்து பதிவு பெற்ற மாற்றுமுறை மருத்துவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

 சம்பந்தப்பட்ட மருத்துவர்களின், மருத்துவமுறைகளின் சங்கங்கள் தமிழக அரசை தாமதமின்றி உரிய முறையில் அணுகி தகுதியுள்ள அனைத்து மூத்த மருத்துவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

 ஒரே காலகட்டத்தில்... பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், ஆங்கில மருத்துவக் கல்லூரிகளின் பயிற்சி மருத்துவர்கள் போராட்டமும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் குறித்து சிபிஐ(எம்) உறுப்பினர் பாலபாரதி சட்ட மன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ‘ஒரு தனிப்பட்ட அதிகா ரிக்கு எதிரான போராட்டம் இது’ என்ற அரசு தரப்பு பதில் வினோதமாக உள்ளது. ISM இயக்குநர் என்பவர் சித்த மருத்தவத் துறைக்கு சம்பந்த மில்லாத ஒருவரா? தாவரவியல் பூங்காவைத் தனியார்க்குத் தாரைவார்க்கும் செயல் நியாயமானதா?

 அலோபதி பயிற்சி மருத்துவர்கள் உதவித்தொகை உயர்வு கோரும் போராட்டம் வெடித்தவுடன் எல்லாக் கட்சியினரும் ஆவேசமாகக் குரல் எழுப்பினார்கள். இந்தியாவில் எங்குமில்லாதளவு (ரூ. 10,000) உதவித் தொகை உயர்வு அறிவிக்கப்பட்டு போராட்டம் இனிதே நிறைவு பெற்று விட்டது.

 முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பேராசிரியர் க.அன்பழகன் உட்பட பல தமிழ்சான்றோர் சித்த மருத்துவத்தை உயர்த்திப் பிடித்த மாநிலத்தில், தமிழ்பாரம்பரியத்தில் வளர்ந்ததாக திராவிடக் கட்சிகள் பெருமைபேசும் மாநிலத்தில் சித்த மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் உள்ள நியா யங்களைப் புரிந்து கொள்ள நாதியில்லை! ஒரு காலத்தில் சித்த மருத்துவ ஆதரவாளராக இருந்த பேராசிரியர்.அன்பழகன் அவர்கள் இன்று கையறு நிலையில் இருப்பது கவலைக்குரியது.

 தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் வெகுவிமரிசையாகத் துவங் கப்பட்டு விட்டது. இனி சாமானியத் தமிழனும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உயர்தரச் சிகிச்சை பெறும் வாய்ப்பு கிடைத்து விடும் என்று அரசு கூறுகிறது. காலம்காலமாக இங்கு பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய சித்த, ஹோமியோபதி மருத்துவமுறைகள் இத்திட்டத்தில் முற்றிலும் புறக்கணிக் கப்பட்டுள்ளது. பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடமும், கார்பரேட் மருத்து வமனைகளிடமும் ‘மக்கள் பணத்தை’ - ‘மக்கள் நலத்தை’ அடகு வைப் பது பேராபத்தில் முடியும் என்பதையும், கார்ப்பரேட் மருத்துவமனைகளை ஊட்டி வளர்க்கும் முயற்சியே இது என்பதையும் நடுநிலையாளர்கள் உணர்வார்கள். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்ற வகையில் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதல்லவா.. சரியான திசைவழி?

மிக்க அன்புடன்,

ஆசிரியர்.