நான் இன்று காலையில் 11 மணியளவில் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கப் போயிருந்தேன். என் மைத்துனரின் மகளுக்கு நேற்றிரவு 11 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருந்தது. சுகப் பிரசவம்தான்.  சென்றிருந்த நேரம் குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து உறவினர்கள் ஆண்களும், பெண்களுமாக பார்க்க வந்திருந்தனர். நான் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்க எங்கு சென்றாலும் நான் ஒரு கண் டாக்டர் என்ற முறையில் குழந்தையின் இரு கண்களையும் மேலோட்டமாக பரிசோதித்து பார்த்துவிடுவேன்.

அப்போது என் மைத்துனரின் மகள், குழந்தையின் தாய், நேற்றிரவு பிறந்த குழந்தை இவ்வளவு நேரம் கடந்த பின்னும் இன்னும் ஒன்றுக்குப் போகவில்லை என்றாள். அப்போது எனக்கு ஒரு பழைய நினைவு வந்தது. பல வருடங்களுக்கு முன்னால், சுமார் 22 வருடங்கள் இருக்கும். என் தம்பியின் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அப்போது என் தம்பி, அவர் மனைவி, தம்பியின் மகன், மருமகள், மருமகளின் பெற்றோர் அனைவரும் குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி ஒவ்வொருவ்ரும் வெவ்வேறு பெயர்களை தேர்வு செய்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் குழந்தைக்கும் மேலே முன்பு சொன்ன ஒன்றுக்குப் போகும் பிரச்னை எழுந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆன்மீகத்திலும், சற்று தவறான நம்பிக்கையிலும் ஈடுபாடுள்ள  என் அப்பா, ஆளாளுக்கு வெவ்வேறு நாகரிகமான பெயர்களை யோசித்துக் கொண்டிருப்பதால்தான் தெய்வ குற்றம் காரணமாக குழந்தை ஒன்றுக்குப் போகவில்லை. எனவே இதை விடுத்து நம் குல தெய்வம் பெயரையே வைத்து விடுவோம் என்று சொல்லியவுடன், தற்செயலாக குழந்தை நெடு நேரம் ஒன்றுக்குப்  போகாததால் திடீரென்று ஒன்றுக்கு பீச்சியடித்தது. உடனே என் அப்பா, ' பார், சாமி பெயர் வைக்கிறேன் என்றதும் ஒன்றுக்குப் போய்விட்டது' என்று அதையே வைத்து விட்டார்கள். ஆகவே நீங்களும் அப்படி செய்து விடாதீர்கள்.

குழந்தைக்கு தாய்ப்பால் அடிக்கடி கொடுக்கவேண்டும். முதல் பாலை வீணாக்கக் கூடாது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 'கொலஸ்ட் ரம்' என்ற பொருள் உள்ளது. இதில் 'இம்யூனோகுளோபின் Ig A' உள்ளது. ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது முதலில் குழந்தைக்கு கிடைப்பது நீர்த்தன்மையுடைய தாகத்தைத் தணிக்கும் வகையிலானது. அதன் பின் வருவது அதிக சத்துள்ள 'க்ரீமி' கெட்டித்தன்மையுள்ளதாகும். எனவே தாய் கொடுக்கும் பாலின் அளவைப் பொறுத்தே சிறு நீர் கழிப்பதின் அளவும் உள்ளது.

குழந்தையின் பெற்றோர்கள் அவர்களுக்குள் பேசி நல்ல பெயராக வைத்துக் கொள்ளுங்கள். நல்ல தமிழ் பெயராக வைக்க வேண்டும், நவ நாகரீகமாக வைக்கிறேன் என்று தஸ் புஸ் என்று வைத்து விடாதீர்கள். பெயர் புரியும்படியும் இருக்க வேண்டும். சிறிய பெயராகவும் அமைய வேண்டும் என்றேன். சிறிய பெயர் கணினியில் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெயர் விபரங்களை நிரப்புவது எளிதாக இருக்கும். முடிந்த அளவு ஆங்கிலத்திலுள்ள முதல் நான்கைந்து எழுத்துக்களில் அமைந்தால் பள்ளியில், வேலைக்கு செல்லுமிடங்களில் முதலாவதாக அழைப்பு வரும்.

ஒரு சில வீடுகளில் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுவதுண்டு. சம்பந்திகள் இருவரும், தீவிரமாகவும் காரசாரமாகவும் மோதிக் கொள்வார்கள். பெயர் வைப்பதில் யாருக்கு உரிமை என்றும் தங்கள் முன்னோர்கள் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பார்கள். இதில் பெண் வீட்டார் சற்று விட்டுக் கொடுப்பது நன்மை பயக்கும். ஓரிடத்தில் இத்தகைய நேரத்தில் நான் போய்ச் சேர்ந்தேன். வீட்டிற்கு வெளியே பெயர் சூட்டு விழாவிற்கு வந்திருந்த உறவினர்களிடம் மிகுந்த இறுக்கம் இருந்தது. விசாரித்ததில் குழந்தையின் தகப்பன் தன் தாயாரின் பெயரை வைக்கவேண்டும் என்றும் அத்துடன் பிரியா என்று சேர்த்தும் 'சண்முகப் பிரியா' என்று வைக்கலாம் என்றார். அது நாகரீகமாக இல்லை என்றும் 'குஷ்பு' என்று வைக்கவேண்டும் என்றும் குழந்தையைப் பெற்றவள் கூறினாள். நானும், மற்றவர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் குழந்தையின் தாய் தான் சொன்னதையே வைத்தாள். இன்றும் அந்த குழந்தை பள்ளியிலும், கல்லூரியிலும் 'குஷ்பு' என்றே அழைக்கப் பட்டாள்.

இன்னொரு நண்பர் வீட்டில் முதல் குழந்தைக்கு நாகரிகப் பெயர் மற்றும் தகப்பன்வழித் தாத்தாவின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். இரண்டாவது குழந்தைக்கு நாகரிகப் பெயர் மற்றும் தாய்வழித் தாத்தாவின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். எனவே குழந்தைக்கு பெயர் வைப்பதில் இரு வீட்டாருக்கும் நல்ல புரிதல் அவசியம். இன்று தற்செயலாக ஒரு காரின் பின்புற கண்ணாடியில் ஒரு பெயர் பார்த்தேன். பெயர் நீளமாக இருந்தது 'சரவணவிஷ்ணு கரிகரன்'. சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களாக இருக்கலாம். நீண்ட பெயர் வைப்பவர்கள் அதிலுள்ள சிரமத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் நிரப்புவது, வங்கி காசோலைகளில் கையொப்பமிடுவது, குறிப்பாக உறவினர்கள் நண்பர்கள்  கூப்பிடுவது, இன்னும் வெளிமா நில, வெளி நாட்டினர், நாம் படிக்க, வேலை பார்க்க செல்லும் பொழுது நம்மைக் கூப்பிடுவது சிரமம்.

நான் கர் நாடக மா நிலத்தில் மருத்துவம் படிக்கும் பொழுது என் நண்பர்களால் ' நெடுஞ்செழியன், அன்பழகன்' என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

எனவே சிறிய பெயர்களை சூட்டுங்கள்.

அழகிய தமிழ் பெயர்களை சூட்டுங்கள்.

வடமொழி எழுத்துக்களை தவிருங்கள்.

குறிப்பாக பெயரின் ஆரம்பத்தில் வடமொழி எழுத்துக்களை (ஸ்ரீ, ஜ, ஸ்) தவிர்க்கலாம். எழுதுவது கடினம்.

கடவுள் பெயர், வீட்டில் உள்ள முன்னோர் பெயர் என்பதற்காக பழமையான பெயர்களையும், கூப்பிடுவதற்கு கூச்சமான பெயர்களையும் தவிர்த்து விடுங்கள்.

வாழ்க வளமுடன்.

வ.க.கன்னியப்பன்

குறிப்பு: இதில் உள்ள செய்திகள் பொதுவானவை. யார் மனதையும் வருத்தும் நோக்கமல்ல.

Pin It