ஐரிஷ் சேங் மட்டும் இல்லையென்றால் அந்தக் கொடூரமான வன்கொடுமை வரலாற்றின் பக்கங்களில் அது ஓர் அடிக்குறிப்பாக மட்டுமே இருந்துவிட்டிருக்கும்.

-    ரால்ப் கின்னி பென்னட்

அமெரிக்காவின் கல்லூரி நகர் அர்பனாவில் சிறுமியாக இருந்தபோது, அச்சுறுத்தும் அந்தக் கதைகளைப் புலம் பெயர்ந்து வாழும் தம் சீனத்துப் பெற்றோரிடமிருந்து அவள் கேட்டிருந்தாள்.

Najing Massacreஅவை நம்பவே முடியாத மாயத்தோற்றமாகக் காட்சியளித்தன, பயங்கரத்தையும் மரணங்களையும் சிவந்து ஓடிய நதியையும் அவர்கள் கண்டிருந்தார்கள். சிலநேரங்களில் அந்த இடத்தையும் அந்தக் காலத்தையும் தானே அங்கு இருப்பதைப்போலக் கற்பனைசெய்து பார்த்தாள். ஓடுவதும், ஒளிந்துகொள்வதும், தப்பிப்பிழைக்க முயல்வதுமான அந்த பயங்கரம் அருவமாக நிலைத்திருந்தது, ஒரே ஒரு காட்சியைத் தவிர, அந்தக் காட்சியில் வாளுடன் ஒருவன் வெட்டிச் சாய்த்துக்கொண்டே சென்றான்..

ஐரிஷ் சேங் காதால் கேட்ட இந்தக் கதைகள் வரலாற்றின் ஒரு திட்டமிடப்பட்ட கொடிய விலங்குத்தனமான நிகழ்வாகும். 1937 டிசம்பரிலும் 1938 இன் தொடக்க மாதங்களிலும், சீனாவில் நான்கிங்கில், சிறைபிடிக்கப்பட்ட மக்கள் வன்புணர்வு செய்யபட்ட, படுகொலை செய்யப்பட்ட, கொடூரச் செயல்கள் அவை.

சேங்கின் பெற்றோர் முதன்முதலில் நான்கிங் படுகொலைகள் பற்றிக் கூறியபோது அவர்களின் குரல்கள் கோபத்தில் அதிர்ந்தன. ஆனால் அவளது சிறுவயது நூலகத் தேடுதலிலும் கலைக்களஞ்சியத் தேடுதலிலும் வரலாற்று நூல்களிலும் அவளுக்கு அந்தப் படுகொலைகள் பற்றிய எதுவும் கிடைக்கவில்லை.

சேங் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் (அங்கு அவளது பெற்றோர் பேராசிரியர்களாக இருந்தார்கள்) இளங்கலைப் பட்டமும் பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்ற பிறகும் கூட, நான்கிங் அவளது நினைவின் விளிம்பில் தான் இருந்துவந்தது.

அப்படிப்பட்ட பயங்கர நிகழ்வுகள் எப்படி பொதுமக்களின் மனச்சாட்சியைக் கடந்து சென்றன. இங்கு, மேற்குலகில், நான்கிங் தலைப்புச் செய்திகள் ஐரோப்பாவில் அடிக்கடி நிகழும் பனிச்சரிவு எச்சரிகைச் செய்திகளில் மூழ்கடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் ஊடகங்களில் உலகப் போரின் விவகாரங்கள் அன்றாடச் செய்திகளில் நிரம்பி வழிந்தன. பின்னர் போருக்குப் பிந்தைய மேற்குலகம் சோவியத் ஒன்றியத்துடனான போட்டியில் ஆழ்ந்தது, ஜப்பானை நட்புரீதியான ஒரு பொருளாதார அரணாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டியது. ஒரு போர்க்குற்ற நடுவம் அமைக்கப்பட்டது. அது நான்கிங் குறித்து சிறிதளவே கவனம் செலுத்தியது, கொரியப் போர் தொடங்கியபபோது அதுவும் மறக்கப்பட்டு விட்டது.

1994 இல் சேங் தனது கல்லூரிக் காதலரை மணந்துகொண்டு, கலிபோர்னியா சென்றார், அங்கு மகிழ்ச்சியுடன் எழுத்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், ஏற்கெனவே ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் பிரசுரிக்கப்பட்டு, அது அவருக்கு எண்ணற்ற நிதி உதவிகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்திருந்தது.

இரண்டாம் உலகப் போரின் வரலாறு குறித்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டிருந்த வேளையில், அங்கு சுவரொட்டி அளவுக்கு நான்கிங் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை அவர் காண நேர்ந்தது. என்றுமே அவரால் கேள்விப்பட்டிராதவைகளும் தங்கிக்கொள்ள முடியாதவைகளுமான படுகொலைகள் பற்றியவை அவை. அந்தப் படங்களில் மீட்கப்படும் நம்பிக்கை எதுவும் இல்லாமல் ஆதரவற்றுச் சாகவிருந்தவர்களின் பயங்கரப் பார்வையைக் காண முடிந்தது, அதற்குக் காரணமாக இருந்த படைவீரர்களின் முகங்களில் அருவருப்பான புன்னகையை காண முடிந்தது.

கோபக்கனலாலும் அவரைப் பற்றிப்படர்ந்த வெறுப்பினாலும் அவர் ஏறத்தாழ முடங்கிப்போய் நின்றிருந்தார். ஒரு ஜப்பானிய அதிகாரி தனது சமுராய் வாளை உயர்த்திப்பிடித்தபடி நிற்பதையும் அவன் முன்பு கட்டப்பட்டு, மண்டியிட்ட நிலையில் தலை துண்டிக்கப்படப் போகும் சீனக் கைதி இருந்த காட்சியை ஓர் நிழற்படம் காட்டியது. உண்மையில் இதில்தான் அவரது குழந்தைப்பருவக் கொடுங்கனவின் “வாளுடன் ஒரு மனிதன்” நினைவில் வந்தான்.

சேங் அப்போது அழவில்லை. ஆனால் உடனடியாக அவர் தீர்மானித்துக் கொண்டார். “இந்த மக்களின் கதையை நான் சொல்லுவேன்.”

திட்டமிட்ட படுகொலைகள்

ஒரு சிறிய அளவில் கூட செய்திகள் கிடைப்பது கடினமாக இருக்கும் என்று சேங் எதிர்பார்த்தார், ஆனால் அதற்குப் பதிலாக மிகப்பெரிய அளவில் ஆவணங்கள் இருப்பதைக் கண்டார். யேல் டிவைனிடி பள்ளி நூலகத்திலிருந்து, வாசிங்டனில் இருந்த அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் வரை, சீனாவிலிருந்து தைவான் வரை சேங் தனது கதையை ரகசியத் தந்திகள், மதப்பிரச்சாரக் கடிதங்கள், நாட்குறிப்புக்கள், போர்க் குற்றங்கள் விசாரணை சாட்சியம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜப்பானியப் படைவீரர்களுடன் நேர்காணல்கள்.(அந்தப் படுகொலைகள் குறித்து ரீடர்ஸ் டைஜஸ்ட் 1938 இல் வெளியிட்ட இரண்டு கட்டுரைகளையும் அவர் கண்டுபிடித்திருந்தார்). நீண்ட மற்றும் கசப்பான சீன ஜப்பானியப் போரின் மத்தியில் மூன்று மாதங்கள், மானுடம் கொன்றொழிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஒரு காலகட்டத்தைப் பற்றி அவருடைய ஆய்வு கவனம் செலுத்தியது.

1937 நவம்பரில் சாங்காய் நகரத்தை யப்பான் இராணுவம் கைப்பற்றிய பிறகு, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அது நான்கிங்குக்கு வெளியே நின்றது. நகரத்தை “அச்சம்” கவ்வியிருந்த சூழலில் சீன இராணுவம் பின்வாங்கியிருந்தது. “யப்பானிய இராணுவம் இங்கு வருகிறபோது, சமாதானம் மற்றும் அமைதியும் செழிப்பும் திரும்பிவிடும்” என்று ஒரு ஜெர்மானிய ராசதந்தரி எழுதினார்: அவர் கூறியது தவறு.

அதற்கு மாறாக, சரணடைந்த பல்லாயிரக்கணக்கான சீன வீரர்களைச் சமாளிப்பதற்குப் பதிலாக அவர்களைத் திட்டமிட்ட முறையில் அழித்துவிட யப்பானியர்கள் முடிவு செய்தார்கள். 66 –வது காலாட்படைக்கு ஒரு பயங்கரமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது: “போர்க் கைதிகள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.”

ஒரே நிகழ்வில் யப்பானியர்கள் 14,777 சீனப்படை வீரர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டுவதற்கு ஒரு நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டது. இயந்திரத் துப்பாக்கி ஏந்திய யப்பானிய வீரர்கள் கைதிகளைச் சுற்றிவளைத்து ஒரு நதியின் பக்கம் விரட்டிச் சென்றனர். மாலை நெருங்கியபோது, துப்பாக்கிச்சூடு தொடங்கி ஒருமணிநேரம் நீடித்தது.

அவர்கள் அனைவரும் இறந்து விட்டனரா என்பதை ஒவ்வொருவராகத் துப்பாக்கிமுனையால் குத்திக் குத்தி உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இரவு முழுதும் செலவிட்டனர்..

அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த “தலைவெட்டுதல் போட்டியை”, யப்பானிய ஊடகங்கள் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைப் போல செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்தன. பிணங்களைப் புதைப்பதற்குப் பொதுவான இடத்தை உடனடியாகத் தங்களால் ஏற்பாடு செய்யமுடியவில்லை என்று யப்பானிய அதிகாரிகள் குறைப்பட்டுக் கொண்டனர். சில குளங்கள் பிணங்களால் நிரப்பபட்டு, அவற்றிலிருந்த நீர் வெளியேறி, அக்குளங்களே மறைந்துவிட்டன என்று கண்ணுற்ற சாட்சிகள் கூறினார்கள். ஆயிரக்கணக்கான உடல்கள் யாங்ட்சே நதியில் வீசப்பட்டன. குழந்தையாக இருந்தபோது, அந்த நதி இரத்தத்தால் சிவந்து ஓடியதாக சேங் கேள்விப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு இல்லாத குடிமக்கள்

ஒரு மின்பொறியாளரான அவரது கணவர் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த வேளையில், ஐரிஷ் சேங் அவர்களுடைய சிறிய அடுக்குமாடி வீட்டில் அமர்ந்துகொண்டு ஆவணங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார். போர்க்கைதிகள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, சுவர்கள் சூழ்ந்த நகருக்குள் வன்புணர்வும், படுகொலையும் நடந்து கொண்டிருந்தன என்பதைத் தெரிந்துகொண்டார். யப்பானியப் படைவீரர்கள் மக்களை மந்தைகளைப் போலத் திரட்டி கட்டிடங்களின் கூரைகளின் மீது ஏற்றி எரித்துக் கொன்றனர்; மக்களை பாதி உடல்வரை மண்ணில் புதைத்து வெறிநாய்களைவிட்டுக் கடிக்கவைத்துக் கொன்றனர். வயது முதிர்ந்தவர்களையும் குழந்தைகளையும் வாகனங்களை ஏற்றிக்கொன்றனர், அவர்களுடைய உடல்கள் நடைபாதைகளில் விட்டுச் செல்லப்பட்டன. ஆனால் “பெண்களே பெரிதும் துன்புற்றனர், இளையவரா, முதியவரா என்பதெல்லாம் இல்லை, அவர்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை” என்று யப்பானியப் படைவீரர் ஒருவர் நினைவுகூர்ந்தார்.

“நிலக்கரி வண்டிகள் தெருக்கள் வழியே அனுப்பப்பட்டு, பெண்களை நிரப்பிக்கொண்டு வந்து 15-20 படைவீரர்களுக்கு பாலியல் வல்லுறவுக்கும் இழிவுபடுத்தலுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது” குறித்து அவர் கூறினார். பாலியல் வல்லுறவு முடிந்ததும் அந்தப் பெண்கள் ஓடிப்போக முயற்சி செய்தார்கள். “அதன் பிறகு நாங்கள் அவர்களின் பின்புறமாகச் சுட்டுக்கொள்வோம்.”  

பயங்கரமான படங்கள் சிலநேரங்களில் அதிரச் செய்தன, அல்லது கணினி முன்பு அமர்ந்துகொண்டு கண்ணீர் சிந்தி அழச் செய்தன. ஆனால் அவர் கண்ட சில நிகழ்வுகள் அவரால் “அழக்கூட முடியாதவாறு அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.”

பாதுகாப்பு வளையம்

நான்கிங்கின் வீழ்ச்சி உறுதியானதும், அமெரிக்க, ஐரோப்பிய மதநிறுவனங்கள் 15, மற்றும் சில வணிகர்கள் சேர்ந்து 6.5 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள வாழத்தகுதியான தூய்மையான ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றிலும் வெள்ளைக் கொடிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கக் கொடிகளை நெருக்கமாக நடப்பட்டு ஒரு பாதுகாப்பான வளையத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதைப் பன்னாட்டுப் பாதுகாப்பு வளையமாக அறிவித்தனர். அவர்களுடைய அரசுகள் அவர்களை அங்கிருந்து திரும்பிவிடுமாறு கேட்டுக்கொண்ட போதும், கருணைமிக்க அவர்கள் அங்கேயே தங்கியிருந்து பலநூராயிரம் உயிர்களைக் காத்தனர்.

Nanking Massacre

அவர்களின் தலைவர் மிகவும் எளிய ஒரு நாயகர்தான், அவர் ஒரு ஜெர்மானியத் தொழில்வணிகர், நான்கிங் நாஜிக் கட்சியின் உறுப்பினர். ஜான் ராபே சீனாவை நன்கு அறிந்திருந்தார், அதை நேசித்தார், 1908 இலிருந்தே அங்கு வசித்து வந்தார், அரசாங்கத்துக்கு தொலைபேசி மற்றும் மின்சாதனங்களை விற்பனை செய்து கொண்டு அங்கேயே குடும்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். ஓராண்டுக்கு முன்பு யப்பான் ஜெர்மனியின் கூட்டணியில் சேர்ந்தது, இது யப்பானிய அரசாங்கத்துக்கு அவருடைய எதிர்ப்புக்களுக்கு வலுச் சேர்க்கும் என்று அவர் நம்பினார்.

யப்பானியத் தூதரகத்திற்கு கோபத்துடன் ராபே எழுதிய கடிதத்தில் “நேற்று மதப் பயிற்சிக் கல்லூரியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஓர் அறையில் நிரம்பியிருந்த போதே, அவர்கள் மத்தியிலேயே பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவருடைய கடிதங்களும் தொலைவரிச் செய்திகளும் புறந்தள்ளப்பட்டன.

அவநம்பிக்கையுடனும் வெறுப்புடனும் நகரைச் சுற்றித்திரிந்த ராபே தன்னளவில் குற்றத்தைத் தடுக்க முயற்சி செய்தார். வன்புணர்ச்சி மற்றும் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களை அந்த இடத்திலேயே படைவீரர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டார். படையினர் ராபே யைத் தடுக்க முயன்ற போது, அவர்கள் முகத்தில் அறைவது போல நாஜி அடையாளச் சின்னத்தைக் காட்டினார், அவர்கள் பின்வாங்கினர் என்று நான்கிங் இளம் கிறித்தவர் சங்கத் தலைவர் ஜார்ஜ் ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளார்.

1938 பிப்ரவரியில் அவரது நிறுவனத்தால் நாடு திரும்புமாறு அழைக்கப்பட்ட ராபே, படுகொலைகளை நிறுத்துமாறு இட்லருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பதிலாக அவர் கெஸ்டபோவால் (GESTAPO) விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

1938 மார்ச் இறுதியில், வன்புணர்ச்சிகளும் கொலைகளும் பெரும்பாலும் முடிவுக்கு வந்தன. யப்பான் தான் கைப்பற்றிய சீனாவுக்கு அதன் பாடத்தைக் வழங்கியிருந்தது.

யப்பானியர் வருகைக்கு முன்பு, நான்கிங்கில் நகர மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு மில்லியனாக இருந்தது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரைவிட்டு ஓடி விட்டிருந்தனர் அல்லது பாதுகாப்பு வளையத்துக்குள் குவிந்திருந்தனர். ஆனால் நகரில் தங்கிவிட்ட 3,00,000 சீன ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சீனப் படை ஆயுதங்களைக் கீழே போட்ட பிறகு யப்பானியர்களால் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலம் முழுவதிலும் இறந்துபோன அமெரிக்க ஆயுதப்படையினரின் எண்ணிக்கை 2,91,000 மட்டுமே என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

சீனாவின் சிண்ட்லர் 

ஜான் ராபே க்கு என்ன ஆனது என்று கவலைப்பட்ட சேங் அவருடைய பேத்தி உர்சுலா ரெய்ன்ஹார்ட்டிடம் அழைத்துச் செல்லப்பட்டார். ராபே போரில் தப்பிப் பிழைத்திருந்தார், ஆனால் அவரது பெர்லின் அடுக்குமாடிக் குடியிருப்பு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு, அவரது குடும்பம் வறுமைக்குள் தள்ளப்பட்டது.

1948 இல், இந்தத் துயரச் செய்தி நான்கிங்கை அடைந்தது, அங்கு பிழைத்திருந்தவர்கள் 2000 டாலர்களைத் திரட்டி உணவுப் பொருட்களுக்காக அனுப்பி வைத்தனர், அக்காலத்தில் அது ஒரு பெரும் தொகையாகும். நான்கிங் நகர மேயர் அந்தப் பொட்டலங்களை ராபே குடும்பத்துக்குக் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தார். அந்த உணவு அவர்கள் பிழைத்திருப்பதற்காக மட்டுமே ஆனது.

ராபே 1950 இல், மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் இறந்துபோனார், ஆனால் அவர் நான்கிங் குறித்து வியக்கத்தக்க 2000 பக்க வரலாற்றுக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அது மிகவும் துல்லியமாகத் தட்டச்சு செய்யப்பட்டு, படங்களுடன் இருந்தது. அதில் கண்ணுற்ற சாட்சியங்களின் கூற்றுக்கள், தொலைவரிச் செய்திகள், புகைப்படங்கள், செய்தித்தாள் கட்டுரைகள், வானொலி ஒலிபரப்புகளின் எழுத்துவடிவங்களும் கூட, இடம்பெற்றிருந்தன. சேங் மற்றும் பிறரின் வலியுறுத்தியதன் பேரில் ரெய்ன்ஹார்ட் 1996 இல் பொதுமக்களுக்காக அவற்றை வெளியிட்டார். (ராபே நாஜிக் கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும், தூரக்கிழக்கில் வாழ்ந்துகொண்டிருந்ததால், அக்கட்சியின் கொடுமைகள் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்று கூறிக்கொள்கிறார்) சேங் அவரைச் “சீனாவின் ஆஸ்கார் சிண்ட்லர்” என்று குறிப்பிடுகிறார். ஒரு பன்முகத்தன்மைகொண்ட, பல்வேறு பொருள்களைத் தரக்கூடிய ஆளுமைமிக்க அவர் தேர்வு செய்த பாதை எல்லோரும் நன்கறிந்ததே.

நான்கிங் கொடுமைகள் பற்றி வேறு நூல்களும் ஆவணப்படுத்தியிருந்தாலும், 1997 இல் வெளியிடப்பட்ட சேங்கின் சொந்தப் புத்தகம் தான் வேறு எந்த ஒன்றையும் விட பாதிக்கப்பட்டவர்களை மறதியிலிருந்து மீண்டெழச் செய்தது.

‘தி ரேப் ஆப் நான்கிங்’ முதலில் அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும் உள்ள சீனச் சமூகங்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்தது, அதன் பிறகு அது பொது மக்களையும் சென்றடைந்தது. ஒரு சிறந்த விற்பனை நூலாக அது அரசியல் மற்றும் அறிவுலக அதிர்வலைகளை பசிபிக்கைக் கடந்து யப்பானிலும் சீனாவிலும் பெரும் எழுச்சியைத் தூண்டிவிட்டது. அந்தப் புத்தகம், அதைத் தொடர்ந்த அவரது விரிவுரைகள், பொது வெளியில் அது தோற்றுவித்த உரையாடல் மூலமாக நான்கிங் நகரத்தில் என்னதான் நடந்தது என்பதை நினைவில் கொண்டுவர உலகை நிர்ப்பந்தித்ததற்கு சேங் மிகப்பெரிய பங்கினை ஆற்றியுள்ளார்.

நாகரீகமே மிகவும் ஒரு மெல்லிய திசுவைப் போன்றதுதான். மனிதன் சிலநேரங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்குத் தீமை பயக்கும் செயல்களை சில நொடிகளில் போகிறபோக்கில் செய்துவிட்டுப் போய்விடுகிறான். அவனுக்குள் இயல்பாக உள்ளுறைந்து இருக்கும் உணர்வு அதற்கு அனுமதித்துவிடுகிறது. அவனது சொந்தப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாதபோதும் கூட அவை நிகழ்ந்துவிடுகின்றன.

சேங்கைப் பொருத்தவரை, அந்த நூலை எழுதியது, “எனது வாழ்வில் பலவிடயங்களை உளக்காட்சியில் கொண்டுவருவதற்கு உதவியது. அது ஒருபோது மிகவும் அற்பமாகத் தோன்றிய விடயங்களைப் பெரும் மோதல்கள் அல்லது பிரச்சனைகளாகக் காட்டியது. அது வேறெங்கிலும் விட அமெரிக்காவில் உள்ள கருத்துச் சுதந்திரத்தை என்னை மதிக்கச் செய்தது. உலகில் மிகவும் சொற்பமான மக்களுக்கே இந்தச் சுதந்திரம் இருக்கிறது.”

அவர் இரவு நேரங்களில் கணினி முன்பு அமர்ந்திருக்கும் போது, அவர் தனது முகத்தைக் கைகளில் ஏந்திக்கொண்டு, சித்திரவதை மற்றும் கொலைகளுக்குப் பலியான ஒவ்வொரு தனிநபரையும் அவரது மனக்கண்ணில் காணும்போது, அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியத்தைப் பலநேரங்களில் நினைவுகூர்கிறார்.

“ஒருவேளை, இப்போது அவர்கள் ஒருபோதும் மறக்கப்படாமல் இருக்கலாம்” என்கிறார் சேங்.

* * *

நன்றி - ரீடர்ஸ் டைஜஸ்ட் மே 1999

தமிழில் - கிரிஷ் மருது

Pin It