ஆதிச்சநல்லூர், பொருநை அருங்காட்சியகம் மற்றும் கழுகுமலை ஆகிய இடங்களுக்குச் சென்று கண்டுணர்ந்த ஒரு நாள் தொல்லியல் பயணத்தின் அனுபவக் கட்டுரை இது. பயண நாள்: செப்டம்பர் 28, 2026.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் அறம் கிளையானது இந்தப் தொல்லியல் பயண ஏற்பாட்டைச் செய்திருந்தது. பயணத்தில் கலந்துகொள்ள ஆயிரம் ரூபாய் செலுத்தி நான் பெயர் பதிவு செய்திருந்தேன். அன்றைய ஒரு நாள் பயணம், மதிய உணவு மற்றும் நுழைவுக் கட்டணங்கள் உட்பட ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் எனப் பகிர்வு கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள்.porunai museumஅந்தத் தேதியில் என் மகனுக்குப் பள்ளி விடுமுறை என்று பயணம் தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்பு தெரியவந்ததால் அவரும் வருவதாக விருப்பம் தெரிவித்தார். நான் ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இரவு ஏழரை மணிக்குக் கிளம்பும் தொடர்வண்டியில் எனக்கு மட்டும் முன்பதிவு செய்திருந்தேன். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டினைக் கொண்டு கூடுதல் இருக்கை இல்லாமல் மகனுக்கு அரைக் கட்டணம் செலுத்தி, NOSB என்ற வகைப்பாட்டின் கீழ் முன்பதிவு செய்தேன். இந்த முன்பதிவு திட்டத்தைப் பற்றிய தகவலைத் தக்க நேரத்தில் தந்த கௌரிசங்கர் அவர்களுக்கு நன்றி!

இந்தப் தொல்லியல் பயணத்தில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து இதே வண்டியில் பயணித்த ஏறத்தாழப் பத்து பேர் நெல்லை நிலையத்தில் சந்தித்துக் கொண்டோம். அங்கே ரெப்ரெஷ் ஆகிப் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம். அங்கே வசந்த பவனில் காலை உணவை (சுமார்!) முடித்துவிட்டுப் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் தொல்லியல் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பேருந்தை காலை 8:30 மணிக்குச் சென்றடைந்தோம். அங்கிருந்து 9:30 மணியளவில் முதலில் ஆதிச்சநல்லூரை நோக்கித் திட்டமிட்டபடி பயணம் தொடங்கியது.

ஆதிச்சநல்லூரில் தாமிரபரணியின் வலது புறக் கரை மீது பேருந்து நின்றது. அந்த இடத்தில் ஆற்றில் நீர்வரத்து இல்லை; சிறிய அளவு ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆற்றின் வலது கரையில் ஆற்றை ஒட்டிய கரைப்பகுதியில் ஆய்வுகள் தற்போது நடந்து கொண்டிருப்பதால் அங்கு பார்வையிட அனுமதிக்கவில்லை. கரையின் மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சி தளத்தைப் பார்வையிட்டோம். இதுபோன்ற மேடான பகுதிகளில் தான் முற்காலங்களில் இடுகாடுகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடி ஒரு சமதளப் பகுதி. ஆகையால் அது மக்கள் வாழ்விடப் பகுதியாக அறியப்படுகிறது. இரண்டாவதாக அங்கு கிடைத்திருக்கும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டும் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்கிறார்கள். இந்தியாவிலேயே ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் ஆய்வுக்காகத் தோண்டப்பட்ட குழிகளை அப்படியே வைத்துப் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்கள். குழிகள் கண்ணாடியால் போர்த்தப்பட்டுப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாகக் கூரை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழிகளில் முதுமக்கள் தாழிகளும் அவர்கள் பயன்படுத்திய சிறு பொருட்களும் ஆய்வுகள் செய்த போது எப்படி இருந்ததோ அப்படியே தற்போதும் பாதுகாத்து வருகிறார்கள். கற்காலம், இரும்புக் காலம் குறித்த தகவல்களையும் அக்காலங்களில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களையும் பெரிய பேனர்களில் ஆங்காங்கே காட்சிப்படுத்தியும் இருக்கிறார்கள். இந்த ஆய்வுத் தளத்தை ஒட்டித் திறந்தவெளியில் ஆலமரத்தடியின் கீழ் சுடலை மாடன் கோயில் ஒன்றும் இருக்கிறது.porunai museum 1நமது முன்னோர்கள் இறந்தவர்களைத் தாழியில் வைத்து அடக்கம் செய்ததையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை உடன் வைத்ததையும் அறிவோம். அடக்கம் செய்யப்பட்ட பெரிய தாழிகளின் பக்கத்தில் சின்னச்சின்ன தாழிகளும் அவற்றில் அடக்கம் செய்யப்படுவோருக்கு உணவுப் பொருட்கள் முதலியவற்றை வைத்ததையும் வரலாற்றுப் பாடங்களில் படித்திருக்கிறேன். அவற்றை நேரில் காணும் சிறப்பானதொரு வாய்ப்பை இந்தப் பயணம் அமைத்துக் கொடுத்தது. இந்த இடத்தில் பொதுமக்கள் ஆய்வுத் தளத்தை நேரில் காணும் வண்ணம் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக அங்கிருந்த மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

புல்வெளிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பணியாளரிடம் தண்ணீரைக் வாங்கிக் குடித்தோம். தாமிரபரணியின் அற்புதச் சுவை அதில் தெரிந்தது.

அங்கிருந்து காலை 10:45 மணிக்குக் கிளம்பிய பேருந்து அடுத்த அரை மணி நேரத்தில் பொருநை அருங்காட்சியகத்தை அடைந்தது.

இந்தியாவில் மிகப் பழமையான நாகரிகம் பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரையில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பொருநை நாகரிகம் என்பது ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு அங்கே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தப் பொருட்கள் எங்கெங்கு கிடைத்ததோ அந்தந்த ஊர்களின் பெயர்களில் மூன்று தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அரங்கிலும் மூன்று முதல் நான்கு அறைகள் அமைக்கப்பட்டு அதில் ஆங்காங்கே கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றோடு அந்தப் பொருட்கள் குறித்த விளக்கங்களும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் நவீன காலத்திற்கு ஏற்றார் போல ஆங்காங்கே காணொளிக் காட்சிகளையும் (Video) ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவ்வகையான காணொளிக் காட்சிகளில் ஆதிகாலத்தில் மக்கள் இரும்புத்தாதுக்களை உலைகளில் இட்டு இரும்பை எவ்வாறு தயாரித்திருக்கிறார்கள் என்பதை விளக்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.

அங்கு கிடைத்த பொருட்கள் மற்றும் அடையாளங்களைக் கொண்டு இவ்வாறு காட்சிகளை உருவாக்கி இருப்பதாக அங்கு விளக்க உரையாற்றிய அருங்காட்சியகப் பணியாளர் கூறினார். அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு அரங்கிலும் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்லப் பணியாளர்களை நியமிப்பது கூடுதல் சிறப்பு.

பொருநை அருங்காட்சியகத்தில் தொன்மை சார் தகவல்களை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் விதமாக 5D மற்றும் 7D காட்சிகளைத் தனித்தனி அரங்குகளில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 5D காட்சிகளில் மழைச்சாரலில் நம்மை நனையவிட்டுத் தெறிக்கவிடுகிறார்கள். தமிழர்களின் ஐந்து வகையான நிலங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்று வியக்க வைக்கிறார்கள். 7D காட்சிகளில் யானை அருகே நம்மை அழைத்துச் சென்றும் அக்கால மனிதர்களின் அருகில் நின்றும் நம்மைப் பார்க்கச் செய்கிறார்கள். இவற்றிற்குத் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5D அரங்கில் குழந்தைகளும் பெரியோர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். 7D அரங்கு பெரியோர்களுக்கு மட்டுமானது. இதுமட்டுமன்றி நுழைவு அரங்கிலேயே சிறு திரையரங்கம் ஒன்று உள்ளது. இதில் சுமார் நூறு பேர் அமர முடியும். இந்தச் சிறு திரையரங்கில் 20 நிமிடம் ஓடக்கூடிய படம் திரையிடப்படுகிறது. பொருநை நாகரிக வரலாற்று அறிமுகத்தை இந்தப் படம் வழங்குகிறது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதனைப் பார்த்துவிட்டு அரங்குகளைச் சுற்றிப் பார்க்கும்போது தொல்லியல் துறை குறித்து அறிமுகம் இல்லாதவர்கள் கூட இவற்றைப் பற்றிப் பெருமளவு எளிமையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வாறே இந்த அருங்காட்சியகத்தையே திட்டமிட்டுக் கட்டமைத்திருக்கிறார்கள்.porunai museum 2சிவகளையில் இரும்பினால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு இங்கு இரும்புக் காலத்திலும் மக்கள் வாழ்ந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. கொற்கை அரங்கு கடல்சார் வணிகத்தில் நமது முன்னோர்கள் எவ்வாறு நிலைத்திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த அரங்கில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரிப் கப்பல் வியக்க வைக்கிறது.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் குறிப்பிடத்தக்கவை: அளவில் மிகப்பெரிய முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், தங்கப் பட்டம் (நெற்றியில் கட்டுவது), ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கத்தி, ஈட்டி, கோடாரி உள்ளிட்ட இரும்புப் பொருட்கள், ஆதிகாலத்து நெல்மணிகள், கண்ணாடி, பவளம், சங்குகள், நீலமணி, தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், பழங்காலக் கடற்பயண வரைபடம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தவை.

இரண்டு மணி வாக்கில் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தோம். 50 பேரை ஒருங்கிணைத்துக் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்தையும் பார்த்துவிட்டுச் சரியான நேரத்திற்குத் கிளம்பும் திட்டமிடல் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள் அறம் கிளை பொறுப்பாளர்கள். அதுமட்டுமன்றிப் பேருந்தில் பயணத்தின் போது காணப்போகும் இடங்களைப் பற்றியும் விவரித்தார்கள்.

அடுத்ததாகப் பேருந்து கழுகுமலை நோக்கிப் புறப்பட்டது. அங்கிருந்து கழுகுமலை செல்லும் வழியில் கயத்தாறில் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கயத்தாறு வரை வந்தும் கட்டபொம்மனின் மணிமண்டபத்தைக் காண நேரச்சூழல் இடம் தரவில்லை. (இது பயணத் திட்டத்திலும் இல்லை). மாலை ஐந்து மணி வாக்கில் கழுகுமலை அடிவாரத்தை அடைந்தோம். மலையானது மழைச்சாரலோடு எங்களை வரவேற்றது. பயண ஏற்பாட்டாளர்கள் கழுகுமலையில் தட்பவெப்ப நிலையானது தற்போது அடிக்கடி மாறுவதாகவும் முன்னெச்சரிக்கையாகக் குடை அல்லது ரெயின்கோட் எடுத்து வரும்படியும் முன்பே அறிவுறுத்தி இருந்தார்கள். நான் குடையை எடுத்துச் சென்றேன்.

லேசான மழையாக இருந்ததால் முதலில் மலையில் ஏறி வெட்டுவான் கோயிலையும் சமணர் படுகைகளையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று கூறினார்கள். அதன்படி ஏறினோம். சிலர் ரெயின்கோட் அணிந்துகொண்டார்கள், சிலர் குடையைப் பிடித்துக்கொண்டார்கள், சிலர் எதுவுமே இன்றி நடந்தார்கள். மழையில் நனைவது என்பது ஒரு அற்புத சுகம். வெட்டுவான் கோயிலை அடைந்தபோது மழை வலுத்துவிட்டது. நான் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனைப் பாதுகாக்கக் குடை பிடித்துக்கொண்டு சென்றாலும் 90 சதவீதம் நனைந்துவிட்டேன். மழையிலேயே தென்னகத்தின் எல்லோராவாகக் கருதப்படும் வெட்டுவான் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். ஒரே கல்லிலேயே வடிக்கப்பட்ட கோயிலின் வேலைப்பாடுகள் பாதியிலேயே நின்றது வருத்தம் தான். அதுவாவது தற்போது காணக் கிடைப்பதில் மகிழ்ச்சிதான்.

கோயிலுக்கு வெளியே மழை வெளுத்து வாங்குகிறது; உடம்பு சில்லிட்டது. வெட்டுவான் கோயிலின் வாசப்படிக்கு உள்ளே நின்றால் அப்படி ஒரு வெப்பம். நாள் முழுவதும் பெற்ற வெப்பத்தைக் கற்கோவில் தக்கவைத்திருப்பதை உணர முடிந்தது. அங்கிருந்து சமணப் படுகைகளைக் காண இன்னும் சிறிது தூரம் மேலேற வேண்டும். பயணிக்கத் தொடங்கிய போது மழை இன்னும் கூடிப் படிகளின் வழியாக வெள்ளம் கரையோடி வந்தது. நமது 'குடி'மக்கள் மலைகளையும் விடுவதில்லை போல. அந்த மழை வெள்ளத்தில் பாட்டில்களும் உருண்டோடி வந்தன. எச்சரிக்கையாக நடந்து சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைப் பார்த்துவிட்டு இறங்கத் தொடங்கினோம். மழையானது பெய்து கொண்டே இருந்தது; பாறைப் படிகளில் நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. சில இடங்களில் வழுக்கமும் செய்தது. தொல்லியல் பயணமாகச் சென்ற எங்களைக் கழுகுமலையானது சாகசப் பயணமாக மாற்றியதில் மகிழ்ச்சியே!

மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, பயணத்தின் இறுதி நிகழ்வான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்குச் சென்றது. அந்த மண்டபமானது ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் கழுகுமலையின் சுற்றுவட்டாரப் பாதையில் தான் அமைந்திருந்தது. அங்கு பேருந்து நின்ற போது மழையும் நின்றிருந்தது. கூடவே மின்சாரமும் நின்றிருந்தது!

மண்டபத்தில் வாய்ப்பிருந்தவர்கள் ஈர உடைகளை மாற்றிக் கொண்டார்கள். அந்த மண்டபத்தில் மாலை நேர சிற்றுண்டியாக மெதுவடையும் தேநீரும் ஏற்பாடு செய்திருந்தார்கள். மின்சாரம் இல்லாததால் மண்டபத்திற்குள்ளே வெளிச்சம் இல்லை. அதனால் நாற்காலிகளை (சேர்களை) மண்டபத்திற்கு வெளியே இருந்த காலி இடத்தில் எடுத்துப் போட்டு அமர்ந்தோம். அந்தத் திறந்த வெளியில் கருத்தரங்கம் தொடங்கியது. சிறிது நேரத்தில் மின்சாரமும் வந்துவிட்டது. அமர்ந்து கொண்டிருந்த இடத்திற்கு மைக்கும் ஸ்பீக்கரும் ஏற்பாடு செய்யப்பட்டு கருத்தரங்கம் தொடர்ந்தது.

கரிசல்காட்டு எழுத்தாளர் உதயசங்கர் சிறப்புரையாற்றினார். கழுகுமலை, சமணர்கள், பள்ளிகள், பெயர் காரணங்கள் ஆகியவற்றோடு தற்காலத்தில் சமூக முரண்பாடுகளும் எழுத்தாளர் உதயசங்கரின் பேச்சில் அமைந்திருந்தது. சமணப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆண் ஆசிரியருக்கு இயக்கியன் என்றும், பெண் ஆசிரியைக்கு இயக்கி என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்தப் பெயர்கள் தான் பிற்காலத்தில் இசக்கியப்பன், இசக்கியம்மாள் என்று மருவியிருப்பதாக அவர் கூறிய செய்தி எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்தக் கருத்தரங்கின் இறுதியில் வாழ்த்துரையாற்றிய கவிஞர் லட்சுமிகாந்தன் அவர்கள் "இந்த வேளையில் மழையைப் பெய்வித்து இயற்கையே நம்மை வாழ்த்தியிருக்கிறது. இதைவிட நம்மை வாழ்த்துவதற்கு வேறென்ன வேண்டும்?" என்று தற்குறிப்பேற்ற அணிபொதிந்த கவிஞரின் ரசனை வாழ்த்து எனக்கும் இனித்தது. கருத்தரங்கம் நிறைவுற்றதும் இரவு 7 மணி அளவில் திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்தை நோக்கிப் பேருந்து புறப்பட்டது.

இன்றைய தினத்தில் என் மகனுக்குப் புதிய நண்பர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எனக்கும் தான்! பேருந்து பயணத்தின் போது சிறப்பான பாடல்களைப் பாடித் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தியதும் சிறப்பு. இன்றைய தினம் முதல் பகுதி வெப்பமாகவும், மறு பகுதி குளிர்ச்சியாகவும், முக்கியமாகப் பயணித்த அனைவருக்கும் பயனுடையதாகவும் அமைந்தது. மக்கள் வெவ்வேறு வகையான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இதில் நமது மூதாதையர்கள் பற்றிய உண்மைகளை நேரில் கண்டுணரும் பொருட்டு இந்தப் பொருநை கழுகுமலை தொல்லியல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த தமுஎகச அறம் கிளை பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- ந.ஜெகதீசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.