என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, காதலுக்கு மரியாதை போன்ற படங்களை எடுத்த இயக்குனர் பாசில் என்று நம்பிப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

கதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை.

இயக்குனர் பாசில் சாதாரணமான ஒரு கதையையும் அழுத்தமான காட்சியமைப்புகளால் அற்புதமான படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர். ஆனால் இந்த படத்தில் ஏனோ அதை கோட்டை விட்டிருக்கிறார். படத்தில் எந்த காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. முதல் பாதி முழுவதும் ஒரு அமெச்சூர் இயக்குனர் எடுத்த நாடகம் போல் வளவளவென்று போகிறது.

பின்பாதியில் ஸ்கோர் பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் அங்கேயும் ஏமாற்றமே தருகிறார்.

ஸ்ரீகாந்திற்கு அடுத்த ‘சாம்பார்’ பட்டத்தை தாராளமாகக் கொடுக்கலாம். பல இடங்களில் ஓவர் ஆக்டிங். பாடி லாங்குவேஜில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இவருடன் தங்கியிருக்கும் நண்பர்கள் (காமெடியன்கள்) எல்லோரும் படத்தில் காட்சியமைப்புகளால் காட்ட முடியாத உணர்வுகளைத் தங்களது காட்டுக் கத்தல்களால் காட்ட முயற்சிக்கிறார்கள். படு செயற்கையாக இருக்கிறது.

படத்தில் ஒரே ஆறுதல் சோனியா அகர்வால்தான். இயல்பான தனது நடிப்பால் பலவீனமான திரைக்கதைக்கு முடிந்த அளவு முட்டு கொடுத்து காப்பாற்றியிருக்கிறார். என்ன காரணமோ எந்த ஒரு கேமரா கோணத்திலும் அழகாகத் தெரியாமல், கதாநாயகியின் தோழிபோலவே காட்சித் தருகிறார். ஒளிப்பதிவாளரின் குறை?

இந்தப் படத்திற்கு இது போதும் என்று இளையராஜா நினைத்து விட்டார் போலும். இரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி உள்ளன.

படத்தில் எந்த ஒரு காட்சியும் ஆச்சரியப்படுத்தவில்லை. எல்லாம் எதிர்பார்த்தபடியே நகர்கின்றன. படத்தின் பெரிய பலவீனங்களில் இது முக்கியமான ஒன்று.

இயக்குனர் பாசில் திரையுலகில் மறக்க வேண்டிய படங்களில் ஒன்றாகவே ஒரு நாள் ஒரு கனவு இருக்கிறது.

Pin It