காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதில் இருந்துதான் காலா ரஜினியும், ரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

rajini kala

நம்முன்னால் இருவேறு சிந்தனை போக்குள்ள மனிதர்களின் பிரதிநிதியாக ரஜினியும், ரஞ்சித்தும் நிற்கின்றார்கள். ரஜினியின் அரசியல், ரஞ்சித்தின் அரசியலுக்கு நேர்முரணானது. இரண்டு அரசியலும் பொதுவெளியில் ஒரே மேடையில் ஒரு நாளும் கைகுலுக்கிக் கொள்ள முடியாதது. அப்படி கைகுலுக்கிக் கொள்ள முடியும் என்றால், ஏதோ ஒன்று மற்றதால் செரிக்கப்பட்டிருக்கின்றது என்றுதான் பொருள். அம்பேத்கரை உள்வாங்கத் துடிக்கும் இந்துத்துவமும், இந்துத்துவத்தின் மீது காறி உமிழும் அம்பேத்கரும் இன்று இந்திய அரசியலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் முரண்பாடுகள். அம்பேத்கரை அபகரிப்பதன் மூலம் கோடிக்கணக்கான தலித் மக்களின் வாக்குகளை இந்துத்துவவாதிகளால் கைப்பற்ற முடியும். மேலும் தலித் மக்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெருவாரியாக சேர்த்து, அவர்களை பார்ப்பனியத்தின் அடியாள் படையாக பயன்படுத்த முடியும். அதற்காகத்தான் தொடர்ந்து இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை கபாளிகரம் செய்ய முயன்று வருகின்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ, இல்லை பிஜேபி தலைவர்களோ அம்பேத்கரைப் பற்றி புகழும்போதெல்லாம் நமக்குள் ஓர் அசூயை ஏற்பட்டு, ஆத்திரமும், கோபமும் பற்றிக் கொள்கின்றது. அம்பேத்கர் தன் வாழ்நாள் எல்லாம் எதை எதிர்த்தாரோ, எதை அழித்தொழிக்க வேண்டும் என்று விரும்பினாரோ, அந்தச் சக்திகளே அவரை உள்வாங்கிக் கொள்ள முயலும்போது, அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. மோடியின் வாயில் இருந்து அம்பேத்கரைப் பற்றிய புகழுரைகளைக் கேட்கும்போது உங்களுக்கு அசூயை ஏற்படுகின்றது என்றால், நீங்கள் இன்னும் தரம்கெட்டுப் போகாத அம்பேத்கரியவாதியாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். இல்லை அதை மெய்மறந்து கைதட்டி ஆராவரிக்கின்றீர்கள் என்றால், நீங்கள் பார்ப்பனியத்துக்குப் பலியாடாக போகப் போகின்றீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் மோடிக்கு ஏற்கெனவே ஒரு திட்டவட்டமான நோக்கம் இருக்கின்றது, அது ஆர்.எஸ்.எஸ் சின் அஜென்டாவை நிறைவேற்றுவது.

மோடி அம்பேத்கரைப் புகழும்போது அது அப்பட்டமான பொய் என்று நம்மால் மிக எளிதாக அம்பலப்படுத்திவிட முடியும். தலித் வீடுகளுக்கு சோறு, தட்டு, தண்ணீர் சகிதம் வெளியே வாங்கிக்கொண்டு போய் தீட்டுப்படாமல் தன்னுடைய தலித் பாசத்தை பிஜேபியினர் காட்டும்போதும், மாட்டுக்கறியைத் தின்றான் என்று தலித்துகளை அடித்துக் கொல்லும்போதும், அம்பேத்கரின் சிலைகளை இடித்துத்தள்ளும் போதும் அவர்கள் பொதுவெளியில் தாங்களாகவே அம்பலப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் தன்னை ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர், பார்ப்பனியத்தை விதந்தோதும் ஒருவரை வைத்து அவரின் வாயாலேயே அம்பேத்கரின் கொள்கைகளைப் பேச வைக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அது சமூகத்தில் குறிப்பாக அம்பேத்கரை பார்ப்பன மயமாக்கி தலித்துகளை இந்துத்துவ நீரோட்டத்திற்குள் கொண்டுவர முயலும் சக்திகளுக்கு எப்படி சேவை செய்யும் என்பதை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டும்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அரசியல்தான் என்பது வெளிப்படை. அது பார்ப்பனியத்தாலும், முதலாளித்துவ பயங்கரவாதத்தாலும் நசுக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிரான அரசியல். அதை அவரே எந்த ஒளிவு மறைவும் இன்றி அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றார். தன்னை சந்திக்க வரும் பெண்களுக்கு அவர் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொடுத்து, படிக்கச் சொல்கின்றார், தூத்துக்குடி கலவரத்துக்கு விஷக்கிருமிகள், பயங்கரவாதிகள்தான் காரணமென்று சொல்கின்றார், எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்கின்றார். இதன் மூலம் தன்னை பார்ப்பனியத்தையும், அரச பயங்கரவாதத்தையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் ஆதரிப்பவராக அவரே காட்டிக் கொள்கின்றார். அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், மார்க்சிய லெனினியத்துக்கும் தன் சிந்தனை எதிரானது என்பதைத்தான் அவர் தன்னுடைய செயல்பாடுகளால் தொடர்ந்து நிரூபித்து வருகின்றார். இதுதான் ரஜினியின் உண்மை முகம்.

அம்பேத்கரையோ,பெரியாரையோ, மார்க்ஸையோ ஏற்றுக் கொண்டவர்களின் வேலை என்பது ரஜினியின் இந்த மக்கள் விரோத சிந்தனையை அம்பலப்படுத்துவதுதான். ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் அம்பேத்கரின் மீதான பாசத்தை அம்பலப்படுத்துவது எந்தளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு முக்கியமானது ரஜினியின் பாசிச சிந்தனையை அம்பலப்படுத்துவது. ஆனால் ரஜினியின் மூலம் அம்பேத்கரின் சிந்தனையைப் பேச வைத்து அவரை ஒரு புரட்சிக்காரனாக மக்கள் முன் கட்டமைக்க நினைப்பது பார்ப்பனியத்தாலும், முதலாளித்துவத்தாலும் அடித்து நொறுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை வைத்து குறுக்குவழியில் கோடிகளை ஈட்ட நினைப்பவர்களின் செயலாகும். அதைத்தான் ரஞ்சித் இன்று மிகத் திறம்பட செய்துள்ளார்.

pa ranjith kaala and rajinikanth

இதன் மூலம் ரஜினியின் அரசியல் வருகைக்கு தலித் மக்களிடம் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றார், பார்ப்பனியத்திடம் அம்பேத்கரை விற்றிருக்கின்றார். திரையில் ரஜினியை தரிசிக்கும் எளிய தலித் மக்கள் அவரை அம்பேத்கரின் மறு உருவமாக, தங்களுக்கான அரசியலை பேசவந்த புரட்சிக்காரனாக பார்ப்பார்கள். ரஜினியின் ரசிகர்களில் மிகப் பலர் சாதாரண எளிய மக்கள் அதிலும் சேரிகளிலும், குப்பங்களிலும் உழைத்து சாகவே நிர்பந்திக்கப்பட்ட மக்கள் என்பதை கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த உண்மை இன்னும் துலக்கமாக தெரியும். ‘ரஞ்சித் அவர்கள் ரஜினியை வைத்து படம் எடுத்ததால் ரஜினியின் அரசியலை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் கிடையாது’ என்று அவரின் அதிதீவிர பக்தகோடிகள் சண்டைக்கு வரலாம். ஆனால் ரஜினி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக மிகக் கீழ்த்தரமான முறையில் அந்த மக்களை கொச்சைப்படுத்தி தெரிவித்த கருத்துக்கு ரஞ்சித் அவர்கள் சப்பைக்கட்டு கட்டி, அம்பலமான ரஜினியின் பிம்பத்தை தூக்கி நிறுத்த முயன்றார் என்பதில் இருந்து ரஜினியின் அரசியல் பிரவேச அரிப்புக்கு ரஞ்சித் அவர்கள் முழு ஆசியும் இருக்கின்றது என்பதை அவரின் பக்தகோடிகள் தெரிந்து,கொள்ள வேண்டும்.

ரஞ்சித்திடம் அம்பேத்கரின் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலை கலை வடிவமாக மாற்றி விற்பனை செய்யும் திறனும் இருக்கின்றது. விற்பனைக்காரனுக்கு பணம்தான் முக்கியமே ஒழிய அதை யாரிடம் விற்பனை செய்வது என்ற தர்ம நியாய சிந்தனை அல்ல. ரஞ்சித் அதை இப்போது பார்ப்பனியத்திடம் விற்றிருகின்றார். இப்போதைய நிலையில் அம்பேத்கருக்கு அதிக விலைபோகும் இடம் அதுதான். இந்த உண்மை எளிய தலித் மக்களைவிட அம்பேத்கர் விற்பனையாளரான ரஞ்சித்துக்கு நன்றாகவே தெரியும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்பவன் தான் அதிபுத்திசாலி என்பது நம் வழக்கு. அதைத்தான் ரஞ்சித்தும் செய்துள்ளார். ரஜினிக்கு ஒரு புரட்சிக்காரன் பிம்பத்தையும் ஏற்படுத்தியாகிவிட்டது, அம்பேத்கரின் சிந்தனைகளை ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என சாதாரண எளிய மக்களிடமிருந்து சுரண்டி விற்று அதையும் அவரின் குடும்பத்துக்குக் கொடுத்தாகிவிட்டது. ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கிய இந்தியாவின் மிக முக்கிய இயக்குனராக உயர்ந்துவிட்டார். அம்பேத்கர்தான் இன்று கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கின்றார்.

நான் காலாவைப் புறக்கணிக்கின்றேன். ரஜினியின் வாயில் இருந்து வரும் புரட்சி வசனங்கள் எனக்கு அசூயை ஏற்படுத்தலாம். அதற்குக் காரணம் அம்பேத்கரையோ, பெரியாரையோ, மார்க்சையோ மக்கள் விரோதிகளின் முகங்களில் நான் தரிசிக்க விரும்புவதில்லை. சில பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்ட்களும், மார்க்சிஸ்ட்களும் அப்படி தரிசிக்க விரும்புகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். அதற்கு அவர்கள் கருத்துச் சுதந்திரம், கலை, நடிப்பு என்று ஏதாவது காரணம் வைத்திருப்பார்கள். அதே சமயம் அவர்களின் மனதுக்குள் ஒரு கணக்கும் வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குதான் காரணத்தைத் தேடித் தேடி கண்டுபிடிக்க அவர்களை தூண்டிக்கொண்டே இருகின்றது.

- செ.கார்கி

Pin It