இந்த உலகம் இரு பக்கங்களை கொண்டது. ஒன்று ஆள்பவர்கள். இன்னொன்று ஆளப்படுபவர்கள். ரெம்ப சுலபமான விளையாட்டு தான் இந்த வாழ்க்கை. ஆனால் கவனம் பிசகினால் எலிமினேட் தான். 

squid gameதன் தன் தேவைகளால் கஷ்டப்படும் நபர்கள் நாயகன் உள்பட பணத்தேவைக்கு ஆட்பட்டு அந்த தீவில் போய் மாட்டிக் கொள்கிறார்கள். போகோ சேனலில் வரும் விளையாட்டு போல தான் இதில் வரும் விளையாட்டுகளும். உதாரணத்துக்கு பச்சை லைட் எறிந்தால் முன்னோக்கி நகர வேண்டும். சிவப்பு லைட் எறிந்தால் நின்று விட வேண்டும். ப்பூ இவ்ளோ தானா... என்று தான் விளையாடுபவர்களைப் போலவே நாமும் நினைப்போம். ஆனால்... சிவப்பு லைட் எரியும் போது நின்றும் நிற்காமலும்.. நிற்க தடுமாறுபவர்கள்  உடனடியாக எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

சரி வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் நுழைந்து கொள்ளலாம் என்றால்... அது தான் இல்லை. இங்கே எலிமினேட் என்பது சுடப்படுவது. பட் பட்டென்று சுட்டுக் கொண்டே போகிறார்கள்.. முகமூடி அணிந்த காவலர்கள். முகமற்ற மனிதனின் சித்து விளையாட்டு சத்தமில்லாமல் சீட் நுனிக்கு தள்ளுகிறது நம்மை.

எல்லாமே ரூல்ஸ் தான் அந்த தீவில். எங்கிருந்து வருகிறார்கள். இந்த தீவு எங்கிருக்கிறது எல்லாமே மர்மம் தான். ஆனால் போட்டிகளில் வென்று கடைசி வரை தாக்கு பிடிப்பவர்களுக்கு பெருந்தொகை கொடுக்கப்படும். அந்த பண மூட்டையை அவர்கள் தங்கும் இடத்தில் நடுவே தலைக்கு மேல் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இந்த வாழ்வின் பெருங்கனவுகள் நம் தலைக்கு மேல் தொங்குவது போல.... இந்த பிரபஞ்சத்தின் சிறு துகள் பூமியாக இந்த பெரும் வெளியில் தொங்குவது போல. எல்லாமே ஒன்றிலிருந்து ஒன்று ஈர்க்கப்பட்டு இழுபட்டு தொங்கி கொண்டு தான் இருக்கிறது என்ற இயற்பியல் விதி போல.. ஒரு குறியீடு அந்த பண மூட்டை. 

காவலர்களும் ஒருவருக்கொருவர் தேவை இல்லாமல் பேசிக் கொள்ள கூடாது. யாரின் முகமும் யாருக்கும் தெரியாது. எல்லாருக்கும் நம்பர் தான். தனி தனி அறையில் தகித்த தவம் தான் ஒவ்வொரு நாளும். எல்லாமே கண்காணிக்கப்படும். இதற்கிடையே வழக்கம் போல மனிதர்களுக்கிடையே மாறி மாறி ஏற்படும் -ஏற்படுத்தும்...வஞ்சம்.. சண்டை... கொலைவெறி என்று அதுவும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகம் தான். அவர்களுக்கு ஆட்கள் குறைய வேண்டும். அவ்வளவு தான். ஊரை ரெண்டாக்கி வேடிக்கை பார்க்கும் கூத்தாடிகள் அந்த துப்பாக்கிகள். 

தினம் ஒரு போட்டி. கிட்டத்தட்ட பிக் பாஸ் மாதிரி தான். ஆனால் பிக் பாஸில் பண்ணும் ஆதிக்க ஆணவ மயிறு மட்டை சேட்டைகள் எல்லாம் பண்ண முடியாது. பொட்டென்று போட்டு தள்ளி விடுவார்கள். மூடிக்கொண்டு விளையாட வேண்டும். அளவு சாப்பாடு தான். லைனில் நிற்கும் அள்ளு விடும் தள்ளுமுள்ளு.

நம்பர் 1 போட்டியாளரானா ஒரு வயதானவரும் நாயகன் குழுவில் இருக்கிறார். அவர் கதை சோகத்திலும் புன்னகைக்கும் அனுபவம் வாய்ந்தது. அவர் கயிறு இழுக்கும் போட்டியில் சொல்லும் டிப்ஸ்கள் அட்டகாசம். முதலில் மூச்சை பிடித்துக் கொண்டு வானத்தை நோக்கி தங்களை சரித்துக் கொள்ள வேண்டும். எதிர் அணி இழுத்து பார்த்து இழுத்து பார்த்து சோர்ந்து போகும் அந்த நொடியில் விட்டு விட்டு இழுக்க வேண்டும். ஒருமாதிரி குதித்து குதித்து என்று அவர் சொல்லும் வெற்றிக்கான வழிமுறைகள் ஆச்சரியப்படுத்தியது.

வாழ்வா சாவா போட்டி தான். இன்னொரு வாய்ப்பு அங்கே இல்லை. ஒரு முறை ஒரே முறை தான் உங்களிடம் நீங்கள் கிடைப்பீர்கள். தக்க வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் அண்டர்லைன்.

இதற்கிடையே உள் குத்து உறுப்பு திருட்டு என்று கதை நகர்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தின் தேவை மிக அனாயசமாக அந்த தந்த மனிதனிடம் வந்து நகர முடியாத இலக்கில் வாழ்வை பணமூட்டைக்குள் கொட்டி குவித்திருக்கிறது. காரணம் பிடபடாத போது காரியத்தில் வேகமாய் இறங்குவான் மனிதன்.

போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை. சமூக வாழ்வின் அங்கத்தில் பணம் எப்படி ஒரு ஆயுத எழுத்தாக மாறியது என்பதை நாமே நம்மில் இருந்து உணர செய்யும் சீட் நுனி பதைபதைப்பு ஒவ்வொரு கேம் ஆரம்பிக்கையிலும் உணர முடியும். விளையாட்டென்னவோ சிறு பிள்ளை விளையாட்டு போல தான். ஆனால் தம் கட்ட வேண்டிய இடத்தில் மூச்சு விட்டு விட்டால் ஒரே மூச்சு போயே போச்சு தான். இந்த கேங்களில் ஒரு இன்டரெஸ்டிங் கதாபாத்திரம் வரும். ஆரம்பத்தில் எனக்கு குழந்தை இருக்கிறது விட்டு விடுங்கள் என்று கதறும் அந்த பெண் பாத்திரம் அடுத்தடுத்த நிகழ்த்தும் கூத்தெல்லாம் ஒற்றை உயிரை எப்படியாவது ஒளித்து வைத்துக் கொள்ள நடத்தும் அதிரி புதிரி நாடகம். கோக்குமாக்கான மனநிலை கொண்ட அந்த பாத்திரத்தின் மீது இனம் புரியாத ஈர்ப்பு வர ஆரம்பித்து விடுகிறது நாயகியைத் தாண்டியும்.

முக்கியமான கட்டங்களில் வேண்டும் அந்த BGM அடி மனதில் இருந்து வழு வழுவென நெளிந்து கொண்டு எதையோ நெற்றிக்கு இழுத்து வருகிறது. ஆனால் அந்த BGM ஐ நாம் எங்கேயோ கேட்டது போலவே ஓர் உள்ளுணர்வு. ராஜா முன்னமே போட்டு தொலைச்சிருக்காரோ என்னவோ.

நீண்ட நாட்களுக்கு பிறகு விறுவிறுப்பாய் வாய்த்த தொடர். முதல் அரை மணியிலேயே அதிர செய்து முன்னேறி விடுகிறது. மூச்சருகே பரபரக்கும் மூளையோடு தான் பார்க்க முடிகிறது. இன்னும் பார்த்து முடிக்க வில்லை. என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை. என்ன ஆனாலும் அது தேவையின் நிமித்தம் மிஞ்சிக் கிடக்கும் நினைவுகளின் கூடாரம் தான். உயிர் என்பது ஒரு முறை வாய்த்த உன்னதம். அது நகர்த்திக் கொண்டு போகும் சாகசம் ஒரு போதும் நம் கைகளில் இல்லை. மாறாக இந்த உடலின் வடிவத்தில் தான் பஞ்ச பூதங்களின் ஆக்கிரமிப்பு தன்னை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வயிறு எனும் மாய பள்ளத்தாக்கில் வாழ்வியல் கலை மிக மிக குரூரமாக ஒவ்வொரு நாளையும் செதுக்கிக் கொண்டே இருக்கிறது.

மர்மத்தின் கூடாரம் அந்த தீவு மட்டுமா. அதை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்த முகமூடி தலைவனின் அரூபமும் தான்.

Squid Game - Korean - in Netflix

- கவிஜி

Pin It