இத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்கக் கூடாது.

சினிமா இலக்கணத்தை தன் நிறத்தால் மாற்றி அமைத்த கலைஞன். கோபமோ... குணச்சித்திரமோ... காதலோ... கள்வனோ.... இராவணனோ... இரணியனோ.... படத்துக்குப் படம் தன்னை வெகு இயல்பாக மாற்றிக் கொண்ட நடிகன். "இதயம்" படத்தில் படம் முழுவதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நடித்ததில் படம் முடியும் வரை நாமும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தான் பதைபதைத்து அமர்ந்திருந்தோம். காதலின் வலியை இத்தனை தத்ரூபமாக பார்வையாளனுக்குக் கடத்திய வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.

"புது வசந்தம்" படத்தில் புது முயற்சி என்று ஒரு இயக்குனர் முன்னேறி வந்தாரென்றால் அதற்கு அந்த வாய்ப்பு கொடுத்த இந்த மனிதன்தான் காரணம். "பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா... பால் நிலவ கேட்டு..." - இன்னும் கேட்கிறது.

murali"இரவு சூரியன்" என்றொரு படத்தில் கண்கள் இழந்து பழி வாங்கும் ஒரு கதாபாத்திரம். படம் ஆரம்பித்ததில் இருந்து அப்படி மிரட்டி இருக்கும். "பாலம்" என்றொரு படத்தையும் அப்படி சொல்லலாம். 80களின் இறுதியில் நிறைய புது முயற்சிகளில் இறங்கினார் என்பதற்கு சாட்சி நிறைய படங்கள் உண்டு. "இரணியன்" படத்தை காலத்துக்கும் கொண்டாடலாம். அத்தனை போராட்டத்தனமான நடிப்பு. நடிப்பென்பதைத் தாண்டி அதில் இருக்கும் வீரமும், கோபமும்.. ஒரு சக போராளியை நினைவூட்டும். ஆண்டான் அடிமை அவமானத்துக்கு "இரணியன்" எடுத்தது அசுரவதம். 'என்னைக் கொல்ல சேர்ந்த என் மக்கள் கூட்டம் உன்னையும் கொல்ல கூடுண்டா"ன்னு கத்தும் போது அதிரும் அரங்கம்.

"என்ன மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக.. அந்த மன்னார்குடில கேட்டாக" ன்னு ரேவதி பாடும்போது.. அந்தப் பாட்டும் படமும் நமக்கு மனதுக்கு நெருக்கத்தை உண்டு பண்ணும். மனதின் நெருக்கத்தில் தான்.... "ஆத்தாடி பாவாடை கூத்தாட" என்று கிணற்றைச் சுற்றும் காமம் உள்ளூர சுரக்கும்.

"மணிக்குயில் இசைக்குதடி.. மனமதில் மயங்குதடி.." பாட்டு இப்போது கேட்டாலும்.. மனதுக்குள் மைக் பிடித்துக் கொண்டு அந்த நாயகன் வாயசைப்பதை உணர முடியும். "துள்ளி த் திரிந்ததொரு காலம்.....பள்ளி பயின்றதொரு காலம்...காலங்கள் போகுது பூங்குயிலே பூங்குயிலே...." என்று "என்றும் அன்புடன்" படத்தில் பாடும் அந்தத் தேடல் கொண்ட மனிதனை நாம் நம் பால்யங்களில் நம் வீதிகளில் கண்டிருக்கிறோம்.

"இந்த கண்ணு என்னைக்காவது நல்லத பார்த்துருக்கா... இந்த கை என்னைக்காவது நல்லது செஞ்சிருக்கா... இந்தக் காது என்னைக்காவது நல்லதைக் கேட்ருக்கா...." ன்னு சேரனின் வசனத்தை கன‌க் கச்சிதமாகப் பேசிய கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அத்தனை எளிதாக நாம் கடந்து விடவே முடியாது. ஊனத்தின் கதவுகளைத் திறந்து விட்டு உள்ளே பூங்காற்றை நுழைய விட்ட பெருமை இந்த "என் ஆசை மச்சான்" தம்பிக்கும் உண்டு. "அதர்ம"த்தையும் "பகல் நில"வையும் இப்போதும் போர் அடிக்காமல் காண முடியும்.

ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகன். நல்ல சிற்பியிடம் சிக்கிய போதெல்லாம் சிறந்த சித்திரமாக மாறியவன்.

"தினந்தோறும்" படத்தில்... காதலிக்காக புத்தகம் வாங்கச் செல்லும் வேகம்.. வேலை இல்லை என்று ஏற்படும் சுய கழிவிரக்கம் எல்லாம் சேர்ந்து கோபமாய் மாறி... காதலின் நுனியில் சண்டையிடும் காட்சியில்... சுவலட்சுமியைப் பார்க்கும் அந்தக் காதலின் ஓரப்பார்வை போதும்... இந்த நடிகனின் பாவனைகள் கருப்பு வெள்ளைக்கு....சற்று முன் பின் இருக்கும் என்பதற்கு.

"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது... மனசுக்குள்ள பஞ்சவர்ணக் கிளி பறக்குது...." பாடலில் விஜியோடு சேர்ந்து போடும் ஆட்டத்தின் ஆழ் மனதில் விளிம்பு நிலை மனிதனின் தேடல் எப்போதும் அரித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்க வேண்டாம்... "முரளி" என்ற அற்புதமான நடிகனை இந்தக் காலம் இத்தனை சீக்கிரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்...

"ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்.. டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்,...."

பாடல் இசைக்கிறது... என்னையும்... இதோ இனி உங்களையும்....!

- கவிஜி

Pin It