மயக்கம் என்ன என்றொரு திரைப்படம் பார்த்தேன். மிக நல்ல(!!!!) படம். அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்! வீட்டுக்குச் சென்று இருக்கிற பெண்களை அடியுங்கள்!! உதையுங்கள்!!! கெட்டவார்த்தைகளால் திட்டுங்கள்!!!!

ப‌ட‌ம் என்ன‌ சொல்கிற‌து?

mayakkam_enna_400ஆண் என்பவன் சிங்கம். அதாவது மிருகம். அவன் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களைச் செய்கின்றானோ அந்த அளவுக்கு அவனை அழகான படித்த பெண்ணுக்கு அதே காரணங்களால் பிடிக்கும். அவன் பரதேசியாக இருக்கலாம்; உதவாக்கரையாக திரியலாம்; அவனுக்கு வெறி வரலாம்; குடித்துவிட்டு அடிக்கலாம். கல்லாக வேண்டாம். பைத்தியம் பிடித்தாலும் கணவனே பெண் காணும், பெண் காண வேண்டிய ஒற்றைத் தெய்வம். அவன் கட்டிய மனைவியை வயிற்றில் கருக்கலையும் அளவுக்கு எத்துவான். அனைத்தையும் சகித்துக் கொண்டு, அந்த‌ பொறுக்கியை வாழ்வின் உச்ச‌த்துக்குக் கொண்டு செல்ல‌ வேண்டிய‌ பொறுப்பு அவ‌ளுக்கு இருக்கிற‌து. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ப‌தை நிரூபிப்ப‌து அவ‌ளுக்கு இட‌ப்ப‌ட்ட‌ ப‌ணி.

ஏனெனில் கணவன் என்ப‌வன் கடவுள்.

முண்டக்கலப்பை என்ற சொல்லின் மீது உருவான அந்த தியாக தீபிகையின் காதல் கரு கலைந்த பின்னும் அவனது பிள்ளையைத் தாங்குவாள். அவனோடு பேசமாட்டாள். ஆனாலும் அதற்கெல்லாம் பின்னும் அடிமையாய் அவன் பின்னாலேயே திரிவாள். திரியவேண்டுமல்லவா... இல்லாவிட்டால் அவளென்ன பத்தினி....? அதற்குப் பின்னால் அவனுக்கு மெல்ல நல்ல புத்தி வரும். அந்த நேரத்தில் அவள் பிரசவத்தை நெருங்குகிற தாய்மையோடு காத்திருப்பாள். அவனெடுத்த ஒற்றை புகைப்படத்துக்கான சர்வதேச விருது கிடைக்கும். அதை வாங்கியவன் இந்த உலகத்திலேயே என்னை இந்த மேடையில் விருது பெறுமளவு உருவாக்கிய தேவதை என் மனைவிதான் என்று புல்லரிப்பான். படம் முடியும்.... விவசாயம் செழிக்கும். பன்னாட்டு முதலீடு குறையும். நாடு சுபிட்சமாகும். சமதர்மம் ஓங்கும்...

யாரும் ஓடிவிடக்கூடாது. இப்போது தான் நம்ம விஷயமே ஆரம்பிக்குது... அதுக்குள்ளே விமர்சனம் முடிந்ததுன்னு நீங்களா நினைச்சா.... பாகவதர் மகாவெறுப்பாகிவிடுவார்..

மயக்கம் என்ன திரைப்படத்தை நிராகரிக்கிறேன். அதற்கு முன் சில வரிகள்.

******************

1.அய்யா உயர்திரு செல்வராகவனார் அவர்களே.... உங்களது உடன்பருப்பை வைத்து தாங்கள் கிண்டுகிற பொங்கல் எல்லாமே மனப்பிறழ்வுப் பொங்கலாகவே இருக்கின்றதே ஏனய்யா...? கோடிக்கணக்கான தமிழ்ச்சமூக வாழ்க்கையில் தங்களது காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, இப்போது மயக்கம் என்ன... நடுவில் ஒரு தெலுங்கு படம் அது மட்டும் மனப்பிறழ்வு படமல்ல... ஏன்...?மீண்டும் தமிழில் ஆயிரத்தில் ஒருவன் என்ற அபத்தக்குப்பை. இங்கே சொல்லவேண்டிய ஏன்..? தெலுங்கு நுவ்வு மதர்டங்கூ....தமிழ் அதர் டங்கூ என்பதாலா...? தமிழன் இளித்தவாயனா...? அல்லது உம் பார்வைக்கு கிறுக்கனா..?

2.தங்களுக்கு  மிகவும் பிடித்த இடம் கழிவறை என்பதைத் தொடர்ந்து உங்கள் படங்களில் கக்கூசில் காமிரா வைத்து அரும்பணியாற்றி வருவதால் தங்களுக்கு கக்கூசில் கலர்ப்படம் எடுத்த கண்ணியவாளப் புண்ணியவான் என்ற பட்டத்தை கொண்டித்தோப்பு ரசிகசபா ஷார்பாஹ தருகிறோம். வெச்சுக்கோங்க தலைவா.

3.கணவன் ஒரு மிருகமாக இருந்தாலும், மன நிலை பிறழ்ந்தாலும், அவனோடு உடன் கட்டை ஏற்றி அழகுபார்க்குமளவுக்கு சீழ்பிடித்து இருக்கிறது உங்களது முற்போக்கு, பெண்ணிய சிந்தனை. வாழ்த்துக்கள்.

4.தமிழக இளைஞர்கள் எல்லோரும் கடற்கரையில் இரவுகளில் அமர்ந்து கொண்டு ஜீனியஸ் என்று ஒரு அபத்தமானவனை அழைத்துக்கொண்டு பீர் அடித்துக்கொண்டு சரக்கடித்துக்கொண்டு சிகரட் புகைத்துக்கொண்டு அமர்ந்தபடி தான் நேரத்தை கழிக்கிறார்களா..? இதன் மூலமாய் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வராகவ டைரடக்கர் அவர்களே..? அது இருக்கிற நிலைமை என்றால் ஆங்காங்கே என்பதனை நிறுவ வேண்டுமல்லவா..? கதாநாயக மிருகத்தை ஏன் அப்படிப் படைக்க வேண்டும்..?தங்கள் பணியா இல்லை பிணியா படமெடுப்பது..?

5.முண்டக்கலப்பை போன்ற சொற்களை குடும்பங்கள் உச்சரிக்க வேண்டுமா..?அருஞ்சொற்பொருள் வேலையெல்லாம் உமக்கெதற்கு...? ஏற்கனவே சோழர் பற்றி எல்லாம் வாந்தி எடுத்துவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவம் தந்த தைரியமா..?

6.தன் மகனுக்கும் அவன் நண்பனுக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினையை தீர்த்துவைக்க இருவரிடமும் பேசுவதைக் கேட்காமல் மதுக்கிண்ணத்தை மாறி மாறி நீட்டுகிற வெண்தகப்பர் ஒருவரை காண்பிக்கிறீர்.... அட்டகாசமய்யா...? ஏற்கனவே அரசாங்கம் மதுவிற்கிறது. அரசியல்வாதிகள் மது உற்பத்தி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 30 சதவீத காட்சிகள் உமது படத்தில் மது பற்றியதாகவே இருக்கிறதே....வாழ்க உம் தொண்டு. வயிறு எரிகிறது இயக்குனரே..... உங்கள் வசதியை சமூகத்தின் மீது வாந்தி எடுக்காதீர்கள். சமூகம் திருப்பி உமிழும் என்பதை மறந்துவிடாதீர்க‌ள்.

dhanush_3607.நீங்கள் நிறுவுகிற காதல் மடத்தனமானது. படைக்கிற பாத்திரங்கள் மனம்பிறழ்ந்தவர்கள். பேசுகிற வார்த்தைகள் ஆபாசமானவை. இவற்றையெல்லாம் உங்களுக்கு வேறு யாருமே சுட்டிக்காட்டுவதில்லையா..? உங்கள் படங்களில் பங்குபெறுகிற மற்றெல்லாரும் மிகச்சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. மற்ற எல்லாரையும் சிறப்பானவர்களாகத் தேர்வு செய்கிற தாங்கள்.... மற்ற எல்லாரின் பங்களிப்பை அங்ங‌னமே உறுதி செய்துகொள்கிற தாங்கள்.... நீங்களே இயக்குநர் என்பதால் உங்களை மன்னித்து விடுகிறீர்கள் போலும். காலம் மன்னிக்காது செல்வராகவன்!!

8. உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். உயரங்களை ஏறி அடைதல் சிரமம். வீழ்ச்சி சுலபமானது; வேகமானதும் கூட.

9.க‌ண‌வன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌னாக‌ இருந்தாலும், 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன், புல்லானாலும் புருஷ‌ன்' என்று வாழவேண்டிய‌துதான் இந்து சமூகத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாக இருந்தது. பெரியார், அம்பேத்க‌ர் போன்ற‌ த‌லைவ‌ர்கள் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெற்றுத்தந்த உரிமைகளினாலும்தான் இந்தத்‌ த‌லைமுறை பெண்க‌ள், பிடிக்காத‌ க‌ண‌வ‌னை நிராக‌ரிக்கும் திற‌னுடைய‌வ‌ர்களாக‌ இருக்கிறார்க‌ள். நன்கு ப‌டித்து, வேலைக்குச் செல்கிற‌, பொருளாதார‌ ரீதியாக தற்‌சார்பு உடைய‌ பெண்க‌ள் ம‌ட்டுமே, விவாக‌ர‌த்து என்ற‌ தைரிய‌மான‌ முடிவை எடுக்கிறார்க‌ள். ஆணாதிக்க‌ வக்கிர‌ம் பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு அது ச‌கிக்க முடிய‌வில்லை. அவர்களில் ஒருவரான செல்வராகவன், 'எவ்வ‌ள‌வு ச‌ம்பாதித்தாலும் நீ க‌ண‌வ‌னுக்கு அடிமையாக‌ இருக்க‌ வேண்டும்' என்ப‌தை ஒரு முழுநீள‌ சினிமாவாக எடுத்து இருக்கிறார்.

இத‌ற்காக‌வே 'மயக்கம் என்ன' படத்தை முழுவதும் நிராகரிக்கிறேன், அதில் ஒளிப்ப‌திவாள‌ர் ராம்ஜி, இசைய‌மைப்பாள‌ர் ஜீ.வி.பிரகாஷின் சிற‌ப்பான‌ பங்க‌ளிப்பு இருந்த‌போதும்...

நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

Pin It