வெடிவெடிக்கும் அடிமைகளின் விடுதலைக்கு

        விடைகிடைக்கும் அடியாவும் இடிஇடிக்கும்

அய்யாபோல் கண்ணாடி இருவருக்கும்

        சுடர்வளையக் கண்ணாடி அணிந்திருக்கும்

சுடுகின்ற பீரங்கி போலிருக்கும்!

        படமெடுக்கும் வடமொழிகள் நடுநடுங்கும்

பகல்தொடங்கும் அவன்கவிக்குள் உலகடங்கும்!

 

பாவேந்தர் செம்மைநிலம்; நீல வானம்

        பாபாசா கேப் இரண்டும் சேர்ந்தால் தான்நல்

பூவேந்தும் வளமான பூமி உண்டு

        புதியதொரு உலகமுண்டு உழைத்து ழைத்துச்

சாவேந்தி தீவாகப் பிரிந்தோர் எல்லாம்

        சமுத்திரமாய் ஒன்றாகக் கற்பித் தார்கள்!

மாவீரர் ஈரோட்டுப் போர்ச்சிங்கத்தின்

        மானமிகு தடந்தோள்கள் இரண்டு பேரும்!

 

புத்தகத்தை அம்பேத்கர் கையில் வைப்பார்

        பொருள்என்ன புரிகிறதா? கல்வி கற்றால்

மொத்தத்தில் மேல்சாதி கல்வி கற்கா

        மூடரெலாம் கீழ்சாதி எனச்சொல் லத்தான்

புத்தகத்தைக் கையினிலே வைத்திருப்பார்

        புரட்சிமிகு பாவேந்தர் தமிழச் சிக்கோர்

கத்தியினைத் தந்ததுஏன்? சில விலங்கு

        கவ்வாமல் இருப்பதற்கே அதைக்கொடுத்தார்!

 

பள்ளியிலே சேர்க்கவில்லை அம்பேத் காரை

        பல்கலைக் கழகத்தை எங்கே யேனும்

பள்ளியிலே சேர்ப்பாரா? சேர்க்க வில்லை.

        படித்தமேதை அவரைப்போல் உலகில் இல்லை!

நள்ளிரவும் அவர்அன்று விழித்ததாலே

        நாட்டுமக்கள் நிம்மதியாய்த் தூங்கு கின்றார்

வெள்ளம்போல் தமிழரினம் என்ற போதும்

        விரிவுலக மானுடத்தைத் தாங்கு கின்றார்!

Pin It