வீட்டுக்குள் தனி மனிதர்களின் நம்பிக்கையோடு முடங்கியிருந்த விநாயகன் வழிபாட்டை வீதிக்குக் கொண்டு வந்து அரசியலாக்கின மதவெறி சக்திகள்.

மத நம்பிக்கையாளர்களாக இருப்பது அவரவர் தனி உரிமை. மத உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைத்து, சமூகத்தில் பிளவுகளையும், கலவரங்களையும் உருவாக்குவது சமூக, சட்ட விரோத செயல்பாடுகளேயாகும். இவற்றைத் தடுக்க வேண்டிய கடமை ஆட்சிக்கு உண்டு.

periyar_668மதக் கலவரங்கள் இல்லாத தமிழ்நாட்டில் ‘விநாயகன் அரசியல்’ ஊர்வலங்கள் மதத்தை அரசியலாக்கத் துடிக்கும் சக்திகளால் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னையில் அதற்கு முன் இஸ்லாமியர்கள் அமைதியாக நடத்தி வந்த ‘மீலாது நபி’ ஊர்வலத்துக்கு போட்டியாக வீதிக்குக் கொண்டு வரப்பட்டான் ‘விநாயகன்’. கலவரங்கள் வெடித்தபோது ஒரு கட்டத்தில் ‘மீலாது நபி’ ஊர்வலமும் வேண்டாம்; ‘விநாயக’ ஊர்வலமும் வேண்டாம் என்று அரசு தலையிட்டு நிறுத்தியபோது, இஸ்லாமியர்கள் மீலாது நபி ஊர்வலத்தை நிறுத்திக் கொண்டனர். ஆனால் ‘ராம கோபாலன்கள்’ விநாயகன் ஊர்வலத்தை மட்டும் தொடர்ந்தார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி வழியாகவே ‘விநாயகன்’ ஊர்வலம் வருவான் என்று அடம் பிடித்தார்கள்.

கத்தோலிக்கர்களும், இஸ்லாமியர்களும் அதிகமாக வாழும் கடற்கரை கிராமங்களான குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு, நெல்லை மாவட்டத்தின் இடிந்தகரை, தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பாறு, காயல்பட்டிணம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, நாகை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை, சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் திருவல்லிக்கேணி பகுதிகளில் விநாயகன் ஊர்வலத்தை முன் வைத்து ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, கலவரத்தை உருவாக்கினார்கள்.

தமிழ்நாட்டில் இப்போதும் எத்தனையோ கோயில்களில் ‘உற்சவக்’ கடவுள் வீதிகளில் ஊர்வலமாக வந்து போகின்றன. இந்த ஊர்வலங்கள் ஏற்படுத்தாத கலவரத்தை, விநாயகன் ஊர்வலங்கள் மட்டும், ஏன் ஏற்படுத்துகின்றன என்பதை சிந்தித்தாலே உண்மை விளங்கி விடும்.

தமிழ்நாட்டில் இந்த ‘விநாயகன்’ சிலைகளை விதம்விதமான கற்பனையில் உருவாக்கி, வீதிக்கு வீதி நிறுத்தி, இரண்டு வாரங்கள் விழா நடத்தி பிறகு ஊர்வலமாகக் கொண்டு போகும் ‘அரசியல் பிரச்சாரத்துக்கு’ துணை நின்று ஊக்குவிப்பவர்கள் வடநாட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள். உள்ளூரில் அப்பாவி இளைஞர்களுக்கு ‘தரவேண்டியதை எல்லாம் தந்து’ இந்த நிகழ்வுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

‘விநாயகன்’ வழிபாடு என்பதே தமிழர்களுக்கு கிடையாது. இந்த ‘விநாயகன்’ வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்!

தொல்காப்பியம் - சங்க இலக்கியங்கள் - மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற தமிழர் மரபு இலக்கியங்களில் விநாயகன் பற்றியோ, விநாயக வழிபாடு பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. கி.பி.641-642 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் நரசிங்கவர்மன், மராட்டியப் பகுதியான வாதாபிக்கு படை எடுத்துச் சென்றபோது, நரசிங்கவர்மன் படைத் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் என்பார், தனது போர் வலிமையால் வாதாபியை வெற்றிக் கொண்டார். தனது வெற்றியின் நினைவாக மராட்டியர்களின் வழிபாட்டுத் தெய்வமான ‘விநாயகனை’ தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, சிறுத்தொண்டர் என்ற அந்தப் படைத் தளபதி முதன்முதலாக ‘கணபதீச்சுரம்’ என்ற கோயிலை தமிழ்நாட்டில் உருவாக்கினார். அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் ‘கணபதி’, ‘விநாயகன்’, ‘பிள்ளையார்’ வழிபாடு தொடங்கியது. தெ.பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்கள் இந்த வரலாற்றை விளக்கியுள்ளார்கள். மராட்டியத்தில் தான் இன்று வரை ‘விநாயகன்’ பண்டிகை மிகப் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வடநாட்டு பார்ப்பன பண்பாட்டைத் தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சியாகவே இப்போது ‘விநாயகன் ஊர்வலத்தை’ இந்து மதத்தின் பெயரால் அரசியல் நடத்த விரும்பும் சக்திகள் கையில் எடுத்துள்ளன.

மலைவாழ் மக்களின் தலைவனாகக் கருதப்பட்ட முருகனை பார்ப்பனியத்தோடு இணைத்து, ‘சுப்ரமணியனாக்கியது’ போலவே பார்ப்பனர்கள், தமிழர் பக்தி மரபுகளோடு தொடர்பில்லாத ‘விநாயகனை’ இறக்குமதி செய்து, அதற்காக ‘மூத்த பிள்ளையார் இரட்டை மணிமாலை’, ‘பிள்ளையார் அகவல்’, ‘பிள்ளையார் காப்பு’ என்பவைகளை உருவாக்கி, அதை தமிழர் இலக்கியங்களாக இடைச் செருகல் செய்துவிட்டனர். இந்த விநாயகன் பிறப்புக்கு புராணங்கள் கூறும் கதை ஆபாசத்திலும் ஆபாசம். இப்படி ஒரு ஆபாசக் கதை கொண்ட ‘கடவுளை’ பகுத்தறிவுள்ள மனிதர்கள் கொண்டாட முடியுமா? அதுவும் விநாயகன் பிறப்புக்கு ஒரு கதையல்ல; ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. பிறப்பு என்பது உண்மையாக இருக்குமானால், அது வரலாறாக இருக்குமானால் ஒன்று தானே இருக்க முடியும்? எப்படி பல கதைகள் இருக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டாமா?

‘விநாயகனை’ அரசியலுக்கு முதன்முதலாக இழுத்து வந்தவர் சுதந்திரப் போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்ட மராட்டியப் பார்ப்பனர் பாலகங்காதர திலகர் தான். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை ‘இந்து’ மத அடிப்படையில் நடத்தியவர் திலகர். விடுதலை பெறும் இந்தியா - ‘இந்து சனாதன தர்ம’ ஆட்சியாக மலரவேண்டும் என்பதே அவரது இலட்சியம். 1893 இல் அவர் அரசியலுக்காக தொடங்கி வைத்த ‘விநாயகன் ஊர்வலம்’ தான் இப்போதும் இந்து பார்ப்பன சக்திகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அன்று திலகர் நடத்திய ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பஜனைப் பாடல்களை உருவாக்கிப் பாடினார்கள். சான்றாக ஒரு பாடலைக் குறிப்பிடலாம்.

“இம் மதம் நம் மதம் இந்து மதம்

ஏன் இன்று இதனை மறுதலிக்கிறாய்?

கணங்களின் நாயகன் கணபதியையும்

சிவனையும் வாயு புத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்?

வெற்றுச் சின்னங்களை வணங்கி எப்பேறு பெற்றாய்?

என்ன வரம் அல்லா அளித்தார் உனக்கு?

இன்று நீ முகம்மதியன் ஆகிவிட்டாய்

அன்னிய மதம் தன்னை அந்நியப்படுத்து

உன் மதத்தை மறந்திடில் நின் வீழ்ச்சி நிச்சயம்.”

- இத்தகைய ‘மதப் பகை’யை உருவாக்கும் பல பஜனைப் பாடல்களை திலகர் நடத்திய ஊர்வலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. திலகர் நடத்திய விநாயகன் ஊர்வலத்தில் பங்கேற்ற சவர்க்கார் தான், பிறகு ‘இந்து மகாசபையை’ உருவாக்கியவர். காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

அதே திலகர் பாதையில் தான் தமிழ்நாட்டிலும், ‘இந்து முன்னணி’ விநாயகன் ஊர்வலத்தைத் தொடங்கியது. வீதிகளில் வைக்கப்படும் ‘விநாயகன்’ கரங்களில், ஏ.கே. 47 துப்பாக்கிகள், வீரவாள், கத்திகளைத் தருகிறார்கள். அதற்கு ‘வீர விநாயகன்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கமிடுகிறார்கள். அது மட்டுமா?

‘பிளாஸ்டிக்’ பொருள்களால் உருவாக்கப்படும் இந்த விநாயகன் உருவ பொம்மைகளை கடலில் கொண்டு போய் கிரேனில் இறக்கி, அங்கே அந்த ‘விநாயகனை’ கட்டைகளாலும், கால்களாலும் அடித்து உடைத்து “அவமதித்து” கடலில் தள்ளுகிறார்கள்.

இதனால் கடல் நீர் மாசுபட்டு சுற்றுச் சூழல் பாதிப்பதை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டிகாட்டி, ‘பிளாஸ்டிக்’ விநாயகனுக்கு தடை போட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றமும் பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோவன் தொடர்ந்த வழக்குகளில் ‘பிளாஸ்டிக்’ விநாயகனுக்கு தடை போட்டது. ஆனலும், ஆங்காங்கே பகுதி பகுதியாக நடத்தப்படும் ஊர்வலங்களால் பதட்டங்களே மேலோங்கி, கலவரங்களில் போய் முடிகின்றன. எனவேதான் இது மத ஊர்வலம் அல்ல, மத அரசியல் ஊர்வலம் - அதற்கு அரசு அனுமதி தரக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

1953 ஆம் ஆண்டு தந்தை பெரியார் 73 ஆவது ஆண்டு பிறந்த நாள் செய்தியாக விநாயகன் பொம்மைகளை கடைகளில் வாங்கி, மக்கள் கூடும் இடங்களில் உடையுங்கள் என்று, கருஞ்சட்டைத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த ‘விநாயகனை’ தானும் பொதுக் கூட்ட மேடையிலேயே தனது ‘கைத்தடியால்’ உடைத்தார். அன்று நடந்த இராஜகோபாலாச்சாரியார் ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலை உடைப்பை எதிர்த்து ‘ஆஸ்திக சங்கம்’ நடத்தி, பெரியார் கொள்கைகளை எதிர்த்து வந்த வீரபத்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒருவர், தானே செய்து, தனக்கு சொந்தமான உருவ பொம்மைகளை உடைப்பது குற்றமாகாது; பெரியாரும், அவரது கழகத்தினரும் உடைத்த பிள்ளையார் சிலை, கோயில்களிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல; அது அவர்களின் சொத்து. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; வணங்கவோ, உடைக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே மக்களிடம் எடுத்துக் கூறுவோம்!

கணபதி - விநாயகன் வழிபாடு வடநாட்டு பண்பாட்டின் திணிப்பு. அது தமிழர் வழிபாட்டு முறையல்ல. சைவர் வைணவர்களை ஒரே புள்ளியில் இணைத்து, மதக் கலவரத்துக்கு அணி திரட்ட திலகர் கண்டுபிடித்த ‘சூழ்ச்சி’.

1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகம் ‘விநாயகன்’ கலவர ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் ஆனூர் செகதீசன் தலைமையில் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது ஒன்றுபட்ட பெரியார் திராவிடர் கழகம் மீண்டும் அதே மதக் கலவர சக்திகளுக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை கோவையிலும், சென்னையிலும் ஆக. 28 இல் நடத்துகிறது.

பழமைக்கு சம்மட்டி அடி தந்தது - அந்த கைத்தடி தான்!

வைதீகத்தை நடுநடுங்க வைத்தது - அந்த கைத்தடி தான்!

பார்ப்பனியத்தை அடக்கி ஒடுங்கச் செய்தது - அந்த கைத்தடி தான்!

கருவறைக்குள் நுழைந்த ‘தீண்டாமை’ப் பாம்பை -

தனது இறுதிக் காலத்திலும், அடித்து சாகடிக்க

விரட்டிக் கொண்டு ஓடியது - இதே கைத்தடி தான்!

அறிவாயுதமாய் பகுத்தறிவுப் போர்வாளாய் பெரியாரின் கைத்தடியை ஏந்தி மதவெறி அரசியலை சந்திக்கத் தயாராவோம்!

தோழர்களே! ஆக.28 - போராட்டத்துக்கு அணியமாவீர், கைத்தடிகளுடன்!

Pin It