இந்தியாவின் நிலம், நீர், காடு, கனிமம், உழைப்பு, செல்வம் மற்றும் உற்பத்தி வளங்கள் சிலரின் பொருளாதார அதிகாரத்தைப் பெருக்குவதற்காகவா, அல்லது ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடனும் சம வாய்ப்புடனும் வாழ்வதற்காகவா? என்ற கேள்வியுடன் கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.
இதற்கான விடை தேடும் முயற்சியாக புதிய பொருளாதாரக் கொள்கைக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
1991 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அதுவரை பின்பற்றப்பட்டு வந்த கலப்பு பொருளாதாரம், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய தொழில்துறை, இறக்குமதி கட்டுப்பாடு ஆகியவை கைவிடப்பட்டு, தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற மூன்று தூண்களைக் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1991க்கு முன்பு அரசு பல துறைகளில் உரிமையாளர், உற்பத்தியாளர், முதலீட்டாளர், வேலைவாய்ப்பு வழங்குபவர் மற்றும் கட்டுப்பாட்டாளர் என்ற பல்வேறு பாத்திரங்களை வகித்தது. 1991க்குப் பிறகு அரசு படிப்படியாக கட்டுப்பாட்டாளர், ஒழுங்குமுறை அமைப்பாளர், உரிமம் வழங்குபவர், ஒப்பந்த அதிகாரம் கொண்டவர் மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பவர் என்ற பாத்திரத்திற்கு நகரத் தொடங்கியது.
இது வெறும் பொருளாதார மாற்றம் மட்டுமல்ல. இது சட்டத்தின் தன்மையை, அரசின் பாத்திரத்தை, அரசியல் சட்டத்தின் ஆன்மாவையே மறுவரையறை செய்த ஒரு நிகழ்வு. சட்டம் என்பது நடுநிலையானது, அனைவருக்கும் பொதுவானது என்ற பாரம்பரியப் பார்வையைத் தாண்டி, சட்டம் யாருக்காகச் செயல்படுகிறது, யாருடைய நலனைப் பாதுகாக்கிறது என்ற விமர்சனப் பார்வையில் இருந்து இதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
உரிம ராஜ்ஜியத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு (License Raj to Market Economy)
1991க்கு முன்பு இந்திய தொழில்துறையில் அரசின் அனுமதியும் உரிமமும் மிக முக்கியமானதாக இருந்தன. ஒரு தொழிற்சாலையைத் தொடங்குவது, அதன் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, புதிய துறையில் நுழைவது போன்றவற்றுக்கு பல்வேறு அரசு அனுமதிகள் தேவைப்பட்டன. இந்த அமைப்பு பொதுவாக உரிமங்களின் அரசாட்சி (Licence Raj) என்று குறிப்பிடப்பட்டது.
1991 புதிய தொழில்துறைக் கொள்கை இந்த அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான தொழில்களுக்கு இருந்த தொழில் உரிமத் தேவைகள் நீக்கப்பட்டன. தனியார் முதலீட்டிற்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டுக்கும் அதிக இடம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் “அரசு திட்டமிடும் பொருளாதாரம்” என்ற அணுகுமுறையிலிருந்து “சந்தை சக்திகளுக்கு அதிக இடமளிக்கும் பொருளாதாரம்” என்ற அணுகுமுறைக்கு நகர்ந்தது.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
1991க்குப் பிறகு ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கைக் குறைப்பதாகும். ஆனால் இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பங்கு விலக்கல் (Disinvestment) என்பது அரசு தன்னிடம் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளில் ஒரு பகுதியை விற்பதாகும். அதனால் அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்க வேண்டிய அவசியமில்லை.
தனியார்மயமாக்கல் (Privatisation) என்பது அரசு தனது கட்டுப்பாட்டுப் பங்கையும் நிர்வாகக் கட்டுப்பாட்டையும் தனியாரிடம் ஒப்படைப்பதாகும்.
எனவே, அரசு 10 சதவீத பங்குகளை விற்றுவிட்டு 90 சதவீதத்தை வைத்திருந்தால் அது தனியார்மயமாக்கல் அல்ல. ஆனால் அரசின் கட்டுப்பாட்டுப் பங்கு தனியாருக்கு மாற்றப்பட்டு நிர்வாக அதிகாரமும் தனியாரிடம் சென்றால் அது மூலதன தனியார்மயமாக்கல் அல்லது Strategic Disinvestment ஆகும்.
பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன விற்பனை
1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் அரசு சில முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை தனியாரிடம் மாற்றியது.
BALCO – Bharat Aluminium Company நிறுவனத்தில் அரசின் 51 சதவீத பங்கு Sterlite Industries நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. பின்னர் இது Vedanta குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
VSNL – Videsh Sanchar Nigam Ltd. நிறுவனத்தின் பங்குகளும் நிர்வாகக் கட்டுப்பாடும் Tata குழுமத்துக்கு மாற்றப்பட்டன. இது தொலைத்தொடர்பு துறையில் அரசின் ஆதிக்கம் குறைந்து தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்ததற்கான முக்கிய உதாரணமாக அமைந்தது.
Hindustan Zinc நிறுவனத்தில் அரசின் பங்கு Sterlite Industries நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதுவும் இந்தியாவின் முக்கிய மூலதன தனியார்மயமாக்கல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
Indian Petrochemicals Corporation Ltd. (IPCL) நிறுவனத்தின் கட்டுப்பாடு Reliance Industries நிறுவனத்துக்கு சென்றது. CMC Ltd. Tata குழுமத்துடன் இணைந்தது. Modern Food Industries நிறுவனத்தின் கட்டுப்பாடு Hindustan Unilever நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த பரிவர்த்தனைகள் இந்திய அரசின் பொருளாதாரப் பங்கில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
Air India: ஒரு அடையாள மாற்றம்
இந்தியாவின் தனியார்மயமாக்கல் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு Air India நிறுவனத்தை Tata குழுமத்துக்கு விற்றதாகும்.
2022ஆம் ஆண்டு அரசாங்கம் Air India-வின் 100 சதவீத பங்குகளையும், Air India Express மற்றும் AISATS தொடர்பான பங்குகளையும் Talace Pvt. Ltd., Tata Sons நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு மாற்றியது. இந்த ஒப்பந்தத்தின் Enterprise Value சுமார் ₹18,000 கோடி.
இது வெறும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு விற்பனை அல்ல. பல பத்தாண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தேசிய அடையாள நிறுவனமே தனியார் நிர்வாகத்துக்குள் சென்றது என்பதால் இது குறியீட்டு முக்கியத்துவம் பெற்றது.
விமான நிலையங்கள்: விற்பனை அல்ல, நீண்டகால தனியார் கட்டுப்பாடு
தனியார்மயமாக்கலின் மற்றொரு முக்கிய வடிவம் விமான நிலையத் துறையில் காணப்படுகிறது.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அவற்றின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டிற்கான நீண்டகால உரிமைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
டெல்லி விமான நிலையத்தில் GMR என்ற பன்னாட்டு வணிகக்குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு முக்கிய பங்கு பெற்றது. மும்பை விமான நிலையத்தில் GVK என்ற பன்னாட்டு வணிகக்குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு ஆரம்பத்தில் செயல்பட்டது; பின்னர் அதானி குழுமம் அதன் கட்டுப்பாட்டைப் பெற்றது.
பின்னர் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாட்டி, மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களும் நீண்டகால PPP/concession முறையில் அதானி நிறுவனத்திடம் சென்றன.
இங்கு முக்கியமான சட்டரீதியான வேறுபாடு உள்ளது. விமான நிலையத்தின் உரிமை அரசிடமே இருக்கலாம்; ஆனால் அதன் பொருளாதார இயக்க உரிமை தனியார் நிறுவனத்திடம் இருக்கலாம்.
இதனால் “தனியார்மயமாக்கல்” என்ற சொல்லின் பொருள் மேலும் சிக்கலாகிறது.
சாலைகள்: அரசுப் பணத்திலிருந்து தனியார் மூலதனத்திற்கு
தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவில் தனியார் முதலீட்டின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாக மாறின.
BOT – Build, Operate, Transfer, DBFOT – Design, Build, Finance, Operate, Transfer, HAM – Hybrid Annuity Model போன்ற முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் தனியார் நிறுவனம் சாலை அமைப்பதற்கு முதலீடு செய்யலாம்; அதை குறிப்பிட்ட காலத்திற்கு பராமரித்து இயக்கலாம்; சுங்கக் கட்டணம் அல்லது அரசின் Annuity payment மூலம் முதலீட்டை மீட்டெடுக்கலாம்; பின்னர் திட்டம் அரசிடம் திரும்பும்.
துறைமுகங்கள்: அரசின் துறைமுகம், தனியாரின் முனையம்
துறைமுகத் துறையிலும் இதே மாதிரியான மாற்றம் ஏற்பட்டது. முழு துறைமுகத்தையும் தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட container terminal, cargo berth, coal terminal, liquid cargo terminal போன்றவற்றை உருவாக்கி இயக்குவதற்கான நீண்டகால concession உரிமைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
Deendayal Port-இன் Tuna-Tekra Container Terminal, Jawaharlal Nehru Port-இன் container terminals மற்றும் தமிழ்நாட்டின் VOC Port-இல் உருவாக்கப்பட்டு வரும் Outer Harbour Container Terminal போன்றவை இதற்கான முக்கிய உதாரணங்கள்.
இதனால் பொதுச் சொத்து முற்றிலும் தனியாருக்குச் செல்லாமல் இருந்தாலும், அதன் மூலம் உருவாகும் பொருளாதார மதிப்பை தனியார் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தும் நிலை உருவாகிறது.
தொலைத்தொடர்பு: அரசின் ஏகபோகத்திலிருந்து தனியார் போட்டிக்கு
1990களின் நடுப்பகுதியில் இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்கள் நுழையத் தொடங்கின. Bharti Airtel, Hutchison, Idea, Reliance, Tata போன்ற நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய பங்குகளைப் பெற்றன.
இதன் விளைவாக இந்தியா தொலைபேசி இணைப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமையிலிருந்து, உலகின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டண மொபைல் சந்தைகளில் ஒன்றாக மாறியது.
ஆனால் இதுவும் தனியார்மயமாக்கலின் மற்றொரு வடிவம் அல்ல. அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தை விற்றதல்ல; மாறாக, அரசு முன்பு ஏகபோகமாக வைத்திருந்த சந்தையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது.
மின்சாரம், வங்கி, காப்பீடு: தனியார் நுழைவு
மின்சாரத் துறையிலும் தனியார் முதலீடு அதிகரித்தது. Tata Power, Adani Power, JSW Energy, Reliance போன்ற நிறுவனங்கள் மின்சார உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கிய பங்காளிகளாக மாறின.
காப்பீட்டுத் துறையில் LIC மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து ICICI Prudential, HDFC Life, SBI Life, Bajaj Allianz போன்ற தனியார் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்தன.
வங்கித் துறையில் HDFC Bank, ICICI Bank, Axis Bank, Kotak Mahindra Bank போன்ற புதிய தலைமுறை தனியார் வங்கிகள் வளர்ந்தன.
இங்கும் அரசு நிறுவனங்களை விற்றது என்பதைவிட, தனியார் மூலதனத்திற்கு சந்தை திறக்கப்பட்டது என்பதே சரியான விளக்கம்.
LIC மற்றும் Coal India: தனியார்மயமாக்கலா அல்லது பங்கு விலக்கலா?
LIC-ன் IPO பங்கு விற்பனை இதற்கான சிறந்த உதாரணம். அரசு LIC-ஐ ஒரு தனியார் நிறுவனத்திடம் விற்கவில்லை. அதன் பங்குகளில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் விற்றது. அரசு தொடர்ந்து பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது.
Coal India-விலும் அரசு தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்றாலும் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துள்ளது.
எனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுதல் அல்லது அரசு பங்குகளை விற்றல் மட்டுமே தனியார்மயமாக்கல் என்று கூற முடியாது.
அரசின் பங்கு: உரிமையாளரிலிருந்து கட்டுப்பாட்டாளராக
1991க்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் இதுதான்.
1991க்கு முன்பு:
அரசு = உரிமையாளர் + உற்பத்தியாளர் + முதலீட்டாளர் + வேலைவாய்ப்பு வழங்குபவர் + கட்டுப்பாட்டாளர்
1991க்குப் பிறகு:
அரசு = கட்டுப்பாட்டாளர் + ஒழுங்குமுறை அமைப்பாளர் + உரிமம் வழங்குபவர் + ஒப்பந்த அதிகாரி + தனியார் முதலீட்டை ஊக்குவிப்பவர்
இதன் விளைவாக அரசு பொருளாதாரத்திலிருந்து வெளியேறவில்லை. மாறாக, அரசின் பொருளாதார செயல்பாட்டின் வடிவம் மாறியது.
இது பொருளாதார மாற்றமா அல்லது அதிகாரத்தின் மறுவிநியோகமா?
விமர்சனப் பார்வையில் இதுவே மிக முக்கியமான கேள்வியாகிறது.
“தனியார்மயமாக்கல்” என்பது வெறும் பொருளாதாரச் சொல்லா? அல்லது அது அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்ற அரசியல் மற்றும் சட்ட முடிவா?
ஒரு அரசு விமான நிலையத்தை இயக்கும்போது அதற்கான பொறுப்பு நேரடியாக அரசின் மீது இருக்கும். ஆனால் அதே விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் concession முறையில் சென்றால், பயணிகளின் உரிமைகள், கட்டண நிர்ணயம், பணியாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பொறுப்பு, பொதுநலன் ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு எவ்வாறு செயல்படும்?
ஒரு தேசிய நெடுஞ்சாலை தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டால், சுங்கக் கட்டணம் வெறும் வணிக ஒப்பந்தத்தின் விளைவா அல்லது பொதுமக்களின் நடமாட்ட உரிமையுடன் தொடர்புடையதா?
ஒரு தனியார் நிறுவனம் அரசால் முன்பு வழங்கப்பட்ட பொதுச் சேவையை வழங்கும்போது, அது வெறும் “private party”யா அல்லது public function ஒன்றைச் செய்கிறதா?
இவை அனைத்தும் அரசியல் சட்டத்தின் உறுப்புகள் 12, 14, 19, 21, Public Trust Doctrine மற்றும் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy) ஆகியவற்றுடன் தொடர்புடைய கேள்விகளாக மாறுகின்றன.
அரசியல் சட்டமும், கார்ப்பரேட் அதிகாரமும்
1991க்குப் பிறகு இந்தியாவில் உருவான மாற்றத்தை ஒரு வேறு கோணத்திலும் பார்க்கலாம்.
முன்பு அரசின் பொருளாதார அதிகாரம் நேரடியாக இருந்தது:
State $\rightarrow$ Ownership $\rightarrow$ Control
இப்போது அது பல சமயங்களில் இவ்வாறு செயல்படுகிறது:
State $\rightarrow$ Regulation $\rightarrow$ Licence/Contract/Concession $\rightarrow$ Corporation $\rightarrow$ Public Service
இதன் மூலம் ஒரு புதிய அதிகார அமைப்பு உருவாகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட வேண்டிய பல பொருளாதார செயல்பாடுகள், தனியார் நிறுவனங்களின் மூலம் நடைபெறத் தொடங்குகின்றன.
இதுதான் “Corporate Constitutionalism” பற்றிய விவாதத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது, வெறும் பொருளாதார மாற்றம் மட்டுமல்ல. இது சட்டத்தின் தன்மையை, அரசின் பாத்திரத்தை, அரசியல் சட்டத்தின் ஆன்மாவையே மறுவரையறை செய்த ஒரு நிகழ்வு.
சட்டம் என்பது நடுநிலையானது, அனைவருக்கும் பொதுவானது என்ற பாரம்பரியப் பார்வையைத் தாண்டி, சட்டம் யாருக்காகச் செயல்படுகிறது, யாருடைய நலனைப் பாதுகாக்கிறது என்ற விமர்சனப் பார்வையில் இருந்து இதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
1. பொருளாதார மாற்றங்களின் தன்மை
உலகமயமாக்கலுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை மூன்று நிலைகளில் பார்க்கலாம்.
முதலாவது, அரசு தனது பாத்திரத்தை மாற்றிக்கொண்டது. முன்பு உற்பத்தியாளராக, வழங்குநராக, கட்டுப்பாட்டாளராக இருந்த அரசு, இப்போது வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவராக, முதலீட்டாளர்களை ஈர்ப்பவராக மாறியது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டன.
இரண்டாவது, சந்தை முதன்மைப்படுத்தப்பட்டது. கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டன.
மூன்றாவது, உழைப்பின் தன்மை மாறியது. நிரந்தர வேலை என்பது குறைந்து, ஒப்பந்த வேலை, தற்காலிக வேலை, கிக் பொருளாதாரம் (Gig Economy) என்ற நிலை உருவானது.
2. அரசியல் சட்டத்தின் மீதான தாக்கம்
இந்திய அரசியல் சட்டம் அடிப்படையில் ஒரு சமூகப் புரட்சிக்கான ஆவணம். அதன் முகவுரை சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வலியுறுத்துகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள உறுப்புரை 39 (ஆ) மற்றும் (இ) பொருள் வளங்கள் பொதுநலனுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், செல்வம் ஒரு சிலரிடம் குவியக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.
ஆனால் உலகமயமாக்கல் கொள்கைகள் இந்த அடிப்படை நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதை விமர்சனப் பார்வை சுட்டிக்காட்டுகிறது.
சட்டம் நடுநிலையானது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அது அதிகாரத்தில் இருப்பவர்களின் கருவியாகச் செயல்படுகிறது என்பதே இந்த விமர்சனப் பார்வையின் மையம். இதை இந்தியச் சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.
அ) சொத்துரிமையும், நிலம் கையகப்படுத்துதலும்:
உலகமயமாக்கலுக்குப் பின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பெரும் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள் என்ற பெயரில் பெருமளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் பொதுநலன் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்து தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப் பயன்பட்டது. இங்கே சட்டத்தில் 'பொதுநலன்' என்பதற்கான வரையறை யாரால் தீர்மானிக்கப்படுகிறது? பாதிக்கப்படும் விவசாயி, பழங்குடி மக்களின் குரல் சட்டத்தில் எங்கே இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. சட்டம் வெளிப்படையாக நடுநிலை போல் தோன்றினாலும், அதன் விளைவு பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவும், எளிய மக்களுக்குப் பாதகமாகவும் அமைந்தது.
பின்னர் கொண்டுவரப்பட்ட 2013 ஆம் ஆண்டின் நியாயமான இழப்பீட்டுச் சட்டம் ஓரளவு பாதுகாப்பை வழங்கினாலும், பல மாநிலங்களில் அதை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன.
ஆ) தொழிலாளர் சட்டங்களின் சிதைவு:
அரசியல் சட்டத்தின் உறுப்பு 21 வாழ்வதற்கான உரிமையை, கண்ணியமான வாழ்வை உறுதி செய்கிறது. உறுப்பு 43 தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்கிறது. ஆனால் உலகமயமாக்கலின் போட்டிக்கு ஈடுகொடுக்க, தொழிலாளர் சட்டங்கள் தடையாக இருப்பதாகக் கூறப்பட்டது.
44 தொழிலாளர் சட்டங்கள் தொகுக்கப்பட்டு 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டது இதன் உச்சம். இதில் பணி நேரம் அதிகரிப்பு, பணி நீக்குவதை எளிதாக்குதல், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையில் கட்டுப்பாடு போன்றவை உள்ளன. சட்டம் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் கருவியாக இருந்த நிலை மாறி, முதலீட்டைப் பாதுகாக்கும் கருவியாக மாறியது. சட்டத்தின் மொழி அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்று பேசினாலும், அதன் நடைமுறை விளைவு உழைப்பை மலிவாக்குவதாகவே உள்ளது.
இ) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள்:
1991-க்கு முன்பு வரை இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் பாதுகாப்பு நோக்கில் இருந்தன. 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1974 நீர் மாசு தடுப்புச் சட்டம், 1980 வனப் பாதுகாப்புச் சட்டம், 1981 காற்று மாசு தடுப்புச் சட்டம், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் என அனைத்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையை வலியுறுத்தின. அரசியல் சட்டத்தின் உறுப்புரை 48-அ மற்றும் 51அ(ஜி) இதற்கு அரசியல் சட்ட அடித்தளம் கொடுத்தன.
ஆனால் உலகமயமாக்கலுக்குப் பின் சுற்றுச்சூழல் சட்டத்தின் திசையே மாறியது. பாதுகாப்பு என்பதிலிருந்து, அனுமதி வழங்குவதை விரைவுபடுத்துவது, வணிகத்தை எளிதாக்குவது என்ற நோக்கிற்கு மாறியது.
இதை 4 கட்டங்களாகப் பார்க்கலாம்:
1. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - EIA விதிகளில் நீர்த்துப்போகுதல்: 1994-ல் முதல் முறையாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment) அறிவிக்கை கொண்டுவரப்பட்டது. எந்தவொரு பெரிய தொழிற்சாலை தொடங்கும் முன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும், மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்பது நோக்கம்.
ஆனால் 2006-ல் கொண்டுவரப்பட்ட புதிய அறிவிக்கையில், பல தொழிற்சாலைகளுக்கு விலக்கு, மக்கள் கருத்து கேட்பதில் கட்டுப்பாடு, பின் தேதியிட்டு அனுமதி வழங்கும் முறை ஆகியவை புகுத்தப்பட்டன.
2020-ல் வெளியான வரைவு EIA அறிவிக்கை இதன் உச்சம். அதில்:
- திட்டத்திற்கு முன்பே கட்டுமானத்தைத் தொடங்கிவிட்டு பின்னர் அனுமதி பெறலாம்;
- மக்கள் புகார் கொடுக்கும் உரிமை குறைப்பு;
- பல முக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பிலிருந்து விலக்கு;
என வணிக நலனுக்காக சட்டம் வளைக்கப்பட்டது. இங்கே சட்டம் யாரைப் பாதுகாக்கிறது என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின் மொழி வளர்ச்சி என்று பேசுகிறது, ஆனால் விளைவு பாதிக்கப்படும் மீனவர்கள், விவசாயிகள், பழங்குடிகளை வெளியேற்றுவதாக உள்ளது.
2. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் – Coastal Regulation Zone: கடலோரப் பகுதியைப் பாதுகாக்க 1991-ல் CRZ அறிவிக்கை வந்தது. மீனவர்களின் வாழ்வாதாரம், சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகளைப் பாதுகாப்பது நோக்கம்.
உலகமயமாக்கலுக்குப் பின் துறைமுகங்கள், பெரும் உணவகங்கள், தொழிற்சாலைகள் கடலோரத்தில் கட்டுவதற்காக CRZ விதிகள் பல முறை திருத்தப்பட்டன. 2019 CRZ அறிவிக்கை கடலோரத்தில் கட்டுமானத்திற்கான தடையை பெருமளவு குறைத்தது. இது சுற்றுலா முதலீட்டுக்கு உதவியது, ஆனால் கடல் அரிப்பு, மீனவர்களின் வாழ்விட இழப்பு அதிகரித்தது.
3. வனச் சட்டங்களில் மாற்றம்: 1980 வனப் பாதுகாப்புச் சட்டம் காடுகளை அழிப்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் 2023-ல் கொண்டுவரப்பட்ட வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், எல்லைப் பகுதிகளில் உள்ள காடுகள், ஏற்கனவே தனியார் வசம் உள்ள காடு போன்ற பகுதிகளுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது. தேசப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு என்ற பெயரில் காடுகளை எளிதாக திருப்பிவிட வழி செய்யப்பட்டது.
அதேபோல் 2002 உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், உள்ளூர் சமூகங்களுக்கு இயற்கை வளங்கள் மீது உரிமை கொடுத்தது. 2023 திருத்தம் ஆயுர்வேத, மருந்து நிறுவனங்களுக்கு உயிர் வளங்களை எடுப்பதை எளிதாக்கி, உள்ளூர் மக்களுக்கு பங்கு கொடுக்கும் முறையைத் தளர்த்தியது.
இது மரபு அறிவை வணிகமயமாக்கும் போக்காக அமைந்தது.
4. நீதிமன்றங்களின் இரட்டை நிலை:
உலகமயமாக்கலின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக பல வரலாற்றுத் தீர்ப்புகளைக் கொடுத்தது. வேலூர் குடிமக்கள் நலச்சங்கம் வழக்கில் 'மாசுபடுத்துபவர் பணம் செலுத்த வேண்டும்' கொள்கை, முன்னெச்சரிக்கைக் கொள்கை ஆகியவை உருவாக்கப்பட்டன.
ஆனால் பின்னர் 'வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலை' என்ற பெயரில் பெரிய அணைகள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களுக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கும் போக்கு அதிகரித்தது. சர்தார் சரோவர் அணை வழக்கு இதற்கு முக்கிய உதாரணம். இடம்பெயர்ந்த பழங்குடி மக்களின் வாழ்வுரிமையை விட, தேசிய நலன், பொருளாதார வளர்ச்சி என்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஈ) நீதித்துறையின் போக்கு மாற்றம்:
1990களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டம் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூக நீதிக்கான தீர்ப்புகளை வழங்கியது. ஆனால் உலகமயமாக்கலுக்குப் பின் நீதிமன்றத்தின் பார்வையில் மாற்றம் தெரிகிறது.
ஒப்பந்தத்தின் புனிதம், சொத்துரிமை, வணிக உரிமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
உதாரணமாக, இயற்கை வளங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் ஏல முறைதான் சிறந்தது என்று நீதிமன்றம் கூறியது, வெளிப்படைத்தன்மைக்கு நல்லது என்றாலும், இயற்கை வளங்கள் மீது அரசுக்கு பொறுப்புரிமை உண்டு என்ற கோட்பாட்டை வணிகமயமாக்கியது. அதேபோல், சுற்றுச்சூழல் சட்டங்கள் பெரும் திட்டங்களுக்காகத் தளர்த்தப்படும்போது நீதிமன்றம் தலையிடுவது குறைந்தது.
உ) அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மை:
உலகமயமாக்கல் ஒன்றிய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தியது. ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, மாநிலங்களின் நிதி தன்னாட்சியைக் குறைத்தது. மாநிலங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்க தங்களுக்குள் போட்டியிடும் நிலை உருவானது. இதனால் வரிச்சலுகை, நிலம் தருவது, தொழிலாளர் சட்டத்தைத் தளர்த்துவது என்று மாநிலங்கள் இறங்கின. இது அரசியல் சட்டம் விரும்பிய கூட்டுறவு கூட்டாட்சிக்கு எதிரான போட்டிக் கூட்டாட்சியை உருவாக்கியது.
சட்டத்தின் மொழியும், மறைக்கப்பட்ட அரசியலும்
விமர்சனப் பார்வையின் முக்கிய பங்களிப்பு, சட்டத்தின் மொழிக்குப் பின் உள்ள அரசியலை அம்பலப்படுத்துவது.
'சீர்திருத்தம்', 'வளர்ச்சி', 'திறன்', 'போட்டி', 'உலகத் தரம்' போன்ற சொற்கள் நடுநிலையானவை போல் தோன்றினாலும், அவை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனை முன்னிறுத்துகின்றன.
சீர்திருத்தம் என்பது யாருக்கான சீர்திருத்தம்? தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் தொழிலாளருக்குப் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை, மாறாகக் குறைத்தது.
அரசியல் சட்டத்தின் உறுப்பு 14 சமத்துவத்தைப் பேசுகிறது. ஆனால் சமமற்றவர்களை சமமாக நடத்துவது சமத்துவமாகாது. பெரும் நிறுவனமும், சிறு விவசாயியும் சந்தையில் சமம் என்று சட்டம் கூறும்போது, அது ஏற்கனவே உள்ள சமூக சமத்துவமின்மையை சட்டரீதியாக நியாயப்படுத்துகிறது.
உலகமயமாக்கல் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை, தொழில்நுட்பத்தை, நுகர்வோர் தேர்வுகளை அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் பலன்கள் சமமாகப் பகிரப்படவில்லை. சமத்துவமின்மை அதிகரித்தது.
அரசியல் சட்டம் என்பது வெறும் ஏட்டில் உள்ள விதிகள் அல்ல. அது ஒரு அதிகாரப் போராட்டக் களம். உலகமயமாக்கலுக்குப் பின் சட்டம் உருவாக்கம், சட்டத்தை அமல்படுத்துதல், நீதிமன்றத்தில் அதை விளக்குதல் ஆகிய அனைத்து நிலைகளிலும் சந்தை சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
எனவே, அரசியல் சட்டத்தை வெறும் சட்ட நூலாகப் பார்க்காமல், அது யாருடைய குரலை ஒலிக்கிறது, யாருடைய குரலை மௌனமாக்குகிறது என்ற கேள்வியை எழுப்புவதே இன்றைய தேவை. சட்டம் என்பது முடிக்கப்பட்ட உண்மை அல்ல, அது தொடர்ந்து போராடி பெற வேண்டிய நீதிக்கான கருவியாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் அரசியல் சட்டத்தின் முகவுரையில் கண்ட சமூக, பொருளாதார நீதி என்பது ஏட்டளவில் இல்லாமல், வாழ்வியல் உண்மையாக மாறும்.
யாருக்கானது இந்தியா? என்ற கேள்விக்கான விடையை நீங்கள் கண்டறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். இந்தியாவை குடிமக்களுக்கான நாடாக மாற்றுவதே நம் கடமை என்பதில் நாம் உறுதியாக இருந்தால் அரசியல் சட்டத்தின் பல வரலாற்று உண்மைகளை, செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான காலப் பயணத்தில் நாம் சில வரலாற்று அகழ்வாய்வுகளைச் செய்யப்போகிறோம். அந்த அகழ்வாய்வில் புதையலும் கிடைக்கலாம், பூதங்களும் வெளிப்படலாம். தயாராக இருப்போம்.
- பி. சுந்தரராஜன், வழக்குரைஞர்