இந்திய அரசியல் சட்டம் – ஒரு விமர்சன அறிமுகம்! - பகுதி 3
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இயற்கை வளங்கள் இருக்கலாம். அந்த இயற்கை வளங்களை அந்நாட்டு அரசுகள் மேலாண்மை செய்யலாம். அதே நேரம் அந்த வளங்கள் அந்நாட்டு மக்களின் உடமையாகவும், உரிமையாகவும் கருதப்பட வேண்டும். அந்த வளங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் அந்நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும். இதுதானே நியாயம். பெட்ரோல் வளம் நிரம்பிய நாடுகளில் அதுதானே நடக்கிறது. அதனால்தானே அந்நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளன.
அதே நேரம் பெட்ரோலைவிட அதிக சந்தை மதிப்பைக் கொண்ட தங்கத்தையும், வைரத்தையும் தம்மிடம் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏன் அவ்வாறு இல்லை? ஏனெனில் அந்த வளங்களைக் கையாளும் திறன் அந்த நாடுகளின் அரசுகளுக்கு இல்லை. மேலும் அந்த நாட்டின் மக்கள்மீது அந்த நாடுகளை சுரண்டி சூறையாடும் வல்லரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை.
இந்தியாவிலும் கனிமங்கள் உள்ளிட்ட ஏராளமான வளங்கள் உள்ளன. அவற்றிற்கு உள்நாட்டுச் சந்தையிலும் உலகச் சந்தையிலும் நல்ல மதிப்பும் இருக்கிறது. இந்த வளங்கள் மீது இந்திய குடிமக்களுக்கு உரிமை இருக்கிறதா? அந்த வளங்களின் பலன்கள் இந்திய மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதே நம் முன் உள்ள கேள்வி.
இதற்கான பதிலை இந்திய அரசியல் சட்டத்தில் தேடுவோம்.
இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்புகள் 39(b) மற்றும் 39(c) ஆகியவை இவ்வாறு கூறுகிறது:
அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles for State Policy)
உறுப்பு 39(b) “சமூகத்தின் பொருள் வளங்களின் உடைமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்கு மிகச் சிறப்பாகப் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.”
உறுப்பு 39(c) “பொருளாதார அமைப்பின் செயல்பாடு செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுமக்களுக்கு பாதகமான வகையில் சிலரிடம் குவிவதற்கு வழிவகுக்காதவாறு இருக்க வேண்டும்.”
(Directive Principles for State Policy என்பதை சிலர் மாநில அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் எனத் தவறாக புரிந்து கொள்கிறார்கள். State என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அரசு என்று பொருள். அது ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் குறிக்கும்)
மேற்கூறப்பட்ட வாசகங்கள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள வளங்களின் பலன்கள் இந்திய குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால் இந்திய நாடு ஒரு பூலோக சொர்க்கமாக மாறியிருக்கும். மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். வறுமையும், கல்வி அறிவின்மையும், வேலை வாய்ப்பின்மையும் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவி இருக்கும்.
ஆனால் நடந்தது என்ன?
நாட்டின் மூல வளங்கள் அனைத்தும் உள்நாட்டு, பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவின் குடிமக்களுக்கு அவை பெருமளவில் மறுக்கப்படுகின்றன. மேலும் இயற்கை வளங்களை கையகப்படுத்தும் முயற்சியில் நாட்டின் பழங்குடி மக்கள் உட்பட பலர் அவர்களது வாழ்விடங்களிலிருந்து கட்டாயமாக அகற்றப்படுகின்றனர். அவர்கள் நிர்க்கதியாக விடப்படுகின்றனர். இந்தப் போக்கை எதிர்ப்போர் சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் ஒடுக்கப்படுகின்றனர் அல்லது முற்றாக அழித்தொழிக்கப்படுகின்றனர்.
இப்போது நம்முன் உள்ள கேள்வி இதுதான்:
“இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அரசியல் சட்ட இலக்குகளை எவ்வளவு அளவு நிறைவேற்றுகின்றன?”
மேலே உள்ள கேள்விக்கு விடை தேடும் முன்பு, மேற்கூறிய சட்ட வாசகங்கள் உருவான நேரத்தில் அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையில் நிகழ்ந்த விவாதங்களை சுருக்கமாக பார்த்தல் அவசியம்.
இது தொடர்பான அரசியல் நிர்ணயச் சட்டப் பேரவை (Constituent Assembly) விவாதங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அவை வெறும் சொல் தேர்வு பற்றிய விவாதங்கள் அல்ல. அவற்றின் பின்னால் சோசலிசம் – தனியார் சொத்து – பொருளாதார ஜனநாயகம் – அரசு கட்டுப்பாடு – தனியார் ஏகபோகம் – பொதுவளம் – சொத்துரிமை ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை கருத்து வேறுபாடுகள் இருந்தன.
இன்று நாம் உறுப்பு 39(b), 39(c) என்று அழைப்பவை, அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வரைவு நிலையில் வரைவு உறுப்பு 31, உட்பிரிவு (ii) மற்றும் (iii) ஆக இருந்தன. 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 முதல் 22ம் தேதிவரை விவாதிக்கப்பட்டு, திருத்தங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பேராசிரியர் கே டி ஷா (குஷால் தக்ஷி ஷா) என்பவர் பீகாரைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சிக்காரர். டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் போலவே லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் படித்துப் பொருளாதாரப் பேராசிரியராகவும், வழக்குரைஞராகவும் பணியாற்றியவர். அவர் மிக முக்கியமான அம்சங்களை விவாதத்தில் எழுப்பியுள்ளார்.
“(ii) சமூகத்தின் பொருள் வளங்களின் உடைமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்கு மிகச் சிறந்த முறையில் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்”
என்ற வாசகத்தை கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“(ii) சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள், காடுகள், ஆறுகள் மற்றும் பாயும் நீர்வளங்கள், அத்துடன் நாட்டின் கடற்கரையோரக் கடற்பகுதிகள் ஆகிய வடிவங்களில் உள்ள நாட்டின் இயற்கை வளங்களின் உடைமை, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவை ஒட்டுமொத்தமாக நாட்டிற்கே உரியதாகவும், நாட்டின் கூட்டு உடைமையாகவும் இருக்க வேண்டும்; மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட வளத்திற்கும் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் வகையில், மத்திய அல்லது மாகாண அரசுகள், உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் அல்லது சட்டபூர்வக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அரசால், சமூகத்தின் சார்பாக அவை பயன்படுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் இருக்க வேண்டும்.”
அதேபோல கீழுள்ள சட்ட வாக்கியத்தையும் மாற்றி அமைக்க வலியுறுத்தினார்.
“(iii) பொருளாதார அமைப்பின் செயல்பாடு, செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுமக்களுக்குப் பாதகமான வகையில் குவிவதற்கு வழிவகுக்காதவாறு இருக்க வேண்டும்.”
மேற்கண்ட வாசகத்தை மேலும் விரிவுசெய்து தெளிவாக கீழ்க்கண்டவாறு குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“(iii) பொருள் வளங்களை உருவாக்கும் எந்தவொரு உற்பத்தித் துறையிலும், சமூகச் சேவைகளிலும் அல்லது பொதுப் பயன்பாட்டுச் சேவைகளிலும் எந்த வடிவத்திலும் தனியார் ஏகபோக உரிமை இருக்கக் கூடாது; அதேபோல், உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்கள் தனியார் கைகளில் குவிந்திருக்கக் கூடாது; அத்தகைய குவிப்பு அல்லது குவித்துச் சேர்த்தலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.”
மேலும் அவர், “எனது திருத்தத்தில் பயன்படுத்தியுள்ள சொற்றொடர்களை பெரும்பாலும் முழுமையாக இந்த வரைவிலிருந்தே எடுத்திருந்தாலும், இந்த வரைவில் கூறப்பட்டுள்ள கருத்தை விட அதை இன்னும் தெளிவாகவும், எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லாத வகையிலும் வெளிப்படுத்த நான் முயன்றுள்ளேன்.
இந்த வரைவு இப்போது உள்ள நிலையிலேயே தொடர்ந்தால், அதை வரைவை உருவாக்கியவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒரு பொருளில் எதிர்காலத்தில் அதை விளக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன்; அல்லது குறைந்தபட்சம், அதை வாசிப்பவர், வரைவாளர்கள் உண்மையில் கருதிய பொருளில் இதைப் புரிந்துகொள்ளாமல் போகலாம்” என்றும் அவரது கருத்தை தெளிவுபடுத்தினார்.
அவர் முன்வைத்த எச்சரிக்கைகள் அவரது பொருளாதார அறிவையும், தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது. அதையும் பார்ப்போம்.
“ஏகபோகங்கள் மிகவும் செயற்கையான முறையில் உருவாகின்றன; வர்த்தகர்கள் பலர் பங்கேற்பதால் போட்டியே ஏற்படுத்தும் என்று கூறப்படும் அதே சூழ்நிலைகளின் அழுத்தத்தினாலேயே ஏகபோகங்கள் இன்னும் அதிகமாக உருவாகின்றன.
“போட்டி நிலவும் ஒரு சமூகத்தில், பொதுநலன் பாதுகாக்கப்படுவதற்கான ஒரே உத்தரவாதம் என்னவென்றால், போட்டியிடும் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் நிலவும் போட்டியின் இயல்பான விளைவாக, விலைகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; உற்பத்திச் செலவையோ விற்பனை விலையையோ குறைக்க வேண்டியிருக்கும். இதன் மூலம், ஏகபோகமாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொருள் அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரால் பயன்படுத்தப்படும்போதுதான் அதிகபட்ச இலாபத்தைப் பெற முடியும் என்ற நிலை உருவாகும்” என்று நமக்குக் கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் பரந்த அளவில் தொழில்மயமாக்கலும் வணிகமயமாக்கலும் ஏற்பட்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் நாம் காண்பது வேறுபட்ட ஒன்றாகும். போட்டியிடுபவர்கள் விரைவிலேயே, தமக்கிடையேயான போட்டி என்பது தம்மில் யாருக்கும் நல்லதல்ல என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
அதன் விளைவாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலமாகவும், பல்வேறு உத்திகளைக் கையாள்வதன் மூலமாகவும் — உதாரணமாக, Trusts, Syndicates, Cartels போன்ற அமைப்புகள் மூலமாகவும் — வெளிப்படையாகப் பார்த்தால் தீங்கற்றதாகத் தோன்றக்கூடிய ஒரு நடைமுறை ஏகபோகத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
அத்தகைய ஏற்பாடுகள் செலவுகளைக் குறைப்பதற்கும், நிர்வாக மற்றும் மேல்நிலைச் செலவுகளைக் குறைப்பதற்கும், அதன் மூலம் பொருளை எளிதாகவும் குறைந்த விலையிலும் நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்வதற்குமானவை போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவை தனியார் உரிமையாளரின் அதிகரித்து வரும் இலாபத்தைப் பெருமளவில் மேலும் அதிகரிப்பதிலேயே முடிவடைகின்றன.”
“நமது காலத்தின் நாகரிகமான நரமாமிச உண்ணி, இரத்தம் உறிஞ்சுபவன் யார் என்றால், அவன் மக்களையும், சமூகத்தையும் சுரண்டுபவனே. அவன் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறான்; பல சமயங்களில் பட்டங்களாலும் கௌரவங்களாலும் அலங்கரிக்கப்படுகிறான். இந்த அவையிலும் அவனுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உள்ளது. எனவே, அரசியல் சட்டத்திலேயே அவனுடைய பாதுகாப்பிற்கு எவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு ஆணையிடவும், எண்ணற்ற வழிகளில் உங்களைத் தன் விருப்பத்திற்கேற்பச் செயல்படச் செய்யவும் அவனால் முடிகிறது.
இதன் மூலம், அவன் புதிதாக ஒரு வாழ்வாதார வாய்ப்பைப் பெற்று, பல்வேறு வடிவங்களில் தனது ஏகபோகத்தைப் பெருக்கவும், பலதரப்படுத்தவும், விரிவுபடுத்தவும், மேலும் தீவிரப்படுத்தவும் முடியும். இதன் விளைவாக, பொதுமக்களுக்கு கேடு ஏற்படும்; நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும்; மேலும், இந்தக் காலகட்டத்தை உண்மையான அதிகாரம் மக்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் காலமாகக் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
மக்களின் பிரதிநிதிகளிடம் அதிகாரம் வந்த பிறகாவது, இலாப வேட்டையாடுபவனுக்கு ‘சுங்கம்’ செலுத்தாமல், வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெறவும், அதன் மூலம் விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தைவிட சற்றே உயர்ந்த நிலையில் மனிதர்கள் வாழவும் முடியும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”
இவ்வாறு பேராசிரியர் கே டி ஷா தம்முடைய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
பேராசிரியர் கே டி ஷா அவர்களைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஷிப்பன்லால் சாக்ஸேனா என்பவர் கே டி ஷாவின் கருத்துகளை ஆதரித்து பின்வருமாறு பேசினார்.
“இது நமது அரசியல் சட்டத்தில் மிகவும் அடிப்படையான ஒரு பிரிவாகும். முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களின் தன்மையே, இந்தப் பிரிவு முழு அரசியல் சட்டத்தின் அடித்தளத்தையே தொடும் அளவுக்கு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது.
பேராசிரியர் கே டி ஷா முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு எனது ஆதரவு நிச்சயமாக உள்ளது. அவர் முன்வைத்துள்ள இரண்டு திருத்தங்களும், இந்தப் பிரிவின் மூலம் நமது அரசின் அமைப்பு ‘சோசலிச’மானதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றன.
அரசியல் சட்டத்தின் முகவுரையில், ‘Union’ என்ற சொல்லுக்கு முன்பாக ‘Socialist’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும் என்று நான் ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளேன். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளைக் கடந்து, அவர் முன்வைத்துள்ள குறிப்பிட்ட திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். எனவே, குறைந்தபட்சம் அந்தத் திருத்தங்களின் அடிப்படை நோக்கத்தையாவது அரசியல் சட்டத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் இணைக்குமாறு எனது நண்பர் டாக்டர் அம்பேத்கரை நான் வலியுறுத்துகிறேன்.
அரசியல் சட்டத்தின் Article 31-ன் Part (2) கூறுவது:
‘…சமூகத்தின் பொருள் வளங்களின் உடைமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்கு மிகச் சிறந்த முறையில் பயன்படும் வகையில்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.’”
“இப்போது, ‘சமூகத்தின் பொருள் வளங்களின் உடைமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்குச் சிறப்பாகப் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்’ என்ற இந்தக் கூற்று, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை மிகவும் விரிவான முறையில் வெளிப்படுத்துகிறது. இந்தக் கூற்று மிகவும் பொதுவானதாக இருப்பதால், எந்தவொரு பொருளாதார அமைப்பையும் இதன் அடிப்படையில் உருவாக்க முடியும்.
இதன் அடிப்படையில், நாட்டின் அனைத்து வளங்களும் அரசுக்குச் சொந்தமானவையாக இருந்து, ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சோசலிசப் பொருளாதார அமைப்பையும் உருவாக்க முடியும். ஆனால், அடுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் ஒருவர் அல்லது ஒரு குழு, ரூஸ்வெல்ட் உருவாக்கிய ‘New Deal’தான் சிறந்த பொருளாதார அமைப்பு; அதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூற முடியும்.
எனவே, இந்தப் பிரிவு எதிர்காலத்தில் அமையும் எந்த நாடாளுமன்றத்திற்கும், தாங்கள் விரும்பும் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைத் திறந்துவிடுகிறது.
ஆனால், தனிப்பட்ட முறையில், குறைந்தபட்சம் இன்றாவது நாம் ஒரு விஷயத்தை அரசியல் சட்டத்தில் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்: நாட்டின் முக்கியமான தொழில்கள் (key industries) அரசுக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டும்.
1921ஆம் ஆண்டு முதல் இது இந்திய தேசிய காங்கிரஸின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. முக்கியமான தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மையில் காங்கிரஸ் நியமித்த குழுவும் தனது அறிக்கையில், முக்கியமான தொழில்கள் அரசுக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது; ஆனால், தற்போது முக்கியத் தொழில்களை நாட்டுடைமையாக்கும் நடவடிக்கையை பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளோம்.
ஆயினும், இது நமது அடிப்படைக் கொள்கை என்பதை அரசியல் சட்டத்திலேயே நாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். முக்கியமான தொழில்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்றும், அவை முதன்மையாக நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் சட்டத்திலேயே நாம் குறிப்பிடவில்லை என்றால், நாம் ஒரு மிகப் பெரிய துரோகத்தைச் செய்தவர்களாகிவிடுவோம்.
அந்தக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், ‘அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறை’களில் உள்ள இந்தப் பிரிவு (ii)-ல், முக்கியமான தொழில்கள் அரசுக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்று நாம் குறைந்தபட்சம் நிர்ணயிக்க வேண்டும்.
அதாவது, நாட்டின் பொருள் வளங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான மிகச் சிறந்த வழி இதுதான் என்பதே காங்கிரஸின் கருத்தாகும். எனவே, பேராசிரியர் கே டி ஷா முன்வைத்துள்ள திருத்தம், இந்த அடிப்படையான கொள்கையின் மீது நமது கவனத்தை ஈர்த்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.”
“அவருடைய இரண்டாவது திருத்தம் ஏகபோகங்களுக்கு எதிரானதாகும்; இந்தக் கருத்துக்கு எனது முழுமையான ஆதரவு உள்ளது. ஏகபோக அமைப்பு மிகவும் தவறானது என்பது உலகின் பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கருத்தாகும்.
அமெரிக்காவில், அந்த நாட்டின் மொத்த செல்வத்தில் சுமார் 54 சதவீதம் வெறும் 60 குடும்பங்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள இந்தப் பெரும் தொழில் நிறுவனங்களின் 12 இயக்குநர்கள், அமெரிக்காவின் அமைச்சரவை அமைச்சர்களைவிடக் கூட அதிக அதிகாரம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
எனவே, பிற நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் ஏகபோகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை நமது அரசியல் சட்டத்திலேயே தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு இருக்கையில், டாக்டர் அம்பேத்கர் பொருத்தமான ஒரு திருத்தத்தின் மூலம் இந்தக் கருத்தை இந்தப் பிரிவில் இணைக்க முயற்சிப்பார் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு பேராசிரியர் ஷிப்பன்லால் சாக்ஸேனா பேசினார்.
தொடர்ந்து சர்தார் நாகப்பா என்பவர் பேசினார். இவர் அன்றைய மெட்ராஸ் ராஜதானிக்குள் இருந்து இப்போது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கர்னூல் என்ற இடத்தில் பிறந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் காதி துணி தைப்பதை தொழிலாகக் கொண்டவர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்தலில் வென்ற இவர், அரசியல் சட்ட நிர்ணய அவையிலும் பங்கேற்றார்.
இவர் பேசியதாவது;
“ஐயா, இந்தப் பிரிவுதான் ஏழை மனிதனுக்கும், சாதாரண மனிதனுக்கும் எதிர்காலத்தைப் பற்றிய சிறிதளவு நம்பிக்கையைக் காணக்கூடிய ஒரே பிரிவாகும். (ii), (iii) ஆகிய பிரிவுகள் ஏழை மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவு தெளிவற்ற மொழியில் இருப்பதைவிட, எந்தவிதமான ஐயத்திற்கும் இடமில்லாத வகையில் இன்னும் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சட்ட நிபுணர் அல்லாத சாதாரண மனிதராகவும், பொதுமக்களில் ஒருவராகவும், இந்தப் பிரிவுகளில் எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கைக் கீற்றை என்னால் காண முடிகிறது.
இங்கு கூடியுள்ள அனைத்து மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் நோக்கமும், இயன்றவரை விரைவாக நமது சமூகத்தைச் சோசலிசமயமாக்குவதே ஆகும். இந்தப் பிரிவுகள் அரசியல் சட்டத்தில் இருக்கும் வரை, இந்தியாவில் முதலாளித்துவம் செழித்து வளர்வதற்கான வாய்ப்பு இல்லை.
இந்தப் பிரிவுகளை அரசியல் சட்டத்தில் கொண்டு வந்ததற்காக, வரைவுக் குழுவிற்கும், குறிப்பாக அதன் தலைவருக்கும் நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், என்னுடைய ஒரே குறை என்னவென்றால், இவை இன்னும் தெளிவான, எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லாத மொழியில் எழுதப்படவில்லை என்பதுதான்.
ஐயா, இன்றைய முழக்கங்கள்: ‘பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை நகராட்சிகளின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்; தொழில்களையும் உற்பத்திச் சாதனங்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும்’ என்பவையாகும். இவை நிறைவேற்றப்படும் வரை, பொதுமக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
இன்று நிலம் ஒரு சிலரின் கைகளில் குவிந்துள்ளது; நிலத்தை உழுது பயிரிடுபவன் மிகக் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறான். இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதற்கான ஒரு திருத்தத்தை நண்பர் ஒருவர் முன்வைத்துக் கொண்டிருந்தார்.
அவருடைய உணர்வுகள் இவ்வாறிருக்கும்போது, பல நூற்றாண்டுகளாகத் துன்புறுத்தப்பட்டு வந்த ஒருவரின் உணர்வுகள் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஜாகீர் மற்றும் ஜமீன்தாரி அமைப்புகளின் கீழ் வாழ்ந்த குத்தகைதாரர்களின் நிலைமை உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் பல மணி நேரங்களும் பல நாட்களும் எந்தக் கூலியும் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டார்கள்; ஆனால் தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐயா, அடிப்படை உரிமைகளில் ‘பேகார்’ (கூலி வழங்காமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல்) மற்றும் கட்டாய உழைப்புக்கு எதிராக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல் சட்டத்தை உருவாக்குபவர்கள், அதில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். வெறும் நல்லெண்ண விருப்பங்களைத் தெரிவிப்பதாலோ, உயர்ந்த ஒலியுடைய வார்த்தைகளை அரசியல் சட்டத்தில் சேர்ப்பதாலோ எந்தப் பயனும் இல்லை.”
மேற்கண்ட வாதங்களுக்கு பதில் அளித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார்;-
“உறுப்பு 31-ன் துணைப் பிரிவுகள் (ii) மற்றும் (iii)-க்கு பதிலாக தாம் முன்வைத்துள்ள பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்ற அவருடைய மற்ற திருத்தங்களைப் பொறுத்தவரை, நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்று. பேராசிரியர் கே டி ஷா முன்வைத்துள்ள மாற்றத்தின் மூலம் அவர் அடைய விரும்பும் நோக்கத்தை, தற்போதுள்ள வரைவின் மொழியைப் பயன்படுத்தி அடைய முடியாது என்பதை அவர் நிரூபித்திருந்தால், அவருடைய திருத்தத்தைப் பரிசீலிக்க நான் முற்றிலும் தயாராக இருந்திருப்பேன்.
ஆனால், என்னால் புரிந்துகொள்ள முடிந்த வரையில், வரைவில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் விரிவானதாகும். பேராசிரியர் ஷா முன்வைத்துள்ள குறிப்பிட்ட முன்மொழிவுகளையும் அந்த விரிவான மொழி உள்ளடக்கியுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே வேண்டுமென்றே பொதுவான மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவுகளுக்குப் பதிலாக, வரம்புக்குட்பட்ட குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.
எனவே, அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது திருத்தங்களை நான் எதிர்க்கிறேன்.”
நிறைவாக பேராசிரியர் கே டி ஷா முன்மொழிந்த தீர்மானங்கள் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.
*****
இந்த இடத்தில் நாம் மற்றொரு முக்கியமான அம்சத்தைப் பார்க்க வேண்டும்.
சட்டம் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம். அது கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும். அரசு இயற்றிய சட்டத்தை ஒரு குடிமகன் மீறினால் அவன் மீது வழக்குத் தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் ஒரு சட்டத்தை அரசே மீறினால் அதனால் பாதிக்கப்படும் குடிமகன் நீதிமன்றத்தை அணுகி அந்த சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் கோரலாம். இழப்புக்கு நிவாரணம் பெறலாம். இதுதானே இதுவரை சட்டம் குறித்து நாம் கொண்டிருக்கும் கருத்து.
ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின் பகுதி IV அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பில் உள்ள அம்சங்களை அரசு நிறைவேற்றாவிட்டால் அது குறித்து பாதிக்கப்படும் யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது. இதை அரசியல் சட்டத்தின் உறுப்பு 37 கீழ்க்கண்டவாறு தெளிவாகக் கூறுகிறது.
37. இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துதல்;
இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் எதுவும் நீதிமன்றத்தால் செயலுறுத்தப்படுவன அல்ல; ஆயினும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சிநெறிக்கு அடிப்படையாக அமையும்; மேலும் சட்டங்கள் இயற்றுகையில் இந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது அரசின் கடமையாகும்.
மேற்கூறப்பட்ட வாசகங்களின் அடிப்படையில் அவை வெறும் அறிவுரை அல்லது ஆலோசனை மட்டுமே. அவற்றை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் அரசுக்கு இல்லை.
இந்த அம்சம் குறித்தும் இந்திய அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையில் 19 நவம்பர் 1948 அன்று காரசாரமான விவாதம் நடந்தது. இந்த அத்தியாயத்தின் தலைப்பான ‘பகுதி IV அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்’ என்பது குறித்தே காரசாரமான விவாதம் நடந்தது.
கர்நாடக மாநிலத்தில் பிறந்து மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெச் வி காமத் (ஹரி விஷ்ணு காமத்) என்பவர் ‘அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்’ என்ற அந்த தலைப்பை ‘ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகள்’ என்று மாற்ற வேண்டும் என்று கோரினார்.
“ஐயா, எனது மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் அம்பேத்கரின் மற்றும் இந்த அவையின் பரிசீலனைக்காக இந்தத் திருத்தத்தை முன்வைக்கும் நிலையில், இதற்காக இரண்டு காரணங்களை மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, வரைவுச் சட்டத்தின் III மற்றும் IV பகுதிகள் சில உரிமைகளை உள்ளடக்கியுள்ளன என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. III பகுதி நீதிமன்றத்தில் அமல்படுத்தக்கூடிய உரிமைகளையும் (justiciable rights), IV பகுதி நீதிமன்றத்தின் மூலம் நேரடியாக அமல்படுத்த முடியாத உரிமைகளையும் (non-justiciable rights) கொண்டுள்ளது.
ஆனால், இவ்விரு பகுதிகளிலும் உள்ளவை அடிப்படையான உரிமைகள் (fundamental rights) என்றே கருதப்படுகின்றன.
இதற்கு மதிப்பிற்குரிய சர்தார் வல்லாபாய் படேலின் அறிக்கையிலிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கிறது. 1947 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ‘Reports of the Committees – Second Series’ என்ற தொகுப்பிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன். இந்தச் சிறு நூலின் பிரதிகள் இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.
1947 ஆகஸ்ட் 30 அன்று அரசியல் நிர்ணயச் சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பிற்குரிய சர்தார் வல்லபாய் படேலின் அறிக்கையிலிருந்து நான் வாசிக்கிறேன். அது அரசியல் நிர்ணயச் சட்டப் பேரவையின் தலைவருக்கு எழுதப்பட்டதாகும். அதன் இரண்டாவது பத்தியில் அவர் கூறுகிறார்:
“நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்…”
“மேலும், இந்தச் சிறு நூலின் 48ஆம் பக்கத்தில், மதிப்பிற்குரிய சர்தார் படேல் தலைவராக இருந்த குழுவின் அறிக்கை இடம்பெற்றுள்ளது. அதில், தற்போது அரசியல் சட்டத்தின் Part IV-ல் இடம்பெற்றுள்ள இந்த உரிமைகளுக்கே ‘Fundamental Principles of Governance’ — ‘ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகள்’ — என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்தார் படேல் வழங்கிய அந்தத் தலைப்பிலிருந்து ஏன் விலகி, வேறுபட்ட தலைப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதை டாக்டர் அம்பேத்கரிடமும், வரைவுக் குழுவின் மற்ற உறுப்பினர்களிடமும் நான் அறிய விரும்புகிறேன்.
அந்தக் குழு இந்தக் கொள்கைகளுக்கு ‘Fundamental Principles of Governance’ — ‘ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகள்’ — என்ற தலைப்பைக் கொடுத்திருந்தது. ஆனால், இங்கு வரைவுக் குழு அந்தத் தலைப்பை மாற்றி, ‘Directive Principles of State Policy’ — ‘அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்’ — என்று பெயரிட்டுள்ளது.
சியத் கரிமுத்தீன் அவர்கள் முன்வைத்துள்ள வாதத்தில் வலிமை உள்ளது. அதாவது, நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தக்கூடிய உரிமைகளும் (justiciable rights), நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாத உரிமைகளும் (non-justiciable rights) இரண்டுமே அடிப்படையானவை (fundamental) என்பதே அவரது வாதம்.
எனது திருத்தத்தை இந்த அவை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்வதில், இறுதியாக நான் ஒன்றையே கூற விரும்புகிறேன்: இந்தத் திருத்தம் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் நிராகரிப்பது என்னுடைய திருத்தத்தை மட்டும் அல்ல; சர்தார் வல்லபாய் படேலின் குழுவின் பரிந்துரையையுமே நிராகரிப்பதாகும்.”
இதற்கு ஆந்திராவைச் சேர்ந்த மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் பதில் அளித்துப் பேசினார்.
“ஐயா, சில உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தக்கூடியவை (justiciable rights) என்றும், சில உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாதவை (non-justiciable rights) என்றும் வேறுபடுத்துவதன் நோக்கம் நன்கு அறியப்பட்டதே. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை, 29ஆம் பத்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடி, நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாத உரிமைகளாகும். அவற்றை நீதிமன்றத்தில் சட்டரீதியாக அமல்படுத்திக் கொள்ள முடியாது.
திரு. கரிமுத்தீன், இவையும் நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தக்கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். திரு. கரிமுத்தீன் ஒரு வழக்கறிஞரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைச் சிந்தித்துப் பார்க்கட்டும்.
Article 26-ல், பத்து ஆண்டுகளுக்குள் அரசு இலவசக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அரசு அவ்வாறு செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது எந்த நீதிமன்றம் அதை அமல்படுத்த முடியும்? யாருக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்?
ஒரு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டது என்று வைத்துக்கொண்டாலும், அதை யார் செயல்படுத்துவார்கள்? அரசாங்கமே அதைச் செயல்படுத்தவில்லை என்றால், உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ அதை எவ்வாறு அமல்படுத்த முடியும்?
அரசாங்கத்தையே மாற்றுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்ற அதிகாரி, ‘Amin’ அல்லது ‘Sheriff’ போன்ற ஒருவரின் மூலம் அமைச்சர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பதிலாக ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்க முடியுமா?
இயல்பாகவே பார்த்தால், இவை வெறும் வழிகாட்டுதல்கள்தான்; இவற்றை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தக்கூடிய உரிமைகளாக மாற்றுவது சாத்தியமல்ல. எனவே, ‘Directive’ என்ற சொல்லை நீக்குவதில் எந்தப் பயனும் இல்லை.
இவை எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அந்த அரசாங்கம் தனது செயல்பாடுகளில் மனதில் கொள்ள வேண்டிய கொள்கைகள்; அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதால்தான் அவற்றை அரசியல் சட்டத்திலேயே சேர்த்துள்ளோம்.
ஆனால், Part III-ல் உள்ள அடிப்படை உரிமைகளைப் போலவே இவற்றையும் Fundamental Rights என்று வகைப்படுத்துவது, இந்த இரண்டு வகை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டையே நீக்கிவிடும்; அதன் மூலம் எல்லா உரிமைகளையும் நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தக் கூடியவையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இயல்பிலேயே அது சாத்தியமற்றது.
உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதால் எந்தப் பயனும் இல்லை. நாம் நடைமுறைக்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களின் கருத்தைப் பற்றி அக்கறையில்லாத எந்த அரசாங்கமும் புறக்கணிக்கக்கூடிய பல்வேறு விதிகளை இங்கு தொடர்ந்து சேர்த்துக்கொண்டே போவதில் பயனில்லை.
இந்த விதிகளையோ உரிமைகளையோ அமல்படுத்தக்கூடியது நீதிமன்றம் அல்ல. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பின்னால் இருப்பது பொதுமக்களின் கருத்தும், அந்தப் பொதுமக்கள் கருத்தின் வலிமையும்தான்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெறும். அப்போது பொதுமக்களின் கருத்தைப் பற்றி அலட்சியமாக இருந்த அதே நபர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்பாமல் இருப்பது வாக்காளர்களின் கையில் உள்ளது. அதுவே உண்மையான தடையும் கட்டுப்பாடும் (sanction); எந்த நீதிமன்றத்தின் சட்டரீதியான அதிகாரமும் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான சக்தி அல்ல.”
இறுதியாக பேசிய டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் மேற்கூறிய தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அறிவிக்கிறார்.
“ஐயா, இந்த இரண்டு திருத்தங்களில் எதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். திரு. காமத்தின் திருத்தம், தற்போது உள்ள சொற்றொடர்களிலேயே உண்மையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. ‘Fundamental’ என்ற சொல், திரு. காமத் கவனிப்பார் என நம்புகிறேன், இந்தப் பகுதியின் முதல் உறுப்பிலேயே இடம்பெற்றுள்ளது. ஆகவே, இந்தக் கொள்கைகள் ‘அடிப்படையானவை’ (Fundamental) எனக் கருதப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தால், அந்த நோக்கம் ஏற்கனவே இந்த உறுப்பின் சொற்றொடர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.”
“‘Directive’ என்ற சொல்லைப் பொறுத்தவரை, அந்தச் சொல் தொடர்ந்து இடம்பெறுவது அவசியமும் முக்கியத்துவமும் வாய்ந்தது என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அரசியல் சட்டத்தின் இந்தப் பகுதியை உருவாக்குவதன் மூலம், அரசியல் நிர்ணயச் சட்டப் பேரவை எதிர்கால சட்டமன்றத்திற்கும் எதிர்கால நிர்வாகத்திற்கும் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, எதிர்காலத்தில் சட்டமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் வழங்கப்படவுள்ள சட்ட இயற்றும் அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் அவர்கள் எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கொள்கைகள் வழிகாட்டுகின்றன.
‘Directive’ என்ற சொல்லை நீக்கிவிட்டால், இந்தப் பகுதியை அரசியல் சட்டத்தில் சேர்த்ததன் மூலம் அரசியல் நிர்ணயச் சட்டப் பேரவை கொண்டிருந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் என்று நான் அஞ்சுகிறேன்.
நாம் சிலர் கூறியிருப்பதைப் போல, இந்தக் கொள்கைகளை வெறும் உயர்ந்த இலட்சியங்களாகவோ, நல்லெண்ண அறிவிப்புகளாகவோ (pious declarations) இந்தப் பகுதியில் சேர்ப்பது நிச்சயமாக நமது நோக்கம் அல்ல.
மாறாக, எதிர்காலத்தில் சட்டமன்றமும் நிர்வாகமும் இந்தப் பகுதியில் வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு வெறுமனே வாயளவில் ஆதரவு தெரிவிப்பதை மட்டும் செய்யாமல், நாட்டின் ஆட்சியை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து எதிர்கால நிர்வாக மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கும் இக்கொள்கைகளையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த அவையின் நோக்கம்.
எனவே, ‘Fundamental’ மற்றும் ‘Directive’ ஆகிய இரண்டு சொற்களுமே அவசியமானவை என்றும், அவை இரண்டும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்றும் நான் முன்வைக்கிறேன்.”
இதைத் தொடர்ந்து அரசியல் சட்ட வரைவுக்குழு எழுதிய வாசகங்களே இறுதி செய்யப்பட்டன.
*****
அடுத்து உறுப்பு 37-இன் கதையைப் பார்ப்போம்.
இன்று உறுப்பு 37-ஆக இருக்கும் இந்த அம்சம் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வரைவு நிலையில் வரைவு உறுப்பு 29-ஆக இருந்தது.
வழக்கம் போல பேராசிரியர் கே டி ஷா அவர்கள் மக்கள் பக்கம் நின்று பேசினார்.
“துணைத் தலைவரே, நான் பின்வரும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்:
27. இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துதல்;
இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் எதுவும் நீதிமன்றத்தால் செயலுறுத்தப்படுவன அல்ல; ஆயினும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சிநெறிக்கு அடிப்படையாக அமையும்; மேலும் சட்டங்கள் இயற்றுகையில் இந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது அரசின் கடமையாகும்.
என்ற சட்ட வாசகத்திற்குப் பதிலாக, பின்வருவன சேர்க்கப்பட வேண்டும்:
‘29. இப்பகுதியில் உள்ள விதிகள், குடிமக்களைப் பொறுத்தவரையில் அரசின் கடமைகளாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய ஒவ்வொரு கடமையையும் சார்ந்த உரிய சட்டத்தில் அல்லது அதன் கீழ், பொருத்தமானதாகக் கருதப்படும் முறையிலும், அதிகாரத்தின் மூலமாகவும் அவை நடைமுறைப்படுத்தத்தக்கவையாக இருக்க வேண்டும்.
இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்டங்களை இயற்றுவதில், இக்கொள்கைகளைப் பயன்படுத்துவது அரசின் கடமையாகும்.’”
ஐயா, முழு அரசியலமைப்பிற்கே ஓர் அவமதிப்பாக நான் கருதுகின்ற இந்த உறுப்பு 29-ஐ நீக்கிவிட்டு, நான் முன்மொழிந்துள்ள விதியை அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உணர்வார் என்று நம்புகிறேன்.
ஐயா, உறுப்பு 29-ன் தொடக்கத்திலேயே, இந்த இலட்சியங்களை எந்த நீதிமன்றமும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நாம் இந்தச் சட்டங்களை இயற்றும்போதும், இந்த அரசியலமைப்பை உருவாக்கும்போதும் நமக்குள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், இலட்சியங்கள் மற்றும் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் கீழ் நாம் உருவாக்கப்போகும் ஒரே அதிகார அமைப்பான நீதித்துறையே, இந்த அரசியலமைப்பின் மிக முக்கியமான, அடிப்படையான, ஆக்கப்பூர்வமான அத்தியாயங்களில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தொடக்கத்திலேயே விலக்கப்பட்டு, அதற்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதிலிருந்து மன்னிக்கப்பட்டுவிட்டது.
நூறு ஆண்டுகாலச் சுரண்டலை நாம் அனுபவித்திருக்கிறோம்; நூறு ஆண்டுகால மறுப்பையும் புறக்கணிப்பையும் நாம் அனுபவித்திருக்கிறோம். இப்போது நமக்குரியது நமக்குத் திரும்பக் கிடைக்கின்ற இந்தத் தருணத்தில், நாம் வலியுறுத்துவது — இந்த நோக்கத்தில் அவை என்னுடன் இணையும் என்று நம்புகிறேன் — இந்த இருள் நிறைந்த இரவு முடிவுக்கு வர வேண்டும் என்பதே.
மேலும், அடிவானத்தில் சூரியன் முதன்முதலாக உதயமாகும் அந்தக் கணத்திலிருந்தே, விடியலின் முதல் ஒளிக்கீற்று தோன்றும் தருணத்திலிருந்தே, கடந்த காலத்தில் நமது தலைவர்கள் வெளிப்படுத்திய அனைத்து நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக நமது மனதைத் தயார்படுத்திக்கொண்டு, அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
ஐயா, நிச்சயமாக, இத்தகைய ஓர் உயர்ந்த நம்பிக்கைக்கு ஏற்புடையதாக, இதுபோன்ற ஓர் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே, நமது நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நடைமுறைப்படுத்த எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருக்காது என்று கூறுவது இருக்க முடியாது.
நான் யாரையும் புண்படுத்தாமல் கூறுவதானால், இத்தகைய ஒரு விதி, அரசியலமைப்பில் என்ன கூறப்பட்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை; தங்களது சொந்த வசதிக்கும், நடைமுறையில் சாத்தியமாகத் தோன்றுவதற்கும் ஏற்ப மட்டுமே செயல்படலாம் என்று நீதிமன்றத்தையும் நிர்வாகத்தையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
இது எனக்குத் தோன்றுவது, “வசதி ஏற்படும்போது பணம் செலுத்தப்படும்” என்ற நிபந்தனையுடன் ஒரு வங்கியின் காசோலையை வழங்குவது போன்றதாகும் — அதாவது, அந்த வங்கியின் நிதி வளங்கள் அனுமதித்தால் மட்டுமே அந்தக் காசோலை பணமாக்கப்படும் என்பதுபோல.
இத்தகைய “வசதி ஏற்படும்போது பணம் செலுத்தப்படும்” என்ற நிபந்தனையுடன் ஒரு காசோலை வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் விதி ஒன்று Negotiable Instruments Act (மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம்)-இல் சேர்க்கப்படுவதை, இந்த அரசியலமைப்பை உருவாக்கும் பணியுடன் தொடர்புடைய எந்த அதிகாரியும் ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை.
எனக்குத் தோன்றுவதாவது, எனது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இந்த அத்தியாயம் இப்போது இருக்கும் நிலையில், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த சில தெளிவற்ற விருப்பங்களின் வெறும் வெளிப்பாடாக மட்டுமே இருந்து விடும். அதாவது, சூழ்நிலைகள் அனுமதித்தால், நிலைமைகள் சாதகமாக இருந்தால், நாம் இதைச் செய்யலாம், அல்லது அதைச் செய்யலாம், அல்லது வேறு ஏதாவது ஒன்றைச் செய்யலாம் என்பதாக மட்டுமே அது இருக்கும்.
இந்த அத்தியாயத்தின் தலைப்பில் “Directive” (வழிகாட்டும்) என்ற சொல்லைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று வாதிட்ட மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன் கூறுகிறேன்: இதிலுள்ள பல்வேறு விதிகளில் எதுவும் கட்டாயத்தன்மை கொண்டதாக இல்லை; அவற்றைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் இல்லை.
எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகிறவர்களுக்கு இத்தகைய கட்டாயமான வழிகாட்டுதல் எதுவும் இல்லாத நிலையில், இத்தனை ஆண்டுகளாக நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தும், அதற்காகப் பாடுபட்டும் வந்த இந்த இலட்சியங்கள் அனைத்தும் ஒருபோதும் நனவாகாமல் போகக்கூடும்; குறைந்தபட்சம், நமது வாழ்நாளிலாவது அவை நிறைவேறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
மக்களின் நலனை உண்மையாக நேசிக்கும் எவரும் இப்படிப்பட்ட அணுகுமுறையை நியாயப்படுத்த விரும்பமாட்டார்; நியாயப்படுத்தத் துணியவும் மாட்டார்.
ஐயா, பல விஷயங்கள் முயற்சி செய்து பார்க்கப்படும் வரை நடைமுறைக்கு சாத்தியமற்றவையாகத் தோன்றலாம்; ஆனால் அவற்றை முயற்சி செய்து செயல்படுத்தத் தொடங்கினால், அவை நடைமுறைக்கு சாத்தியமானவையாக மாறிவிடுகின்றன என்று நான் கூற விரும்புகிறேன். நடைமுறையில் எந்த ஒன்றும் முயற்சி செய்து பார்க்கப்படும் வரை சாத்தியமானதாக இருப்பதில்லை.
நாகரிகமான ஒவ்வொரு அரசும் தற்போது நாட்டின் குழந்தைகளுக்கு வழங்க முன்வரும் கல்விக்கான அடிப்படை உரிமையையே எடுத்துக்கொள்ளுங்கள். கட்டாயத் தொடக்கக் கல்விக்கான இந்த உரிமைகூட, மிகவும் குழப்பமான, அரைமனதான, தயக்கத்துடன் கூடிய முறையில் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, இத்தனை ஆண்டுகளாக நம்மீது படிந்திருந்த அறியாமை என்ற சாபத்தை உண்மையிலேயே அகற்ற வேண்டும் என்ற அக்கறை இந்த வரைவைக் கொண்டுவந்தவர்களுக்கு இருந்ததா என்றே ஒருவர் வியக்க வேண்டியுள்ளது.
இங்கே செய்யப்பட்டுள்ள ஏற்பாடு, பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவுக்குள்ளேயேகூட, இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு அரசு “முயற்சி செய்ய” மட்டுமே அனுமதிக்கிறது. அதிலும் அது கட்டாயமானதல்ல. நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்பட வேண்டிய தொடக்கக் கல்வி போன்ற மிக அடிப்படையான உரிமைகூட கட்டாயமானதாக ஆக்கப்படவில்லை.
எனவே, ஐயா, ஏதாவது ஒரு மாற்றம் செய்யப்பட வேண்டும்; இந்தத் திட்டவட்டமான கடமைகளை அரசின் கட்டாயக் கடமைகளாக மாற்ற வேண்டும். இல்லையெனில், அரசோ அல்லது அரசின் அங்கங்களோ, அரசின் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதில் எந்த அக்கறையும் காட்டாமல் போகக்கூடும்.
எனது கருத்துப்படி, இவை மிகவும் அடிப்படையான கடமைகள். இவை முதன்மையான கடமைகள் மட்டுமல்ல; நான் கூறுவதற்கு அனுமதித்தால், மிகவும் புனிதமான கடமைகளும்கூட ஆகும். இத்தகைய கடமைகள் நடைமுறையில் சாத்தியமற்றவை என்று கூறி, இந்த அவையை அவமதிக்க எவரும் முயற்சி செய்யக்கூடாது.’
இவ்வாறெல்லாம் பேராசிரியர் கே டி ஷா அவர்கள் ஆணித்தரமாக அவரது வாதங்களை முன்வைத்தாலும் அது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.
இறுதியில் அரசியல் சட்ட வரைவுக்குழு எழுதிய வாசகங்களே இறுதி வடிவமாக உறுதி செய்யப்பட்டது.
*****
இவ்வாறாக உருவான அரசியல் சட்ட வாசகங்கள் பெருவணிக நிறுவனங்களுக்கு, குறிப்பாக தனியார் மற்றும் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களுக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
- பி. சுந்தரராஜன், வழக்குரைஞர்