(அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பின் பொருளாதாரம் என்ற பொருண்மையின் (தொகுதிகள் 28 முதல் 33 வரை) அறிமுகக் கட்டுரை)
அண்ணல் அம்பேத்கரின் பணவியல் கொள்கையின் இக்காலப் பொருத்தம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக அளவில் டாலருக்கு எதிரான தங்கச் செலாவணித் தரநிலை செயல்பாட்டுக்கு வந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் தொடங்கி, சட்டப்படி எந்தவிதமான உலோகத் தரநிலையுமின்றி அரசுகள் தாள் பணத்தை வெளியிடும் முறை நடைமுறையில் உள்ளது. பணவியல் கொள்கையைப் பற்றிய அண்ணல் அம்பேத்கரின் ஆய்வு இது தொடர்பாக ஆழமான நுண்ணறிவை வழங்குகிறது. இந்த வகையில் இந்திய ரூபாயைப் பற்றிய சிக்கல் என்ற அவரது ஆய்வு, அவரது ஆய்வு நெறியாளரான எட்வின் கானனுடனும் கீன்ஸுடனும் வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது
அண்ணல் அம்பேத்கரின் ஆய்வு நெறியாளரான எட்வின் கானன் (1861-1935), 1893 இல் முன்மொழியப்பட்ட ரூபாயை தங்கத்துடன் இணைக்கும் முறையை ஆதரித்தார். அம்பேத்கர் அந்த முறையை எதிர்த்தார். இந்திய ரூபாய் பற்றிய சிக்கல் என்ற ஆய்வேட்டுக்கு எழுதிய அணிந்துரையில் எட்வின் கானன் அண்ணல் அம்பேத்கரின் சில வாதங்களை மறுத்தாலும், அவரது பார்வையிலிருந்த ‘தூண்டுதல் அளிக்கக்கூடிய புத்துணர்ச்சியைப்’ பாராட்டினார்.
“[ரூபாயைத் தங்கத்துடன் நிலைநிறுத்தும் முறையின்] மீது திரு.அம்பேத்கர் காட்டும் பகையுணர்ச்சியுடன் நான் உடன்படவில்லை; அதை எதிர்த்தும் அதை ஆதரிப்பவர்களை எதிர்த்தும் அவர் வைத்துள்ள வாதங்களில் பெரும்பாலானவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை; ஆனால், சில கருத்துகளை அவர் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். அவர் கூறுவது முற்றிலும் தவறு என்று நான் நினைத்தபோதுகூட அவரது கருத்துகளும் அவற்றுக்கான காரணங்களும் சிந்தனையைத் தூண்டும் வகையில் புதுமையானவையாக இருப்பதைக் காண்கிறேன். ஒரு முதிர்ந்த ஆசிரியரான நான், புத்தாக்கத்தின் தடுமாற்றங்களைப் பொறுத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறேன்….
... அவரது நடைமுறை முடிவை நான் சரி என்று கருதுகிறேன்.” (தொ 31, ப. 19)
ஜே.எம். கீன்ஸ் (1883-1946) ‘தங்கச் செலாவணித் தரநிலையைப்’ பொருளாதார வழியில் சிக்கனமானது என்று கருதினார். ஆனால் அம்பேத்கர், “தங்கத்தைச் சிக்கனப்படுத்துவது அதன் மதிப்பைக் குறைத்துவிடும்” என்றும், அது பொருட்களின் விலையேற்றத்திற்கு (பணவீக்கம்) வழிவகுக்கும் என்றும் வாதிட்டார்.
கீன்ஸ் “வந்தடைந்துள்ள முடிவுகள் என் முடிவுகளோடு தீவிரமாக முரண்படுகின்றன. செலாவணித் தரநிலைக்குச் சாதகமாக அவர் முன்வைத்துள்ள ஒவ்வொரு கூற்றிலும் எங்களுக்கிடையே உள்ள வேறுபாடு வெளிப்படுகிறது. பேராசிரியர் கீன்ஸ் கவனிக்காமல் விட்டுவிட்ட அடிப்படையான உண்மையிலிருந்து இந்த வேறுபாடு தொடங்குகிறது. ரூபாயின் பொதுவான வாங்கும் சக்தியை நிலைப்படுத்தாமல் வேறு எதுவும் ரூபாயை நிலைப்படுத்தாது என்பதே அந்த அடிப்படையான உண்மை. செலாவணித் தரநிலை இதைச் செய்யவில்லை. அது, நோயின் அறிகுறியை மட்டுமே கவனிக்கிறது; நோயைக் கவனிக்கவில்லை. உண்மையில், அது நோயை மோசமாக்கவே செய்கிறது என்பதை நான் எடுத்துக் காட்டியுள்ளேன்.” (தொ 31, பக். 15)
“திரு.கீன்ஸ் ஓர் உண்மையைக் கவனிக்கத் தவறியுள்ளார். செலாவணி வீதம் என்பது, விலைகளின் மட்டத்துக்கான ஒரு குறியீடு மட்டுமே. அதைக் கட்டுப்படுத்த, விலை மட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வெறுமனே அதற்கு மற்றொரு பெயரைச் சூட்டினால் போதாது, அது நீடிக்காது.” (தொ 33, பக். 11)
இந்தியாவில் விலைவாசி உயர்வுக்கு அரசாங்கம் தன்னிச்சையாகவும் வரம்பின்றியும் ரூபாய்களை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவதே காரணம் என்று அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். புழக்கத்திலுள்ள பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ரூபாயின் மதிப்பு நிலைபெறும் என்று அவர் கருதினார்.
அண்ணல் அம்பேத்கர் ‘தங்க நாணயத்துடன் கூடிய தங்கத் தரநிலையை’ ஆதரித்தார். அவரது மிக முக்கியமான வாதம் ‘வாங்கும் திறன் சமநிலை’ குறித்ததாகும். அதாவது, ஒரு நாட்டின் பணத்தின் செலாவணி வீதம் அதன் உள்நாட்டு வாங்கும் திறனைப் பொறுத்தே அமைகிறது.
“இரண்டு நாணய அலகுகளின் செலாவணி வீதம் என்பது அவற்றின் வாங்கும் திறன்களின் செலாவணி வீதத்திற்கு சமநிலையில் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், இது வாங்கும் திறன் சமநிலைக் கோட்பாடாகும். இரண்டு நாணயங்கள் அல்லது இரண்டு நாணய அலகுகளின் ஒரு குறிப்பிட்ட செலாவணி விகிதத்துக்கு விளக்கமளிக்கும் கோட்பாடு.” (தொ. 33: பக். 183)
பிற்கால நிகழ்வுகள் அம்பேத்கரின் வாதங்கள் பலவற்றைச் சரியானவை என்று மெய்ப்பித்தன.
1907, 1914 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய நாணய முறை சந்தித்த சரிவுகள், அம்பேத்கர் எச்சரித்தபடியே ‘தங்கச் செலாவணித் தரநிலையின்’ பலவீனத்தை வெளிப்படுத்தின. 1925 இல் ஹில்டன் யங் ஆணையத்தின் முன் அவர் அளித்த சாட்சியங்கள் (தொ. 33, பக். 98), பிற்காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி உருவாவதற்கான அடிப்படைக் கொள்கைகளை வகுக்க உதவின.
உள்நாட்டு விலைவாசி நிலைத்தன்மையே ஒரு நாட்டின் பொருளாதார வலிமைக்கு முதன்மையானது என்ற அம்பேத்கரின் பார்வை இன்றைய பணவியல் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
பணவீக்கம் (விலைவாசி உயர்வு) - மக்கள் நலன்
அண்ணல் அம்பேத்கர் சமூகத்தை முதலீட்டாளர்கள், வணிகர்கள், உழைப்பாளர்கள் என மூன்றாகப் பிரிக்கிறார். பணவீக்கம் அல்லது நாணய மதிப்பு வீழ்ச்சியென்பது வணிக வர்க்கத்திற்கு இலாபத்தையும், உழைக்கும் மற்றும் முதலீட்டு வர்க்கத்திற்குப் பெரும் இழப்பையும் ஏற்படுத்துகிறதென்று அவர் வாதிட்டார்.
“சமூகத்தின் இன்றைய ஒழுங்கமைப்பில் முதலீட்டு வர்க்கம், வணிக வர்க்கம், ஊதியம் பெறும் வர்க்கம் என்று மூவகைப் பிரிவுகள் உள்ளன. இது, ஓர் உண்மையான சமூகப் பிளவையும் நடைமுறையில் மாறுபட்ட நலன்களையும் கொண்டுள்ளது.
வணிக வர்க்கம் என்பது அனைத்துப் பொருளாதார நடவடிக்கையின் மையமாகும். ஒருபுறம், அது முதலீட்டு வகுப்பிடமிருந்து பணத்தைக் கடன் வாங்குகிறது; மறுபுறம், ஊதியம் பெறும் வகுப்பை வேலைக்கு வைத்துக் கொள்ளுகிறது. இந்த அளவு பணம் கொடுக்கப்படுமென்று பண ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் அங்கே உள்ளன. பண ஒப்பந்தங்கள் செய்யப்பட்டபின் பணத்தின் மதிப்பு இந்த வழியிலோ அந்த வழியிலோ மாறினால், ஒப்பந்தங்கள் பொய்த்துப் போகும் என்பது தெளிவு.
பணத்தின் மதிப்பு குறையுமானால், விலைகள் அதிகரித்து முதலீட்டு வர்க்கமும் ஊதியம் பெறும் வர்க்கமும் பாதிக்கப்படும். வணிக வர்க்கம் ஆதாயம் அடையும்.” (தொ. 33, பக். 191)
விலைவாசி உயரும் போது, தொழிலதிபரின் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்கிறது; ஆனால் அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம் அதே வேகத்தில் உயர்வதில்லை. இதனால் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“தொழிலாளர் வகுப்பின் உறுப்பினர் என்ற முறையில் விலைகள் வீழ்ச்சியடைவது நல்லது என்று உணர்கிறேன்” (தொ. 33, பக். 157)
ஒரு நேர்மையான அரசாங்கம் ஏழைகளின் பைகளைத் திருடி பணக்காரர்களைக் கோடீஸ்வரர்களாக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது சொத்துடைமையாளர்களையும் கடன் கொடுத்தவர்களையும் பாதித்தாலும், அதுவே சமூக நீதிக்குப் பொருத்தமானதென்று அவர் வாதிட்டார்.
இந்தியாவில் சிறு நில உடைமைகள் - அவற்றுக்கான தீர்வுகள்
“சிறு நிலவுடைமைகளை ஒன்றிணைத்து, ஒரே இடத்தில் அமையும்படி செய்வது நடைமுறைச் சிக்கல் எனில், சிறு உடைமைகளைப் பேரளவாக்குதல் என்பது ஒரு கோட்பாடு சார்ந்த சிக்கலாகும்.” (தொ. 28, பக். 261)
இந்த நடைமுறை, கோட்பாட்டுச் சிக்கல் பற்றிய அண்ணல் அம்பேத்கரின் ஆய்வு அவரது பொருளாதாரக் கொள்கைளுக்கான அடித்தளத்தை வழங்கியது.
சிறு நிலவுடைமைகள் தொடர்பாக, பம்பாய் மாகாண வேளாண்மைத் துறை இயக்குநர் மாண்புமிகு ஜி.எஃப். கீட்டிங்கே முன்வைத்த பரிந்துரைகளையும் பரோடா குழு முன்வைத்த பரிந்துரைகளையும் சீர்தூக்கிப் பார்க்கும் அண்ணல் அம்பேத்கர், இந்தியப் பொருளாதாரத்தை வேகமாகத் தொழில்மயமாக்குவதே நிலத்தின் மீதான அழுத்தத்தைத் தணிப்பதற்கான வழி என்ற தீர்வை முன்வைக்கிறார்.
“நிலத்தின்மீது மிகைச்சார்பு நிலை இருப்பதுவரை நிலத்தை ஒருங்கிணைப்பது எளிதல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒருங்கிணைப்பதற்கான திட்டம் எவ்வளவு நீதியானதாக இருந்தாலும் அதுதான் நிலைமை. நிலத்தின் மீதான மிகைச்சார்பைக் குறைப்பது தொழில்மயமாதலின் தவிர்க்க முடியாத விளைவு. அது புறக்கணிக்கக்கூடிய பணியா? இல்லவே இல்லை. நிலவுடைமைகளை ஒருங்கிணைப்பது தொடர்பான இன்னொரு கூறைக் கருத்தில் கொள்வதும் இதே முடிவையே சுட்டுகிறது.
நிலவுடைமையை ஒருங்கிணைப்பதற்கு முன்பு தொழில்மயமாதல் நிகழ வேண்டும். மேலும், எதிர்காலத்தில் நிலம் பிளவுபடுவதையும் சிதறுண்டு போவதையும் தடுப்பதற்கான அரணின்றி, நிலவுடைமையை ஒருங்கிணைக்கும் திட்டங்களைப் போடுவதால் பயனேதும் விளையாது. இத்தகைய அரணைத் தொழில்மயமாக்கமே தரும். இது மட்டுமே நிலத்தை நம்பி வாழும் மக்கள்தொகையைக் குறைத்து, நாம் காட்டியுள்ளபடி, நிலம் பிரிவுகளாகிச் சிதறுவதைத் தடுக்கும். நமது வேளாண்மையின் அடிப்படைத் தீமை, சிறிய சிதறுண்ட நிலவுடைமைகளே என்றால், அதைச் சரிசெய்வதற்குத் தொழில்மயமாக்கலே சரியான வழிமுறையாகும் என்பதை மறுக்க முடியாது.” (தொ. 28, பக். 301)
அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கங்கள்
நிலச் சீர்திருத்தம் தொடர்பாகவும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாகவும் அண்ணல் அம்பேத்கரின் முன்மொழிவுகள் இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள அடிப்படைச் சிக்கல்களை வெளிப்படுத்தின.
1937இல் அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கொண்டுவந்த ‘கோத்தி முறை ஒழிப்பு சட்டமுன்வரைவு’ மற்றும் ‘மகர் வத்தன்தார் ஒழிப்பு சட்ட முன்வரைவு’ முதலியவை அவரது பொருளாதார ஆய்வின் விளைவுகளாகும். கோத்தி முறையை உழவர்களின் குருதியை உறிஞ்சும் ஒரு சுரண்டல் முறையாக அவர் விவரித்தார். சிறு நிலவுடைமையாளர்களைப் பாதுகாக்க, நில உரிமையை மாற்றாமல் ‘கூட்டு வேளாண்மை முறையை’ அவர் பரிந்துரைத்தார்.
அரசு நிதி - நிதிநிலை அறிக்கை
அண்ணல் அம்பேத்கர் நிதிநிலை அறிக்கையை ஒரு புள்ளிவிவர ஆவணமாகப் பார்க்காமல், அது மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான கருவி என்று வாதிட்டார். நில வரியானது ‘விகிதப்படியான வரியாக’ இருப்பதைக் கண்டித்து, அது வருமான வரியைப் போல ‘வளர்வீத வரியாக’ இருக்க வேண்டும் என்று கோரினார். மதுவிலக்குக் கொள்கையினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, ஏழைகளைப் பாதிக்காத வகையில் செல்வந்தர்கள் மீது புதிய வரிகளை விதிக்க அவர் தயங்கவில்லை. மது மீதான அதிகப்படியான வரி சட்டத்துக்குப் புறம்பான சாராய உற்பத்தியைத் தூண்டும் என்ற பொருளாதார உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் வறுமையைக் குறைக்கவும், தேசிய வருமானத்தை உயர்த்தவும் திட்டமிட்ட வழிகளைக் கையாள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளைப் போல வெறும் சமூக சேவைகளுடன் நின்றுவிடாமல், ஒட்டுமொத்தப் பொருளாதார உயர்விற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அவர் கருதினார்.
கிராமப்புறப் பொருளாதாரம் - பஞ்சாயத்துகள்
1933ஆம் ஆண்டின் கிராமப் பஞ்சாயத்து சட்ட முன்வரைவு மீதான விவாதத்தின் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரச் சார்பு நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பினர் வேளாண் தொழிலாளர்களாகவும் நிலமற்றவர்களாகவும் இருக்கும் வரை, சாதி இந்துக்களின் பொருளாதார அழுத்தத்தின் காரணமாக, பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் அரசியல் உரிமைகளை ஒடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது என்பதை அவர் விளக்கினார்.
தொழிலாளர் நலன், சமத்துவப் பொருளாதாரம்
தொழிலாளர் நலன் என்பது வெறும் மனிதாபிமான அடிப்படையிலானது மட்டுமல்ல, அதுவொரு நாட்டின் உற்பத்தித் திறனை சார்ந்ததென்று அவர் கருதினார். 1938இன் தொழில் தகராறுகள் சட்டமுன்வரைவின் மீதான உரையாடலின் போது, சமத்துவத்தை விட நீதியே முக்கியமென்று வாதிட்டார்.
“மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க தொழில்மயமாக்கல் மிக அவசியம்” என்று அவர் குறிப்பிடுகிறார். தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியுமென்று வாதிட்டார்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் செழிக்க, தொழிலாளர், முதலாளி, அரசாங்கம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற பொருளாதாரக் கோட்பாட்டை அவர் நடைமுறைப்படுத்தினார். 1942இல் அவர் தொடங்கிய முத்தரப்புத் தொழிலாளர் மாநாடு, தொழில்முறைத் தகராறுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும், தொழிலாளர் சட்டங்களில் ஒருமைப்பாட்டைக் கொண்டுவரவும் உதவியது.
வங்கி ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக அரசாங்கம் தலையிட்டு மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, அவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். வங்கிகள் இலாபம் ஈட்டுவதற்காகத் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என்றும், நியாயமான ஊதியம் வழங்குவதே ஒரு நல்வாழ்வு அரசின் கடமையென்றும் அவர் வாதிட்டார்.
சாதி அமைப்பு என்பது ‘உழைப்பாளிகளின் பிரிவினை’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அதை உடைக்கத் தொழில்நுட்பப் பயிற்சியை ஒரு கருவியாகக் கையாண்டார். “இது இயந்திரங்களின் காலம், இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற நாடுகள் மட்டுமே பிழைக்கும்” என்று அவர் கருதினார். இதன் விளைவாகவே, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கும் ‘பெவின் பயிற்சியாளர்கள்’ முதலிய திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
பொருளாதார வழியில் பலவீனமானவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற தனது கோட்பாட்டின் அடிப்படையில், தொழிலாளர் சுகாதாரக் காப்பீடு, மகப்பேறு நலச் சலுகைகள் போன்ற சட்டங்களை அவர் கொண்டுவந்தார். பேராசிரியர் அதர்கரின் அறிக்கையின் அடிப்படையில் அவர் உருவாக்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், நவீன இந்தியாவின் தொழிலாளர் நலக் கொள்கைகளுக்கு முன்னோடியாக அமைந்தன.
நாடாளுமன்றத்தில், உணவு மானியக் குறைப்பை அவர் கடுமையாக எதிர்த்தார். அரசாங்கம் மானியங்களைக் குறைக்கும்போது, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வருமான வரிச் சலுகைகள் அல்லது குடும்ப உதவித்தொகைகளை வழங்க வேண்டும் என்ற பிரித்தானிய நிதித் திட்டமிடல் மாதிரியை அவர் சுட்டிக்காட்டினார்.
பல்நோக்குத் திட்டங்கள், நீர் மேலாண்மை
இந்தியாவின் நீர் ஆதாரங்களை வெறும் பாசனத்திற்காக மட்டுமல்லாமல், மின் உற்பத்திக்கும் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்த அண்ணல் அம்பேத்கர் திட்டமிட்டார். தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஒரிசாவின் ஆறுகளை மேம்படுத்தும் திட்டங்கள் முதலியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். அமெரிக்காவின் ‘டென்னசி வேலி அத்தாரிட்டி’ மாதிரியை அவர் பின்பற்றினார். பெரிய அளவிலான அரசு முதலீடுகள் மூலம் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்ற அவரது நம்பிக்கையை இது காட்டுகிறது.
சொத்து வரி சட்ட முன்வரைவை அவர் பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பகுப்பாய்வு செய்தார். அதிகப்படியான வரிகள் நாட்டில் மூலதன உருவாக்கத்தைத் தடுத்து, தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். தெற்காசிய நாடுகள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் போதிய மூலதனம் இல்லாததே என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரி விதிப்பு முறை மூலதனத்தைத் திரட்ட அனுமதிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.
அவரது பொருளாதாரப் புலமையின் காரணமாக, அமைச்சரவையின் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான குழுவில் தாம் இடம்பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். மேலும், மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வு மற்றும் நதிநீர் மேலாண்மை போன்ற விவகாரங்களில் அவர் முன்வைத்த தருக்க அடிப்படையிலான வாதங்கள் அவரது பொருளாதார ஆய்வுகளின் நீட்சியாக இருந்தன.
அண்ணல் அம்பேத்கரின் ஒவ்வொரு சட்ட வாதமும் வலுவான பொருளாதார அடிப்படையில் அமைந்திருந்தது. அரசியல் சனநாயகம் நிலைக்க வேண்டுமானால், அது சமூக மற்றும் பொருளாதார சனநாயகமாக மலர வேண்டுமென்ற பொருளாதாரக் கோட்பாட்டையே அவர் தனது சட்டப் பணிகளில் செயல்படுத்த முயன்றார்.
அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கை: அரசு சோசலிசம்
அண்ணல் அம்பேத்கர் தனது மாநிலங்கள் - சிறுபான்மையினர் என்ற ஆவணத்தில், இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு பின்வருமாறு இருக்க வேண்டுமென்று வாதிட்டார்:
அடிப்படை மற்றும் முக்கியத் தொழில்கள் அனைத்தும் அரசின் உடைமையாக இருக்க வேண்டும். அரசாலேயே நடத்தப்படவும் வேண்டும். காப்பீடு என்பது அரசின் முற்றுரிமையாக இருக்க வேண்டும்; ஒவ்வொரு குடிமகனும் தனது ஊதியத்திற்கேற்ப காப்பீடு செய்துகொள்வதை அரசு கட்டாயமாக்க வேண்டும். வேளாண்மையை ஓர் அரசுத் தொழிலாக அறிவிக்க வேண்டும்.
அரசு, நிலத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தி, கிராம மக்களுக்குக் குத்தகைக்கு வழங்க வேண்டும். இந்த நிலங்கள் ‘கூட்டுப் பண்ணை முறையில்’ பயிரிடப்பட வேண்டும். சாதி அல்லது மத வேறுபாடின்றி நிலம் ஒதுக்கப்பட வேண்டும். நிலப்பிரபுக்கள், குத்தகைதாரர்கள் அல்லது நிலமற்ற தொழிலாளர்கள் என்ற பிரிவினை இருக்கக்கூடாது. வேளாண்மைக்குத் தேவையான மூலதனம், நீர், கருவிகள், விதைகள் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அரசினுடையது.
தனியார் முதலாளித்துவம் ஐரோப்பாவில் ஏற்படுத்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டுமென்று அவர் கருதினார். தொழிலாளர்களைத் தனியார் முதலாளிகளின் முற்றதிகாரத்திலிருந்து காக்க, பொருளாதாரத்தை அரசு கட்டுப்படுத்துவது அவசியமென்று அவர் வாதிட்டார். வேலையில்லாதவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைத் தியாகம் செய்து பிழைப்பு நடத்தும் நிலையை மாற்ற அரசு திட்டமிட்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
அரசு சோசலிசத் திட்டம் வெறும் சட்டமாக இல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தினார். எந்தவொரு நாடாளுமன்றப் பெரும்பான்மையும் வாக்கெடுப்பின் மூலம் இத்திட்டத்தை மாற்றிவிடவோ நீக்கவோ முடியாமல் அவர் உறுதிப்படுத்த விரும்பினார். சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு அரசமைப்பால் தீர்மானிக்கப்படாவிட்டால், அது உண்மையான சனநாயகமாக இருக்க முடியாது என்று அவர் கருதினார்.
சுருக்கமாகச் சொன்னால், அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த ‘அரசு சோசலிசம்’ என்பது ‘ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்ற கோட்பாட்டை நிலைநாட்ட, நிலத்தையும் தொழில்துறையையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும்
அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் அவர் நிகழ்த்திய சமூக ஆய்வுகளின் மீது செலுத்திய தாக்கம்
அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள், இந்திய சமூக அமைப்பை ஒரு பொருளாதார நிறுவனமாக பகுப்பாய்வு செய்வதற்கு வலுவான அடித்தளத்தை வழங்கின.
சாதி என்பது வெறும் ‘உழைப்புப் பிரிவினை’ அல்ல, மாறாக அது ‘உழைப்பாளிகளின் பிரிவினை’ என்று அம்பேத்கர் வாதிட்டார். சாதி அமைப்பு தனிமனித விருப்பத்திற்கோ திறமைக்கோ இடமளிக்காமல், தொழில்களை முன்கூட்டியே தீர்மானிப்பதன் மூலம் உற்பத்தித் திறனைக் குறைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்கள் ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவதைத் தடுப்பதன் மூலம், சாதி அமைப்பு இந்தியாவில் நிலவும் வேலையின்மைக்கு ஒரு நேரடிக் காரணமாகிறது என்று அவர் வாதிட்டார்.
இது சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதோரின் அடிமைத்தனத்தைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ய அவருக்கு உதவியது.
கிராமப்புறங்களில் தலித் மக்களின் அவலநிலையை அண்ணல் அம்பேத்கரின் “சிதறுண்ட மனிதர்கள்” என்ற கோட்பாடு விளக்குகிறது. தீண்டப்படாதோர் கிராமத்திற்கு வெளியே ‘சிதறுண்ட மனிதர்களாக’ வாழ்ந்தது, ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்பாடே தவிர வேறல்ல. அது பிற்காலத்தில் தீண்டாமை என்ற மதக் கோட்பாடாக மாற்றப்பட்டது.
தீண்டாமை என்பது அடிமை முறையை விட மோசமான பொருளாதாரச் சுரண்டல் முறை, ஏனெனில் அடிமை உடைமையாளருக்கு இருக்கும் அடிமைகளைப் பேணும் பொறுப்பு கூட இதில் சுரண்டுபவர்களுக்குக் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார வழியில் நிலவுடைமையாளர்களின் தயவில் வாழும் வரை அவர்களுக்குச் சமூக விடுதலை கிடைக்காது என்பதை அண்ணல் அம்பேத்கர் உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நில உரிமையும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதை பொருளாதாரத் தேவையாக முன்வைத்தார்.
இந்து மதம் என்பது பொதுவான மனிதர்களுக்கானது அல்ல; மாறாக, அது ‘மனிதர்கள்’ என்று அழைக்கப்படும் பார்ப்பனர்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்று அவர் வாதிட்டார். சூத்திரர்கள் சொத்து சேர்ப்பதை மனுதருமம் தடை செய்தது, அவர்களை எப்போதும் மேல்நிலை வகுப்பைச் சார்ந்திருக்கச் செய்யும் பொருளாதாரச் சூழ்ச்சி என்று அம்பேத்கர் விவரித்தார்.
இந்து சட்டத் தொகுப்பு முன்வரைவை அவர் ஒரு சமூகச் சீர்திருத்தமாக மட்டுமல்லாமல், பொருளாதாரச் சமத்துவத்திற்கான வழியாகவும் பார்த்தார். சமூகத்தில் நிலவும் சாதி, பாலின ஏற்றத்தாழ்வுகளை நீக்காமல் வெறும் பொருளாதாரச் சட்டங்களை மட்டும் இயற்றுவது “சாணக் குவியலின் மேல் அரண்மனையைக் கட்டுவது போன்றது” என்று அவர் எச்சரித்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவது அவர்களது பொருளாதார விடுதலையை உறுதி செய்யும் என்று அவர் கருதினார்.
சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்த உரையாடல்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரப் பகுப்பாய்வு ஒரு மிக வலுவான, தருக்கப்படியான வரலாற்று அடித்தளத்தை வழங்குகிறது. அவரது பார்வையில் சாதி என்பது வெறும் சமூகப் பாகுபாடு மட்டுமல்ல, அது மோசமான பொருளாதார நிறுவனமும் ஆகும்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வைக்கப்படும் முக்கியமான வாதம் ‘நிருவாகத் திறமை’ பாதிப்பு என்பதாகும். இதை அம்பேத்கர் அன்றே எதிர்கொண்டார்; மேல்நிலைச் சாதியினர் தங்கள் வகுப்பு நலனைப் பாதுகாக்கவும் பிற சமூகத்தினரை நிருவாகத்திலிருந்து வெளியேற்றவும் ‘திறமை’ என்ற போர்வையைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அல்லது சாதியினர் மட்டுமே அதிகாரத்தில் இருக்கும்போது, அவர்கள் மற்ற சமூகத்தினருக்கு எதிராக ஒரு மறைமுகமான ‘சதி’ செய்கிறார்கள். எனவே நிருவாகத்தில் அனைத்துச் சமூகங்களின் கலப்பு இருந்தால் மட்டுமே அது நடுநிலையான நிருவாகமாக இருக்க முடியும் என்றும் அவர் காட்டினார்.
அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரப் பகுப்பாய்வு இடஒதுக்கீட்டை ஒரு ‘சலுகையாகப்’ பார்க்காமல், இந்தியச் சமூகத்தின் சாதி சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்புச் சிதைவைத் திருத்துவதற்கான ஒரு ‘நிதி மற்றும் நிருவாகத் தீர்வு’ என்று நிறுவுகிறது.
அரசியல் புரட்சிகளுக்கு முன்னால் எப்போதும் ஒரு சமூக மற்றும் மதப் புரட்சி இருந்திருக்கிறது என்பதை அவர் வரலாற்றுவழியில் காட்டினார். புத்தரின் எழுச்சி ஒரு புரட்சி என்றும், அதற்கு எதிரான பார்ப்பனியத்தின் எதிர்ப்புரட்சி பௌத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் விளக்கினார். புத்தர் கூறிய ‘துக்கம்’ என்ற சொல்லுக்கு அம்பேத்கர் வறுமை மற்றும் சுரண்டல் என்று புதிய பொருளாதார விளக்கம் அளித்தார். புத்தரின் தம்மம் என்பது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல, அது ‘ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்ற பொருளாதாரச் சமத்துவத்தை உள்ளடக்கியது என்று அவர் கருதினார்.
அண்ணல் அம்பேத்கரின் தொடக்ககாலப் பொருளாதார ஆய்வுகள் அவருக்கு இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பைப் பற்றிய புரிதலை வழங்கின. இந்த அறிவுப்புலமே, பின்னாளில் அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்திலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளிலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சனநாயகம் என்ற சமூகப் பொருளாதாரக் கோட்பாடாக உருவெடுத்தது.
- மா.சிவகுமார், அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்புக் குழுவின் இணைப் பதிப்பாசிரியர்.