ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வயது குறைந்தவர் எனும் பட்சத்தில், இளஞ்சிறார் என்ற வாதம் எந்த நீதிமன்றத்தின் முன்பாகக் கோரப்படும்போது, வழக்கின் எந்த கட்டத்திலும், ஏன் விசாரிக்கப்பட்டு இறுதியாக முடித்துவைக்கப்பட்ட பிறகும் கூட, அந்த வாதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட தீர்ப்பின் மொழியாக்கம் இது.

மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம், புது டில்லி
நீதிநாயகம்: அல்தமஸ் கபீர் & சிரியாக் ஜோசப்
குற்றவியல் பல்வகை மனு எண். 6426/2010
Crl. Appeal : 1305/2009

மோகன் மாலி மற்றும் ஒருவர் ... மேல்முறையீட்டாளர்கள்
- எதிர் –
மத்திய பிரதேசம் மாநில அரசு  ...... எதிர்மனுதாரர்

உத்தரவின் சுருக்கம்

நீதிநாயகம் அல்தமஸ் கபீர்.

1.   இந்த மேல்முறையீடானது, மத்தியபிரதேசம் மாநிலத்தின் தார் பகுதியிலுள்ள கூடுதல் அமர்வு நீதிபதியால், வழங்கப்பட்ட தண்டனை உத்தரவு மற்றும் தீர்ப்புரைக்கு எதிராக, இந்தோர் உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்புரை மற்றும் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட S.L.P யில் உருவானதாகும். அந்த தீர்ப்புரையின்படி, இந்த மேல்முறையீட்டாளர்களுடன் இரண்டு சக குற்றவாளிகளும் இந்திய தண்டனை சட்டத்தின் 302/34, 326/34 மற்றும் 324/34 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

2.   இந்த வழக்கில் அனுமதி அளிப்பதற்கான விசாரணையின்போது, 2ம் மேல்முறையீட்டாளரான தன்னாலாலால், தான் ஒரு “இளஞ்சிறார்” (JUVENILE) என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, தார் மாநகராட்சியின் தலைமை பதிவாளர் (பிறப்பு மற்றும் இறப்பு) அவர்களால் தனக்கு வழங்கப்பட்ட, பிறப்பு சான்றிதழை இணைத்து, தன்னாலால் புதிதாக பிணை மனு தாக்கல் செய்தார். அந்த சான்றிதழ் மூலமாக தன்னாலாலின் பிறந்தநாள் 12 நவம்பர் 1976 என்றும், அது 17 நவம்பர் 1976ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, குற்றமிழைத்த போது, தன்னாலால் ஒரு இளஞ்சிறார் என்று உரிய விசாரணையின் மூலம் மத்தியபிரதேச அரசின் சார்பாக உறுதி செய்யப்பட்டது. இதன் படி, இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2000ன் பிரிவு 7A r/w 64ன் படியான அனுகூல பலனை, தன்னாலால் அனுபவிக்கலாம் என அரசுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞரான பிரமோத் ஸ்வரூப் சமர்ப்பித்தார்.

3. மேல்முறையீட்டாளர்களுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞரான எஸ். கே. துபே, இந்த சட்டம் அளித்துள்ள விளக்கத்தின் படி, சம்பவ சமயத்தில் தன்னாலாலால் இளவர் என்றும், எனவே இளஞ்சிறார் அல்லாத இதர சக குற்றவாளிகளுடன் அவரை விசாரித்தது பிரிவு 18ன் படி மீறல் ஆகும். மேலும் பிரிவு 15ன் படி அதிகபட்சமாக அவருக்கு வழங்கப்படக்கூடிய தண்டனை மூன்று ஆண்டுகளாக இருப்பினும் அவர் 9 ஆண்டுகளாக சிறை தண்டனையும் அனுபவித்து வந்துள்ளார் என்று சமர்ப்பித்தார்.

4. 2006ன் திருத்த சட்டத்தால், மூல சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 7 A பிரிவை, பிரிவு 20 மற்றும் “இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) விதிகள், 2007”ல், சட்டத்திற்கு முரணாக செயல்படும் இளஞ்சிறார் குறித்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாகக் கூறுகிற விதி 98, ஆகிய இரண்டுடனும் சேர்த்து பார்க்கப்பட வேண்டும்.

5. பிரிவு 7 A, பின்வருமாறு கூறுகிறது. “எந்த நீதிமன்றத்திலும், இளஞ்சிறார் என்ற வாதம் முன்வைக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்”: - (1) எந்த நீதிமன்றத்திலும், இளஞ்சிறார் என்ற வாதம் முன்வைக்கப்படும்போது அல்லது குற்றம் புரியும் போது குற்றம் சுமத்தப்பட்ட நபர் இளஞ்சிறார் என்று நீதிமன்றம் கருதும் சூழலில், தேவையின் பொருட்டு சான்றுகளின் (நிரூபண வாக்குமூலம் அல்லாத) அடிப்படையில் அந்த நபருடைய வயதை தீர்மானிக்கும் விதமாக விசாரணையை மேற்கொண்டு, அந்த நபர் இளஞ்சிறாரா, குழந்தையா இல்லையா என்பன குறித்த கண்டறிதல்களை பதிவு செய்து, அந்த நபரின் வயதை முடிந்த வரை சரியாகக் குறிப்பிட வேண்டும். இளஞ்சிறார் என்ற வாதம் எந்த நீதிமன்றத்தின் முன்பாகவும் கோரப்படும்போது, வழக்கின் எந்த கட்டத்திலும், ஏன் விசாரிக்கப்பட்டு இறுதியாக முடித்துவைக்கப்பட்ட பிறகும் கூட, அந்த வாதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னரே ஒருவர் இளஞ்சிறாருக்கான வயதை தாண்டிவிட்டால் அத்தகைய சூழலில், கீழ்கண்ட விதிகள் மற்றும் சரத்துக்களின் அடிப்படையில் அது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.
பிரிவு (2) (i)ன் அடிப்படையில், குற்றம் புரிந்தபோது ஒருவர் இளஞ்சிறார் என்று நீதிமன்றம் கண்டறியும் பட்சத்தில், அவ்வழக்கை, உரிய ஆணை பிறப்பிக்க வேண்டிய இளஞ்சிறார் குழுமத்துக்கு அனுப்ப வேண்டும் மற்றும் அந்த வழக்கில் தண்டனை எதுவும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்குமானால் அது செல்லுதன்மை அற்றுவிடும்.

 பிரிவு 20. நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பான சிறப்பு நெறிமுறைகள்: “இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவை என்னவாக இருப்பினும், இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதலாக எந்த பகுதியிலும், எந்த நீதிமன்றத்திலும் இளஞ்சிறார் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றமானது, குற்றம் செய்தது இளஞ்சிறார் என்று கண்டறியும் போது, அது தொடர்பான கண்டறிதல்களை பதிவு செய்து, தண்டனை விதிப்பதற்கு பதிலாக, இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளின் படி, அந்த வழக்கில் அமைந்த விசாரணையின் மூலமாக இளஞ்சிறார்தான் குற்றமிழைத்துள்ளதாக உறுதிசெய்யும் போது, அது தொடர்பாக ஆணை பிறப்பிக்க வேண்டி இளஞ்சிறார் குழுமத்திற்கு அனுப்ப வேண்டும். [போதுமான மற்றும் சிறப்பான காரணங்கள் ஏதாவது ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சூழலில், குழுமமானது இளஞ்சிறாரின் நலனில் அக்கறை கொண்டு, அந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஆணையை மறு ஆய்வு செய்து தகுந்த ஆணை பிறப்பிக்கலாம்.] விளக்கம்: இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட வழக்குகளிலும் விசாரணையைத் தொடர இப்பிரிவு வழிவகுக்கிறது.

பிரிவு “64. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வரும் இளஞ்சிறார்: இச்சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் எந்த பகுதியிலும் ஏற்கனவே ஏதாவது சிறை தண்டனை அனுபவித்து வருவது இளஞ்சிறாராக இருப்பின், மாநில அரசானது, அவரை ஒரு சிறப்பு கூர்நோக்கு இல்லத்திற்கோ அல்லது தான் உசிதமாக கருதும் நிறுவனம் எதிலுமோ அவரது மிச்சமிருக்கும் தண்டனை காலத்திற்கு அவரை வைத்திருக்கலாம். பிரிவு 16 (2) ஐ, விதி 98, பிரிவு 20 மற்றும் 7 ஐயும் சேர்த்து வாசிக்க வேண்டும்.”

விதி 98: “சட்டத்திற்கு முரணாக செயல்பட்ட இளஞ்சிறார் சம்மந்தப்பட்ட முடித்து வைக்கப்பட்ட வழக்குகள்: மாநில அரசோ அல்லது குழுமமோ, இது தொடர்பான நோக்கத்திலான மனு செய்யப்படுதலின் மூலமாகவோ, தன்னிச்சையாகவோ, அந்த நபரின் வழக்கை மறுஆய்வு செய்து, இந்த சட்டம் மற்றும் விதி 12ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் அவர் இளஞ்சிறாரா என்பது குறித்து முடிவுக்கு வந்து, இந்த சட்டத்தின் பிரிவு 64ன் கீழ், இளஞ்சிறாரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டத்தின் பிரிவு 15ல் கூறப்பட்டுள்ள அதிக பட்ச காலத்தை விட கூடுதலான சிறை வைப்பு செய்யப்பட்டிருக்கும் இளஞ்சிறாரை உடனடியாக விடுவிக்க தகுந்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.”

6. இந்த வழக்கின் நிகழ்வுகளின்படி, இளஞ்சிறாரான தன்னாலால் ஏற்கனவே வயது வந்த நபர்களுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு, மேலும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 9 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அனுபவித்தும் விட்டார். எனவே, தன்னாலால் வழக்கில் விதி 98 முழுமையாக பொருந்தும்.

7. 2ம் மேல்முறையீட்டாளரான தன்னாலால், குற்றம் புரிந்த காலத்தில் இளவர் என்பதைக் கருத்தில் கொண்டு, பிரிவு 15ல் கூறப்பட்டுள்ள அதிகபட்சமான சிறை தண்டனை காலத்தையும் விட கூடுதலான சிறை தண்டனையையும் அவர் அனுபவித்திருப்பதால், பிரிவு 15 மற்றும் 64 r/w விதி 98ன் நெறிமுறைகளை பொருத்திப்பார்த்து இந்த மேல்முறையீட்டை தன்னாலாலை பொறுத்த வரையில் அனுமதிக்கிறோம். அதன் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கு கட்டளை பிறப்பிக்கிறோம்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It