mesopotamia

கற்கால மனிதனின் கலைகளில் எதிரொலித்த சிந்தனை வளர்ச்சி மாற்றங்களானது, மனித வரலாற்றையே தலைக் கீழாகப் புரட்டிப்போடும் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றில் கொண்டுபோய் அவனை நிறுத்தியது. விவசாயம். தினப்படி உணவிற்காக வேட்டையில் வாழ்வை பணையம் வைக்கும் நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ஓரிடத்தில் தங்கி உணவை மண்ணிலிருந்து தேவையான அளவிற்கு உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தை விவசாயம் மனிதனுக்கு வரமாக கொண்டுவந்தது. அரசுகளையும், சாம்ராஜியங்களையும் உருவாக்கிய உலகின் மூன்று பழமையான நாகரீகங்கள் தலையெடுத்தன. அவைகள் மெசபட்டோமிய, எகிப்திய மற்றும் சிந்துவெளி நாகரீகங்கள். இவைகளோடு சேர்த்து தென் கிழக்கு ஆசியாவில் மாண்டிரியன் என்று அழைக்கப்படும் சீன நாகரீகமும் நான்காவதாக உருவானது. இந்த நான்கு நாகரீகங்களை எடுத்துக்கொண்டால் தமிழ் வெளியில் மெசபட்டோமிய கலைகள் குறித்து அவ்வளவாக பேசப்படவில்லை என்பதால் முதலில் மெசபட்டோமிய கலைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாக மெசபட்டோமிய நிலப் பகுதியை இரண்டு ஆறுகளின் நிலம் என்று அழைக்கிறார்கள். டைகிரிஸ் மற்றும் யூப்பிரடிஸ் ஆகிய இரண்டு நதிகள் செழுமைப்படுத்தும் நிலப் பகுதிகளை உள்ளடக்கியது மெசபட்டோமியா. இன்றைய ஈராக்கின் பெரும் பகுதி, தென் கிழக்கு துருக்கி மற்றும் கிழக்கு சிரியப் பகுதிகள் இவைகள். இந்த இரண்டு நதிகளின் வடக்குப் பகுதி மலைகள் சூழ்ந்த, மழை அதிகம் பெறும் நிலப்பகுதியை உள்ளடக்கியது. தெற்குப் பகுதி செழுமையான விவசாய நிலப் பகுதியை உள்ளடக்கியது. தெற்குப் பகுதி செழுமையான விவசாய நிலப்பகுதி என்றாலும் இங்கே மழை என்பது நிச்சயமற்ற ஒன்று. இரண்டு நதிகளின் வெள்ளப் பெருக்கையே தெற்குப் பகுதியின் விவசாய செழுமை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே கலை மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் மெசபட்டோமியாவில் வடக்கு, தெற்கு என்கிற இரண்டு பிரிவுகள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டிருந்தது. இன்றைக்கு மத்தியக் கிழக்கு என்று அழைக்கப்படும் நிலப் பரப்பின் கலைகளுக்கு வேராக இருப்பது 6,000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மெசபட்டோமிய நாகரீகத்தின் கலைகள்.

மெசபட்டோமிய கலைகள் என்பது பொதுப்படையான பெயராகவே வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் மெசபட்டோமிய கலைகள் என்பது நான்கு பெரும் பிரிவுகளின் தொகுப்பாகும். அவைகள் சுமேரிய, அக்கேடிய, பாபிலோனிய மற்றும் அசீரியக் கலைகள். இந்த நான்கும் நான்கு தனித் தனி காலக்கட்டங்களை உள்ளடக்கியது. மெசபட்டோமிய கலை நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது என்றாலும் அந்த நான்கின் கலை வெளிப்பாட்டு கருப் பொருள் என்பது ஒன்றே. கடவுள் மற்றும் அரசன். இந்த இரண்டும் சார்ந்த மனித சிந்தனைகளே சுமேரிய, அக்கேடிய, பாபிலோனிய மற்றும் அசீரியக் கலைகளின் பேசுபொருள். கிருஸ்துவ சகாப்தத்திற்கு பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே டைகிரிஸ் மற்றும் யூப்பிரிடீஸ் நதிகளின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் விவசாய குடியிருப்புகள் தோன்றிவிட்டாலும், மெசபட்டோமிய நிலப் பகுதியில் நகர நாகரீகத்திற்கான வலுவான தொல்லியல் ஆதாரங்கள் என்பது கி.மு. 3000-த்திலிருந்தே தொடங்குகிறது. (தற்போதைய தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலத்தில் மேலும் பழமையான மெசபட்டோமிய நகரங்கள் கண்டுபிடிக்கப்படலாம். அச்சமயத்தில் இந்த கால எல்லை இன்னும் பின்னோக்கி செல்லக் கூடும்).

சுமேரிய கலைகளுக்கு ஆதாரமான மூலக் கூறுகள் உபேய்டியன் கலாச்சாரக் காலகட்டத்திலேயே தொடங்கிவிடுகிறது. டைகிரிஸ் மற்றும் யூப்பிரடிஸ் நதிகளின் தெற்குப் பகுதியிலிருந்த செழுமையான வண்டல் மண் பரப்பில் தோன்றியது உபேய்டியன் கலைகள். இதன் காலம் கி.மு. 4000 – 6000. இன்றைய ஈராக்கின் அல்-உபேயத் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நகர குடியிருப்புகளுக்கு உபேய்டின் கால குடியிருப்புகள் என்று தொல்லியலாளர்கள் அடையாளப் பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றிலிருந்து எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அல்-உபேயத் பகுதியில் மிக செழிப்பான நகர நாகரீகம் ஒன்று இருந்திருக்கிறது. இந்த உபேயத் நாகரீகமே பிற்காலத்தில் இரண்டு நதிகளின் வடக்கு பகுதிகளுக்கும் பரவி மெசபட்டோமியா முழுவதும் வியாபித்திருக்கிறது. இரண்டு நதிகளின் வடக்குப் பகுதியில் உபேயத் கலாச்சாரத்திற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆலாஃப் (கி.மு. 6000 – 7000) என்கிற கலாச்சாரம் இருந்திருக்கிறது. ஆலாஃப் நாகரீகத்தின் மண் பாண்ட ஓவியங்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் மிக பிரசித்துப் பெற்றதாக இருந்திருக்கிறது. ஆனால் அடுத்த சில நூறு ஆண்டுகளில் உபேயத் கலைகள், ஆலாஃப் கலைகளை தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது.

அல்-உபேயத் தோன்றிய விவசாய கிராம குடியிருப்புகள் படிப்படியாக வளர்ந்து நகர நாகரீகமாக மாறியதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. நகரமயமாதலின் அடையாளங்களாக மிகப் பெரிய கோயில் கட்டிடங்களும், நகரத் திட்டமிடலும், சதுர பலகைக் கற்கள் பதித்த சாலைகளும், நீர்மேலாண்மை நடவடிக்கைகளும் அல்-உபேயத் பகுதி முழுவதும் காணக் கிடைக்கின்றன. இந்தப் பகுதியிலேயே சுமேரிய நாகரீகம் முழுவதிலும் மிகப் புகழ்ப் பெற்ற ஊர், ஊருக் மற்றும் ஈரிடு போன்ற நகரங்கள் இருந்தன. இன்றைக்குக் கிடைக்கும் சுமேரிய எழுத்து ஆதாரங்கள் ஊர் நகரமே சுமேரியாவின் முதல் நகரம் என்று சொல்கின்றன. (தமிழ் மொழியிலிருக்கும் ஊர் என்கிற வார்த்தைக்கும் சுமேரியாவின் முதல் நகரமான இந்த ஊர் என்பதற்கும் இருக்கும் பெயர் ஒற்றுமை குறித்த மொழி ஆராய்ச்சிகள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. நம் நாட்டிலா என்று கேட்காதீர்கள் அதற்கெல்லாம் இங்கு வாய்ப்பு கிடையாது. வெளிநாட்டு பல்கலைகழகங்களில்தான்.)

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It