கலைமாமணி பரமசிவராவின் பேத்தியின் கல்யாணத்திற்கு மாலை நிகழ்விற்குச் சென்றபோது பரமசிவராவின் அத்தான் ராமசாமி ராவுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தரமான களைஞர்தான். ஆனால் பார்வையாளர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள், ரசனை மாறிவிட்டது என்பது அறியாமலே கூத்து நடத்துவார். பெரும்பாலும் நவீன பார்வையாளர்களை ஒத்துப் போகாமல் ஏற்கனவே தன் மூளையில் பதிவாகியிருந்த கதைகளின் உரையாடல்களையே சொல்லுவார். அவரது நகைச்சுவைக் காட்சி 50 வருஷங்களுக்கு முன்பு நடந்தது மாதிரி இருக்கும்.

 பரமசிவராவின் பேரனின் கல்யாணம் ரொம்பவும் ஆடம்பரம் இல்லாமல்தான் நடந்தது. ஆனால் கணிகர் ஜாதிக்கு அது அதிகம் தான். நான் "உங்க கல்யாணம் எங்கே நடந்தது நினைவிருக்கிறதா" என்று கேட்டேன். மெல்ல சிரித்துக் கொண்டு "எல்லாம் கூத்து நடத்தின இடத்தில் தான்" என்றார். அப்படியானால், கேர் பருவத்தாலா (முதல் இரவு) "எங்கே நடந்தது " என்று விளையாட்டாகக் கேட்டேன்

ராமசாமி என் கேள்வியை சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார். வடக்கன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்) ஊரின் அருகே கால்கரை என்ற கிராமத்தில் அப்போது கூத்து நடந்தது. சுப்பையா அத்தான் தான் கூத்து நடத்தினார். நான் ஒத்தாசைக்குப் போய் இருந்தேன். அந்த ஊரில் தேவர் ஜாதிக்காரங்க ரொம்ப பேர் இருந்தாங்க. ஒரு ரெட்டியார் பண்ணையார் எங்களுக்கு நல்ல ஆதரவாக இருந்தார். அவர் செலவில் கல்யாணம் நடந்தது.

bullock cartகல்யாணம் முடிஞ்சு ரெண்டு மூணு நாள் கழிச்சுத்தான் கேர்பருவத்தாலா நடந்தது. நானும் செந்தாமரையும் கூத்து நடத்துற ஓல பந்தல்ல படுத்திருந்தோம். அந்த இடத்துல இருந்த தோல்பாவை படங்களை வேறு இடத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். தீட்டுப்படக்கூடாது பார்த்துக்கங்க.

நாங்க படுத்து இருந்த இடத்தைச் சுற்றி தார்ப்பாயைக் சுற்றிக் கட்டியிருந்தார்கள். வெளியே சுப்பராவ் அத்தான். கோமதி அக்கா இன்னும் ரெண்டு சொந்தக்காரங்க படுத்து இருந்தார்கள். நாங்க முனங்குனா கூட அவர்களுக்கு கேட்கும். அப்படி பக்கத்துல தான் படுத்து இருந்தாங்க. நாங்க பெரண்டு படுத்த போது தார்ப்பாய் விலகியது. கோமதி அக்கா அதை மீண்டும் இழுத்து விட்டாள் என்றார்.

இந்தச் செய்தியை விரிவாகச் சொன்னார். நான் எப்போதோ படித்த ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. சென்னையில் பிளாட்பார்மில் கந்தல் போர்வைக்குள் படுத்துக் கிடந்த கணவனும் மனைவியும் பேருந்தின் விளக்கின் ஒளிபட்டு நெளிந்து அசைந்ததை வர்ணித்து இருப்பார்.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களான கணிகர்களின் நாடோடி வாழ்க்கை 50 களின் இறுதியில் பெரும்பாலும் முடிந்து விட்டது என்றாலும் 70 களில் கூட சொந்த வீடு இருந்தவர்களில் சிலர் நாடோடிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்தக் காலத்தில் கணிகர்களின் கூத்து கொஞ்சம் கொஞ்சமாக நலிய அவர்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனங்களையும் வேறு அலங்காரப் பொருட்களையும் விற்கும் சிறு வியாபாரிகள் ஆகிவிட்டனர். சிலர் ரிக்கார்டு டான்ஸ் ஆடுவதில் பெரும் லாபம் கிடைப்பதைக் கண்டுகொண்டார்கள்.

இவர்களின் நாடோடி வாழ்க்கை நின்று போனதற்கு அதிகப்படியான இந்த வருமானம் ஒரு காரணம் எண்பதுகளில் கடைசியில் பாவைக் கூத்து பற்றி அறிக்கை தயாரிக்க பல்கலைக்கழக மானிய நிதி உதவியுடன் அலைந்து கொண்டிருந்த போது யாரும் நாடோடிகளாக வாழ்ந்த தகவல் எனக்கு கிடைக்கவில்லை.

ஒருமுறை தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கலைமாமணி முத்து சந்திரனுடன் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் விழாவிற்குச் சென்று விட்டு திசையன்விளை ஊர்வழியே வந்தபோது முத்துசாமி ராவை சந்தித்தேன். நான் சந்தித்த அந்தக் கிராமத்தில் அவர் கூத்து நடத்திக் கொண்டு இருந்தார். இது பெரும்பாலும் 2015 இல் இருக்கலாம்

அப்போது நான் முத்துசாமியின் கூத்தைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அவரோடு கொஞ்சம் பேசவும் செய்தேன். அவர் மற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பது மூன்று விஷயங்களில் என்று தோன்றியது.

ஒன்று முத்துசாமி ராவுக்கு தோல்பாவைக் கூத்து தவிர வேறு தொழில்கள் தெரியாது. வியாபாரம் தெரியாது. இரண்டு அவர் நிகழ்த்திய கூத்து உரையாடலில் பழைய காலத்து அமைப்பின் தொடர்ச்சி இருந்தது. அதை மாற்றம் செய்ய வேண்டும் என்னும் அறிவு அல்லது மற்றவர்களின் தொடர்பு அவருக்கு இல்லை. மூன்று அவர் முழு நேர நாடோடியாக இருந்தார்.

செல்லையா ராவின் மகன் முத்துசாமி ராவ் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு குக்கிராமத்தில் கூத்து நிகழ்த்திய போது இரட்டைக் காளை மாட்டு வண்டியின் அடியில் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருந்த திரைச்சீலைகளின் நடுவே ஆற்று மணலில் விரிக்கப்பட்டு இருந்த கந்தல் துணியில் பிறந்தார். பெரும்பாலும் 50 களின் ஆரம்பத்தில் இது இருக்கலாம்.

மற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களைப் போலவே முத்துசாமி ராவுக்கும் பிறந்த ஆண்டு தெரியாது. ஜோதிடம் சொல்லியே வாழ்க்கையைக் கழிக்கும் கணிகர்களின் உட்பிரிகளில் யாருக்கும் ஜாதகம் கிடையாது. யாரும் பிறந்த நாள் நட்சத்திரத்தை எழுதி வைப்பதில்லை.

முத்துசாமி ராவுக்கு முன் பிறந்த ஐந்து பேரும் பெண்கள். இவர்களும் மாட்டு வண்டியின் அடியில் பிறந்தவர்கள் தாம். முத்துசாமி ராவ் செல்லையாவுக்கு ஒரே மகன். அதனால் தந்தையின் தோல்பாவை படங்கள் ‘மாட்டு வண்டி’ இசைக்கருவிகள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் இவருக்குக் கிடைத்துவிட்டன.

பொதுவாகத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் தங்களின் ஆண்குழந்தைகளுக்குச் சொத்துக்கள் என்று கொடுப்பது தோல் பாவைகளைத் தான். இரண்டு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தால் பாவைகள் குறைவாகத்தான் பங்கு வைக்க முடியும்.

இது தோல் பாவைக் கலைஞர்களுக்கு மட்டுமல்ல சலவைத் தொழிலாளி தன்னுடைய ஆண் பிள்ளைகளுக்கு தான் துணி வெளுக்கும் வீடுகளைச் சொத்தாகக் கொடுப்பான். கழுதைகளும் கிடைக்கும். ஜோதிடம் சொல்லும் கணிகர்கள் தாங்கள் பதிவாக ஜோதிடம் செல்லப் போகும் வீடுகளைப் பிள்ளைகளுக்குப் பங்கு வைத்துக் கொடுப்பர். இதை அந்த வீடுகளுக்குச் சென்று சொல்லுவார்கள்.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களிடம் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பல்வேறு வடிவங்கள் இருக்கும். ராமன், லட்சுமணன், சீதை, அனுமன், ராவணன் போன்ற கதாபாத்திரங்களுக்கு பத்துக்கு மேற்பட்ட தனி பாவைகள் இருக்கும். இவை மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பங்கு வைக்கும் போது பிரச்சனை ஏற்படும். விஸ்வரூப அனுமன் படம் ஒன்று இருந்தால் அதை மூத்தவனுக்குக் கொடுப்பார்கள். இளையவன் இதனால் கோபப்படுவான். இப்படியாக குடும்பத்தில் சொத்து பிரிப்பதில் ஏற்படும் சிக்கல் நில உடமையாளரான தந்தையின் சிக்கல் போன்றது தான்.

செல்லையா ராவ் அப்பாவின் படங்களை முழுமையாக பெற்றுவிட்டார். அப்பா இறந்தபின் தனியே நிகழ்ச்சி நடத்தினார். எல்லோரும் கல்யாணம் செய்து கொண்ட பின் உறவினர் சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு கூத்து நடத்தினார். அப்போதும் நாடோடி வாழ்க்கை தான்.

முத்துசாமியின் மூத்த அக்காளின் மகள் 15 வயதில் கல்யாணம் பண்ணி 16 வயதில் வாழாவெட்டியாக வீட்டுக்கு வந்து விட்டாள். அதன் பின் வேறு ஒருவனை கல்யாணம் செய்துகொண்டு ஒரு ஆண்டில் விதவையானாள். சொந்தக்காரர்கள் அவளை முத்துசாமிக்கு மனைவி ஆக்கினர். அவளுக்கு அப்போது வயது 17 முத்துசாமிக்கு 34 வயது. அவர்களுக்கு ஒரு மகன் தான். மூளை வளர்ச்சி இல்லாத அவன் ரெண்டு வயதில் இறந்து போனான். முத்துசாமியின் நாடோடி வாழ்க்கை பிடிக்காத மனைவி தேனிக்குச் சென்றாள். அதன் பிறகு முத்துசாமி தனிக்கட்டைதான். 40 ஆண்டுகளாய் நாடோடியாக வாழ்கிறார்.

முத்துசாமிக்கு இயல்பான குணம் ஒரு இடத்தில் வீடு கட்டிக் கொண்டு நிலையாக தங்க முடியாது. அவருக்கு சொந்த வீட்டில் தங்குவதைக் கற்பனை செய்ய முடியவில்லை. வீட்டில் உள்ளே இருப்பதை அவர் எப்படியோ வெறுக்கிறார். வெட்ட வெளியில் கல் மண்டபத்தில் வீட்டுத் திண்ணையில் இருப்பது. படுப்பது அவருக்குப் பிடித்திருக்கிறது. அவரது மனைவி அவரை வெறுத்து ஒதுக்கியதற்கு இதுவும் ஒரு காரணம்.

முத்துசாமியின் தந்தை கணிகரின் உட்பிரிவான மண்டிகர் அல்லர். அவர் சவான் பிரிவைச் சார்ந்தவர். கைரேகை பார்த்துதான் தன் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவருக்கு தோல்பாவைக் கூத்து நடத்துவதற்கு உரிமை கிடையாது. கணிகரின் பிரிவினரில் மண்டிகர் மட்டுமே கூத்தை நடத்துவதற்கு உரிமை உடையவர்கள்.

மண்டிகர் அல்லாத பிற 11 பிரிவினரும் இந்தக் கலையை நிகழ்த்தினால் மண்டியருக்குப் பிறந்தவன் என்று ஏளனமாக சொல்லுவார்கள். அதனால் மண்டிகர் அல்லாதவன் கூத்து நடத்துவதற்கு மண்டிகரின் முன்னால் பால்கா பாச்சா என்ற சடங்கை செய்வான். அப்போது வயதில் முதிர்ந்த ஒருவனின் மடியில் அமர்ந்து எனக்குக் கூத்து நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்க வேண்டும். அவனும் அனுமதி கொடுப்பான். பிறகு அந்தக் கணிகன் கூத்து நடத்தும் உரிமை உடையவன் ஆகிறான்.

முத்துசாமியின் தந்தையும் இதுபோன்று அனுமதி வாங்கி இருக்கிறார். உட்பிரிவு என்பது தந்தை வழி வருவதால் முத்துசாமி சவான் தான். கூத்து நடத்த அனுமதி கிடையாது. ஆனால் அவர் நாடோடி. உறவினர்களிடமோ ஜாதியினரிடமோ தொடர்பு இல்லாதவர். அவர்களின் பஞ்சாயத்தில் கலந்து கொள்ளாதவர். ஆகவே அவரை யாரும் கட்டுப்படுத்தவில்லை.

இந்தப் பூர்வீகக் கதைகளை 2023 செப்டம்பர் முதல் நாளில் அவரை சந்தித்தபோது கேட்டேன். என்னுடன் முத்துச்சந்திரனும் ஆங்கில இந்து நாளிதழின் மூத்த நிரூபர் கோலப்பனும் வந்திருந்தார். நாங்கள் உடன்குடியில் மொழி நூல் அறிஞர் கால்டுவெல்லின் பழைய வீட்டை (1822) பார்த்துவிட்டு நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடுக்குறிச்சி கிராமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு அம்மன் கோவில் முன் வளாகத்தில் முத்துசாமி இருந்தார்.

அந்தக் கோவில் வளாகம் முழுக்க ஆல மரங்கள் குடையாய் கவிழ்ந்து கிடந்தன. சிவந்த சிறிய உருண்டையான ஆலம் பழங்கள் பச்சை இலையை மறைத்துக் கொண்டு கவிழ்ந்து கிடந்தன. உடன்குடி வெயிலுக்கு அந்த இடம் கொடைக்கானல் ஆக இருந்தது. அந்த வளாகம் முழுக்க பொடி மணல்கள் பரந்து கிடக்கின்றன. ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒற்றைக் காளை வண்டி. அதன் அருகே முத்துசாமி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

முத்துச்சந்திரன் ஏற்கனவே நாங்கள் வருவதாக செய்தி அனுப்பி இருந்ததால் முத்துசாமி எங்களைப் பார்த்ததும் இரண்டு கைகளை கூப்பினார். ஒத்தைக் காளை வண்டி அவருக்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டது. வண்டியின் கீழ் பகுதியில் தோல்பாவைகள், ஒரு மிருதங்கம், திரைச்சீலை, ஒலிப்பெருக்கிச் சாதனங்கள். வண்டியின் மேல் பகுதியில் சமையல் பாத்திரம், படுக்கை, உடை என சில சாமான்கள், மொத்தமே அவரது உடைமைகள் எல்லாமே வண்டியில் அடங்கிவிட்டன. வண்டியின் அடியில் தொங்கிய கோணிப் பையில் ஒற்றைக் காளைக்கு கொஞ்சம் புல்.

மழைக்காலங்களில் கோவில் திண்ணை அல்லது வீடுகளின் திண்ணையில் படுத்துக் கொள்ளுவார். காளையைக் கட்டிப்போடுவதில்லை. அது எங்காவது மேய்ந்து விட்டு அவரைத் தேடி வந்து விடும். அதற்கு அந்த வட்டாரப் பாதைகள் அத்துபடி. மாட்டை வண்டியில் பூட்டினால் போதும். நடக்க ஆரம்பித்து விடும். அவர் விருப்பப்பட்ட கிராமத்திற்கு அழைத்துச்சென்று விடும்.

ஒரு கிராமத்தில் 15 முதல் 20 நாட்கள் முகாம் அடிப்பார் என்றாலும் கூத்து நிகழ்ச்சி 10 அல்லது 12 நாட்கள் தான் நடக்கும். பெரும்பாலும் ஊர்க் கோவிலின் முன்னே ஒற்றைக் காளை வண்டியை நிறுத்துவது வழக்கம். மின்சாரம் கோவில் நிர்வாகிகளின் உபயம் . பிரகாசமான மின்விளக்கு சிறு எல் இ டி ஒலி பெருக்கி எல்லாவற்றையும் வண்டியில் கட்டி விடுவார். பிறகு முன்னே இருக்கும் திரையைச் சுற்றி கருப்புத் துணி எல்லாம் பத்து நிமிடங்களில் தயாராகிவிடும்.

இவர் எல்லா கிராமங்களுக்கும் கூத்து நடத்த செல்வதில்லை. அவருக்கு உரிமை உடைய தெரிந்த கிராமங்கள் உண்டு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் உள்ள குலசேகரப்பட்டினம், பூச்சிக்காடு, தேரியூர், பரமன்குறிச்சி, செட்டி பத்து, படுக்கபத்து,மெய்ஞான வரம், தட்டாமடம் என்னும் கிராமங்கள் அவர் நன்கு அறிந்தவை.

இந்த வட்டாரத்தில் 30 ஆண்டுகளாக பயணம் செய்கிறார்.

குளிப்பது, காலைக்கடன்களைக் கழிப்பது எதுவுமே பிரச்சனை இல்லை. இரவு 7 மணிக்கு ஒலிபெருக்கியில் சினிமா பாட்டு கேட்கும்: பெரும்பாலும் பழைய பாட்டுகளைப் பதித்து வைத்திருக்கிறார். அவரது மருமகன் முத்து முருகன் பாட்டுகளைப் பென்டிரைவில் பதித்துக் கொடுத்திருக்கிறார்.

மின் சாதனங்களைக் கையாளுவது அவருக்கு பழக்கமாகி விட்டது; பார்வையாளர்கள் எல்லோரும் சிறுவர்கள். சில சமயம் கொஞ்சம் வயதான பெண்கள் வருவார்கள். நல்ல தங்காள் கூத்துக்குப் பெண்கள் அதிகம் வருகின்றனர். கூத்து இலவசம். நிகழ்ச்சி எட்டு மணிக்கு ஆரம்பித்து ஒன்பதரை மணிக்கு முடிந்துவிடும்.

அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு யாசகத்துக்குப் போவார் முத்துசாமி. அரிசி, கொஞ்சம் பணம், தேங்காய், பழம் எல்லாம் கிடைக்கும். சில சமயம் தேவைக்கு அதிகமாகவே கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்தால் அடுத்த நாள் யாசகத்திற்குச் செல்ல மாட்டார். பணம் அதிகம் கிடைத்தால் அரிசி வாங்கி சமைத்துக் கொள்ளுவார். சமைத்த உணவை யாசகமாக வாங்குவதில்லை.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு பிரமிப்பை உண்டாக்கிய விஷயம் ஒன்றுதான். அவர் தேவைக்கு அதிகமாக பணத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர். ஒரு நாள் யாசகத்தில் ஏதோ காரணத்தால் அதிக அளவில் அரிசியோ காய்கறியோ பணமோ கிடைத்தால் இரண்டு மூன்று நாட்கள் யாசகத்திற்கு செல்ல மாட்டாராம்.

அவரிடம் பணம் அதிகமாகச் சேர்ந்தால் உறவினர் யாராவது வந்தால் கொடுத்து விடுவாராம். அவருக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை அவர் வாக்களித்ததில்லை. ஆள் மாறாட்டமாய் ஓட்டு போடுவதற்கு அழைத்த போதும் பெரிய தொகை தருவதாக வாக்களித்த போதும் மறுத்து விட்டாராம்.

நான் இரண்டு முறை அவரது கூத்து நிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருக்கிறேன். இரண்டும் தற்செயலாக நிகழ்ந்ததுதான். தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதற்கு இவரது கூத்து உரையாடலும் நகைச்சுவைக் காட்சியும் உதாரணம்.

இவரிடம் உள்ள தோல் பாவைகளில் பெரும்பாலானவை நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை. பொதுவாக தமிழகத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் பழைய படங்களைப் பார்த்து பிரதி செய்து கொள்வார்கள். கர்நாடக ஆந்திர கலைஞர்களின் நிலை வேறு. கோவில் சுவர்களில் வரையப்பட்ட ராமாயண ராம ஓவியங்களைப் பார்த்து பிரதி செய்வது என்ற வழக்கம் இருந்திருக்கிறது. விருபாட்சி கோவில் சிற்பங்கள் தோல்பாவை ஓவியங்களாக மாறி இருக்கின்றன.

தமிழகத்தில் தோல்பாவைகள் மரபு வழியானவையே. யாரோ வரைந்த ஓவியங்களை இப்போது பிரதி செய்திருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் மாவடி கிராமத்தில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் ராமச்சந்திரன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் அறுபதுகளில் வரைந்த ஓவியங்களைப் பார்த்தேன். அவற்றில் சில சினிமா சுவரொட்டிகளைப் பார்த்து வரைந்தவை. அதனால் சீதையும் நல்ல தங்காளும் நடிகை சரோஜாதேவி சாயலில் இருந்தனர். ராமன் எம்ஜிஆரைப் போல் இருந்தான்.

இந்தப் படங்களைக் கூத்து நிகழ்ச்சிகளில் காட்டக்கூடாது என்று வள்ளியூர் ஊரை எடுத்த ஒரு கிராமத்தில் எதிர்ப்பு வந்ததாம். அதோடு ஊர் மக்களில் சிலர் தர்க்கம் செய்து கூத்தை நடத்த விடவில்லையாம். அதனால் ராமச்சந்திரன் தன் தம்பி பரமசிவராவிடம் படங்களை வாங்கி நிகழ்ச்சி நடத்தினாராம்.

முத்துசாமி ராவின் நிகழ்ச்சிகளில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். இவரது படங்கள் பழையவை. 1900-1910 ஆண்டுகளில் வரையப்பட்டவை. கோமாளி மாமா, உச்சிக்குடும்பன், உளுவத்தலையன் என்னும் பாத்திரங்கள் தமாஷ் பாத்திரங்களாக உள்ளன. முத்துசாமியிடம் பச்சைக் கொப்புளான் என்ற பாத்திரம் உள்ளது. இது 50 களில் பிரபலமான பாத்திரம். இப்போது இது பயன்பாட்டில் இல்லை.

உழுவத்தலையன் உச்சிக் குடும்பன் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் "லேய் நான் உனக்குத் தந்த பத்து பைசாவ திருப்பித் தாலே" என்று கேட்பான். உச்சிக்குடும்பன் பத்து பைசா வழக்கில் இருந்த 50களில் உருவாக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சி இது. இதை இவர் காட்டுகிறார் இப்போது. இந்த நகைச்சுவை புரியாமலே பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் பார்வையாளர்களைப் பார்த்து உச்சிக்குடும்பன் சத்தோம் சைலன்ஸ் என்று ஆரம்பிக்கிறார். இந்தத் தோரணை கூட 50 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த மொழி நடை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள பார்வையாளர்களுக்கு புரியும்.

நான் முத்துசாமியிடம் நிறைய நேரம் பேசினேன். அவருக்கு நாடோடி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது தெரிந்தது. அவரது மருமகன் தன்னுடன் அவரை அழைத்த போது மறுத்துவிட்டார். அவர் வாழ்க்கையை அழித்துக் கொள்ளவில்லை.

அவர் குடிக்க மாட்டார். யாரையும் பழிக்கவில்லை. அடுத்த நேரம் என்ன செய்வது என்று யோசிக்கவில்லை. வாழ்க்கை ஒவ்வொரு நாளைக்கும் மட்டுமே உரியது என்ற சித்தாந்தம் அவருக்கு இருந்தது. அவருக்கு எல்லோரும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். யாரையும் பழித்துப் பேசவில்லை. அவருக்கு மதம் கடவுள் நம்பிக்கை என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லை. எல்லா நாடோடிகளும் அப்படிப்பட்டவர் அல்லர்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It