mahavamsa 400 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், புலப்பெயர்வு அவன் மீது திணிக்கப்பட்டது என்றாலும் யூதன் போலத்தான் அவன் ஒரு தாய்நாட்டினை நெஞ்சிலே சுமந்து வாழ்கிறான்….. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகேனும் யூதன் தனக்கான ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொண்டான்…. இறையாண்மையுள்ள ஒரு சுதந்திர நாட்டினைத் தனது மூதாதையர் தவழ்ந்த மண்ணிலே வென்றெடுத்தான்….. சரித்திரம் மீண்டும் நிகழும் எனத் தமிழ் ஈழன் நம்புகிறான். “யூதனுக்குச் சாத்தியமானது எனக்கும் சாத்தியமே” என்கிற தவனத்திலும், தியானத்திலும், தவத்திலும் ஈடுபடும் உரிமையாவது தமிழ் ஈழனுக்கு இல்லையா என அவர் கேட்கிறார். சிங்களருக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழ் ஈழன் கரைந்து வாழமாட்டான், அவன் தன் தனித்துவத்தில் செருக்குடையவன். அத்தனித்துவமே அவன் சேவிக்கும் மரபின் பிரம்மம். அதற்காக அவன் நவயூத இனமாக அலைந்து அல்லற்படத் தயங்கான் என எஸ்.பொ தனது முன்னீட்டை முடிக்கிறார்.

 சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் 37 அத்தியாயங்களைக் கொண்டது. மகாவம்சம் சிங்கள ஆதிக்க வெறியின் அத்திவாரமாகவும், மூலாதாரமாகவும், இருக்கிறது என்பதை, அரசியல்வாதிகளாலும் அவர்களை வழிநடத்துவதாக நடித்து, உண்மையில் அதிகாரத்தைத் தங்களுடன் தக்க வைத்துள்ள புத்த பிக்குகளாலும் சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் ஆதிவரலாற்றை அறிவதற்கு, மகாவம்சம் நூலில் தூலமாகவும், அரிதான இடங்களில் பூடகமாகவும் கக்கப்படும் தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு அப்பாலும், மகாவம்சம் நூலை அறிதல் நல்லது என்கிறார் எஸ்.பொ அவர்கள். தமிழ் இனத்தின் பண்டைய உரிமை கோரலுக்கு வலுவான ஆதாரங்கள் கொண்ட சாசனம் இந்த மகாவம்சம். சிங்களரின் உரிமை பாராட்டுதல்கள் எவ்வளவு கொச்சையானவை என்பதைத் தெளிவதற்கும், அந்தக் கொச்சைகளைத் துணைப்பற்றித்தான் பிக்குகளும் அவர்களால் முன்னிறுத்தப்படும் அரசியல் தலைவர்களும் பரம்பரை பரம்பரையாகச் சிங்களரை தமிழர்களுக்கு எதிரான இனவாதிகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் இந்நூலின் மூலம் அறியலாம் என்கிறார் எஸ்.பொ அவர்கள்.

மகாவம்சம்:

 இலங்கையின் பௌத்த மடாலயங்களில் சிதறிக்கிடந்த அத்தகதா கதைகள் தீபவம்சமாகத் தொகுக்கப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் “மகாநாமா” என்ற புத்த பிக்குவால் அரச ஆதரவோடு இந்த தீபவம்சம் நூல் திருத்தப்பட்டு இலக்கிய நயத்தோடு, ஓதுவதற்கு வசதியாக “மகாவம்சம்” எழுதப்பட்டது. பக்தர்களுக்கு அமைதியான இன்பமும், தெய்வீகப்பரவசமும் ஊட்டுவதற்காக இந்நூல் எழுதப்பட்டதாக அந்நூலின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிங்களக்குடியேற்றத்திற்கு முன்பு இலங்கையின் வடபகுதியில் நாகர்களும் தெற்கே அசுரர்களான யட்சர்களும் வசித்து வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று நூலார் கருதுகின்றனர்(மகாவம்சம், பக்:8).

 புத்தர் இலங்கைக்கு மூன்றுமுறை பயணம் செய்தார்(மகாவம்சம், பக்:12), அவர் இலங்கையில் புத்த மதம் பரவுவதற்காக அங்கு வாழ்ந்த பாரம்பரியக் குடிகளான யட்சர்களின் மனதில் அச்சத்தை உருவாக்கி மத்திய மலைப்பகுதியிலுள்ள காடுகளுக்கு அவர்களை புத்தரே முன்னின்று வெளியேற்றினார்(மகாவம்சம்பக்:4-7). இலங்கையில் புத்தர் அமர்ந்து யட்சர்களுக்கு அச்சமூட்டி அவர்களை வெளியேற்றிய அதே இடத்தில்தான் புத்தரின் தலைமயிரும் எலும்பும் புதைக்கப்பட்டு அங்கு மகியங்கண தூபம் துவங்கப்பட்டது. அதனை தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட துட்டகாமினிதான் இறுதியில் கட்டி முடித்தான்(மகாவம்சம், பக்:5-7). ஆதிகுடிகளான யட்சர்களை புத்தரே முன்னின்று வெளியேற்றியபின் துவங்கப்பட்ட மகியங்கண தூபத்தை, சிங்கள மாவீரன் துட்டகாமினி தமிழர்களுக்கு எதிரான போரின்போது கட்டி முடித்து அதனை முழுமையடையச் செய்தான் என்பதன் மூலம் இலங்கையில் சிங்களபௌத்த பேரினவாதத்தை விதைத்து வருகிறது மகாவம்சம்.

 இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான போர் என்பது ஒரு புனிதப்போர் எனவும் அது பௌத்த சமய மேம்பாட்டுக்கு உதவும் எனவும் மகாவம்சம் நூல் தனது முதல் அத்தியாயத்திலேயே காலங்காலமாகச் சொல்லி சிங்களர்களைப் ‘பக்குவ’ப்படுத்தி வந்துள்ளது என்கிறார் எஸ்.பொ அவர்கள். புத்தரே அச்சமூட்டி யட்சர்களை விரட்டியடித்து ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார் எனவும் துட்டகாமினி தமிழர்களை போர்செய்து தோற்கடித்து அதன் தொடர்ச்சியான முன்மாதிரியாக இருந்துள்ளான் எனவும் மகாவம்சம் ஆரம்பத்திலேயே குறிப்பிடுவதன்மூலம் சிங்களப் பேரினவாதத்தின் தோற்றுவாய் மகாவம்சத்தில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம். அந்நூலின் முதல் அத்தியாயப்படி புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்து இலங்கையில் புத்தமதம் பரவுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவித்தார். முதல்முறை வந்த போது யட்சர்களை விரட்டியடித்தார், இரண்டாம் முறை வந்த போது நாகர்களை அடக்கினார், மூன்றாம் முறை வந்தபோது புத்த மதத்தின் புனித இடங்களாக ஆகப்போகிற அனைத்து இடங்களுக்கும் சென்று இலங்கையைப் புனிதப் படுத்தினார்(பக்:151).

 புத்தரின் மகாசம்மதகுலம் எனப்படும் சாக்கிய குலத்தின் முன்னோர்கள் குறித்தும் மூன்று புத்த மகாசபைகள் குறித்தும் புத்தரின் நண்பரும் மகத அரசரும் ஆன பிம்பிசாரர் முதல் அசோகர் வரையான மகத அரச பரம்பரைகள் குறித்தும் இரண்டு முதல் ஐந்து வரையுள்ள அத்தியாயங்கள் பேசுகின்றன. தனது 99 சகோதரர்களைக் கொன்றுதான் அசோகர் முடிசூட்டிக்கொண்டார் எனவும் மூன்றாவது புத்தமகாசபை அசோகர் காலத்தில் கூட்டப்பட்டது எனவும் மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது.

விஜய் முதல் பாண்டுகாபய வரை:

 வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக்கொன்று லாலா நாட்டுக்கு அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து 32 மகன்களைப்பெற்றெடுத்தான். அவர்களின் மூத்த மகன் தான் விஜய் ஆவான். அவன் மிகக் கெட்டவனாக இருந்தான். அவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர்ந்து பல வன் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மக்கள் அவனைக் கொல்லவேண்டும் என அரசனான சீகபாகுவிடம் முறையிட்டனர். அதனால் அரசன் அவனையும் அவனது கூட்டாளிகள் 700 பேரையும் கப்பல்களில் ஏற்றி கடலில் அனுப்பி வைத்தான். அவர்கள் புத்தர் தவமிருந்த சமயத்தில், இலங்கையின் வடமேற்குக்கரையில் இருந்த தம்பப் பண்ணியில், கரையிரங்கினர். விஜய் இலங்கையில் இருந்த யட்சப் பெண் ஒருத்தியை மணந்து அவளது துணையால் இலங்கையில் இருந்த யட்சர்களின் நிலப்பகுதியைக் கைப்பற்றி, பாண்டிய நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து அரசனானான். பாண்டிய இளவரசியோடு பல கலைஞர்களும், பதினெட்டு தொழிற்குழுக்களைச்சேர்ந்த ஆயிரம் குடும்பங்களும் தமிழகத்திலிருந்து இலங்கை வந்து சேர்ந்தனர். ஆண்டுதோறும் பாண்டிய மன்னனுக்கு இரண்டு இலட்சம் மதிப்புள்ள முத்துக்களை விஜய் அனுப்பி வந்தான்.

 புத்த சகாப்தத்தின் தொடக்க ஆண்டில்(கி.மு. 483) விஜய், இலங்கையின் அரசன் ஆனான் என மகாவம்ச நூலின் பின்னிணைப்பு குறிப்பிடுகிறது. அவனுக்குப்பின் வாரிசு இல்லாததால், சீகபாகுவின் பேரன், விஜயின் தம்பி மகன், பாண்டுவாசுதேவன் இலங்கை வந்து அதன் அரசன் ஆனான். புத்தரின் சாக்கிய குலத்தில் உதித்த சாக்கிய பாண்டு என்ற அரசன் தனது மகள் சுபடகச்சனாவைக் காப்பாற்ற கங்கையிலிருந்து கப்பலில் அனுப்ப, அவள் இரு நாட்களில் யதேட்சையாக இலங்கை வந்து பாண்டுவாசுதேவனின் அரசியானாள். அவள் பத்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றாள். மூத்தவன் அபய எனப்பட்டான். பாண்டு வாசுதேவனுக்குப்பின் அவனுடைய மகளின் மகன் பாண்டுகாபய நிமித்தகர்களின் கூற்றுப்படி மாமன்கள் எட்டு பேரைக் கொன்று இலங்கையின் அரசன் ஆனான். பாண்டுகாபய 70 ஆண்டுகள் மிகச்சிறந்த முறையில் இலங்கையை ஆண்டான். பாண்டுகாபய காலத்தில் தான் அநுராதபுரம் முறையான தலைநகராக ஆனது. அங்கு பிராமணர்களும், சண்டாளர்களும், வேடர்களும், சந்நியாசிகளும், ஆசிவகர்களும், சமயங்கள் அற்ற குடும்பங்களும், ஆண்டித்துறவிகளும், பல்வேறு சமய பேதமுள்ள சந்நியாசிகளும் வசித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. அவனது காலம்வரை புத்தமதம் அங்கு பரவவில்லை. விஜய் முதல் பாண்டுகாபய வரையான வரலாற்றை 6 முதல் 10 வரையான அத்தியாயங்கள் பேசுகின்றன.

தேவ நாம்பியதீச:

 பாண்டுகாபயாவின் மரணத்திற்குப்பின் அவனது மகன் மூத்த சிவ 60 ஆண்டுகள் அரசாண்டான் எனவும் அதன்பின் பாண்டுகாபயாவின் பேரணும், மூத்தசிவாவின் மகனுமான தேவ நாம்பியதீச என்பவன் அரசன் ஆனான் எனவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. தேவ நாம்பியதீச காலத்தில்தான் புத்தமதம் இலங்கையில் பரவியது எனக் கருதப்படுகிறது. அசோகனின் மகனான மகேந்தரன் இலங்கை வந்து புத்த மதத்தை இலங்கையில் பரப்பியதாகவும் அதற்கு முன்னரே தேவ நாம்பியதீச மௌரிய அரசன் அசோகனுடன் நட்பு கொண்டிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேவ நாம்பியதீச 40 ஆண்டுகள் அரசாண்டான். இவனது காலத்தில்தான் முதல் புத்த மகாவிகாரம் கட்டப்பட்டதாகவும், ஞாபகச் சொத்துக்கள், போதி மரம் முதலிய புத்தப் புனித விடயங்கள் இலங்கையில் நிறுவப்பட்டதாகவும் மகாவம்சம் பேசுகிறது. போதி மரத்தின் கிளையை அசோகனின் மகள் சங்கமித்தா இலங்கை கொண்டு வந்ததாகவும், அதனைப் பிரிந்து அசோகன் அழுது புலம்பினான்(பக்:176) எனவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. தேவ நாம்பியதீச ஆட்சிக்காலம் குறித்து மட்டும் 11 முதல் 20 வரையான 10 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவை குறித்துப் புகழ்பெற்ற இந்திய வரலாற்றுப் பேராசிரியர் வின்செண்ட் சுமித் அவர்கள் “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்(முன்னீடு,பக்: 28).

தமிழரசன் எல்லாளன்:

 தேவ நாம்பியதீச ஆட்சிக்குப்பின் அவனது தம்பிகள் உதிய, மகாசிவ, சூரதீச ஆகிய மூவரும் தலா 10 ஆண்டுகள் அரசாண்டனர். அதன்பின் சேன, குத்தக ஆகிய இரண்டு தமிழர்கள் பெரும்படையுடன் வந்து சூரதீசவை வென்று 22 ஆண்டுகள் ஆண்டனர். அதன்பின் மூத்தசிவவின் மகன் அசேல அவர்களை வென்று 10 ஆண்டுகள் அரசாண்டான். அதன்பின் சோழ நாட்டிலிருந்து உயர்குடியில் பிறந்த தமிழனான எலாரா, அரசன் அசேலவை வென்று 44 ஆண்டுகள் நண்பர்கள், எதிரிகள் என்ற பேதமின்றி நீதியின்முன் எல்லாரையும் சமமாகப் பாராட்டி ஆட்சி புரிந்தான் என்கிறது மகாவம்சம்.

 பசுவின் கன்றை எதேச்சையாகத் தேரின் சக்கரத்தில் ஏற்றிக்கொன்ற தனது சொந்த மகனை எலார அதே தேர்ச் சக்கரத்தில் இட்டுக்கொன்றான் எனவும், அதேபோன்று தனது இரதத்தால் எதேச்சையாகப் புத்ததூபத்தின் ஒரு பகுதியை சேதம் செய்ததற்காகத் தரையில் விழுந்து படுத்துத் தனது தலையை வெட்டச் சொன்னபோது, பிக்குகள் தூபத்தை புதுப்பிக்கக் கேட்க, அவன் அதனைப் பெரும் செலவு செய்து புதுப்பித்தான் எனவும் ஏழைமக்களின் துன்பத்தைப்போக்க உண்ணா நோன்பு மேற்கொண்டு எலாரனது ஆட்சிப்பகுதியில், பகலில் பெய்யாது, நள்ளிரவில்மட்டும் வாரம் ஒருமுறை மழைதேவனை மழை பெய்யச் செய்வித்தான் எனவும் எலார ஆட்சியின் சிறப்புகளை மகாவம்சம் பட்டியலிடுகிறது. எலாரவிடம் தவறான நம்பிக்கைகள் இருந்த போதிலும், தீயவழியில் நடக்காது நல்வழியில் நடந்து பல அற்புதச் சக்திகளை அவன் பெற்றிருந்தான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. புத்த சமயம் இல்லாத வேறு நம்பிக்கைகளைத் தவறான நம்பிக்கை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

சிங்கள மாவீரன் துட்டகாமணி:

 தேவ நாம்பியதீசவின் தம்பி உபராசன் அரண்மனை சூழ்ச்சிகளுக்கு பயந்து தனது குடும்பத்தோடு உறுகுணை எனப்படும் இரோகணப் பகுதிக்குச் சென்று அங்கு தன் சிறு அரசை நிறுவிக்கொண்டான். தென் இலங்கையும், தென் மட்டக்கிளப்புப் பகுதியும் இணைந்த இப்பகுதியின் தலைநகராக மகாகாமம் இருந்தது. இவனது 5ஆவது பரம்பரையைச் சேர்ந்த அரசன்தான் காகவண்ணதீச. அவனது மனைவிதான் கல்யாணி அரசரின் புதல்வியான புத்தமத நம்பிக்கை கொண்ட விகாரதேவி. இவளும் கப்பல் மூலம் பயணம் செய்து, யதேச்சையாக இலங்கா விகாரம் அருகே கரை சேர்ந்து காகவண்ணதீசனின் இராணியானாள். குழந்தை இல்லாதிருந்த அவள் ஒரு நோயுற்ற துறவியிடம் தனது மகனாகப் பிறக்கக் கேட்டுக்கொண்டதன் பேரில், சிறிது நேரத்தில் இறந்த அவர், அவள் இரதத்தில் திரும்பிக்கொண்டிருந்த பொழுதே அவளிடத்தில் கருவாக உருவானார். அவனே துட்டகாமணி. இதுகுறித்து மனித உடலுறவுக்கு அப்பாலான தேவசகாயத்தால் உற்பவித்துப் பிறந்தவனே காமிணி என்கிற செய்தி சூசகமாகச் சொல்லப்படுகிறது எனவும், தமிழனை வெற்றிகொள்ளப் பிறக்கும் சிங்களன் தெய்வீக அம்சம் பெற்றவன் என்கிற பரப்புரைக்கு இங்கே கால்கோள் நாட்டப்படுகின்றது எனவும் எஸ்.பொ குறிப்பிட்டுள்ளார்(பக்:201). துட்டகாமணியின் தாய்தான் சிங்கள் இனத்தின் மகா தாயாகக் கருதப்படுகிறாள்.

சிங்கள மகாதாயின் கொலைவெறி:

 கருவுற்ற இராணிக்கு இரு விசித்திர ஆசைகள் ஏற்பட்டன. ஒன்று, பனிரண்டாயிரம் பிக்குகள் தின்று மிஞ்சிய தேனடை ஒன்றைத் தின்ன விரும்பினாள். இரண்டாவதாக தமிழரசன் எலாரவின் வீரர்களுள் முதல் வீரனைக் கொன்ற கத்தியைக்கழுவிய நீரை, வெட்டுண்ட அதே வீரனின் தலைமீது நின்றுகொண்டே குடிக்க விரும்பினாள். இவை குறித்து எஸ்.பொ அவர்கள், “துட்டகாமணியின் தாயே சிங்கள் இனத்தின் மகா தாயாக இன்றளவும் போற்றப்படுகிறாள் எனவும் தமிழனுடைய பச்சை இரத்தத்தைக் குடிக்க ஆசைப்பட்டதும் அல்லாமல், கொலையுண்டவனின் தலையை மிதித்துக்கொண்டே தமிழனின் பச்சை இரத்தத்தைச் சுவைக்க வேண்டும். தமிழனின் மரணமும் கொலையுண்டவனின் தலையை மிதிப்பதும் மகா பரவசம் தரும் செயல் என்று மகாவம்சம் பக்திப்பரவசம் ஊட்டும் வகையிலே சொல்லுகிறது. தமிழர் சங்காரத்தின்போதும் தமிழர்களுடைய பச்சை இரத்தத்தைக் குடித்து சிங்களர் பரவசக் கூத்தாடினார்கள் என்கிற வரலாற்றுச் செய்திகள் பரந்துபடப் பதிவாகியுள்ளன. தமிழரின் மரணத்தைக்கூட மதிக்கக் கூடாது என்கிற கொலைவெறியை இதன்மூலம் மகாவம்சம் காலங்காலமாகச் சிங்களருக்கு உபதேசித்து வருகிறது.” என்கிறார்.

 அரசன் இராணியின் இரு ஆசைகளையும் நிறைவேற்றினான். அனுராதபுரம் சென்று தமிழரசனின் முதற்போர் வீரனைத் தந்திரமாக வெளியே வரவழைத்து, அவனைக்கொன்று அவனது தலையைக் கொண்டு வந்து அவளது கர்ப்பகால ஆசை நிறைவேற்றப்பட்டது. புத்தமதப்பற்று, தமிழர் மீதான கொலைவெறி போன்றவற்றால்தான் துட்டகாமணியின் தாய் சிங்களரின் மகா தாயாக இன்றளவும் மதித்துப் போற்றப்படுகிறாள். நிமித்திகர்கள், “காமணி தமிழர்களை வென்று, ஐக்கிய அரசை உருவாக்கி தர்மத்தை பிரகாசிக்க வைப்பான்” என்றனர்.

தமிழர் வெறுப்பு:

 காமணிக்குப்பின் அவனது தம்பி தீச பிறந்தான். இருவருக்கும் பத்துப் பனிரண்டு வயதானபோது அவர்களைச் சோதிக்க விரும்பிய அரசன் “நாங்கள் தமிழர்களோடு எக்காலத்திலும் போரிடமாட்டோம் என்ற எண்ணத்தோடு இந்த உணவைச் சாப்பிடுங்கள்” எனக் கூறியபொழுது அவர்கள் இருவருமே உணவை நிராகரித்து உறங்கச் சென்றனர். “தமிழர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் மிக உன்னதமான நாட்டுப்பற்று என்கிற மனப்பான்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் உண்ணும் உணவுடன் ஊட்டப்பட்டு வருகிறது என்பதற்கு மகாவம்சம் இவ்வாறு சான்று பகர்கிறது” என்கிறார் எஸ்.பொ அவர்கள்(பக்:206). அதன்பின் காமணி கைகால்களைக் குறுக்கிக்கொண்டு உறங்கியதைக்கண்ட இராணி ஏன் இப்படி உறங்குகிறாய் எனக் கேட்டபொழுது, “கங்கைக்கு அப்பால் தமிழர்கள் இருக்கிறார்கள், இந்தப்பக்கம் கோத சமுத்திரம் இருக்கிறது. எப்படி கைகால்களை நீட்டி உறங்கமுடியும்?” என்றான் துட்டகாமணி. இது குறித்து, “கங்கைக்கு அப்பால், வடக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் அங்கு வாழ்ந்தால் சிங்களராலே கைகால்களை நீட்டி வசதியாகச் சயனிக்க இயலாது என்கிற இனவெறியைச் சாதுர்யமாக மகாவம்சம் முன்மொழிகிறது” என்கிறார் எஸ்.பொ(பக்: 206,207).

தமிழரசன் எல்லாளனும் துட்டகாமணியும்:

 காமணி வளர்ந்தபின் தன் படைகளைக்கொண்டு தமிழர்களோடு போர் புரிவேன் என்றான். அரசன் மகாகங்கை நதியின் இந்தப்பக்கமுள்ள பகுதியே போதுமானது எனக்கூறினான். இதனால் கோபமடைந்த காமணி மலய போய்விட்டான். இவ்வாறு கோபங்கொண்டதால் அவன் அதன்பின் துட்டகாமணி என அழைக்கப்பட்டான். சிறிதுகாலத்தில் அவன் தந்தை இறந்தான். தந்தை இறந்த பின் இரு சகோதரர்களுக்கும் போர் மூண்டது. முதல்போரில் தம்பி வெற்றியடைந்தான். பின் துட்டகாமணி புத்த தேரர்களின் ஆசிபெற்று படை திரட்டிச்சென்று தம்பியை போரில் வென்றான். அதன்பின் தேரர்கள் இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தனர். அதன்பின் தமிழரசர்களோடு போரிட பெரும்படைதிரட்டிப் போருக்குச் சென்றான்.

 மகியங்கண வந்தவுடன் முதலில் சத்த என்ற தமிழனை வென்றான். அதன்பின் அம்பதித்தகக என்ற இடத்துக்கு வந்து அங்கு திறமையும் சக்தியும் வாய்ந்த எதிரியான தமிழன் தித்தம்பவை கபடத்தால் வென்றான். அதன்பின் நதியின் வழியில் நடந்து வீரம் செறிந்த ஏழு தமிழ் இளவரசர்களை வென்றான். அதன்பின் பல தமிழர்களையும், பல படைத்தலைவர்களையும் வென்றான். தப்பித்த தமிழர்கள் விஜித நகருக்குள் அரண் அமைத்துக்கொண்டனர். விஜித நகரத்தை நான்கு மாதங்கள் போராடி வெற்றி கொண்டான். அதன்பின் கிரிலக சென்று தமிழன் கிரியவை வென்றான். அதன்பின் மகேள நகருக்குச் சென்று நான்கு மாதங்கள் போரிட்டு அதனை வென்றான். இறுதியாக எல்லாளனோடு போரிடப் படைகளை 32 பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் அரசன் போன்ற உருவ போம்மைகளை உரிய இடத்தில் நிறுத்தி, துட்டகாமணி பாதுகாப்பான ஒரு இடத்தில் நின்று கொண்டான்.

 போரில் துட்டகாமணியின் பல படைப்பிரிவுகள் தீகசந்து என்ற விஜிதநகர தமிழ் படைத்தலைவனால் சிதைக்கப்பட்டு அரசஉருவ பொம்மைகளும் அவனால் வாளால் கிழித்தெறியப்பட்டன. அரசன் துட்டகாமணி நின்ற பிரிவும் அவனால் தாக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவன் கொல்லப்பட்டான். அதன்பின் தமிழர்படை சிதறுண்டது. நிறையத் தமிழர்கள் கொல்லப்பட்டு, அங்கிருந்த குளம் தமிழர்களின் இரத்தத்தால் சிவப்பாக நிறம் மாறி அக்குளம் குலந்தவாபி என அழைக்கப்பட்டது. இறுதியில் எலாரவுடன் துட்டகாமணி போரிட்டு அவனைக்கொன்றான். அதன்பின் ஏழு நாட்கள் கழித்து, தீகசந்துவின் மருமகன் பெருவீரன் பலூக அறுபதினாயிரம் படைவீரர்களுடன் வந்து சேர்ந்தான். அவனது படையுடன் துட்டகாமணியின் படை மோதி அவனையும் வென்றது. இவ்வாறாக 32 தமிழ் அரசர்களை வென்று இலங்கா மீது ஏக இறையாண்மை செலுத்தி துட்டகாமணி ஆண்டான்.

 போரில் மகத்தான வெற்றி கிடைத்த போதிலும் இலட்சக் கணக்கானவர்கள் இறந்தது குறித்து துட்டகாமணி வருந்தினான். அவனைச் சமாதானப்படுத்த வந்த புத்தமத அரகந்தர்கள், “நம்பிக்கையற்றவர்களும், தீயவர்களும் ஆன இறந்தவர்கள் மிருகங்களைவிட உயர்வாக மதிப்பிடப்படக்கூடியவர்கள் அல்லர். புத்தரின் நெறிகளுக்குப் பலவகையிலும் புகழ் சேர்த்த நீங்கள் கவலையை விடுங்கள்” என அவர்கள் சமாதானம் செய்தார்கள். இதுகுறித்து, “பௌத்த சமயத்தில் நம்பிக்கை வைக்காத தமிழர்கள் மனிதரல்லர்; மிருகங்களைவிட உயர்வானவர்கள் அல்லர்; அவர்களைக் கொலை செய்தல் பாவமல்ல என்கிற தெளிவான செய்தியை மகாவம்சம் காலம்காலமாகப் போதித்து வருகிறது” என்கிறார் எஸ்.பொ அவர்கள்(பக்: 237). அதன்பின் அரசனால் மகாதூபம் கட்டப்பட்டது. நாகர்களிடம் இருந்த ஞாபகச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு அதற்கான தூபமும் கட்டப்பட்டது. 24 ஆண்டுகள் ஆண்ட துட்டகாமணி அதன்பின் இறந்தான். 21 முதல் 32 வரையான அத்தியாயங்கள் எலார-துட்டகாமணி குறித்துப் பேசுகின்றன.

குறிப்பு:

 “மகாவம்ச” வில்கெம் கெய்கர் (WILHEM GEIGER’S MAHAVAMSA)

தமிழில் எஸ்.பொ, சிங்களர் கதை, மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ், அக்-2009.

மேலே தரப்பட்ட பக்கங்கள் அனைத்தும் தமிழ் மகாவம்ச நூலின் பக்கங்கள்

- கணியன் பாலன், ஈரோடு

Pin It