ரூபன் ஜராமில்லோ 1900 ஆம் ஆண்டு மெக்சிகோவிலுள்ள ஒரு சிறிய நகரமான ஸ்குவால்பனில் பிறந்தார். பின்னர், அவரது பெற்றோர் மெக்சிகோவின் இதயப்பகுதியில் அமைந்திருந்த மோர்லோசிள்ள லாசில்டேனன்கோ கிராமத்திற்குச் சென்று குடியேறினர். மெக்சிகோ விடுதலைப் போராட்டத்திலும், நூற்றாண்டு கால அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்திலும் முன்னணி வீரராக விளங்கிய தேசியத் தலைவரான ஜோஸ் மரியா மோர்லாசை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரால் இக்கிராமம் அழைக்கப்பட்டது.

                ரூபன் ஜராமில்லோ பதினைந்து வயது மாணவராக இருந்த போதே, விவசாயிகளின் நலன்களுக்காகப் போராடிய ஜபாடா விடுதலைப் படையுடன் சேர்ந்து போராடினார். மேலும், ஜபாடாவின் குறிக்கோளான ‘நிலமும் விடுதலையும்’ என்பது அவரது வாழ்நாள் முழுவதும் மந்திரச் சொல்லானது.

                மெக்சிகோவில் 1910-1917 கால கட்டத்தில் புரட்சியானது மக்களாட்சியைக் கொண்டு வரவில்லை. எனினும், விடுதலை, சனநாயகம், சுதந்திரம் முதலியவற்றை நோக்கியப் பாதையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. தொழிலாளர்கள் சங்கம் வைத்துக் கொள்ளவும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையையும் பெற்றனர்.

                தொழிலாளர்கள், விவசாயிகளின் நலனைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய அரசியல் சாசனம் 1917 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியது. இத்தகைய சனநாயக நிலைமைகளால் தொழிலாளர்கள் அணிதிரளவும், 1919 ஆம் ஆண்டு மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கவும் உரிய சூழல் ஏற்பட்டது.

                மெக்சிகோவில் நிலச்சீர்திருத்தம் மிக மந்தமாகவும், அரைகுறையாகவும் நடைபெற்றது. விவசாயிகளிடம் விதைகள் வாங்க பணமில்லை. வேளாண் கருவிகள், உழவு மாடுகள் ஏதுமில்லை. நீர்ப்பாசன வசதிகள் இல்லை. இலட்சக்கணக்கான விவசாயிகளிடம் நிலம் ஏதும் இல்லை. ஆனால், சில தனிப்பட்ட நில முதலைகளிடம் பல்லாயிரம் ஏக்கர் நிலம் குவிந்திருந்தது. விவசாயிகள் மத்தியில் அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்தது. விவசாயிகள் எழுச்சியுற்று, பண்ணைத் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக கார்டினாஸ் ஜனாதிபதி பொறுப்புக்கு வந்தார். அவர், நிலச்சீர் திருத்தத்தை தீவிரமாக அமல்படுத்தினார் . நான்கு கோடி ஏக்கர் நிலங்கள் பத்து லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

                                ரூபன் ஜராமில்லோ ஒரு சாதாரண விவசாயி, அவருக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது. அவரும், கிராமப்புற மக்களைப் போலவே ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

                ஆனால், விவசாயிகள் ஒன்று திரண்டு போராடவில்லையெனில் அவர்களுக்கு நிலம் கிடைக்காது. நாட்டில் எத்தகைய சட்டங்கள் இருந்த போதும் நில முதலைகள் விவசாயிகளை ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் நிறுத்துவதில்லை என்பதை உணர்ந்தார் ரூபன் !

                ரூபன் கிராமப்புற விவசாய மக்களுடன் ஒன்றிணைந்து உரிமைக்கானப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தங்களின் நலன்களுக்காக உறுதியாகவும், துணிச்சலுடன் அச்சமின்றி போராடிவரும் ரூபனின் தலைமையில் விவசாயிகள் முழுமையாக அணிதிரண்டனர். விவசாயிகள் இயக்கத் தலைவர்களின் போர்க்குணமிக்க செயல்பாடுகளைக் கண்டு மெக்சிகோ முதலாளிகள் அச்சமடைந்தனர். அதனால், காவல்துறையைக் கொண்டும், கூலிப்படையினரைக் கொண்டும் விவசாய இயக்கத் தலைவர்களை படுகொலை செய்தனர். ரூபன் ஜராமில்லோ எதிரிகளிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள கையில் துப்பாக்கியுடன் நடமாடினார்.

                அரசியல் நடவடிக்கைகளில் விவசாயிகள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதை அறிந்து கொண்டார் ரூபன் ஜராமில்லோ . மோர்லோஸ் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகத் தமது பகுதியிலும், சுற்று வட்டாரங்களிலும் விவசாயிகளை அணிதிரட்டினார். மேலும், மோர்லோஸ் விவசாயிகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். 1952 ஆம் ஆண்டு , தேர்தலில் ‘ மோர்லோஸ் விவசாயிகள் கட்சி‘ என்னும் சுதந்திர விவசாயிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் சார்பில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட்ட ரூபன் ஜராமில்லோ பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றார். ஆனால், அரசாங்கம் மோர்லோஸ் மாநிலத்திற்குப் படையை அனுப்பியது. மக்களின் தீர்ப்பை நிராகரித்தது. ஆளுநர் பதவியில் தமக்கு ஆதரவான ஒருவரை நியமித்தது.

                                சுதந்திர விவசாயிகள் இயக்கத்தைச் சீர்குலைக்கவும், ரூபன் ஜராமில்லோவை ஒழித்துக் கட்டவும் ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர். அதனை அறிந்த ரூபன் ஜராமில்லோ தமது ஆதரவாளர்களை அணிதிரட்டிக் கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றார். கொரில்லாப் போர் பயிற்சி பெற்ற திறமைவாய்ந்த படைமூலம் அதிரடியாக அரசுப் படைகளைத் தாக்கினார். அரசுப் படைகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போரில் உள்ளூர் மக்கள் ரூபன் ஜராமில்லோவிற்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். ரூபனின் துணைவியாரும், அவரது உண்மைத் தோழருமான எபிபானியா அவருடன் இணைந்து நின்று போராடினார்.

                லோபெஸ் மோடோஸ் 1958 இறுதியில் மெக்சிகோவின் அதிபரானார்.

                அவர், ரூபன் ஜராமில்லோவை சந்திக்கும்படி கோரினார். சந்திப்பின் போது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தடையின்றி அணிதிரளவும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவும் அதிபர் உறுதியளித்தார்.

                ஜராமில்லோ தமது ஆயதப்படையைக் கலைத்து விட்டார். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான, உரிமைகளுக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

                நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு சாகுபடி நிலங்களைப் பகிர்ந்து அளிப்பதோடு, வேளாண் சட்டங்களில் தீவிர சீரமைப்பு தேவை. விவசாயிகளுக்குத் தேவையான அளவு உரிய காலத்தில் அரசு கடன் உதவி கிடைக்க வேண்டும் என்பதை முன் வைத்தார்.

                மெக்சிகோவின் கிராமப் பகுதிகளில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்தது. பல இடங்களில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கம் படைகளையும், பீரங்கிகளையும், விமானங்களையும் அனுப்பியது. தலைநகர் நோக்கி கிராப்புற உழைக்கும் மக்கள் பட்டினிப் பேரணி நடத்தினர்.

                தனிப்பட்ட போராட்டங்களின் மூலம் நிலப்பிரபுக்கள், வங்கி அதிகாரிகள், கள்ளமார்க்கெட் பேர்வழிகளின் சுரண்டல் கொடுமைகளிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்ய முடியாது என்பதை ஜராமில்லோ தமது நீண்ட கால அனுபவங்கள் மூலம் உணர்ந்தார். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடும் பொழுது மட்டுமே விவசாயிகளின் விடுதலை சாத்தியம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

                ஜராமில்லோ 1952 ஆம் ஆண்டு மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டார். அப்பொழுது முதல் அதனோடு நெருங்கிய உறவு கொண்டு செயல்பட்டார். 1961 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்னர், மோர்லாசில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையைத் துவக்கினார்.

                ஜராமில்லோ தமது பிற்கால வாழ்க்கையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை நடத்துவதோடு தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சோசலிச சமுதாயத்தைப் படைப்பதன் மூலமே அவர்களுக்கு முழுமையான விடுதலை கிட்டும் என்றும் கருத்தை முன்வைத்துச் செயல்பட்டார்.

                மோர்லாஸ் விவசாயிகள் போர்க்குணம் மிக்க ஜராமில்லோ தலைமையில் போராடியதால் , அப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் பிற பகுதிகளைப் காட்டிலும் மிகவும் திறம்பட செயல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதே வேளை மோர்லாசின் சரிபாதி விவசாயிகளிடம் நிலம் எதுவும் இல்லை. பெரும் நிலப்பிரபுக்களிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. நிலவுடைமையாளர்களும், அரசு உயர் அதிகாரிகளும், நாலாந்தர அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு , கிராமப்புற மக்களை ஏமாற்றி, போலி ஆவணங்களை தயார் செய்து நிலத்தை வழங்காமல் ஏமாற்றினர். இறுதியில் விவசாயிகள் பொறுமையிழந்து பொங்கியெழுந்தனர். 1961 பிப்ரவரியில் ஏற்பட்ட விவசாயிகள் எழுச்சிக்கு ஜராமில்லோ தலைமை தாங்கினார். விவசாயிகள் பண்ணை நிலங்களைக் கைப்பற்றினார்கள்.

                விவசாயிகள் 1962 ஆம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக நிலங்களைக் கைப்பற்றி அவற்றில் வீடுகளைக் கட்டினார்கள். இதனால், ஆத்திரமடைந்த நிலப்பிரபுக்கள் மாநில ஆளுநரிடம் முறையிட்டனர். அவரது உத்தரவுப்படி விவசாயிகள் நில வெளியேற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் புதிதாக கட்டிய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஜராமில்லோவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும் ஜராமில்லோ தலைமையில் விவசாயிகள் அணிதிரண்டு தீவரமாகப் போராடினார்கள். அதனால், ஆத்திரமடைந்த அரசு இராணுவத்தின் மூலம் ஜராமில்லோவை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது.

                ஜரோமில்லோ மனைவியை சந்திப்பதற்காக 1962 மே மாதம் 23 ஆம் தேதி தமது பண்ணை வீட்டிற்குச் சென்றதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட இராணுவம் லாரிகள் மற்றும் ஜீப்புகளில் விரைந்து வந்து அவரது வீட்டை முற்றுகையிட்டது. ஜராமில்லோ அவரது மனைவி எபிபானியா மற்றும் அவர்களது மகன்கள் இராணுவத்தினராலும், காவல்துறை உளவாளிகளாலும் கைது செய்யப்பட்டு காரில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் சாலையில் வீசப்பட்டிருந்தன. மெக்சிகோ வரலாற்றில் இது ஒரு மிக மோசமான அரசியல் படுகொலை ஆகும்.

                ஜராமில்லோ படுகொலையைக் கண்டித்து மெக்சிகோ விவசாயிகள் அளவு கடந்த ஆத்திரத்துடன் மிகப்பெரும் அளசில் திரண்டு போராடினர். லாசில்டானென்கோவிற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளையும் இராணுவப் படையினர் மூடி தடை செய்து இருந்த போதிலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்ட கம்பீரத்துடன் விளங்கிய தங்களின் உன்னத தலைவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

                மேலும், “நாங்கள் எதற்காகப் போராடினோமோ அதைக்காட்டிலும் கூடுதலாகப் பெற்றுள்ளோம். எங்கள் தலைவரைப் படுகொலை செய்ததன் மூலம் எங்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் ” என உறுதியேற்றனர்.

                “ரூபன் ஜராமில்லோ எந்த இலட்சியத்திற்காக தியாகம் செய்தாரோ அந்த இலட்சியத்தை அடைவதற்காக, மக்களுக்காகப் போராட மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சி சபதமேற்கிறது ” என மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது.

                மெக்சிகோ நாட்டு விவசாயிகளுக்கு நிலம், விடுதலை மற்றும் ஒளிமயமான நல்வாழ்வுக்கானப் போராடத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தியாகம் செய்த ஜராமில்லா என்றும் விவசாயிகளின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

- பி.தயாளன்

Pin It