Abu-Rayhan Muhammad Ibn Ahmad Al-Biruni or Beroni (973-1048)

இடைக்காலத்தில் பல ஆர்வலர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் பிறநாடுகளிலிருந்தும் துணைக்கண்டத்திற்கு வந்து வசித்து இந்திய மொழிகளையும் இலக்கியங்களையும் கற்று, நேரில் கண்டறிந்த பண்பாட்டுக் கூறுகளை தத்தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் வரலாறு என்றபொருண்மையில் தம் அனுபவங்களை பதியவில்லையெனினும் அவர்களுள் சிலரின் அணுகுமுறையில் வரலாற்றியலின் கூறுகள் (historiographical tenets) உள்ளன. காட்டாக, ஒரு இனத்தின் அல்லது நாட்டின் வரலாற்றினை அறிவதில் இரண்டு தலையான முறைகள் உண்டு: (1) அந்நாட்டின் மொழியினைக் கற்று அந்நாட்டுமக்களுடன் உரையாடுதல். அதன்வாயிலாக அடிப்படிச் சான்றுகளை சேகரித்தல் (2) நேரடியாக அந்நாட்டிலேயே தங்கி அங்குள்ள வாழ்முறையினைக் கண்டறிதல். இதனை முதலில் தொடங்கியவர் மெகஸ்தனிஸ் ஆவார். இந்தியச் சமூகத்தின் அடுக்குநிலை (hierarchy) பற்றிய அவரது புரிதல் பொதுவாக சரியற்றது என்றாலும் அதில் பாதியுண்மையுண்டு. ஆனால், இந்தியப் பழக்கவழக்கம் பற்றிய அவரது பார்வை பெருமளவு சரியே. தொடந்து இந்தியாவிற்கு வந்த சீனத்துப்பயணிகள் இந்திய மொழிகளைக் கற்று தங்கள் அனுபவத்தினைப் பதித்தனர். பல நூல்களை தம்மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டனர். இதுபோன்று, இடைக்காலத்தில் மத்தியாசியாவிலிருந்து (central Asia) இந்தியாவிற்கு வந்த Abu-Rayhan Muhammad Ibn Ahmad Al-Biruni or Beroni என்பவர் இந்தியா பற்றி வரலாற்று உணர்வுடன் நூல் எழுதிய தலைபாட்டன் எனலாம் (இனி AB).

Al Biruniஇவர் சார்பற்ற தன்மையில் இந்தியா பற்றி நூல் எழுதியவர் என்று அறியப்படுகிறார். அவரது புலமைத்துவம் தாராளத் தன்மையுடனும் (liberalism) சார்பற்ற தன்மையுடனும் (objectivity) முகிழ்த்தது என்கின்றனர். இதன் அடைப்படை மனிதநேயமாக இருந்தது. அதாவது, வரலாறு எழுதுபவரின் இயல்பு மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும் மனித நேயமாக இருத்தல் வேண்டும் என்பதே இதன் பொருள். AB ஒரு பல்துறை வித்தகர் (polymath) பன்மொழிப் புலவர் (multi-linguist). இவை பற்றி பின்னர் பேசப்படும். இவர் இந்தியா பற்றிய முதல் அறிவியல் பூர்வமான விமர்சகர் (scientific critic) என்றும் அறியப்படுகிறார். இவர் அறிவியல்பூர்வமாக பயின்ற துறைகள்: கணக்கு, சமையவியல், மெய்யியல், வானியல், வேதியல், வரலாறு, காலக்கணக்கீடு, இனவியல், மருந்தியல், பிரபஞ்சத்தின் அமைப்பியல். இவர்தான் முதல் இந்தியவியலாளர் (Indologist) என்று அறியப்படுகிறார்.

கி.பி.973 இல் பிறந்து கி.பி.1047 இல் இறந்த இவரின் ஆயிரமாவது (Millenary) ஆண்டு விழா1948 ஜூலை 21 இல் பாரிஸ் நகரில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இந்நிகழ்வு (international congress of orientalists) உலக கிழக்கியல் மாநாட்டினை ஒட்டி நடத்தப்பட்டது. 1948, டிசம்பரில் அதுபோன்று ஒரு நிகழ்வு கல்கத்தாவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தினைச் சார்ந்திருந்தாலும் பிறரின் சாதனைகளை குறைத்து மதிப்பிடவில்லை. சமயம்சார் பழம்பனுவல்களைச் சாராமல் திறந்த மனத்துடன் இருந்தார். நிறை-குறை பார்வையுடன் இந்தியாவினைப் பார்க்கவில்லை. உண்மையினைப் பார்த்தார். வெளியிலிருந்து வந்த ஓர் இஸ்லாமிய சிந்தனையாளராக இருந்தாலும் இந்தியரை கிரேக்கர்களுடனும், அரபியர்களுடனும் நேராக ஒத்துப் பார்த்தார். இவரைப் போன்று இடைக்காலத்து அய்ரோப்பாவில் உலகம் தழுவிய அறிவுபெற்ற அறிஞர்கள் (international or Cosmo politics) வாய்த்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மொழியறிவும் மொழியியலறிவும்

AB யின் தாய்மொழி பாரசீகம். ஆனால், துருக்கி மொழி வழக்கிலிருந்த Khwarizm பகுதியினைச் சேர்ந்தவர். எந்தவொருமொழியின் அறிவு கிடைத்தாலும் அதனைப் பெறுவதில் ஆர்வம் காட்டினார். அக்காலத்தில் அரபிக், சமயத்திற்கான மொழியும் இஸ்லாத்திற்கான மொழியுமாகும். எனவே, அம்மொழியினை நன்கு (perfectly) அறிந்திருந்தார். இதன்வழியே கிரேக்கத்து பைசாண்டியன் அறிவியலையும் சிரியாவின் உலகியல்பினையும் இந்தியாவின் அறிவியல்களான கணக்கு, வானியல், மருத்துவம் போன்றவற்றையும் அறிந்திருந்தார். அரபிக் மொழிபெயர்ப்பின் வழியே ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் தத்துவங்களை தம் எழுத்துகளில் தொடர்களாகப் பயன்படுத்தினார். அக்காலத்தில் அரபிய, இரானிய, துரானிய, துருக்கிய இந்திய இஸ்லாமியப் பண்பாடுகளை ஒருங்கே அறிந்த ஒருநபராக இருந்தார். ஹீப்ரு, சிரியாக் போன்ற மொழியினையும் அறிந்திருந்தார்.

தம் 44 முதல் 58 ஆம் வயதுவரை Mahmud of Ghazna வின் பாதுகாப்பில் இருந்தார் எனலாம். இச்சூழல், இவருக்கு இந்தியப் பண்பாட்டினை நேரடியாக அறிவதற்கு/கற்பதற்கு வாய்ப்பளித்தது. அப்போது, சம்ஸ்க்ருதத்தினையும் மேற்கு பஞ்சாப்பின் பேச்சுமொழியினையும் பயின்றார். மூல்தானில் இருந்தபோது சில பிராமணர்களையும் அறிஞர்களையும் சார்ந்திருந்தார். சாஸ்திரிகள்/பண்டிட்டுகள் மூலம் சம்ஸ்க்ருத மொழியினைக் கற்றார். அப்பிராமணர்கள் இவருக்கு புரியும்படியான மொழிகளில் சம்ஸ்க்ருதத்திலிருந்த நூல்களை வாசிக்க வாசிக்க (running translation of texts) கருத்துகளைப் புரிந்து கொண்டார். சிலசமயங்களில் பாரசீகம், சில சமயங்களில் சம்ஸ்க்ருதம் சில சமயங்களில் வேறுவேறு மொழிகள் என்று இப்பயிற்சி தொடர்ந்தது. ஆனால், அடிப்படையான கருத்து சம்ஸ்க்ருதத்திலிருந்து வந்தது. இவர், சம்ஸ்க்ருதத்தினைப் படித்தறிந்து அந்நூல்களை பாரசீகம், அரபிக் மொழிகளில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். இங்கு ஒரு கருத்தினைப் பதிவிடவேண்டும். அதாவது, அக்காலகட்டத்தில் சம்ஸ்க்ருதத்துடன் பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிட்டுகள் இந்தியாவில் இருந்தனர் என்று உறுதியாக அறிய முடிகிறது. சில நூல்களை சம்ஸ்க்ருத பண்டிட்டுகள் சொல்ல சொல்ல இவர் மொழிபெயர்த்திருக்க வேண்டும். இவர் சிறந்த தனித்துவமான அரபிக் மொழி, சம்ஸ்க்ருத மொழி வல்லுநராக அறியப்படுகிறார். ஆனால், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம் என்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை. இவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டினை அறியவில்லை. இரண்டிற்கும் உச்சரிப்பில் சிறுசிறு வேறுபாடு உண்டு. இன்றைய நிலைபோல் அன்றும் எழுத்துமொழி சம்ஸ்க்ருதத்திற்கும் பேச்சுமொழி சம்ஸ்க்ருதத்திற்கும் இடையிலான வேறுபாடு பின்பற்றப்படவில்லை. இருமொழிகளுக்கும் இணையான சொற்களைத் தருகிறார். ஆனால், எல்லா சந்தர்ப்பத்திலும் உச்சரிப்புகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. காரணம், இவருக்கு உதவிய சம்ஸ்க்ருதப்பண்டிதர்கள் அவ்வாறுதான் உச்சரித்தனர் போலும்.

நூல்

இவரது முதன்மையான நூல் Kitabu’l Hind என்பதாகும். இவரது நூல்கள் முதலில் Edward Carl Sachau (1845-1930) என்பவரால் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றுள் மேல்சொல்லப்பட்ட நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1888 இல் வெளியிடப்பட்டது. இம்மொழிபெயர்ப்பாளர், வியன்னா பல்கலைக்கழகத்திலும், பெர்லின் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார் (Professor of Semitic Languages in the University of Vienna, Professor of Oriental Languages in the Royal University of Berlin). AB தம் நூலில் பயன்படுத்திய சம்ஸ்க்ருத சொற்களையும் அவற்றுக்கு இணையாக இந்திய பேச்சு மொழியினையும் பட்டியலிட்டுள்ளார். இவரின் உச்சரிப்பு வேறுபாட்டிற்கு காரணம் அவர் Kufic-Arabic எழுத்தினைப் பயன்படுத்தியதுதான் என்று சொல்லப்படுகிறது. இவரின் ஒலிபெயர்ப்பு (transcription) வெவ்வேறு உச்சரிப்பினைக் காட்டுகின்றது. இவர், 2500 சம்ஸ்க்ருத சொற்களை ஒலிபெயர்த்துள்ளார். இவர் இதனை (rather careless in transliteration) பொறுப்பற்று செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது இந்திய உச்சரிப்பில் உள்ள வர்க்க எழுத்துகளின் உச்சரிப்புகளைப் பாதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பாரசீக-அரபிக் (Perso-Arabic) உச்சரிப்புகளைப் பின்பற்றியுள்ளார். இந்திய மொழிகளின் நாமடி ஒலிகளை (retroflex sounds) பொருத்தமாக அரபிக் எழுத்தில் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், சில உச்சரிப்புகளை சரியாகப் புரிந்திருக்கிறார். இவர் பயன்படுத்திய சில உச்சரிப்புகளை இங்கு சொல்லலாம். எப்போதும், சம்ஸ்க்ருத ”ப” விற்குப்பதில் ”வ” வினைப் பயன்படுத்தினார். உண்மையில் இந்தியாவின் மையப்பகுதியில் இருந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர்கள் உச்சரிப்புகளைச் சரியாகப் பின்பற்றினரா? என்பதனை அறிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அண்ணவொலி (palatal sound) ”ச ”விற்கும் பல்லொலி (dental sound) ”ச” விற்கும் இடையிலான வேறுபாட்டினை அறிந்திருந்தார். நன்கு தெரிந்திருந்தும் சம்ஸ்க்ருத ja என்ற உச்சரிப்பினை வழக்கு உச்சரிப்பான gy என்றே மொழிபெயர்த்தார். அப்போது இந்தியாவின் வடக்கில் இந்த உச்சரிப்பு வழக்கில் இருந்தது; மெல்ல மெல்ல தெற்கிற்கும் பரவியது.

மேலே சொல்லப்பட்டவை, (Persia-Arabic) பெர்சிய-அரபிக் எழுத்து முறையில் சம்ஸ்க்ருத சொற்களை எழுதும் முறையினை எப்படி பின்பற்றினார் என்பதனைக் காட்டும். இந்தியாவில் அக்காலத்தில் இலக்கியமொழியிலும் பேச்சுமொழியிலும் இருந்த வேறுபாட்டினை (differences) அறிந்திருந்தார். மேற்கு பஞ்சாப்பில், ஆப்கனில் இந்தியர்களின் பேச்சு மொழியினை அறிந்திருந்தார். அது, சிந்துபகுதியின் பேச்சுமொழியினை ஒத்திருந்தது (similar to speech of Sindh). ஆனால், இந்தியாவின் உள்நிலப் பகுதிகளின் பேச்சுமொழி பற்றி அறிந்திருக்கவில்லை. அறிந்தோ-அறியாமலோ வடமேற்குப் பகுதியிலிருந்த இந்திய பேச்சுமொழிகளின் சொற்களைக் குறித்துள்ளார். இதனடிப்படையில் பேச்சுமொழிகளின் உச்சரிப்பு (phonetic habits) பற்றி ஒரு கருத்திற்கு வர இயலும்.

இவருடைய Kitabu’l Hind எனும் நூலிலிருந்து சம்ஸ்க்ருத மொழியுடன் பேச்சுமொழிகளின் சொற்கள், அமைப்புகள் பற்றியும் அறியலாம். பஞ்சாபி, சிந்தி மொழிகளின் ஒலிவரலாறு (history of the sounds) பற்றியும் அறியலாம். வடமேற்கிலிருந்த பெயர்கள் வழியே பாரசீக, அரபிக் மொழியின் எழுத்தாளர்களையும் அறியலாம்.

நூல் பற்றி

இந்தியா பற்றிய இவரது நூல் இந்தி, வங்காளம், ரஷ்யன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் சுருக்கமான நூலினை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரதியினை இந்திய வரலாற்றாசிரியர் ஒருவர் (Qeyamuddin Ahmad) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்நூலின் அடிப்படையிலும், மொழியியல் வல்லுநர் சுனிதிகுமார் சட்டர்ஜி எழுதிய ஒரு கட்டுரையின் அடிப்படையிலுமே இங்கு கருத்துகள் பகிரப்படுகின்றன. AB எழுதிய நூலின் கட்டமைப்பு மிக முக்கியமானது. 8 அத்தியாயங்களில் பல உள்தலைப்புகளுடன் எழுதப்பட்டது. இதன் முதல் அத்தியாயமே மொழி, சமயம், இனப்பெருமை என்று அமைகிறது. இந்தியச் சமூகத்தினை பல தலைப்புகளில் பதிவிட்டுள்ளார். இந்தியப் பண்பாட்டின் மிக முக்கியமான அறிவியல் கூறுகளான காலக்கணக்கீடு, வானியல் அறிவு, கோள்களின் சங்கமிப்பு, கிரகணங்கள், நேரப் பகுப்பு போன்றவற்றை அறிந்து மிகவும் வியக்கிறார். இரசவாதம் (alchemy) பற்றியும் பேசுகிறார். இவருடைய நிலவியலறிவு ஒரு வரலாற்று ஆசிரியரின் தகுதியினை மெய்ப்பிக்கிறது. சீனா, திபெத், துருக்கி, காபூல், பதக்‌ஷான், டோக்கிஸ்தான், பாமியன் எல்கோர், குரசான், மெடியா, அதர்பகான், ஆர்மீனியா, ரோமப் பேரரசு போன்ற நிலப்பகுதிகளை குறித்துள்ளார். இது மேற்சொன்னப்படி ஒரு வரலாற்றாசிரியரின் தகுதியாகும். Franks, Jalalika போன்ற நாடுகளையும் சுட்டுகிறார். ஆப்பிரிக்காவின் மேற்கில் வசிக்கும் நீக்ரோக்கள் (western Negroes) பற்றியும் அடிமைகள் இழுத்து வரப்பட்டது பற்றியும் பேசுகிறார். இந்தியாவின் வடமேற்கில் அமைந்த சோமநாதபுரம் என்ற புகழ் வாய்ந்த துறைமுகப்பட்டினத்திற்கு சீனத்திலிருந்தும் Zanj பகுதிகளில் இருந்தும் கப்பல்கள் வந்து போகும் என்றும் கடல் ஓதங்களுக்கு ஏற்ப கப்பல்கள் இத்துறைமுகங்களுக்கு வந்து செல்லும் என்றும் குறித்துள்ளார்.

இந்தியச் சமூகம்

இந்தியச் சமூகத்தினை விளக்கும்போது பாரசீகத்தின் சமூகத்தினை ஒப்பிடுகிறார். பாரசீகத்தின் சமூகம் பின்வருமாறு பிரிந்திருந்தது. (1) இளவசர்களும் போர்வீரர்களும் (2) துறவிகள், பூசாரிகள், சட்டவல்லுநர்கள் (3) மருத்துவர்கள், வானியல் அறிஞர்கள், பிற அறிவியலாளர் (4) குடும்பதாரிகள், கைவினைஞர்கள். ஒவ்வொரு பிரிவிலும் பல உள்பிரிவுகள் உண்டு; ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. குலம் அல்லது குடி என்பது போன்று. ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடக்கக் கதையுண்டு/ மெய்கீர்த்தியும் உண்டு. இக்கதை பல தலைமுறைகளுக்கும், பல நூற்றண்டுகளுக்கும் மறக்கப்படாமல் தொடர வேண்டும். இந்திய சமூகங்களில் 4 வர்ணங்கள் போக 5 வதாக உள்ள மக்கள் Antyaja எனப்பட்டனர். இவர்கள் பலவேலைகள் செய்வோர். இவர்கள் சாதிகளுக்குள் அடக்க முடியாத கைவினைத் தொழில் செய்வோர். அவர்களுக்குள் 8 பிரிவுகள் உண்டு. அவர்களுக்குள் திருமணவுறவும் உண்டு. அவர்களின் தொழில்: செருப்பு செய்தல், கூடை முடைதல், கேடயம் செய்தல், மீன்பிடிதொழில், பறவைகளை விலங்குகளை வேட்டையாடுதல், நெசவு, வித்தை போன்றன. ஹதி, தோமா, சண்டாளர் போன்ற துப்புரவு செய்கிறவர்கள் சாதிக் கட்டமைப்பிற்குள் வைக்கப்படவில்லை.

இந்தியரின் நம்பிக்கை

வேதத்தின் சிலபகுதிகள் ஓதப்பட்டால் கருவுற்ற பெண்ணிற்கு கருச்சிதைவு உண்டாகும்; கருவுற்ற பசுவிற்கும் இது நிகழும் என்று அப்பகுதிகள் ஓதப்படுவதற்கு தடை செய்யப்பட்டிருந்தன என்கிறார். 8 இலக்கண நூல்களைச் சுட்டுகிறார். இந்தியர்கள் கிரேக்கர்கள் போன்று தோலின்மேல் எழுதுவதில்லை. நீங்கள் ஏன் தோலின்மேல் எழுதுவதில்லை என்று கேட்டபோது சாக்ரடிஸ் இதயத்தில் எழுந்த அறிவினை இறந்துபோன ஆட்டின்மேல் எழுத மாட்டேன் என்றாராம் என்று பதிவிடுகிறார். தென்னிந்தியர்கள் பனையோலைகளில் (it is mistakenly referred to as Coconut palms) எழுதினர் என்று குறிப்பிடுகிறார். எழுதப்பட்ட பனையோலைகளை எண்ணிட்டு அடுக்கி அவற்றை துளையிட்டு ஒரு புத்தகக்கட்டுபோல் பாதுகாக்கின்றனர் என்று வியப்படைகிறார். மத்திய இந்தியாவில் மக்கள் Fuzz மரப்பட்டைகளில் எழுதினர் என்றும் அப்பட்டைகள் ஒவ்வொன்றும் ஒருமுழம் நீளமுடையவை என்றும் குறித்துள்ளார். அப்பட்டைகளின் மேல் எண்ணையினைத் தடவி பளபளப்பாக்கி அதன் மேல் எழுதுவர் என்கிறார். எழுதப்பட்ட ஒவ்வொரு மரப்பட்டையும் எண்ணிடப்படும். கிரேக்கர்கள் போன்று இந்தியர்கள் இடமிருந்து வலமாக எழுதுகின்றனர் என்றும் காஷ்மீர், மத்தியப் பிரதேசம், வாரணாசி பகுதிகளில் ஒருவகையான எழுத்திலும் மாள்வா பகுதியில் நாகர என்ற வகையான எழுத்திலும் எழுதினர் என்றும் குறித்துள்ளார். பாட்டியா, சிந்த் போன்ற பகுதிகளில் அர்த்தநாகரி என்ற எழுத்து பயன்பட்டில் இருந்தது என்றும் இடத்திற்கேற்ப பலவகையான வரிவடிவங்கள் பயன்பாட்டில் இருந்தன என்றும் கூறியுள்ளார். இந்தியா பற்றி AB வியக்கும் இன்னொன்று:எனக்குத் தெரிந்து எண்வரிசைகள் 1000த்துடன் முடிகின்றன. ஆனால், இந்தியாவில் ஆயிரத்தினை அடுத்தும் எண்வரிசை தொடர்கிறது. எண்களை வரிசைப்படுத்துதல் இலக்கணத்தின் அடிப்படையிலும் வேர்ச்சொற்களின் அடிப்படையிலும் என்று வியக்கிறார்.

இந்தியாவில் நிலவிய மாயமந்திரம் பற்றி (witchcraft) சுவையாகப் பேசுகிறார். அப்போது மாயமந்திரமும் (witchcraft) இரசவாதமும் (alchemy) ஒன்றே என்று கருதப்பட்டதாம். ஒருவர் கொஞ்சம் பருத்திப் பஞ்சினை கையில் வைத்து அதனைப் பொன்னாக மாற்றிக் காட்டினால் அவர் மந்திரவாதி என்று கருதப்படுவாராம். இந்தியர்கள் இதனைப் பெரிதுபடுத்தவில்லையாம். ஆனால், எந்த நாட்டு மக்களும் இந்நம்பிக்கையிலிருந்து தப்பவில்லையாம். இரசாயனம் என்ற சொல்லில் ரச என்றால் பொன் என்று பொருளாம். இது ஒரு கலை. இது மருந்துகள், மருந்துக் கலவை போன்றவற்றுடன் தொடர்புடையது. இம்மருந்துகள் பெரும்பாலும் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்நம்பிக்கையின் அடிப்படையில் இளமைக்குத் திரும்புவது, நரைமுடிகளை கருப்பாக்குவது போன்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. இப்பரிசோதனையில் சிலர் எதிர்பாராமல் நன்மையடைந்தனர்; சிலர் மாண்டனர். சிறுவர்களைக் கொன்றால் பொன்னினை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை நிலவியிருந்தது என்கிறார். அவரிடம் வியக்க வேண்டிய ஒன்று என்னெவெனில் வானியல் துறை, கோள்களின் நகர்வுகள், கிரகணங்கள் பற்றிய அவரது கணிப்பு. இவற்றினை தம் நூலில் சில அட்டவணைகளுடன் விளக்கியிருக்கிறார். இவைபற்றி இவர் தந்துள்ள குறிப்புகளின்படி வானியலும் கணக்கியலும் அறிந்த ஒருவர் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்டுரையினை வரைய இயலும்.

பயன்பட்ட நூல்கள்

 1. Qeyamuddin Ahmad, India by Al-Biruni: Abridged Edition of by Edward C. Sachau’s English Translataion (ed) with Introduction and Notes, National Book Trust, India, 3rd Reprint, 1995.

2. Suniti Kumar Chatterji, Al-Biruni and Sanskrit in Select Papers: Angla-Nibandha Chayana, Vol.2, People’s Publishing House, New Delhi, May, 1979.pp.83-105.

கி.இரா.சங்கரன்