கடந்த 12.06.11 அன்று மாலை 6.00 மணியளவில் அன்னூர் அருகேயுள்ள குருக்கிளையாம்பாளையம் என்ற கிராமத்தில் பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கச்சென்ற வசந்தகுமார் என்ற மாணவனை ஆதிக்கஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் தாமோதரன் என்பவரும் “சக்கிலியர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது” என மிரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
 
தலித் மாணவனைத் தாக்கிய ஆதிக்கஜாதியினர் கைது செய்யப்படவில்லை. தண்ணீர் தடையும் நீக்கப் படவில்லை. இதுபற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகளை அறிந்து அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சிக்கலைக் கையில் எடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அன்னூர் ஒன்றியத்தில் நிலவிவரும் தீண்டாமை வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரக்கோரி 27.06.11 திங்களன்று காலை 10 மணியளவில் குருக்கிளையாம்பாளையத்தில் கொளத்தூர் மணி தலைமையில் 1000 குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து.

periyar_dk_600

அறிவித்த நொடியிலிருந்து மாவட்டக் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் பெரியார் தி.க தோழர்களைச் சந்தித்து போராட்டத்தைக் கைவிடும்படியும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகவும் உறுதிகொடுக்கத் தொடங்கினர். 
 
23.06.11 அன்று கோட்டாட்சியர் சாந்தகுமார் தலைமையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் கோவை வடக்கு மாவட்டத்தலைவர் சென்னிமலை இராமசாமி, மாவட்டச் செயலாளர் வெள்ளமடை நாகராசு, தமிழ்நாடு மாணவர்கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட சிறுவன் வசந்தகுமார், கோவை மாநகரப் பொறுப்பாளர் இ.மு.சாஜித், நல்லிசெட்டிபாளையம் ஈஸ்வரன், ஜோதிராம், இராமன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் போராட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியது.

தோழர்களோ, பொதுக்குழாயில் நீர்பிடிக்கும் உரிமை கிடைக்கும்வரை போராட்டம் நிற்காது, ஓயாது என்பதை வலியுறுத்தி வந்துவிட்டனர். வேறு வழியின்றி குறுக்கிளையாம் பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் பொதுக்குழாயில் நீர்பிடிக்கலாம். அதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 
 
ஆனாலும் அன்னூர் ஒன்றியம் முழுவதும் நிலவும் மற்ற வெவ்வேறு வகையான தீண்டாமைக் கொடுமைகளையும் களையக் கோரி 27.06.11 திங்கள் அன்று தண்ணீர் பிடிக்கும் போராட்டத்திற்காக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து தோழர்கள் அன்னூரில் குவிந்தனர். பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமாக போராட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர்கள் கோவை கு.இராமக் கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் உட்பட ஆதித்தமிழர்பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், சமத்துவமுன்னணி, தலித்விடுதலைக் கட்சி ஆகிய தோழமை இயக்கங்களும் இந்த மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்றன. ஆதிக்கஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட சிறுவன் வசந்த குமார் தெளிவான வாக்குமூலம் போல தனது உரையை நிறைவு செய்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1300 தோழர்கள் இத் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். 
 
annoor_dalit_370ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்று பெரும்பான்மையான தோழர்கள் ஊர் திரும்பியபிறகு மாலை 5 மணியளவில் உண்மையிலேயே அங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகிடைத்து விட்டதா என்பதை ஆராய்வதற்காகவும், அதற்குரிய ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தோழர்களை குருக்கிளையாம்பாளையத்திற்கு அனுப்பி வைத்தார். நெடுநேரம் காத்திருந்தும் தலித் மக்கள் யாரும் அங்கு குடிநீர் பிடிக்க வரவில்லை. அதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
 
இச்செய்தி அன்னூரில் முகாமிட்டிருந்த கழகத் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மாவட்டத்துணைக் கண்காணிப்பாளர் இராஜாராமிடமும் காவல் ஆய்வாளர் திருமேனியிடமும் பேசினார். “பொதுக்குழாயில் குடிநீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித் சிறுவன் வசந்தகுமார் அதே ஊரில் அதே குழாயில் நீர் பிடிக்க வேண்டும், காவல்துறை அதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்றே இப்பொழுதே அதைச் செய்யாவிட்டால் நானே நேரடியாக வசந்தகுமாருடனும் அவரது தாயாருடனும் மக்களைத் திரட்டிக்கொண்டு குருக்கிளையாம்பாளையம் செல்வேன்” என அறிவித்தார்.
 
போராட்டம் முடிந்துவிட்டது. தோழர்கள் கலைந்து விட்டனர் என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் சுறுசுறுப்பானது. நேரடியாக கொளத்தூர் மணி அவர்களை குருக்கிளையாம்பாளையத்திற்கோ, நல்லிசெட்டிபாளையத்திற்கோ செல்லவிடாமல் தடுக்கும் பல்வேறு வகையான முயற்சிகளில் இறங்கியதே தவிர, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சனைக் காகவோ, சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆதிக்க ஜாதியினரின் கோபத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை அடக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அலட்சியப்படுத்தியே வந்தது. இறுதியாக இரவு 7 மணிக்கு வேறு வழியின்றி, மனித உரிமைச் சட்டங்ளைச் செயல் படுத்த குருக்கிளையாம்பாளையத்திற்கு தோழர்களுடன் புறப்பட்டார் கொளத்தூர் மணி. அதற்குப் பிறகுதான் உடனடியாக சிறுவன் வசந்தகுமாரை குடிநீர்பிடிக்க அனுமதித்தது காவல்துறை.

kolathoor_mani_600
 
சிறுவன் வசந்தகுமாரும் அவரது தாயாரும், உறவினர்களும் காலம் காலமாக தடுத்துநிறுத்தப் பட்டிருந்த பொதுக்குழாயில் தடைஉடைத்து நீர் பிடித்தனர். வசந்தகுமார் ஒரு குடத்தில் நீரைப் பிடித்துவிட்டு குழாயில் தனது கையால் நீர் பிடித்து முகம் கழுவினான். பத்திரிக்கையாளர்களும் தோழர்களும் அதைப் படம் எடுத்தனர். இரவு 10 மணி வரை தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அதே பகுதியில் மக்களைச் சந்தித்து அந்த கிராமத்திலும் அதைச்சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலம் நிலவும் மற்ற வகையான தீண்டாமைகளைப் பற்றியும், அவற்றைக் களைய வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கிச்சென்றார்.