கோடையின் இடி கொண்டு கொட்டுமே வார்த்தையில்
கொஞ்சு தமிழ் விளையாடுமே !
குன்றங் கொடுத்த தோல் மன்றாட ஆடுமே
கொற்றவன் எழில் தோன்றுமே ! - என்று ஜீவாவைப் பாடினார் கண்ணதாசன்.

ஜீவா முதலில் கலை இலக்கியவாதி, அதற்குப் பிறகு தான் அவர் ஒரு அரசியல்வாதி. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும் எழுதி அதில் நடிக்கவும் செய்தார் ஜீவா. தமிழிலக்கியங்களின் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்தார்.

Jeevanandamஜனசக்தி ” சமதர்மம் ” உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியராகவும், கம்பனை, பாரதியை அவர்தம் படைப்புகளை உயர்த்திப் பிடித்த இலக்கியவாதியாகவும், சிறந்த பேச்சாளராகவும், தமது பாடல்கள் மூலமாகவும் தூங்கிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தை எழுச்சிபெற வைத்தவர் ஜீவா.

போராடிய பாட்டாளி வர்க்கத்தை சோர்வடையாமல் கலை இலக்கியத்தின் வழி போராட்ட குணத்தின் மட்டத்தை உயரச் செய்தவர். அதனால்தான்,

" கோடிக்கால்‌ பூதமடா -- தொழிலாளி
கோபத்தின்‌ ரூபமடா
நாடி எழுந்ததுபார்‌ -- குவலயம்‌
நாற்றிசையும்‌ அதிர" - என்று எழுதினார் ஜீவா.

விஞ்ஞானத்தைவிட தத்துவ ஞானத்தைவிடக்‌ கலை ஞானம்‌ தான்‌ சர்வரஞ்சகத்‌ தன்மையுடையதாயிருக்கிறது. கற்றவர்‌, கல்லாதவர்‌, எல்லோருடைய நெஞ்சையும்‌ அள்ளும்‌ தன்மையுடையதாய் இருக்கிறது என்று அனைத்திற்கும் மேலாக கலை இலக்கியத்திற்கு முதலிடம் கொடுத்தார் ஜீவா.

ஜீவா இலக்கியத்தை நல்ல இலக்கியம்‌; நசிவு இலக்கியம் என்று இரண்டு வகையாகப்‌ பிரிக்கிறார். நசிவு இலக்கியம் என்பதை "சிதைந்து சீரழிந்து வருகிற சமுதாயத்தைப்‌ பிரதிநிதித்துவப்‌ படுத்துகிற இலக்கியம்‌ என்றும் நசிவு இலக்கியம்‌ - மூடாத்மா வாதம்‌. இருள்‌ நோக்கு வாதம்‌, மாயாவாதம்‌, நம்பிக்கை வறட்சிவாதம்‌, சர்வ சம்சயவாதம்‌, நரகமிரட்டல்‌ வாதம்‌ முதலான வாதங்கள்‌ சிறுகவும்‌, பெருகவும்‌ தாறுமாறுகக்‌ குழம்பி ஒடும்‌ கருத்தோட்டத்தை எதிரொலிக்கும் இலக்கியம்" என்கிறார்.

நசிவு இலக்கியவாதிகள், சரிந்துவருகிற சமுதாயத்திற்குச்‌ சப்பைக்‌ கட்டு கட்டுவதையும், இந்த நொறுங்கி வருகிற பழைய கட்டுக்‌ கோப்புக்கு குரல்‌ கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

"நசிவு இலக்கியம்‌ ஜனநாயகப்‌ புரட்சியைக்‌ கண்டு பயந்து சாகிறது. பொதுமக்கள்‌ வாழ்வில்‌ ஆர்த்‌தெழும்‌ முற்போக்கைக்‌ கண்டு அஞ்சி நடு நடுங்குகிறது. பிற்போக்குச் சக்திகளின்‌ பாதுகாவலனாக நின்று மனித நாகரிகத்தைப்‌ பழிவாங்க விரும்புகிறது, இந்த இலக்கியம்‌ முன்னேறும்‌ பொதுமக்களைப் பின்னால்
இழுத்து மனித வரலாற்றில்‌ மிக இருண்ட அநாகரிக யுகத்தில்‌ தள்ளுவதற்கு படித்த வித்தையை எல்லாம்‌ காட்டுகிறது" என்கிறார்.

அதே நேரத்தில், நல்ல இலக்கியம்‌ மனித நேர்மையையும்‌ சிறந்த தீர்க்க தரிசனத்தையும்‌ கொண்ட இலக்கியம்‌ என்று வகைப்படுத்துகிறார். இந்த இலக்‌கியம்‌ நசிவு இலக்கியம்‌ செல்லும்‌ பாதையில்‌ செல்லாமல்‌ வேறு வழிகளில்‌ வேறு திசைகளில்‌ சென்‌று சமுதாய முன்னேற்றத்திற்குப்‌ போகும்‌ வழிகாண முயல்கிறது என சுட்டிக்காட்டுகிறார்.

" நல்ல இலக்கியம்‌, கோடானு கோடி பாட்டாளிப்‌ பெருமக்களின்‌ விதியோடு தன்விதியை இணைத்துக்‌ கொண்டு அவர்களுடைய புதுயுகப்‌ போராட்டங்‌களுக்குப்‌ பெருங்‌கருவியாக விளங்கி புதியவாழ்வை உருவாக்க முயல்கிறது" என்றும் " நல்ல இலக்கியம்‌ சமுதாயம் முழுமைக்கும்‌ ஊக்கமும்‌ ஆக்கமும்‌ அளிக்கிறது. இதில்‌ வீரமிக்க உள்ளமும்‌ ஈரமிக்க நெஞ்சமும்‌ நிறைந்து காணக் கிடைக்கிறது. நல்ல இலக்கியம்‌ - சர்வ நிச்சயவாத இலக்கியம்‌. இது வளரும்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌, வளரும்‌ ஜனநாயகப்‌ பெருமக்களின்‌ இலக்கியம்‌. இன்றைய சமுதாயத்தில்‌ புதுமை மலர்ச்சியும்‌ முற்‌போக்குணர்ச்சியும்‌ கொண்டு முன்னேறும்‌ சர்வமக்கள்‌ இலக்கியம்‌ " என்று கூறும் ஜீவா,

"பாடுபடும்‌ பாட்டாளித்‌ தோழா--இந்தப்‌
பாருலகின்‌ சொந்தக்காரன்‌ வேறில்லை நீதான்‌!" - என தன்னுடைய எழுத்தை பாட்டாளி வர்க்கத்திற்காக எழுதினார்.

நல்ல இலக்கியம் "ஜனநாயக ஒற்றுமையை வளர்ப்பது, பிற்போக்கை எதிர்த்து முன்னேற்றத்தை ஆதரித்து பொது மக்கள்‌ ஒரே கொள்கையோடும்‌ ஒரே உறுதியோடும்‌ போராட ஊக்கம்‌ ஊட்டுவது ஆகியவற்றைப்‌ பேணிக்காக்கும்‌ கலை இலக்கியப்‌ படையல்கள்‌ " என்றும்

மாறாக, "ஜனநாயக ஒற்றுமையைக்‌ குலைப்பது, மக்களிடையே சாதி, மத, இன, மொழிப் பூசல்களை வளர்ப்பது, முன்னேற்றத்தைத்‌ தடுத்து, பொதுமக்களைப்‌ பிற்போக்கில்‌ தள்ளுவது ஆகியவற்றை ஆதரிக்கும் படையல்கள்‌ கெட்ட இலக்கியம்" என இலக்கியத்தைப் பொதுவாகப் பேசாமல் நல்லவை, கெட்டவை என பிரிக்கிறார்.

இலக்கியத்தின்‌ உயிர் உணர்ச்சிதான்‌ என்று எழுதும் ஜீவா, தமிழ் கலை இலக்கியம், " கவிதை, பாடல்‌, நாடோடிப்‌ பாடல என்றும்‌, சிறு
“கதை, காவல்‌, நாடகம்‌, கட்டுரை, வாழ்க்கை வரலாறு , குழந்தை இலக்கியம்‌, திறனாய்வு, வரலாறு, வழிச்‌ செலவு நூல்‌, நீதி நூல்‌ என்றும்‌, அரசியல்‌ பொருளாதாரம்‌, சமுதாயம்‌, உழவு, தொழில்‌ நுணுக்கம்‌, விஞ்‌ஞானம்‌, ஆராய்ச்சி என்றும்‌ பலப்பல கிளைகள்‌ தாங்கி மூலமாகவும்‌ மொழிபெயர்ப்‌பாகவும்‌ உருவெடுத்து இன்று பரந்து விரிந்து கிடக்‌கிறது" என்கிறார்.

நமது கலை இலக்கியம்‌ யாருக்காக உருவாக்கப்‌ படவேண்டும்‌? தொழிலாளர்கள்‌, உழவர்கள்‌ , சர்வசாதாரண மக்களுக்காகவா? அல்லது படித்த நடுத்தர வர்க்கத்திற்காகவா? என்று கேள்வி எழுப்பும் ஜீவா, அதற்கான பதிலாக, "தொழிலாளர்‌, உழவர்‌, சர்வ சாதாரண மக்கள்‌ ஆகியோருக்காகத்தான்‌ இலக்கியம்‌ உருவாக்கப்‌பட வேண்டும்‌ என்று கூறுகிறார்.

"காலுக்குச்‌ செருப்பு மில்லை
கால்வயிற்றுக்‌ கூழுமில்லை
பாழுக்‌ குழைத்தோ மடா - என்‌ தோழனே
பசையற்றுப்‌ போனோ மடா,

குண்டிக்கொரு துண்டு மில்லை
கொல்வறுமை தாள வில்லை
ஒண்டக்‌ குடிசை யில்லை - என்‌ தோழனே
உழைத்திளைத்துப்‌ போனோ மடா " என்று தன் பாடல்கள் மூலம் உழைக்கும் ஏழை மக்களின் வாழ்வு அவல நிலையை எடுத்துக் கூறினார்.

கலை இலக்கியத்தின் தோற்றுவாய் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மனித முளை எதிரொலிப்பதன்‌ கொள்கை விளைவுதான்‌ என்று கூறும் ஜீவா, புரட்சிகரக்‌ கலைப்படைப்பும், இலக்கியப்‌ படைப்பும் எளிய மக்களின் வாழ்வை புரட்சிக்‌ கலைஞர்களோ, புரட்சி எழுத்தாளர்‌களோ எதிரொலிப்பதன்‌ விளைவாகவே உருவாகிறது என்கிறார்.

புரட்சி என்பது புதுமைக்கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்
புரட்சி என்பது போரிற் பெரிது
புரட்சி என்பது புதுமைக் கீதம்
புரட்சி என்பது புத்துயிர் முரசு
புரட்சி என்பது பொறுமைக்குறுதி
புரட்சி என்பது போம்பணிக் கறுதி
புரட்சி என்பது பூகம்ப வேகம்
புரட்சி என்பது பூரண மாற்றம்
புரட்சி என்பது புரட்டின் வைரி
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு” என இடிமுழக்கம் போல் பாடல் எழுதினார் ஜீவா.

கலை இலக்கியத்தின்‌ தரம் சாதாரணப்‌ பொதுமக்கள்‌ விரும்பும்படி இருக்க வேண்டும்‌, அதைத் தொடர்ந்து பொது மக்களின்‌ கலை இலக்கிய மதிப்பிட்டுத்‌ தரத்தைப்‌ படிப்படியாக உயர்த்த வேண்டும்‌. உழவர்கள், பாட்டாளிகள் என சகல விதப் பாட்டாளிப்‌ பெருமக்களும்‌ விரும்பி வரவேற்கத்தக்க வண்ணம்‌ கலை இலக்கியம்‌ இருக்க வேண்டும்‌ என்று வரையறை செய்கிறார்.

கலை கலைக்காகவே என்று கூறி எளிய மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் கதை, கவிதை எழுதுவதை ஏற்க மறுத்து, வெகுமக்களிடமிருந்து கற்றுக்‌ கொண்டு அவர்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுக்கும்‌ வகையில்‌ கலைஞர்‌களின்‌ கடமை செல்ல வேண்டும்‌, சாதாரணப்‌ பாட்‌டாளியின்‌ தரத்திலிருந்து அவர்களை உயர்த்த வேண்‌டும்‌. ஆனால்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ முன்னேற்றப்‌ பாதையிலையே அவர்களுடைய தரத்தைக்‌ கலை இலக்கியப்‌ பணியால்‌ உயர்த்த வேண்டும்‌ என்கிறார்.

பத்திரிக்கையின் மூலமாக பொதுவுடமைக் கொள்கையையும், இலக்கியப் பணியையும் மேற்கொள்ளும் பொருட்டு 1937 நவம்பர் 6 அன்று ‘ஜனசக்தி’ பத்திரிகை வார ஏடு துவங்கப்பட்டு, அதன் ஆசிரியராக ஜீவா பணியாற்றினார்.

அரசின் நெருக்கடி காரணமாக மூன்று இதழே வெளிவந்த நிலையில் ஜனசக்தி நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த மூன்றாவது இதழில்தான் பாவேந்தர் பாரதிதாசனின் ,

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்"

என்ற பாடல் வெளியாகி கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை மக்களுக்கு மிக எளிமையாக எடுத்துச் சொல்வதற்கான மிகச்சிறந்த பாடலாக அமைந்தது.

கலை இலக்கியத்தில் மூலமே போராட்ட உணர்வை உயர்த்த முடியும் என்ற பிடிப்பு கொண்டிருந்த ஜீவா அவர்கள், 1961-ஆம் ஆண்டு ‘கலை இலக்கியப் பெருமன்றத்தை உருவாக்கினார். பொதுவுடமைக் கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 –ஆம் ஆண்டில் தொடங்கினார்.

பொதுவாகவே தமிழ்நாட்டு பொதுவுடைமையாளர்கள் பாரதியின் மீது பற்று கொண்டவர்களாக இருந்தார்கள். பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அவர்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

புரட்சியாளர் லெனின் தலைமையில் 1917ஆம் ஆண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனுக்கு எதிராகப் பொங்கியெழுந்த ரஷ்யப் புரட்சியை, “ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்று பாடிய பாரதியை அவர்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டார்கள்.

ஜீவா அவர்கள் இலக்கிய பற்று உள்ளவராக இருந்ததும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறிய பின்பும் முற்று முழுதாக பாரதியை ஏற்றுக்கொண்டார். தமிழன்‌ வாழ்வை, மனிதன்‌ வாழ்வை புதிய பார்வையோடு பார்த்தான் பாரதி என்கிறார் ஜீவா.

பாரதி மனித குலத்தின்‌ மனச்சாட்சியின்‌ குரலாக ஏதோ ஒரு கணத்தில்‌ மட்டும்‌ ஒலித்தவனல்ல; மாறாக, தனது இலக்கிய வாழ்க்கை முழுவதையுமே என்றென்றும்‌ அத்தகைய குரலை ஒலிப்‌பதற்கே அர்ப்பணித்துக்‌ கொண்டவன்‌. மனித குலத்துக்கு இழைக்கப்படும்‌ அநீதிகள்‌ அனைத்தையும்‌ எதிர்த்து, அவன்‌ குரல்‌ கொடுத்தான்‌. மனிதர்‌ யாவரும்‌ சரிநிகர்‌ சமானமாக வாழ வேண்டும்‌ என்று வேட்கை கொண்டான்‌. இந்தக்‌ காரணத்தால்தான்‌ அவன்‌ ஏனைய எந்தவொரு தமிழ்க்‌ கவிஞனையும்‌ காட்டிலும்‌, அதிகமான பேரும்‌ புகழும்‌ பெற்றிருக்கிறான் என்று கூறுகிறார் ஜீவா.

பாரதி ஜனநாயகக்‌ கவி; நாம்‌ வாழ்கிற, நாம்‌ அனுபவிக்‌கிற புதிய சூழ்நிலையில்‌ உருவாகிய கவி. நமக்கு இதர எல்லாக்‌ கவிகளையும்‌ விட புரிய, தெரிய கவிமழை பொழிந்த கவி. இருபதாம்‌ நூற்றாண்டின் கவி, தமிழ்க்‌ கவிகளிலேயே நவீனக்‌ கண்ணோட்டம்‌ படைத்த கவி. நமக்கு தேசபக்தியை, சுதந்திர தாகத்தை, புதிய வாழ்வு நாட்டத்தைப் போதித்த கவி. நமக்கு உயிருக்கு உயிரான, இனிமை மிக்க கவி என பாரதியை தனது இலக்கிய வழிகாட்டியாகக் கொண்டவர் ஜீவா.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்‌.
வள்ளுவர்போல்‌ இளங்கோவைப்‌ போல்‌,
பூமிதனில்‌ யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை ;
வெறும்‌ புகழ்ச்சி யில்லை" -என்ற பாரதியின் பாடல் வழியாகக் கம்பனை, வள்ளுவனை, இளங்கோவனை ஏற்கிறார் ஜீவா.

கம்பன்‌ என்றொரு மானிடன்‌? என்று பாரதி கூறியது எத்‌தகைய மெய்‌ ! என கம்பன்‌-ஒரு மானிடன்‌-அவன்‌ காவியம்‌-மானிட மகா காவியம்‌ என்று எந்தக் கம்பனை பார்ப்பனிய அடிவருடி என்று திராவிட இயக்கங்கள் கூறினவோ, அந்தக் கம்பனை மானிடன் - காவியம் என்றார் ஜீவா.

திராவிட இயக்கம் கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம்’ என்றது. ராமாயணக் கதை நிகழ்வுகளை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும், பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்திப் பிடிப்பதாகவும் கருதியது. தமிழர்களை /திராவிடர்களை அசுரர்களாக்கி இழிவு செய்கிறது என்ற நோக்கில் பார்த்தது. ஆனால், இதற்கு மாற்றாக ஜீவா இராமாயணத்தை காப்பியமாகப் பார்த்தார். திராவிட இயக்கம் புரிந்து கொண்ட கம்பனுக்கு வேறு ஒரு வடிவம் கொடுத்தார் ஜீவா.

உண்மையான கவிதையில்‌ கவிஞனின்‌ இதயம்‌ மலர்‌கிறது; கற்பனை மலர்கிறது; மொழிவளம்‌ மலர்கிறது; மானிட ஆர்வம்‌ மலர்கிறது; உணர்ச்சி மலர்கிறது ; சிந்தனை மலர்ந்து சிறகடித்துப்‌ பாய்ந்து செல்கிறது ” என்று ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர் கோலரிட்ஜ், சேக்ஸ்பியர் குறித்து கூறியதைச் சுட்டிக்காட்டி, இவை அனைத்தையும்‌ அதற்கப்பாலும் நாம்‌ கம்பன்‌ கவிதைகளில் காணலாம் என்கிறார் ஜீவா.

கம்பன் விழாக்களில் தனது சிம்ம குரலால் மக்கள் உள்ளங்களை கட்டிப்போட்டார், கம்பனின் காவியத்தை எளிய மக்களின் மனநிலையிலிருந்து மேடையேற்றினார். எடுத்துக்காட்டாக 1951-இல் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு கம்பன் விழாவில் ஒன்றே கால் மணி நேரம் ஜீவா அவர்கள், கம்பன் காவியத்தைப் பற்றிப் பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு அக்கூட்டத்திற்கு வந்திருந்த திரு. சீனிவாசராகவன் ஜீவாவிடம் “நீங்கள் கம்பனை இவ்வளவு ஆழமாகப் பேசினீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டு ஜனங்கள் மெய் மறந்துபோனார்கள். நீங்கள் ஏன் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு, இவ்வளவு சிரமப்பட வேண்டும்? வெளியே வாருங்கள், எங்களோடு சேருங்கள், தமிழோடு சிறப்பாக வசதியாக வாழுங்கள்” என்றார். சிரித்துக் கொண்டே ஜீவா சொன்னார்: நீங்கள் எல்லாம் என்னை விடத் தமிழை ஆழமாகக் கற்றவர்கள். அறிஞர்கள், கம்பனில் கரை கண்டவர்கள். ஆனாலும், உங்கள் பேச்சில் இல்லாத கவர்ச்சி என் பேச்சில் இருக்கிறதே ஏன்? என்று கூறிவிட்டு " நீங்கள் இலக்கியங்கள் வழியாகக் கம்பனைப் பார்க்கிறீர்கள். நானோ தொழிலாளியின் வழியாக, விவசாயியின் வழியாக, உழைக்கும் வர்க்கத்தின் வழியாக, மார்க்சியத்தின் வழியாகக் கம்பனைப் பார்க்கிறேன்" என்றார்.

ஆம். ஜீவா இலக்கியத்தை தமிழ்ச் சமூகத்தோடு, தமிழ் வாழ்வோடு இணைத்துப் பார்த்தார்.

பொதுவுடைமை பெறவேண்டும்‌- உடன்‌
புரட்சிசெய்திட வேண்டும்‌
வேறென்ன வேண்டும்‌.

புதியஜீவித முறவேண்டும்‌-உறுவதற்கு
பொருளாதிக்கம்‌ அகலவேண்டும்‌
வேறென்ன வேண்டும்‌

- என பொதுவுடமைக் கொள்கைகளுக்கு தமது பாடல் மூலமாக உயிரூட்டிய ஜீவா, தமது எண்ணற்ற கலைப்படைப்புகளின் மூலம் மேடைகளில் மட்டுமல்லாது உழைக்கும் மக்களின் நெஞ்சில் நல்ல இலக்கியவாதியாக, புரட்சிகர கலை இலக்கியவாதியாக வாழ்கிறார்.

(தொடரும்)

- க .இரா. தமிழரசன்