கலைச்செல்வியின் ‘சக்கை’ நாவலை முன் வைத்து...
வாழ்க்கை பிரம்மாண்டமானதுதான். எந்த இலக்கிய வடிவத்துள்ளும் எவரின் வாழ்க்கையையும் அடக்க முடியாதுதான். ஆனாலும் அதை எதிர் கொள்ளும் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு பகுதியை யாவது எதாவது இலக்கிய வடிவத்துடன் இட்டு நிரப்பிக் கொள்கிறான். நவீன இலக்கிய அம்சங்களில் இருத்தலியல் சிந்தனைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அதிலிருந்து நம்பிக்கைக் கீற்றாய் வாழ்க்கையும் தொடர்கிறது. தனது வாழ்க்கை அனுபவங்களோடு பிறரின் வாழ்க்கையை நோக்கும் எழுத்தாளன் அதுவரை அவன் வாழும் சமூகம் கண்ட மதிப்பீடுகள், உணர்வுகள், கலாச்சார அம்சங்கள், தொன்மங்கள், தினசரி நிகழ்வுகள் போன்றவற்றை அதனதன் தளத்தில் எதிர்கொள்கிறான். யதார்த்த முறையில் வாழ்க்கையை எழுதிச் செல்வது எழுத்தாளனுக்கு சுலபமாக இருக்கிறது. நாவல் உலகம் இருபதாம் நூற்றாண்டில் தனித்துவம் பெற்றது. எழுத்தாளர்களின் உலகம் சமூக அமைப்பு. அதில் மனிதர்களின் நிலை முதலியன பற்றி யதார்த்த பார் வையில் சொல்லப்பட வேண்டுமென்ற கோட் பாட்டுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கலைச்செல்வி அந்த யதார்த்த மரபில் கதை சொல் வதையும் வாழ்வை பகிர்ந்து கொள்வதையும் சிறுகதைகள் மூலம் வெளிக்காட்டி வந்தவர். இந்த முதல் நாவலில் தன் அழுத்தமான பதிவுகளைத் தந்திருக்கிறார்.
அவரின் நாவலின் முதல் வரியே இப்படி ஆரம்பிக்கிறது. ‘உள்ளேன் அய்யா. என்று பூமி மட்டத்தின் மேல் ஆங்காங்கே கை உயர்த்தி நிற்கும் உயர உயரமான மலைகள்.’ அப்படித்தான் அவரின் இலக்கிய வெளிப்பாடு உள்ளேன், என்று கையுயர்த்தி திடுமென வெளிப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் கணையாழி, உயிரெழுத்து, அமுதசுரபி, மங்கையர்மலர், காக்கைச் சிறகினிலே, தாமரை, கனவு போன்ற இதழ்களில் வெளி வந்துள்ளன. தினமணிகதிர் போன்ற பத்திரிக்கைகளில் முக்கிய பரிசுகள் பெற்றதன் மூலம் கவனத்துக்குரியவரானார். பல இலக்கிய இதழ் களில் தென்படும் வறட்டுத்தனமான நடையும், இறுக்கமும், வெகுஜன இதழ்களின் மலின வெளிப் பாடும், அவருக்கு உடன்பாடு இல்லாதது போல இரண்டிற்கும் மத்தியிலான வெகு எளிமையான வெளிப்பாடாக வாழ்க்கை அனுபவங்களை முன் வைக்கின்றன அவரின் சிறுகதைகள்.
முதல் நாவலிலேயே விளிம்பு நிலை மக்களில் ஒரு பிரிவினரின் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கலைக் காட்டக் கூடியதாகவும் அவர்கள் வாழ்க்கை விரிவை தொட முயற்சிக்கும் அம்சங்களை விவரிக்கும் விதத்திலும் கவனத்திற்குரியவராகியிருக் கிறார். உணர்ச்சிக்கதைகளின் தொகுப்பாய் நவீன காலப் பிரதிகளாய் அவை அமைந்திருக்கின்றன.
நசிந்து போன விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் நெசவு தொழிலாளர்களின் அடைக்கலமான ஒரு கல்குவாரி தான் இந்நாவலின் மையம். கடுமையான வேலைகள் எல்லோரையும் முழுக்கிழவர்களாக மாற்றும் தொழில். கரிக் குளித்துக் கிடக்கும் குண்டு பல்பு போல் கரிக்கட்டைகளாய் இருப்பவர்களை நவீன தொழில் நுட்பம் கொண்டு வருகிற பிரேக்கர். டிரில்லர். கம்பிரசர். போன்ற இயந்திரங்கள் அங்கிருந்து துரத்துவதை இதில் பதிவு செய்கிறார். தேர்ந்த தொழில்நுட்பத்தின் முன் மனிதன் தோற்றுப் போய் நிற்கிற தவிர்க்க இயலாத நிலைச்சிக்கல் முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பித்து பின்னோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
கல்குவாரி முதலாளியான மாணிக்கம் பெண்களை பாலியல்ரீதியாக சுரண்டுபவன். குறைந்த கூலி கொடுத்து தொழிலாளர்களை கொடுமைப்படுத்துபவன். அவனின் அநியாயங்களுக்கு தண்டனையும் கிடைக்கிறது. மரகதம் என்ற முக்கிய பெண் கதாபாத்திரத்தை சுற்றி வந்து போகிறது மற்ற கதாபாத்திரங்கள். மரகதத்தின் கணவன் சாத்தப்பனின் சாவு மர்மமானது. ராசப்பன் நாவல் முழுக்க இருமிக் கொண்டே இருக்கிறான்.
கல்குவாரியிலிருந்து சொந்த ஊர் போவதற்குள் உயிர் போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவன். உடம்பு முழுக்க வயிறாக இருக்கும் சிறு குழந்தைகள் போல பிரச்சினையே வாழ்வாகியிருக்கும் சாதாரண மக்களை இதில் காண்கிறோம். பூரான் நசுக்கிய காலை செம்மண் நிலத்தில் துடைத்துக்கொண்டு போவதுபோல சிரமங் களையும் மிதித்துக்கொண்டு நகர்கிறவர்கள் இவர்கள்.
சிறுவயது ஞாபகங்களை அசை போட்டுப் பார்ப்பதில் இருக்கும் ரம்மியத்தை ஆசிரியர் அழகாக சொல்கிறார். கல் உடைக்கும் நேரத்தை விட கதை பேசுகிற நேரம் இன்னும் ரம்மியமாகிறது. காதலின் நளினம் மல்லிகா. ரங்கராசு மூலம் இயல்பாய் சொல்லப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத காமம் பூடகமாக மறைந்து நிற்கும் இடங்கள் வெகு நளினமாக சொல்லப்பட்டிருக்கின்றன. (உம்.) 1) சுதாரித்த உருவங்கள் இரண்டாக பிரிந்தன. 2) பாஞ்சாலி, ஒன் பேருக்கு இன்னும் நாலு கொறையுதே. வரட்டுமா ரவைக்கு. கோபம். உணர்ச்சிகரமான கட்டங்களில் வாயிலிருந்து கிளம்பும் வார்த்தைகளை அப்பட்டமாய் கொட்டாமல் வெற்றுப் புள்ளிகளைக் கோர்த்திருப்பதில் இருக்கும் நாசுக்கு அபாரமானது. பத்துப் பக்கங்களுக்கு ஒரு முறை படுக்கையறைக் காட்சிகளை அப்பட்டமாய் விவரிக்கும் நவீன எழுத்தாளர்களின் வியாபார அக் கறைக்கு முன்னால் ஒப்பிட்டால் இந்த நாசுக்கு நிசமாய் புரியும். பெண்கள் பற்றிய சரியான சித்தரிப்புகள் போல் குழந்தைகள் பற்றிய சித்தரிப்புகளும் கவனம் பெறு கின்றன. குழந்தைகளும் முன் தொகை கொடுக்கப்பட்டு கொத்தடிமைத்தனத்திற்கு ஆயத்தப்படுத்தப்படு கிறார்கள். அதை மீறி அவர்கள் பள்ளிக்கு செல்ல நினைப்பது கிண்டலாக்கப்படுகிறது.
கிரசருக்கு அதிகப்படியான சக்கை வேண்டுமென்பதற்காக செய்யப்படும் உத்திகள் போலவே தொழிலாளர்களை கசக்கி வேலை வாங்க பல விஷயங்கள் முதலாளிகளிடம் உள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது. இயந்திரங்கள் துப்பிய சக்கையாக ஊருக்கு திரும்பி போகிற மீள்கதையே இந்நாவல். மிக உருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. (ராசாமலை, விடியல் நகர் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய நகைமுரண்கள்.)
வீட்டில் எதுவுமில்லாத போது அடுத்தவர் வீட்டு சட்டியில் இருப்பதை எடுத்து பகிர்ந்து கொள்வதிலா கட்டும். ஊருக்கு போய் பழைய உறவினர்களைப் பார்த்து பாசத்தால் உருகுவதிலாகட்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியிலாகட்டும். அந்த மக்கள் ஈரம் ததும்பும் மனிதர்களாகவே தென்படுகிறார்கள். கல்லை நட்டு குலசாமி என்று கும்பிட்டு நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
நாவலின் காலம் திரைப்படப் பாடல்கள். வானொலி. மற்றும் அந்தந்த காலத்து செய்திகள் மூலம் உணர்த்தப்படுகிறது. உலகமயமாக்கலால் தொழிலாளி வர்க்கம் இடம் பெயரும் சூழலும் அதன் சிரமங்கள் பற்றியும் பேசுகிற நாவலாக இதைக் கொள்ளலாம்.
உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் பிம்பங்கள் போல் விளிம்பு நிலை மனிதர்களின் சிதைந்த பிம்பங்களை பிரதிபலிப்பதில் தேர்ந்த கையாக கலைச்செல்வி இதில் வெளிப்பட்டிருக்கிறார்.
சக்கை
ஆசிரியர்: கலைச்செல்வி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை:180