களப்பிரர் பல்லவர் காலங்களில் பார்ப்பனர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் சோழர்கள் காலத்தில் பார்ப்பனர்களின் உரிமைகள் பல நீக்கப்பட்டன என்பதோடு அவர்கள் சோழ அரசின் கண்காணிப்புக்கு உரியவர்களாகவும் பலவகையிலும் கட்டுப்படுத்தப் பட்டவர்களாகவும் இருந்தனர். களப்பிரர் பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேயங்கள் முழுக்காணி உரிமையோடு வழங்கப்பட்டதோடு அவை வரி நீக்கிய தான நிலங்களாகவும் வழங்கப்பட்டன. அந்த பிரம்மதேய நிலங்களில் அரசு அதிகாரிகள் நுழையமுடியாது என்ற நிலை இருந்து வந்தது. அந்த பிரம்மதேய நிலங்களை பிறருக்கு கைமாத்தவோ விலைக்கு விற்கவோ முடியும். அரசுக்கு வரியும் கட்ட வேண்டிய தேவையில்லை.
ஆனால் சோழர் காலத்தில் களப்பிரர், பல்லவர் காலத்தில் பிரம்மதேயங்களுக்கு வழங்கப்பட்ட காணி உரிமை என்பது நீக்கப்பட்டது. அவைகளுக்கு வரிவிதிக்கப்பட்டது. அந்த நிலத்தை பிறருக்கு விற்கவோ கைமாற்றிக் கொடுக்கவோ இயலாது. வரிகளை கட்டவில்லை எனில் அந்நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர். பார்ப்பனர்களின் பிரம்மதேய ஊர்களின் சபைக் கூட்டம் என்பது அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் நடத்தப்பட்டது. பிரம்மதேய நிலங்கள் பார்ப்பனர்களுக்கு கரையோலை முறையில்தான் வழங்கப்பட்டது. இந்தக் கரையோலை முறையில் வழங்கப்பட்ட நிலங்கள் 8 ஆண்டுகளுக்குப்பின் வரி செலுத்த வேண்டும், அல்லது 8 ஆண்டுகளுக்குப்பிறகு அந்நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு வேறு நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். கோயில்களில் பார்ப்பனர்கள் நடவடிக்கைகள் அனைத்தும் அரசு அதிகாரிகளால் கண்காணிப்புக்கு உடபடுத்தப்பட்டிருந்தன. பிரம்மதேய நிலங்களும் அரசு அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும். அவற்றின் வரவுசெலவுகள் தணிக்கை செய்யப்பட்டும் வந்தன.
கோயிலின் வரவு செலவுகள் தணிக்கை செய்யப்பட்டு தவறுசெய்த பார்ப்பனர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோயில் நிலங்களை தவறாகப் பயன்படுத்திய பார்ப்பனர்களும், கோயில் பணத்தை கையாடிய பார்ப்பனர்களும், கோயிலில் இருந்த நகை, இன்னபிற அணிகலன்களைத் திருடிய, ஏமாற்றிய பார்ப்பனர்களும் கடுமையான தண்டனைக்கு உள்ளானார்கள். இந்தியாவில் இருந்த வேறு எந்த அரசுகளையும்விட சோழர்காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு மிக அதிக அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்களின் குற்றங்களுக்கான தண்டனைகளில் தனிச்சலுகைகள் எதுவும் வழங்கப் படவில்லை. போர்களில் அதிகளவில் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனர்.
மேலே சொல்லப்பட்ட செய்திகளுக்கு சோழர்காலக் கல்வெட்டுகள் நிறையச் சான்றுகளை வழங்கியுள்ளன. செப்பேடுகள் என்பன அரசு ஆவணங்கள் அல்ல. அதில் உள்ள தமிழ்ப்பகுதி மட்டுமே அரசு ஆவணங்களாக இருந்தன. அதன் சமற்கிருதப்பகுதிகளான புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி, காப்புச்செய்யுள் போன்றவை செப்பேடு வெட்டுபவர்களின் கருத்தைக் கொண்டதாகவே இருந்தது. அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூல ஆவணங்கள் என்பன அரசின் ஆவண ஓலைகள்தான். அவை தமிழில்தான் இருக்கும்.
பார்ப்பனர்களின் பிரம்மதேயங்கள்:
சோழநாட்டின் வளநிலங்களில் பெரும்பகுதி பார்ப்பனர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறான கருத்து. சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப்பெயர்களை வைத்துப் பார்க்கும் பொழுது 250 ஊர்களே பார்ப்பன ஊர்களாக இருந்துள்ளன. இது 19.25 விழுக்காடு தான். கோயில், பிராமணர்கொடை போன்றவை தொடர்பான பதிவுகளே பெரும்பாலும் கல்வெட்டுகளில் இருக்கின்றன. எனவே கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாளர் ஊர்களையும் கணக்கில் கொண்டால் இந்த பார்ப்பன ஊர்களின் விழுக்காட்டு அளவு இன்னும் குறைவாகவே இருக்கும் எனக் கூறுகிறார் மே.து. இராசுகுமார் (1).
இத்தரவு மிகமிக முக்கியமானது. கோயில், பார்ப்பனர் கொடை சார்ந்த பதிவுகள்தான் கல்வெட்டுகளில் பெரும்பாலும் இருக்கின்றன என்பதால் பார்ப்பன ஊர்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் ஆனால் வேளாளர் ஊர்கள் அனைத்தும் இவற்றில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஆகவே வேளாளர் ஊர்களின் எண்ணிக்கை 1300 என்பதைவிட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் அதனை 1500 எனக்கொண்டால்கூட பார்ப்பன ஊர்களின் விழுக்காடு என்பது 17 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். இதிலும் பெரும்பாலான கொடைகள் கோயில்களுக்காக வழங்கப்பட்டவைதான். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டவை என்பது குறைவு. ஆகவே இந்த 17 விழுக்காட்டில் 5 விழுக்காட்டு அளவு அல்லது அதற்கும் குறைவான நிலங்களே பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் சோழர்காலத்தில் 20% ஊர்கள் பார்ப்பன ஊர்கள் எனில் அதில் 5% நிலங்களின் வருமானம் மட்டுமே பார்ப்பனர்களுக்குச் சென்றிருக்கும். மீதி கோயிலுக்கும் கோயில் பணியாளர்களுக்கும் கிடைத்திருக்கும் எனக் கூறுகிறார் மன்னர் மன்னன் (2). ஆகவே பார்ப்பனர்களின் பிரம்மதேயங்களால் பார்ப்பனர்களுக்கு மொத்த நில வருவாயில் 5% வருமானமே கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. சோழர் காலத்தில் மிக அதிக அளவான வளமான நிலங்களை பிரமாணர்கள் தானமாகப்பெற்று அதன் பயனை முழுமையாக அனுபவித்து வந்தனர் என்பது பொய்யான கூற்று என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன.
கோயிலும் சோழ அரசும்:
‘சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்’ என்ற தனது நூலில் மே.து. இராசுகுமார் சோழர் காலப் பார்ப்பனர்களின் நிலைமை குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அந்நூல் அதிக அளவான கல்வெட்டுச் சான்றுகளோடு, ஆழ்ந்த ஆய்வும் நுட்பமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பிற்காலச்சோழர் காலத்தில் சோழர்காலக் கோயில்கள் நிலவுடமை நிறுவனங்களாகவும் மேலாண்மை அமைப்புகளாகவும், நாட்டின் கருவூலங்களாகவும், கலைக்கூடங்களாகவும், கல்விச்சாலைகளாகவும், மருத்துவமனைகளாகவும், கடன் தரும் வங்கிகளாகவும், வேலைதரும் அமைப்புகளாகவும் இருந்தன. மேலும் அவை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி பாசனத்தை விரிவாக்கின. அதன்மூலம் வேளாண் உற்பத்தியைப்பெருக்கும் நிறுவனமாகவும் அவை இருந்தன. இத்துடன் அவை சமயப்பணிகளையும் செய்தன என்கிறார் இராசுகுமார் (3).
இந்தக்கோயில்கள், அவற்றின் நிலங்கள், கோயில் கருவூலங்கள், அவற்றின் பணியாளர்கள், நிலக்குத்தகைதாரர்கள் கோயிலின் பல்வேறு பணிகள் போன்ற பலவும் பார்ப்பனர்களின் கீழ்தான் இயங்கி வந்தன. களப்பிரர் பல்லவர் காலத்தில் அவை முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தன. அன்றைய பார்ப்பன சபைகளும் முழுமையான சுதந்திரத்தோடு செயல்பட்டு வந்தன. அந்த அரசுகள் அவற்றில் தலையிடவில்லை. ஆனால் சோழப்பேரரசு பார்ப்பன சபைகளைக் கண்காணிப்பதிலும், பார்ப்பனர்களின் பணிகளைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதிலும், அவற்றின் நிர்வாகச்செயல்பாடுகளை, வரவு செலவுக் கணக்குகளை மேற்பார்வையிட்டும் ஒழுங்குபடுத்தியும் வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்ப்பனர்களை அவர்களின் செயல்பாடுகளை சோழப் பேரரசு முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில், தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது.
முதல் இராசேந்திரனது 26ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1038) இராசேந்திரசிங்க மூவேந்த வேளாளன் என்ற அதிகாரி நடத்திய விசாரணை குறித்து திருவொற்றியூர்க் கோயில்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த விசாரணை அதிகாரி, கோயிலில் நடைபெறவேண்டிய இறைமைகள் யாவை, அவற்றுக்கு வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியல், அவற்றின் விலை, குற்றத் தண்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயைக்கொண்டு செய்ய வேண்டிய முறைமைகள், கோயில் தேவதான நிலங்களிலிருந்து பெறுகின்ற நெல்லில் இருந்து செய்ய வேண்டிய முறைமைகள் ஆகியன குறித்த தெளிவான முடிவை எடுத்து உத்தரவை வழங்கியுள்ளார் (4).
முதலாம் இராசாதிராசனது 26ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி.1044) கல்வெட்டு அதே திருவொற்றியூர்க் கோயிலில் அதிகாரிகளான வளவன் மூவேந்த வேளான், விக்கிரமசிங்க மூவேந்த வேளான் ஆகியோர் நடத்திய விசாரனையைக் குறிப்பிடுகிறது. அதில் பல்வேறு பொருட்களின் விலை, கோயிலுக்குச் சேர வேண்டிய வரி ஆகியன வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிரிடப்படாத நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்ய, அதிகாரிகள் செய்த ஏற்பாடுகளும் சொல்லப்பட்டுள்ளன (5). அதிகாரிகள் கோயிலின் வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டதோடு, கோயில் நிலங்களின் உற்பத்தியைப் பெருக்கி, அதன்மூலம் கோயிலின் வருமானத்தை அதிகரிக்கவும் பெருமுயற்சி எடுத்துள்ளார்கள்.
கோயில் நிலங்களிலிருந்து வரவேண்டிய குத்தகை வருவாய், நில உற்பத்தியாளர்களிடமிருந்து வரவேண்டிய வரி, தண்டம் போன்ற வருவாய், ஊர், சபை, நகரம் ஆகியவற்றுக்கு கொடுத்த பணத்துக்கான வட்டி ஆகிய வரவினங்கள் முறையாக வந்திருக்கின்றனவா என்பதை கணக்கிட்டதோடு, கோயில் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம், கோயிலில் விளக்கெரித்தல் போன்ற கொடைகளை முறையாகப் பயன்படுத்துவது போன்ற செலவினங்களில் ஒழுங்கீனங்கள் நடைபெறாமல் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் (6).
முதலாம் இராசராசனின் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1003) திருமாநல்லூர் கல்வெட்டு மங்களக்கிழான் காளப்பன் பாழிநக்கன் என்ற அதிகாரி கோயிலில் இருந்த பொண் அணிகளின் எடை அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது சில அணிகள் எடை குறையக்கண்டு அதனைக்கண்டுபிடித்து அறிவித்ததை அறிவிக்கிறது. கோயிலில் இருந்த பொன் அணிகளின் பட்டியல்களும் மிக நுணுக்கமாக எடை, அளவு, வகை போன்ற தகவல்களுடன் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன (7). அவை தொடர்ந்து அதிகாரிகளால் கணிகாணிக்கப்பட்டும் வந்தன. இதில் தவறு செய்தவர்கள் கடுமையான தணடனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
முதலாம் இராசேந்திரனின் தெற்குக்காடு கல்வெட்டு, அரசிடமிருந்து அனுப்பப்பட்ட இராசேந்திர சோழ மூவேந்த வேளாளன் என்ற உயர் அதிகாரி கோயிலில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததோடு சபை உறுப்பினர்களையும் விசாரித்து, கோயிலின் உடமையை 35 ஆண்டுகளாகப் பார்ப்பனர் சபை தவறாக எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்து, பார்ப்பனர் சபைக்கு தண்டம் செலுத்த ஆணையிட்டான் என்பதைத் தெரிவிக்கிறது. அன்று செல்வமும் செல்வாக்கும் கொண்ட பார்ப்பனர்கள் இத்தகைய ஊழல்களையும் ஒழுக்கக்கேடுகளையும் செய்து வந்தனர் (8). சோழ அரசால் அதற்குரிய தண்டனைகளையும் பெற்றனர்.
சிங்கவிணு சதுர்வேதி மங்கலத்தில் தரிசாகக்கிடந்த 60 வேலி கோயில்நிலம் வீரராசேந்திரனது ஆணையினால் பண்படுத்தப்பட்டு அதன் வருவாயைக் கொண்டு கோயிலில் திருவெம்பாவை, தேவாரம், திருப்பதிகங்கள் பாடவும், பூசாரிகள், நடன ஆசிரியர், நடன மகளிர் ஆகியோருக்காக செலவிடவும் பயன்படுத்தப்பட்டதைத் திருவொற்றியூர்க் கல்வெட்டு தெரிவிக்கிறது (9).
கோயிலில் அரசனது பணியாளர்களாக திருவேலைக்காவல், கோயில்நாயகம் போன்ற அதிகாரிகள் கோயில் உடைமைகளையும் வருவாய்களையும் மேற்பார்வை செய்வோராக இருந்தனர். அதுபோக இசுதானத்தாரும், சிரிகார்யம் செய்வோரும் கோயில் வழிபாட்டு முறைமைகளை நிறைவேற்றுவபவராக இருந்தனர். இவர்கள் எல்லாம் இருந்தாலும் அவ்வப்போது ‘பெருந்தனம்’ என்ற பிரிவைச்சேர்ந்த அரசின் உயர் அதிகாரிகள் வந்து யாவற்றையும் நேரிடையாகக் கண்காணித்து வந்துள்ளனர். அரசனுக்கு அடுத்து மிகுந்த அதிகாரங்களையும், உரிமைகளையும் கொண்டிருந்த அவர்கள் கோயில் உடைமைகளின் சிக்கலான மேலாண்மை குறித்துத் தேவையான முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்த ஆணையிட்டு வந்துள்ளனர் (10).
ஆகவே சோழர் காலத்தில் மிகக்கண்டிப்பான முறையில் கோயில் சொத்துக்களும் அதன் வருமானங்களும் பாதுகாக்கப்பட்டதோடு, அதன் வரவு செலவுகளும், பிற நிர்வாகப்பணிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் ஒழுங்குபடுத்தப்பட்டும் வந்துள்ளன. கோயிலுக்கான தேவதானம், பிரம்மதேயம் ஆகியவற்றைக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் முழுமையாக அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, தவறு செய்த பார்ப்பனர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். சொல்லப்போனால் இன்றைய நிலையைவிட அன்று பார்ப்பனர்களின் மேலான சோழ அரசின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருந்தது எனலாம்.
அரசு ஆவணங்களும் ஆவணக்களரிகளும்:
சங்ககாலம் முதலே அரசு ஆணகள் என்பன ஓலைகள் மூலமே வழங்கப்பட்டன. இந்த ஆவணங்கள் ஆவணக்களரிகளில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டன. மத்திய அரசிலும், நாட்டார் அவையிலும், நகரவைகளிலும், சில ஊரவைகளிலும் இந்த அரசின் ஆவண ஓலைகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டன. இவைகளில் சில கோவில்களிலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. முதலாம் குலோத்துங்கனின் 36ஆம் ஆட்சியாண்டு திருக்கோவிலூர் (கி.பி.1106) கல்வெட்டு, பழைய ஓலை ஆவணங்கள் கரையானால் அரிக்கப்பட்டு வந்ததால் அவற்றைப் புதிய ஓலை ஆவணங்களாக உருவாக்கியதைத் தெரிவிக்கிறது. இந்த ஓலை ஆவணங்கள் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 23ஆம் ஆட்சியாண்டில் கொடுத்த கொடைகள் குறித்துத் தெரிவிப்பதால் பல ஆண்டுகளாக தகவல்கள் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என அறிய முடிகிறது. அது போன்றே முதல் குலோத்துங்கனின் 39ஆம் ஆட்சியாண்டின் (கி.பி.1109) தென்திருப்பேரைக் கல்வெட்டு கோயில் நிலங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ‘கையீடு தவறி விட்டதால் வேறு ஒரு புதிய ‘கையீடு’ சபையினரால் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது (11).
கரையான் அரித்தும், ‘கையீடு’ தொலைந்த பின்னரும் புதிய ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்பதன்மூலம் இவற்றின் படிகள் வேறு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன என அறிய முடிகிறது. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள், அறக்கட்டளைகள் இன்னபிற கோயில் சார்ந்த தகவல்கள் குறித்து அரசனிடம் இருந்த பதிவேடு போக கோயில் கணக்கனிடமும் பதிவுகள் இருந்தன. நாட்டார் ஆவணக் களரியிலும் பதிவேடுகள் பாதுகாக்கப்பட்டன. அதுபோக கோயில் கல்வெட்டுகளிலும் வெட்டப்பட்டன. பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் தான் தவறுகளும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப்போழுதே ஒழுங்குபடுத்தப்பட்டன.
கோயில் குற்றங்களில் பார்ப்பனர்கள்:
முதலாம் இராசராசனின் 7ஆம் ஆட்சியாண்டின் (கி.பி.991) கோவிந்தபுத்தூர்க் கல்வெட்டு கோயில் அதிகாரிகளின் பொறுப்பாளர்களுக்கிருந்த அதிகாரங்களை விவரிக்கிறது. பெருந்தனம் என்ற உயர் அதிகாரியான அம்பலவன் பழுவூர்நக்கன் குவல்லாலன் என்பவன் கோயிலுக்கு ஒரு பொருப்பாளரை ஏற்பாடு செய்து அவனுக்குக் கோயில் பணியாளர்கள் மீது முழு அளவில் கட்டுப்பாடு இருக்கும் வகையில் பல அதிகாரங்களைத் தந்தான். கோயில் பொறுப்பாளர்களை எதிர்க்கும் வேளாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்யவும், அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் 25 கழஞ்சு தண்டம் போடவும் வழி ஏற்படுத்தப்பட்டது (12).
ஊட்டத்தூரில் உள்ள விக்கிரம சோழனின் 13ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி.1131) கல்வெட்டு கோயிலில் செய்த குற்றத்துக்காக பார்ப்பனன் ஒருவனுக்கு 20 காசு தண்டம் போட்டதைத் தெரிவிக்கிறது. இதை அவன் செலுத்தாததால் சிரிகந்த சதுர்வேதிமங்கலத்தில் உள்ள அவனது நிலம் ஊர்ச்சபையால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதேபோன்று ஊட்டத்தூர்க் கோவிலில் இறைவிக்குரிய அணிகலன்களைக் களவாடிய பார்ப்பனனது நிலத்தைக் கோயிலுக்குத் தருமாறு அவன் வற்புறுத்தப்பட்டதை மூன்றாம் குலோத்துங்கனின் 21ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி.1199) கல்வெட்டு கூறுகிறது சிவபுரத்தில் உள்ள மூன்றாம் இராசராசனின் 23ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 1239) கல்வெட்டு, இரண்டு சிவபார்ப்பனர்கள் கோயிலின் அணி, பணம் ஆகியவற்றை எடுத்துச்சென்று அவர்களது காமக்கிழத்தியிடம் கொடுத்து விட்டனர். இதைக்கேட்கச் சென்றவனிடம் முறை தவறி நடந்துகொண்டனர். மேலும் அரசாணையை ஏற்க மறுத்ததோடு அரசன் அனுப்பிய ஆட்களையும் அடித்துத் துன்புறுத்தினர். இச்செயல் இராசத் துரோகமாகவும் சிவத் துரோகமாகவும் கருதப்பட்டு அவர்களது உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன (13).
இரண்டாம் இராசராசனின் ஆறாம் ஆட்சியாண்டு (கி.பி.1152) பந்தலூர்க் கல்வெட்டு கோயில் தொடர்பான குற்றங்களைச் செய்தவருக்கு தண்டனை தரும் உரிமையை கோயிலில் உள்ள பஞ்சாச்சாரியார், தேவகன்மிகள், மகேசுவரர்கள், சிரிகரணம் செய்வோர் ஆகியோருக்கு மாற்றிக்கொடுத்ததைக் கூறுகிறது. கோயில் உடமைகள் தொடர்பான தவறுகளைச்செய்யும் சிவபார்ப்பனர்கள், கோயில் நிலத்திற்குரிய மேல்வாரத்தை முறையாகத் தராத குத்தகையாளர்கள், பிற குற்றங்களைச்செய்தோர் ஆகிய அனைவரையும் தண்டிக்க இந்த ஆணை வழிவகுக்கிறது. மேலும் கோயிலில் இருந்த பொன்னைக் களவாடிய சிவபார்ப்பனர்களும் அவர்களது வழித்தோன்றங்களும் கோயிலுக்குள் எப்பொழுதும் எக்காலத்தும் நுழையக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. கோயில்களுக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிக்கும் பொறுப்பு ஊர் அவையிடமும் சிலசமயம் ஒப்படைக்கப்பட்டிருந்தது (14).
கோயில்களில் அவ்வப்போது ஊழல்களும், ஒழுக்கக்கேடுகளும் களவுகளும் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. இவற்றுக்குக் கோயில் பொறுப்புகளில் இருந்த பார்ப்பனர்களே பெரும்பாலும் காரணிகளாக இருந்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் மே.து. இராசுக்குமார் (15). சோழர் காலத்திற்கு முந்தைய பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களைக் கண்காணிப்பதற்கும், அவர்களின் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுப்பதற்கும் என எந்த முறையும் இல்லை என்பதோடு முழு உரிமை கொண்டவர்களாக பார்ப்பனர்கள் இருந்ததால் இதுபோன்ற குற்றங்களை காலங்காலமாக அவர்கள் செய்துவந்துள்ளனர். சோழர்காலத்தில்தான் இவை தடுக்கப்பட்டன.
பொதுவாகச் சோழர் காலத்தில் கோயில் தொடர்பான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. அதுபோன்றே கோயில் உடமைகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்திய அரசுகளில் பிறஅரசுகளைவிட சோழர்காலத்தில்தான் மிக அதிக அளவான, கடுமையான தண்டனைகள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டுக் கோயிலில் பார்ப்பனர்கள்:
பழந்தமிழ்நாட்டில் சங்ககாலம் என்பது கி.மு. 750-50 வரையான காலகட்டம். இக்காலகட்டத்தில் நகர, நகர்மைய அரசுகள் தான் இருந்தன. பொதுவாக நகர அரசுகள் என்பன பூசாரிகளை இல்லாது ஒழித்துவிடும் என்பதால் இக்காலகட்டத்தில் பழந்தமிழ்நாட்டில் பூசாரிகள் இருக்கவில்லை. சங்ககால அந்தணர்கள் பார்ப்பனர்கள் அல்ல. அன்று அந்தணர்கள் எனப்படும் சான்றோர்கள் உயர்ந்தோர் எனப்படும் இரண்டாம் வகுப்பில் இருக்க, பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனர்கள் எனப்படும் கீழ்மக்கள், நான்காம் வகுப்பில் இருந்தனர். அதுபோன்றே சங்ககாலத்தில் நடந்த வேள்விகள் என்பன வட இந்திய மீமாம்ச யாகங்கள் (வேள்விகள்) அல்ல. இந்த வேள்வி என்பது தொல்காப்பியர் தனது 140 புறத்துறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ‘வேள்விநிலை’ என்ற பாடாண்திணையில் உள்ள ஒரு புறத்திணை. கால்நடைகளை புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் இன்ன பிறருக்கும் இலவயமாக வழங்கி அனைவருக்கும் உணவு அளிக்கும் ஒரு அரச நிகழ்வுதான் இந்த வேள்விநிலை (16). அதுவே சங்க இலக்கியங்களில் வேள்வி எனப்படுகிறது. ஆகவே சங்ககாலத்தில் பார்ப்பனர்கள் மூலம் யாகங்களும் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு நில தானங்களும் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் வந்த சங்கம் மருவிய காலமான (கி.மு.50 – கி.பி.250) பேரரசுக் காலத்திலும் பழந்தமிழ்நாட்டில் யாகங்களோ, நிலதானங்களோ வழங்கப்படவில்லை.
சங்கம் மருவிய காலத்தில் (கி.மு.50-கி.பி.250) வழிபடும் இடங்களை ஒட்டி ஓவியம் போன்ற நுண்கலைகள் பேணப்பட்டு, ஆடல்-பாடல் போன்ற போட்டிகள் நடைபெறும் களங்களாக கோயில்கள் விரிவடைந்து உயர்நிலையை எய்திய பிறகும் கூட அங்கு பூசாரிகள் இருக்கவில்லை. என்பதைப் பரிபாடலும், திருமுருகாற்றுப்படையும் உறுதி செய்கின்றன. கோயிலுக்கு வந்த அந்தணர்கள் இறையை வழிபட வந்தவர்கள் எனவும் அவர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை எனவும் அவை தெரிவிக்கின்றன. இதனால்தான் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கு முன் வரை ஆரியவயப்பட்ட கோயில்கள் எதுவும் பழந்தமிழ்நாட்டில் இருக்கவில்லை என பி.டி. சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் முடிவுக்கு வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்நிலையே நீடித்தது என்று கூற முடியும். எனவே இக்காலம் வரை பழந்தமிழகக் கோயில்களில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருந்திருக்க முடியாது என மே.து. இராசுக்குமார் கூறுகிறார் (17).
அந்தணர்கள் தமிழ்ச் சான்றோர்கள், அவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இருவரும் ஒருவரல்ல, வேறுபட்டவர்கள். உண்மையில் பல்லவர்கள் தான் தமிழகக் கோயில்களில் பார்ப்பனர்களைப் பூசாரிகளாக நியமித்து அவர்களுக்கு தமிழகக் கோயில்களில் சமற்கிருத மொழியில் வழிபாடு நடத்தும் உரிமையை வழங்கியவர்கள். அதுபோன்றே களப்பிரர்களும் பல்லவர்களும் தான் முதல்முதலாக பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் எனப்படும் நிலதானங்களை, கோயில்களுக்கான தேவதானங்களை வரிநீக்கி முழுக்காணி உரிமையோடு வழங்கியவர்கள். ஆனால் சோழர் காலத்தில், இந்தக் களப்பிரர், பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேயங்களின் காணியுரிமை என்பது முழுமையாக நீக்கப்பட்டு பிரம்மதேய நிலங்களுக்கு வரியும் விதிக்கப்பட்டது.
பழங்காலக் கோயில்கள் நிலம் போன்ற உடைமைகளைப் பெற்றிருக்கவில்லை. வேறு எந்த வகையான பெருமதிப்புக்குரிய சொத்துக்களையும் அவை கொண்டிருக்கவில்லை. களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் அதற்கான முதல் விதைகள் போடப்பட்டன. மக்களுக்கும் இறைவனுக்கும் இடையே பூசாரிகள் என்ற இடைத்தரகர்களாக பார்ப்பனர்கள், அவர்கள் காலத்தில்தான் முதல் முதலாகத் தமிழகக் கோயில்களில் நுழைந்தனர். பல்லவ அரசுதான் முதலில் கோயிலில் வழிபாடு செய்யும் உரிமையை பார்ப்பனர்களுக்கு வழங்கியது (18).
கி.பி. 250 வாக்கில் களப்பிரர் படையெடுப்பின் போது நடைபெற்ற பேரழிவும், அதன்பின் களப்பிரர்களின் தொடக்க காலத்தில் நடை பெற்ற கொடுங்கோன்மை ஆட்சியும் காரணமாகத் தமிழ்ச் சமூகம் ஒரு பிற்போக்கான பின்தங்கிய சமயம் சார்ந்த ஒரு கிராமச் சமூகமாக ஆகிப்போனது. கி.பி. 350க்குப்பிறகு நிலைமை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. வேளாண்மையும், தொழிலும் வணிகமும் சிறிது சிறிதாக வளரத்தொடங்கின. களப்பிரர் படையெடுப்பின்போது தீ வைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்ட தமிழக நகரங்களும் வளரத்தொடங்கின. களப்பிரர்கள் நாளடைவில் தமிழர்களோடு ஐக்கியமாகி தமிழர்களாகவே ஆகிப்போனார்கள். எனினும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி என்பது சமயம் சார்ந்ததாகவும், கிராமம் சார்ந்ததாகவும், பழைய அறிவியல் தொழில்நுட்பங்களை இழந்தும் மறந்தும் போனதாகவும் தான் இருந்தது. கைவினைஞர்களும் தொழில்நுட்பவல்லுநர்களும் இல்லாது போயினர். இந்த நிலையில் பார்ப்பனர்களும் சமற்கிருதமயமாக்கமும் அரசின் ஆதரவோடு வளர்ந்து வந்தன. தமிழில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் சமற்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு, மூலத் தமிழ் நூல்கள் கவனிப்பார் இல்லாது அழிய விடப்பட்டன. அதன் காரணமாக சமற்கிருதம் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக ஆகிப்போனது. கீழ் மக்களின் மொழியாகக் கருதப்பட்ட தமிழ் நாளடைவில் அதற்குத் தகுதியற்ற மொழியாக ஆகியது (19).
தமிழ் அறிவர்கள், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தையும் சமற்கிருதத்தில் எழுதத் தொடங்கினர். புத்தமத அளவையியல் அறிஞரான தின்னாகர் போன்றவர்கள் தமிழர்களாக இருந்த போதும் தமது நூல்களை சமற்கிருதத்தில் தான் எழுதினர் (20). பார்ப்பனர்களும் சமற்கிருதமும் செல்வாக்கு பெற்றதால் நாளடைவில் பல்லவ அரசின் ஆதரவால் பார்ப்பனர்கள் கோயில்களில் வழிபாடு நடத்தும் உரிமையைப் பெற்றதோடு, வழிபாட்டை சமற்கிருதத்தில் நடத்தத் தொடங்கினர். பாண்டியர் பகுதிகளில் இருந்த கோவில்களில் சித்தர்வழி வந்த பண்டாரங்கள்தான் பூசாரிகளாக இருந்து தமிழில் வழிபாடு செய்துவந்தனர். ஆனால் பல்லவர்கள் ஆண்ட சோழர் பகுதியில் தான் சிறிது சிறிதாக பார்ப்பனர்கள் கோயில்களில் சமற்கிருதத்தில் வழிபாடு செய்யத் தொடங்கினர். மே.து. இராசுக்குமார் கூறுவதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் இவை ஆங்காங்கு நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும்.
பல்லவர் காலத்தில்தான் கோயில்கள் பண்டைய முறையில் மரம், செங்கல் சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு கட்டப்படாமல் கல்லால் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் போன்ற கற்கோவில்கள் கட்டப்பட்டன (21). இப்படிப் புதிதாகப் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கற்கோவில்களில்தான் முதலில் பார்ப்பனர்கள் பூசாரிகளாக ஆகி சமற்கிருத வழிபாட்டைத் தொடங்கி இருக்கலாம். இக்கோயில்களுக்கு நிறையத் தேவதானங்களும், பார்ப்பனர்களுக்கு நிறைய பிரம்மதேயங்களும் வழங்கப்பட்டிருக்கலாம். கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டில் இருந்தே தேவதானங்களும் பிரம்மதேயங்களும் வழங்குவதை களப்பிரர், பல்லவர் இருவரும் செய்யத் தொடங்கி இருந்தனர்.
கற்கோவில்கள் உருவாகத்தொடங்கி கோவில் என்பது நாளடைவில் நிறைய நிலங்களைக் கொண்ட, பணம், நகை போன்ற வேறுவகையான சொத்துக்களை உடைய ஒரு நிலவுடமை நிறுவனமாக உருவாகத் தொடங்கியது. கோயில்கள் கற்கோயில்களாகவும், பல்வேறு வகைப்பட்ட சொத்துக்களை உடைய நிலவுடமை நிறுவனமாகவும் ஆகிய போதுதான் பார்ப்பனர்களும் கோவில்களில் பூசாரிகளாக நுழைந்து, பொது மக்களுக்குப் புரியாத சமற்கிருத வழிபாடுகளை நடத்தி பல்லவர், களப்பிரர் ஆதரவோடு கோயில்களை அதன் உடமைகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
அதற்குக் காரணம் யாதெனில் புதிதாக அரசர்களாக உருவாகிய களப்பிரர் பல்லவர் போன்றவர்களுக்கு பார்ப்பனர்களின் அங்கீகாரம் தேவைப்பட்டது. இந்தியாவில் சத்திரியர்களே இல்லை எனவும் தங்களின் வேதவகைப்பட்ட யாகங்களின் மூலமும் இன்ன பிற வேதச் சடங்குகளின் மூலமும் தான் ஒருவரை சத்திரியராக்க, அரச பரம்பரையினராக்க முடியும் எனவும் பார்ப்பனர்கள் அனைவரையும் தங்கள் கட்டுக்கதைகள் மூலம் நம்ப வைத்திருந்தனர். தங்களின் வேதவகைப்பட்ட சடங்குகள், யாகங்கள் மூலம்தான் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று புதியவர்கள் அரச பரம்பரையினராக ஆகும் தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தையும் பரப்பி அதனை அனைவரையும் நம்ப வைத்திருந்தனர். அதன் காரணமாகத்தான் பொது ஆண்டுக்குப்பின் புதிதாக வந்த வட இந்திய அரசர்களும், தமிழ்நாட்டில் இருந்த களப்பிரர் பல்லவர் போன்றோர்களும் பார்ப்பனர்களுக்கு முழு ஆதரவை வழங்கினர். அதன் மூலம் பார்ப்பனர்கள் நிலபுலங்களும் செல்வ வளமும் அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவர்களாக இவர்கள் ஆட்சிக்காலத்தில் மாற முடிந்தது (22).
ஆனால் சோழர்களோ, பாண்டியர்களோ பார்ப்பனர்களின் இதுபோன்ற கட்டுக் கதைகளை ஏற்காமல் பார்ப்பனர்களை தங்கள் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் வைத்திருந்தனர். போரின்போது பார்ப்பனர்களைப் பெருமளவில் கொன்றனர். இந்தியாவிலேயே தமிழ் மன்னர்கள்தான் முக்கியமாகச் சோழ மன்னர்கள் தான் பார்ப்பனர்களுக்கு மிக அதிக அளவில் கடுமையான தண்டனைகளை வழங்கியவர்களாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்கியவர்களாகவும், அவர்களின் கோயில், பிரம்மதேயம் பார்ப்பனசபை ஆகிய அனைத்தையும் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தொடர்ந்து கண்காணித்து வந்தவர்களாகவும், அவர்களின் குற்றங்களைக் கண்டறிந்து அக்குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கியவர்களாகவும், போரின் போது அவர்களைத் தயவு தாட்சயமின்றி கொலை செய்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
சோழ அரச அதிகாரிகளின் கண்காணிப்பில் பார்ப்பனர்கள்:
நாடுவகை செய்வோர் (நாடு கூறு செய்வோர்), நாடு கண்காணி நாயகம் ஆகிய அதிகாரிகளின் செயல்பாடுகள் யாவும் கோயில், தேவதானம் போன்ற பொது அமைப்புகள் தொடர்பானவையாகவே இருந்திருக்கின்றன என்று பேராசிரியர் ஒய்.சுப்பராயலும் தனது ஆய்வில் நிறுவியுள்ளார். அத்துடன் பார்ப்பனர்களின் பிரம்மதேயச் சபைக்கூட்டத்திலும் நாடுவகை அதிகாரி வீற்றிருந்ததை அவர் குறிப்பிடுகிறார். பிரம்மதேயச் சபையில் உறுப்பினராக இருப்பதற்கும் வாரியம் போன்ற பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவும் தகுதிகளை இறுதி செய்து அரசனே நேரிடையாக ஆணை வெளியிட்டுள்ளான். அதில் சபையின் செயல்முறைகளும் விரிவாக வகுத்தளிக்கப்பட்டன. உத்தரமேரூர்ச் சபையின் கூட்டங்களில் அரசன் சார்பில் தத்தனூர் மூவேந்த வேளாளனும், சோமாசிப்பெருமாளும் போன்ற அரச அதிகாரிகள் உடன் இருந்து விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன
இவ்வாறு பார்ப்பனர் சபையின் உறுப்பினர் தகுதி, செயல்முறைகள் ஆகியவை அரசர்களது ஆணைகளுக்கு உட்பட்டோ அல்லது அரச அதிகாரிகளின் வழிகாட்டுதலிலோதான் நடத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான பெரும்பாலான ஆவணங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. இருந்தாலும் தனக்கே உரிய நுணுக்கத்துடன் நீலகண்ட சாத்திரியார், பார்ப்பன சபைகளின் இத்தகைய நிலைமைகளை வேறு வகையாகத் திரித்துக்காட்ட முயற்சிக்கிறார்….. பார்ப்பன சபைகள் மன்னனது ஆணைக்கிணங்கவே விதிகளை வகுத்துக்கொண்டிருந்தன என்ற உண்மையை அவர் ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை (23).
முக்கிய முடிவுகளை பார்ப்பன சபை எடுத்த போதெல்லாம் அரசனது அதிகாரிகள் சபைக்கூட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவற்றை மேற்பார்வை செய்து வந்துள்ளதோடு, சபைக்கு வழிகாட்டலையும் வழங்கி வந்துள்ளார்கள். வேளாண் அதிகாரிகளே பெரும்பாலும் இப்பணிகளைச் செய்ய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரார், நாட்டார் அவைகளின் உள்ளாட்சிக் கூட்டங்களில் அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவோ, அவற்றை மேற்பார்வையிடவோ இல்லை. வணிகர்களின் நகர அவையிலும் அரசு தலையிடவில்லை. இவர்கள் தங்கள் கூட்டங்களுக்கான செயல்முறைகளை தாங்களே உருவாக்கிக்கொண்டார்கள். அதுபோன்றே அவற்றின் உடமைகள் குறித்தும் எந்தக் கண்காணிப்பும் தணிக்கையும் இன்னபிறவும் இருக்கவில்லை. ஆனால் வரிவருவாய் தொடர்பான கண்காணிப்பு என்பது எல்லா இடங்களிலும் இருந்துள்ளது.
வேளாளர்கள் அல்லது இன்னபிற சமூகத்தைச் சேர்ந்த (பழங்குடிகள், மலைவாழ்மக்கள், நந்தமான்கள், முதலிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு சமூகத்தவர்) அதிகாரிகளும், படைத்தலைவர்களும்கூட அரசனிடமிருந்து நிலத்தை பெற்றிருந்தனர். ஆனால் சோழ அரசு இவற்றைக் கண்காணிக்கவோ, மேற்பார்வை செய்யவோ இல்லை. பார்ப்பன சபைகளுக்கும், பார்ப்பனர்களின் பிரம்மதேய நிலங்களுக்கும், அவர்கள் பொறுப்பில் இருந்த கோயிலின் நிலம் முதலான உடமைகளுக்கும் தான் இந்த கண்காணிப்பும், தணிக்கையும் மேற்பார்வையும் தொடந்து இருந்து வந்தது. இதற்குப் பல்வேறு காரணங்களை மே.து. இராசுக்குமார் கூறுகிறார். ஆனால் அவற்றை முழுமையாக ஏற்க இயலவில்லை (24).
களப்பிரர், பல்லவர் காலத்திலிருந்து (கி.பி.250-850), தமிழ்நாட்டில் 500 வருடங்களுக்கு மேலாக பார்ப்பனர்கள் நிறைய பிரம்மதேயங்களையும், கோயிலுக்கான தேவதானங்களயும் முழுமையான நில உரிமையோடும் வரிநீக்கியும் பெற்று நிறைய நிலபுலங்களையும், நிறைய செல்வ வளங்களையும் கொண்டிருந்ததோடு சமூகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசியல் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருந்து வந்தனர். இவற்றைத் தமிழ் மன்னர்கள் முக்கியமாக சோழர்கள் விரும்பவில்லை. அதனால்தான் களப்பிரர் பல்லவர் காலத்தில் முழு நில உரிமையோடு வழங்கபட்ட பிரம்ம தேயங்களின் முழு நில உரிமை என்பதை நீக்கி அவைகளுக்கு வரியும் விதித்தனர். கரையோலை முறை மூலம் அவர்களுக்குத் தரப்பட்ட நிலங்களை எடுத்துக் கொள்ளவும் வேறு நிலங்களை வழங்குவுதுமான புதிய முறைகளைப் புகுத்தினர். இவ்விதமாக அவர்கள் பார்ப்பனர்களின் செல்வாக்கை, அதிகாரத்தை, அவர்களின் பொருளாதார வலிமையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.
பராந்தக சோழனின் 12ஆம், 14ஆம் ஆட்சியாண்டுகளில்தான் உத்தரமேரூர் கல்வட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில்தான் பிரம்மதேய சபைக்குக் குடவோலை முறை மூலம் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் எனவும் ஊழல்களில் ஈடுபட்டோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் போன்ற விதிகள் கொண்டுவரப்பட்டன. இந்தவிதிகள் பராந்தக சோழனால் உத்தரவிடப்பட்டு கொண்டுவரப்பட்டன. மேலும் சோழர்காலத்தில் நாட்டார் அவைகளில் பார்ப்பனர்கள் நியமிக்கப்படவில்லை. பராந்தகச்சோழன்தான் உதயேந்திரத்தில் பார்ப்பனர்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் முறையைத் தமிழகத்தில் முதல்முதலில் கொண்டுவந்தான் எனலாம். மேலும் அப்போது பொய்க்கணக்கு காட்டிய பார்ப்பனர்களும், அவர்களுக்குத் ஆதரவாக இருந்த சபைகளும் தண்டிக்கப்பட்டன. அதனால்தான் அதன்பின் ஆட்சிக்கு வந்த சுந்தரசோழனின் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் ஓம்படைக் கிளவிகளில் பார்ப்பனர்களின் சொத்துப்பறிப்பு, அதிகாரப்பறிப்பு ஆகியவை தொடரபான அச்சங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன என்கிறார் மன்னர்மன்னன் (25).
அந்த அடைப்படையில்தான் முதல் ஆதித்த கரிகாலன், காஞ்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டை மண்டலத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தபோது பார்ப்பனர்களின் செல்வாக்கை, அதிகாரத்தை, அவர்களின் பொருளாதார வலிமையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினான். காஞ்சியில் இருந்த பார்ப்பனர்களது வேதப்பயிற்சியோடு போர்ப் பயிற்சிகளையும் வழங்கிவந்த கடிகைகளின் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை ஒடுக்கினான். பார்ப்பனர்களின் குற்றங்களுக்கு தனிச் சலுகைகள் காட்டாது அவைகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினான். அவனது பார்ப்பனர்களுக்கு எதிரான இத்தகைய செயல்கள், அவனை அவர்கள் படுகொலை செய்வதற்கு ஒரு காரணியாகவும் அமைந்தது (26). அவனுக்குப்பின் வந்த இராசராசனோ அவர்களது பிரம்மதேய நிலங்களை, அவர்களது பார்ப்பனச் சபைகளை, அவர்களது பொறுப்பில் இருந்த கோவிலின் உடைமைகளை முழுமையாகக் கண்காணிக்கவும், அவற்றின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யவும், மேற்பார்வையிடவும் உரிய அதிகாரிகளை நியமித்ததோடு, அவற்றில் நடந்த குற்றங்களை, ஊழல்களை, ஒழுக்கக்கேடுகளை, களவாடல்களை கண்டுபிடித்து அதற்குக் காரணமான பார்ப்பனர்களின் மீது கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏற்பாடு செய்தான். இராசராசனின் பார்ப்பனர்களின் மீதான இந்த நிர்வாக முறைமைகள் அனைத்தும் முழுமையாகச் சோழர் ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு, பார்ப்பனர்கள் பலவகையிலும் கணிகாணிப்புக்கும், தணிக்கைக்கும் மேற்பார்வைக்கும் உட்படுத்தப்பட்டார்கள்.
கி.பி. 892இல் கோயிலுக்குக்கொடுத்த கொடையை கி.பி. 911 வரை பார்ப்பனர்களது புதுப்பாக்கத்துச்சபையினர் பதிவேடுகளில் எழுதவில்லை என்பது கண்டறியப்பட்டு முறைப்படுத்தப்பட்டதை திருமால்புரக்கல்வெட்டு கூறுகிறது. அதுபோன்றே கி.பி. 943இல் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்த காணி வருவாய் கி.பி. 985 வரை கோயிலுக்குக் கொடுக்கப்படவில்லை. இதற்குப் பொறுப்பேற்றிருந்த அதே புதுப்பாக்கத்துப் பார்ப்பனச் சபையினர் 42 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தனர் என்பது கண்டறியப்பட்டு கோயில் அறங்காவலர்கள் மன்னனிடம் முறையிட்டு கோயிலுக்குச் சேர வேண்டிய நெல், பொன் போன்ற கொடைகளை முறைப்படி கோயிலுக்குப் பெற்றுத்தந்தனர். மேலும் இந்தத் தவறுகளுக்குக் காரணமான புதுப்பாக்கத்துப் பார்ப்பன சபையினர் தண்டம் கட்ட வைக்கப்பட்டனர் (27).
கோயில்களிலும், பார்ப்பனரின் சதுர்வேதி மங்கலச் சபைகளிலும் பார்ப்பனர் தொடர்பான கொடைகளிலும், மன்னர்களின் மேற்பார்வை என்பதே வேளாளர்களின் மேல்நிலையையும் ஆதிக்கத்தையும் காட்டுவதாகவே அமைகின்றன. நிலவுடமை கொண்ட வேளாளர், உழைக்கும் மக்களை ஒருவகையில் கட்டுக்குள வைத்திருந்ததைப்போலவே, வேறுவகையில் பார்ப்பனர்களைத் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதையே இவை வெளிப்படுத்துகின்றன எனக் கூறுகிறார் மே.து. இராசுதுரை (28). இங்கு வேளாளர் என்பது நிலவுடமை பெற்றிருந்த பார்ப்பனர்தவிர .பிற அனைத்து வகையான சமூகத்தினரையும் குறிக்கும். அதில் சோழர் காலத்தில் புதிதாக நிலவுடமையாளர்களான பழங்குடிகள், மலைவாழ்மக்கள், நந்தமான்கள், முதலிகள், பள்ளிகள், இன்னபிற பல்வேறு சமூகத்தைச்சேர்ந்த படைத்தலைவர்கள் போன்ற அனைவரும் இதில் அடங்குவர்.
சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்கு முழு உரிமையுடன் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் உற்பத்திப்பயனை பயன்படுத்த மட்டுமே வழங்கப்பட்டன. அவை பொதுநிலங்கள்போல் என்னத் தக்கனவாகவே இருந்தன. அவர்களது பணிகளுக்குக்காகத் தரப்பட்டனவாகவே அவை காட்டப்பட்டுள்ளன. முதலாம் இராசேந்திரனது பாகூர்க்கல்வெட்டு இதை உறுதிப்படுத்துகிறது. அதில் சோழச்சதுர்வேதி மங்களம் என்ற ஊரில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் தனித்தனியாக வழங்கப்படாமல் அவை அவர்களுக்குப் பொதுவாகவே வழங்கப்பட்டிருந்தன. அவை ‘கரையோலை’ என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதன்படி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்மாற்றி வேறு நிலம் ஒதுக்கித்தரப்படும். அந்த நிலத்தில் அவர்களுக்கு முழு உரிமை இல்லை என்பதை நிறுவ இம்முறை பயன்படுத்தபட்டது (29).
களப்பிரர், பல்லவர், சோழர் கால பிரம்மதேயங்கள்:
பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்கள் என்ற பெயரில் நிலங்களை வழங்குவது என்பது வரலாற்றுச் சான்றுகளின்படி களப்பிரர்காலம் முதல்தான் தமிழகத்தில் புகுத்தப்பட்டது. களப்பிரர்காலத்தில் பிரம்மதேயமாகக் கொடுக்கப்பட்ட ஒரு ஊரை (நிலத்தை) விற்கும் உரிமை பார்ப்பனர்களுக்கு இருந்தது. பிரம்மதேய நிலங்கள் தலைமுறை தலைமுறையாக அவர்களின் நிலங்களாக இருந்தன. அதனால் நில உரிமையாளர்களைக் குறிப்பதுபோல் அவர்களை பிரம்மதேயக் கிழார்கள் என பூலாங் குரிச்சிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலும் அவ்வாறுதான் பிரம்மதேயங்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. ‘தமிழக வரலாறு - பண்பாடும் மக்களும்’ என்ற நூலில் கே.கே. பிள்ளை அதுகுறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
‘பல்லவர் காலத்தில் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கும் முன் அந்த நிலத்தின் சொந்தக்காரர் தனது உரிமையை பார்ப்பனர்களுக்கு மாற்றித்தரவேண்டும். அரசனும் தனது வரிவிதிப்பு உரிமையை தானமளித்த நிலத்திற்கு இனிமேல் பொருந்தாது எனவிட்டுத்தரவேண்டும். அந்த நிலத்தின் காணி உரிமை (குத்தகை உரிமை) யாருக்கேனும் இருந்தால் அவர்களும் அந்த உரிமையை விட்டுத்தரவேண்டும். பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலத்தில் அரசு அதிகாரிகள் நுழையவே கூடாது. பிரம்மதேயமாக நிலம் வழங்கப்பட்ட செய்தியை அறிக்கை ஓலை எழுதி ஊர்மக்கள் தங்கள் தலை மீது வைத்து வெளியிட வேண்டும். பிரம்மதேய நிர்வாகத்தில் பார்ப்பனர் மட்டுமே இருக்கவேண்டும்’ என்கிறார் (30).
ஆனால் சோழர்காலத்தில் நிலத்தின் முழு உரிமை பார்ப்பனர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதோடு வரியும் விதிக்கப்பட்டது. சோழர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்களில் 95% நிலங்கள் குடிநீக்கா பிரம்மதேயங்கள்தான். அதாவது அங்கு விவசாயம் செய்தவர்கள் அரசுக்கு வரி கட்டுவதற்குப்பதில் அதனை பார்ப்பனர்களுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் நிலங்களை விட்டு வெளியேற்றப்படவோ, வெளியேறவோ மாட்டார்கள். பார்ப்பனர்கள் தாங்கள் பெற்ற வருமானத்துக்கான கணக்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். கட்டுமானப்பணிகள் போன்றவற்றுக்காக நிலத்தைத் தானமாக வழங்கும்போது மட்டுமே, வேளாண்மை செய்து வந்த குடிகளை நீக்கித் தானங்கள் தரப்பட்டன. இவை குடிநீக்கித் தரப்பட்ட நில தானங்கள் எனப்பட்டன. இவை சோழர் காலத்தில் மிக அரிதாகவே செயல்படுத்தப்பட்டன (31).
சோழர்கால கரையோலை முறை:
சோழர் காலத்தில் நிலம் வைத்திருப்பவர் கட்டாயம் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதால், சோழர் காலத்தில் நிலம் வைத்திருப்பது என்பது ஒரு சொத்தாக இல்லாமல் அது ஒரு பொறுப்பாக ஆகியது. அதனால் உழுகுடிகள் மட்டுமே அப்பொறுப்பை முறையாகச் செய்ய முடிந்தது. ஆதலால் உழுகுடிகள் நிலத்தைவிட்டு வெளியேறவோ, நிலம் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படவோ இல்லை. பார்ப்பனர்களுக்கு நில உரிமையில் வேளாளர்களைவிட அதிக சலுகைகள் கொடுக்கப்படவில்லை (32).
சோழர்கள் தங்கள் ஆட்சியின் கீழிருந்த, மக்கள் யாருமற்ற காட்டுப்பகுதிகளையே விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றியமைத்தார்கள். இந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றிய பின்னரும் யாரும் எளிதில் சென்று குடியேறுவதில்லை. அதற்காக முதலில் அப்பகுதிகளை பிரம்மதேயமாக பார்ப்பனர்களுக்கு வழங்கி, முதலில் பார்ப்பனர்களை கூட்டமாகக் குடியேறச்செய்தனர். சமூகத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த கோயில் சார்ந்த சமூகச் செல்வாக்கின் காரணமாக அவர்களுக்குக் கரையோலை முறையில் புதிதாகப் பண்படுத்தப்பட்ட நிலங்களை பிரம்மதேய நிலங்களாக வழங்கும்பொழுது பார்ப்பனர்களை முதலில் குடியேற்றி, மற்றவர்களை அவர்களுடன் சேர்த்துக் குடியேற்றுவது அரசுக்கு எளிதாக இருந்தது. பார்ப்பனர்களும் பிரம்மதேயமாக அந்நிலங்களைப் பெற்று அதன்மூலம் பலனடைந்தார்கள் என்பதால் மற்றவர்களை நிலம்பெற்ற பார்ப்பனர்கள் அனைவரும் சேர்ந்து அப்புதிய பகுதியில் குடியேற்றுவதற்குப் பாடுபட்டார்கள்.
இந்த நிலங்கள் 8 ஆண்டுகளுக்கு வரியில்லாமல் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன அதன்பின் 9ஆம் ஆண்டில் பாதி வரியும், 10ஆம் ஆண்டிலிருந்து முழு வரியும் கட்ட வேண்டும். இதனை இராசேந்திர சோழனின் கரந்தைச்சேப்பேடு விரிவாகக்கூறுகிறது. 9ஆம் ஆண்டுக்குப்பிறகு பெரும்பாலும் பார்ப்பனர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு புதிய நிலங்கள் வழங்கப்பட்டன. உண்மையில் சோழர்காலப் பிரம்மதேயங்கள் என்பன நில மேம்பாட்டுத்திட்டமாகவே இருந்தது. காடுகளை அழித்து பண்படுத்தப்பட்ட நிலங்கள் கரையோலை முறையில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டு, அந்நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வளமான நிலங்களாக, மக்கள் குடியேறி வாழும் பகுதிகளாக மாறிய பின் பார்ப்பனர்கள் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்று, அங்கு தரப்படும் புதிய பண்படுத்தப்பட்ட நிலங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
சோழர் ஆட்சியில் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்ட இந்தப் புதிய பிரம்மதேய நிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ள இடங்களில்தான் வழங்கப்பட்டன. இவை ஏதேனும் ஓர் ஆற்றிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும், ஏதேனும் ஓர் ஊரிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ள இடமாகவும் இருக்க வேண்டும். அந்த நிலம் செழிப்பான நிலமாக மாறிய பின்னர் அதற்கான கணக்குகளை ஒப்படைத்து விட்டு பார்ப்பனர்கள் வேறு நிலங்களுக்குக் குடிபெயர வேண்டும் (33). இதுவே சோழர் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கரையோலை முறை. இதனால் சோழர் காலத்திற்கு முன் வெறும் மேய்ச்சல் நிலமாக இருந்த தஞ்சாவூர், சோழர்காலத்தில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக மாறியது.
சோழர்காலத்தில் தமிழும் பார்ப்பனர்களும்:
சோழர் காலத்தில் தமிழ் வழிபாட்டு முறைகள் இருந்தமையை கல்வெட்டுச் சான்றுகள் தெளிவு படுத்துகின்றன. பக்தி இயக்கத்தின் வீச்சும் அதை உறுதிப் படுத்துகிறது. கல்வெட்டுச் சான்றுகள் சமற்கிருத வழிபாட்டை தெரிவிக்கவில்லை. வேதக்கல்வி நிலையங்கள் அன்று பரவலாக இருக்கவில்லை. வேதக்கல்வி மையங்கள் உணவுடன் கூடிய உறைவிடப் பள்ளிகளாகவே இருந்தன. அவை மிகமிகக் குறைவாகவே இருந்தன. பார்ப்பனச் சபைகளின் உறுப்பினராகும் அடிப்படைத்தகுதி கூட மந்திரப் பிராமணங்களை காதில் கேட்டு அறியும் அறிவாக மட்டுமே இருந்தது. ஆதலால் பெரும்பாலான பார்ப்பனர்கள் அன்று படிப்பறிவோ எழுத்தறிவோ இல்லாதவர்களாகவே இருந்தனர். மாறாக தமிழ்க் கல்விக்காக ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. சிறுத்தொண்டரின் மகன் திருச்செங்கோட்டங்குடியில் இருந்த உள்ளூர் பள்ளியிலேயே சேர்ந்து படித்ததை பெரிய புராணம் காட்டுகிறது. ஒவ்வொரு ஊரிலும் தமிழ்ப்பள்ளிகள் இருந்ததால்தான் தமிழுக்கு உறைவிடப் பள்ளிகள் தேவைப்படவில்லை என்கிறார் இராசுக்குமார் (34).
சோழன் இராசராசன் காலம் முதல் கோயில்களில் ஓதுவார்கள் பலர் பொறுப்பேற்று தமிழில் ஓதுவது நடைபெற்று வந்தது. சோழர்கள் காலகட்டத்தில் தங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் மட்டுமின்றி, இருத்தலுக்கும்கூட வேளாளர்களையும் சோழ அரசையுமே பார்ப்பனர்கள் சார்ந்திருந்தார்கள். சோழ அரசர்கள் மக்கள் மொழியான தமிழ் மொழியை முழுமையாக ஆதரித்த நிலையில் கோயில்களில் தமிழைப் பயன்படுத்துவதற்கு பார்ப்பனர்களால் தடைபோட இயல்வில்லை. அந்த அளவு உயர்நிலையிலும் அன்று அவர்கள் இருக்கவில்லை. கோயில்களில் வடமொழி பயன்பட்டு வந்ததற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் தேவாரம் போன்றவற்றின் பயன்பாடு தெளிவாக இருந்துள்ளது. வைணவக் கோயில்களில் இன்றும் தமிழின் பயன்பாடு தொடர்கிறது. தமிழரல்லாத விசயநகர நாயக்கர் மன்னர்களின் காலத்தில் ஏற்பட்ட சூழல்களால்தான் கோயில்களில் வடமொழி முற்றிலும் வலுவில் நிலை பெற்றிருக்க வேண்டும். பழனி போன்ற கோயில்களில் விசயநகர நாயக்கர் ஆட்சியின் வல்லாண்மைக் காலத்தில் தான் வடமொழி இடம்பெற்றது. இதுபோன்ற ஒரு கருத்தையே இராசுக்குமார் தனது நூலில் கூறுகிறார் (35).
நில உடமையாளர்களின் முதன்மை நிலை:
சோழர்காலச் சமூக அமைப்பில் சமூக–பொருளியல்-அரசியல்-பண்பாட்டு ஆதிக்கச் சக்தியாக வேளாளர்களே மேலோங்கி நின்றனர். அவர்களுடைய நலன்களைப் புறந்தள்ளக்கூடிய வகையில் வலிமையோ, செல்வாக்கோ, செயல்பாட்டுத்திறனோ பார்ப்பனியம் உள்ளிட்ட வேறு எந்தச் சமூக–பொருளியல்-அரசியல்-பண்பாட்டு சக்தியிடமும் இருக்கவில்லை. அப்படி ஒரு சக்தி உருப்பெறுவதற்கு அந்தக் கட்டமைப்பில் இடமுமில்லை. அப்படித் தோன்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கூடிய உயர்நிலையிலேயே - வலிமை நிலையிலேயே வேளாளர்கள் இருந்தனர் எனக் கூறுகிறார் மே.து. இராசுக்குமார் (36).
நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கியம், கல்வெட்டுச்சான்று ஆகியவைகளைக் கொண்டு நோக்கும்போது பார்ப்பனர் அல்லாத வேளாளர் போன்றோர் கல்வி, ஆட்சியமைப்பு, கலை, இலக்கியம் தத்துவம், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் தேர்ந்தவர்களாகவும் வல்லுநர்களாகவும் இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையிலும் அதிகமாக இருந்ததோடு ஆட்சியிலும் நிர்வாகத்திலும் உயர்நிலையில் இருந்தனர். அவர்கள் தங்களது நலன்களை, தங்களது ஆதிக்கத்தைக் காத்துக் கொள்ளத் தேவையான கருத்தியல்களை அவர்களது உடமைப்பகுதியினரே உருவாக்கியிருப்பர். சமற்கிருதம் நிர்வாக நீதிமன்ற மொழியாகவோ, கல்வி, அறிவுசார் மொழியாகவோ என்றும் இருந்ததில்லை. தங்கள் வேர்களையே இழந்து நின்ற பார்ப்பனர்களால் வேர்விட்டு வளர்ந்திருந்த தமிழ்ச் சமூகத்தில் பண்பாட்டுத் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்க இயலாது. ஆகவே சோழர்காலத்தில் பார்ப்பனர்களிடமிருந்து பெறும் நிலையில் தமிழ்ச்சமூகம் இருக்கவில்லை என்கிறார் மே.து. இராசுக்குமார் (37).
நிலவுடமையாளர்களாகப் பெரிதும் இருந்த வேளாளருக்கு அடங்கியவர்களாகவும் அவர்களுக்கு ஊழியம் செய்தவர்களாகவுமே பார்ப்பனர் இருந்தனர். கோயில்களின் மேலாண்மை பார்ப்பனர்களிடம் இருக்கவில்லை. வேளாளர்களே அவற்றைக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்களின் சபைக் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டு அவர்களை வழிப்படுத்தினர். கல்வி, ஆட்சியமைப்பு, கலை, இலக்கியம், தத்துவம், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் என எதிலும் பார்ப்பனர் இடைக்காலத்தில் (சோழர்காலத்தில்) முன் நிற்கவில்லை என்கிறார் அவர் (38). பிரம்மதேய நிலங்களும் பிரம்மதேய ஊர்களில் இருந்த கோயில்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.
அதே சமயம் பெரிதும் வேளாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சில கோயில்களிலும் மன்னர்களது மேற்பார்வை அவ்வப்பொழுது இருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அரசின் மேற்பார்வை அதிகாரிகளை எதிர்க்கும் வேளாளர்களை அவர்களின் பொறுப்பிலிருந்து உடனடியாக பணி நீக்க உத்தரவு இடப்பட்டிருந்தது. மேலும் பஞ்ச காலங்களில் வேளாளர்கள் தங்களை அடிமைகளாக விற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையும் இருந்தது. அதுபோன்றே வேளாளர்களின் ஊராட்சிகளில் மேற்பார்வை இல்லாதது போலவே வணிக நகரங்களின் அவைகளிலும் மேற்பார்வை இருக்கவில்லை. இங்கு வேளாளர்கள் என்பது முன்பு குறிப்பிட்ட பல்வேறு சமூகங்களில் இருந்து புதிதாக உருவாகி வந்த நில உடைமையாளர்களையும் குறிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே அரசானது, வேளாளர்களுக்கு அல்ல நிலவுடமை கொண்ட அனைவருக்கும் முதன்மை நிலை வழங்கியது என்பதும் நில உடமை பெற்ற அனைவரும் நாளடைவில் வேளாளர்கள் என ஆனார்கள் என்பதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே இந்த வேளாளர் என்பது குறிப்பிட்ட குடியோ, குறிப்பிட்ட மக்கள் குழுவோ, மக்கள் சமூகமோ அல்ல. அன்று பல்வேறு சமூகங்களிலும் இருந்து வந்த நில உடமைபெற்ற அனைவரையும் வேளாளர்கள் என அரசு ஏற்றுக்கொண்டது. அவர்கள் மூவேந்த வேளாண் போன்ற சிறப்புப் பட்டப் பெயரையும் பெற்றனர்.
சோழர்காலத்தில் பார்ப்பனர்களின் நிலை:
களப்பிரர், பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்ட பிரம்மதேய நிலங்களின் முழு உரிமை என்பது சோழர்காலத்தில் பறிக்கப்பட்டதோடு, அந்நிலங்களுக்கு வரியும் விதிக்கப்பட்டது. மேலும் பிரம்மதேயங்கள் அனைத்தும் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வந்தன. வரி செலுத்தாத பார்ப்பனர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு பிறருக்கு வழங்கப்பட்டன. அதில் ஒழுங்கீனமோ குற்றங்களோ நடந்திருந்தால் அதற்குக் காரணமான பார்ப்பனர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பார்ப்பனர்களின் பார்ப்பன சபைகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. அவற்றிற்கான விதிகளும் நடைமுறைகளும் கூட அரசு அதிகாரிகளின் உதவிகொண்டுதான் நிர்ணயம் செய்யப்பட்டன.
கோயிலுக்கு வழங்கப்பட்ட தேவதான நிலங்களும் இன்னபிற சொத்துக்களும் முழுமையான அரசின் கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்டிருந்தன. கோயில் நடைமுறைகள், செயல்பாடுகள் இன்னபிற அனைத்தும் சோழ அரசின் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படியே நடந்தன. அங்கு பார்ப்பனர்கள் செய்த குற்றங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. கோயிலில் அரசு அதிகாரிகள் இருந்ததோடு, அவ்வப்போது உயர் அதிகாரிகளும் கோயிலை மேற்பார்வை செய்து வந்தனர். சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் பலவகையிலும் அரசின் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட்டு அரசின், அரசு அதிகாரிகளின் தயவில் வாழ வேண்டியவர்களாக இருந்தனர். அரசை அல்லது அரசு அதிகாரிகளை எதிர்ப்பவர்கள் மீது சிவத்துரோக, இராசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேயங்கள் பெரும்பாலும் கரையோலை முறையில் நிலமேம்பாட்டுத்திட்ட அடிப்படையில் தான் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, பார்ப்பனர்கள் சோழ அரசின் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட்டு அரசு இடும் பணிகளை செய்து வருபவர்களாகவே இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவோ, படிப்பறிவோ இல்லாதவர்களாக, அரசை, அரசு அதிகாரிகளைச் சார்ந்து வாழ்பவர்களாகவே இருந்தனர். இந்திய அரசுகளில் சோழ அரசில்தான் பார்ப்பனர்கள் மிக அதிக அளவில் குற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். போர்களில் பார்ப்பனர்கள் தயவு தாட்சியமின்றி பெருமளவு கொல்லப்பட்டனர்.
களப்பிரர், பல்லவர்காலத்தில் நிறைய நிலபுலங்களும், செல்வ வளங்களும் அரசியல் அதிகாரமும், சமூகச் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்த பார்ப்பனர்கள், சோழர் காலத்தில் அந்த உயர் நிலையில் இருக்கவில்லை என்பதோடு அரசின் கண்காணிப்பில் ஒரு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தனர்.
“எப்பொழுதெல்லாம் வைதீகப் பார்ப்பனியம், முழுமையான அரசியல் அதிகாரமும் நிலபுலங்களும் செல்வவளமும் கொண்டு செல்வாக்குமிக்க ஒரு உயர் சமூகமாக உருவாகிறதோ அங்கு சமற்கிருதமயமாக்கமும் சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பலவகைகளிலும் உறுதி செய்கிறது” என்பதோடு “இன்றைய சாதிப்படிநிலை என்பதைப் பார்ப்பனர்களும் அரசர்களும் அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து மதத்தோடு சார்ந்ததாக அதனை நடைமுறைப்படுத்தினர்” என்ற செயல்முறையையும் கொண்ட ஒரு சமூகச் சூழ்நிலை உருவாகும்பொழுது மட்டுமே சாதியம் உருவாக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற ஒரு சூழ்நிலை சோழர் காலத்தில் உருவாகவில்லை என்பதால் அன்று இன்றைய சாதிகள் இருக்கவில்லை.
பார்வை:
1. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 203, 204.
2. இராசராச சோழன், இரா. மன்னர்மன்னன், பயிற்று பதிப்பகம், டிசம்பர்-2021, பக்: 137.
3. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 23-28.
4, 5. “ “ “ பக்: 31.
6. “ “ “ பக்: 32.
7, 8. . “ “ “ பக்: 33.
9. “ “ “ பக்: 36.
10. “ “ “ பக்: 30, 35.
11. “ “ “ பக்: 47, 48.
12. “ “ “ பக்: 50.
13. “ “ “ பக்: 52, 53.
14. “ “ “ பக்: 56
15. “ “ “ பக்: 138.
16. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், 1018, பக்; 190-195.
17. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 116.
18. பல்லவர் வரலாறு, மா. இராசமாணிக்கனார், பாரதி பதிப்பகம், 2022, பக்: 293.
19. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 2, பக்: 496-502.
20. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 1, பக்: 111.
21. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 335, 345.
22. சாதியின் தோற்றம் – வட இந்தியாவும் பழந்தமிழகமும், கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 175-179.
23, 24. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 140-142.
25. ஆதித்த கரிகாலன் கொலை, இரா. மன்னர் மன்னன், பயிற்றுப்பதிப்பகம், 2023, பக்: 523-524.
26. “ “ “ பக்: 524-528.
27. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 146.
28. “ “ “ பக்: 148.
29. “ “ “ பக்: 144-145.
30. “ “ “ பக்: 140-141
31. இராசராச சோழன், இரா. மன்னர்மன்னன், பயிற்று பதிப்பகம், டிசம்பர்-2021, பக்: 136.
32. “ “ “ பக்: 136, 137.
33. “ “ “ பக்: 139, 140.
34. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளாதாரம், மே.து.இராசுக்குமார், NCBH, 2023, பக்: 170-172, 176-177.
35. “ “ “ பக்: 160-161.
36. “ “ “ பக்: 162.
37. “ “ “ பக்: 173
38. “ “ “ பக்: 200-204
- கணியன் பாலன்