muthusamy karaiyalarமுன்னுரை:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டையில் அரசியல் எழுச்சி ஏற்பட மூலகாரணமாக விளங்கிய செங்கோட்டை மிட்டாதாரரும், முதல் நகர்மன்றத் தலைவரும் வள்ளலுமான திரு. நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் சமூகப் பணிகளைக் குறித்து காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கரையாளர்கள்:

"கரையாளன்" எனும் சொல்லானது கிராமத்தில் அதிகச் செல்வங்களை வைத்திருக்கும் உரிமையாளரைக் குறிக்கும் என்று மிரோன் வின்சுலோ அகராதி விளக்கம் தருகின்றது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் பேரகராதியில் கரை எனும் சொல்லுக்கு நன்செய் நிலம் அல்லது விளைநிலம் என்ற பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது அதிக எண்ணிக்கையில் நிலங்களை வைத்து ஆளுகை செய்த யாதவ குலத்தின் ஒரு பிரிவினருக்கு "கரை ஆண்டவர்கள்" எனும் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கரை ஆண்டவர்கள் எனும் பட்டமானது பின்னாட்களில் மருவி "கரையாளர்" என்று மருவியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இத்தகைய இனப்பிரிவில் தான் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தோன்றினார்.

பிறப்பு:

நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் 1869-இல் நாராயணன் கசமுத்து சட்டநாதன் மற்றும் ஆவுடையம்மாள் தம்பதியருடைய ஏழு குழந்தைகளில் முதல் குழந்தையாக செங்கோட்டையில் பிறந்தார். சிறு வயது முதலே செல்வச் செழிப்போடு வளர்ந்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தன்னுடைய அடிப்படைக் கல்வியை செங்கோட்டையில் பயின்றார்.

தொழில்:

படிப்பை முடித்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தன்னுடைய தந்தையாரோடு இணைந்து தொழிலில் ஈடுபடலானார். தன்னுடைய பதினாறு வயதிற்குப் (1885) பின் ஒரு முறை தொழில் நிமித்தமாக தன் தந்தையாரோடு திருவனந்தபுரத்திலுள்ள தம்பனூர் சந்தைக்கு சென்றிருந்தார். அதுசமயம் அப்போதைய திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் மன்னரான ஸ்ரீ பத்மநாபதாச வாஞ்சிபால சர் ஆறாம் இராம வர்மா (மூலம் திருநாள்) அவர்கள் தன்னுடைய அரண்மனையிலிருந்து கடவுளை தரிசிப்பதற்காக பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தையும் மகனும், மகாராஜாவின் "சாரட்" வண்டி ஓட்டுநர் தங்களுக்கு பரிட்சயமானவர் என்பதை அறிந்துகொண்டனர். பின்னர் அந்த "சாரட்" வண்டி ஓட்டுனரின் வழியாக மகாராஜாவினுடைய அறிமுகத்தைப் பெற்றனர். மகாராஜாவினுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலமாக பல அரசு ஒப்பந்தங்களைப் பெற்றனர்.

திருவனந்தபுரம் சமஸ்தான திவானாக பணியாற்றிய ராஜா சர் தஞ்சாவூர் மாதவ ராவ் அவர்களின் முயற்சியால் முதன் முதலாக கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலை அமைக்கும் பணியானது 1871-இல் தொடங்கப்பட்டு 1877-இல் முடிவடைந்தது. இப்புதிய சாலையின் வருகையால் செங்கோட்டைக்கும் கொல்லத்திற்கும் இடையேயான போக்குவரத்தும் வணிகமும் அதிகரித்தது.

இந்த வாய்ப்பினை நாராயணன் கசமுத்து சட்டநாதன் அவர்களும் அவரைத் தொடர்ந்து நா.க.ச. முத்துசுவாமி அவர்களும் சரியாகப் பயன்படுத்தி தன்னுடைய வணிகத்தைப் பெருக்கினர். வியாபாரம் மற்றும் ஒப்பந்தங்கள் வழியாக ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நாகர்கோவில், ஆலப்புழை மற்றும் தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் உப்பளங்களை வாங்கினார்.

மன்னருடைய ஆதரவினால் தொழில் பெருகியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய உப்பளங்களுக்கு "ஸ்ரீ மூலம் திருநாள்" என்று மன்னருடைய பெயரையே சூட்டியிருந்தார். இதுதவிர தைக்காடு பகுதியில் ஆல்ஹகால் தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வந்தார்.

குடும்பம்:

நா.க.ச. முத்துசுவாமியின் உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர் மற்றும் சகோதரிகள் இரண்டு பேர். இச்சகோதரர்கள் ஐந்து பேரும் ஐந்து வீட்டுக் கரையாளர்கள் என்றும் அழைக்கப்படுவர்.

உடன்பிறந்த சகோதரர்கள்:

நா.க.ச. சுப்பிரமணியன்

நா.க.ச. வீரபத்திரன்

நா.க.ச. லெட்சுமணன்

நா.க.ச. கிருஷ்ணசாமி

உடன்பிறந்த சகோதரிகள்:

நா.க.ச. திருமலையம்மாள்

நா.க.ச. ராமுத்தாய் அம்மாள்

நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தங்கம்மாள் எனும் பெண்ணை மணந்தார். இத்தம்பதியர்க்கு மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

ஆண் குழந்தைகள்:

 1. சட்டநாதன்
 2. சுப்பிரமணியன்

பெண் குழந்தைகள்:

 1. தாயம்மாள்
 2. பொன்னம்மாள்

பதவி மற்றும் பொறுப்புக்கள்:

செங்கோட்டை மிட்டாதாரர்:

கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் (கி.பி. 1790-முதல்) நடைமுறையில் இருந்த நிலவரி வசூல் முறைகள், டெக்கனியல் செட்டில்மென்ட் (decennial settlement), நிரந்தரத் தீர்வை (Permanent Settlement), ரயத்துவாரி (Ryotwari) மற்றும் மகால்வாரி (Mahalwari) என்று பல வகைப்படும். இவ்வகையான நிலவரி வசூல் முறைகளில் சற்று மாறுபட்டது மிராசு செட்டில்மென்ட். பெரும் நிலக்கிழாளர்களாக விளங்கிய மிராசுதாரர்கள் (அ) மிட்டாதாரர்கள் என்பவர்கள் பல கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வரிவசூல் செய்து அரசிடம் அளிப்பார்கள்.

இம்முறைப்படி செங்கோட்டை, அச்சம்புதூர், ஆய்க்குடி, கிளாங்காடு, பண்பொழி, சாம்பவர் வடகரை, கட்டளைக் குடியிருப்பு, புளியரை மற்றும் வல்லம் போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள "மிட்டா" (குத்தகை / ஏலம்) நிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து அப்பகுதிகளுக்கு மிட்டாதாரராக பணியாற்றினார் திரு. நா.க.ச. முத்துசுவாமி அவர்கள்.

செங்கோட்டை நகரசபைத் தலைவர்:

ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் திவானாகப் பணியாற்றிய பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் செங்கோட்டைக்கு நகர்மன்ற அந்தஸ்தானது 1912-இல் வழங்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நகரசபையின் முதல் நகர்மன்றத் தலைவராக (தன்னுடைய 43-ஆம் வயதில்) செங்கோட்டை மிட்டாதாரர் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் பொறுப்பேற்றார். இதன்பின் செங்கோட்டை நகர்மன்றத் தலைவராகத் தொடர்ந்து பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். இவருடைய காலத்திற்குப் பின்புதான் செங்கோட்டை வட்டாரத்தில் காங்கிரஸ் அரசியல் ரீதியாக வலிமையடைந்தது. இவருடைய குடும்பத்தினர் பலர் காங்கிரசில் தமிழ் மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தனர். இதனால் தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது.

சமூகப் பங்களிப்பு:

திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசியான ராணி கௌரி லக்ஷ்மி பாய் (ஆட்சி: 1810-1815) அவர்கள் 1813-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கில மருத்துவ முறையினை சமஸ்தானத்தில் அறிமுகப்படுத்தினார். டாக்டர் ப்ரோவன் என்பவரே ராணியால் (1813-இல்) பணியமர்த்தப்பட்ட முதல் ஆங்கில மருத்துவர் ஆவார். இவர் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே முதலில் மருத்துவம் செய்தார்.

பின்பு ஆங்கில மருத்துவ முறையானது ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலோ - இந்தியர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் கொல்லம் அருகிலுள்ள தங்கசேரி எனும் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ராணி கௌரி லக்ஷ்மி பாய் அவர்களின் ஆணைப்படி பொதுமக்களுக்கான முதல் நோய் தடுப்புத் துறை 1813-இல் டாக்டர் ப்ரோவனை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதுவே திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் பொதுமக்களுக்கான முதல் பொதுசுகாதார பணிக்கான முன்னெடுப்பாகும். இதனைத் தொடர்ந்து பட்டத்திற்கு வந்த கௌரி பார்வதி பாய் (1815–1829), ஸ்வாதி திருநாள் ராமவர்மா II (1813–1846), உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா II (1846–1860), ஆயில்யம் திருநாள் ராமவர்மா III (1860–1880) மற்றும் விஷாகம் திருநாள் ராமவர்மா IV (1880–1885) ஆகியோருடைய ஆட்சிக் காலத்தில் பொதுசுகாதாரத் துறை மேம்படுத்தப்பட்டது.

மன்னர் ஸ்ரீ மூலம் திருநாளுடைய ஆட்சிக்காலத்தில் (1885–1924) சமஸ்தானத்தில் நான்கு பொதுச்சுகாதார மாவட்டங்கள் (திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மற்றும் வைக்கம்) ஏற்படுத்தப்பட்டன. இதன்பின் ஆகஸ்ட் 1895-இல் இருந்து பொதுச் சுகாதாரத் துறை செயல்படத் தொடங்கியது.

1896-இல் பொதுச்சுகாதார மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு செங்கோட்டை தாலூகாவையும் இணைத்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்ட பொதுச்சுகாதார மாவட்டத்திற்கென தனியாக பொதுச்சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த நியமனமானது நா.க.ச. முத்துசுவாமி அவர்களின் கோரிக்கையின் படியே நடந்தது.

1920-ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சமஸ்தானதிற்கு உட்பட்ட பகுதிகளில் முதன்முதலாக மின்சார உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டது. சோதனை முயற்சியாக திருவனந்தபுரத்தில் 1928-இல் சிறிய அளவிலான அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு, 541 தெருவிளக்குகளுக்குகள் மற்றும் இரண்டு பயனாளர்களுக்கும் மின்சார சேவை அரசால் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1931-இல் கோட்டயத்திலும், 1933-இல் நாகர்கோவிலிலும் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செய்வதற்கான உரிமம் திருவாங்கூர் அரசால் வழங்கப்பட்டது. 1934-இல் கொல்லத்தில் டீசலில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையம் அரசால் நிறுவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு களமசேரி எனும் இடத்தில் அனல் மின்நிலையம் ஒன்று அரசால் தொடங்கப்பட்டது. நா.க.ச. முத்துசுவாமி அவர்களின் வேண்டுகோளின்படி செங்கோட்டையில் 1934-இல் அனல் மின் நிலையம் தொடங்குவதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு அதன்மூலம் செங்கோட்டைக்கு முதன்முதலாக மின்சார சேவை வழங்கப்பட்டது.

நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய தந்தையர் புரவலராக இருந்த செங்கோட்டை சட்டநாத கரையாளர் நடுநிலைப் பள்ளியை மேம்படுத்துவதற்காக நண்கொடைகள் பல வழங்கினார்.

செங்கோட்டையின் அரசியல், கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய மகன் மற்றும் அவர்களுடைய வாரிசுகளும் பெரும் பங்களிப்புச் செய்தனர். கரையாளர் குடும்பத்தினர் தேசத்திற்கும், செங்கோட்டைக்கும் ஆற்றிய சேவைகள் மற்றும் நற்பணிகள்:

 1. நா.க.ச. முத்துசுவாமியின் இளைய மகனான மு. சுப்பிரமணியன் (M.S.) அவர்கள் தமிழக மேலவை உறுப்பினராக (1956–1957) பணியாற்றினார். 1956-இல் நடைபெற்ற தமிழக எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு செங்கோட்டை தமிழகத்தோடு இணைய பாடுபட்டார். மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் படுக்கை தொகுதி (ward) அமைவதற்கு நன்கொடை வழங்கினார்.
 2. மு. சுப்பிரமணியன் (M.S.) அவர்களின் மகனான மு.சு. முத்துசுவாமி அவர்கள் 1952-இல் தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகக் காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், 1962-லிருந்து செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர்கள் வகித்த பதவியின் மூலம் செங்கோட்டைக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்தனர்.

அருங்குணமும் ஆன்மீக சிந்தையும்:

செல்வச் செழிப்பான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்வினையே மேற்கொண்டார். தமிழ் வைணவ நெறியை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். சகோதர வாஞ்சையோடு பழகுதல், கொடைத்தன்மை, இறைபக்தி மற்றும் ராஜபக்தி போன்ற அருங்குணங்கள் ஒருங்கே பெற்று விளங்கியவர் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் என்று அவருடைய மருமகனான ஜே. சக்கரபாணி நம்பியார் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

மரணம்:

பெரும் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய அயராத உழைப்பாலும் முயற்சியாலும் மிட்டாதாரர், நகரசபைத் தலைவர் எனும் பொறுப்புகளை அடைந்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக தன்னுடைய 69-ஆம் வயதில் 19-03-1938 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

புகழாஞ்சலி:

நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய நண்பரான தென்திருவிதாங்கூர், பறக்கையைச் சேர்ந்த தமிழ் வித்துவான் தா. மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள் முத்துசுவாமி அவர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புகழ் மொழி மாலை எனும் சிறு பாடல் நூலினை இயற்றினார்.

மொத்தமாக 43 பக்கங்களை கொண்ட இந்நூலானது, பாடல் தலைவனுடைய குணநலன்களையும் வள்ளல் தன்மையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்நூலினை பதிப்பித்தவர் கரையாளருடைய இளைய மகனான மு. சுப்ரமணியன் ஆவார். இந்நூலானது 1938-ஆம் ஆண்டு நாகர்கோவில் டாஸ் அச்சாபீஸில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது.

நினைவுச் சின்னம்:

மு. சுப்ரமணியன் அவர்கள் மறைந்த தன் தந்தையாருடைய நினைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பூங்கா அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். இங்கு பூங்கா அமைவதற்காக அடிக்கல் நாட்டியவர் மு. சுப்ரமணியன் அவர்களின் சித்தப்பா மகனான திரு. சு. சட்டநாதன் ஆகும்.

பூங்காவிற்கான பணிகள் 1946-ஆம் ஆண்டு முடிவடைந்தது. "முத்துசுவாமி பூம்பொழில்" என்று அழைக்கப்படும் பூங்காவானது அப்போதைய திருவிதாங்கூர் திவானாக இருந்த சர். C.P. ராமசுவாமி அய்யர் அவர்களால் 15-03-1946 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

முடிவுரை:

செங்கோட்டையில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதிருந்த காலகட்டத்தில் முதன்முதலாக திருவிதாங்கூர் அரசரின் ஆதரவைப் பெற்று பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அப்பகுதியில் அரசியல் எழுச்சி ஏற்பட விதையாக செயல்பட்டவர் திரு. நா.க.ச. முத்துசுவாமி அவர்கள். மேலும் தன்னுடைய உழைப்பு, சேவை மனப்பான்மை மற்றும் இறைபக்தி போன்ற நற்குணங்களினால் தன்னையும் மேம்படுத்தி தான் வாழ்ந்த பகுதியையும் உயர்த்திய பாங்கினால் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரண புருஷராக விளங்குகிறார்.

குறிப்புகள்:

 1. Nagam Aiya. V. (1906). Travancore State Manual, Vol. III, op.cit, P.222.
 2. தா. மாணிக்கவாசகம் பிள்ளை (1938). நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் - புகழ் மொழி மாலை. பதிப்பகம்: டாஸ் அச்சாபீஸ், நகர்கோவில்.
 3. மு. சுப்ரமணியன் கரையாளர் (1956). சென்னை-செங்கோட்டை இணைப்பு விழா (சிறு புத்தகம்).
 4. டாக்டர் கே.கே.பிள்ளை (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் p. 483
 5. மிரோன் வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதி (2004). ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி. பக்கம்: 253.
 6. ச.சி. செல்லம் (2010). யாதவர் களஞ்சியம் (தொகுப்பு நூல்). பதிப்பாசிரியர்: மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. பக்கங்கள்: 122-130 & 476.
 7. N. சட்டநாதன் (2010). ஒரு சூத்திரனின் கதை. பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். காலச்சுவடு பதிப்பகம்.
 8. ஆ. சிவசுப்பிரமணியன் (2011). கட்டுரை: மக்கள் செலுத்திய மறைமுக வரி. கீற்று.
 9. திரு M. சுப்பிரமணியன் கரையாளர் மற்றும் திருமதி ராஜசரஸ்வதி (முன்னாள் நகர்மன்றத் தலைவி - செங்கோட்டை) தம்பதியரிடம் 30-04-2015-இல் கண்ட நேர்காணலின் வழியாக நான் சேகரித்த தகவல்கள்.
 10. Prakash B. A. (2018). Economic history of Kerala from 1800 to 1947 AD Part II: Travancore, Thiruvananthapuram Economic Studies Society, p. 28, 59, 60, 64, 67, 82.
 11. https://ta.quora.com/ஜமீன்தார்கள்-என்பவர்கள்-1
 12. http://www.tamilvu.org/ta/library-lA474-html-lA474cnt-152335
 13. https://www.hindutamil.in/news/spirituals/122110-.html

- த.ரமேஷ்

Pin It