vellaivaranaranarபயனில சொல்லாப் பண்பும், நகைச்சுவை இழையோட இன்சொல் பேசும் இயல்பும் கொண்டு விளங்கிய இப்புலவர் பெருந்தகை, மாணவர்களின் அன்புக்குறியராகத் திகழ்ந்தவர். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த தமிழறிஞர் ஆவார். இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், கன்னித் தமிழ்க் காவலராகவும் விளங்கிய அருந்தமிழ்ச் சான்றோர் என போற்றப்பட்டவர். இயற்றமிழோடு இசைத் தமிழின் நுணுக்கங்களை ஆராய்ந்து அறிந்த நுண்ணறிவாளராகவும் விளங்கியவர்.

               தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகில் உள்ள திருநாகேசுவரத்தில் கந்தசாமி – அமிர்தம் அம்மையார் தம்பதியினருக்கு மகனாக 14.01.1917 ஆம் நாள் வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் தொடக்கக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்றார். பின்னர் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் சேர்ந்து திருமுறைகளை இசையோடு பாடக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, ‘தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு’ என்னும் ஆய்வேட்டினை அளித்தார்.

               தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக அய்ந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1943 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவரது புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக் கழகம் இவருக்கு இணைப் பேராசிரியர் பதவி வழங்கியது. தமிழ்த்துறைத் தலைவராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 1979 முதல் 1982 ஆம் ஆண்டுவரை சிறப்புப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

               வெள்ளைவாரணனார், ‘தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்’, ‘தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்’, ‘தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்’, ‘தொல்பொருள் உரைவளம்’ (ஏழு தொகுதிகள்) முதலிய இலக்கண நூல்களையும், ‘குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி’, ‘சங்க கால தமிழ் மக்கள்’ ஆகிய இலக்கிய நூல்களையும், ‘திருவுந்தியார்’ , ‘திருக்களிற்றுப்படியார்’, ‘சேக்கிழார் நூல்நயம்’ ,’பன்னிரு திருமுறை வரலாறு’ ,’தில்லைப் பெருங்கோயில் வரலாறு’, ‘திருவருட்பாச் சிந்தனை’ ஆகிய சைவ சமயம் சார்ந்த நூல்களையும், ‘தேவார அருள்முறைத் திரட்டுரை’, ‘திருமந்திர அருள்முறைத் திரட்டுரை’, ‘திருவருட்பயன் விளக்கவுரை’ முதலிய உரை நூல்களையும், ‘காக்கைவிடு தூது’ என்னும் படைப்பிலக்கியத்தையும், இசைத் தமிழ், நாடகத் தமிழ் குறித்த நூல்களையும் எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

               விபுலானந்த அடிகளின் ‘யாழ்நூலு’க்கு இவர் எழுதியுள்ள முன்னுரை, இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

               ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது, 1937ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக, உயர்நிலைப் பள்ளிகளில் இந்திமொழியைக் கட்டாய பாடமாக்கினார். தாய் மொழியாம் தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை நாடே எதிர்த்தது! ‘தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழர் தலைவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலானோர் இந்தித் திணிப்பைக் கண்டித்துப் போராடினார்கள். பலர் சிறையிலடைக்கப்பட்டனர்.

               தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெள்ளைவாரணனாரையும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆட்கொண்டது. ‘பரந்தாளூர் வெண்கோழியார்’ என்ற புனைப் பெயரில் ‘காக்கைவிடு தூது’ என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

               ‘சித்தாந்தச் செம்மல்’, ‘தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்’, ‘திருமுறை உரை மாமணி’, ‘செந்தமிழ்ச் சான்றோர்’, ‘தமிழ்மாமணி’, ‘சிவகவிமணி’, ‘திருமுறைத் தெய்வமணி’, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ முதலிய விருதுகளையும், பட்டங்களையும் தமிழகத்திலுள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளும், பல்கலைக் கழகங்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன! தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் இவருக்கு ‘கலைமாணி’ விருது வழங்கிப் பாராட்டியது.

               தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 13 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

               தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்ந்த வெள்ளைவாரணனார் பெயர், தமிழிலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

Pin It