அண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும்

 நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது. அந்த நூலில் இருந்து அண்டம், காலம் ஆகியன குறித்தச் சுருக்கமான தரவுகள் இங்கு தரப்பட்டுள்ளன. அண்டம் குறித்த இருபெரும் கோட்பாடுகளை நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது. அவை ஐன்சுடீன் அவர்களின் பொதுச்சார்பியல் கோட்பாடும் (GENERAL THEORY OF RELATIVITY), கற்றை இயங்கியலும் (QUANTUM MECHANICS) ஆகும். இதில் முதல் கோட்பாடு பெருவீதக் கட்டமைப்புகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பல இலட்சம் கோடி கி.மீ அளவுகளைக் கொண்ட பெரிய உருவங்கள் குறித்தான கோட்பாடு என அதனைச் சொல்லலாம். விண்மீன்கள், கோள்கள், திரள்கள் போன்ற பெரிய கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுதான் பொதுச்சார்பியல் கோட்பாடாகும். அடுத்ததாக கற்றை இயங்கியல் என்பது கண்ணுக்கு புலப்படாத மில்லிமீட்டரில் பல இலட்சம் கோடியில் ஒருபங்கு போன்ற மிகமிகச் சிறிய அளவுப் பொருட்களைப் பற்றிய கோட்பாடு எனலாம். அணுவில் இருக்கும் நேர்மங்கள் (PROTONS), நொதுமங்கள் (NEUTRONS), பொடிமங்கள் (QUARKS), மின்மங்கள் (ELECTRONS) போன்ற கண்ணால் காண இயலாத மிகமிகச் சிறிய அளவுள்ள பொருட்களைப்பற்றிய கோட்பாடுதான் கற்றை இயங்கியல் கோட்பாடு ஆகும்.

  இந்த இரண்டு கோட்பாடுகளும் பலவிதங்களில் உறுதிசெய்யப்பட்டு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த இரண்டு கோட்பாடுகளும் சிலகோணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவைகளாக இருக்கின்றன. ஆகவே அறிவியலாளர்கள் இவைகளைப் பகுதிக் கோட்பாடுகளாகவே ஏற்று அங்கீகரித்துள்ளனர். ஆகவே அண்டம் முழுமைக்குமான கோட்பாடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்துத்தான் அண்டம் முழுமைக்குமான கோட்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இயற்பியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் எப்போதும் இடைக்காலத்துக்குரியவைதான் எனவும், புதிதாக நோக்கியறிந்த செய்தி ஒரு கோட்பாட்டிற்கு முரண்படுவதாகத் தெரிந்தால், நாம் அக்கோட்பாட்டைக் கைவிடவோ அல்லது திருத்தியமைக்கவோ வேண்டும் எனவும், பெரும்பாலும் புதிய கோட்பாடு ஒன்றை வகுத்துருவாக்கும்போது அது உண்மையில் முந்தைய கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது எனவும் கூறுகிறார் ஸ்டீஃபன் ஆக்கிங்(1).

stephen hawking

பொதுச்சார்பியல் கோட்பாடு:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டை அறிந்தவர்கள் ஐன்சுடைனின் புகழ்பெற்ற சமன்பாட்டையும் அறிந்திருப்பர். அந்தச்சமன்பாடு வருமாறு,

    E = m(cxc)

 இதில் E = ஆற்றல், m = பொருளின் நிறை c = ஒளியின் வேகம்.

 இதில் c என்ற ஒளியின் வேகமானது சுமார் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ ஆகும். மேற்கண்ட சமன்பாட்டின்படி, ஒளியின் வேகத்தை ஒளியின் வேகத்தோடு பெருக்கிக் கிடைப்பதை பொருளின் நிறையோடு பெருக்கவேண்டும். இவ்வாறு பெருக்கிக் கிடைப்பதுதான் அப்பொருளின் ஆற்றலாகும். ஒளியின் வேகம் மாறாது எனவும், எதனாலும் ஒளியின் வேகத்தைக்காட்டிலும் வேகமாகப்பயணம் செய்ய இயலாது எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு கூறுகிறது. பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க, நெருங்க அப்பொருளின் ஆற்றல் காரணமாக நிறை அதிகமாகி வரும். பொருளை வேகப்படுத்த மேன்மேலும் ஆற்றல் தேவைப்படும். பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க நிறை மேலும் மேலும் அதிகமாகி அது ஈறிலா (INFINITY) அளவாகிவிடும். ஆகவே பொருள் ஒளியின் வேகத்தை அடைய ஆற்றலின் தேவையும் ஈறிலா அளவு தேவைப்படும். இதன் காரணமாக ஒளியைத்தவிர பிற பொருட்களால் ஒளிவேகத்தை அடையவே முடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு(2).

வெளி-காலம்:

 சார்பியல் கோட்பாடு வெளி – காலம் குறித்த கருத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளது. சார்பியல் கோட்பாடு ‘அறுதிக்காலம்’ என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது காலம் என்பது ஒருவர் இருக்கும் நிலையைப்பொறுத்து மாறுகிறது. அடுத்ததாக, காலம் என்பது வெளி என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது(3). அதன் காரணமாகவே, பூமியும் அதில் உள்ள நம்மைப்போன்ற பொருட்களும் நீளம் அகலம் உயரம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட முப்பரிமாணப்பொருட்களாக இருக்கும் நிலையில், ‘வெளி-காலம்’ என்பதால் ஆன அண்டம் என்பது இம்மூன்றுடன் சேர்ந்து காலத்தை நான்காவது பரிமாணமாகக் கொண்டு நாற்பரிமாணப்பொருளாக இருக்கிறது.

ஈர்ப்பு விசையும் காலமும்:

 ஈர்ப்பு என்பது மற்ற விசைகளைப்போல் ஒரு விசையன்று. வெளி-காலம் என்பது தட்டையாக இல்லாமல், அதில் உள்ள நிறை மற்றும் ஆற்றலின் பரவலால் வளைந்தோ, உருண்டோ இருப்பதன் விளைவுதான் ஈர்ப்பு ஆகும் என்கிறார் ஐன்சுடீன். பொதுச்சார்பியலில் உருக்கள் எப்போதுமே நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோடுகளின் வழிச்செல்லும். ஆனால் அவை நமது முப்பரிமாண வெளியில் வளை பாதைகளின் வழிச்செல்வதாகத் தோன்றுகிறது. புவியின் பரப்பு ஓர் இரு பரிமாண வளைவெளி ஆகும். மலைப்பகுதி மேல் பறக்கும் ஒரு வானூர்தி, முப்பரிமாண வெளியில் நேர்கோட்டில் சென்றாலும், அதன் நிழல் இரு பரிமாண நிலத்தில்(மலைப்பகுதியில்) வளைந்த பாதையில் செல்வதுபோல் தெரியும். அதைப்போன்றுதான், வெளி-காலம் என்பது அதன் நிறை மற்றும் ஆற்றலால் வளைந்து இருப்பதால், நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோட்டில் செல்லும் பூமி, முப்பரிமாண நிலையில் வளை பாதையில் செல்வதுபோல தோன்றுகிறது(4).

 ஈர்ப்பு விசைப்புலங்களால் ஒளி வளைக்கப்படுவதாக பொதுச்சார்பியல் ஊகித்தது. 1919இல் மேற்கு ஆப்ரிக்காவில் பிரித்தானிய ஆய்வுக்குழு ஒன்று, ஒளி உண்மையிலேயே பொதுச்சார்பியல் ஊகித்தது போன்றே விலகலுக்கு உள்ளாவதாக மெய்ப்பித்தது. பொதுச்சார்பியல் கோட்பாடு, புவி போன்ற பெருநிறை கொண்ட உருவின் அருகே செல்லும்பொழுது காலம் மெதுவாகச் செல்வதாகத்தோன்றும் எனவும் ஊகித்தது. ஒளியின் ஆற்றல் புவியின் அருகே அதிகமாவதால் காலம் மெதுவாகச்செல்கிறது. புவியின் ஈர்ப்புப் புலத்தில் ஒளி மேல் நோக்கிச் செல்லச்செல்ல அது ஆற்றலை இழக்கிறது. ஆதலால் புவியின் மேலே இருக்கும் ஒருவருக்கு காலம் வேகமாகச் செல்லும். ஆதலால் அவருக்கு, புவியின் கீழே நடக்கும் நிகழ்வுகளுக்கு கூடுதல் காலம் ஆவதுபோல் தோன்றும். 1962இல் இது சோதித்துப்பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது(5).

 ஆகவே புவியின் அருகே அதிக ஈர்ப்பு ஆற்றல் இருப்பதால் அங்கு காலம் மெதுவாகச்செல்கிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சார்பியல் கோட்பாட்டில் தனித்துவமான அறுதிக்காலம் என்பதே இல்லை. அதற்குப்பதிலாக ஒருவர் இருக்கும் இடம், அவரது இயக்க நிலை முதலியனவற்றின் அடிப்படையில் அவருக்கே உரிய சொந்தக் கால அளவை இருக்கிறது என்பதுதான் உண்மை.

நிகழ்வுகள்:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது. அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை. அண்டத்தைப்பற்றிய மேற்கண்ட புதிய புரிதல்கள் காரணமாக அண்டத்திற்கு ஒரு திட்டமான காலத் தொடக்கம் இருக்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஒரு திட்டமான காலத்தில் அது முடிந்தாக வேண்டும் எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு குறிப்பதாக இரோசர் பென்ரோசும், நானும் உறுதி செய்தோம் என்கிறார் ஸ்டீஃபன் ஆக்கிங். ஆனால் கற்றை இயங்கியல் கோட்பாடு அண்டத்தின் முடிவு, தொடக்கம் ஆகியவற்றுக்கு முரணானது.

விரிவடையும் அண்டம்:

 நமது அண்டத்தில் சில பத்தாயிரம்கோடி திரள்கள் உள்ளன. திரள் (GALAXY) ஒவ்வொன்றும் சில பத்தாயிரம் கோடி விண்மீன்களைக் கொண்டுள்ளது. திரள்கள் சுருள் வடிவத்தில் உள்ளன. நமது திரளான பால் வீதி என்பது நூறாயிரம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. நமது திரளில் உள்ள விண்மீன்கள் பல பத்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது திரளின் மையத்தைச் சுற்றி வருகின்றன. நமது ஞாயிறு என்பது நமது பால் வீதித் திரளின் சுருள் கைகளின் உள்விளிம்புக்கு அருகே உள்ள சராசரி அளவுள்ள மஞ்சள் நிற விண்மீன் ஆகும். அனேகமாக எல்லாத்திரள்களும் நம்மை விட்டு விலகிச்சென்று கொண்டுள்ளன. மேலும் எந்த அளவு ஒரு திரள் தொலைவாக உள்ளதோ அந்த அளவு நம்மை விட்டு விரைவாக விலகிச்சென்று கொண்டுள்ளது. திரள்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள தொலைவும் இடைவிடாது அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன்படி நமது அண்டம் உண்மையில் விரிவடைந்து கொண்டுள்ளது.

கருந்துளை – இயன்வழுப்புள்ளி:

. பொதுச்சார்பியலில், எரிபொருள் தீர்ந்த பிறகு தானே தன் ஈர்ப்பினால் தகர்வுறும் விண்மீன் ஒரு வட்டாரத்தில் மாட்டிக்கொள்வதன் காரணமாக அதன் பரப்பு இறுதியில் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு ஆகி விடுவதால் அதன் பருமனும் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு சுருங்கி விடுகிறது. அந்த விண்மீனில் அடங்கிய பருப்பொருள்கள் அனைத்தும் சுன்னப்பருமனளவு கொண்ட மிகமிகச்சிறிய வட்டாரத்துக்குள் திணிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதனால் பருப்பொருள்களின் அடர்த்தியும் வெளி-கால வளைவும் ஈறில்லாததாக அதாவது எல்லையற்றதாக ஆகி விடுகின்றன. இந்த வெளி கால வட்டாரத்தையே நாம் கருந்துளை என்கிறோம். ஆகவே கருந்துளை என்பது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான ஒரு தகர்ந்துபோன விண்மீன் ஆகும். இந்த நிலையில்தான் கருந்துளை(BLACK HOLE) எனப்படும் ஒரு வெளி-கால வட்டாரத்துக்குள் அடங்கிய இயன்வழுப்புள்ளி(SIGULARITY) உருவாகிறது. வெளி-கால வளைவு ஈறிலையாகி அதாவது எல்லையற்றதாகி, ஒரு புள்ளி அளவான வெளி-கால வட்டாரமாதல் என்பதே இயன்வழுப்புள்ளி ஆகும். தொடக்கத்தில் அண்டம் ஒரு சுன்ன அளவாக இருந்தது என்பதோடு அதற்கு ஒரு மாவெடிப்பும்(BIGBANG) இருந்தது என்பதை இந்த இயன்வழுப்புள்ளித் தேற்றங்கள் காட்டுகின்றன. எனினும் அண்டம் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்துச் சார்பியல் கோட்பாடு ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில் எல்லா இயற்பியல் கோட்பாடுகளும் அண்டத்தின் தொடக்கத்தில் செயலிழந்து விடுகின்றன என அது ஊகிக்கிறது.

கருந்துளையும் சந்திரசேகர் வரம்பும்:

  பொதுவாக விண்மீன்கள் அவற்றின் அணுக்கருவினைகள் உருவாக்கும் வெப்பத்தால் ஈர்ப்புக்கவர்ச்சியைச் சரிசெய்து கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையாக இருந்து வரும். சான்றாக நமது ஞாயிறு இன்னும் ஐந்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குத்தேவையான எரிபொருளைக் கொண்டுள்ளது. ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிகமான எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு தன் ஈர்ப்பிற்கு எதிராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளமுடியாது என இந்தியாவைச் சேர்ந்த தமிழரான சந்திரசேகர் கணக்கிட்டார். அது இன்று சந்திரசேகர் வரம்பு என அழைக்கப்படுகிறது. ஒரு விண்மீன் எடை சந்திர சேகர் வரம்புக்கும் குறைவாக இருக்குமானால் தவிர்ப்புக்கொள்கை வழங்கும் விலக்கலைக் கொண்டு அது முடிவில் சுருங்குவதை நிறுத்திக்கொண்டு வெள்ளைக்குறளி (White Dwarf)) என்ற நிலையை அடையும். ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிக எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு சுருங்கத்துவங்கி, அதன் ஈர்ப்புப்புலம் மேலும் மேலும் அதிகமாகி ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலையை அடைந்து இறுதியில் பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான கருந்துளையாக ஆகும்.

கற்றை இயங்கியல்:

 கற்றை இயங்கியல் என்பது ஒரு நோக்காய்வுக்கான திட்டவட்டமான ஒற்றை முடிவை ஊகித்துச் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சாத்தியப்பாடுள்ள பல்வேறு முடிவுகளையும் அது ஊகித்தறிந்து ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு வாய்ப்புண்டு என்று நமக்குச் சொல்கிறது. ஆகவே கற்றை இயங்கியல் என்பது ஊகித்தறிய முடியாத தன்மை அல்லது திட்டவரையறையின்மை என்கிற தவிர்க்க முடியாத கூறு ஒன்றை அறிவியலுக்குள் அறிமுகம் செய்கிறது. ஆகவே இது உறுதியின்மைக் கொள்கை எனப்படும். அண்டம் தற்செயலால் ஆளப்படுகிறது என்ற கருத்தை ஐன்சுடீன் ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் அவர் இதை வன்மையாக எதிர்த்தார். ஆனால் உண்மையில் இந்தக்கோட்பாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் அனைத்திற்கும் அடிநாதமாய்த் திகழ்கிறது. தொலைக்காட்சிகள், கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்களின் இன்றியமையாத உறுப்புகளாகிய முத்தடையங்கள் (TRANSISTORS) மற்றும் தொகுப்புச்சுற்றுகள் ஆகியவற்றின் இயக்கத்தை இதுவே ஆள்கிறது. நவீன வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கும் இதுவே அடிப்படை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(6).

 பிளாங்கின் கற்றைக்கருதுகோள், ஒளிகள் என்பது அலைகளால் ஆனது என்றாலும் சிலவகையில் அது துகள்களால் ஆனதுபோல் நடந்துகொள்கிறது என்கிறது. அதனைக்கற்றைகள் எனப்படும் பொட்டலங்களாக மட்டுமே உமிழவோ அல்லது உட்கொள்ளவோ முடியும். கற்றை இயங்கியல் புத்தம் புதியவகையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் கற்றை இயங்கியலில் அலைகளுக்கும், துகள்களுக்கும் இடையே இரட்டைத்தன்மை உள்ளது. அதாவது சில நோக்கங்களுக்குத் துகள்களை அலைகளாகக் கொள்வதும், வேறு சில நோக்கங்களுக்கு அலைகளைத் துகள்களாகக் கொள்வதும் பொருந்திப் போகிறது(7). சான்றாக அணுக்கருவைச் சுற்றிவரும் மின்மத்தைத் துகளுக்குப்பதில் அலையாகக் கருதிக்கொள்ளலாம் என்பதன் மூலம் சில பிரச்சினைகளைக் கற்றை இயங்கியல் தீர்த்து வைத்துள்ளது.

தவிர்ப்புக்கொள்கை & எதிர்த்துகள்:

 வோல்ஃகேங் பாலி என்பவர், இரண்டு ஒத்தத்துகள்கள் ஒரே நிலவரத்தில் இருக்க முடியாது, அதாவது உறுதியின்மைக்கொள்கை விதிக்கும் எல்லைகளுக்குள் அவை இரண்டுக்கும் ஒரே நிலையும், ஒரே திசைவேகமும் இருக்கமுடியாது என்ற தவிர்ப்புக்கொள்கையை கண்டுபிடித்தார். தவிர்ப்புக் கொள்கை இல்லாமல் உலகம் படைக்கப்பட்டிருந்தால் பொடிமங்கள் தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட நேர்மங்களாகவும், நொதுமங்களாகவும் அமையமாட்ட. அவை மின்மங்களோடு சேர்ந்து தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட அணுக்களாகவும் அமையமாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங். பால் டிராக் என்பவர் மின்மத்துக்கு ஒரு பங்காளி, அதாவது ஓர் எதிர்மின்மம் அல்லது நேராக்கமின்மம்(POSITRON) இருந்தாகவேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். இதன்படி, ஒவ்வொரு துகளுக்கும் எதிர்த்துகள் உண்டு; அவை ஒன்றோடு ஒன்று மோதி அழியும்; அவைகளின் ஆற்றல்கள் மட்டுமே எஞ்சி நிற்கும். எதிர்த்துகளிலிருந்து உருவான முழு எதிருலகங்களும் எதிர் மக்களினமும் இருக்கக் கூடும். நாமும் நமது எதிர்த்துகள் நபரும் சந்தித்தால் இருவரும் அழிவோம். ஆனால் நம்மைச்சுற்றி எதிர்த்துகள்களைக்காட்டிலும் துகள்களே அதிகமாக உள்ளன என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(8).

விசையேந்தித் துகள்கள்:

 கற்றை இயங்கியலில் நேர்மங்கள், நொதுமங்கள், போன்ற பருப்பொருள் துகள்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் விசையேந்தித்துகள்கள் மாயத்துகள்கள் (VIRTUAL PARTICLES) எனப்படுகின்றன. ஏனெனில் இவைகளைத் துகள் கண்டுபிடிக்கும் கருவியால் கண்டுபிடிக்க முடியாது. அவை பருப்பொருள் துகள்களுக்கிடையே விசைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த விசையேந்தித்துகள்கள் தவிர்ப்புக் கொள்கைக்கு கீழ்ப்படிவதில்லை. அதன் காரணமாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய விசையேந்தித் துகள்களுக்கு எல்லையேதும் இல்லை. விசையேந்தித் துகள்களில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மெல்அணுக்கருவிசை (WEEK NUCLEAR FORCE), வல் அணுக்கரு விசை (STRONG NUCLEAR FORCE) ஆகிய நான்கு வகையினங்கள் உண்டு.

கருந்துளைகளின் கதிர்வீச்சு:

 ஒரு கருந்துளை என்பது பெருந்தொலைவுக்குத் தப்பிச்செல்ல இடமளிக்காத நிகழ்ச்சிக்கணம் ஆகும். கருந்துளையிலிருந்து தப்பிச்செல்ல கடைக்கணத்தில் முடியாமற்போய் எக்காலத்திற்கும் ஓரத்திலேயே வட்டமடித்துக்கொண்டிருக்கும் ஒளிக்கதிர்களின் வெளி-காலப்பாதைகளே கருந்துளையின் எல்லையாகிய நிகழ்ச்சி விளிம்பாக அமைகின்றன. கற்றை இயங்கியலின் உறுதியின்மைக்கொள்கைப்படி சுழலும் கருந்துளைகள் துகள்களைப் படைக்கவும், உமிழவும் வேண்டும். சார்பியலின்படி, கருந்துளையின் நிகழ்ச்சி விளிம்பிலிருந்து எதுவுமே தப்பிச்செல்ல முடியாது எனில் அது துகள்களை உமிழ்வது சாத்தியமற்றது. ஆனால் துகள்கள் கருந்துளையின் நிகழ்ச்சிவிளிம்பை ஒட்டிப்புறத்தே இருக்கும் ‘வெற்று’ வெளியிலிருந்து உமிழப்படுகின்றனவே தவிர கருந்துளைக்கு உள்ளிருந்து உமிழப்படுவதில்லை என கற்றை இயங்கியல் கோட்பாடு பதில் தருகிறது.

 ‘வெற்று’ வெளியென்று நாம் சொல்வது அடியோடு வெற்றாக இருக்க முடியாது. வெற்று வெளியில் ஈர்ப்புப் புலம், மின்காந்தப்புலம் போன்றவற்றைத் துல்லியமான முறையில் சுன்னமாக நிலைப்படுத்த முடியாது. இந்த வெற்றுப் புலத்தில் குறிப்பிடத்தக்கக் குறைந்தபட்ச உறுதியின்மை, அல்லது கற்றை ஏற்றவற்றங்கள் இருந்தாக வேண்டும். இந்த ஏற்றவற்றங்களுக்கு ஒளி அல்லது ஈர்ப்புத் துகளின் இணைகள் காரணமாகலாம். விசையேந்தித் துகள்களை ஒத்த மாய இணைகளாக மின்மங்கள் அல்லது பொடிமங்கள் போன்ற பருப்பொருள் துகள்கள் இப்புலத்தில் இருக்குமென்றும் உறுதியின்மைக்கொள்கை ஊகிக்கிறது(9). இணைகள் என்பன துகளும் எதிர்த்துகளும் ஆகும். வெளியேறிச்செல்லும் கதிர்வீச்சால் கருந்துளையின் நிறை குறைந்து, அது மிகச்சிறியதாகி, இறுதிப்பெரும் உமிழ்வுத் தெறிப்பில், கருந்துளை அடியோடு மறைந்துவிடும் என ஊகிக்கிறார் ஆக்கிங். பொதுச்சார்பியலையும் கற்றை இயங்கியலையும் அடிப்படையாகக்கொண்ட ஊகித்தறிதலுக்கு, கருந்துளையின் கதிர்வீச்சுதான் முதல் சான்றாகத்திகழ்கிறது என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

புழுத்துளையும் காலப்பயணமும்:

  ஒளியைக்காட்டிலும் வேகமாகப் பயணம் செய்ய முடியுமானால் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என சார்பியல் கோட்பாடு கூறுகிறது. அதே சமயத்தில் ஒளி வேகத்தில் பயணம் செய்வது என்பது இயலாத ஒன்று என்பதையும் அது கூறுகிறது. வெளி-காலத்தை சுருட்டி வளைத்து இரு இடங்களுக்கு இடையே ஒரு புழுத்துளையை உருவாக்குவதன் மூலம் காலப்பயணத்தை மேற்கொள்ள முடியும். புழுத்துளை(wormhole) என்பது தொலைவாக விலகியுள்ள சற்றொப்பத் தட்டையான வட்டாரங்கள் இரண்டை இணைக்கக் கூடிய மெலிந்த வெளி-காலக் குழாய் ஆகும். கடந்த காலத்துக்குள் பயணம் செய்ய, வெளி-காலத்தை சுருட்டுவதற்குத் தேவை எதிர்மறை ஆற்றல் அடர்த்தி கொண்ட பருப்பொருள் ஆகும். வெளி-காலத்தை சுருட்டி வளைக்க முடியும் என்பதற்கு மறைப்புகளின் போது ஒளி வளைதல் இருப்பதும், காலப்பயணத்திற்கு இடமளிக்கத் தேவையான வழியில் அதனை வளைக்க முடியும் என்பதற்கு காசிமிர் வளைவு என்பது இருப்பதும் ஆய்வுச் சான்றுகளாக உள்ளன. எனவே அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறிச்செல்லும் பொழுது இறுதியில் காலப் பயணம் செய்யும் ஒரு கால இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்க்.

அண்டம் குறித்த முன்மொழிவு:

 வெளி-காலம் என்பது மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் தொடங்கியது என்றும், முழு அண்டமும் மறுதகர்வுற்றால் மாநெரிப்பு(BIG CRUNCH) இயன்வழுப்புள்ளியில் அது முடிவடையும் என்றும் பொதுச்சார்பியல் ஊகித்தது. மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் அறியப்பட்ட அறிவியல்விதிகள் அனைத்தும் செயலற்றுவிடும் எனவும் அது ஊகித்தது. ஆகவே அண்டத்தின் மிகவும் முற்பட்ட கட்டங்களைப்பற்றிப்பேச பொதுச்சார்பியலும் கற்றை இயங்கியலும் இணைந்த “ஈர்ப்பியல் கற்றைக் கோட்பாடு” என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

. ஒரு வெளி-காலத்தில், நிகழ்ச்சிகளுக்குக் கால ஆயத்தின் கற்பனை மதிப்பு இருக்குமானால் அது யூக்லிடியன் வெளி-காலம் எனச் சொல்லப் படுகிறது. நாற்பரிமாணம் கொண்ட யூக்லிடியன் வெளி-காலத்தில் உள்ள ஒரு புள்ளியின் நிலையைக்குறிக்க நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றுதிசைகளின் வெளி-கால ஆயங்கள் தவிர காலம் என்ற நான்காவது திசையின் ஆயமும் வேண்டும். ஆயம்(CO-ORDINATE) என்பது வெளி-காலத்தில் ஒரு புள்ளியின் நிலையைக் குறிக்கும் எண் ஆகும். யூக்லிடிய வெளி-காலத்தில் காலத்திசைக்கும், வெளித் திசைகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. கற்றை இயங்கியலைப் பொறுத்தவரை, கற்பனைக்காலத்தையும், யூக்லிடிய வெளி-காலத்தையும் பயன்படுத்தி மெய் வெளி-காலம் பற்றிய விடைகளைக் கணக்கிடலாம். கற்றை இயங்கியலோடு, ஈர்ப்பை ஒருங்கிணைக்க கற்பனைக்காலம் தேவைப்படுகிறது ஈர்ப்பியல் கற்றைக்கோட்பாட்டில் யூக்லிடிய வெளி-காலங்களைப் பயன்படுத்துகிற காரணத்தால் வெளி-காலம் நீட்சியில் வரம்புள்ளதாக இருந்த போதிலும் எல்லை அல்லது விளிம்பாக அமைந்த இயன்வழுப்புள்ளிகள் எதுவும் இல்லாதிருப்பது சாத்தியமாகும். ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொண்ட வெளி-காலம், புவியைப் போன்று இருக்கும். புவி நீட்சியில் ஈறுள்ளது. ஆனால் அதற்கு எல்லையோ விளிம்போ இல்லை. காலமும் வெளியும் எல்லையில்லாமல் ஈறுள்ளதாக இருக்கும் என்ற கருத்து ஒரு முன்மொழிவுதான் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

அண்டம்:

universe 417

 படத்தில் காட்டப்பட்டுள்ள அண்டம் வடதுருவத்தில் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி தெற்கே செல்லச்செல்ல விரிவடைகிறது என்பதை அதன் குறுக்குக் கோட்டின் வட்டங்கள் குறிக்கின்றன. அண்டம் நடுக்கோட்டில் அதிகபட்ச உருவளவை அடைகிறது. தொடர்ந்து அதிகரித்துச்செல்லும் கற்பனைக் காலத்தில் அண்டம் சுருங்கத்தொடங்கி தென்துருவத்தில் ஒற்றைப்புள்ளியில் முடியும். அண்டத்தின் உருவம் வட தென் துருவங்களில் சுன்னமாக இருந்தாலும் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்காது. ஆகவே அறிவியல் விதிகள் இங்கு செயல்படும். அண்டத்தின் தொடக்கத்தில் மாவெடிப்பும், அதன் இறுதியில் மாநெரிப்பும் இருக்கும் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அண்டம் பற்றிய மேற்கண்ட விளக்கமும் அதற்கான பூமியை ஒத்த படமும் ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் ஊகமாகும்(10). அண்டம் சுருங்கும் கட்டத்தில் எல்லையின்மைக்கொள்கை சீர்குலைவை அதிகரிக்கச் செய்து, உயிர்ப்பிறவிகள் வாழமுடியாத நிலைமையை உருவாக்குகிறது. ஆகவே அண்டம் விரிவடையும் கட்டத்தில் மட்டும்தான் அறிவு உயிர் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இருக்கும். இவை ஸ்டீபன் ஆக்கிங் கூறுவனவாகும்.

    அண்டம்

 காலமும் வெளியும் எல்லையற்ற, ஈறுள்ள அண்டம் - ஆக்கிங்

  இறுதியாக அண்டம் என்பது வெளியும் காலமும் சேர்ந்து இயன்வழுப்புள்ளிகளோ எல்லைகளோ இல்லாத ஈறுள்ள நாற்பரிமாண வெளியாக இருக்கும். ஒரு கூடுதல் பரிமாணம் கொண்டு புவி போன்று அமையும். புவிக்கு எல்லையோ விளிம்போ இல்லை. ஆதலால் அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும். ஆதலால் படைத்தவருக்கு இங்கு இடமில்லை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

பொருள் விளக்கம்:

1.வெளி-காலம்(SPACE-TIME): நிகழ்ச்சிகளைப் புள்ளிகளாகக் கொண்ட நாற்பரிமாண வெளி.

2.நிகழ்ச்சி(EVENT): காலத்தாலும், இடத்தாலும் குறித்துக் காட்டப்படும் ஒரு வெளி-காலப் புள்ளி.

3.ஆயங்கள்(CO-ORDINATES): வெளியிலும், காலத்திலும் ஒரு புள்ளியின் நிலையைக் குறித்துக்காட்டும் எண்கள்.

4.இயன்வழுப்புள்ளி(SINGULARITY): வெளி-கால வளைவு ஈறிலையாகி இருக்கிற அதாவது எல்லையற்றாக ஆகியிருக்கிற ஒரு வெளி-காலப் புள்ளி.

5.இயன்வழுப்புள்ளித்தேற்றம் (SINGULARITY THEOREM): குறிப்பிட்ட சில நிலைமைகளில் இயன்வழுப்புள்ளி என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்கிற தேற்றம். சான்றாக அண்டம் இயன்வழுப்புள்ளியிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று காட்டுகிற தேற்றம்.

6.எல்லையின்மைக்கொள்கை: அண்டம் ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை(INFINITY-ஈறிலி) என்ற கருத்து, நமது பூமி ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை என்பதைப்போன்றது.

7.கருந்துளை(BLACK HOLE): ஒரு வெளி-கால வட்டாரம். அங்கு ஈர்ப்பு விசை மிகமிக வலுவாக இருப்பதால் அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாது. இது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான தகர்ந்துபோன ஒரு விண்மீன் ஆகும்.

8.கற்றை இயங்கியல்(QUANTUM MECHANICS): பிளாங்கின் கற்றைக் கொள்கை (QUANTUM THEORY)யிலிருந்தும், எய்சன்பர்க்கின் உறுதியின்மைக் கொள்கை(UNCERTAINTY PRINCIPLE)யிலிருந்தும் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடு.

9.மாநெரிப்பு(BIG CRANCH): அண்டத்தின் முடிவிலான இயன்வழுப்புள்ளி

10.மாவெடிப்பு(BIG BANG): அண்டத்தின் தொடக்கத்திலான இயன்வழுப்புள்ளி

சான்று நூல்: காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 267-276.

பார்வை:

1.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 14, 15.

  1. “ “ “ பக்: 29.
  2. “ “ “ பக்: 33.
  3. “ “ “ பக்: 41
  4. “ “ “ பக்: 44, 45.
  5. “ “ “ பக்: 78, 79.
  6. “ “ “ பக்: 79, 80.
  7. “ “ “ பக்: 93, 94.
  8. “ “ “ பக்: 145.
  9. “ “ “ பக்: 169, 170.

11. “ “ “ பக்: 267-276

- கணியன் பாலன், ஈரோடு

Pin It