இந்தியாவின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்; அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்; தமிழர்களின் தாழ்நிலை அகற்றி, வாழ்வு உயரப்பாடுபட்டவர்; தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் எழுதித் தமிழின் பெருமையைத் தரணியறியச் செய்தவர்; பேச்சிலும் எழுத்திலும் ‘தமிழ் மரபு’ இது, - ‘அயல் மரபு’ இது என விளக்கியவர்; அஞ்சாது எடுத்து முழக்கியவர்; தென்னகத்தில், தாய்த்தமிழ் காக்க நிகழ்ந்த மொழிப் போரில், முன்னின்று போராடியவர். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனாரோடு சேர்ந்து தேச விடுதலைத் தீக்கொழுந்தைத் தென்னாடெங்கும் எரியவிட்டவர்; அவர் தோற்றுவித்த கப்பல் கழகத்தின் செயலராக இருந்து கருத்தோடு செயல்பட்டவர்; ஒத்துழையாமை இயக்கத்திலும், தீண்டாமை ஒழிப்பிலும் அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவர்; தம் குடும்பத்திலிருந்து ஏழு பேரைச் சிறைக்கு அனுப்பி, இந்திய விடுதலை வரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர்! இப்படியெல்லாம், பல்வேறு புகழ்மொழிகளுக்குப் பாத்திரமானவர்தான் ‘பசுமலை நாவலர்’ சோமசுந்தர பாரதியார்!

Somasundara bharathiarஇவரது தந்தையார், எட்டையபுரம் எட்டப்பிள்ளை, தாயார் முத்தம்மாள். பிறந்த நாள் 28.07.1879; இவருக்குப் பெற்றவர்கள் இட்ட பெயர் சோமசுந்தரம்.

எட்டையபுரம் அரண்மனையில் முதன்மை ஆசிரியராக இருந்த சங்கர சாஸ்த்திரியாரிடம் தமிழ் மொழி, வடமொழி இரண்டிலும் எழுத்தறிவைப் பெற்றார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கற்கத் தொடங்கினார். பின்பு உயர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கியபோது, ‘பாட்டுக்கு ஒரு புலவன்’ மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் நெருங்கிய தோழர்களாக விளங்கினார்! இவ்விருவரும் பிறவியில் ‘இரட்டையர்களாக’ இல்லாவிடிலும், எட்டையபுரத்தில் பிறந்த ஒரு மட்ட வயதினர்! அப்போதெல்லாம், திருநெல்வேலியில் நெல்லையப்பக் கவிராயரது வீட்டில் தமிழ்ப் புலவர்கள் கூடிக் கலந்துரையாடி மகிழ்வார்கள். அக்கூட்டத்தில், இனிய தமிழ் சோமசுந்தரமும், கவிபாடும் சுப்பிரமணியமும் கலந்து கொள்வர். பைந்தமிழ்ச் சுவையைப் பருகி மகிழ்வர்!

ஒருசமயம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புலவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் வெண்பாபோட்டி அறிவிக்கப்பட்டது. அப்போட்டியில் இவ்விருவரும் கலந்து கொண்டு வெண்பாக்களை இயற்றிப் பாடினர். “இந்த இளம் வயதிலேயே இத்துணை அழகாக வெண்பாப் பாடுகிறார்களே!” என்று வியந்து ‘பாரதி’ என்னும் பைந்தமிழ்ப் பட்டத்தை வழங்கிப் பாராட்டினர். அன்றிலிருந்து சுப்பிரமணியம் ‘சுப்பிரமணிய பாரதி’ ஆனார்! சோமசுந்தரம் ‘சோமசுந்தர பாரதி’ ஆனார்!
திருநெல்வேலியில் உள்ள சர்ச் மிசன் உயர்நிலைப் பள்ளியில் படித்து, பின்பு கல்லூரியில் சேர்ந்து ‘இடைக்கலை’ (எஃப்-ஏ) படித்து முடித்தார்.

சென்னைக்குச் சென்று கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை (பி.ஏ) படித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றார். அவர் பயின்ற கிறித்துக் கல்லூரியில் அப்போது, ‘பரிதிமாற் கலைஞர்’, ‘கோபாலாச்சாரியார்’, ‘தமிழ்க் கடல் மறைமலையடிகளார்’ ஆகியோர் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, சட்டம் படித்துத் தேறினார். பின்னர், சென்னை அரசினர் வருவாய்த்துறை அலுவலகத்தில் எழுத்தராக நுழைந்தார். பாப்புனைவதில் வல்லவரான பாரதி, அங்கு ‘கோப்பு’களோடும் சில காலம் அல்லாடினார்!

அப்புறம் தனியாகத் தேர்வு எழுதி 1913 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பில் முதன் மொழியாகத் தமிழையும், துணை மொழியாக மலையாளத்தையும் எடுத்துப் பயின்று தேர்ச்சி பெற்றார்.

எட்டையபுரத்துக்கு அருகில் உள்ள கடம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரை 1894 ஆம் ஆண்டு தமிழ் முறைப்படி மணந்தார். முதல் மணைவி உடல்நலமின்றி இற‌ந்தமையால், வசுமதி என்பவரைத் திருமணம் புரிந்து கொண்டார்.

தூத்துக்குடியில் வழக்கறிஞராக 1905 முதல் 1920 ஆம் ஆண்டுவரை பணிபுரிந்தார். பின்னர், மதுரை ‘பசுமலை’-யில் இருந்து கொண்டு வழக்கறிஞராகத் திறம்படச் செயல்பட்டார். அக்காலத்தில் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று பாராட்டப்பட்டார்.

ஆங்கிலேய ஆட்சி ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் மீது கொடுமையான வழக்குகளைத் தொடுத்தது. வ.உ.சி மீதான வழக்குகளை எதிர்த்து வாதாடிய மிகச்சிறந்த வழக்கறிஞர்களுள் நாவலர் பாரதியாரும் ஒருவர் என்பது வரலாற்றுப் பதிவு.

நாவலர் பாரதியார் 1933 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தமிழின் சிறப்பு, தமிழர் கலை, பண்பாடு ஆகியன குறித்து தாம் கண்ட புதுமைக் கருத்துக்களை ஆணி அடித்தாற்போல் மாணவர் மனம் கொளச் சொல்லிப் பதியவைப்பார்.

நாவலர் பாரதியாரிடம் யாரெல்லாம் நற்றமிழ் பயின்றார்கள் தெரியுமா? டாக்டர் அ.சிதம்பநாதச் செட்டியார், ச.ஆறுமுக முதலியார், க.வெள்ளைவாராணனார், அ.மு. பரமசிவானந்தம், அ.ச. ஞானசம்பந்தன் ஆகியோர் நாவலரிடம் தமிழ் பயின்று பிற்காலத்தில் நற்றமிழ் அறிஞர்களாக நாடும் ஏடும் புகழச் சிறப்புப் பெற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கு மத்தியில் நாவலர் பாரதியார், ‘விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் வெண்ணிலா’ எனத் திகழ்ந்தார்.

‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சி.யின் நட்பால் நாவலர் பாரதியாருக்கு நாட்டு விடுதலையில் நாட்டம் ஏற்பட்டது. நெல்லை மாநகரில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை தலைமையேற்று நடத்தினார். காந்தியடிகளைத் தென்தமிழ் நாட்டுக்கு முதன் முதலில் வரவழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்த பெருமை நாவலர் பாரதியாரைச் சாரும். அதேபோல், அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இவர் பணிபுரிந்த போதுதான், காந்தியடிகள் அங்கு வந்தார். தம் அருமைப் பெண் குழந்தைகளான மீனாட்சி, லலிதா ஆகிய இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றி நாட்டு விடுதலைக்கு நன்கொடையாக அண்ணல் காந்தியடிகளிடம் அளிக்கச் செய்தார்.

“பொதுக் கூட்டங்களில் தமிழர்கள் தாய் மொழியிலேயே பேசுதல் வேண்டும். அயல்மொழியில் பேசுதல் கூடாது. எவரேனும் அயல்மொழியில் பேசப் புகுந்தால், அவரைத் திருத்தும் பொறுப்பைப் பொது மக்கள் ஏற்றல் வேண்டும்” என்று சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பாக தஞ்சையில் 1918 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அக்காலத் தமிழரின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். நாவலர் பாரதியார் பொதுக்கூட்ட மேடைகளில் தமிழ் ஒலிக்கச் செய்தார்.

‘முத்தமிழ்க் காவலர்’- கி.ஆ.பெ. விசுவநாதத்தால் தொடங்கப்பட்ட ‘தமிழர் கழக’கத்தின் தலைவரானார் நாவலர் பாரதியார்.

சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக 1937 ஆம் ஆண்டு இருந்த இராசகோபாலச்சாரியார், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தார். இதைத் தமிழகம் முழுவதும் எதிர்த்தது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடுகள் அனைத்திலும் நாவலர் பாரதியார் பங்கு கொண்டு முழங்கினார்.

சென்னையில் 1937 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில், “இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைப்பது, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழர் நாகரிகத்திற்கும் கேடு செய்யும். சட்டசபைகளிலும், நீதிமன்றங்களிலும் அரசியல் அலுவல் கூடங்களிலும் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுதல் வேண்டும்”. என்று தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.

“கல்லூரி வகுப்பறையில், பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மேலே மின்விசிறி சுழன்றாட, விரிந்த ஏட்டில் தெரிந்த செய்தி இது என்று நீட்டி முழக்கி ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்திருக்க வேண்டிய அந்தப் பேராசிரியர், குகை விட்டுக் கிளம்பிய புலி எனப் போர்க்கோலம் பூண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி, உரத்தக் குரலில், உறங்கிடுவோர்க்கும் உணர்ச்சி ஏற்படும் வகையில் தமிழின் தன்மையை அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்ல வேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைத் தவறாது ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்!" என்று பேரறிஞர் அண்ணா, நாவலர் பாரதியாரைப் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளார்.

‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘சேரர் பேரூர்’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’, ‘தொல்காப்பியர் பொருட்டலப் புத்துரை’. ‘மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி’, ‘மாரி வாயில்’ ‘நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சிகள்’- போன்ற தமிழ் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

நாவலர் பாரதியார் ‘உரைநடை வித்தகர்’ என்பதுடன் ‘கவிதை புனையும் பாவாணராக’வும் விளங்கினார்.

தமிழ் இலக்கண-இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என்பன குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அக்காலத்தில் வெளிவந்த பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ‘ஆரிய-திராவிட’ எதிர்ப்பு அரசியல் நடந்த நேரம் அது. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றும், ‘கூடாது’ என்றும் சொற்போர் ஒன்று 14.03.1943 இல் சேலத்தில் நடைபெற்றது. ‘கொளுத்தக் கூடாது’ என வாதிட்டவர் நாவலர் பாரதியார். ‘தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என வாதிட்டவர் பேரறிஞர் அண்ணா.

“ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதல்ல. அது தமிழ்நெறியன்று. ஆபாசக் கருத்துக்களை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல ஓர் சிறந்த கவியை நான் கண்டதில்லை. மக்களுக்கு அறிவூட்டுங்கள்; ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள்’ என்று தனது கருத்தை ஆணித்தரமாகக் விளக்கினார் நாவலர் பாரதியார். அதே நேரம், தமிழ் மறையாம், திருக்குறள் நூலுக்கு, பழைய உரையாசிரியர்கள் வழங்கியுள்ள பார்ப்பன ஆரியக் கருத்துக்களைக் கடுமையாகச் சாடியவர் நாவலர்”. “நச்சினார்க்கு இனியன் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்?”- என்று கேட்டவர்!

நாவலர் பாரதியாருக்கு 1944 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள், இவரது தமிழ்த் தமிழ்த் தொண்டைப் போற்றி, ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் ‘நாவலர்’ என்னும் பட்டமளித்துப் பெருமைப்படுத்தியது. அன்று முதற்கெண்டே, ‘சோமசுந்தர பாரதியார்’, ‘நாவலர் சோமசுந்தர பாரதியார்’ என்றழைக்கப்படலானார். (ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களால் பட்டமளித்துப் பாராட்டுப் பெற்ற ஒரே ஒரு தமிழ்நாட்டுப் புலவர் சோமசுந்தர பாரதியார் தான் என வரலாறு கூறுகிறது).

மதுரை ‘திருவள்ளுவர் கழகம்’ 17.01.1954 இல் பாராட்டு விழா நடத்தி ‘கணக்காயர்’ எனும் பட்டம் வழங்கியது.

தமிழுக்கும் தமிழகத்திற்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆற்றிய அருந்தொண்டுகளுக்காக, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 09.02.1955 இல் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

“சமயம், சாதி, கொள்கை, நடைமுறை முதலிய பல துறைகளிலும் பல வேறுபட்ட வகுப்புவாதங்களில் மெலிந்து வரும் தமிழ்ச் சமுதாயம் ஒற்றுமை பெற்று உய்வதற்கு உரிய ஒரு பெருந்துணையாய் உதவக் கூடியது தாய் மொழியகிய தமிழேயாகும்!” என முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 14.12.1959 ஆம் நாள் தமது எண்பதாம் வயதில் இமைகளை மூடினார்.

Pin It