ஆண்டுதோறும் சிவகாசி வட்டாரத்தில் உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி சார்பாக அனுஷ்டிக்கப்படும் பாரதிவிழா இந்த ஆண்டு உரிய சிறப்புடன் 20.9.2009 அன்று ஆலங்குளத்திற்கு அருகாமையில் உள்ள மாதாங்கோவில்பட்டியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு அது அனுஷ்டிக்கப்பட்ட விதத்தில் ஒரு கூடுதல் சிறப்பிருந்தது. வழக்கமாக எடுக்கப்பட்டுவந்த பொது நிகழ்ச்சியோடு இந்த ஆண்டு பாரதியை மையமாக வைத்து பள்ளி மாணவர்களிடையே கட்டுரை, கவிதைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

கவிதை கட்டுரைப் போட்டிகள்

பள்ளி மாணவர்கள் அவர்கள் பயிலும் வகுப்புகளை மையமாக வைத்து இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அதாவது 9,10 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிக்கு ‘பாரதியும் பெண்விடுதலையும்’ என்ற தலைப்பும் கவிதைப் போட்டிக்கு ‘கொடுமையை எதிர்த்து நில்’ என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டது. 11,12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டித் தலைப்புகளாக ‘பாரதியும் சமூக சீர்திருத்தப் பார்வையும்’ மற்றும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பள்ளிகளில் தற்போது நிலவிவரும் பொது விசயங்களில் அக்கறையில்லாத போக்கு எவ்வளவுதூரம் நமது இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய அனுமதிக்கப்போகிறது என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே நமது மனதில் இருந்தது. ஆனால் அந்த சந்தேகப் பார்வையினைப் பொய்ப்பிக்கும் விதத்தில் இவ்வட்டாரப் பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்கள ும் இந்த முயற்சிக்கு வழங்கிய ஆதரவும் வரவேற்பும் கல்விநிலையங்களில் சமூக மதிப்புகள் இன்னும் நிலவவே செய்கின்றன என்ற மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சியினை சிறப்பாகச் செய்துவிடலாம் என்ற உற்சாகத்தினை உருவாக்கியது. நமது தோழர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு உரிய மதிப்பளித்து ஆசிரியர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வதிலும் ஆசிரியர் மற்றும் நமது வேண்டுகோளுக்குச் செவிமடுத்து மாணவர்கள் பங்கேற்பதிலும் குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டினர். போட்டிக்கு வந்த கவிதை, கட்டுரைகள் இவ்வட்டார ஆசிரியர் பலரையும் மாற்றுக்கருத்து ஆசிரியர் சிவக்குமாரையும் மதிப்பீட்டாளர்களாகக் கொண்ட ஒரு குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுக்குரிய கவிதைகளும் கட்டுரைகளும் தெரிவுசெய்யப்பட்டன.

பரிசு பெற்ற மாணவ மணிகள்

அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளை எழுதிய 11,12 வகுப்பு மாணவர்கள் அ.ஞானசுந்தரி(11 ம் வகுப்பு B பிரிவு, விளாம்பட்டி, AVM மேல்நிலைப் பள்ளி), இரா.சேதுபதி(12 ம் வகுப்பு B பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குளம்), ஜெ.பரிமளச்செல்வி(12 ம் வகுப்பு A பிரிவு , அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குளம்) மற்றும் 9 மற்றும் 10 ம் வகுப்புப் பிரிவில் க.பவித்ரா(10 ம் வகுப்பு B பிரிவு, AVM மேல்நிலைப் பள்ளி, விளாம்பட்டி), இரா.நந்தகோபால்(10 ம் வகுப்பு B பிரிவு, AVM மேல்நிலைப் பள்ளி, விளாம்பட்டி), கு.கருப்பசாமி(10 ம் வகுப்பு B பிரிவு, AVM மேல்நிலைப் பள்ளி, விளாம்பட்டி) ஆகியோருக்கு முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் வழங்கப்பட்டன.

கவிதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 11,12 பிரிவுகளைச் சேர்ந்த ந.தமிழ் செல்வி (12 ம் வகுப்பு A பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளி,ஆலங்குளம்), ச.கவிமலர்(12 ம் வகுப்பு B பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குளம்), ம.அனிதா(11 ம் வகுப்பு A பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லமநாயக்கர்பட்டி) மற்றும் 9,10 பிரிவுகளல் இரா.நந்தகோபால்(10 ம் வகுப்பு B பிரிவு, புVனி மேல்நிலைப் பள்ளி, விளாம்பட்டி),டி.காளீஸ்வரி (10ம் வகுப்பு B பிரிவு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குளம்), சி.பாலசத்யா(9 ம் வகுப்பு A பிரிவு, AVM மேல்நிலைப் பள்ளி,விளாம்பட்டி) ஆகியோருக்கு முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தொ.மு.சி.ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற அரிய திறனாய்வு நூலும், இரண்டாவது பரிசாக த.சிவக்குமார் அவர்கள் எழுதிய ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ என்ற பகத்சிங்ன் கடிதங்களும் கட்டுரைகளும் அடங்கிய நூலும், மூன்றாவது பரிசாக வ.ரா. அவர்கள் எழுதிய ‘பாரதியின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலும், ஆறுதல் பரிசாக பங்கேற்ற அனைவருக்கும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக விளக்கும் நூலும் வழங்கப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர்.திலகபாமா, பேராசிரியர்.பெரியவர், மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.பரிசுகள் வழங்குதலுடன் பொது நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரிசு வழங்கிய மேற்கூறியவர்களோடு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் V.வரதராஜ், ஆசிரியர் சீனிராஜ் மற்றும் CWPயின் மாநில அமைப்பாளர் தோழர்.ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர். கூட்டத்திற்கு மாதாங்கோவில்பட்டி உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் பொறுப்பாளரும் போட்டிகள் ஏற்பாடு செய்வதில் தொடங்கி நிகழ்ச்சியினை சிறப்புற நடத்துவதுவரை அனைத்துக் கட்டங்களிலும் அரும்பணியாற்றியவருமான தோழர். த.செல்வக்குமார் தலைமை ஏற்று நடத்தினார்.

 மறக்கடிக்கப்படும் பாரதி

மாற்றுக்கருத்து ஆசிரியர் த.சிவக்குமார் தனது சிற்றுரையில் பாரதியின் வாழ்க்கையும் கருத்துக்களும் அரசாலும் கல்வித்துறையாலும் இருட்டடிப்பு செய்யப்படும் போக்கை எவ்வாறு இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யும்போது உணர நேரிட்டது என்பதை விளக்கினார். பாடப்புத்தகங்களில் பாரதியின் பாடல்களின் அடிக்குறிப்பாக வெளியிடப்படும் செய்திகள் தவிர வேறெதுவும் பாரதி குறித்து பள்ளி மாணவர்களுக்குத் தெரியாத நிலை எவ்வாறு நிலவுகிறது என்பதை எடுத்துரைத்தார். கவிதை, கட்டுரை தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் நூல்கள் சிலவற்றை மாணவர்களுக்கு வழங்குவதற்காக அப்போது மதுரை நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த புத்தகத் திருவிழாவில் தேட நேர்ந்தபோது உரிய முறையில் இன்றைய மாணவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை வெளிப்படுத்தும் நூல் எதுவுமே இல்லாத அதிர்ச்சி தரும் நிலை நிலவியதனை வருத்தத்துடன் எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி பாரதியைப்பற்றி அவதூறு பரப்பும் நூல்கள் பஞ்சமின்றி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வருந்தத்தக்க நிலையினையும் நினைவு கூர்ந்தார்.

ஜாதிகளுக்குள் வலிந்து திணிக்கப்படும் தலைவர்கள்

அவருக்குப்பின் உரைநிகழ்த்திய தனது பகுப்பாய்வுத் தன்மைவாய்ந்த உரையில் கவிஞர்.திலகபாமா அவர்கள் வன்முறை நிறைந்த சமூகத்தில் காந்தியடிகள் எவ்வாறு நினைவு கூறப்படுகிறாரோ அதுபோல் முற்றாகத் துடைத்தெரியப்படாத பெண்ணடிமைத்தனமும் நாள்தோறும் பெருகி வளர்ந்துவரும் பொருளாதார ரீதியான ஏற்றதாழ்வுகளும் தலைவிரித்தாடும் ஜாதியப்போக்குகளும் நிலவும் இன்றைய தமிழ்ச் சமூகம் பாரதியை நினைவு கூர்வதற்கு நம்மை இட்டுச் செல்கிறது என்று குறிப்பிட்டார். ஏற்கனவே நிலவிய ஜாதியப் போக்குகள் முற்றுப் பெருவதற்குப் பதிலாக எவ்வாறு இன்று அமைப்பு ரீதியாக வளர்க்கப்பட்டு அவ்வாறு வளர்க்கப்படும் ஜாதியக் கட்டமைப்புகளுக்குள் ஜாதியத்திற்கு அப்பாற்பட்டவர்களாக விளங்கிய பல தமிழ்நாட்டின் முன்னணித் தலைவர்களும் வலிந்துத் திணிக்கப்படுகிறார்கள் என்பதையும் வேதனை மற்றும் ஆதங்கத்துடன் நினைவுகூர்ந்தார். அத்துடன் சமூகத்தில் மக்களின் அத்தியாவசியமான உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்து பெருமிதத்துடனும் தங்களுக்குரிய அடையாளத்துடனும் வாழ்க்கை நடத்திய விவசாயிகள் இன்று விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் தங்களது அடையாளத்தினை அறவே இழந்து பணத்திற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அவலநிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சமூக அமைப்பில் மனிதனின் அந்நியமாதல் நிலை எவ்வாறு தோன்றி நிலை பெற்றுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். அதன் பின் உரையாற்றிய உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர்.வரதராஜ் சிவகாசி வட்டார உழைக்கும் மக்களின் பல்வேறு இன்னல்களையும் அவர்களின் பிரச்னைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவல நிலையினையும் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி அதனைக் கையிலெடுத்துச் செயல்படும் பாங்கினையும் தனது சுருக்கமான உரையில் இரத்தினச் சுருக்கமாக முன்வைத்து அடுத்து உரையாற்றுபவர்களுக்கு நேரத்தையும் வாய்ப்பினையும் வழங்கி அமர்ந்தார்.

 அவமானங்களே சன்மானங்களாக

பேராசிரியர்.பெரியவர் தனது உரையில் பள்ளிகளில் மட்டுமல்ல கல்லூரிப் பாடப்புத்தகங்களிலும் பாரதி எவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறான் என்பதையும் அவனது போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவமானங்களே அனுக்குச் சன்மானங்களாக கிடைத்தன என்பதையும் மாணவர் சமூகம் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாரதியின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உள்வாங்கிச் செயல்பட வேண்டும் என்பதையும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரும் சமூக இலக்கியக் கருத்துக்கள் பலவற்றை வழங்கியவரும் நச்சுப்புகையயன அவரதுகால இத்தாலி நாட்டை கவ்விப்பரவி அந்நாட்டின் உயர்ந்த சிந்தனையாளர் பலரை நூற்றுக்கணக்கில் பலிகொண்ட பாசிஸத்திற்கு இரையானவருமான கிராம்சியின் கருத்துக்களை அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் முன்வைத்து அமர்ந்தார்.

அடுத்து உரையாற்றிய ஆசிரியர் சீனிராஜ் அவர்கள் உரையில் சமூகத்தில் நிலவும் அவலங்களையும், சமூக மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கும் போக்கினையும் ஆழ்ந்த வேதனையுணர்வுடன் தனக்கே உரிய கவிதை நடையில் சுருங்கக் கூறி விளங்க வைத்தார்.

உழைக்கும் மக்களின் அமைப்பு பாரதிக்கு விழா எடுப்பதேன்?

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் கீழ்வரும் முக்கியக் கருத்துக்களை முன்வைத்தார்:

இன்றைய சமூகத்தில் அமைப்பு ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழில்களில் செயல்படும் தொழிற்சங்க அமைப்புகள் நிர்வாகங்களின் தொங்குசதைகள் ஆகிவிட்டன; எனவே தொழிற்சங்கங்கள் ஆற்ற வேண்டிய சமூகப் பங்கினை ஆற்றத்தவறி அவை அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் இன்னொரு சக்தியாக வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நிலையிலும் கூட அத்தகைய நிறுவனங்களில் பணிபுரிவோர் மத்தியில் இன்றும் உயர்ந்த சமூக மாற்றக் கண்ணோட்டத்தோடும் நோக்கோடும் தொழிற்சங்கங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துக் கொண்ட மேன்மை வாய்ந்த பகுதியினர் பலர் இருக்கவே செய்கின்றனர்.

ஆனால் ஒட்ட ஒட்டச் சுரண்டப்பட்டும், இன்னும் தொழிற்சங்கச் செயல்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவரப்படாமல் பலர் உள்ளனர், கொண்டுவரப்பட்ட ஒரு சிலரும் கணக்கு முடித்துத்தரும் அமைப்புகளெனும் கரும் குகைக்குள் சிக்கி வெளியேற வழிதெரியாதவர்களாக அல்லாடும் அவலநிலையில் உள்ளனர்.

தங்களது எண்ணிக்கைக் குறைவினால் அமைப்பு ரீதியான நேரடி நடவடிக்கைகளில் இறங்கி நிர்வாகத்தையும் அரசையும் நிர்ப்பந்திக்க முடியாத நிர்க்கதியில் கும்பகர்ணக் காலதாமதமெனும் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து கிடக்கும் நீதிமன்ற ரீதியான தீர்வுகளையே நாடவேண்டிய நிலையில் இன்றைய இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையில் அறுதிப் பெரும்பான்மையாக விளங்கும் சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக மாற்றக் கண்ணோட்டத்தோடு இருக்கும் பொதுத்துறை, உற்பத்தித்துறை மற்றும் அரசு ஊழியர்களையும் கொண்டுவந்து நிறுத்தி அமைப்பு ரீதியான போராட்டங்களை அவர்களும் நடத்த முடியும் என்பதை நிலைநாட்ட நம்மால் அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதே உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியாகும். இந்த உழைக்கும் வர்க்க அமைப்பிற்கும் இலக்கியத்திற்கும் நேரடியானத் தொடர்பு எதையும் பார்க்க முடியாது. இருந்தாலும் இந்த அமைப்பு பாரதி போன்ற ஒரு இலக்கியவாதிக்கு விழா எடுக்கிறது. அது ஏன்?

காசியில் உருவான கனல்

பாரதி அவன் பிறந்த எட்டயபுரத்திலிருந்து தன் தந்தையை இழந்த நிலையில் காசியில் தன் அத்தை வீட்டில் தங்கிப் படிக்கச் செல்லும்வரை இயற்கையை ரசிக்கும் அதனைப் பாடும் ஒரு இலக்கியவாதியாகவே இருந்தான். அவன் கருத்துக்களில் கனல் தெறிக்கச் செய்த எழுத்துக்களின் கரு அவன் காசியிலிருந்தபோதே ஏற்பட்டது . அப்போது நம்மை ஆட்சி செய்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலின் சவுக்கடியினை அவன் கண்டும் கேட்டும் உணர்ந்தான். அவன் வாழ்ந்த சமூகத்தை ஆட்டிப்படைத்த பத்தாம்பசலிப் பழக்க வழக்கங்களைக் கண்டு புழுங்கினான். அன்று சமூகத்தின் மையமாக இருந்த ஏகாதிபத்திய ஆட்சி ஏற்படுத்திய வேதனை அவனை வரக்கூடிய தலைமுறைகள் அனைத்தும் நினைவு கூரத்தகுந்த இலக்கியவாதியாக ஆக்கியது.

அரசியலும் இலக்கியமும் 

அதே வேதனை பலரை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல்வாதிகளாகவும் ஆக்கியது. அத்தகைய அரசியல்வாதிகள் தங்களது தர்க்கப்பூர்வ வாதங்களின் மூலம் அணுகி சமூகத்தின் வேதனையை எடுத்துரைத்து தங்கள் அரவணைப்பிற்குள் கொண்டுவர முடிந்த மக்களைக் காட்டிலும் அந்த வேதனையை உருக்கத்துடன் நயத்துடன் எடுத்துரைக்கக் கூடிய இலக்கியவாதிகள் தங்களது இலக்கியங்கள் மூலம் அணுக முடிந்த மக்களின் எண்ணிக்கை அதிகம். பாரதியின் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இந்த வேதனையையும் அதை ஒட்டி நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலையும் மையமாகக் கொண்டு ஏராளமான இலக்கியவாதிகள் உருவானார்கள். வங்கத்தில் நஸ்குல் இஸ்லாம், சரத்சந்திர சட்டர்ஜி, ஹிந்தியில் பிரேம்சந்த், மராத்தியில் காண்டேகர், தெலுங்கில் பி.ஸ்ரீ.ஸ்ரீ. போன்ற பலர் உருவானார்கள். எந்த சரியான அரசியல் தத்துவமும் கவிதா உணர்வு பொருந்திய இலக்கியவாதிகளை உருவாக்கத் தவறியதில்லை என்பதை இப்போக்கு நிரூபித்தது.

ஆளும் வர்க்கச்சதி துணைபோகும் இடதுசாரிகள் 

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வினை, ஜாதிய எதிர்ப்பினை, பெண் விடுதலையை உயர்த்திப் பிடித்து உயர்ந்த கவிதைகளை வழங்கிய பாரதி இன்று ஒரு ஜாதியவாதியாக பலரால் சித்தரிக்கப்படுகிறான். பாரதியின் நிறை குறைகளை அலசி ஆராய்கிறோம் என்ற பெயரில் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து எங்காவது ஓரிரு வார்த்தைகளை எடுத்து அவன் ஜாதியவாதி என்று நிறுவமுயலும் எழுத்துக்கள் புத்தகத்திருவிழாக்களின் அலமாரிகளை நிரப்புகின்றன. அவன் வாழ்க்கை மற்றும் எழுத்துக்கள் குறித்த கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதில் ஆளும் வர்க்கத்தின் பங்கும் பாத்திரமும் இருக்கிறது. அது இன்றும் பொருந்தக்கூடிய அவனுடையக் கருத்துக்களைக் கண்டு அஞ்சுகிறது. ஒரு காலத்தில் அவனது எழுத்துக்களை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இந்தியாவில் செயல்பட்டவர்களும் வர்க்க அரசியலைக் கைவிட்டு தற்போது ஜாதியவாத அரசியலை எதிர்க்காது மற்ற கட்சிகளைப் போல் அதன்மூலம் தேர்தல் ஆதாயம் ஈட்ட முடியுமா என்று பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அது ஜாதிய முரண்பாடே முக்கிய முரண்பாடு என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தி ஆளும் முதலாளி வர்க்கத்தை மூடிமறைத்துக் காக்கிறது.

மாணவர்களிடையே தொடங்கப்படும் எதிர் நீரோட்டம்

இந்த நிலையில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி பாரதி, பகத்சிங் போன்ற மாமனிதர்களை சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்ல மாணவர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்கிறது. வேலையைத் தேடித்தரும் கல்வி மறுக்கப்படும் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களிடையே தன்னலவாத மனநிலையைக் காட்டிலும் சமூக உணர்வு அதிகம் உள்ளது. மற்ற கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் இக்கருத்துக்கள் அவர்களிடம் மிக அதிக வரவேற்பைப் பெறுகின்றன இதை நமது அனுபவம் உணர்த்துகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு இப்போது அளித்தது போல் நல்ல ஆதரவை மென்மேலும் நல்கி பாரதி போன்றவர்களின் உயர்ந்த கருத்துக்கள் மக்களிடம் இன்னும் விரிவாகக் கொண்டு செல்லப்பட உதவ உழைக்கும் மக்கட் பகுதியினர் முன் வரவேண்டும் என்ற அறைகூவலுடன் தோழர் ஆனந்தன் அவரது உரையினை நிறைவு செய்தார். அவரது உரையுடன் நிகழ்ச்சி சிறப்புற நிறைவு பெற்றது.

Pin It