விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளின் உச்சமாக ரஷ்யாவில் செயல்பட்டுவந்த திமிங்கலச் சிறைச்சாலையை உடைத்தெறிய ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து விலங்குநல ஆர்வலர்களின் அறைகூவலை அடுத்து இந்த உத்தரவு வெளிவந்துள்ளது. பல ஆண்டுகள் நீண்ட சிறை வாழ்க்கையிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இனி சுதந்திரத்தின் ஆழ்கடலில் துள்ளிக் குதித்து நீந்தி விளையாடி மகிழட்டும்!

முதல் செய்தி

இங்கு குழந்தை நிலையில் உள்ள திமிங்கலங்களும் வயது முதிர்ந்தவையும் வாழ்கின்றன. 2018 நவம்பரில் இந்தச் சிறைச்சாலையைப் பற்றிய படங்களுடன், செய்திகள் முதல்முறையாக வெளியுலகிற்குத் தெரியவந்தன. ரஷ்யாவில் உள்ள சைபீரியப் பிரதேசத்தில் இருக்கும் இச்சிறைச்சாலைகள் குறித்த செய்திகளைப் பிராந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன ஆர்வலர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முதல்முதலாக உலகிற்கு அறிவித்தனர்.

செய்திகள் வெளிவந்தவுடன் விசாரணைகள் தொடங்கின. என்றாலும் சிறையின் செயல்பாடுகள் நீண்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தன. திமிங்கலங்கள் கடலரசன் என்று போற்றப்படும் கடல்வாழ் பாலூட்டிகள்; மிகப் பெரியவை. மிக அதிகமாக இன அழிவை எதிர்கொள்ளும் கடல்வாழ் விலங்குகளும் இவையே. ஆய்வுகளுக்காக ஆண்டிற்கு 13 திமிங்கலங்களை மட்டுமே கடலிலிருந்து பிடிக்க உலக நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வான்வழி ஆய்வுகள்

இந்நிலையில் ரஷ்யாவில் பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்துள்ள பகுதியில் நூற்றிற்கும் அதிகமான திமிங்கலங்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ரோன் விமானத்தின் உதவியுடன் பசுமை அமைதி இயக்கம் (Greenpeace), பிரிட்டன் டால்பின் மற்றும் திமிங்கலப் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் (Dolphin & Whale Conservation) இணைந்து இந்த உயிரினங்களைக் கண்டுபிடித்தது.breaking ice whale jail siberian timesசைபீரியா டைம்ஸ் என்ற இதழ் இது பற்றிய அதிர்ச்சி தரும் செய்திகளை 2018-19-இல் முதல்முதலில் வெளியிட்டது. ஆசியாவில் நஹோட்கா என்ற பகுதிக்கு அருகில் இச்சிறைச்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல கூண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்களை வான்வழி உற்றுநோக்கலின்போது காணமுடிந்தது. ஆய்வு செய்யப்பட்ட நேரத்தில் நீருக்குள் இருக்க வாய்ப்புள்ளதால் சிறையில் வாடும் இவற்றின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதற்காக இந்தச் சிறை?

முற்றிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தச் சிறைகள் செயல்படுகின்றன என்று ரஷ்ய க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 90 பெலுகா திமிங்கலங்கள், 11 ஓர்க்கா திமிங்கலங்கள் இந்தச் கடல் சிறையில் இருந்தன. சீனாவில் இருக்கும் கடல்சார் உல்லாசப் பூங்காவிற்காகவே இவை சிறை பிடிக்கப்படுகின்றன என்று 'நொவாயா கெசட்டா' என்ற பிராந்திய செய்தித்தாள் நடத்திய தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

ரஷ்யாவிலிருந்து ஆரம்பத்தில் மிகக் குறைந்த விலைக்கே இந்த உயிரினங்களைச் சீனாவில் செயல்படும் பூங்காக்கள் வாங்கின. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சீனாவில் இவற்றைக் காட்சிப்பொருளாக்கும் பூங்காக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆய்வுகளுக்காக மட்டுமே இவற்றைப் பிடிக்கலாம் என்று சர்வதேசச் சட்டம் கூறுகிறது.

காற்றில் பறக்கவிடப்படும் சட்டங்கள்

குட்டிகளையும் கருவுற்றிருக்கும் திமிங்கலங்களையும் பிடிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. கூட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட இவற்றைப் பிடித்துவைத்து நடத்தப்படும் ஆய்வுகளுக்கும் சர்வதேசச் சட்டத்தில் தடை உள்ளது. இவ்வாறு ஏராளமான சட்டமீறல்களை இந்தத் திமிங்கலச் சிறைகளை நடத்துபவர்கள் செய்கின்றனர்.

இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தும் இந்தச் சிறைகளை இழுத்துமூடித் திமிங்கலங்களை ஏன் ரஷ்ய அதிகாரிகள் விடுதலை செய்யவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தச் சிறைகளில் ஓர்க்கா அல்லது கொலையாளித் திமிங்கலங்கள் மற்றும் பெலுகா திமிங்கலங்களே அடைக்கப்பட்டுள்ளன.

சீனாவிற்கு ஒரு திமிங்கலம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. இவற்றை வாடகைக்குக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல சமயங்களில் ரஷ்யாவிலிருந்து இவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாடகைக்கு விலங்குகளைக் கொடுப்பதை அனுமதிக்கும் ரஷ்யச் சட்டத்தில் இருக்கும் சலுகைகளைச் சிறை நடத்தும் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன. 2013-2016 ஆண்டுகளுக்கு இடையில் 13 ஓர்க்கா திமிங்கலங்கள் இவ்வாறு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆபத்தாகும் அழகு

ஓர்க்கா மற்றும் பெலுகா திமிங்கலங்கள் பார்க்க அழகாக இருக்கும் என்பதால் சீனா இவற்றைக் காட்சிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறது. சைபீரியப் பகுதியில் நான்கு நிறுவனங்கள் சிறைச்சாலைகளை நடத்துகின்றன. இவற்றிற்கு எதிராகச் சர்வதேச மற்றும் பிரதேச அளவில் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றங்களிலும், தொடர்புடைய அரசுத்துறைகளிலும் எண்ணற்ற புகார்களைக் கொடுத்துள்ளன.

நிராகரிக்கப்படும் நீதி

மூன்று நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டே தாங்கள் திமிங்கலங்களைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறுகின்றன. சட்டப்பூர்வமாகவே திமிங்கலங்கள் தங்களுக்குக் கிடைத்தன என்று அவை வாதிடுகின்றன. ஆனால் திமிங்கலங்களை விற்கவோ, வாங்கவோ, பிடித்துவைக்கவோ அனுமதியில்லை என்று சட்டம் கூறும்போது இவர்களுக்கு எவ்வாறு சட்டப்பூர்வமாகத் திமிங்கலங்கள் கிடைக்கும் என்று தொண்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.

பிரபல சூழல் செயல்பாட்டாளரும் கடல் ஆய்வாளருமான ஜீன் மைக்கேல் கூஸ்டோ, ரஷ்ய அதிபரின் கவனத்திற்குத் திமிங்கலச் சிறைச்சாலை பற்றிய செய்தியைக் கொண்டுசென்றார். சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்த உயிரினங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளே இவற்றைக்க கூட்டமாகப் பிடித்துக் கூண்டில் அடைக்கக் காரணம்.

விடுதலை! விடுதலை!! திமிங்கலங்களின் விடுதலை!

பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பல்வேறு விடாமுயற்சிகளின் விளைவாக இப்போது ரஷ்ய அதிகாரிகள் இந்தச் சிறைகளை இழுத்து மூட உத்தரவிட்டுள்ளனர். முதலில் வயது முதிர்ந்த திமிங்கலங்கள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட்டித் திமிங்கலங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுப் பின்னர் அவை கடலில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆய்வுகள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளிலும் எண்ணற்ற விலங்குகள் ஒவ்வொரு நாளும் மனிதனால் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வாக இந்தத் திமிங்கலச் சிறைகளின் அழிவு அமையட்டும்! பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழட்டும்!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.