கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உலகில் தாவர வளம் மிக்க, ஆனால் இன்னும் விஞ்ஞானிகள் கண்டறியாத செழுமை மிகுந்த 33 இருண்ட பகுதிகளை (dark hotspots) விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். செழுமை மிக்க இருண்ட இடங்கள் என்பவை புவியியல், வகைப்பாட்டியல் ரீதியாக விவரங்கள் அதிகம் அறியப்படாத பகுதிகள். இங்கு உள்ள ஆயிரக்கணக்கான தாவரங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது.

forest mist 479போர்னியோவில் (Borneo) தரைக்கு கீழ் வளர்ந்து பூக்கும் பனை மரம் முதல் தன் வாழ்நாள் முழுவதும் மற்ற தாவரங்களில் வாழும் மலகசி அலங்காரத் தாவரம் வரை ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் டஜன் கணக்கிலான புதிய இனங்களைக் கண்டுபிடிக்கின்றனர். என்றாலும் இன்னமும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை அழியும் ஆபத்திலும் உள்ளன.

இத்தகையவற்றை இனம் காண ஆய்வாளர்கள் உலகின் எப்பகுதிகளில் தங்கள் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று இலண்டன் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். மடகாஸ்கர் முதல் பொலிவியா வரை தாவர உயிர்ப் பன்மயத் தன்மை மிகுந்த பகுதிகளை வலுவான தேடலுடன் ஆய்வாளர்கள் கண்டறிய உதவும் வகையில் க்யூ பூங்கா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.

இது பற்றிய ஆய்வுக்கட்டுரை New Phytologist என்ற இதழில் வெளிவந்துள்ளது. க்யூ விஞ்ஞானிகள் 2023ல் நடத்திய ஆய்வு முடிவுகளின் பகுப்பாய்வுகளில் இருந்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. இன்னும் விவரிக்கப்படாத மொத்த தாவர இனங்களில் மூன்றில் ஒரு பகுதி தாவரங்கள் விரைவில் அழியும் ஆபத்தில் உள்ளன என்று முந்தைய ஆய்வு கூறியது.

வருங்கால மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் பிற புதிய கண்டுபிடிப்புகளுக்கான இரகசியங்களை இந்த தாவரங்கள் பெற்றுள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சூழல் பாதுகாப்பிற்கு உதவுதல், புதிய தாவரங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தை அதிகப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டே இந்த ஆய்வுகள் நடந்தன. இப்போதுள்ள வேகத்தில் ஆய்வுகள் தொடர்ந்தால் இதுவரை கண்டறியப்படாத பல புதிய தாவரங்களும் அறிவியலால் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிந்துவிடும். பூமியில் மனிதன் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகக் கருதப்படும் பழமையான, தலைகீழாக வளர்வது போல தோற்றமளிக்கும் மடகாஸ்கர் பயபாஃப் (Baobab trees), கொலம்பியா மலைப்பகுதிகளில் புற்கள், பாறைகள் மிகுந்த இடங்களில் வளரும் எஷ்ஃபிலீசியா பாக்லயானா (Espeletia barclayana) இனத்தைச் சேர்ந்த, முட்கள் அதிகம் உள்ள அரிய வகை பூக்கும் தாவரம், தண்டில் மணி போன்ற அமைப்பில் பிங்க் கலந்த சிவப்பு நிற பூக்கள் கொத்தாக பூக்கும் சியடண்ட்ர இனத்தைச் (Cyrtandra genus) சேர்ந்த இதுவரை 112 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியூ கினியாவின் அபூர்வ தாவரம் போன்றவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

தாவர வளம் மிகுந்த இருண்ட இடங்கள்

இப்போது நடைமுறையில் இருக்கும் ஐநாவின் பத்தாண்டிற்கான இலக்கின்படி புவிக்கோளின் 30% பகுதிகளை பாதுகாக்க வேண்டும். ஆனால் இதில் எப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல் இல்லாமல் அரிய தாவரங்களை நம்மால் காப்பாற்ற முடியாது. உயிரியல் பன்முகத் தன்மையை முன்பு உயிரியலாளர்கள் சரிவர ஆவணப்படுத்தவில்லை என்று முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரிகிறது.

இதனால் விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் முன்பு சென்ற இடங்களுக்கே சென்று ஆய்வுகளை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான இனங்கள் உள்ள சில பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று க்யூ பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனரும் ஆய்வுக் கட்டுரையின் மூத்த ஆசிரியருமான பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.

இந்த இருண்ட பகுதிகளில் பெரும்பாலானவை ஆசியாவிலேயே உள்ளன. இதில் அவசரமாக ஆராயப்பட வேண்டிய பகுதிகள் என்று சுமத்ரா தீவு, கிழக்கு இமயமலைப் பகுதி, அஸ்ஸாம் இந்தியா, வியட்நாம், ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்காவில் கேப் மாகாணம், தென்னமெரிக்காவில் கொலம்பியா, பெரு மற்றும் தென் மேற்கு பிரேசில் உள்ளிட்ட 22 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

“பூமியின் எப்பகுதிகளில் தாவர வளம் அதிகமாக உள்ளது என்று தெரியாமல் நம்மால் அவற்றைக் காப்பாற்ற முடியாது. வளம் மிக்க இந்த இருண்ட இடங்கள் உள்ள நாடுகளில் தாவர இனங்களை அதிகாரப்பூர்வமாக கண்டறிய உதவும் வசதிகள் குறைவாகவே உள்ளன” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் இலண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழக தாவரவியலாளரும் க்யூ பூங்காவின் கௌரவ ஆய்வாளருமான டாக்டர் சாம்யெல் பயனான் (Dr Samuel Pironon) கூறுகிறார்.

இந்த ஆய்வு வருங்காலத்தில் புதிய இனங்களை அடையாளம் காண உலகம் முழுவதும் உள்ள ஆய்வு அமைப்புகளையும் உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அரிய தாவரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல பன்னாட்டு அளவில் தடை உள்ளது. இந்த இனங்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் பொது மக்கள் இவற்றை அகற்றவோ சேகரிக்கவோ கூடாது.

என்றாலும் பொது மக்கள் இத்தாவரங்களை புகைப்படம் எடுத்து ஐநேச்சுரலிஸ்ட் (iNaturalist) போன்ற மக்கள் அறிவியல் இணைய தளங்களில் பதிவிடலாம். இது பொது மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை அதிகப்படுத்தும். இத்தளங்களைச் சார்ந்தும் ஆய்வாளர்கள் செயல்படுகின்றனர். உலகில் உள்ள மற்றவர்கள் அறிய ஆர்வம் உடைய தகவல் இது என்று நம்பும் பொது மக்கள் இத்தாவரங்களின் புகைப்படங்களை இது போன்ற இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.

விஞ்ஞானிகள் இத்தகவல்களை புதிய இனங்களை அடையாளம் காண உதவும் முக்கிய விவரமாக கருதுகின்றனர். வருங்கால உயிர்ப் பன்முகத் தன்மை உச்சி மாநாடுகளிலும் இந்த ஆய்வின் முடிவுகள் இன்றியமையாத கொள்கைகளை வகுக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/oct/01/kew-botanic-gardens-study-33-dark-spots-plant-species-identification-unknown-biodiversity-?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்