கீற்றில் தேட...

“என்னை சாப்பிடு… என்னை சாப்பிடு” என்று தூண்டி உடலை அசைத்து காட்டி தவளையைக் கவரும். அதை நம்பி தவளை நாக்கை நீட்டும்போது ஒரு பக்கம் சரிந்து முகத்தின் மீது பாய்ந்து பிடிக்கும். தொண்டையை அல்லது வாயின் அடிப்பாகத்தை இறுக்கிப் பிடித்துக் கடித்து பற்றிக் கொள்ளும். பிறகு தவளை தப்ப வழியில்லை. பழங்கால பேய்க் கதைகளில் வரும் பேய் பிசாசைப் போல தவளையின் தலையும் கால்களும் மட்டுமே மிஞ்சும்.

ஒரு தவளை வாழ்நாளில் ஒட்டும் தன்மையுடைய, வெளியில் நீட்டக்கூடிய நாவால் ஆயிரக்கணக்கான உயிரினங்களை உண்கின்றன. வாயைத் திறப்பது, நாக்கை நீட்டுவது, வாய்க்குள் போட்டு விழுங்குவது - இதுதானே இதுதானே தவளைகளின் வழக்கமான உணவு உண்ணும் முறை!?

இது போன்ற இரை பிடி உயிரினங்களில் இருந்து தப்பிப் பிழைக்க பல விதமான தந்திரங்களை பரிணாமரீதியில் பல விலங்குகள் பெற்றுள்ளன. எதிரிகளால் இரையாக்கப்படாமல் இருக்க சில சமயங்களில் அருவருக்கத்தக்க சுவையுள்ள அல்லது நச்சுத் தன்மையுடைய வேதிப்பொருட்களை இவை வெளிவிடுகின்றன. தவளைகளை குழப்பத்தில் ஆழ்த்தி அல்லது பயமுறுத்தும் விதத்தில் அமைந்த கண் பொட்டு போன்றவை சிறப்பு அடையாளங்களாக சில வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் காணப்படுகின்றன.

எதிரிக்கு எதிரி

சில லார்வாக்களின் உருவம், கண்ணில் காணப்படும் அடையாளங்கள் அவை பாம்பென்று எதிரிகளால் தவறாக நம்பும் வகையில் அமைந்துள்ளன. என்றாலும் தவளைகளின் வாய்க்குள் சென்று அகப்பட்டு உயிரை இழப்பதே பல விலங்குகளின் பொது விதி.

ஆனால் இயல்பான இந்த இரையைப் பிடிக்கும் முறையைத் திருத்தி, திருப்பியடித்து இரையாக வந்த உயிரினமே இரை பிடி உயிரினமாக மாறி வெற்றிகரமாக வாழும் சில விலங்குகளும் பூமியில் உள்ளன.

எப்போமிஸ் இன மண் வண்டுகள்

எப்போமிஸ் (Epomis) இனத்தைச் சேர்ந்த மண் வண்டுகள், அவற்றின் லார்வாக்கள் இத்திறனைப் பெற்றுள்ளன. தவளை பாம்பை விழுங்கியது ஏன் என்பது நமக்குத் தெரியும். மிகச் சிறிய பாம்புகளை பெரிய தவளையினங்கள் விழுங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இது இயல்பிற்கு மாறானது, அசாதாரணமானது. “புலியைப் பூனை பிடித்தது” என்பது போல க்ளினியஸ் (Chlaenius) குடும்பத்தைச் சேர்ந்த எப்போமிஸ் துணைக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மண் வண்டுகள் (Groung beetles), புழுக்கள் தவளைகளை ஆக்ரமித்துப் பிடித்து, கொன்று தின்கின்றன.

Predation of amphibians by adult Epomisஇந்த உயிரினங்கள் பளபளப்புள்ள பச்சை அல்லது நீல நிற சிறிய வண்டுகள். இவற்றின் உடலில் கெட்டியான எலிப்ட்ரா என்ற மேற்பகுதி ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. கால்கள், உணர் நீட்சிகள் மஞ்சள் நிறம் உடையவை. மூன்று செண்டிமீட்டருக்கும் குறைவான அளவு மட்டுமே உள்ள இந்த குட்டி உயிரினங்களின் முட்டை விரிந்து உண்டாகும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற உடலில் கறுப்பு மற்றும் ஆரஞ்சு நிற அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றின் நீளம் இரண்டு செண்டிமீட்டர் மட்டுமே.

இரட்டைக் கொக்கிகளுடன் கூடிய தாடைப் பகுதியே இவற்றின் ஆயுதம். தன்னைப் பிடித்து உண்ண அழைப்பு விடுத்து பின் எதிரியின் மீதே தாவிப் பிடித்து அது உயிருடன் இருக்கும்போது அதை உண்ணும் அபாரமான ஆற்றல் இந்த வண்டுகள் மற்றும் அவற்றின் புழுக்களுக்கு உண்டு. இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கில் விசன் (Gil Wizen) மற்றும் அவைடல் கேஸித் (Avital Gasith) ஆகியோர் இணைந்து இந்த சுவாரசியமான ஆய்வுகளை மேற்கொண்டனர்; ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளனர்.

கேஸித் வனப்பகுதியில் ஒரு தவளைக்கு அருகில் ஏராளமான லார்வாக்கள் இருப்பதை அவைடல் கண்டார். இது பற்றிய ஆய்வுகளை நான்காண்டுகளுக்கு முன்பு அவர் தொடங்கினார். விஸனுடன் இணைந்து ஆய்விற்கான வழிமுறைகளை உருவாக்கினார். இந்த புழுக்கள் தவளைகளைக் கவரும் வகையில் செயல்பட்டு தங்கள் வலையில் சிக்க வைப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டனர். உணர் நீட்சிகளையும் தாடைகளையும் அவ்வப்போது இவை அசைத்துக் கொண்டு நிற்கும். இரை அருகில் வர வர லார்வாவின் அசைவுகள் வேகமாக நடக்கும்.

இதனால் தவளை கவரப்பட்டு சுலபமாக லார்வாவைப் பிடித்து உண்ணலாம் என்று நினைத்து அருகில் வருகிறது. பொதுவாக தவளைகள் பெரிய உயிரினங்களை விட அசைந்து கொண்டிருக்கும் சிறிய உயிரினங்களையே உண்பதற்கு அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றன. இவ்வாறு தவளையின் பார்வையில் லார்வா இரையாகத் தோன்றுகிறது. தவளையின் கவனத்தைக் கவரவே இவை இவ்வாறு உடலை அசைத்து அசைத்து “என்னை சாப்பிடு… என்னை சாப்பிடு” என்று அழைப்பு விடுக்கிறது.

ஒரு விநாடியில் பத்தில் ஒரு பகுதி நேரத்தில் இரையை விழுங்கும் திறன் பெற்ற தவளை லார்வாவைத் தாக்குகிறது. ஆனால் அதைவிட வேகமாக புழு செயல்படுகிறது. புழு ஒரு பக்கம் சரிந்து முகத்தின் மீது பாய்ந்து விழுந்து தவளையை ஆக்ரமிக்கிறது. அதன் வாய்க்குள் சென்று நல்ல இடத்தைக் கண்டுபிடித்து தன் வேலையை ஆரம்பிக்கிறது. தொண்டை அல்லது வாயின் அடிப்பகுதியில் இறுக்கமாகக் கடித்து, பிடித்து அப்படியே இருக்கும். பிறகு தவளை உயிர் தப்ப வழியில்லை.

லார்வா உடற்பகுதியைக் கடித்துப் பிடிக்கிறது. ஒட்டுண்ணி போல செயல்படுகிறது. இரையின் உடற்திரவங்களை உறிஞ்சிக் குடிக்கிறது. இரையின் கீழ்த்தாடைப் பகுதியை புழு சப்பி சிறிதுசிறிதாக உண்ண ஆரம்பிக்கிறது. இந்த வகை புழுக்கள் தவளைகளை மட்டுமே உணவாக உண்கின்றன. இதனால் வளர்ச்சியடைந்த வண்டுகள் பகல் நேரத்தில் தவளைகள் வாழும் ஈரமுள்ள மண்ணில் தங்குகின்றன. இரவில் இரை பிடிக்கவே இந்த ஏற்பாடு. மூன்று வண்டுகள் ஒரு தவளையின் பின் உடற்பகுதியில் தாக்குதல் தொடங்குவதை ஆய்வாளர்கள் கண்டனர்.

ஆய்வகத்தில் ஒரு வண்டு தவளையின் உடலின் பின்புறத்தைத் தாக்கியது. குதிரைப் பந்தயத்தில் ஒரு ஜாக்கி குதிரையின் மீது ஏறுவது போல இது இருந்தது என்று விஸன் கூறுகிறார். இதனால் துணுக்குற்ற இரை வேகமாக தன் உடலை உதறி தாக்குதலில் இருந்து தப்ப படாதபாடு பட்டது. ஒரு சில மணி நேரங்களுக்குள் இரையின் தலை மற்றும் கால்கள் மட்டுமே மிஞ்சின.

"வண்டு தவளையின் முதுகுப்பகுதி எலும்பைத் காயப்படுத்துவதில்லை. தவளையின் பின்னங்கால் தசைகளின் இணைப்பையே சேதப்படுத்துகிறது. இதனால் இரை தாவிக் குதித்து தப்பமுடியாது. இது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்” என்று விஸன் கூறுகிறார். நூறு சதவிகிதம் வெற்றி புழுக்களுக்கே. ஆய்வாளர்கள் கண்ட 400 நேரடி ஆக்ரமிப்புகளில் ஏழு முறை மட்டுமே தவளையின் வாயில் புழு சிக்கியது. மீதி சமயங்களில் நாக்கை நீட்டுவதற்கு இடையில் லார்வா தவளையின் முகத்தைப் பிடித்துக் கொண்டது.

வாந்தி எடுக்க வைத்து தப்பும் லார்வா

தவளை வாய்க்குள் போட்டு புழுவை விழுங்கிய போதும் அது அடிபணியவில்லை. அது தவளையை அதன் வாயில் இருந்தே துப்பச் செய்கிறது. வெளியில் வந்து விழும் லார்வா மறுபடி தவளையின் முகத்தைப் பற்றிப் பிடிக்கிறது. ஒரு தவளை லார்வாவை விழுங்கியதை ஆய்வின்போது விஞ்ஞானிகள் கண்டனர். அது தவளையின் வயிற்றில் இரண்டு மணி நேரம் இருந்தது. பிறகு தவளை புழுவை வாந்தி எடுத்தது. உயிரிழக்காத அந்த லார்வா மீண்டும் தவளையைத் தாக்கி சிறிது நேரம் முன்பு தன்னை விழுங்கிய தவளையை உண்ணத் தொடங்கியது.

மூன்று கட்டங்களில் வளரும் லார்வா அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய இரையை உண்கிறது. முதலில் ஓர் இரையை உண்ட லார்வா, பிறகு பொருத்தமான இடத்தில் ஒளிந்து கொள்கிறது. லார்வா பின் தன் கடினமான பாம்பின் சட்டை போலுள்ள தோலை உரிக்கிறது. அடுத்த கட்ட உடல் வளர்ச்சிக்காக அது அடுத்த இரையைப் பிடிக்கக் காத்திருக்கிறது. வயதிற்கு வந்த எப்போமிஸ் வண்டு இனத்தைச் சேர்ந்த வேறு சில புழுக்கள் பல வகை ஊர்வன உயிரினங்களை உணவாக உண்கின்றன.

இந்த வகை வண்டுகள் இஸ்ரேலின் மத்திய கடற்கரை சமவெளிப் பகுதியில் அதிகமாக வாழ்கின்றன. முதிர்ந்த வண்டுகள் வேறு பல உயிரினங்களை உண்கின்றன என்றாலும் இவை நேரடியாக தவளைகளைக் கண்டுபிடித்து ஆக்ரமித்து உண்ணும் இயல்புடையவை. புலி தன் இரையைப் பிடிப்பது போல இவை தவளையின் மீது பாய்ந்து தாக்கி அதைக் கொன்று உண்கிறது. உதறி உடலில் இருந்து வண்டை விரட்ட தவளை முயற்சி செய்தாலும் வண்டு தன் பிடியை விடுவதில்லை.

வண்டு தவளையின் மீது தாவி ஏறி அதன் இடுப்பில் அறுவை நடத்துவது போல ஒரு கீறலை (surgical cutting) ஏற்படுத்துகிறது. இதனால் காலில் இருக்கும் தசைகள் முறிந்து தவளை தாவ முடியாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது போன்ற நிலையை அடைகிறது. தாவ முடியாத, நின்ற நிலையிலேயே ஆடாமல் அசையாமல் நிற்கும் தவளையை வண்டு நிம்மதியாக நிதானமாக உண்ணத் தொடங்குகிறது.

தவளை பெரிதாக இருந்தால் ஹைனாப் பறவைகள் போல பல வண்டுகள் ஒன்றுசேர்ந்து கூட்டமாகத் தாக்கி உண்கின்றன. ஊர்வனவற்றைப் பிடித்து உண்ணும் உயிரினங்களின் மிகப்பெரிய தாக்குதல்களில் இருந்து தப்ப பலதரப்பட்ட வழிமுறைகளை பல விலங்குகள் பரிணாமரீதியில் பெற்றுள்ளன. தங்களை விட அளவிலும் வடிவிலும் பெரிய ஊர்வன வகை உயிரினங்களின் அச்சுறுத்தல் தொல்லையை சகிக்க முடியாத இந்த வகை உயிரினங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிரியை திருப்பித் தாக்கி வெற்றி அடைந்திருக்கலாம்.

இது காலப்போக்கில் இரை பிடித்தலில் புதிய திருப்பத்தை இந்த மண் வண்டுகள் போன்ற உயிரினங்களில் ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாழ்க்கையின் சில கட்டங்களில் இவை எதிரியை விட எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் இந்த முறையை அவை கையாண்டு வெற்றி பெற்றிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை வழக்கத்திற்கு மாறான இரை பிடிக்கும் முறையைக் கையாள்கின்றன. இரையை விட அளவில் சிறியவை. இவற்றின் புழுக்கள் தவளைகளை மட்டுமே உண்கின்றன. அவை உயிர் வாழ இந்த முறைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனால் இரையைப் பிடித்து அதன் உடலிற்குள் சென்று அதைக் கொல்லும் நடத்தையை இவை பெற்றுள்ளன.

இயற்கைக்கு மாறாக

தவளைகளும் சாலமாண்டர்களும் வண்டுகளை விட உண்மையில் அளவில் பெரியவை. அதனால் இயற்கையில் இவையே வண்டுகளைப் பிடித்து உண்ண வேண்டும். ஆனால் வண்டுகளின் இனங்களின் எண்ணிக்கை தவளையினங்களின் எண்ணிக்கையை விட அதிகம். தவளைகள் வழக்கமாக வண்டுகளை அரிதாகவே உண்கின்றன. வேறு இன வண்டுகளின் இறந்த உடற்பகுதி மிச்சம் மீதியை ஆய்வாளர்கள் உள்ளூர் தவளையினங்களின் எச்சங்களில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

எப்போமிஸ் வண்டுகளின் ஒரு சில இனங்கள் மட்டுமே இத்தகைய நடத்தை மாற்றத்தைப் பெற்றுள்ளன. தொடக்கத்தில் வண்டின் இந்த மாற்றம் தற்காப்பிற்காக ஏற்பட்டிருக்கலாம். மற்ற பூச்சிகள் அவற்றின் உடலில் இருந்து அவை வெளிவிடும் நஞ்சு, மறைந்திருந்து தாக்குவது போன்றவற்றால் எதிரிகளிடம் இருந்து தப்புகின்றன. ஆனால் இந்த எப்போமிஸ் வகை வண்டினங்கள் எதிரியைத் தாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியை சிறந்த முறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன.

எப்போமிஸ் சர்கம்ஸ்ட்கிரிப்ட்டஸ் (Epomis circumscriptus) மற்றும் எப்போமிஸ் டிஜினீ (Epomis dejeani) என்ற இரண்டு இனங்களைச் சேர்ந்த வண்டுகள் தவளைகளைக் கொல்வதில் தனித்திறமை பெற்றுள்ளன. இவை போன்ற இன வண்டுகள் தவளைகளை மட்டும் இல்லாமல் சாலமாண்டர் (Salamander) போன்ற மற்ற ஊர்வனவற்றையும் இரையாகப் பிடித்து உண்கின்றன.

பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்தையும் அதனதன் அளவு, வடிவம், சூழலுக்கேற்ப உணவூட்டி அவை வாழ இயற்கை வழி செய்கிறது என்பதற்கு தவளையை உண்டு வாழும் இந்த மண் வண்டுகளே சிறந்த எடுத்துக்காட்டு.

** ** **

மேற்கோள்

https://www.mathrubhumi.com/environment/columns/about-epomis-beetles-who-feed-on-frogs-bandhukal-mithrangal-1.8839735

&

https://www.nationalgeographic.com/science/article/beetle-larva-lures-and-kills-frogs-while-the-adult-hunts-and-paralyses-them

சிதம்பரம் இரவிச்சந்திரன்