கீற்றில் தேட...

மருத்துவமனையின் நர்சரிக்குள் மிருதுவான மணல் மேட்டில் படுத்துக் கொண்டிருக்கும் பானி (Bani) என்ற ஒன்பது மாதமே ஆன அந்த குட்டி பெண் யானை பார்ப்பதற்கு ஒரு சீரழிவில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தையை போல காட்சி தந்தது. பராமரிப்பு குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் அவளின் முன்னங்காலி எண்ணெய் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். தலைக்கு அருகில் உட்கார்ந்திருந்த மற்றொருவர் மென்மையாக அவளின் பெயரைச் சொல்லி அழைத்து பேசிக் கொண்டே கரும்புத் துண்டுகளை வாயில் ஊட்டிக் கொண்டிருந்தார்.

ஒன்பது மாதமே ஆன அந்த குட்டி யானைக்கு இது ஒரு ராஜமரியாதை. ஆனால் இது போன்ற மிகச் சிறந்த கவனிப்பும் பராமரிப்பும் மருத்துவ சிகிச்சையும் அதற்கு மிக மிக அவசியம். 2023 டிசம்பர் நடுப்பகுதியில் உத்ரகண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்டுவானி (Haldwani) பகுதியில் ஜிம் கார்ப்பெட் தேசியப் பூங்காவிற்கு அருகில் பானி கருவுற்றிருந்த தன் தாயுடன் ஒரு இரயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தாள். அப்போது வேகமாகப் பாய்ந்து வந்த ஒரு இரயில் அவர்கள் மீது மோதியது.

இதில் பானியின் தாய் கொல்லப்பட்டாள். பானி ஒரு பள்ளத்திற்குள் தூக்கி எறியப்பட்டாள். மோசமான காயங்களுடன் அவளுடைய எலும்புகள் உடைந்தன. விபத்து ஏற்படுத்திய மீள முடியாத அதிர்ச்சியால் பயந்துபோன பானியால் எழுந்து நிற்க முடியவில்லை. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதைக் கண்ட வனத்துறையினர் வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பைத் (Wildlife SOS) தொடர்பு கொண்டனர்.

அவசர சிகிச்சை அளிக்க நிபுணர்கள் வந்தனர். இடம்பெயரத் தகுதியான உடல்நிலையை பெற்றவுடன் யானைகளுக்கான அவசர உதவி வாகனத்தில் பானி, மதுராவில் உள்ள இந்தியாவில் யானைகளுக்காக இருக்கும் ஒரே ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மதுரா வந்து சேர்ந்ததில் இருந்து அதற்கு தீவிர லேசர் சிகிச்சை, உடலியக்கவியல் பயிற்சிக்கான சிகிச்சைகள், நீர் சிகிச்சை, நரம்புத் தூண்டுதல் சிகிச்சை மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.

ஊழியர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும் விதம் அவளுடைய முதுகுத்தண்டில் உண்டான காயம் குணமடைந்து வருகிறது என்பதன் அடையாளமாக ஒரு நாள் அவள் தன் வாலை திடீரென்று ஆட்டினாள். பிறகு அவளால் தாங்கியின் உதவியால் ஒரு சில நிமிடங்களுக்கு நிற்க முடிந்தது. “அது ஒரு பரவசமூட்டும் நிமிடம். பானி இனி தன் வாழ்வை உடல் ஊனத்துடனேயே வாழ வேண்டியிருக்கும். என்றாலும் ஒவ்வொரு நாளும் அவளுடைய பயம் மெதுவாகக் குறைந்து வருகிறது.elephant baniமுன்பை விட அவள் இப்போது அதிக நேரம் இயல்பாக விளையாட ஆரம்பித்திருக்கிறாள். தனக்கு கொடுக்கப்படும் வாழைப்பழங்களை மிக விருப்பத்துடன் உண்கிறாள். சரியான நேரத்திற்கு அவை கிடைக்கவில்லை என்றால் பழங்களைக் கேட்டு நாடகமாடுகிறாள். இதற்கு அவள் பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறாள்” என்று வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பின் இணை தோற்றுனர் கார்த்திக் சத்ய நாராயண் (Kartick Satyanarayan) கூறுகிறார்.

பானியே இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முதல் காட்டு யானை. தண்டவாளங்கள் காடுகளில் யானைகளின் வாழிடங்கள் வழியாகவும் அவற்றின் வலசை பாதைகள் வழியாகவும் ஊடுருவிச் செல்கின்றன. இதனால் இரயில்கள் இந்த உயிரினங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதையே இந்த குட்டி யானையின் வருகை சுட்டிக் காட்டுகிறது. “இரயில் பாதைகள் அமைக்க ஆகும் செலவு மற்றும் அவை செல்லும் வழிகளே அன்றி வாழிடம் துண்டாடப்பட்ட நிலையில் உணவிற்காகவும் நீருக்காகவும் அலையும் யானைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்திய இரயில்வேயின் முக்கிய கவலையாக இல்லை” என்று சத்ய நாராயண் கூறுகிறார்.

மின் அதிர்ச்சிகள் மூலம் ஏற்படும் அகால மரணங்களுக்கு அடுத்தபடியாக இரயில்கள் மோதி ஏற்படுத்தும் விபத்துக்களே இந்தியாவில் யானைகள் உயிரிழக்க இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டில் இரயில் விபத்துக்களால் 200 யானைகள் உயிரிழந்துள்ளன என்று அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. காடுகள் வழியாக இரயில் பாதைகள் செல்லும்போது தண்டவாளங்களில் இவை இரத்தம் சிந்துகின்றன, பரிதாபமாக உயிரிழக்கின்றன.

இந்திய யானைகள் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடைசியாக நடந்த 2019 கணக்கெடுப்பின்படி உலகளவில் 40,000 முதல் 50,000 யானைகள் மட்டுமே வனப்பகுதிகளில் வாழ்கின்றன. துண்டாடப்பட்ட இவற்றின் வாழிடம், சாலைகள், பண்ணைகள் போன்ற மனிதக் குறுக்கீடுகளால் இவற்றின் வாழிடப் பரப்பில் பாதி காணாமல் போய்விட்டது.

வனவிலங்கு சேவை அமைப்பினால் மதுராவில் நடத்தப்படும் மையம் காடுகளில் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தரும் இந்தியாவின் ஒரே சரணாலயம். இங்கு பராமரிப்பில் வாழும் பல யானைகள் சர்க்கஸ்கள், ஹோட்டல்கள், திருமண விழாக்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில் மற்றும் கோயில்களில் இருந்து மீட்கப்பட்டவை. “இங்கு இருக்கும் 36 யானைகளில் பெரும்பாலானவை மனிதர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவை. இவற்றில் பல பார்வையற்றவை. பல யானைகள் மோசமான உடல் ஊனங்களுடன் வாழ்கின்றன. இவை அதிக துன்பம் இல்லாமலும் உரிய மதிப்புடனும் வாழ வழிவகுப்பதன் மூலம் இவற்றிற்கு செய்த கொடுமைகளுக்காக நாம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு இத்தகைய கொடுமைகளை செய்ததற்காக நாங்கள் வருந்துகிறோம். உங்களை உங்கள் வன வாழிடத்தில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விட்டோம். அதற்காக வருந்துகிறோம். உங்களை உங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்ததற்காக வருந்துகிறோம். உங்களிடம் இருந்து நாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டோம். இதற்காக மற்ற மனிதர்கள் சார்பாக நாங்கள் வருந்துகிறோம்” என்று இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஷிவம் ராய் (Shivam Rai) கூறுகிறார்.

இரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைத் தொடர்ந்து இரயில்வேக்களின் மேலாண்மையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று விலங்கு நல செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2023ல் விபத்துகளைத் தடுக்க தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரயில் பாதைகளுக்கு அருகில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் செயல்முறை நடைமுறைக்கு வந்தது. யானைகளின் நடமாட்டத்தை உணரிகள் கண்டுபிடித்து இரயில் ஓட்டுனர்கள், இரயில் நிலைய ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களை எச்சரித்தது.

மற்ற பகுதிகளில் இது போல அதிர்வுகளை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டன. அவை யானைகள் நூறு மீட்டர் தொலைவில் இருக்கும்போது அதை கண்காணித்து தகவல்களைத் தந்தன. வடமேற்கு இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நாளைக்கு நாற்பதுக்கும் அதிகமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

யானைகளின் வீடுகளை ஆக்ரமிக்கும் இரயில் பாதைகள்

மேற்கு வங்காளத்தில் மூங்கில்கள் மற்றும் வாழை மரங்களின் வரிசைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலத்தைப் பயன்படுத்தி இரயில் தண்டவாளங்களை யானைகள் பாதுகாப்புடன் கடந்து செல்கின்றன. ஆனால் இந்த பணிகள் சவால் நிறைந்தது. இந்தியாவில் 130,000 கிலோமீட்டர் நீளத்திற்கு இரயில் பாதைகளும் வலசை செல்லும் யானைகளுக்கான 150 வனப்பெருவழிச் சாலைகளும் உள்ளன.

யானைகளின் நடமாட்டத்தை முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டிருந்தால் பானியின் தாய் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பாள். இந்த குட்டி யானையும் ஊணமுற்றிருக்காது, அனாதையாக்கப்பட்டிருக்காது என்று வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பினர் நம்புகின்றனர். பல கால்நடை ஊழியர்களின் உதவியுடன் ஒரு கவணை (sling) பயன்படுத்தி பானி இன்று மெதுவாக நடக்க முயன்று கொண்டிருக்கிறாள். இதில் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறது. முழுவதும் குணமடைய பானிக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

“காடுகள் யானைகளின் வீடுகள். இரயில்கள் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு விபத்துகளைத் தடுக்கும் வசதிகளும் கடுமையான வேகக்கட்டுப்பாடுகளும் உடனடியாக கொண்டு வரப்பட்டால் நூற்றுக்கணக்கான யானைகளின் உயிர் காப்பாற்றப்படும். ஒருங்கிணைந்த முறையில் கட்டப்பட்ட பாலங்களைப் பயன்படுத்தி விலங்குகள் கடந்து செல்ல உதவும் எளிமையான சாலைகள் (Ecoducts) உலகின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

நெரிசல் மிகுந்த பாதைகளை வழியறிந்து அவற்றை கடந்து செல்ல வனவிலங்குகளுக்கு இவை உதவுகின்றன. இது போன்ற வசதிகள் இந்தியாவிலும் உருவாக்கப்பட வேண்டும். விபத்துக்குள்ளான விலங்குகளில் பானி அதிர்ஷ்டசாலி. அவளின் உடல் நலம் மெதுவாக, உறுதியாக தேறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்கள் சிறிது சிறிதாக மேம்பாடு அடைந்து வருகிறது. மற்றவர்களின் உதவி இல்லாமல் அவளால் இப்போது சிறிது நேரத்திற்கு சுயமாக செயல்பட முடிகிறது.

அவளுடைய உடல் நிலையை கவனித்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த முன்னேற்றம் சோகம் கலந்த உணர்வை ஏற்படுத்துகிறது. “பானி இனி எப்போதும் ஒரு இயல்பான யானையாக வாழ முடியாது. ஒருபோதும் வனத்தில் வாழ முடியாது. இனி வரும் காலம் முழுவதும் அவள் ஊனமுற்றவளாகவே வாழ வேண்டும். சுய மதிப்புடனும் மரியாதையுடனும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய அளவிற்கு அவள் உடல் நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்:”…

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/apr/08/why-are-so-many-of-india-elephants-being-hit-by-trains-aoe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்