நகரத்தின் ஆரவாரங்களுக்கு நடுவில் தங்கள் சொந்தக் குரலைக் கேட்க வைக்க பறவைகள் பாடுபடுகின்றன! சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சத்தங்களை விட உரத்த குரலில் சில பறவைகள் பாடிப் பார்க்கின்றன. சுற்றுப்புறம் சிறிது நிசப்தமாகும்போது மட்டும் பாடும் பறவைகளும் உண்டு. பாட்டின் சுருதியை மாற்றும் பறவைகளும் உள்ளன.
நகரங்களில் மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசு (anthropogenic noise) பறவைகளின் பாடல்களை நிசப்தமாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது பாடல் மறைத்தல் (song masking) என்று அழைக்கப்படுகிறது. இதனால் பறவைகளின் சத்தங்களுக்கு அவற்றுக்குரிய பலன் கிடைக்காமல் போகிறது. இணையைக் கவர முடியாமல் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவை பாடும் பாடல்கள், அழைப்புகளின் பாணியை மாற்றி இதற்குத் தீர்வு காண முயல்கின்றன.
இப்பிரச்சனையைத் தவிர்க்க ஐரோப்பிய ராபின் பறவைகள் இரவு நேரத்தில் மட்டும் பாடும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. பலதரப்பட்ட அழுத்தங்கள் மூலம் நகரங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை மற்ற உயிரினங்களும் அனுபவிக்கின்றன. கவனித்துப் பார்த்தால் நகரங்களில் ஒரு சில இடங்களில் காடு என்பதே சாலையோரத்தில் நிற்கும் ஒற்றை ஆலமரமாக மட்டுமே இருக்கும்.மறையும் நகரத்துப் பறவைகள்
படர்ந்து விரிந்த இலை கிளை பொந்துகளில் பறவைகள், அணில்கள் உட்பட நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் குடியிருக்கின்றன. சுற்றுவட்டாரத்தில் இருந்து பறவைகளின் பாடல்களும் சிறகடிக்கும் ஓசைகளும் காணாமல் போவதை நாம் உணர்வதில்லை. பதுங்கிப் பதுங்கி நடந்த மைனாக்கள், சலசலவென்று ஓசையெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த குருவிகள், கிளிகள் போல பல பறவைகள் எங்கே போய் மறைந்தன என்று நாம் ஆராய்வதில்லை.
நகரத்தில் இயற்கைக்கு என்ன வேலை? அது அங்கு காட்டிலும் மேட்டிலும் அல்லவா இருக்கிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் புதிய ஆய்வுகள் இத்தகைய கருத்துக்களை தவறு என்று நிரூபித்துள்ளன. வன உயிரினங்களின் பாதுகாப்பில் நகரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கோர்னெல் (Cornell) பறவையியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் பறவைகளுக்கு எந்த அளவு முக்கிய வாழிடமாக உள்ளது என்பதை அறிய பல காலகட்டங்களில் இ-ஃபேர்ட் (Ebird) அமைப்பின் தரவுகள் ஆராயப்பட்டன. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைக் குறைக்க காடுகள் தவிர நகர வனங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்து தோன்றியது. பிராந்தியரீதியில் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கும் தாவரங்களைக் கொண்ட மியாவாக்கி வனங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு காலத்தில் பெங்களூர் நகரத்தில் சமையலறைகளில் சிதறியிருந்த தானியங்களைப் பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்த அங்காடிக் குருவிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின. நீர்நிலைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாயின. வீட்டு முற்றங்கள் டைல்ஸ் கற்களால் மூடப்பட்டன. மிச்சம் மீதி உணவுகள் வெளியில் இடப்படாமல் குப்பைக் கிடங்குகளில் கொண்டு போய் கொட்டப்பட்டன.
இது இந்த சின்னஞ்சிறிய பறவைகளின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது. நகரம் மாநகரமாக வளர்ச்சி அடைந்தபோது இவை வீட்டு முற்றங்களையும் தெருக்களையும் விட்டுவிட்டு சர்வதேச விமான நிலையத்திற்குக் குடிபெயர்ந்தன. 2013ல் இந்திய அறிவியல் ஆய்வுக்கழகத்தின் சூழலியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹரீஷ் பட் நடத்திய ஆய்வில் பெங்களூர் கெம்பகௌடா விமான நிலையத்தில் நானூற்றிற்கும் மேற்பட்ட அங்காடிக் குருவிகள் வாழ்வது தெரிய வந்தது.
ஒரு காலத்தில் திறந்தவெளி உணவகங்களில் மேசைகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்பே நகரில் வாழ்ந்துவந்த குருவிகள் சிந்தியிருக்கும் உணவுத்துணுக்குகளை பொறுக்கி உண்ண ஓடிவந்தன. ஆனால் இன்று அவை வாழ இடமில்லாமல் விமான நிலையத்திற்குப் போய்க் குடியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் குருவிகள் தவிர புல்வெலியில் சுதந்திரமாக ஓடியாடும் வேறு சில சிறிய உயிரினங்களும் இப்போது வாழ்ந்து வருகின்றன.
கெம்பகௌடா விமான நிலையத்தில் புதிதாக இரண்டாவது முனையம் ஆரம்பிக்கப்பட்டபோது கட்டிடங்கள் சுற்றுப்புறம் அனைத்தும் சூழலிற்கு நட்புடைய விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அங்கு உருவாக்கப்பட்ட பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, தடாகம் இவை வெறும் அழகிற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாப்பதையும் அது நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிலத்தில் கூடு கட்டும் பறவைகள்
நிலத்தில் கூடு கட்டும் பறவைகளையே நகரமயமாக்குதல் பெரிதும் பாதிக்கிறது. நிரந்தரமாக நிர்மானப் பணிகள் நடக்கும் இடங்களில் இத்தகைய பறவைகளால் வாழ முடிவதில்லை. ஆனால் கட்டடங்கள், மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் இந்த சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழத் திறமையுடைய பறவைகளே நகரங்களில் தொடர்ந்து வாழ்கின்றன.
ஒவ்வொரு இனப் பறவையின் உணவு, அது கிடைக்கும் அளவு, வாழ அவசியமான இயற்கைச் சூழல் ஆகியவை அவற்றின் வாழ்வின் முக்கிய தேவை. காய்கறிகளையும், இறைச்சியையும் ஒரே மாதிரி சாப்பிடும் பறவைகள், பழங்களை மட்டுமே உண்டு வாழும் பறவைகளை விட நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழ்கின்றன. நகரப் பறவைகள் புதிய வகை உணவு கிடைக்கும்போது தயக்கமில்லாமல் அதை சோதித்துப் பார்த்து உண்கின்றன. மனிதர்களுடன் அவற்றிற்கு பயம் குறைவாக உள்ளது.
ஆனால் இவற்றிற்கு மற்ற பறவைகளுடன் போட்டி மனப்பான்மை அதிகம். கட்டடங்களின் கட்டுமான முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், விவசாய இடங்களில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடும், ஒலி, காற்று மாசும் குருவிகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணங்கள்.
கேரளாவில் குருவிகளின் பாதுகாப்பிற்காக சமூக வனத்துறையால் சந்தைகள், கடைத்தெருக்களில் கூடுகள் அமைக்கப்பட்டன. ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்காடிகளில் பொருட்கள் வாங்க வருபவர்களின் உதவியுடன் இவை அமைக்கப்பட்டன. கூடுகளுக்கு அருகில் குருவிகளுக்கு உணவும் நீரும் வைக்கப்பட்டது. இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது அங்கு உள்ள சூழ்நிலையோடு மனிதர்களின் கூட்டங்களோடு ஒலி ஒளி மாசுடன் கூடிய போக்குவரத்து நெரிசல்களோடு பறவைகளும் மற்ற உயிரினங்களும் பொருந்தி வாழப் பழகிக் கொண்டன. நகரங்களில் வாழும் பறவைகளுக்கு பொதுவாக உடல் அளவு சிறியது.
நீண்ட தூரம் பறக்கும் திறன் பெற்றவை. எல்லா விதமான உணவுகளையும் உண்கின்றன. ஒரு பிரசவத்தில் அதிக முட்டைகளை இடுகின்றன. காட்டிலும் கிராமப்புறங்களிலும் வாழும் பறவைகளை விட இப்பறவைகளுக்கு ஆயுட்காலம் அதிகம் என்று கரண்ட் பையாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய நகரத்துப் பறவைகள் குறித்த ஆய்வு கூறுகிறது.
கான்க்ரீட் காடுகளாக உள்ள இந்திய மாநகரங்களான மும்பை மற்றும் டெல்லியில் நகரப் பசுமையை அதிகரிக்க மியாவாக்கி வனங்கள் உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐநாவின் தலைமையில் உலக மர நகரங்கள் (World Tree city) 2022ம் ஆண்டின் பட்டியலில் மும்பை இரண்டாவது முறையாக இடம்பிடித்தது. உலக நகரங்களில் நடக்கும் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு உள்ள அங்கீகாரமே உலக மர நகரங்கள் பட்டியல்.
நகரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சேர்ந்து சூழல் நாசமும். 2030ல் உலகம் முழுவதும் உள்ள நகரங்களின் நிலப்பரப்பு 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன. இப்போது இருக்கும் பசுமை இடங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதுடன் உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களே நகரங்களை நாளை மனிதர்கள் வாழ்வதற்குரிய இடங்களாக மாற்றும்.
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/what-can-cities-do-for-birds-nature-future-column-1.8702995
- சிதம்பரம் இரவிச்சந்திரன்