புல்லைப் பறித்து பசுவுக்குக் கொடுத்து அதில் இருந்து பால் கறந்தெடுத்து மனிதன் குடிக்கத் தொடங்கி வெறும் 11,000 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன. ஆனால் இதே முறையில் தீனி போட்டு பூஞ்சைகளை வளர்த்து தங்கள் லார்வாக்களுக்கு உணவாக சில இன எறும்புகள் கொடுக்கின்றன. இது ஆரம்பித்து கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன.
மனிதன் தவிர மிகச் சிக்கலான, அளவில் பெரும் எண்ணிக்கையிலான சமூக வாழ்க்கை நடத்தும் உயிரினங்களே இலை வெட்டும் எறும்புகள் (Leaf cutter ants). ஒரு சில ஆண்டுகளிலேயே 6,500 சதுர அடி அளவு பரப்புள்ள இவற்றின் புற்றுகளில் 80 லட்சம் எறும்புகள் வரை வாழத் தொடங்கும். தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா, மெக்சிகோ, பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இவை இலை வெட்டும் எறும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அட்டா, அக்ரோமியம் எக்ஸ் (Atta and Acromyrmex) என்ற இரு வகைகளாக 47 இனங்களில் காணப்படுகின்றன.இவை ஐம்பது மில்லியன் ஆண்டுகளாக ஒரு வகையில் உழவு செய்து வருகின்றன. இலைகள், பூக்கள், புற்கள் எல்லாவற்றையும் வெட்டியெடுத்து தங்கள் உடல் எடையை விட இருபது முதல் ஐம்பது மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றல் உள்ளவை இவை. மனிதர்களுக்கு மட்டும் இந்தத் திறன் இருந்திருந்தால் ஒரு மனிதன் 4,000 கிலோ எடையை சுமந்து கொண்டு செல்ல முடியும். இணை சேரும் காலத்தில் சிறகுகளை உடைய இந்த இன எறும்புகள் ஒன்று சேர்ந்து பறந்து கொண்டே இணை சேர்கின்றன. ஒரு காலனியை உருவாக்கத் தேவையான 30 கோடி ஆண் இனச்செல்களை சேகரிக்க பெண் எறும்புகள் பல ஆண் எறும்புகளுடன் இணை சேர்கின்றன.
ராணி எறும்பு
தரையைத் தொடும்போது இறக்கைகளை இழக்கும் பெண் எறும்புகள் காலனியை உருவாக்க உகந்த இடத்தைத் தேடுகின்றன. நூறு பெண் எறும்புகள் இருந்தால் அவற்றில் ராணியாக மாறி காலனியை உண்டாக்க இரண்டு மூன்று எறும்புகளால் மட்டுமே முடியும். ஒவ்வொரு ராணியின் தலையில் இருக்கும் இன்ஃப்ராபக்கெல் பை (infrabuccal pocket) என்று அழைக்கப்படும் பையில் பூஞ்சைகளின் மைசீலியம் காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி எறும்புகள் பூஞ்சைகள் அடங்கிய ஒரு நந்தவனத்தை உருவாக்குகின்றன. காலனிகளில் பெரும்பாலும் ஒரு ராணி எறும்பு மட்டுமே இருக்கும் என்றாலும் ஒரு சில காலனிகளில் ஒன்றிற்கும் கூடுதலான ராணி எறும்புகளும் இருப்பதுண்டு.
இவ்வாறு உருவாக்கப்படும் காலனிகளில் எறும்புகள் அவற்றின் அளவைப் பொறுத்து மிகச் சிறியவை (minim), சிறியவை (miner), நடுத்தரமானவை (mediam) மற்றும் பெரியவை (major) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் அவற்றிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள வெவ்வேறுவிதமான வேலைகளைச் செய்கின்றன.
வேலைகள் பலவிதம்
மிகச் சிறியவை பூஞ்சை நந்தவனத்தைப் பராமரிக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சிறிய எறும்புகள் வரிசையாகச் செல்லும் எறும்புத் தொடர்களின் பாதுகாப்பிலும் தாக்க வரும் எதிரிகளைத் துரத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
நடுத்தர அளவுடையவை இலைகளை வெட்டியெடுத்து காலனிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. படைவீரர்கள் என்று அழைக்கப்படும் பெரிய எறும்புகளே காலனிகளைப் பாதுகாப்பது மற்றும் எறும்புகள் போகும் வழியில் இருக்கும் தடைகளை நீக்குவது மற்றும் பொருட்களை காலனிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வேலைகளை செய்கின்றன.
வளர்க்கப்படும் பூஞ்சைகளின் குடும்பம்
வெவ்வேறு வகை இன எறும்புகள் இனத்திற்கேற்ப பலவித பூஞ்சைகளை வளர்க்கின்றன. இப்பூஞ்சைகள் லெபியோட்டேசி (Lepiotaceae) குடும்பத்தைச் சேர்ந்தவையே. எறும்புகள் இந்த பூஞ்சைகளை மிகக் கவனமாக வளர்க்கின்றன. புதிதாக வெட்டியெடுத்து வந்த இலைகளை மிதித்து நசுக்கி பூஞ்சைகளுக்குக் கொடுத்து வளர்க்கும் இந்த எறும்புகள் மற்ற எதிரிகளிடம் இருந்தும் அவற்றைப் பாதுகாக்கின்றன.
பூஞ்சைகளில் இருந்து கிடைக்கும் வேதியல் அறிகுறிகளின் உதவியுடன் தாங்கள் கொண்டுவரும் இலைகள் பூஞ்சைகளுக்கு பிடித்திருக்கிறதா என்பதை இவை அறிந்து கொள்கின்றன. பிடிக்கவில்லை என்றால் பிறகு அத்தகைய இலைகளை எறும்புகள் கொண்டு வருவதில்லை. இவ்வாறு இவை வளர்க்கும் சத்துகள் நிறைந்த பூஞ்சைகளை முதிர்ந்த எறும்புகள் சேகரித்து லார்வாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றன.
லார்வாக்கள் ஆரோக்கியமான உணவை உண்டு வளர எறும்புகளின் உதவி தேவை. எறும்புகளின் லார்வாக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்றால் பூஞ்சைகள் அத்தியாவசியமானவை. இலை வெட்டும் எறும்புகளுடன் இவ்வாறு ஒன்று சேர்ந்து கூட்டு வாழ்க்கை வாழும் பூஞ்சைகள், இனப்பெருக்கத்திற்காக ஸ்போர்களை பல காலங்களாக உண்டாக்குவதில்லை. எறும்புகள் பூஞ்சைகளை வளர்க்க ஆரம்பித்து ஒன்றரை கோடி ஆண்டுகளாகி விட்டன. இது முழுமையடைய இன்னும் மூன்று கோடி ஆண்டுகள் தேவைப்படும்.
சுத்தமான புற்றுகள்
இந்த செயல் இப்போது பாதியே முடிந்துள்ளது. இப்பூஞ்சைகள் எறும்புகளுக்குத் தீவனம் கொடுக்க சத்துகள் நிறைந்த பகுதிகளை உருவாக்குகின்றன. உயிருள்ள பூஞ்சைகளை வளர்ப்பதால் அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது தங்களுடைய தலையாய பொறுப்பு என்பதால் எறும்புகள் புற்றுகளை சுத்தமாகப் பராமரிக்க பெரும் முயற்சி செய்கின்றன.
காலனிகளின் நீண்ட ஆயுளிற்கு புற்றுகளின் கழிவு மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. எறும்புகளின் பூஞ்சைகளைக் கொன்று அவற்றின் உடலை உணவாக்கும் சில எதிரிப் பூஞ்சைகள் காலனிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
உலகில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான நுண்ணுயிர்க்கொல்லிகளை (antibiotics) உற்பத்தி செய்யப் பயன்படும் ஆக்டினோமைசெட்டோட் என்ற பாக்டீரியா இந்த எறும்புகளின் உடலில் காணப்படுகிறது. இது எறும்புகள் பாதுகாக்கும் பூஞ்சைகளை எதிரிப் பூஞ்சைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது.
இது தவிர இந்த எறும்புகளின் நடுப்பகுதி வயிற்றில் இருந்து சிட்டினேசிஸ் (chitinases), லிக்னோசல்யுலைசஸ் (lignocellulases) மற்றும் பினைலசெட்டிக் அமிலம் (phenylacetic acid) போன்ற வேதிப்பொருட்கள் சுரக்கப்படுகின்றன. இவை பூஞ்சைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
கழிவுக்குவியல்கள்
வயதிற்கு வந்த எறும்புகளே கழிவுகளை காலனிக்கு வெளியில் கொண்டுபோய் சேர்க்கின்றன. இலைகளை வெட்டியெடுத்து வருவது, பூஞ்சைகளின் நந்தவனத்தைப் பராமரிப்பது போன்ற வேலைகளை சிறு வயது எறும்புகள் செய்கின்றன. அட்டா கொலம்பிக்கா (Atta colombica) என்ற ஒரு இலை வெட்டும் எறும்பு இனம் கழிவுகளை காலனிக்கு வெளியில் குவியல்களாக சேர்த்து வைக்கின்றன.
இந்தக் குவியலில் பயனில்லாத பொருட்கள், மீதமிருக்கும் பூஞ்சைகள் போன்றவை உள்ளன. சுலபமாக மக்க வேண்டும் என்பதற்காக இவை கழிவுக்குவியல்களை அவ்வப்போது கிளறி விடுகின்றன. இந்தக் குவியல்களைச் சுற்றிலும் இறந்த எறும்புகளையும் இவை கலந்து வைக்கின்றன.
தலையைத் துளைத்து ஈயின் முட்டை
இலைகளை வெட்டி சேகரித்து வரிசை வரிசையாக ஊர்ந்து வரும் இவற்றை சில எதிரி ஈ இனங்கள் ஆக்ரமித்து இவற்றின் தலையைத் துளைத்து அதற்குள் முட்டையிடுவது உண்டு. பல சமயங்களில் தொழிலாளி எறும்பின் தலை மீது ஏறி மிகச் சிறிய இனத்தை சேர்ந்த ஒரு எறும்பு உட்கார்ந்து இந்தத் தாக்குதலைத் தடுக்கிறது. பல வழிகள் மூலம் காலனிகளில் எதிரிப் பூஞ்சைகள் நுழைகின்றன. இது காலனிகளின் முழு அழிவிற்குக் காரணமாகும்.
இதையுணர்ந்து கெட்டுப் போன பூஞ்சைகளை எறும்புகள் வெகுதொலைவிற்கு எடுத்துக் கொண்டு போய் போட்டுவிட்டு வருகின்றன. இவை மனிதர்கள் மற்றும் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பயிர்களின் இலைகள் முழுவதையும் வெட்டி அழித்து காலனி உண்டாக்க எடுத்துச் செல்கின்றன. சாலைகள், விளை நிலங்களின் அழிவிற்கு இவை காரணமாகின்றன.
ஒரு நாளிற்குள் ஒரு எலுமிச்சை மர இலைகள் முழுவதையும் இவற்றால் வெட்டி சேதப்படுத்த முடியும். இவற்றின் புற்றுகளுக்கு வெளியில் பெரிதாகும் கழிவுக்குவியல்களை வளரும் தாவரங்களின் இளம் கன்றுகள் மீது தெளித்தால் எறும்புகள் ஒரு மாதத்திற்கு அந்தப் பக்கம் தலைகாட்டுவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எறும்புகள் உலகில் இவை ஒரு தனி ரகம். இயற்கையின் படைப்பில் இவை ஒரு அதிசய உயிரினமே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்